காலை எழுந்தவுடன் காப்பி பின்பு படிக்கக் கொஞ்சம் பேப்பர்!


"வைகறை" விடியலுக்கு ஒரு அதியற்புதமான தமிழ்ச் சொல்.
காலை எழுந்தவுடன் காப்பி பின்பு படிக்கக் கொஞ்சம் பேப்பர் என்று தொடங்கும் சராசரி பொழுதைச் சொல்வது அல்ல இது.

உஷத்காலம் என்று சொல்லப் படுகிற இந்த "வைகறை" பொழுது, வேத மரபில் ஒரு நுண்ணிய பொருளை உணர்த்துவது- ஆன்ம விழிப்பைச் சுட்டுவது- அறிவு நிலையின் விழிப்பைச் சுட்டுவது.

"வைகறை" என்கிற பெயரிலேயே ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தின் வெளியீடாகத் தமிழில் ஒரு காலாண்டிதழ வெளிவந்துகொண்டிருக்கிறது.அச்சு அமைப்பு, உள்ளீடுகள், மொழிபெயர்ப்பில் காணப் படும் கரடுமுரடுகள் என்று பல குறைகளுடன் இருந்ததால், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால், சிறிது காலம் வாங்கிப் படித்ததோடு சரி. அப்புறம் இந்த இதழை மறந்தே போய் விட்டேன். தற்செயலாக, கூகிள் ஆண்டவர்உபயத்தில் மேலே படத்தில் காண்கிற வலைப் பக்கத்தைக் கண்டேன். வலைத்தளம் இன்னமும் வடிவமைக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன என்ற அறிவிவிப்பு அடியில் செய்தியாக ஓடிக் கொண்டே இருக்கிறது. வேறு பல மொழிகளில் காட்டிய ஆர்வத்தை, தமிழில் ஆசிரம நிர்வாகிகளோ, ஸ்ரீ அரவிந்த யோகத்தைப் பயிலும் தமிழறிந்த அன்பர்களோ காட்டவில்லை என்ற மனக் குறை எனக்கு நீண்ட நாட்களாகவே இருக்கிறது.

ஸ்ரீ அரவிந்தர் புதுவைக்கு வந்த புதிதில், குள்ளச்சாமியோடு பழகிய அனுபவங்கள் [பாரதியின் கவிதைகளில், குள்ளச்சாமியைப் பற்றிப் படிக்கலாம்], பாரதியோடு ரிக் வேத ஆராய்ச்சி செய்தது இப்படிப் பல விஷயங்கள், கவியோகி சுத்தானந்த பாரதியார், ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் இருந்த போது, ஒவ்வொரு நாளும் ஒரு பாமாலையைத் தொடுத்து, ஸ்ரீ அன்னையிடத்தில் சமர்ப்பித்தது, இப்படிப் பல தேடல்கள் இன்னமும் இவனுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. ஸ்ரீ அரவிந்த அன்னையின் அருளால், இவனது தேடல்களுக்கு உதவியாக இந்த வலைத்தளம் வளர வேண்டும் என்பது வெறும் ஆசை மட்டும் அல்ல, ஸ்ரீ அன்னையிடம் சமர்ப்பிக்கப் படும் இன்றைய பிரார்த்தனையும் கூட.

இனி "வைகறை"யைப் பற்றி - The Symbol Dawn in Savitri....

ஸ்ரீ அரவிந்தர் இயற்றிய நெடும்தவத்தின் பலனாக விளைந்தது "சாவித்திரி" எனும் அற்புதக் காவியம். மகாபாரதத்தில் ஒரு துணைக் கதையாக வரும் சத்தியவான் - சாவித்திரி கதையையே அதன் உள்ளார்ந்த பொருளில், தன்னுடைய யோகத்தில் கண்டதை விவரிக்கும் பெரும் காப்பியமாக ஏறத்தாழ 24000 வரிகளில் ஸ்ரீ அரவிந்தர் சாவித்ரியை எழுதினார். யோக சாதனையில் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய பரிமாணத்தைக் கண்டு, அதற்கேற்ப சாவித்ரியையும் பலமுறை திருத்தி அமைத்திருக்கிறார். ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் கூட இவ்வளவு பெரிய கவிதையை வடித்ததில்லை. மொழி ஆங்கிலம் என்றாலும், இந்திய தத்துவ மரபின் படியே ஸ்ரீ அரவிந்தரின் "சாவித்திரி" பெரும் காப்பியம் அவர் கண்ட உண்மைகளை, ஒரு புதிய தொடக்கத்தின்வருகையை, மனிதன் தன்னுடைய விலங்கிற்கும் கடவுளுக்கும் இடைப்பட்டதான நிலையிலிருந்து இன்னொரு படி முன்னேறி, ஸ்ருஷ்டியின் அடுத்த கட்ட வளர்ச்சியை அறிவிக்கும் கட்டியமாக இருக்கிறது.

"உரை மனம் கடந்த ஒரு பெரு வளி- அதன் மேல்

அரைசு செய்தோங்கும் அருட்பெரும் ஜோதி"

என்று திருவருட் பிரகாச வள்ளலார் அறிவித்தபடி, வாக்கு, மனம் கடந்த நிலையில் அதிமானச புருஷன் வருகைக்குத் தயார் செய்யும் பணியில் ஸ்ரீ அரவிந்தர் தன்னுடைய உடலையே த்யாகம் செய்தார். அதிமானசப் பொன்னொளி இந்த பூமியில் இறங்கினாலும் கூட, அதைத் தாங்குவதற்குத் தகுந்த பாத்திரம் இல்லை. தேடிவந்த பெரும் அருளை உணர்வார் இல்லை என்ற நிலையில், ஸ்ரீ அரவிந்தர் தன்னுடைய உடலையே அது இறங்கிச் செயல் படுவதற்காகத் தந்தார். வேறு எந்த மனிதரும் தயாராக இல்லாத நிலையில், ஸ்ரீ அரவிந்த அன்னை, தன்னுடைய உடலையே ஒரு பரிசோதனைக் களமாக்கி இயற்றிய பெரும் தவம் Agenda வில் 6000 பக்கங்களில் ஓரளவுக்கு விவரிக்கப் பட்டிருக்கிறது.

"நூறு இளைஞர்களைத் தாருங்கள். ஒரு புதிய பாரதத்தை உருவாக்கித் தருகிறேன்" என்றார் சுவாமி விவேகானந்தர்.

தன்னலமில்லாத, முழுமையாக இறைவனுடைய சித்தத்திற்கே தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் 12 பேர் போதும், புதிய தொடக்கத்தைச் சாதித்து விடலாம் என்று ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் உறுதியாக இருந்த போதிலும், பழக்கங்களின் அடிமையாகவே இருக்கத் தவிக்கும் இந்த உலகம், திருவுரு மாற்றத்திற்குத் தயாராகாமல் முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறது.

ஆனாலும், இந்த உலகம், படைப்புக்கள் அனைத்தும் ஒரு திருவுருமாற்றத்திர்காகத் தயாராகிக் கொண்டு தான் இருக்கிறது. ஆர்வத்தோடு பங்கேற்கிறவர்கள் சிலரே ஆயினும், இறையருள், எதிர்மறைப் போக்குகளையே தனது கருவிகளாகக் கொண்டு, செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. நம்மை அறியாமலேயே, ஒரு மிகப் பெரிய மாற்றத்திற்கு நாம் தயார் செய்யப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

சாவித்ரி மகா காவியத்தைப் பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை சொன்னார்:

“Savitri, this prophetic vision of the world's history, including the announcement of the earth's future.

The importance of Savitri is immense. Its subject is universal. Its revelation is prophetic. The time spent in its atmosphere is not wasted.”


இங்கே "வைகறை" ஒரு புதிய விடியல் என்று உருவகப்படுத்துவது வெறும் கவிதைச் சுவைக்காக இல்லை. ஒரு புதிய உலகத்தின் பிறப்பைச் சொல்ல வந்த செய்தி. வேதங்கள் எப்படி சில குறியீடுகளை, உருவகங்களைக் கொண்டிருந்தனவோ, அதே மாதிரி 23,813 வரிகளில், கவனச் சிதறல் இல்லாமல் இருந்தால், தான் கண்ட அதே அனுபவங்களையும், உண்மையையும் படிப்பவருக்கும் கொடுக்கும் மந்திர சித்தியுடன் கூடினதாய் ஸ்ரீ அரவிந்தர் நமக்கு அருளியிருக்கிறார் என்கிறார் ஸ்ரீ அன்னை.

ஸ்ரீ அரவிந்த அன்னையே!

உன்னை வணங்குகிறேன். உன்னைச் சரண் அடைகிறேன்.

ஸ்ரீ அரவிந்தர் அருளமுதமான "சாவித்ரி"யைப் புரிந்து கொள்கிற உணர்வின் விழிப்புநிலையை வரமாக அருள்வாய். ஒவ்வொரு தருணத்திலும், உன்னிடத்திலிருந்து கிடைக்கிற அருளை நன்றியோடு நினைவிற்கொள்ளும் மனப்பாங்கினை வரமாக அருள்வாய்.ஒவ்வொரு செயலிலும், விளைவிலும் உனது அருளே வெளிப்படுகிறது, வழி நடத்துகிறது, என்பதை மறந்து விடாமல், உனது கருணைக்குத் தகுதியானவனாக வரம் தருவாய்.

எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.

பொய்மையிலிருந்து, உண்மைக்கு வழிநடத்துவாய், தாயே!

இருட்டிலிருந்து, வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வாய் தாயே!

அகம், புறம் இரண்டிலும் நிறைந்துகிடக்கும் பகையிலிருந்து என்னை மீட்பாய் தாயே!

ஓம் ஆனந்தமயி, சைதன்யமயி, சத்யமயி பரமே!

5 comments:

  1. உள்ளத்தில் உள்ளதனைதையும் காலி செய்தால் மட்டுமே உண்மை பொருள் விளங்கும்
    வேறு எந்த வகையிலும் உண்மையை அறிய முடியாது.மனதில் உள்ள எண்ணங்கள் மீண்டும் மீண்டும் நம்மை செய்தவற்றையே செய்ய தூண்டிகொண்டிருக்கும்.எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்காமல் அதனுடன் போராடாமல் பொறுமையாக அமைதியாக இருந்தால் மட்டுமே வெற்றி கிட்டும். எது வந்தாலும் எது நம்மை விட்டு நீங்கினாலும் ஏற்றுகொள்ளும் மனநிலை வந்துவிட்டாள் அனைத்தும் எளிதாகிவிடும்.எவ்வளவுதான் பிரார்த்தனை செய்தாலும் மனதின் ஒத்துழைப்பின்றி அனைத்தும் வீணான செயல் ஆகிவிடும்.

    ReplyDelete
  2. நன்றி.பிரார்த்தனை மீது ஏன் இந்த அளவு அவநம்பிக்கை? மனம் என்ன அவ்வளவு சக்தி வாய்ந்ததா?

    மனம் என்பது ஒரு கருவி மட்டுமே; எதிரிடையான இரு நிலைகளுக்கிடையில் சலித்துக்கொண்டே இருப்பது மனத்தின் இயல்பு. ஒரு குறிப்பிட்ட கட்டம் வரையில் தான் மனம் என்பது துணையாக வர முடியும், மனத்தின் ஒத்துழைப்பு என்று நீங்கள் சொல்வது, கடிவாளம் யார் கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்திருக்கிறது. புலன்கள் வழியே போகிற மனம் ஒரு போதும் ஒத்துழைக்காது. புலன்கள் அடங்கிய நிலையில், மனம் செயல்பட வழியில்லை.
    மனமிறந்த நிலை என்று சொல்லப் படும் நிலை ஒன்றிருக்கிறது.

    பிரார்த்தனை என்பது, மனத்தையும் மீறி உள்ளேயிருந்து ஜீவனின் குரலாக வருவது. பிரார்த்தனை ஒரு போதும் வீண் போவதில்லை.

    ReplyDelete
  3. மனம் என்பது உடலின் ஒரு பகுதியே ஆகும்.அதனால்தான் அது ஜடம் எனப்படுகிறது.ஆன்மாவின் துணையின்றி அதனால் செயல்பட முடியாது. ஆழ்ந்த உறக்கத்தின் போது மனமும், எண்ணங்களும், மனத்தினால் தோற்றுவிக்கப்பட்ட கற்பனையான இந்த உடலும்,உலகமும் காணாமல் மறைந்து போகின்றதை
    தினமும் நாம் அனுபவித்தும் அதன் வழியே நாம் சென்றுகொண்டிருப்பது நம்முடைய அறியாமை மற்றும் முயற்சியின்மையே ஆகும்
    மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு ஆகும்
    மனம் என்பது ஆன்மாவிற்கும் இவ்வுலகிர்க்கும்
    நடுவே இருந்துகொண்டு நம் நம்மை
    உணர முடியாமல் செய்துகொண்டிருக்கிறது
    அதை கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்தால் மட்டுமே
    அதை நாம் நல்ல முறையில் பயன்படுத்திகொள்ளமுடியும்
    ஆன்மாவை எங்கும் வெளியில் தேடவேண்டியதில்லை
    அது நமக்குள்ளேயே இருக்கிறது
    மனம் புலன்களின் வழியே வெளியில்
    சென்று கொண்டு இருப்பதால்
    அது என்றைக்கும் ஆன்மாவை அறிய பயன்படாது
    அதை முழுவதுமாக இல்லாமல் செய்தால்தான்
    ஆன்மா தானே பிரகாசிக்கும்
    பல சிந்தனைகளில் உழன்று கொண்டு நம்மை
    அலைகழிக்கும் மனதை இல்லாமல்
    செய்வதற்குத்தான் எண்ணற்ற வழிகளை
    ஞானிகள் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்
    எல்லோருக்கும் பொருத்தமான வழி இறைவனின் நாம ஜபம்தான்
    இந்த காலத்தில் பொருத்தமானது.
    இதை உறுதியாக ஒருவன் அவனம்பிக்கையின்றி
    ஒருவன் கடைபிடிப்பனானால் அவனது மனம்
    பலவிதமான சிந்தனைகளிலிருந்து விடுபட்டு
    அவனை அறியாமல் காலபோக்கில்
    அவனை உயர்ந்த நிலைக்கு செலுத்திவிடும்.
    என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

    ReplyDelete
  4. Sir. Relook the way you have labelled your articles.

    your articles are really nice but it is very difficult to dig.

    regards
    vidhya

    ReplyDelete
  5. குறைகளைச் சுட்டி காட்டியதற்கு நன்றி. பதிவிடுவதை, இன்னமும் ஒரு கலையாக நான் கற்றுக் கொள்ளவில்லை, கைநாட்டுப் பேர்வழிதான். கூடிய விரைவில், சரி செய்து விடலாம்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!