Monday, March 09, 2009

நம்பிக்கையோடு இரு, எல்லாம் கை கூடும்!

ஸ்ரீ அன்னை சாரதாமணி தேவியுடன் சகோதரி நிவேதிதை

"நல்லவர்களுக்கு மட்டும் அல்ல, தீயவர்கள் என்று கருதப் படுகிறவர்களுக்கும், நான் தாயாக இருக்கிறேன்.

உனக்கு ஏதாவது இடைஞ்சல், பிரச்சினை என்று வரும் போது, என் அன்னை இருக்கிறாள், அவள் பார்த்துக் கொள்வாள் என்று நம்பிக்கையோடு இரு."

"I am the mother of the wicked,
as I am the mother of the virtuous.
Whenever you are in distress,
just say to yourself, 'I have a mother'

இருபது வருடங்களுக்கு முன்னால், கன்யாகுமரி ஸ்ரீ விவேகானந்தர் நினைவுப் பாறைக்குச் சென்று திரும்புகையில், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அன்னை சாரதாமணி இவர்களுடைய அமுத மொழிகளை மிக நேர்த்தியாக அலுமினியத் தகட்டில் படங்களுடன் பொறித்த சிலவற்றை வாங்கி வைத்திருந்தேன். அதில் மேலே கண்டது ஸ்ரீ அன்னை சாரதாமணியினுடைய அமுத மொழி.

ஸ்ரீ அரவிந்தராலும், பிறகு எல்லோராலும் அன்னை என்று அழைக்கப் பட்ட அற்புதப் பேரொளியைக் கண்டு கொள்கிற தருணம் நம்மில் ஒவ்வொருவருக்கும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் தான், தேடி வருகிற இறையருளை உணராமல் இருக்கிறோம். அறியாமை, ஆர்வமின்மை, நானே எனதே என்று பழக்கங்களின் பிடியில் சிக்கி புலன்களுடைய அடிமையாகவே இருப்பது இப்படி, நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

இறையருள், நம்மை விட்டு விலகுவதே இல்லை; அதே நேரம், நம் மீது நம் விருப்பத்திற்கு மாறாகத் தன்னை திணித்துக் கொள்வதும் இல்லை. நாமாக, விரும்பி அழைப்பதற்காக, ஏற்றுக் கொள்வதற்காகப் பொறுமையோடு காத்திருக்கிறது. ஒவ்வொரு தருணத்திலும் முடிவெடுக்கிற சுதந்திரத்தை நமக்களித்து விட்டு, அந்தந்த முடிவுக்குத் தகுந்த பலனையும் அனுபவத்தையும் தந்து கொண்டே, அதிலிருந்தே, உள்ளார்ந்த ஒரு ஆன்மீக அனுபவத்திற்கான பாதையையும் திறந்து வைக்கிறது. நம்மை அறியாமலேயே, அல்லதே அறிந்தே கூடக் கிணற்றுக்குள் தான் விழுவேன் என்று பிடிவாதமாக விழுந்தாலும் கூட,கிணற்றில் விழுந்த பிறகு அதிலிருந்தே வேறொரு பாதையில் இறையருள் வழிநடத்துகிறது.

நல்லவை என்பன மட்டும் அல்ல, மிகத் தீயவை என்று சொல்லப் படுபவையும், தெய்வ சித்தத்தின் படி இயங்கும் கருவிகளாகவே இருப்பதை அப்போது தான் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. "வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க" என்று அனுபவித்துப் பாடிய வரிகளின் பொருள் இப்போதுதான் புரிகிறது.

இப்படித்தான் 1965-66 களிலேயே ஸ்ரீ அரவிந்த அன்னை, என்னுடைய அன்னையாகவே தோன்றித் தன்னை அறிவித்துக் கொண்டாலும், என் ஈர்ப்பு, கவனமெல்லாம் வேறு எதில் எதிலேயோ இருந்ததால், தேடி வந்த அன்னையை அறியவில்லை. ஸ்ரீ அரவிந்தரோடு அணுக்கமாக இருந்த நண்பர்களே `ஆரம்ப காலங்களில் ஸ்ரீ அரவிந்த அன்னையை 'அன்னையாக' அறிந்திருக்கவில்லை. அவரும் ஏதோ தங்களைப் போலவே, ஸ்ரீ அரவிந்தருடைய இன்னொரு சீடர் என்ற அளவிலே தான் நினைத்திருந்தார்கள். ஒரு சாதகருக்கு எழுதிய கடிதங்களில் அன்னையைப் பற்றி, அவருடைய அவதார நோக்கங்களைப் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறார். 'மானிட வடிவம் தாங்கி வந்திருக்கிறாளே என்று மயங்காதே, அந்த பராசக்தியே தான் இங்கே மானிட வடிவம் தாங்கி வந்திருக்கிறாள்' என்று உறுதியாகச் சொல்கிறார். ஆசிரமத்தில் இருக்கும் இந்த அன்னையைப் பற்றியா சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு 'ஆமாம்' என்று உறுதிபடச் சொல்கிறார்."அன்னை" என்ற தலைப்பில் ஸ்ரீ அரவிந்தர் எழுதிய கடிதங்களின் [மொத்தம் ஆறு] தொகுப்பு, அதையொட்டி சாதகர்களுக்கு எழுந்த கேள்விகளுக்கு ஸ்ரீ அரவிந்தர் எழுதிய பதில்கள், இவைகளைத் தமிழில் தொடர்ந்து தரவும் விருப்பம். ஸ்ரீ அன்னை திருவுள்ளம் உகந்தால் அதுவும் கை கூடும்.

இருபது, இருபத்திரண்டு வருடங்களுக்குப் பின்னால், வாழ்க்கையில் ஏற்பட்ட சில அனுபவங்கள் தானாகவே, ஸ்ரீ அரவிந்த அன்னையிடம் அழைத்துச் செல்வதாக அமைந்தன. அப்போதும் கூட, ஒரு முழுமையான அர்ப்பணிப்புடன் அன்னையிடம் என்னை ஒப்படைத்துக் கொண்டேன் என்று சொல்ல முடியாது. [அப்போது மட்டுமில்லை, இப்போதும் கூடத்தான் என்று உள்ளேயிருந்து ஒரு மூலையில் ஒரு குரல் ஒலிக்கிறது]

ஸ்ரீ அரவிந்த அன்னை தன்னை ஒரு போதும் ஒரு குருவாக அறிவித்துக் கொண்டதில்லை. மாறாக, தன்னிடம் வருபவர்களுக்குச் சொன்னதெல்லாம், இது தான்: "என்னிடம் வரும் போது, அன்னையிடத்திலே தானாகவே ஆர்வத்தோடு ஓடி வருகிற குழந்தையின் மனப்பாங்கோடு வா. அப்படி வருவது, எண்ணற்ற தடைகள், கஷ்டங்களில் இருந்து உன்னைக் காப்பாற்றும்"

["Try to be spontaneous and simple like a child in your relation with me- it will save you from many difficulties.”- The Mother]

"Never forget that you are not alone.

The Divine is with you helping and guiding you.

He is the companion who never fails, the friend whose love comforts and strengthens.

The more you feel lonely, the more you are ready to perceive His luminous Presence.

Have faith and He will do everything for you."

-The Mother

27 September 1951

தனித்து விடப்பட்டதாகவோ, கைவிடப்பட்டதாகவோ, ஒருபோதும் எண்ணாதே; ஏனெனில் தெய்வீக அருள் உன்னோடு எப்போதும் பிரியாமல் இருக்கிறது. உன்னை வழி நடத்துகிறது,துணையாக வருகிறது. உன்னை விட்டு ஒருபோதும் பிரியாத துணையாக, உற்ற நண்பனின் இதமான துணையாக, உன்னை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது. தனித்துவிடப்பட்டதாக, அல்லது தனியாக இருப்பதாக நீ கருதும் நேரம், தெய்வீக அருளின் ஒளியைப் பெறுவதற்குச் சித்தமாய் இருக்கிறாய். நம்பிக்கையோடு இரு, எல்லாம் கை கூடும் என்கிறார் ஸ்ரீ அன்னை.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம், ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடம். பஞ்சதந்திரக்கதைகளில் வருகிற அந்தணன், கதை சொல்லியே முட்டாள் ராஜ குமாரர்களைப் படிப்பிக்க வைத்தது போலவே, எனக்கும் என்னுடைய சொந்த முட்டாள்தனங்களில் இருந்தே ஸ்ரீ அன்னை பாடம் நடத்திக் கொண்டிருப்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

நன்றியோடு வணங்குகிறேன்.

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails