ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாக தங்கிய நாள், ஏப்ரல் 24!



இங்கே மதுரையிலே மாதமெல்லாம், ஏதாவது ஒரு விசேஷம் திருவிழா நடந்து கொண்டே இருப்பதால் தான் இதைக் கோயில் மாநகரம் என்று கொண்டாடுகிறார்கள்.

அது போல, ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னையை வணங்கும் அடியவர்களுக்குச் சில நாட்கள் ஒவ்வொரு வருடமும் மிக விசேஷம், திருவிழா மாதிரித் தான், ஆனால் கொஞ்சம் கூட ஆரவாரம், ஆர்ப்பாட்டம் இல்லாமல், தரிசன நாட்கள் என்று கொண்டாடப் படும் இந்த நாட்களில், ஆன்மீக அனுபவத்தை மிகச் சிறப்பாக அனுபவிக்கும் தினங்களாக இருக்கிறது.

ஒவ்வொரு புத்தாண்டு தினமும், அதை அடுத்து பெப்ருவரியில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் அவதார தினமும் (February 21), லீப் வருடமாக இருந்தால், பெப்ருவரி இருபத்தொன்பதாம் தேதி, அதிமானசப் பேரொளியின் வருகை தினமாகவும், (Golden Day-the manifestation of the Supramental Light upon earth) கொண்டாடப் படுகிறது.

அதை அடுத்து, ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாக தங்கிய நாள், ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் தரிசன நாளாகவும், அன்பர்கள் அன்னையின் அருளில் திளைக்கும் நாளாகவும் வருகிறது.

ஸ்ரீ அரவிந்த அன்னையைத் தேடி இந்தப் பக்கங்களுக்கு வரும் நண்பர்களுக்கு, சுருக்கமாக இந்த நாளின் விசேஷம் என்ன என்பதை கொஞ்சம் பார்ப்போமா?

இதற்கு முந்தைய பதிவில், ஸ்ரீ அரவிந்தர், இறைவனது கட்டளையை ஏற்று, பாண்டிச்சேரிக்கு வந்த நூறாவது ஆண்டு, இந்த ஏப்ரல் 4 அன்று துவங்கியது என்று பார்த்தோம் அல்லவா? ஸ்ரீ அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வந்தவுடனேயே, அவரை அரசியல் தலைவராகவும், சுதந்திரப் போராட்டத்தின் தளபதியாகவும் அறிந்திருந்தவர்கள் தேடி வர ஆரம்பித்தார்கள். "இந்தியாவின் அரசியல் விடுதலை என்பது ஏற்கெனெவே நிச்சயமான ஒன்று, நீ உனக்கிடப் பட்ட பணியை மேற்கொள்வாய்" என இறைவன் விதித்தபடியே, அரசியலை விட்டு விட்டு, ஆன்மீக சாதனையைத் தொடங்கின நேரம், அங்கேயிருந்து ஆரம்பித்தது.

"He who chooses the Infinite has been chosen by the Infinite" என்று ஸ்ரீ அரவிந்தர் சாவித்ரி மகா காவியத்தில் சொல்கிறார். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி எனச் சிவ புராணத்தில் மணிவாசகப் பெருமான் சொல்வது போல, ஸ்ரீ அரவிந்தரோடு, ஸ்ரீ அரவிந்தரது பூரண யோகத்தில் பங்கு பெற விதிக்கப் பட்டவர்கள், ஒவ்வொருவராகப் பாண்டிச்சேரிக்கு வர ஆரம்பித்ததும் தொடங்கியது.

"Without Him I exist not;without me he is unmanifest" என்று ஸ்ரீ அரவிந்த அன்னை தானும் ஸ்ரீ அரவிந்தரும் ஒருவரே என்றும், ஒருவரில்லாமல் மற்றொருவர் இல்லை என்பதாக ஓரிடத்தில் சொல்கிறார்.

1878 இல் பாரிஸ் நகரத்தில் பிறந்து, சிறிய வயதிலேயே தான் மிகப் பெரிய ஒன்றைச் சாதிக்க வந்தவர் என்கிற விழிப்பு நிலையுடன் இருந்து, வெவ்வேறு ஆன்மீகப் பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் போது, ஒரு இந்தியர், மிக மோசமாக பிரெஞ்சில் மொழிபெயர்க்கப் பட்ட பகவத் கீதையின் பிரதி ஒன்றை அன்னைக்கு அளிக்கிறார். இந்த கால கட்டத்தில், கனவு நிலையில் தன்னை ஒருவர் வழிநடத்துவத ஸ்ரீ அன்னை உணர்கிறார்-அவரை கிருஷ்ணா என்ற பெயரிலேயே ஸ்ரீ அன்னை குறிப்பிடுகிறார்.

மிரா ரிச்சர்ட் என்று அறியப்பட்ட அந்த காலத்தில், அவருடைய கணவர் பால் ரிச்சர்ட், 1910 ஆம் ஆண்டு வாக்கில் பாண்டிச்சேரிக்கு வந்த போது ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிக் கேள்விப் பட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்களை மிராவிடம் சொல்ல, அவரை சந்திக்க வேண்டும் என்கிற எண்ணம் வலுவடைகிறது. அரசியல் கனவுகளோடு இருந்த பால் ரிச்சர்ட், 1914 ஆம் ஆண்டு பாண்டிச்சேரிக்கு வந்து ஆதரவு திரட்ட முடிவு செய்து, மிராவுடன், காக மோரு என்கிற ஜப்பானியக் கப்பலில், காரைக்காலுக்கு வந்து சேர்கிறார்.

1914 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி மதியம், மிரா, ஸ்ரீ அரவிந்தரை முதன் முதலாக சந்திக்கிறார். கிருஷ்ணா என்ற பெயரில் அறிந்ததும், தன்னைக் கனவில் வழிநடத்தி வந்தவரும் ஒருவரே என்பதை அறிந்து கொண்டு அவரை வணங்குகிறார்.

"உடலின் ஒவ்வொரு அணுவிலும் பரிபூரணமான சரணாகதி இருக்கமுடியும் என்பதை அப்போது தான் நேரடியாகக் கண்டு கொண்டதாக" இதைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடுகிறார். பால் ரிச்சர்டும், மீராவும் பாண்டிச்சேரியிலேயே தங்கி இருந்தது சில காலம். பால் ரிச்சர்ட், ஸ்ரீ அரவிந்தர் நடத்திய "ஆர்யா" பத்திரிகையின் பொறுப்பேற்றுக் கொண்டு செயல் படுகிறார்.

1915 ஆம் ஆண்டு மிரா பாரிசுக்குத் திரும்புகிறார், அங்கிருந்தே 1916 ஆம் ஆண்டு ஜப்பானுக்குப் பயணப் படுகிறார். நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு, முதல் உலகப் போரின் தாக்கங்கள் குறையத் தொடங்கிய பிறகு, 1920 ஆம் ஆண்டு மிரா, பாண்டிச்சேரிக்கு மறுபடி திரும்பிய நாள் ஏப்ரல் 24.

ஸ்ரீ அரவிந்தருடைய யோக சாதனையில் பங்கு பெறுவதற்காக, மிரா ரிச்சர்ட் என்று அன்று அறியப்பட்ட ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்கிய நாளாக ஏப்ரல் 24 இருப்பதனால், இது ஆசிரமத்தின் தரிசன நாட்களில் ஒன்றாக ஆனது. மிரா ரிச்சர்ட் என்றறியப்பட்ட இந்த பிரெஞ்சு மாது, தங்களைப் போலவே ஸ்ரீ அரவிந்தரின் மற்றொரு சீடர் என்றே ஸ்ரீ அரவிந்தரோடு அன்றைக்கு அணுக்கமாகவே இருந்த சாதகர்கள் கூட, நினைத்துக் கொண்டிருந்தபோது, "மானுட வடிவம் தாங்கி வந்திருக்கிறாளே என்று மயங்கி விடாதே, தெய்வீக அன்னையே இவள்" என்று ஸ்ரீ அரவிந்தரால், ஸ்ரீ அன்னை என்று அழைக்கப் படுகிற காலமும் விரைவிலேயே வந்தது.

இதே சந்தேகம், கபாலி சாஸ்திரியாருக்கும் வர, ஸ்ரீ அரவிந்தர் "அன்னையின் நான்கு சக்திகள்" என்ற விளக்கமான கட்டுரையை அவர் படிக்கக் கொடுக்கிறார். ஸ்ரீ அரவிந்த அன்னையைப் பராசக்தியின் வடிவமாகவே, தேவி உபாசகரான கபாலி சாஸ்திரியார் உணர்ந்து கொண்டதையும், தன்னுடைய குரு காவ்ய கண்ட கணபதி முனியையும் ஆசிரமத்திற்கு அழைத்து வந்து, அன்னையை அறிந்து கொண்டதையும் சின்ன நாயனாவைப் பற்றி, இனி வரும் பதிவுகளில் பார்க்கப் போகிறோம்!

ஸ்ரீ அரவிந்த அன்னையை எப்படி தியானிப்பது, எப்படி அவரது அருளைப் பெறுவது என்பதை ஸ்ரீ அரவிந்தருடைய வார்த்தைகளிலேயே பார்க்கலாம்!

The sadhana of inner concentration consist in:

1.Fixing the consciousness in the heart and concentrating there

on the idea, imge or name of the Divine Mother, whichever comes easiest to you.

2.A gradual and progressive quieting of the mind by this concentration

3.An aspiration for the Mother's presence in the heart and the control by her of mind, life and action.

But to quiet the mind and get the spiritual experience it is necessary

first to purify and prepare the nature.


Sri Aurobindo


4 comments:

  1. இந்த நல்ல நாளை நினைவு கூர்ந்ததற்கு நன்றி. அன்னையின் வருகை அதற்கான முன்னேற்பாடுகள் பற்றி ஆராவமுதன் அவர்களுடைய புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது. மிக்க நன்றி

    ReplyDelete
  2. அன்னை பற்றிய தகவல்கள் பரவசமூட்டுகிறது!

    தாலாட்டு வலைப்பதிவிற்கு தங்களை வரச்செய்து அதன் பலனாக என்னை இங்கு கூட்டி வந்து தன்னைப்பற்றிய இத்தனை தகவல்களை அறிந்துகொள்ளச்செய்த அன்னையின் கருணையை என்னவென்று சொல்வது!

    அடுத்து அண்ணன் தங்கை பாசத்தை சொல்லும் அருமையான(தாங்கள் வாழும்) மதுரை மீனாக்ஷி சொக்கர் தாலாட்டை போட்டிருக்கிறேன்.நன்றி

    ReplyDelete
  3. தொடர்ந்து படிக்க துவக்கமாகக் கொண்டேன்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  4. நன்றி....மிக்க நன்றி....ஸ்ரீஅன்னைக்கு நன்றி...

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!