வருத்தப் பட்டு பாரம் சுமக்கிறவர்களே! என்னிடத்தில் வாருங்கள்!






முந்தைய பதிவில்,

ஒவ்வொருவருக்கும், அவரவர் தன்மைக்கேற்ப, அனுபவங்கள், சூழ்நிலைகளை இறைவன் உருவாக்கித் தருகிறான். இங்கே நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு தடையும், கஷ்டமும், துயரமும், அவற்றை நாம் எதிர்கொள்வதில், அவற்றின் பின்னால் மறைந்திருக்கும் உண்மையைக் கண்டுகொள்வதற்காக, திருவுரு மாற்றம் பெறுவதற்காகவே அளிக்கப் பட்டிருக்கின்றன. "நான் இப்படி இருக்கிறேனே" என்றோ "என்னால் வேறுவிதமாக இருக்க முடியாதென்றோ" சொல்லாதே. அப்படி நினைப்பதில் உண்மையில்லை. நீ இப்போதிருக்கும் நிலைமை, நீ அதற்கு நேரெதிரான நிலைக்கு வர வேண்டும் என்பதற்காகவே. நீ எதிர் கொள்ளும் கஷ்டங்கள் எல்லாம் கூட, அவை மறைத்து வைத்திருக்கும் உண்மையைக் கண்டறிந்து, மாற்றக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத தான் என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை!

என்று பார்த்தோமல்லவா!

ஸ்ரீ அரவிந்த அன்னை இந்த நிலைமையை எப்படி கையாளுவது என்பதையும் சொல்கிறார்:

If you are not satisfied with what you are, take advantage of the Divine's help and change. If you have no courage to change submit to your destiny and be quiet.

But to go on complaining about the condition in which you are and do nothing to change it, is sheer waste of time and energy.

The cure from all difficulties can come only when the egoistic concentration upon one's desires and conveniences, ceases.

-The Mother,,
White Roses, sixth edition 1999, pp.101

நாம் இப்போதிருக்கும் நிலைமையைப் பற்றி நமக்குக் கொஞ்சம் கூட திருப்தி இல்லை. அதில் ஏதோ குறை சொல்லிக் கொண்டே இருக்கிறோம். ஆனாலும், அதை மாற்றுவதில் முன்கை எடுக்கத் தயங்குகிறோம்.

ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார்.

"இப்போதிருக்கும் நிலைமை உனக்குப் பிடிக்கவில்லை என்றால், இறைவனது அருளைப் பற்றிக் கொண்டு அதை மாற்ற முயற்சி செய். மாற்றத்தை எதிர்கொள்வதற்குத் தைரியம் இல்லை என்றால், இறைவன் விதித்தபடியே ஆகட்டும் என்று சமர்ப்பணம் செய்து விட்டு அமைதியாக இரு.

அதை விட்டு விட்டு, இப்போதிருக்கும் நிலைமையைப் பற்றிக் குறை சொல்லிப் புலம்பிக்கொண்டும், மாறுவதற்கு எந்த முயற்சி செய்யாமலும் இருப்பது நேரத்தையும் சக்தியையும் விரயமாக்குவதே தவிர வேறொன்றுமல்ல.

நம்முடைய ஆசைகள், சௌகரியங்கள் மீதான தன்முனைப்பிலிருந்து விடுபடுவதில் தான் நம்முடைய கஷ்டங்களுக்குத் தீர்வும், குணமாவதும் இருக்கிறது."

ஒரு கதைசொல்லட்டுமா?

ஒரு வயதான மனிதன். தனது வீட்டில் தினமும் பிரார்த்தனை என்ற பெயரில், தன் கஷ்டங்களை, தன்னுடைய நிலைமையைப் பற்றிக் குறை சொல்லி நிவாரணம் வேண்டுவதே வாடிக்கையாகக் கொண்டிருந்தான்.

"கடவுளே, நீர் உண்மையானவர் என்றால், என் கஷ்டங்களைக் கண்ணெடுத்துப் பாரும். என்னைப் போலக் கஷ்டங்களை அனுபவிப்பவர் உலகில் வேறு யாரும் இல்லை. வேண்டுமானால், என்னுடைய கஷ்டங்களை எடுத்துக் கொண்டு வேறு ஒருவருடையதை மாற்றித் தந்தால் கூட, அது போதும்"

கடவுளும் அதை ஏற்றுக் கொண்டார். "உன்னை மாதிரியே இன்னும் கொஞ்சப் பேரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். உன்னுடைய கஷ்டங்களை எல்லாம் ஒரு மூட்டையாக்கித் தருகிறேன். நாளை மதியத்திற்குள், கோவில் வெளிச் சுவர் அருகே அதை கொண்டு வரும் படிக்கு மற்றவர்களிடம் சொன்னதையே உனக்கும் சொல்கிறேன். அங்கே வந்து, எதை வேண்டுமானாலும், எவருடையதை வேண்டுமானாலும் மாற்றிக் கொள். திருப்தி தானே?"

"ஆண்டவரே, நீர் பரம கிருபை உள்ளவர். நியாயவான். நீர் சொன்னால் அது போதாதா? எனக்குத் திருப்தி, பரம திருப்தி" என்று சொல்லி விட்டு, அந்த மனிதன் தூங்கப் போனான்.

மறுநாள் பொழுது விடிந்ததும், இறைவன் சொன்னபடி, அவன் தன் கஷ்டங்கள் எல்லாவற்றையும் ஒரு மூட்டையாக்கி கோவில் வெளிச் சுவர் பக்கம் கொண்டு போனான். அங்கே இவனை மாதிரியே, நிறையப் பேர் தங்களுடைய கஷ்டங்களை மூட்டையாக்கிக் கொண்டு வந்திருந்தார்கள். சுவர் அருகே, தங்களுடைய மூட்டையை கொண்டு போய் வைத்தார்கள். எப்போது இறைவனது குரல் கேட்கும், பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்று காத்திருந்தார்கள்.

இறைவன் சொன்னான்: "இப்போது உங்கள் மூட்டைகளை, உங்களுக்குப் பிடித்தமான மாதிரி மாற்றி எடுத்துக் கொள்ளுங்கள்."

அப்போது தான் ஒரு விந்தையான காரியம் நடந்தது.

நம்முடைய கதாநாயகன் குடுகுடுவென ஓடிப்போய், தன்னுடைய சொந்த மூட்டையையே தேடிப் பிடித்துத் தோளில் சுமந்தான். மற்றவர்கள் சுமையை விடத் தன்னுடையது கொஞ்சம் கம்மியான சுமை மாதிரித் தெரிந்தது, ஒரு காரணம். தெரியாத மற்றவர் சுமையை விடப் பழகிப் போன சொந்தச் சுமையே தேவலை என்ற நினைப்பும் ஒரு காரணம்!

கதாநாயகன் சுற்றும் முற்றும் பார்க்கிறான், இவனை மாதிரியே மற்ற எல்லோரும் தங்களுடைய பழைய மூட்டையையே தேடிப் பிடித்து சுமந்து கொண்டுவருவதை பார்த்தபோது தான் புரிகிறது, முதலில் அவனவன் சுமை தான் பெரியதாகத் தெரிந்தது, கொஞ்சம் தள்ளி நின்று பார்க்கையில் தான், தன்னை விட மற்றவன் சுமப்பது அதிகம் என்று தெரிகிறது. அக்கரைக்கு இக்கரை பச்சை என்பது இது தானோ?

இறைவன் சிரித்துக் கொண்டே சொன்னான்:
"வருத்தப் பட்டு பாரம் சுமக்கிறவர்களே! என்னிடத்தில் வாருங்கள், இளைப்பாறுவதற்காக அல்ல. இளைப்பாறுதல் என்பது வேலை செய்து களைத்தவனுக்குக் கிடைப்பது.

இளைப்பாறுதல் என்பது விளையாட்டு முடிந்த பிறகு தான்! அல்லது உங்களால் விளையாடவே முடியாது என்கிறபோது தான்!

இப்போது உங்களைக் கூப்பிடுவது இந்த விளையாட்டின் ரகசியத்தை சொல்வதற்காகத் தான். சுமப்பது என்பது உங்களுக்குக் கொடுக்கப் பட்ட வேலை. உங்களால் சுமக்க முடிகிற அளவுக்குத் தான், சுமை கொடுக்கப் பட்டிருக்கிறது.அதை வருத்தப் படாமல் சுமப்பது எப்படி என்பதைக் கண்டு கொண்டீர்களேயானால், பாரம் சுமக்கிற வேலை அத்தோடு முடிந்து விடும்.

இன்னொரு ரகசியமும் சொல்லட்டுமா? நான் சுமக்கிறேன், நான் சுமக்கிறேன் என்று நினைக்கும் வரை தான் சுமை, சுமையாகக் கனக்கும். உண்மையில், உங்களுக்குள் இருந்து அதைச் சுமப்பவன் நான் தான் என்பதைப் புரிந்து கொண்டீர்களேயானால்,சுமப்பதே ஒரு சுகமான அனுபவமாகி விடும்!"

"விளையாட்டை ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அதில் ஈடுபாட்டுடன் பங்கு கொள்ளுங்கள். இதுவே நான் உங்களுக்குச் சொல்ல வந்த செய்தி."







1 comment:

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!