சாமானியருக்கு 'நேதி' 'நேதி' என்றால் புரியுமோ?


கங்காதரன்-அன்னையின் அருட் குழந்தை!

In Search of The Mother யாகூ குழுமத்திலும், திரு தேஷ்பாண்டே அவர்களுடையவலைப் பக்கங்களிலும் , ஸ்ரீகாந்த் ஜிவரஜனி என்ற அன்பர் ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் தங்களுடைய அருமையான குழந்தைகளாகக் கருதிய அடியவர்களில்ஒருவரான கங்காதரன் என்ற சாதகரைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்தேன். என்னுடைய பழைய பதிவு நினைவுக்கு வந்தது, அதிலிருந்து:

Salutations by Huta , a service from In Search of The Mother

"புதுவையிலிருந்து வெகு தொலைவில் இருந்த போதிலும், ஆசிரம வாழ்க்கையின் ஒரு அங்கமாக உன்னால் ஏற்றுக் கொள்ளப் பட்ட வெகு சிலருள் ஒருவனாக இல்லாதிருக்கும் போதிலும், ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகத்தை பற்றி முழுமையாக அறிந்தவனாக, அனுஷ்டிப்பவனாக இல்லாத நிலையிலும் கூட, இவனது சில அனுபவங்கள், உன்னை என்னுடைய அன்னையாகவே அறிந்து கொள்ளவும், அம்மா, என்னையும் உனது பிரியத்திற்கு உகந்த குழந்தையாக ஏற்றுக் கொள்வாய் என்று உன்னிடத்தில் உரிமையோடு விண்ணப்பித்துக் கொள்ளவும் தூண்டின. ஏற்றுக்கொள்வாய், ஒருபோதும் கைவிட மாட்டாய் என்கிற நம்பிக்கை உன் வாக்கினாலேயே இவனுள் விதைக்கப் பட்டிருப்பதை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்."


அன்னை என்னும் அற்புதப் பேரொளியைப் பற்றி எழுத முனையும் போதெல்லாம், அவள் ப்ரியத்திற்குகந்த குழந்தையாக வரம் வேண்டி அவளிடமே பிரார்த்தனை செய்யும் போதெல்லாம், மனதில், ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். ஆசிரமத்தில் ஸ்ரீ அரவிந்தர், அன்னையால் ஏற்றுக்கொள்ளப் பட்டவனில்லை, ஆசிரமத்திற்கு நினைத்த போதெல்லாம் சென்று வணங்கும் வாய்ப்பும் உள்ளவனில்லை, ஸ்ரீ அரவிந்தரது பூரண யோகத்தைப் பற்றி முழுமையாக அறிந்தவனுமில்லை, அரவிந்த யோகத்தை அனுஷ்டிப்பவனுமில்லை என்பது பெரும் குறைதான்!

ஸ்ரீ அன்னையை அறிந்தது, ஸ்ரீ அரவிந்தரை அறிந்தது என்பதெல்லாம், அவர்களுடைய அருட் குழந்தைகளாக வாழும் பேறு பெற்ற அடியவர்களுடைய அனுபவங்களைப் படித்ததில் தான். அவர்கள் பெற்ற அனுபவமே, நமக்கும் ஒரு நாள் திருநாளாக வரும் என்ற நம்பிக்கையைத் தந்து கொண்டிருக்கிறது.

கடையனுக்கும் கதிமோட்சம் என்று சொல்வதற்கொப்ப, எனக்கும் ஒரு நாள் இதெல்லாம் அனுபவமாகும் என்கிற நம்பிக்கையைத் தருகிற மாதிரி, சில அடியவர்களுடைய வாழ்க்கை அனுபவங்களைத் தெரிந்து கொண்டது இருந்தது.

1930 களில், ஸ்ரீ அன்னை, தானே காரை ஓட்டிக் கொண்டு, பாண்டிச்சேரிக்குப் பக்கத்தில் உள்ள சில இடங்களுக்குப் போய் வருவதுண்டு. அப்படிப் போகிற இடங்களில் ஒன்றாக,ஆறு கிலோமீட்டர் தொலைவில், வீராம்பட்டினம் என்ற கடலோர கிராமமும் ஒன்று.

ஒரு நாள், அன்னையின் காரைப் பார்த்தவுடன், ஒரு மீனவ இளைஞன், என்ன தோன்றியதோ தெரியாது, காருக்குப் பின்னால் தொடர்ந்து ஓடி வர, அன்னையும் விளையாட்டாகச் சிரித்தபடியே காரை வேகமாக ஓட்டுவது போல பாவனை செய்ய, இளைஞனது வேகமும் அதிகரித்தது..இப்படியே காரைத் தொடர்ந்து ஓடி வந்ததில் ஆசிரம வாசலுக்கே வந்தாயிற்று. உள்ளே விட அனுமதி இல்லை.அன்னையைப் பார்த்தே ஆக வேண்டும் என்கிற பிடிவாதம். நான் ஆசிரமத்திலேயே தங்கி விடுகிறேன் என்று கெஞ்சல். இளைஞனுடைய தீர்மானத்தை மற்ற எவராலும் முடியவில்லை. ஊர்க்காரர்கள் எல்லாம் வந்து பேசிப் பாத்த்தாயிற்று, தாய் தகப்பனும் வந்து கெஞ்சிப் பார்த்தாயிற்று. ஒருவர் பேச்சும் எடுபடவில்லை.

ஸ்ரீ அரவிந்த அன்னை, அந்த இளைஞனது மனவுறுதியை பார்த்து, ஆசிரமத்தில் தங்குவது தான் அவனுக்கு விருப்பம் என்றால், அப்படியே ஆகட்டும், அது தான் நல்லது என்று பெற்றவர்களிடம் சொல்ல, கங்காதரன் என்கிற அந்த இளைஞன், தனது இருபதாவது வயதில், அதுவும் தன்னுடைய பிறந்த நாள் அன்றைக்கு, [24-07-1933] ஆசிரம வாசி ஆகிறார்.

ஸ்ரீ அரவிந்த அன்னை, கங்காதரனுக்கருளிய பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி!


"ஒரு கணமாவது நான் ஒருவரைப் பார்த்திருந்தாலும் போதும், அவருடைய வாழ்க்கையின் எல்லாவற்றிற்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்" என்று சொன்ன அன்னையின் அருள், வெளிப்பட்ட விதம் அது! அன்னையைப் பார்த்த பிறகு, வேறெதையும் வேண்டாமல், அன்னையையே தொடர்ந்த பிள்ளை, புதிதாய்ப் பிறந்த நாளும் அதுவே!

திருமதி ஷ்யாம் குமாரி மூன்று தொகுதிகளாக How They Came To Sri Aurobindo and The Mother என்ற தலைப்பில், தாயைத் தேடி வரும் கன்றுகளைப் போல, ஸ்ரீ அரவிந்தர், அன்னை இருவரையும் தேடி, ஸ்ரீ அரவிந்தரது பூரண யோகத்தில் பங்கு கொள்ள, சாதகர்கள் ஒவ்வொருவரும் எப்படி எப்படியெல்லாம் வந்து சேர்ந்தார்கள் என்பதை எழுதியிருக்கிறார். ஸ்ரீ அரவிந்தரின் மானச புத்திரன் என்றே அழைக்கப் பட்டநளினி காந்த குப்தா, ஆசிரமத்திற்கு சாதகர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள் என்பதைச் சொன்னாலே அதுவே மிகப் பெரிய அற்புதமாக இருக்கும் என்று சொல்வாராம். கங்காதரனுடைய வரவும், பெயரைக் குறிப்பிடாமல், அந்தப் புத்தகத்தில் விவரிக்கப் பட்டிருந்தது நினைவுக்கு வந்தது.

ஆசிரமத்தில் தங்குவதற்கு ஒரு சிறிய அறைதான். 12 X 6' அளவிலானது. ஆசிரம வீடுகளைச் சுத்தம் செய்வதை மேற்பார்வை செய்யும் பணி, 1987 ஆம் ஆண்டு வரை நீடித்தது. தன்னுடைய ஆயுள்காலம் முழுவதும் அந்த குச்சு மாதிரியான அறையில் வசித்தவர், அமைதியான சுபாவம்,எவருடைய கவனத்தையும் அதிக அளவில் ஈர்க்காமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை தான். ஆனால், இவரை மாதிரி சாதகர்களையே, ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும், தங்களுடைய உண்மையான குழந்தைகளாகக் கருதியதை எடுத்துக் காட்டும் சம்பவம் ஒன்றை ஸ்ரீகாந்த் ஜிவரஜனி, முதலில் பார்த்தோமே இரண்டு வலைப் பக்கங்கள், அவைகளில் சொல்கிறார்.

ஒருநாள், ஸ்ரீ அரவிந்தர், திடீரென்று, "கங்காதரன் எங்கே" என்று கேட்கிறார்.
எவருக்கும் தெரியவில்லை.

ஸ்ரீ அரவிந்தர் சற்றுக் கடிந்து கொள்கிற மாதிரி, சொல்கிறார்:"நீங்கள் எல்லோரும் உங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். எளிய மனிதனாக இருப்பதால், நீங்கள் யாரும் அவரைக் கண்டு கொள்வதில்லை. ஆனால், அவர் எங்கள் விழிப்புணர்வில் எப்போதுமே இருக்கிறார். அவர் ஒரு உன்னதமான ஆத்மா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அவர் அறையில், சுகவீனமாகப் படுத்திருக்கிறார். உங்களில் எவராவது, தயவு செய்து, அவர் அறைக்குப் போய்க் கவனியுங்கள்"
உடனே அம்ருதா என்கிற ஆராவமுதன், கங்காதரன் அறைக்கு விரைந்து போய்ப் பார்த்தபோது, கங்காதரன் தரையில் படுத்திருப்பதைப் பார்க்கிறார். அவரால் எழுந்து நிற்கக் கூட முடியவில்லை. சில நாட்களாகவே, ஆகாரம் கூட எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிந்தது. கங்காதரனுக்கு அதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. அவரது வாயும், மனமும் ஸ்ரீ அன்னையை அழைத்துக் கொண்டே இருந்தது.

1992 ஆகஸ்ட் மாதம், அவருடைய அந்திம காலத்தைப் பற்றி திரு ஸ்ரீகாந்த் மேலும் தழுதழுக்கச் சொல்கிறார். கங்காதரனுடைய ஆன்மிக அனுபவங்களைப் பற்றியும் மேலும் சொல்கிறார். சாமானியருக்குச் சில விஷயங்கள் கை கூடாதென்று தான் நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். கண்டதை கற்றுப் பண்டிதனாய் இருப்பவனுக்குத் தான் எல்லாமே தெரிய வரும் என்றும் நினைக்கிறோம்!

ஸ்ரீ அரவிந்த அன்னையே!
அன்னை என்னும் அற்புதப் பேரொளியாக, உன்னை எனக்குள் காணும் வரம் தருவாய்!

**கங்காதரனுடைய படங்கள், நன்றியுடன் இங்கிருந்து

3 comments:

  1. இன்னும் எத்தனை கங்காதரர்கள் நம்மிடையே வாழ்ந்து வருகின்றனரோ !

    மகான்களின் மகத்துவமே தங்கள் மகத்துவத்தை பிறர் அறிய விடாமல் தடுத்து விடுவதுதான்.

    //...அவர் ஒரு உன்னதமான ஆத்மா என்பதை தெரிந்து கொள்ளுங்கள் //

    அது மகான்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் உண்மை போலும். ஆன்மீகப் பெரியவர் ஒருவரைப் பற்றி அறிய வைத்ததற்கு நன்றி

    ReplyDelete
  2. உண்மையான மகான்கள் தங்களை வெளிச்சம் போட்டுக் காண்பிப்பதை விருமபுவதில்லை தான். தேவையின் அடிப்படையில் மட்டுமே அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வது மாதிரித் தான் தோன்றுகிறது.

    சத்குரு சேஷாத்ரி ஸ்வாமிகள் தனக்கென்று ஒரு கூட்டத்தை சேர்ப்பதில் அக்கறை காட்டியதே இல்லை. ஆனால், ஞானத்தைத் தேடி வருகிறவர்களை ஸ்ரீரமண மகரிஷியிடம் அனுப்புவதில் மிகுந்த ஆர்வத்தோடு இருந்த மாதிரித்தான் பல சம்பவங்கள் சுட்டுகின்றன.

    அதுமட்டுமல்ல, எவர் எவரிடத்தில் இருந்து உபதேசத்தைப் பெற வேண்டும் என்பதிலும் கூட, சில விந்தைகளைக் கேள்விப் பட்டிருக்கிறேன். ரமணரிடத்தில் உபதேசம் வேண்டி ஒரு இளைஞர் வந்தார்.ரமண மகரிஷி எந்த பதிலும் சொல்லவில்லை, விசனத்தோடு திரும்பி வந்து கொண்டிருந்தவரை, சத்குரு சேஷாத்ரி ஸ்வாமிகள் கருணையோடு பார்க்கிறார்: "உனக்கு அந்த ஸ்வயம்ப்ரகாசமே வழி காட்டும், வருத்தப்படாமல் போ" என்று சொல்கிறார்.

    கிருஷ்ணமூர்த்தி என்ற அந்த இளைஞர் பின்னாளில், ஸ்வயம்ப்ரகாச ஸ்வாமிகள் என்கிற அவதூத சந்யாசியிடம் சீடராகிறார், கிருஷ்ணானந்தா என்றழைக்கைப் படும் இந்த மகான் தன்னுடைய குருநாதர் சமாதி அடைந்த தத்தகிரிக்கு [நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம் போகும் வழியில்] பக்கத்திலேயே ஆசிரமம் அமைத்து 1990 ஆம் ஆண்டு வரை வரை அருள் பாலித்து வந்தார்.

    மகான்கள் அவ்வப்போது, நம்மிடையே வந்து நல்ல வழி காட்டிக் கொண்டிருப்பதை நம் ஒவ்வொருவருடைய அனுபவமுமே சொல்லும்

    ReplyDelete
  3. புதிய தகவல், அளித்தமைக்கு நன்றி கிருஷ்ணமூர்த்தி சார்.

    //கண்டதை கற்றுப் பண்டிதனாய் இருப்பவனுக்குத் தான் எல்லாமே தெரிய வரும் என்றும் நினைக்கிறோம்!//

    அருமையான வரிகள்... :-). பாண்டித்யம் காண்பிக்க ஆரம்பித்தால் அதில் ஆன்மிக உணர்வு எப்படி வரும்?.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!