நானே நானோ? மெல்ல மெல்ல மாறினேனோ?!





இந்த வாழ்க்கை என்பது இருக்கிறதே, இது வழங்கும் பாடங்கள் தான் எத்தனை, எத்தனை?!

சிறுபிள்ளைகள் மணல்வீடுகள் கட்டிப் பெருமிதப் படுவது போல எதை எதையோ சாதித்து விட்டதாக சந்தோஷப்படும் போதும் சரி, அல்லது கட்டிய மணல் வீடு சரிந்து விடும்போது, எல்லாவற்றையுமே இழந்துவிட்டதாகப் பொருமும் போதும் சரி, வாழ்க்கையை நாம், சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.

ஒரு குறுகிய எல்லைக்குள் நின்று, இடது சாரிச் சிந்தனையாளனாக, தொழிற் சங்க வாதியாக கடந்து வந்த பாதைகளில், அன்றைய தேதியில் சாதனையாக நினைத்ததெல்லாம், உண்மையில் ஒன்றுமே இல்லை என்றாகிப் போனது புரிய வந்தது. தொடர்ந்து சந்தித்த தோல்விகளும், அவமானங்களும் கூட இப்போது திரும்பிப் பார்க்கையில், ஒரு பதப் படுத்தும் சாதனமாகவே இருந்ததே தவிர, இழந்தது ஒன்றுமில்லை, தலைபோய் விடவில்லை, தனித்து விடப்பட்டதாக உணர்ந்த நேரங்கள் கூட ஒரு விதமான தயாரிப்பு நிலைதான் என்பதும் புரிந்தது.

தனித்துவிடப்பட்ட அந்தத் தருணங்களே, என்னைப் புதிய வார்ப்பாக மாற்றிக் கொண்டிருந்த தருணங்கள். நானே நானோ...மெல்ல மெல்ல மாறினேனோ என்று பின்னணியில் பாட்டு எதுவும் இல்லாமல், அமைதியாக என்னை மாற்றிக் கொண்டிருந்த தருணங்கள்.

ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார்:

"From the point of view of spiritual realisation, time has no concrete reality; all depends on the sincerity and intensity of the aspiration, on the steadiness of the effort. Some can do in a few weeks and even days what takes years for others. Moreover, as the mind and the vital, the chief factors of progress, are not submitted to the same rules of decay as the material body, the age factor loses all its importance when we speak of spiritual and intellectual growth; there is no time limit nor age limit for the mental progress which can go on steadily for hundreds of years.

Secondly, failure is not the sign of incapacity - far from that. Repeated failures come always to those who have something exceptional to do; it is only those who are satisfied with a commonplace and ordinary realisation who succeed easily in what they attempt to do. The natures of a special value have always to face many ordeals.

And thirdly, when I say to take refuge in the Divine's Love, I do not mean that it is all-sufficient in itself. Not so; personal effort and favourable circumstances are also necessary for the promptness of the advance. But those who can take refuge in the Divine's Love find there a support, a protection and a joy that give them strength to face all the ordeals and surmount all the difficulties.”


- The Mother
Thankfully quoted from White Roses, sixth edition 1999, pp.44-45

ஒவ்வொரு அனுபவமும் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகவே கொடுக்கப் பட்டிருக்கிறது. சுகமானதாக இருந்தாலும் சரி, சோகமானதாக இருந்தாலும் சரி, ஜீவனைப் பக்குவப் படுத்தும், திருவுரு மாற்றம் செய்யும் சாதனமாகவே அவை நேரிடுகின்றன. இங்கே காலம் என்பது ஒரு பிரதானமான விஷயமே அல்ல. ஒருவருக்கு இருபதே நொடிகள் தேவைப்படுகிற அனுபவம், இன்னொருவருக்கு இருபது பிறவிகள் கூடத் தேவைப் படலாம்! ஏற்கெனெவே ஒரு பதிவில் எழுதியிருந்த வார்த்தைகள் இப்போது நினைவுக்கு வருகிறது. ஸ்ரீ ரமணர் தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலேயே, வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஒரு சிறு குறிப்பு மட்டும் எழுதி வைத்து விட்டுப் போகிறார்: 'நான் என் தந்தையைத் தேடிப் போகிறேன். இதைத் தேட வேண்டாம்'

நான் என்று ஆரம்பித்த நாலாவது வார்த்தையைக் கடந்ததுமே இதுவாகிப் போனதை கவனித்தாலே சூக்குமம் புரியும். வீட்டைவிட்டு ஓடுகிற அனைவருமே ரமணராகி விட முடியாது. நாலு வார்த்தைகளைக் கடந்ததுமே நான் என்கிற எண்ணம் நீங்கப் பெறுகிற நிலை கிடைத்துவிடாது. ரமணருக்குமே இந்த நிலை கைகூட எத்தனை பிறவிகளில், எத்தனை முயற்சி, தவம், தேவைப்பட்டிருக்குமோ நமக்குத் தெரியாது. ஆனால், ரமணருக்கு நடந்த அதே சித்து தான், நமக்குள்ளும் நடந்து கொண்டிருக்கிறது. அதே மாதிரித் தான், அதே மாதிரி அனுபவங்களில் தான், அதே அளவு காலத்தில் தான் என்று மட்டும் இல்லை. மண்ணில் விழுகிற விதைகள் எல்லாம் ஒரே காலத்தில் ஒரே மாதிரி முளைத்துவிடுவதில்லை என்பதைப் போலத்தான் இதுவும். நாம் இங்கே விதைக்கப் பட்டிருக்கிறோம், முளைப்பது, வளர்வது என்பதெல்லாம், வேறு வேறு சூழ்நிலைகளைப் பொறுத்தது.

ஸ்ரீ அரவிந்த அன்னை வேறொரு சந்தர்ப்பத்தில் சொன்னது இது. "இன்றைக்கு சாத்தியப்படாதது, நாளை அல்லது அதற்கு மறுநாள் கைகூடும்" உண்மைதான். தோல்விகள், சரிவுகள், அவமானங்கள், என்ற எதுவுமே இயலாமையின் வெளிப்பாடல்ல. தோல்வி என்பது நிரந்தரமானதும் அல்ல. இதை ஆன்மீகத் தேடலில் அல்ல, நடைமுறை வாழ்க்கையிலேயே கண்டுகொண்ட ஒருவரை நமக்கு மிக நன்றாகத் தெரியும். தாமஸ் ஆல்வா எடிசன், எலெக்ட்ரிக் பல்பைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து தோல்விகள். அதை அவர் ஏற்றுக் கொண்ட விதம் எப்படி என்பதைப் பாருங்கள்:

"எப்படிச் செய்யக் கூடாதென்பதை 10000 முயற்சிகளில் கற்றுக் கொண்டேன்!"

இப்படித் தான், எண்ணற்ற வாய்ப்புக்கள் நமக்கு வழங்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வாய்ப்பும், இன்னொன்றின் திறவுகோலாக, இப்படித் தொடர்ந்து வரும் அனுபவங்களின் திரட்டாகக் கிடைக்கும் ஞானமே, நம்மை மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளவும், திருவுரு மாற்றம் பெறவும் உதவும் சாதனங்களாக, கண்ணுக்குப் புலப்படாத ஏணிப்படிகளாக இருக்கின்றன.


சிறுகூடல்பட்டியில் விளைந்த நன்முத்து கவிஞர் கண்ணதாசன் இந்த உண்மையை எப்படி அழகாகச் சொல்கிறார் பாருங்கள்! படைக்கப் பட்டதே அனுபவங்களைப் பெறுவதற்காகத் தான் என்கிறபோது அனுபவங்களை மறுக்கிற அல்லது வெறுக்கிற தன்மை கோழைத்தனம் இல்லையோ!

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'
அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'
அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
- கண்ணதாசன்

ஒரு நாடகம், அல்லது சினிமா, அல்லது ஏதாவது ஒரு கதைப் புத்தகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பல்வேறு பாத்திரங்கள் அதில் இடம் பெற்றிருக்கும். பல பாத்திரங்கள், கதையின் ஏதோ ஒரு பகுதியில் மட்டுமே வரும்படி அமைக்கப் பட்டிருக்கும் அல்லது எந்த ஒரு பாத்திரமும் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை இடம்பெறுவதில்லை. ஆனாலும், கதை ஓட்டத்திற்கு இந்தப் பாத்திரங்கள், அதனதன் தன்மையில் உறுதுணையாக இருப்பதைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் தெரிந்து கொள்ள முடியும்.


நாமும் கூடப் படைக்கப் பட்டிருப்பது அப்படித்தான்!


3 comments:

  1. //
    தனித்துவிடப்பட்ட அந்தத் தருணங்களே, என்னைப் புதிய வார்ப்பாக மாற்றிக் கொண்டிருந்த தருணங்கள்.//

    மிக உண்மை.....தனித்து நம்மை நாமே கேட்டுக் கொள்ளும் கேள்விகளே அடிப்படையாக நம்மைத் தெரியப்படுத்தும், பக்குவப்படுத்தும்.

    ReplyDelete
  2. அனுபவித்துப் படித்தேன், அருமை!

    ReplyDelete
  3. சிந்திக்க வைக்கின்ற கட்டுரைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!