Monday, July 06, 2009

வெளியில் இருந்து இல்லை விடை உங்களுக்கு உள்ளேயே தான் இருக்கிறது!


"தெய்வம் என்றால் அது தெய்வம்-வெறும் சிலையென்றால், அது சிலைதான்!"
கவியரசர் கண்ணதாசனின் இந்த வரிகளோடு, முந்தைய பதிவை நிறைவு செய்திருந்தேன். மெய்ப்பொருளை அறிவது என்பதில், முதலில் எது மெய்ப்பொருள் என்பதை வரையறுத்தாக வேண்டுமே?! மெய்ப்பொருளை, அவ்வளவு எளிதாக, ஒரு நான்கைந்து வரிகளிலோ, அல்லது பத்துப்பதினைந்து தொடர் பதிவுகளிலோ வரையறை செய்து முடிந்துவிடும் 'இன்றைய தலைப்புச் செய்தி' அல்ல. மெய்ப்பொருளைக் காண்பது என்பது, ஒவ்வொரு மனிதனும், தானே சுயமாகத் தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு பயணம்.
கொஞ்சம் கஷ்டப்பட்டுத் தான், சுயமுயற்சியில் தான், பயணத்தைத் தொடர வேண்டியிருக்கும்!

மெய்ப்பொருள் என்பது இப்படித்தான் என்று வரையறை செய்ய ஆரம்பிக்கும்போதே, அறிவு, அப்புறம் அறிவியலும் கூடத் தன் இயலாமையைக் கொஞ்சம் அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறது. அறிவியல், அந்த நேரத்தில் தெரிகிற ஒன்றை வைத்து மட்டுமே முடிவைச் சொல்லும் ஒரு குறுகிய வட்டத்தில் நின்றுபோய் விடுகிறது. கடவுளை அறிவது என்பது, இன்றைக்கு எனக்குத் தெரியவில்லை, அதனால் இல்லை, நாளை எனக்குத் தெரிய வந்தால், அப்போது இருக்கிறது என்று முடிந்துவிடும் பௌதீக, ரசாயன, இயக்கம் இல்லை.

மனமோ,உடனே, நேர் எதிர் திசையில், எது எதுவெல்லாம் மெய்ப்பொருள் இல்லை என்பதைக் கண்டுகொண்டு கழித்துக் கொண்டே வந்தோமேயானால், கழிக்க முடியாத ஒன்று எஞ்சும்-அதுவே மெய்ப்பொருள் என இப்படி ஒரு வழியில் தேட ஆரம்பிக்கிறது! இப்படி, இது இல்லை, இது இல்லை என்று கழித்துக் கொண்டே தேடுகிற வழியை விசார மார்க்கம், கேள்வி கேட்டுக் கொண்டே போவதும் ஒரு வழியாக, அறியப்பட்டிருக்கிறது.

ஆக, தேடல் என்பது நதி, கடலில் சங்கமிக்கும் வரை தொடர்வதைப் போலவே, தேடும் பொருள் கிடைக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தேடும் பொருளைக் கண்டறிவதில் தான் முழுமை அடைகிறது. இந்த அடிப்படை உண்மையைத் தான், ஆன்மீகப்பெரியோர்கள், இந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம், இலக்கு இருக்கிறது, அதைக் கண்டறிவதற்கு முன் 'நான்' யார் என்ற கேள்விக்கு விடை கண்டாக வேண்டியிருக்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். சுய சிந்தனையும், முயற்சியும் இல்லாதவர்களுக்கு, இந்த 'நான் யார்' என்ற கேள்வியே கொஞ்சம் வினோதமாகத் தான் தெரிகிறது.

தருமி ஐயாவின் வலைப்பதிவில் வால்பையன் என்ற திரு அருண் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்.

"தத்துவம், அடிப்படை என்ற வார்த்தைகள் உங்கள் பின்னூட்டத்தில் இருந்தன!

நான் ஒரு கேள்வி கேட்கிறேன், புரிதலின் எல்லை எது? நீங்கள் நம்புவதா? அதற்கு குறுக்கு கேள்வி வரும் போது நீங்களும் ஆராய்ச்சியில் இறங்கலாமே, அதை விட்டு நான் நிற்கும் இடம் தான் உலகின் கடைசி என்பது எவ்விதத்தில் நியாயம்?"

அங்கேயே எனது பதிலும் இப்படி இருந்தது:

"அன்புள்ள திரு.அருண், நியாய, அநியாயங்களைக் கொஞ்சம் விஷயங்களை உள்வாங்கிக் கொண்டபிறகு முடிவு செய்யலாம்! அதற்கு முன்னால், சில அடிப்படைத் தேவைகளைப் பார்க்கலாம்.

ஒரு கேள்வியின் அடிப்படையே, ஏதோ ஒன்றைப் பற்றியது, அது என்ன, ஏன், எப்படி என்ற தேடல்களைக் கொண்டது. ஆக, சரியாக வரையறுக்கப்பட்ட ஒரு கேள்வியிலேயே அதற்கான பாதி பதில் இருக்கிறது என்று சொல்வார்களே, அது சரி.

இப்போது, உங்களுடைய கேள்விகளை, அந்த வரையறைக்குள் கொண்டுவர முடிகிறதா என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இங்கே நான் என்ன நினைக்கிறேன் என்பது முக்கியமல்ல, உங்களுடைய கேள்விகள் ஒரு தேடலைக் கொண்டிருந்தால், நிச்சயம் ஒரு விடை உங்களுக்குக் கிடைக்கும்.

அடுத்து, புத்தனுக்குப் போதிமரத்தின் அடியில் கிடைத்த மாதிரி, நம்முடைய கேள்விகளுக்கு மெய்யாலுமே விடைகள் கிடைத்து விட்ட மாதிரித் தோன்றுகிறது பாருங்கள், அந்த இடத்தில் தான் தொடர் கேள்விகள், நீங்கள் புரிந்து கொண்ட விதம் சரிதானா என்பதை ஐயம் திரிபறத் தெரிந்து கொள்ள உதவும்.

நீங்கள் சொல்கிற மாதிரி, இந்த "நான்" என்பது தான் கடைசிப் புள்ளி என்று அல்ல, அந்த "நான்" என்பது தான் ஆரம்பப் புள்ளி, அங்கேயிருந்து ஆரம்பித்து, அதுவே கடைசிப் புள்ளியாகவும் இருக்கும் என்பது தான்!
"

திரு அருண், தனது அடுத்த பின்னூட்டங்களில் இப்படிச் சொல்லியிருந்தார்:

"அதென்னா நான் யார் என்ற கேள்வி?
நீங்களும் உங்கள் நண்பரும் பேசிகொண்டிருக்கிறிர்கள், புதிதாக உங்கள் நண்பர் ஒருவர் வருகிறார், ஏற்கனவே இருந்த நண்பர் கேட்கிறார் “யார் இவர்”

இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வீர்கள்?

அண்ட சராசரத்தில் பிரபஞ்சத்தின் அணுக்களுள் ஒருவர் என தத்துவம் பேசுவீர்களா! இல்லை சந்திரன் சூரியன் என பெயர் சொல்வீர்களா?

நான் யார் என்று கேள்வி கேள்ன்னு சொல்லிட்டு போயிட்டா அது ஆன்மீகத்தின் உச்சகட்ட தேடலாகிவிடுமா?

சரி இதுவரை கண்டுபிடித்து சொன்னவர்கள் யார்?"


இப்படி, திரு அருணுடைய பின்னூட்டங்களில், அவருக்கு சில வார்த்தைகளைக் கண்டாலே அலெர்ஜி என்பது டோண்டு ராகவனின் ஒரு கேள்வி பதிலில் தெரிய வந்தது. நமக்கு அலெர்ஜியாக இருக்கிறது என்பதற்காக அவைகளை ஒழித்து விட முடியுமா என்ன?

இந்த 'நான் யார்' விஷயத்தையே, வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இந்தப்பக்கங்களில் பேசியிருக்கிறோம், தேவைப்படும்போது மீண்டும் பேசுவோம்! ஏனென்றால், அது தான் அடிப்படையான கேள்வி!


" நீங்கள் எல்லோரும் உங்களுக்கென்று சில அடையாளங்களை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இந்த அடையாளங்கள்எல்லாம் உங்கள் மீது திணிக்கப் பட்டிருப்பது புரியும். முதலில், உங்கள்பெயர்-அதை நீங்களா தேர்ந்தெடுத்தீர்கள்? இல்லையே, உங்கள்பெற்றோர்களோ.அல்லது நெருங்கிய உறவினர்களோ தானே உங்களுடையபெயரை வைக்க, நீங்களும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்? அதே மாதிரி, உங்களுடைய பெற்றோர்கள், அதையும் நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லையே! இப்படியே உங்களுக்கு இருக்கிற அடையாளங்கள் ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டே போனால், உங்களுடைய தேசம், மொழி, மத நம்பிக்கை, எதையுமே நீங்களாகச்சிந்தித்து, சுதந்திரமாகவோ, விழிப்புணர்வுடனோ தேர்ந்தெடுக்கவில்லையே!"


"இப்படியே சிந்திக்க ஆரம்பித்தீர்களேயானால், அப்பொழுது நான் யார் என்கிற கேள்வி தானாகவே வரும். கேள்விக்கு ஒவ்வொரு பதிலாகக் கிடைக்க ஆரம்பிக்கும். நான் என்பது என் உடலா, என்னுடைய ஆசைகளா, எண்ணங்களா, பழக்கங்களா இப்படி வரிசையாக இதுவாக இருக்குமோ, இதுவாக இருக்குமோ என்று போய்க்கொண்டே இருக்கும்.

சலித்துப் போய் நின்று விடாமல்
, இன்னும் ஆழமாக இந்தக் கேள்விக்குள்ளேயே போய்க் கொண்டிருந்தீர்களென்றால், நிச்சயம் உண்மையான விடை கிடைக்கும். குறைந்தபட்சம், இந்த மாதிரிக் கேள்விக்கெல்லாம் விடை வெளியில் இருந்து இல்லை, உங்களுக்கு உள்ளேயே தான் இருக்கிறது என்பது புரியவாவது ஆரம்பிக்கும்."

நினைவுபடுத்திக் கொள்வதற்காக, இப்படி ஒரு கதையாக ஏற்கெனெவே இந்தப் பதிவில் பார்த்திருக்கிறோம்!

அடுத்து, டாகின்ஸ் சொல்வது:
//கண்முன்னால் தெரிந்த சில மதத்தொடர்பான செயல்கள், ஆச்சரியங்கள் எல்லாமே மனித மூளையின் (temporal lobe epilepsy) பிறழ்வே.//

மனித மூளையின் பிறழ்வு, வலிப்பு என்பதெல்லாம், நம்புகிறவன், நம்பாதவன் இருதரப்பினருக்குமே வரக்கூடிய வியாதி மட்டும் தான். இவர்கள் இப்படி முடிவு செய்ய, சோதனைக்கு எடுத்துக் கொண்ட நபர்களை, அல்லது சம்பவங்களை மட்டுமே வைத்து, இந்த வாதத்தைப் பொதுமைப்படுத்தி, ஒட்டுமொத்த மனித குலத்திற்கே பொருந்துவதாக எடுத்துக் கொள்ள முடியாது.


உதாரணத்திற்கு, ஸ்ரீ ரமணரையே எடுத்துக் கொள்வோம். ரமணருக்கு வலிப்பு வியாதி இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும், வலிப்பு வியாதி உள்ளவர்கள் எல்லாருமே ரமணர் மாதிரி ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்த ஞானிகளாகி விட முடியுமா? ரமண சரிதம் தெரிந்தவர்கள், அவருடைய உபதேசங்களைப் படித்து, சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு, அவருடைய அருமை, வெளிச்சம் தெரியும்! புரிந்துகொள்ள மறுப்பவர்களை, என்ன செய்ய முடியும்?

ஆக, ஒரு அரைகுறையான ஆராய்ச்சி என்ற பெயரில், தனக்குத் தோன்றுகிற மாதிரி ஒரு ஆராய்ச்சி முடிவைச் சொல்பவரைத் தான், மனநிலை பிறழ்ந்தவராகச் சொல்ல முடியும். இப்படி அடுக்கடுக்காகப் பல சொத்தை வாதம், அதை ஊதி ஊதிப் பெரிதுபடுத்தியதைத் தவிர டாகின்ஸ் தன்னுடைய புத்தகத்தில் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை.

நியூ யார்க் நகரத்தின் மீது எட்டு வருடங்களுக்கு முன்னால், ஒசாமா பின் லாடேன் நடத்திய தாக்குதலும், அமெரிக்க அதிபராக எட்டு ஆண்டுகள் ஆண்ட ஜார்ஜ் புஷ் இருந்த காலத்தில், மதங்களைத் தங்கள் சுயநலத்திற்காக, ஒரு முகமூடியாகப் பயன்படுத்திய விதமும், ஈராக் மீதான படையெடுப்பில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியானதில் ஏற்பட்ட கசப்பும் ஒன்று சேர்ந்திருந்த தருணத்தில், ரிச்சர்ட் டாகின்ஸ் தன்னுடைய நாத்திக வாதத்தை, மிக வெற்றிகரமாக வணிகம் செய்திருக்கிறார், என்பதைத் தவிர இந்தப் புத்தகம் வேறு எதையும் சாதித்து விட்ட மாதிரி, தெரியவில்லை. ஊர் ஊராகப் போய்ப் புத்தகத்தை விற்பனை செய்தார், பிரச்சாரம் பலமாகவே இருந்தது, ஆனாலும் மத நம்பிக்கைகளைச் சாடுகிறேன் என்ற பெயரில், நடத்திய அதீதமான வாதங்கள் எடுபடவில்லை


கடவுளை, வெறும் மாயை என்று ஒதுக்கி விட, டாகின்ஸ், அவருடைய சக அறிவு ஜீவிகள் எடுத்து வைக்கிற வாதம், ஏமாற்றமளிப்பதாகவே இருக்கிறது.
இந்தப் பதிவை எழுதி முடித்தபோது திரு சேத் கோடின் வலைப்பக்கங்களில், இந்த சுவாரசியமான பதிவு, கண்ணில் பட்டது. இது மார்கெடிங் பற்றியது என்றாலும் கூட, நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் இந்தத் தலைப்புக்கும் பொருந்துகிறது."

The confusion

We frequently confuse internal biochemistry (caused by habits and genetics) with external events. If we didn't, marketing wouldn't work nearly as well.Our brains are busy processing chemicals that internally change our moods, but find a way to rationalize those mood changes based on events and purchases in the outside world. We often act as though money can buy joy, but of course, it works better when we're joyful in the first place......................

Marketers spend billions of dollars identifying common biochemical events, and then they launch products and services with stories that align with those events. As a result, we spend money on external forces in an attempt to heal internal pain. Marketers want the equation to be, "if you buy this, everything will be all right."


மதவாதிகள் அத்தனை பேருமே உண்மையான தேடலில் நம்பிக்கையுடனோ அல்லது உண்மையைக் கண்டறிந்தே ஆக வேண்டும் என்ற தவிப்புடனோ இருக்க முடியாது என்பது வரை சரி. புரிந்துகொள்வதில் பலவிதமான படிநிலைகள் உண்டு. புரிந்துகொள்ளச் சோம்பல் கொள்வதும் மனிதனின் இயல்புதான். அதனால் , ஒரு சிறு விஷயத்தைக் கூட, நினைவு படுத்திக் கொள்வதற்காக சடங்குகள், சம்ப்ரதாயங்கள், பண்டிகைகள், என்பவை ஏற்படுத்தப்பட்டன. காலப்போக்கில், இவை எதற்காக ஏற்படுத்தப் பட்டன என்பதே மறந்து போய் வெறும் சடங்குகள் மட்டுமே மிஞ்சியபோது, மூடத்தனங்களும் கலந்தன.


மூடத்தனங்களைக் களைவது அறிவுடைமையா, அல்லது மூட்டைப்பூச்சி வந்து விட்டது என்பதற்காக வீட்டையே கொளுத்திவிடு என்பது அறிவுடைமையா? பகுத்தறிவு என்ற பெயரில் இவர்கள்எடுத்து வைக்கும் வாதங்கள், இயக்கங்கள் காலப் போக்கில் என்ன பரிணாமத்திற்கு போகும் என்பதைப் பார்த்த பிறகும் கூட, இதே மாதிரி வாதங்களைத் திரும்பத் திரும்பப் பார்ப்பது கொஞ்சம் அலுப்பாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது!


மனிதனுடைய சோம்பேறித்தனத்தை மூலதனமாக வைத்துக் கொண்டு காசு பார்க்கும் இறைநம்பிக்கையாளர்கள் இங்கே உண்டு, பால் தினகரன்கள், பிரேமானந்தா சாமியார் மாதிரி இங்கே 'அற்புதம்' நிகழ்த்துவதை ஒரு ஜோடிக்கப்பட்ட பித்தலாட்டங்களாக நிறையவே பார்க்க முடியும்.

ஆனால், மத நம்பிக்கையாளர்கள் அனைவருமே பித்தலாட்டக்காரர்கள், கொலைகாரர்கள், மனப்பிறழ்வுடையவர்கள் என்று பேசுவது எவ்வளவு பெரிய அபத்தம், தவறான முடிவு எனபதையும் ஒரு சிறு குழந்தை கூட சொல்லுமே!


டாகின்ஸ் இன்னொரு வெற்று டமாரம், அவ்வளவுதான்!

சென்ற பதிவில் அண்டைஅயல் வலைப்பதிவில் திரு பராகா எழுதியிருந்த பின்னூட்டத்தைப் பற்றிச் சொல்லியிருந்தேன்.கொஞ்சம் நீளமான, புரிந்துகொள்ள நேரம் எடுக்கும் ஒரு அருமையான பதிவு, அறிவுத்தாகம்உள்ளவர்கள், தேடல் உள்ளவர்களை, இந்தப் பதிவையும், இதன் அடுத்தபகுதியையும் படிக்கப் பரிந்துரை செய்கிறேன்.

குரங்குத்தவம் என்கிற வலைப் பதிவில் இருந்து.... ..............

"வில்பர் இதை Causationயையும் Correlationயையும் குழப்பிக் கொள்வதால் வரும் வினை என்று சொல்கிறார்.ஆன்மீக அனுபவத்துக்கும் Temporal Lobesல் நடக்கும் தீப்பொறிகளுக்கும், Galvanic Skin Responseக்கும் Sexual Arousalக்கும் ‘Correlation' மட்டுமே உள்ளது. அதாவது Mindக்கும் Brainக்கும் அல்லது மனசுக்கும் மூளைக்கும் உடலுக்கும் இடையே இணைப்புகள், Correlationகளே உள்ளன. ஒரு EEG கருவியை நீண்ட நாட்களாக தியானத்தில் ஈடுபட்டிருந்த ஒரு புத்த பிக்குவின் மேல் பொறுத்தினால் 'Delta' அலைகளில் வித்தியாசம் தெரியும். ஒன்றை மற்றொன்றின் காரணியாகக்(Cause) கொள்வதே குழப்பத்திற்குக் காரணம். அப்படி சுருக்குவதும் ஒரு வித Reductionism.
** ** **
கென் வில்பருக்கும் காப்ராவுக்கும் நடந்த உரையாடலில் சிலதை வில்பர் தெளிவாக்குகிறார். ஆன்மீக அனுபவத்தை ‘Contemplative Tradition' கூறிய வழிமுறைகளின் வழியே (தியானம், யோகம் உட்பட பல்வேறு வகைகள்) மட்டுமே உள்வாங்க முடியும்.தத்துவ விவாதத்தால் முடியாது. ஒரு பொதுப் புரிதலை மட்டுமே அவை உருவாக்க முடியும். அதே போல் கலை இலக்கியத்தாலும் முடியாது. அவைகளில் ஈடுபடுவது ஓர் ஆரம்பமே.

அதே போல் ஆன்மீக அனுபவத்தை உள்வாங்கும் பல்வெறு நிலைகளை ஒரு ‘Spectrum' போலவே வில்பர் பார்க்கிறார். இங்கே நாம் இதை பொதுவாக இரட்டை நிலைகளிலேயே பார்க்கிறோம். சுவிட்சு போட்டால் லைட் எரிவதைப் போல் தியானம் செய்து கொண்டே இருக்கும் போது திடீரென முகம் பிரகாசம் ஆகி ஞானடைந்து பின்னால் ஒளிவட்டம் வந்து ரமணரைப் போல் மாறாபுன்னகையோடு இருப்போம் என்பதைப் போல் அன்றி ஒரு வித Spectrum போலவே நம் அனுபவங்கள் முன்னேறிக் கொண்டே இருக்கின்றன. அதே போல் இது ஏணிப் படிகள் போன்ற 'rigid' ஆன structure/hierarchy கொண்டதும் அல்ல. அலைகளைப் போல். ஆங்கிலத்தில் Flex-Flow என்று சொல்வார்கள்.

இதை விட முக்கியமாக ஆன்மீக அனுபவம் எவருக்கும் எந்த நிலையிலும்ஆன்மீக அனுபவம் என்பதும் அனுபத்தை 'செரித்து, 'உள்வாங்கி' முன்னேறுவதும் ஒன்றல்ல.

சுயமிழத்தல் போன்ற transient, fleeting நிகழுவுகளே அதில் நிகழ வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அவை ஒரு முக்கிய ஆரம்பமாக அமையலாம்.
ஏற்படலாம் என்று சொல்கிறார். என்னடா ஆன்மீக அனுபவத்தை ‘Contemplative Tradition' கூறிய வழிமுறைகளின் வழியே மட்டுமே உள்வாங்க முடியும் என்று கூறி விட்டு இப்படி முன்னுக்குப் பின் முரணாகபேசுகிறாரே வில்பர் என்று கேட்கலாம்."


மெய்ப்பொருள் காண்பதறிவு!
அறிவின் பயனே மெய்ப்பொருளைக் காணுவது தான்!


6 comments:

 1. //அக்கறை இல்லாதவர்களுக்குச் சொல்வது கூட, மதிப்புள்ள பொருளைப் பாழும் கிணற்றுக்குள் வீசி எறிவது போலத்தான்.//

  அருமை!

  ReplyDelete
 2. அப்படி ஒரேயடியாக இவர் அருமை தெரிந்தவர், இவர் தெரியாதவர் என்றெல்லாம் ஒதுக்கிவிட்டுப் போய்க் கொண்டே இருக்கமுடியாது அம்மா! நதி, கடலில் கலக்கும் இடத்தைப் பார்த்திருக்கிறீர்களா, நல்ல தண்ணீரும், உப்புத்தண்ணீரும் சங்கமிக்கும்போது அங்கே ஒரு இடைவெளி, எதிர்ப்பு இருக்கிற மாதிரித் தான் தெரியும்.

  இரண்டு நேரெதிரான கருத்துக்களின் முரண் இயக்கத்தில் தான் மனித வாழ்க்கை, அறிவு, அனுபவம், ஞானம் என்பதெல்லாம் இருக்கிறது. Thesis-->Anti-thesis-->Synthesis இப்படியே ஒவ்வொரு சிந்தனையில் எழும் முரண்பாடுகள், அடுத்த கட்டத்திற்குப் போய்க் கொண்டே இருக்கும். இங்கே கூட டாகின்ஸ் தன்னுடைய புத்தகத்தில் சொல்கிறமாதிரி, காரணம் என்பது முதல் காரியத்துடன் முடிந்துபோவதில்லை.

  ReplyDelete
 3. //அப்படி ஒரேயடியாக இவர் அருமை தெரிந்தவர், இவர் தெரியாதவர் என்றெல்லாம் ஒதுக்கிவிட்டுப் போய்க் கொண்டே இருக்கமுடியாது அம்மா!//

  இருக்கலாம். ஆனால் பாத்திரம் கொள்ளும் வகையில்தானே அதில் தண்ணீரை ஊற்ற முடியும்? ஓரளவுக்கேனும் அக்கறை உள்ளவர்களிடம் தான் பேச முடியும். யார் சொன்னது என்று நினைவில்லை - ஸ்ரீராமகிருஷ்ணராக இருக்கலாம் - ஏற்கனவே (ego) நிரம்பியிருக்கும் பாத்திரம் எதைத்தான் ஏற்றுக் கொள்ளும்?

  (நான் அறிவு ஜீவி அல்ல. படிப்பாளியும் அல்ல. உங்களுக்கு சரியாக பேசும் தகுதி எனக்கில்லை. மனதில் தோன்றியதை பகிர்ந்து கொண்டேன்... தவறாக இருப்பின் தள்ளி விடுங்கள்.)

  ReplyDelete
 4. நீங்கள் எடுத்தாண்டிருக்கிற வரிகள் 'ஆசை உடையோர்க்கெல்லாம், ஆரியர்காள் கூறுமென்று...!' என்ற பதிவில் வருபவை. அங்கேயே அந்தக் கருத்தோடு, எனக்கு உடன்பாடு இல்லை என்பதையும் தெளிவாகவே சொல்லியிருக்கிறேன். முடிந்தால், இன்னொரு முறை அந்தப் பதிவை மறுபடி படித்து விட்டுச் சொல்லுங்கள்.

  (One must have the adhikara, or right, not only to speak on spiritual matters, but also to seek answers to profound questions. In the second case, the right is earned by a sustained thirst for knowledge. Short of that, no knowledge, even when received, has any effect).

  உடன்பாடு ஏன் இல்லை என்றால்,

  "ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர் *
  ஏரார் எதிராசர் இன்னருளால் * - பாருலகில்
  ஆசையுடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் ! கூறும் என்று*
  பேசி வரம்பு அறுத்தார் பின்."

  உபதேச ரத்தின மாலையில், ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளியது.

  நானும் பெரிய படிப்பாளியோ, அறிவுஜீவியோ இல்லை அம்மா! ஆன்மீகத்தைப் பற்றி மட்டுமே எழுதிக் கொண்டிருப்பதனால் அப்படி ஒரு முடிவுக்கு வந்து விட்டீர்களோ? உண்மையிலேயே நான் மிகச் சாதாரணமானவன், இரும்பைப் பழுக்கக் காய்ச்சிச் சம்மட்டியினால் தொடர்ந்து அடிப்பது போல, அனுபவங்கள் என்னை ஒரு திசைக்கு மாற்றிக் கொண்டிருக்கின்றன என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். அதுவும்கூட முழுச் சித்திரத்தையும் தராது!

  வாழ்க்கை என்பதே நம்பிக்கை, அவநம்பிக்கை என்கிற இரண்டு கரைகளுக்கு நடுவில் ஓடும் நதி என்பதையும், பயணத்தில், இந்தக் கரைக்குப் பக்கத்திலோ, அல்லது அந்தக் கரைக்குப் பக்கத்திலோ, நீச்சலடித்துக் கொண்டிருப்பதாக உருவகம் செய்து பாருங்கள்!
  நான் சொல்ல முனைந்தது புரியும்!

  தள்ளுவதோ, கொள்ளுவதோ என் வசத்தில் எதுவும் இல்லை என்பதை சமீப கால அனுபவங்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

  ReplyDelete
 5. மறுபடி படித்துப் பார்க்கிறேன்.

  //ஆன்மீகத்தைப் பற்றி மட்டுமே எழுதிக் கொண்டிருப்பதனால் அப்படி ஒரு முடிவுக்கு வந்து விட்டீர்களோ?//

  அப்படி இல்லை. உங்கள் எழுத்துகளை/பின்னூட்டங்களை வாசித்த வரையில், உங்கள் வாசிப்பனுபவமும், வாழ்க்கை அனுபவமும் மிக விரிவானதாகத் தோன்றியது. அதனால் அப்படி சொன்னேன்.

  ReplyDelete
 6. மனதில் எண்ணங்களற்ற நிலை உண்டாகி
  அனைத்து நிகழ்வுகளையும் உணர்வோடு
  சாட்சியாக ம்ட்டும் இருந்து காணக்கூடிய நிலை
  வரும்போது மட்டும்தான் ரமணரின்
  நிலை சாத்தியப்படக்கூடும்
  இல்லாவிடில் நம் மனது பிறரிடம்
  கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கும்
  உண்மையை அறிவதர்க்கான பூட்டின் சாவி நம்மிடமே உள்ளது
  அதை பிறரிடம் தேடினால் என்றும் கிடைக்காது.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails