என்ன பாட்டுப் பாட-அட, என்ன தாளம் போட?


"என்ன பாட்டுப் பாட-அட, என்ன தாளம் போட"
இது, இசைஞானி இளைய ராஜா புகழின் உச்சத்தில் இருந்தபோது இசையமைத்துத் தானே பாடிய பாட்டு. இந்தக் கேள்வி, எல்லோருக்குமே ஒரு கட்டத்தில், இதே மாதிரி வேறு வடிவத்தில் வருவது தான். ஒரே மாதிரி வாழ்ந்துவிட்டுப் போவதில், மனிதனுக்கு என்றுமே நாட்டம் இருந்தது இல்லை. மனிதனுடைய பரிணாம வளர்ச்சி இதிலிருந்து தான் ஆரம்பிக்கிறது என்றே சொல்லலாம். மாற்றத்திற்காகத் தவிக்கிற ஒரு புறம்-மாற்றத்திற்குப் பயப்படுகிற, தயாராக இல்லாத இன்னொருபுறம்!

கடந்துபோன பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், மனிதனை மாதிரி மாற்றத்தை விரும்பியதோ, அல்லது மாற்றத்திற்குப் பயந்து இப்படியே இருந்து விட்டுப் போகிறேனே என்று பழக்கத்தின் அடிமையாகவே இருந்து விடத் துடிக்கும் சோம்பேறியாகவோ, வேறு எந்த உயிரினத்தையும் சொல்ல முடியாது.

இப்படி இரண்டுவிதமாகவும் இருக்கிற தன்மை, மனிதனுக்கு, மனம் என்ற கருவியினாலேயே ஏற்பட்டிருப்பதை முந்தைய பதிவுகளில் நிறையவே பார்த்திருக்கிறோம். இந்த இரட்டைத் தன்மையைப் பற்றி புரிந்து கொள்வது தான் சாக்ரடீஸ் முதல் இங்கே ரமணர் வரை தத்துவ ஞானிகள் "உன்னையே நீ அறிவாய்!" என்று சொல்லி வந்திருக்கிறார்கள்.

பரிசோதனைக் கூடங்களில், கண்ணாடிக் குடுவைகளிலும், ரசாயன மாற்றங்களைக் குறித்து ஆய்வுக் குறிப்புக்கள் எழுதி நிர்ணயிப்பது போல, மனம், எண்ணங்கள், எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்பதில் இருக்கிற குழப்பங்கள், தேர்ந்தெடுக்கிற சுதந்திரம், அதையொட்டி நிகழ்கிற விளைவுகள், அனுபவங்கள் இவற்றை, ஆவணப்படுத்தவோ, பொதுமைப் படுத்தவோ முடியாது. அறிவியல், இன்னமும் வளர்கிற பருவத்திலேயே இருக்கிறது. ஆவணப்படுத்தத் முடிகிற விஷயங்களை மட்டுமே அறிவியல் ஏற்றுக் கொள்கிறது, ஆவணப்படுத்தப்பட்ட விதமே தவறு என்று யாராவது வந்து நிரூபிக்கும் வரை, இந்த முடிவுகள் மட்டுமே 'அறிவியல்' பூர்வமாக இருக்கும்.

இதை ஏற்றுக் கொள்ளத் தயங்காதவர்கள், இதே மாதிரி மதக் கோட்பாடுகளின் அடிப்படையிலோ, நம்பிக்கை அடிப்படையிலோ சில நடைமுறைகள், பழக்கங்கள், சிந்தனைகள் இருப்பதை மட்டும் தவறு, புரட்டு, பித்தலாட்டம் என்று பெரும் கூச்சலிடுவது தான் கொஞ்சம் வினோதமாக இருக்கிறது. இங்கே நிஜமாகவே நம்பிக்கை என்ற பெயரில் நிறையப் பித்தலாட்டங்கள் நடப்பதை மறுக்கவில்லை. ஒட்டுமொத்தமாகவே, நம்பிக்கையே பித்தலாட்டம் என்று முத்திரை குத்துவதை மட்டும் தான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்த அளவோடு, ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதிய கடவுள் என்றொரு மாயை புத்தகத்தை விவாதிப்பதை நிறுத்திக் கொள்வோம். இதற்கு மேலும் பேசப் போனால், கீறல் விழுந்த ரெகார்ட் மாதிரித் தான், பேசியதையே திரும்பத் திரும்பக் கேட்க வேண்டியிருக்கும்.

இங்கே ஒரு பதிவர் "எனக்கு வள்ளலாரும் ஒன்றுதான், பெரியாரும் ஒன்றுதான்" என்று நிரந்தரமான பன்ச் டயலாக் வைத்திருப்பார். இவைரைப் பற்றி வேறொரு பதிவில், இவர் நாத்திகரா, ஆத்திகரா என்பதே தெரியவில்லை என்ற ஒரு விமரிசனத்தையும் பார்த்திருக்கிறேன்.

எம்ஜியார் தி.மு.கவிலிருந்து பிரிந்து தனிக் கட்சி தொடங்கிய நேரம். தெரியாத்தனமாக, ஒரு நிருபர் அவரிடம் 'அண்ணாயிசம் என்றால் என்ன' என்று கேட்டு விட்டார். கொஞ்ச நேரம் அந்த நிருபரைக் கடுப்புடன் பார்த்து விட்டு, 'இது கூடத் தெரியாது? கம்யூனிசம் காபிடலிசம், சோஷலிசம் மூன்றும் சேர்ந்தது தான் அண்ணாயிசம்'என்று எம்ஜியார் சொன்னதாக, அந்த நாட்களில் படித்தபோது, எவ்வளவு கேலிக்குரியதாக இருந்ததோ, அதே மாதிரித் தான், வள்ளலாரும் ஒன்றுதான், பெரியாரும் ஒன்றுதான் என்று சொல்வதும் இருக்கிறது.

இதைச் சொல்வதுகூட, அந்தப் பதிவரை விமரிசனம் செய்வதற்கு அல்ல, அவர் எழுதிய சில பதிவுகளைப் படித்திருக்கிறேன்,தன்னிடம் இருக்கும் முரண்பாடுகளைக் கொஞ்சமும் அறியாமலேயே நிறைய விவாதங்களைத் தொடங்குகிறார் என்பதற்கு மேல் வேறு எந்த அபிப்பிராயமும் எனக்குக் கிடையாது. நான் சுட்டிக் காட்ட வருவதெல்லாம் எப்படி ஒரு விஷயத்தை, முழுதாக உள்வாங்கிக் கொள்வதற்கு முன்னாலேயே, ஒரு முடிவெடுத்து விடுகிறோம் பாருங்கள், அந்த விநோதத்தைப் பற்றித் தான்!

இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல் இருப்பது இங்கே நிறையப் பேருக்குக் கை வந்த கலையாக இருக்கிறது. கழுவுகிற நீரில் நழுவுகிற மீனாக இருப்பதே பெரிய சாமர்த்தியம் என்றிருக்கும் இப்படிப்பட்டவர்களால், எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

"முத்தி என்பது நிலை முன்னுறு சாதனம்

சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்"


என்று வள்ளல் பெருமான் சொல்கிறபடி, அறிந்து சொன்னவருடைய அனுபவம் என்பது, நமது சொந்த அனுபவமாகிற வரையில், வெறும் கனவாகவும், கதையாகவும் தான் இருக்கும். ஒரு எல்லை வரைக்கும், அடுத்தவருடைய அனுபவம் என்பது துணை வரலாமே தவிர, ஒரு ஆதர்சமாக இருக்க முடியுமே தவிர, ஒருவருடைய அனுபவம் இன்னொருவருக்குப் பொருந்தி வராது. முழுக்கப் புரிந்து கொள்ளவும் முடியாது. கொஞ்சம் இந்த இடத்தில் யோசித்துப் பார்த்தீர்களேயானால், உண்மையை உடனே புரிந்து கொள்ள முடியும்.

ஒரு மனிதன், தன சாயலில் கடவுளைக் கண்ட மாதிரி, மற்ற உயிரினங்களுமே, தங்களுடைய சாயலில் தான் கடவுளை, அல்லது தங்களை ரட்சிக்கும், வழி நடத்தும் தலைவர்களைக் கண்டு கொண்டிருக்க முடியும் என்பதும் எளிதில் ஊகிக்கவும், புரிந்து கொள்ளவும் முடிகிற உண்மைதான்.

ஆகக் கடவுள் என்பதை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பது, [நாம் கடந்து வந்த] பரிணாம நிலையின் கடந்த படி, தற்போதைய நிலை இவற்றைப் பொறுத்தே அமைகிறது. இப்படிச் சொல்லும் போதே, எந்த ஒரு இரு நபர்களுக்கும், இந்தப் புரிதல், ஒரே மாதிரி இருப்பதில்லை, இருக்க வேண்டிய அவசியம் இல்லை, என்பதும் சொல்லாமலேயே விளங்கும். இந்த விஷயத்தை ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அரவிந்த அன்னையும் எப்படி விளக்குகிறார்கள் என்பதை முன்னமே இந்தப் பக்கங்களில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம்.

"Do not give too much importance to the little incidents of life.The importance of these incidents lies in the extent to which they have served you to make a progress.

And once the progress has been made, the consequences of past errors, if there are any, disappear through the intervention of the divine Grace."

ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்வதை சரியாகப் புரிந்துகொண்டோமென்றால், மனம் என்பதன் உபயோகம் ஒரு எல்லை வரைதான் என்பதும், இறைவனது பெரும் கருணையை, அது நம்மோடு செயல்படுவதைப் புரிந்து கொள்ள, Change of Consciousness இதுதான் மிக மிக முக்கியமானது என்றாகிறது.

இன்னும் பேசுவோம்!

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!