நில், கவனி, செயல்படு !


"முன்னெடுத்த காலைப் பின்வாங்கிப் பழக்கமில்லை!"
என்று மார்தட்டிக் கொள்கிறவரா நீங்கள்? நானும் கூட கொஞ்ச நாள் முன்பு வரை அப்படித்தான், வீம்புடன் மார்தட்டிக் கொண்டிருந்தேன். முன்னெடுத்த காலை எதற்காகப் பின்வாங்க வேண்டும், அப்படிச் செய்வதால் என்ன நன்மை வந்து விடப் போகிறது என்கிறீர்களா? நிறைய இருக்கிறது!

சாலைகளில், ஓரத்தில் ஒரு signpost பார்த்திருப்பீர்கள்.

"நில், கவனி, செல்"

சாலையைக் கடப்பதற்குப் பாதுகாப்பான வழி, கொஞ்சம் நின்று நிதானித்து, இரண்டுபுறமும் வண்டிகள் வருகின்றனவா என்பதைக் கவனித்து, அதற்கு அப்புறம், சாலையைக் கடந்தால், எந்த சேதமும் வருவதில்லை. அப்படிச் செய்யத் தவறும் சமயங்களிலேயே, விபத்துக்கள் நிகழ்கின்றன.

சாலையைக் கடப்பதற்கும், முன்னெடுத்த காலைப் பின்வங்குவதற்கும் என்ன சம்பந்தம்? பின்வாங்குவது கோழைத்தனம், எங்கள் ரத்தத்திலேயே இல்லாத ஒன்று, இதையும் அதையும் எதற்காக முடிச்சுப் போட்டுச் சொல்கிறாய் என்று கேட்கிறீர்களா?

அப்படிப் பின்வாங்கத் தெரியாதவர்கள் தொடர்ந்து சிக்கல்களிலேயே உழன்று கொண்டிருப்பார்கள், என்னைப் போல! ஒரு சிக்கலைத் தீர்க்கிறேன் என்று, இன்னமும் பல சிக்கல்களில் சிக்கிக் கொள்கிற தொடர்கதையாகிப் போய் விடும் என்பது அனுபவம். இப்படி இடியாப்பச் சிக்கல்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி என்பதை, ஸ்ரீ அரவிந்த அன்னை, Stepping back என்ற தலைப்பில், மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். கொஞ்சம் பார்ப்போமா?

நில், கவனி, செயல்படு !

"Most of you live on the surface of your being, exposed to the touch of external influences. You live almost projected, as it were, outside your own body, and when you meet some unpleasant being similarly projected you get upset. The whole trouble arises out of your not being accustomed to stepping back. You must always step back into yourself – learn to go deep within – step back and you will be safe. Do not lend yourself to the superficial forces which move in the outside world. Even if you are in a hurry to do something, step back for a while and you will discover to your surprise how much sooner and with what greater success your work can be done. If someone is angry with you, do not be caught in his vibrations but simply step back and his anger, finding no support or response, will vanish. Always keep your peace, resist all temptation to lose it. Never decide anything without stepping back, never speak a word without stepping back, never throw yourself into action without stepping back. All that belongs to the ordinary world is impermanent and fugitive, so there is nothing in it worth getting upset about. What is lasting, eternal, immortal and infinite – that indeed is worth having, worth conquering, worth possessing. It is Divine Light, Divine Love, Divine Life – it is also Supreme Peace, Perfect Joy and All-Mastery upon earth with the Complete Manifestation as the crowning. When you get the sense of the relativity of things, then whatever happens you can step back and look; you can remain quiet and call on the Divine Force and wait for an answer. Then you will know exactly what to do. Remember, therefore, that you cannot receive the answer before you are very peaceful. Practice that inner peace, make at least a small beginning and go on in your practice until it becomes a habit with you."


-ஸ்ரீ அன்னை, நூற்றாண்டு விழாத் திரட்டு, தொகுதி 3 பக்கம் 160

நாமெல்லோருமே, இந்த உடலுக்கு வெளியே தான், புலன்கள் காட்டித் தருகிறபடி, வெளிச் சூழ்நிலைகளின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பது போலத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்."நான்' இன்னாரென்று வெளியே கற்பிதம் செய்யப் பட்டிருக்கும் அடையாளங்களைச் சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம், சற்றே ஏறுக்கு மாறான கற்பிதம் ஏற்பட்டு விட்டால், உடனே சோர்ந்து போய் விடுகிறோம்.

இந்த நேரத்தில் தான், சாலையை கடக்க நில், கவனி, செல் என்ற பாதுகாப்பு விதி இருப்பது போலவே, முன்னெடுத்து வைப்பதைக் கொஞ்சம் நிதானித்துப் பின் வாங்குவதை அறியாததால், பழக்கமில்லாததால் தான் சிக்கல்களே உருவாகின்றன. சிக்கல்கள் சூழும் இந்த மாதிரித் தருணத்தில் தான், பின்வாங்குவது என்பது தனக்கு உள்ளேயே பார்க்கப் பழகிக் கொள்வது தான்-தன்னையே அறியத் தலைப் படுவதுதான், பாதுகாப்பான தீர்வு, மிக இயல்பானதும் கூட என்கிறார், ஸ்ரீ அன்னை.

வெளியே தலைவிரித்தாடும் சூழ்நிலைகளைப் பொருட்படுத்த வேண்டாம். அவசரமாக ஏதாவது செய்ய வேண்டியிருந்தாலும், கொஞ்சம் நிதானித்து, உள்முகமாகப் பின் வாங்குவதன் மூலம் செய்ய வேண்டிய வேலைகள் வெகு சீக்கிரமாகவும், வெற்றிகரமாகவும் ஆகிவிடுவதை அறிந்தால் ஆச்சரியப் பட்டுப்போவோம் என்று ஸ்ரீ அன்னை மேலும் சொல்கிறார்.

யாரோ நம்மிடம் கோபமும் வன்மமும் கொண்டிருக்கும் தருணங்களில், நாம் உள்முகமாகப் பின்வாங்கும் போது, அவர்களுடைய கோபம், வன்மத்தின் அதிர்வுகள் நம்மைப் பாதிப்பதில்லை. எதிர்ப்பாட்டோ, ஆதரவோ தென்படாத நிலையில், வெளியே காணும் கோபமும், வன்மமும் செயலிழந்து போய்விடுவதையும் பார்க்க முடியும். ஒரு கை ஓசை, எத்தனை நேரம் தான் நீடிக்க முடியும்?

எப்போதுமே அமைதியாக இருக்கப் பழகிக் கொள், அமைதியை விடாமல், அப்படி இழக்கச் செய்ய வெளியில் இருந்து வரும் தூண்டுதல்களை உறுதியோடு நிராகரிக்கப் பழகிக் கொள் என்கிறார் ஸ்ரீ அன்னை.

அது எப்படி என்றால்---
* நிறுத்தி நிதானிக்காமல், எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். * நிறுத்தி நிதானிக்காமல், எந்த ஒரு வார்த்தையும் சொல்ல வேண்டாம். * நிறுத்தி நிதானிக்காமல், எந்த ஒரு செயலிலும் குதித்து விட வேண்டாம்

மேலோட்டமாகத் தெரிகிற வெளி உலகச் சூழ்நிலைகள் அனைத்துமே நிரந்தரமானவையோ, பாதுகாப்பானதோ அல்ல, அப்படி இருக்கையில், அவைகளைப் பற்றிக் கவலைப் படுவது எதற்காக? அதற்கு என்ன அவசியம் இருக்கிறது என்று ஸ்ரீ அரவிந்த அன்னை, ஆச்சரியமாகக் கேட்கிறார்.

எது நிரந்தரமானதோ, அழிவில்லாததோ, முடிவில்லாததோ அப்படிப்பட்ட ஒன்று தான், பெறுவதற்குத் தகுதியானது, போராடுவதற்கும் வெற்றி கொள்வதற்கும் தகுதியானது.

அது தான் தெய்வீக ஒளி, தெய்வீக அன்பு, தெய்வீக வாழ்க்கை! அதுவே உன்னதமான அமைதி, பூரணமான ஆனந்தம், அப்புறம் முழுமையடைந்த படைப்பே கிரீடமாக அணிந்து இந்தப் பூமியையே கட்டி ஆளுகின்ற திறம், எல்லாமும் ஆகி விடும்.ஒவ்வொன்றுக்கும் இடையில் உள்ள தொடர்பை அறிகின்ற அதே நேரம், என்ன நடந்தாலும், நிறுத்தி, நிதானித்து, உள்ளார்ந்து சென்று, அதைக் காண முடியும். அமைதியுடன், இறையருளை வேண்டியழைத்து, சரியான பதிலைப் பெறக் காத்திருக்க வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவான பதிலாகப் பெற முடியும்.

கேள்விக்கான பதிலை, ஆழ்ந்த அமைதியில் இல்லாமல் வேறு விதமாகப் பெற முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள். அப்படிப் பட்ட உள்ளார்ந்த அமைதியை சாதகம் (பயிற்சி) செய். சின்னச் சின்ன அடிகளாக எடுத்து வைத்தாவது,உன்னுடைய பயிற்சியை ஆரம்பித்து ஒரு பழக்கமாகவே ஆகும் வரை செய்து கொண்டிரு என்கிறார் ஸ்ரீ அன்னை.

இன்றைக்கு அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு இருக்கும் வசதிகள் எதுவுமே, ஆன்மீகச் சிந்தனையாளர்களுக்குக் கிடையாதென்பது எல்லோருக்குமே தெரியும். உள்ளார்ந்த சிந்தனையிலேயே, ஆன்மீக வெளிச்சத்திலேயே, மகத்தான வாழ்வு நெறிமுறைகளைக் கண்டார்கள்.

மெய்ப்பொருளைக் காணுவதென்பது தேடலின் சத்தியத்தில் விளைவது, பரிசோதனைக் கூடங்களில் ஆவணப்படுத்தப்படுவது அல்ல.

உள்ளார்ந்து உண்மையைப் பார்க்கத் தெரிந்தவனே "பார்ப்பான்" (Seer). இத்தகைய தன்மை பிறப்பினால் வருவதல்ல. உண்மையை அறிவதனால் வருவது!

2 comments:

  1. //மெய்ப்பொருளைக் காணுவதென்பது தேடலின் சத்தியத்தில் விளைவது, பரிசோதனைக் கூடங்களில் ஆவணப்படுத்தப்படுவது அல்ல.//

    ஆணி அறைந்தாற் போல் ஆவணப்படுத்தப்பட்ட வாக்கியம். அந்த தேடலும் முடிவென்ற ஒன்றில்லாமல் முடிந்து விடுவதென்பது தான்
    அதன் அதிசயம்.
    நல்ல அனுபவத்தைத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. எப்போதும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டிய தேவையான சிந்தனைகள், கருத்துகள். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!