Thursday, August 13, 2009

கண்ணன் பிறந்தான்! எங்கள் மன்னன் பிறந்தான்!!

கண்ணன் பிறந்தான்! எங்கள் கண்ணன் பிறந்தான்!!
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா!
மன்னன் பிறந்தான்! எங்கள் மன்னன் பிறந்தான்!!
மனக் கவலைகள் மறந்ததம்மா!

கவியரசர் கண்ணதாசனுடைய பாடல் வரிகளில்,இப்படி கண்ணன் பிறந்ததைக்கொண்டாடும் திருநாள் இன்று!
குழந்தைக் கண்ணனாக அவன் செய்த விஷமங்களைக் கேட்கையிலே, உள்ளம் மலரும்! கண்ணன் கதை கேட்பதென்றால் அதைவிட சந்தோஷமான அனுபவம் வேறென்ன இருக்க முடியும்!

ஆயர்பாடியில்,மாடு மேய்க்கப் போகிறேன் என்று கிளம்புகிறானாம் கண்ணன்! செல்லக் குழந்தை கஷ்டப் படுவானே என்று யசோதையின் தாயுள்ளம் கலங்குகிறது. மாடு மேய்க்கப் போக வேண்டாம் என்று குழந்தையைக் கெஞ்சுகிறாள்.

இந்த அதிசயக் குழந்தை, தாய்க்குத் தைரியம் சொல்கிறது! மா ஸுச: கவலைப்படாதே! உனக்குத் தெரிந்த எல்லா தர்மங்களையும் விட்டு விட்டு, என்னையே பற்றிக்கொள், உன்னை எல்லாத் தளைகளில் இருந்தும் விடுவிக்கிறேன் என்று அர்ஜுனனுக்கு உபதேசம் செய்கிற சாக்கில், கீதையைச் சொல்லப் போகிற குழந்தை, இங்கே அம்மாவுக்குச் சமாதானம் சொல்கிற அழகே அழகு. 'போக வேண்டும் தாயே ..தடை சொல்லாதே நீயே" என்கிறது.

தாயுள்ளம், எப்படியெல்லாம் குழந்தையிடம் கெஞ்சுகிறது என்பதைப் பாருங்கள்!குழந்தை எவ்வளவு பக்குவமாகத் தாய்க்குப் பதில் சொல்கிறது என்பதையும் பாருங்கள்!

யசோதை:
மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்

கண்ணன்:
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே

யசோதை:
காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணைய் தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம்
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)
கண்ணன்:
காய்ச்சின பாலும் வேண்டாம்; கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில் திரும்பிடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)

யசோதை:
யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)
கண்ணன்:
கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லும் அம்மா?
கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)

யசோதை:
கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)
கண்ணன்:
காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)

யசோதை:
பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)
கண்ணன்:
பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)

படிக்கும் போதே என்ன சுகமாக இருக்கிறது! அருணா சாயிராம் போன்ற திறமையான இசைக் கலைஞர் அனுபவித்துப் பாடும்போது, பரமசுகம்!!

இங்கே பார்க்கலாம்! கேட்டு ரசிக்கலாம்! கண்ணனை நினைக்கலாம்!

'கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே'

3 comments:

 1. என்ன சுகமான பாடல்! எனக்கு ரொம்பப் பிடிச்சது. இதற்கு நடனம் அமைக்கணும்னு ஆசை! தந்ததற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 2. இந்தப்பாடலை அருணா சாயிராம் அனுபவித்து, அபிநயித்துப் பாடுவதைச் சுட்டியில் பார்த்தீர்களே யானால், உங்களுடைய வேலையில் முக்கால் வாசி குறைந்து விடும்:-)

  சுட்டி போன வருடம் ஜெயா டீவீயில் மார்கழி மகோத்சவத்தில் அவர் பாடியதில் இருந்து.

  நேற்று மாலை, தொலைக் காட்சியில் அவர் இதே பாடலைப் பாடின போது, ரொம்பவுமே சிரமப்படுவதாகத் தோன்றியது.

  ReplyDelete
 3. அருமையான பாடல்களை அளித்தமைக்கு நன்றி கிருஷ்ணமூர்த்தி சார்.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails