சுட்டும் விரல் சொல்லுதே! சுட்டும் விரல் சொல்லுதே!



பேசும்போது,சுட்டுவிரலை நீட்டிப் பேசுவது என்னிடத்தில் இருக்கும் கெட்ட பழக்கம். கொஞ்சம் ஊன்றிப்பார்த்த பிறகுதான் உறைக்கிறது, என்னுடைய எதிரிகளில் 99 சதம் சுட்டுவிரலை நீட்டிப் பேசினதில் உருவானவர்கள்தான் என்பது!

ஆள்காட்டிவிரலை நீட்டி ஒருவரைப் பற்றிப் பேசுகிறோம்; கட்டை விரல் தவிர்த்த மற்ற மூன்று விரல்கள் நம்மையே சுட்டிக் காட்டுவதை நாம் உணருவதே இல்லை.இந்த வேடிக்கையான இயல்பைப் பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை கொஞ்சம் ஆச்சரியத்துடன் சொல்கிறார்:

"நம்மிடம் ஒரு பலவீனம் இருக்கிறது, உதாரணமாக கேலிக்குரிய ஒரு பழக்கமோ, ஏதோ ஒன்று தவறாகவோ, அல்லது அரைகுறையாகவோ இருப்பதாக வைத்துக் கொள்வோம், அது நம்முடைய சுபாவத்தின் ஒரு அங்கமாகவே ஆகிவிடுவதால், அது இயல்பானது தான் என்று கருதுகிறோம்! அது எந்தவிதத்திலும் நம்மை அதிர்ச்சிக்கோ, வியப்புக்கோ உள்ளாக்குவதில்லை!

அதே கேலிக்குரிய பழக்கம், தவறு, அல்லது அரைகுறையான விஷயம்
மற்றவர்களிடத்தில் பார்க்கும்போது, மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிறோம்.
நம்மிடத்திலே அதே குறை இருப்பதைக் கொஞ்சமும் கவனியாமல், அடுத்தவரிடத்தில் அதைப் பார்த்து, "என்ன! இவர் இப்படிப்பட்டவரா?" என்கிறோம்!

ஆக, நம்மிடம் இருக்கும் அழுக்குடன், அதைக் கவனியாமல் இருக்கிற மடத்தனமும் சேர்ந்து கொள்கிறது.

இதில் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. யாரோ ஒருவருடைய ஏதோ ஒரு செய்கை, பேச்சு உங்களுக்கு முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாததாகத் தோன்றும்போது, கேலி செய்யத் தோன்றும்போது, "என்ன! அவர் அப்படி இருக்கிறாரா? அப்படி நடந்து கொண்டாரா? அப்படிச் சொன்னாரா? அப்படிச் செய்தாரா?" என்று நினைக்கும்போது, உங்களுக்குள்ளேயே சொல்லிப்பாருங்கள்!

" நல்லது!நான் கூட எனக்குத் தெரியாமலேயே, அப்படித் தான் செய்கிறேனோ என்னவோ? அவரை விமரிசிப்பதற்கு முன்னால், என்னையே முதலில் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே மாதிரி நானும் வேறெந்த வகையிலும் செய்யாமல் இருக்கிறேனா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்! "

அடுத்தவருடைய நடத்தையைக் கண்டு "அதிர்ச்சியடையும் " ஒவ்வொரு தடவையும், இதே மாதிரி நல்ல விதமாகவும், புத்தியுடனும் இருக்கப் பழகினால்,வாழ்க்கையில் மற்றவர்களுடனான உறவு ஒரு கண்ணாடியில் பிரதிபலிப்பதைப்போலஇருப்பதைக் காணமுடியும்! நமக்குள் இருக்கும் அழுக்கு, பலவீனங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

பொதுவாகப் பார்க்கப் போனால், அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப்[ பார்க்கிற குறை, பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பதுதான்,என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான். நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!

இந்தமாதிரி நினைத்துப்பழகிப்பாருங்கள்! உங்களை மாற்றிக்கொள்ளப் பெரிதும் உதவியாக இருப்பதைக் காண்பீர்கள். அதே நேரம், இளங்காலைக் கதிரவன் மாதிரி, அடுத்தவர்களுடனான உறவில் ஒரு சகிப்புத் தன்மையும், புரிந்துகொள்வதில் விளையும் நல்ல எண்ணமும் ஏற்படும்போது, முழுக்க முழுக்க ஒரு உபயோகமுமில்லாத சண்டை, சச்சரவுகளுமே முடிவுக்கு வந்து விடும்!.

சண்டை சச்சரவுகளில்லாமலேயே வாழ முடியும். ! ஜனங்களுடைய பிரதானமான வேலையே, நேரடியாகவோ மறைமுகமாகவோ சண்டை போடுவது தான், அது தான் வாழ்க்கை என்று நினைப்பவர்களுக்கு, இப்படிச் சொல்வதே கூட வியப்பாகக் கூட இருக்கும்!

தடித்த வார்த்தைகளோ, அடிதடிகளோ கூட வேண்டாம்! நமக்குள் நாம் விரும்புகிற மாற்றம், அது எவ்வளவு கடினமானது என்பது நமக்கே தெரிய வருகிறபோது ஏற்படுகிற எரிச்சல்,ஆனால் அடுத்தவர்களிடம் மட்டும் அப்படிப்பட்ட மாற்றம், முழுமை இருக்க வேண்டும் என்பதை எதிர்பார்ப்பது எளிதாகத் தான் இருக்கும், இல்லையா?

"அவர்கள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள்?" என்று நினைக்கத் தொடங்கும் போதே, நாமும் அப்படித்தானே இருக்கிறோம் என்பதே மறந்துவிடுகிறது,


'அப்படி இல்லாமல்' இருப்பதற்கு எவ்வளவு பிரயாசைப் பட வேண்டியிருக்கிறது என்பதைக் கூட மறந்து விடுகிறோம்.

முயற்சித்துப் பார்த்தால் தானே, புரிய வரும்!"

1958 ஆம் ஆண்டு நவம்பர் ஏழாம் தேதி, ஸ்ரீ அரவிந்த அன்னை, "எண்ணங்களும் சிந்தனை மின்னல்களும்" என்ற ஸ்ரீ அரவிந்தருடைய நூலில் இருந்து, ஒரு சிந்தனையை விளக்கிச் சொன்னதன் ஒரு பகுதி.
அன்னை நூல் தொகுப்பு நூற்றாண்டுப்பதிப்பு, தொகுதி 10 பக்கம் 20-21 
 
Either do not give the name of knowledge to your beliefs only and of error, ignorance or charlatanism to the beliefs of others; or do not rail at the dogmas of the sects and their intolerance.”

Sri Aurobindo
Thoughts and Aphorsims – Jnaana Aphorism 8
பழைய காயங்களையே திரும்பத் திரும்பக் கீறிவிட்டுக் கொண்டிருக்கும் சில பதிவுகளைப் படித்தபோது, ஒருவிதமான ஆற்றாமையோடு ஸ்ரீ அன்னையின்  உரையாடல்களைப் படிக்க அமர்ந்த போது மொழியாக்கம் செய்தது. யோம் கிப்பூர்,  இந்த வார்த்தை, அதன் உண்மையான பொருளில், எல்லோருக்கும் அமைதியைக் கொண்டு வந்து சேர்க்கட்டும்!


6 comments:

  1. //சுட்டுவிரலை நீட்டிப் பேசுவது என்னிடத்தில் இருக்கும் கெட்ட பழக்கம்.//

    அதுகூட கெட்டப்பழக்கமா!?

    ReplyDelete
  2. //என்னுடைய எதிரிகளில் 99 சதம் சுட்டுவிரலை நீட்டிப் பேசினதில் உருவானவர்கள்தான் என்பது!//

    வேறு விரல்கள் காட்டி பேசினால் எதிரில் நண்பர்கள் ஆகிவிடுவார்களா?

    ReplyDelete
  3. அவுங்க எதுக்கு சொன்னதை நீங்க விரலுக்கு முடிஞ்சி போடுறிங்க!

    எத்தனையோ நம்பிக்கையில் இதுவும் ஒன்னா?

    ReplyDelete
  4. // அதுகூட கெட்டப்பழக்கமா!? //

    சரி! சரி! எத்தனையோ கெட்ட பழக்கங்களில், அதுவும் ஒண்ணு! போதுமா? :-))

    //வேறு விரல்கள் காட்டி பேசினால் எதிரில் நண்பர்கள் ஆகிவிடுவார்களா?//

    இதுவரைக்கும் நீட்டிப்பார்த்ததில்லை! நீட்டிப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்!

    //அவுங்க எதுக்கு சொன்னதை நீங்க விரலுக்கு முடிஞ்சி போடுறிங்க!//

    அவங்க, நமக்குள்ளேயே இருக்கற அசிங்கத்தைத் துடைச்சிட்டு, அப்புறமா அடுத்தவன் அழுக்கு பத்திப் பேசலாமே, அப்படிச் செய்ய ஓரடி எடுத்து வச்சாலே பிரச்சினை கொஞ்சம் தீர்ந்து போயிடுமேன்னு தான் சொல்றாங்க! பொருத்தமாத் தானே இருக்கு!

    முடிச்சிப் போடறதும் முடிச்சை அவுக்குறதும் நான் இல்லே! நான் இல்லே! முடிச்சைப் படுமுடிச்சாக்கிட வேணாமேன்னு தோணினதை மட்டுமே சொன்னேன்!

    நம்பிக்கை மட்டும் அல்ல, பிரார்த்தனையும் கூட!

    ReplyDelete
  5. //முடிச்சிப் போடறதும் முடிச்சை அவுக்குறதும் நான் இல்லே! நான் இல்லே! முடிச்சைப் படுமுடிச்சாக்கிட வேணாமேன்னு தோணினதை மட்டுமே சொன்னேன்!//

    முடிச்ச அவுக்கலாம் சார் தப்பில்லை!
    ஆனா முடிச்சவுக்கின்னு பேர் தான் வாங்கக்கூடாது!

    ReplyDelete
  6. /முடிச்ச அவுக்கலாம்..முடிச்சவுக்கின்னு பேர் தான் வாங்கக்கூடாது!/

    ஆய கலை அறுபத்து நான்குக்கும் மிஞ்சின இந்தக் கலை எனக்குத் தெரியாது, கை வராது!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!