வருகிற பாதையும், தொடர்கிற பயணமும்!





வலிகளை மறக்கக் கவிதையில் வடித்து எழுதிப்பார்த்ததும் ஒரு காலம்
வலிகளைக் கூட்டின கவிதை வரிகளை மறந்துமிருந்தது ஒரு காலம்!
எனக்கு மட்டுமே இப்படி ஏன் என ஏங்கித் தவித்ததும் ஒரு காலம்
தனக்கு மட்டுமே தாயின் பரிவு முழுதாய் வேண்டின சவலைப் பிள்ளையாய்
அழுதால் உன்னைப்பெறலாமே என யாரோ சொன்னதை நம்பினபோதில்
அழுதுபுரண்டு கதறின நேரம் அவள் வரவில்லை! ஒரு பதில் தரவில்லை!



சவலையழுதது! திவலையளவும் வினையணுகாமல் காத்திடவேண்டும்!
கேட்டது எல்லாம் தந்திட வேண்டும்! என்னைத் தனியன் ஆக்கிவிடாமல்
கூடவே இருந்தென்னைப் பார்த்திட வேண்டும்! கேட்டதனைத்தும் அதிகம் தான்!
விடையாய்க் கிடைத்ததோ பொருள் பொதிந்தவோர் மௌனம்தான்!
பாராமுகமாய் இருந்தாள் எனப்பெரும் கோபமும் வந்தது வீம்பு வளர்ந்தது.
தாயே! நீ இல்லை! நீ வெறும் பொய் தான்! அழுகை வெடித்தது ஆத்திரம் வந்தது!



நாத்திகம் பேசின காலமும் வந்தது! வாய் கூசாமல் ஏசின காலமுமானது
சாத்திரம், கோத்திரம் சொல்வது பொய்யெனத் தருக்கமும் வந்தது.
ராகுவின் பார்வையில் அப்படியிருக்கும் சோதிடம் சொல்லும் கணக்கு இது
சோதிடம் சொல்வதை நம்பவில்லை ஏளனம் செய்வதை நிறுத்தவில்லை
ஒவ்வொரு இருட்டும் பெருவெளிச்சம் வயிற்றில் சுமப்பதை அறிகிற
தருணமும் வந்தது ஒருநாள்! இருளைக் கிழித்துப் புலரும் வைகறை வந்தது!



ஒளிவரும் முன்னால் துயிலெழும் தன்மை வைகறை சொல்லும் குறியீடு!
ஒளிவர வேண்டும் மனிதர்கள் உணர்வில் விழிப்புச் சொல்லும் குறிச் சொல்லே!
தனித்திருந்த ஒருபோது! எதுநடந்தாலும் எனக்கென்ன என்று இருந்த பொழுதினிலே
என்னது என்பதைப் புரியச் சொன்னாள்! அப்போதெனக்கு ஒருசிறிதும் உறைக்கவில்லை!
பொறுத்துக்கொள்வது முதல்தேவை பொறுத்தால் அங்கே வரும் தீர்வு
பொறுமையிழந்தால் நோவும் வரும் வலிகூடும் பொறுத்திரு மகனே! என்று சொன்னாள்



அன்னை சொன்னது அப்போதெனக்கு ஒருசிறிதும் புரியவில்லை! எப்பொழுதும்போல்
ஒரு ஆர்ப்பாட்டம்! ஆடி அடங்கட்டும் என்றவள் காத்திருந்தாள். ஆடிமுடித்ததில்
சேர்ந்த வலி!தோற்றதில் விளைந்த அவமானம்! இரண்டும் சேர்ந்தால் என்ன வரும்?
திருப்புகழ் பாடத் தெரியவில்லை! குரைத்தல் தவிர்த்துத் தெருநாய்க்கு வேறென்ன வரும்?
தாயென்று நம்பியழைத்தேனே!நீயுமொரு தாய்தானோ? அடிமேலடி விழப்பார்த்திருந்தாயே! தயவில்லாதவள்நில்லாதென்முன்! போய்விடு! போய்விடு!



இததனைகோபம் ஏதுக்கடா? இரும்பாய் இருக்க ஆசைகொண்டால்
பழுக்கக் காய்ச்சி அடிமேல் அடிதான் மாற்றம் தரும்! தங்கமாய் இருந்து
நெகிழ்ந்திருந்தால், இத்தனை வாட்டம் வேண்டாமே! உனக்கேன் இன்னமும்
புரியவில்லை?குறுநகையோடவள் சொன்னாள் எனக்கோ கோபம் குறையவில்லை!
வாட்டுதல் இங்கே எதற்காக? இந்தச் சாக்குகள், ஆறுதல் எதற்காக?
வாட்டுவதுனக்குப் பெருஞ்சுகமோ? பிள்ளையைப் படுத்தல் தாயாமோ?



அழகாய் இருக்கிறதே உன் நீதி! ஜாலம் செய்யவா இது நேரம்?
புரியவில்லை அம்மா! போய்விடு என்னைத் தனியாய் இருக்கவிட்டு!
பொறுமித் தீர்த்தவன் கண்களிலே வெள்ளத்தைப் பார்த்துப் பரிவுடனே
அருமை மகனே! எத்தனை நேரம் அழுதாலும், வருகிற அனுபவம் நில்லாது!
வளர்ச்சி என்பதுமே வலியில் தான் பிறக்கும் என்பது தெரியாதா?
இருளில் இருந்து வெளிச்சம் பெறுவதற்கு வலிதான் பாதை!அறியாயோ?
 


அழுவதும் உதவாது! ஆற்றாமை உதவாது! புரிதல் இங்கே வேண்டுமென்றால்
அழுவதை உடனே நிறுத்திவிட்டு அனுபவம் சொல்வதைக் கேட்டுப் பார்!
வலியைத் தருபவள் தான் வலியையும் தாங்குகிறேன் இடையில் நீயேன் குழப்பம் கொண்டு
இது எனது! வலி எனது! என்பதும் எதற்காக? நீஎன்பதும் நானென்பதும் வெவ்வேறா?
விளையாட்டாய்ப் பிரபஞ்சம் இயங்கும் விதி இது தான்! விளையாடப் பழகிக் கொள்!
ஒவ்வொரு இருட்டுக்குள்ளும் பெருவெளிச்சம் கருவினிலே இருப்பதைப் பார்!



ஒவ்வொரு உண்மையுமே வெளிப்படும் தருணம் எதிர்நோக்கி இருப்பதும் பார்
இவ்விதமாகப் புரிந்துகொண்டால் வலியேது? துயரேது? சொல்லிவிட்டுப்போய் விட்டாள்!
சொன்னதென்பது  புரியாமல் என்னமோ ஏதோ செய்துவிட்டு அவத்தை கூடவுமே
என்னம்மே! விரைந்து நீ வா! கதறி அழுதவன் குரல் கேட்டு ஓடிவந்தாள்
எது நடந்தாலும் எனக்கொரு அன்னை இருக்கின்றாள், அவள் அதை நலமாய்ப் பார்த்துக் கொள்வாள்
சும்மாயிருப்பதுமே பெருந்தவம்தான்! சும்மா இருக்கப் பழகிக் கொள்! ஒளியும் வரும்!



வருகிற வேளை வரும்வரை என் பெயர் சொல்லி காத்து இரு! என்று சொன்னாள்
வைகறைப் பொழுதில் இருள்விலகும்! அவள் பெயர் சொல்வது என் வேலை!
எனக்கென்று தனித்தவொரு அடையாளம் இங்கில்லை எல்லாம் இங்கே அவள் சித்தம்
வருவது எல்லாம்அவள்தரும் அனுபவம் தான்! வலியோ, வழியோ அவளே
இருப்பதனால் நான் சுமப்பதென்று எதுவுமில்லை! இதுதான் நான் வரும் பாதை
வருகிற பாதை தொடர்கிற பயணம் எல்லாம் என் அன்னை காட்டுவதே!

 இது வேறோர் பதிவில் எழுதிய பின்னூட்டக் கவிதையின் விரிவு படுத்திய பதிவு


2 comments:

  1. நீங்க எழுதிய கவிதையா!
    நல்ல வார்த்தை பிரயோகம்!

    தொடர்ந்து எழுதுங்க!
    ஆனா இவ்வளவு பெருசு வேணாம்!

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீஅன்னை...

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!