போதும் இங்கு மாந்தர் - வாழும் பொய்ம்மை வாழ்க்கையெல்லாம்!



நவராத்ரியின் உச்சம், இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என்று பலப்பல  பேர்களில்,பலவித முறைகளில் செய்யும் தொழிலே தெய்வமெனக் கொண்டாடும் நாள் இன்று. ஒன்பது இரவுகளை துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என முப்பெரும் தேவியரை வணங்கி அகமும் புறமும் தூய்மையும், ஆன்மநேய ஒருமையும் வேண்டிப் பெறுகிற நாட்களாக, நவராத்ரி இருக்கிறது.

அறியாமையை, அகந்தையை, இது அது எனப் பிரித்துப் பார்க்கும் பேதத்தை விட்டொழித்த தருணமே விஜய தசமி! உண்மையான வெற்றித் திருநாள்!

வெற்றி என்பது, நமக்குள் இருக்கும் மிருகத்தன்மையை வெற்றி கொள்வதே!

பாரதி கவிதைகளில் ஒன்றியே எனது நவராத்ரி அனுபவங்கள் எளிதாக ஆகியிருக்கிறது.

அறியாமையோடு கூடிய அகங்கார இருளை அழித்துப் புதியதோர் பிறப்பும் வளர்ச்சியும் காண, அன்னை இங்கே மகா காளியாக, துர்கையாக வழிபடப் படுகிறாள். வெளியே இருக்கும் இருட்டை அகற்றுவதற்கு, நமக்குள்ளே இருக்கும் அழுக்கு, இருட்டு நீங்கியாக வேண்டும். இந்தியத் தத்துவ மரபு சொல்லும் மிக உன்னதமான ஆன்மீக தரிசனம் இது.

விடுதலை என்பது எவரோ கொடுத்துப் பெறுவது அல்ல. மீட்பரும் ரட்சிப்பவனுமாக எங்கோ  வெளியே தேடினால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

"அன்புவடி வாகிநிற்பள் துன்பெலா மவளழிப்பாள்  
ஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை - இதை
ஆர்ந்துணர்ந்த வர்களுக்குண் டுய்கை - அவள்
ஆதியா யநாதியா யகண்டறி வாவளுன்றன்
அறிவுமவள் மேனியிலோர் சைகை - அவள்
ஆனந்தத்தி னெல்லை யற்ற பொய்கை.
இன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பாள்
இ·தெலா மவள்புரியும் மாயை - அவள்
ஏதுமற்ற மெய்ப்பொருளின் சாயை - எனில்
எண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர்நித்தம்
எய்துவார் மெய்ஞ் ஞானமெனுந் தீயை - எரித்து
எற்றுவாரிந் நானெனும் பொய்ப்  பேயை. "


காளியாக, துர்கையாக, கோர வடிவினளாக அவளை வழிபடுவது ஒரு உருவகம் மட்டுமே! உள்ளார்ந்து வழிபடும்போது அங்கே மாகாளி எத்தனை கருணைத்திறம்  உடையவள்  என்பது இடரெல்லாம் நீங்கி ஒளி பொருந்திய பாதையை கண்ட பிறகு தான் விளங்கும்!


"வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட - வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாடப் - பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக் - களித்
தாடுங் காளீ, சாமுண் டீ! கங் காளீ!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

ஐந்துறு பூதம் சிந்திப் போயென் றாகப் - பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக - அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத் - தோடே
முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை! "


என்று பாரதி அவள் அருட் திறத்தில், தன்னை மறந்து கைகொட்டிச் சிரிக்கும் குழந்தையாகி நின்ற தருணம் இவனுக்கும் இங்கு வாய்த்திட  வேண்டும் அம்மா!

"யாது மாகி நின்றாய்  - காளி! எங்கும் நீநி றைந்தாய்,
தீது நன்மை யெல்லாம் - நின்றன் செயல்க ளன்றி யில்லை.
போதும் இங்கு மாந்தர் - வாழும் - பொய்ம்மை வாழ்க்கையெல்லாம்!
ஆதி சக்தி, தாயே! - என்மீது - அருள் புரிந்து காப்பாய்.

எந்த நாளும் நின்மேல் - தாயே! இசைகள் பாடி வாழ்வேன்;
கந்தனைப்ப யந்தாய் - தாயே! கருணை வெள்ளமானாய்
மந்த மாரு தத்தில் - வானில் - மலையி னுச்சி மீதில்
சிந்தை யெங்கு செல்லும் - அங்குன் - செம்மை தோன்றும் அன்றே!

கர்ம யோகமென்றே - உலகில் - காக்கு மென்னும் வேதம்,
தர்ம நீதி சிறிதும் - இங்கே - தவற லென்ப தின்றி,
மர்ம மான பொருளாம் - நின்றன் - மலர டிக்கண் நெஞ்சம்,
செம்மை யுற்று நாளும் - சேர்ந்தே - தேசு கூட வேண்டும்.

என்ற னுள்ள வெளியில் - ஞானத் - திரவி யேற வேண்டும்,
குன்ற மொத்த தோளும் - மேருக் - கோல மொத்த வடிவும்,
நன்றை நாடு மனமும் - நீயெந் - நாளு மீதல் வேண்டும்,
ஒன்றை விட்டு மற்றோர் - உழலும் நெஞ்சம் வேண்டா.

வான கத்தி னொளியைக் - கண்டே - மனம கிழ்ச்சி பொங்கி,
யானெ தற்கும் அஞ்சேன் - ஆகி - எந்த நாளும் வாழ்வேன்,
ஞான மொத்த தம்மா! - உவமை நானு ரைக்கொ  ணாதாம்.
வான கத்தி னொளியின் - அழகை வாழ்த்து மாறி யாதோ?

ஞாயி றென்ற கோளம் - தருமோர் - நல்ல பேரொ ளிக்கே
தேய மீதோர் உவமை - எவரே - தேடி யோத வல்லார்?
வாயி னிக்கும் அம்மா! - அழகாம் - மதியின் இன்ப ஒளியை
நேயமோ டுரைத்தால் - அங்கே - நெஞ்சி ளக்க மெய்தும்.

காளி மீது நெஞ்சம் என்றும் - கலந்து நிற்க வேண்டும்,
வேளை யொத்த விறலும் - பாரில் -வேந்த  ரேத்து புகழும்,
யாளி யொத்த வலியும் - என்றும் - இன்பம் நிற்கும் மனமும்,
வாழி யீதல் வேண்டும் அன்னாய் - வாழ்க நின்றன் அருளே! "


மொழி பல அறிந்தவன் இல்லை. சாத்திரம் கற்றவனில்லை. ஸ்தோத்திரம் செய்யவோர் புலமையும் இங்கு இல்லை.குருவெனக் கொள்வதற்கும், உட்பொருள், நுண்பொருள் விரிவாக அறியத் தருவாரும் இல்லை. அம்மா!  நீயே என்தாய் .என்பதல்லால் உரைக்கவொரு வார்த்தை இல்லை! பொய்களைத் தேடி நின்ற சிறுமையை மாற்றவல்ல மந்திரம் எல்லாம் அம்மாவெனஅழைப்பது ஒன்றே தான்! 




அம்மா என அழைக்கும் சவலையைக் காத்திட வேணும் நீயே!


4 comments:

  1. I am Blessed to read and enjoy this on this Auspicious Day of Saraswathi Pooja ! Thanks for this ! PARASHAKTHI!

    ReplyDelete
  2. சிவனை பற்றி அறிந்தை எழுதுங்கள்....ஆவலாய் உள்ளேன்

    ReplyDelete
  3. குறிப்பிட்டு ஒரு சமயம், அல்லது வழிபாட்டு முறையை விரிவாகப் பேசும் தளம் இது அல்ல. தவிர, சமய நெறிகளைக் கடந்த ஆன்மீக ஒருமை என்பதில் மட்டுமே இந்தப்பக்கங்களின் உட்கிடக்கையாக இருந்து வருகிறது.

    இந்தப் பக்கங்கள் உங்களுக்கு உதவலாம், படித்துவிட்டுச் சொல்லுங்கள்:

    http://www.dheivathamizh.org/aasiriyar.htm

    http://www.saivaneri.org/unique-shiva.htm

    http://esaivam.blogspot.com/2009_05_01_archive.html

    ReplyDelete
  4. மிகவும் நல்ல பதிவு, இதுபோன்ற நல்ல பதிவுகள் நிறைய எழுதுங்கள் அன்பரே. நன்றி.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!