உறுதிகொண்ட நெஞ்சினாய் வா! வா!



இந்தோ -சீனி பாய் பாயின்னாங்க நாப்பதேழு வருஷத்துக்கு முன்னாடி!
சமாதானப் புறாவாக டயலாகும் பேசிப்பாத்தாங்க! டயலாக் பேசினா சண்டை வராமப் போயிடுமா?

திபெத்தைச் சீனா விழுங்கியது! தலாய் லாமா இந்தியாவுக்கு ஆதரவாளர்களோடு ஓடி வந்தார். அந்நிய மண்ணில் இருந்து கொண்டு செயல்படும் திபெத்திய அரசாக அவரையும், ஆதரவாளர்களையும் இந்தியா அங்கீகாரம் கொடுத்து  அறிவிச்சதில் இருந்து ஆரம்பிச்சது பிரச்சினை.

வெவ்வேறு விஷயங்களில் விழுந்து விழுந்து சீனாவை ஆதரிச்ச போதிலும் கூட, மாசேதுங் நேருவை நம்பவில்லை. இந்தியாவின் உள்நோக்கத்தில் சந்தேகம்! தன்னுடைய எதிரிகளோடு கூடிக் குலாவிக் கொண்டே, தன்னுடன் வஞ்சகமாக உறவாடும் கபடமாகத் தான் சீனத் தலைவர்கள் நினைத்தார்கள்.

"ஏகாதிபத்தியத்தின் ஏவல் நாய்கள்" இது நேருவுக்கும், அவரது அமைச்சர்களுக்கும் மாசே துங் வெறுப்போடு உமிழ்ந்த அடைமொழி!

பஞ்சசீலக் கொள்கை,அது இது என்று ஒருபக்கம் நடந்து கொண்டிருந்த போதே, எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நேரு உருப்படியான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. பிரிடிஷ்காரர்கள் மாற்றி மாற்றிக் குழப்பி வைத்துவிட்டுப் போன எல்லைத் தாவா பூதாகாரமாக உருவாக, திபெத் பிரச்சினையை இந்தியா கையாண்ட விதமுமே கூட ஒரு காரணமாக ஆகிப் போனது.

1960 ஆம் ஆண்டுஅப்போதைய சீனப் பிரதமர்  சூ என்லாய், எல்லைப் பிரச்சினையை இருதரப்புமே கொஞ்சம் விட்டுக் கொடுத்துத் தீர்த்துக் கொள்ளலாம் என்ற யோசனையை முன்வைத்து, இந்தியாவிற்குப் பேச்சுவார்த்தை நடத்த வந்தார். நேரு அதில் அவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்ளாதது, சீனர்களுக்கு அவமதிக்கும் செயலாகப் பட்டது.

கதை கந்தலானது! நேருவுடைய இமேஜ்  ஊதி ஊதி பெருசாத்  தெரிஞ்ச பலூன்! பிரமாதமான அடித்தளமோ, முயற்சியோ இல்லாமல், கவர்ச்சிகரமான சினிமா ஹீரோ மாதிரி பெரிய தலைவர் ஆனவர் அவர். காந்தி மாதிரி, இந்தியா முழுவதும் பயணம் செய்து, அடித்தட்டு மக்களுடைய பிரச்சினைகள், அவர்களது கனவுகள் எதையுமே அறியாத, ஒரு கற்பனாவாதி.வெறும்  நல்ல எண்ணம் மட்டுமே இருந்து என்ன பயன்?

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது நேரு விஷயத்தில் மிகவும் உண்மையாகிப்போனது. ஐரோப்பிய சரித்திரத்தைக் கரைத்துக் குடித்தவர், ஐரோப்பிய நாகரீகம், நடை உடை பாவனைகளில் ஊறிப்போனவர் என்பதனாலேயே, ஆங்கிலேயர்களுடைய நிர்வாகத் திறமை முழுவதும் அப்படியே கைவரப் பெற்றவர் என்பது போல ஒரு தோற்றம்!

இந்திய மண்ணைச் சீனர்கள் ஆக்கிரமிச்சுட்டாங்களேன்னு கேட்டபோது பாராளுமன்றத்தில் நேரு வீராப்பாப் பேசின டயலாக் இது: "ஒரு புல் கூட முளைக்காத கட்டாந்தரை தானே அது!"

பிரதமர் நேருவும், பாதுகாப்பு அமைச்சர் வி கே கிருஷ்ண  மேனனும் வெளியுறவுக் கொள்கையை வகுத்த சிற்பிகள்! வெளியுறவுக் கொள்கையில் அவர்கள் சொதப்பிய சொதப்பல், இன்றைக்கும் தீர்க்கப்படாத பிரச்சினையாக பூதாகாரமாக இன்றைக்கும் இந்திய இறையாண்மைக்குப் பெரிய அச்சுறுத்தலாக இருந்து கொண்டிருக்கிறது.

நாற்பத்தேழு  வருடங்கள் ஓடிவிட்டன. சீனா, ஒரு வலிமையான பொருளாதார, ராணுவ  வல்லரசாக உருவெடுத்திருக்கும் இந்தத் தருணத்தில், எதோ ஒரு உள்நோக்கத்தோடு தான் சீனப் பூச்சாண்டி, இதோ  வருகிறது யுத்தம், இதோ  வந்தே விட்டது என்றெல்லாம் பொறுப்பில்லாமல் செய்திகளை ஊடகங்கள் பரப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியப் பிரதமர் திரு மன்மோகன் சிங் சீனப் பிரதமர் வென் ஜியா போவை தாய்லாந்து  நாட்டில் இன்றைக்குச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

திரு மன்மோகன் சிங்குக்கு ஒரு விசித்திரமான பெருமை வேறு இருக்கிறது! இதுவரை இந்தியப் பிரதமராகப் பதவி வகித்தவர்களில், மிகவும் மென்மையானவர், மிகவும் பலவீனமானவர் என்ற புகழ் இருக்கிறது. தன்னுடைய அமைச்சரவையில் இருக்கும் எவர் மீதும் சுட்டு விரலைக் கூட நீட்டிப் பேச அதிகாரம் இல்லாத ஒருவர், தன்னுடைய அமைச்சரவை சகாக்களின் மீதே எந்த ஒரு முடிவையும் தன்னிச்சையாக எடுக்கும் நிலையில் இல்லாத பிரதமர், பிரதமர் இங்கே வெறும் டம்மிதான், அதிகார மையம் வெளியில் இருக்கிறது என்ற நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பது புரியவில்லை.

குறைந்த பட்சமாக, உடனடியான மோதல் என்ற அச்சுறுத்தல்களில் இருந்து விடுபட்டு, அர்த்தமுள்ள பேச்சு வார்த்தைகள் தொடர ஆண்டவன் தான் இந்த தேசத்திற்குத் துணை நிற்க வேண்டும்!

தொடர்ந்து பேசுவோம்......! 

2 comments:

  1. ஆள்பவர்கள், ஒருவிதத்தில் ஆளப் படுபவர்களையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்.

    நம்மைப் போலவே நமது பிரதமரும்.

    புதிய பார்வைகள்.
    நன்றி,சார்.

    ReplyDelete
  2. /நம்மைப் போலவே நமது பிரதமரும்./

    தலைவர்கள் எங்கிருந்தோ உருவாகி வருவதில்லை, இங்கிருந்தே தான் வருகிறார்கள். அந்த விதத்தில் உங்களுடைய கருத்து சரிதான்! முன்னோடிகள் என்று சிலர், தங்களுடைய சக்தி, அறிவு எல்லாவற்றையும் ஒரு சேர்த்து, மாற்றத்தை உருவாக்குகிறார்கள். அப்படிப்பட்ட முன்னோடிகள் மட்டுமே தலைமையேற்கத் தகுந்தவர்கள், தலைமைப்பண்பு உள்ளவர்கள், பின்பற்றப்பட வேண்டியவர்கள் என்ற மையக் கருத்தை வைத்துக் கொண்டு, நேரு-சாஸ்திரி, அதற்குப்பின் வந்தவர்கள் என்ற வரிசையில் இந்தப்பதிவுகள், தொடர்பதிவுகளாக வந்துகொண்டிருக்கின்றன.

    அக்டோபர் மாதத்தின் முதல் மூன்று பதிவுகளின் தொடர்ச்சியாகவே இதைப் படித்தால், சரியாக இருக்கும்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!