படித்ததும் பிடித்ததும்! கிளறிய நினைவுகள்!



கேபிள் டிவியில் இருகோடுகள் படம் வந்து கொண்டிருந்தது. முதல் காட்சியிலேயே எஸ்.வி.ஸஹஸ்ர நாமம் ஜெயந்தி இருவரும்  படத்தின் ஒன்லைன் தீம் என்னவென்று சொல்லிவிடுவார்கள். அப்புறம் அதற்கு ஏதுவாகக் கதாபாத்திரங்கள், காட்சிகள் என்று கே.பாலச்சந்தர் தனக்கே உரித்தான ஒரு முத்திரையோடு விவரிக்க ஆரம்பிப்பார். நினைவு வருகிறதா?

பி யு சின்னப்பா, தியாகராஜா பாகவதர் காலங்களில், பாடினால் மட்டும் போதும், கதை, காட்சி, லாஜிக் வேறெதுவும் வேண்டாம் என்றிருந்தது. அப்புறம் பாடத்தெரிந்தவர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகிப் போனது என்பதாலோ என்னவோ, நடிகர்கள் நாற்பதில் இருந்து அறுபது பக்க வசனங்களை ஒப்பித்தால் போதும், அப்போதும் கதை, காட்சி, லாஜிக் வேறெதுவும் வேண்டாம்என்று ஆனது. கே. ஆர். ராமசாமி காலத்தில் இருந்து தான் வசனங்களை ஏற்ற இறக்கங்களுடன் உணர்ச்சிகரமாகப் பேசுவது என்பது ஆரம்பமாயிற்று. நடிக்கவும் பாடவும் தெரிந்தவர் என்பதாலோ என்னவோ நடிப்பிசைப் புலவராகிப் போனார். அவருக்குப் பின்னால் வசனம் பக்கம் பக்கமாகப் பேசுவது, அதையும் ஏற்ற இறக்கங்களுடன் பேசுவது, பொடி வைத்துப் பேசுவது, பொடிக்குள் பொடியாக வைத்துப் பேசுவது டிரென்ட் ஆனது. -இப்போதெல்லாம் அதற்குப் பேர், பஞ்ச் டயலாகாம்!! விஜய் கையை ஆட்டி பேசுவது போல் பேசிப்பார்த்துக் கொள்ளுங்கள்!

அது என்ன இருகோடுகள்? ஒரு கோட்டை வரைந்து, அதை அழிக்காமலேயே சிறிய கோட்டாக்கிக் காட்ட வேண்டும்! எப்படி? இது கேள்வி!

பார்ப்பவர்கள் மண்டையைப் பிய்த்துக் கொள்ளாவிட்டாலும், அவர்கள் சார்பில் ஒன்றோ இரண்டோ துணைக் கதாபாத்திரங்கள், தலையைச் சொறிந்து கொண்டு நிற்க, வெற்றிப்  பெருமிதத்துடன் பக்கத்திலேயே இன்னும் கொஞ்சம் நீளமான கோட்டை வரைந்து, பார்த்தாயா, கோட்டை அழிக்காமலேயே இப்போது சின்னதாகி விட்டது என்று சொல்வதாக, இருகோடுகள் படம் ஆரம்பிக்கும். நினைவுக்கு வருகிறதா?

இப்போது அதற்கென்ன என்கிறீர்களா? இந்த சக்சஸ் ஃபார்முலாவைத் தான் நம்முடைய அரசியல் வாதிகள், ஆட்சியில் இருப்பவர்கள் தொடர்ந்து செயல் படுத்திக் கொண்டு வருகிறார்கள்! எப்போதும் போல, எதையுமே தப்புத் தப்பாக!


எப்படி ஒரு பக்கம் ரோடு போட்டுக் கொண்டே போவார்கள், பின்னாலேயே ஏதோ ஒன்றிற்காக அதைத் தோண்டிக் கொண்டே போவார்களே அந்த மாதிரியா? கிட்டத் தட்ட அந்த மாதிரித் தான்! விஷயம் அதை விட சீரியசான தமாஷ்! ஒரு முட்டாள்தனம் செய்து விட்டது அரசு அல்லது ஒரு அரசியல் வாதி இப்படிக் குய்யோ முறையோ என்று ஜனங்கள், அல்லதுஎதிர்க்கட்சிகள் கத்த ஆரம்பிக்கும் போதே, அதுவே தேவலை சின்னது தான் என்கிற மாதிரி அடுத்து பெரியதாக ஒரு தவறு, ஊழல் என்று சற்றும் தன் முயற்சியில் தளராத விக்கிரமாதித்தன் மாதிரி ஊழல் கோடுகளாக வரைந்து கொண்டே போகிறார்களே, அதல்லவா கோடு, பெருங்கோடு!


நவம்பர் 19!


ஹிந்து நாளிதழைப் புரட்டினால், கனரா வங்கியின் விளம்பரம். இந்திரா காந்தியின் பிறந்த நாளை ஒட்டி, வங்கி துவங்கி 104 ஆண்டுகள் ஆனதையும் சேர்த்துக் கொண்டாடுகிற மாதிரி, ஒரே நாளில் 104 கிளைகள் துவக்கப்பட இருப்பதாக விளம்பரம். நிதியமைச்சர் திரு.பிரணாப் முகர்ஜி தலைமையில் விழா! இந்த விளம்பரத்தைப் பார்த்தபோது எனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. இதெல்லாம், வழக்கமாக நடக்கிற கூத்துக்கள் தானே என்று வேறு உருப்படியான வேலையைப் பார்க்கலாம் என்றிருந்து விட்டேன்! வேறென்ன, படிப்பது தான்!

படிப்பதை விட உருப்படியான வேலை ஒன்று இருக்க முடியுமா என்ன!


அப்படிப் படித்துக் கொண்டிருந்தபோது, என்னுலகம் என்ற வலைப்பதிவில், அனுபவமுள்ள ஒரு வங்கியாளரின் பதிவிலும் இந்தக் கிளை திறப்பு மகோத்சவத்தைப் பற்றி,வங்கி வட்டி விகிதமும் கிளை திறப்பு விழாக்களும்! என்றதலைப்பில் படித்தபோது, ஒரு பொதுத்துறை வங்கியில் முப்பதாண்டு காலம் பணியாற்றியவன் என்பதால், நடக்கும் கூத்தைக் கொஞ்சம் வருத்தத்துடன் தான் படிக்க முடிந்தது. 1969 களில் வங்கிகள் நாட்டுடைமையாக்கப் பட்டபோது, என்னவோ பெரிய புரட்சியே நடந்து விட்ட மாதிரித் துள்ளிக் குதித்ததில் வலதுசாரிக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதன் சார்புடைய அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்துக்குமே நிறையப் பங்குண்டு.


மன்னர் மான்ய ஒழிப்பு, வங்கிகள் தேசமயம் இதெல்லாம், இந்திரா காந்தி, தன்னை பின்னாலிருந்து ஆட்டிப் படைக்க முயற்சித்த ஒரு வயசாளிக் கும்பலை விரட்டுவதற்கான ஸ்டன்ட் என்பது அப்போது எவருக்குமே தெரியவில்லை. முதல் டோஸில்,14 வங்கிகள்!


அடுத்து 1980 இல் ஆந்திரா வங்கி உள்ளிட்ட நான்கு வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப் பட்டபோது, அம்மையாருடைய 'செயல் திட்டம்' அரசியலைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தவர்களுக்குத் தெளிவாகவே புரிந்தது. தன்னுடைய அரசியல் எதிரிகள் என்று மட்டுமே அல்ல, கட்சியில் பூரண விசுவாசிகளாக ஷோ காட்டிக் கொண்டிருந்தவர்களுக்கும் கூட அம்மையார் அவ்வப்போது வைத்து வந்த செக். மெகா ஆப்பு!



மாநில அளவில் எவராவது, செல்வாக்கு அதிகம் ஆனவராகத் தெரிந்தால், ஆப்பு மத்திய மந்திரி சபையில் இடம் என்ற வடிவத்தில் வரும்.


இரண்டாம் கட்ட வங்கிகள் தேசீயமயம் என்பது அன்றைக்கு ஆந்திர முதல்வராக தனிக் கோல் செலுத்தி வந்த சென்னா ரெட்டிக்கு வைத்த ஆப்பு! கிட்டத்தட்ட அவருடைய ஏகபோகமாகவே இருந்த ஒரு வங்கி நாட்டுடைமை ஆக்கப்பட்டது.



முதலமைச்சர் பதவியில் இருந்து தூக்கி மத்தியில் காபினட் அந்தஸ்துள்ள அமைச்சராக்கப்பட்டு, கடைசியில் தமிழ்நாடு ஆளுநராகக் குறுகிப்போய், கே.டி. குஞ்சுமோன் கூடஒரு படம் (காதலன்) எடுத்துக் கேலி செய்யப்படுகிற அளவுக்குப் போனது. அப்புறம் என் கையைப் பிடித்தார் என்று கிளம்பின கதை, வேண்டாம் பாவம்! சென்னா ரெட்டி எல்லாம் எனக்கு முன்னால் பச்சைப் பிள்ளை என்று சமீபத்தில் சொல்லாமலேயே செய்து காண்பித்த ராஜ சேகர ரெட்டி!


செத்துப்போன சென்னா ரெட்டி ஆத்மா சாந்தி அடைவதாக!

ஆக நாட்டுடைமை ஆக்கப் பட்டதற்கு அரசியல் காரணங்கள் மட்டுமே. தெளிவான பொருளாதாரக் கோட்பாடுகளின் அடிப்படையில் அல்ல.ஜனார்தன பூசாரி மாதிரி இரண்டாவது நிலை அமைச்சர்கள் கூட பூசாரி ஆட்டம் ஆடினதை இந்த நாடு பார்த்தது. பார்க்கத் தான் முடியும், வேறென்ன செய்ய முடியும் பாவம்!


தஞ்சாவூர் வங்கி இந்தியன் வங்கியோடு இணைக்கப் பட்டதும் கூட, உள்ளூர்ப் பிரமுகர் இருவரில் கொஞ்சம் மேலிடத்துக்கு நெருக்கமாகிப் போன ஒருவர்,தன்னுடைய நண்பர் கை ஓங்கி விடக் கூடாதே என்பதற்காக வைத்த செக் தான் அது என்பதும் காற்றோடு கசிந்து அப்படியே மறந்தும் போனசேதி!


எந்த ஒரு செயலுக்கும் இருவிதமான விளைவுகள், தன்மை இருக்கும். சுயநல அரசியலுக்காகச் செய்யப் பட்ட போதுமே கூட, வங்கிகள் நாட்டுடைமை ஆன பின்பு அடைந்த வளர்ச்சி, மக்களைச் சென்றடைந்த வேகம் இவற்றை மறுக்க முடியாது. ஆனால் எந்த ஒரு செயலுக்கும் தேவையான உந்து சக்தி இருக்க வேண்டும் அல்லவா? தங்களுடைய அரசியல் லாபங்களுக்காக, வங்கிகளைச் சீரழிக்க ஆரம்பித்த கொடுமையும் நடந்தது.

ஒரே ஒரு உதாரணம். 1975, 1976 ஆம் வருடங்கள், சலுகை வட்டி [வெறும் 4 %) யில் நலிந்த பிரிவினருக்காகக் கடன் கொடுக்கும் திட்டத்தின் கீழ் ஒரு வங்கி கிளை மேலாளர், கொடுத்தது ஐநூறு ரூபாய், கடன் பத்திரம் ஐயாயிரம் ரூபாய்க்கு! எத்தனை நூறு கடன்கள் அந்த மாதிரி அவரால் கொடுக்கப்பட்டது என்று தெரியும். அந்த வங்கி முழுமைக்கும்? இந்த மாதிரி, நலிந்த பிரிவுக்கு உதவுகிற வேலையை எவ்வளவு அழகாக அவர்கள் செய்திருந்தார்கள் என்றால், முன்னுரிமை கொடுத்துக் கொடுக்கப் படவேண்டிய கடன் என்று சில பிரிவுகளின் கீழ் ரிசர்வ் வங்கி அன்றைக்கு 35% என்று நிர்ணயம் செய்திருந்தது.


இந்த வங்கி மட்டும் அந்தப் பிரிவில் 53% கொடுத்து "சாதனை" செய்திருந்தது!


வங்கிகளுக்கு சமூகப் பொறுப்பு வேண்டும் என்பதற்காகவே நாட்டுடைமை ஆக்கப்பட்டதாகச் சொல்லப் பட்டது. அரசை நடத்துபவர்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும் சமூகப் பொறுப்பு  வேண்டாமா?ஆனால், அரசுக்கு அது தேவையில்லை! அரசியல்வாதிகளுக்கும் தான் என்றாகிப் போன பிறகு, வங்கிக் கடன்கள் வழங்குவதில் கூட மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்று பேரம் பிரித்துக் கொள்கிற முறை ஏற்படுத்திக் கொள்கிற அளவுக்கு மட்டுமே 'சமூகப் பொறுப்பு' இருந்தது!


1990 களில் பிரதமராக இருந்த நரசிம்ம ராவுக்கு வேறு வழி இருக்கவில்லை. சீரழிந்து போன பொருளாதாரத்தை சரி செய்ய வேண்டுமானால், சந்தை விரிவு படுத்தப்பட வேண்டும், அதற்கு முன்னோட்டமாக, பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும் என்ற நிர்பந்தம் வலுத்துக் கொண்டே இருந்ததுஎப்போதும் போல இடதுசாரிகள் எதிர்த்துக் கொண்டே இருந்தார்கள்! கட்சிக்குள்ளும் பெரிய அதிருப்தி இருந்தது. அத்தனையையும் மீறி, சீர்திருத்தங்களை அமல் படுத்தத் தொடங்கியதன்  பலன் தான், அடுத்த பத்தாண்டு வருடங்களில் ஏற்பட்ட வளர்ச்சி! அன்றைக்கு  ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த மன்மோகன் சிங் சீர்திருத்த முயற்சிகளில் பங்கெடுத்தவர்!

வங்கி சீர்திருத்தங்கள் முதலில் நடைமுறைக்கு வந்தது. வங்கிகளின் பொருளாதார அடித்தளம், சர்வதேசத் தரத்துக்குக் கொஞ்சம் கொஞ்சமாக வலுவாகிக் கொண்டு வந்தது. அடுத்தது, இன்சூரன்ஸ் துறை! கடுமையான எதிர்ப்பு, வழக்கம் போலவே இடதுசாரிகளிடம் இருந்து! ஆனால், ஒரு அரசியல் உறுதியுடன் அன்றைக்கு நரசிம்ம ராவ் எடுத்தது போல, அடுத்து வந்தவர்கள் முடிவெடுக்க முடியாமல் இருப்பதனால் இன்னமும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது!.

மறுபடியும் இருகோடுகள்!

வங்கித்துறை சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்ட போது வராக்கடன்கள் என்பது பூதாகாரமாக இருந்தது. முதலை இழந்து நின்றன பல பொதுத்துறை வங்கிகள்! மீண்டு வரும் நேரத்தில், ரோடு போட்ட முடித்த கையோடேயே குழி தோண்டிக் கொண்டேயும் போகும் இந்திய அரசியல் வியாதிகள் மறுபடியும் " இலவச சுரத்தை" பரப்பிக்கொண்டே போக ஆரம்பித்து விட்டார்கள்! 

மிகப்பெரிய சோகம், சீர்திருத்தங்களை ஆரம்பித்து வைத்த அதே மன்மோகன் சிங், பிரதமராக இருந்தும்  கூட எதுவும் செய்ய முடியாத டம்மியாக மட்டுமே இருப்பது தான்!

நேற்று -நவம்பர்  19- இந்திரா காந்தி பிறந்த நாள்!

அதே மாதிரி, மஞ்சேரி நாராயணன் நம்பியார் என்ற எம் என் நம்பியார் நினைவு நாளும் கூட.குடியிருந்த கோவில் படத்தில், கண்ணை உருட்டி முழித்து "அடேய்! ராமனாதா" என்று அடிக் குரலில் கர்ஜித்துக் கதாநாயகனுக்கு செல்லம் கொடுத்து வளர்த்துக் கடைசியில் உதைவாங்கும் ரொம்ப நல்லவர்!

சுதந்திரத்துக்காகப் போராடி உதைவாங்கின எத்தனை நல்லவர்களை இந்த நாடு நினைவு வைத்திருக்கிறது என்று ஒப்பிட்டுப் பார்க்கும் போது சினிமாவில் கதாநாயகன் கையால், கடைசி க்ளைமாக்ஸ் காட்சியில்  மட்டுமே உதை  வாங்கும்  நம்பியார் ரொம்ப,ரொம்பவே அதிர்ஷ்டம் செய்தவர். அவருக்கப்புறம் அந்த அதிர்ஷ்டம் காமெடியாக அடிவாங்கின செந்திலுக்குத்  தான் கிடைத்தது. அப்புறம்,வடிவேலு.



நம்பியாருடைய நினைவு நாளை ஒட்டி ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக, இங்கே அமர்க்களமாக ஒரு  புதிர்ப்போட்டியை நடத்தியிருக்கிறார்கள்


அங்கே கேட்டது ! இப்ப ரொம்ப முக்கியம் இதுன்னு கோவிக்கறவங்க அங்கேயே போய்க் கோவிச்சுக்கலாம்!


இப்போ வாசகர்களுக்கு  கேள்வி
1) நம்பியார் அவர்களையும், ப்ரைம் நம்பர்களையும் இணைத்து, ஏதேனும் ஒரு பின்னூட்டம் நீங்க இங்கே போடணும். வழக்கம்போல் - ஒவ்வொரு படைப்பாற்றல் மிக்க பின்னூட்டத்திற்கும், பாயிண்டுகள் உண்டுசும்மா - புகுந்து விளையாடுங்க!


2) நம்பியார் அவர்களின் தாயார் பெயர் என்ன?  

விடை தெரிஞ்சாலோ, ஆட்டையில் கலந்துக்கறதுன்னாலோ அங்கே அணுகவும்!

நவம்பர் 19 அவ்வளவுதானா, இன்னமும்  இருக்கான்னு கொஞ்சம் வம்பு, அக்கப்போரை எதிர் பார்ப்பவர்களுக்காக:


மலங்கழித்துக் கொண்டே அரசாட்சி செய்யமுடியுமா

முடியும்! ஐரோப்பிய ராஜாக்கள் அவ்வாறு செய்ததாக அவர்கள் சரித்திரம்
கூறுகிறது. அதைப்பற்றிய அழகான ஓவியங்களும் உள்ளன!
பிரெஞ்சு அரசன் லூயிஸ்  XIV அத்தகைய அழகான "அரசணை" (Toilet throne)
அமைத்துக்கொண்டு, மலங்கழித்துக் கொண்டே தர்பார் நடத்துவானாம்!
ஒருதடவை எலிஸபெத் ராணி தேம்ஸ் நதிக்கரைக்கு உலாவச் சென்றாராம்!
அமைச்சர்கள் எவ்வளவோ தடுத்துப் பார்த்தார்கள் அம்மையார் பிடிவாதமாக
சென்றுவிட்டார். அவர்களும் நதிக்கரைக்குச் செல்லாமல் தொலைவிலேயே
நிற்க்கவைத்துப் பேசிக் கொண்டிருந்தனர். ராணி அருகில் செல்ல ஆசைபட்டார்.

வேறு வழியில்லாமல் அழைத்துச் சென்றனர்! ஒரே நாத்தம். சகிக்கவில்லை!
19ம் நூற்றாண்டுமற்றும் 20ம் நூற்றாண்டுகால ஆரம்பம் வரை அப்படித்தான் தேம்ஸ் நதிக்கரை மணம் வீசிக்கொண்டிருந்தது.
ஆங்கிலேயரின் "Night soil" கைகளினால்தான் அள்ளப்பட்டு வந்தது!
"Seaward" என்பதுதான் "sewer" என்றாகியது தெரியுமோ?
கடற்கரையில் மலங்கழிப்பது "கொள்ளைக்கு போவது" என்பதாகும்!
சிந்துசமவெளி நாகரிகத்தில் மிகப்பெரிய "பாத்ரூம்" இருந்தது என்று
மேனாட்டவர் எழுதி-எழுதி வியந்தனரே ஏன்?
ஏனெனில், அவர்களுக்கு பாத்ரூம் பழக்கமே இல்லை. அதாவது தினமும் குளிக்கும் வழக்கம் இல்லை!
அதேமாதிரித்தான், மலங்கழிப்பதும்! மலங்ழித்துத் துடைத்துப்
போட்டுவிடுவார்கள். நாற்றம் வந்துகொண்டேயிருக்கும். அதை மறைக்க சென்டு அடித்துக் கொள்வார்கள்!
அத்தைகைய நாகரிகம் கொண்ட ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்தபோது "Dry latrine" முறையை அறிமுகப்படுத்தினார்கள். அதன்படி, கட்டப்பட்ட
கக்கூஸுகளில் அவர்கள் மலம் கழிப்பார்கள், மறுநாள் அல்லது ஒருநாளைக்கு இருமுறை அள்ளி சுத்தப்படுதுவார்கள். அதற்காக குறிப்பிட்ட இந்தியர்கள் அமர்த்தப்பட்டார்கள். இவ்வ்வாறுதான் மலம் அள்ளும் பழக்கம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. முன்னால் முகமதிய / முகலாய சுல்தானகளும் செய்து வந்தனர்.
இதைபற்றி பல இணைதளங்களும், புத்தகங்களும் உள்ளன!


சர்வ தேசக் கழிவறை தினத்தை ஒட்டி இப்படி ஒரு விவாத இழையை  மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் வேதப்ரகாஷ் என்பவர் ஆரம்பித்து வைத்திருக்கிறார். உவ்வேன்னு குமட்டிக் கொண்டு, முகம் சுளிக்காமல்இங்கே இந்த விவாத இழையைப் பாருங்கள்! பயனுள்ள தகவல்களோடு, இந்த விவாதம் நடப்பில் இருக்கிறது!




தி டெலிகிராப், கல்கத்தாவில் இருந்து வரும் நாளிதழ்! கடலோடி நரசய்யா (எழுத்தாளர்) நேற்றைய டெலிகிராப்  இதழில் நம்மூர்த் தலைகளின் தொகுதிகளில்   கழிவறை, சுகாதார வசதிகளில் எத்தனை ஆண்டுகள் பின்தங்கியிருக்கிறோம் என்பதை ஒரு பட்டியல் எடுத்து வெளியிட்டிருப்பதை சுட்டி கொடுத்திருக்கிறார்!

இந்தியா ஒளிர்கிறது என்று பிஜேபி ஆட்சிக் காலத்தில் தம்பட்டம் அடித்துக் கொண்டதை கேலிசெய்த  காங்கிரஸ் கட்சிக்காரர்கள், இந்தியா நாறுகிறது என்று சொன்னால் மூக்கைப் பொத்திக் கொள்வார்களா அல்லது சந்தனப்பால் மணக்குதே என் சுந்தரியம்மா என்று கொல்லங்குடி கருப்பாயி பாடிய பாட்டைப்பாடுவார்களா?



4 comments:

  1. தனது படங்களில் யாரையும் நிம்மதி + சந்தோஷமாக இருக்க விடாத கே. பாலச்சந்தர் உதாரணத்துடன் கட்டுரை தொடங்கி உள்ளீர்கள்.
    உண்மைத் தமிழன் நீளத்துடன் போட்டி போடும் பதிவு. அரசியல்வாதிகள் பேசும் ஒவ்வொன்றிலும் ஒரு விஷயம், விஷமம், காரணம் இருக்கும். வேறு ஏதாவது பிரச்னையை திசை திருப்ப இன்னொரு பிரச்னையை பெரிதாக்குவார்கள்.
    நம்பியாரைப் பற்றி சொல்லி "அங்கே" சுட்டியதற்கு நன்றி!
    அட, இனி நாம் நம் தெருவோரங்களையும் சாலைகளையும் மேனாடு போலதான் வைத்திருக்கிறோம் என்று சொல்லலாம்.

    ReplyDelete
  2. "யாரையும் நிம்மதியாக இருக்கவிடாத கே.பாலசந்தருடன்....!"
    சுவாரசியமான தகவல் எதையோ அறிந்து வைத்திருக்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை, நடுத்தர வர்க்கம், திரைப்படங்களில் கதைக் களமாக ஆக்கப் பட்ட ஒரு trend இல் பாலச்சந்தருக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. அவ்வளவு தான். இதே மாதிரி, பாரதிராஜா, தன்னுடைய மண்வாசனையைக் காட்டிக் கொண்டார். இவர்கள் இருவரையும் தாண்டி யதார்த்த நிலை இருக்கிறது.

    உண்மைத் தமிழன் போல நீளமான பதிவு!
    Really I feel this as a compliment! மனிதர் எவ்வளவு விஷயங்களைத் தொட்டு எழுதுகிறார்! நீளம், சுருக்கம் என்பது, பதிவரின், படிக்க வருகிறவர்களின் மனவீச்சைப் பொறுத்தது மட்டுமே. இதைத் தான் சென்ற பதிவில் சேத் கோடின் பதிவில் ஒன்றை, ஒரே வாக்கியத்தை இரண்டாக உடைத்து, முதல் பாதி தலைப்பாகவும், அடுத்த பாதி பதிவாகவும் எடுத்துக் காட்டியிருந்தேன். சொல்ல வருவது ஆரம்பங்களில் காட்டாறாகத் தான் வரும்! அதுவே சலசலப்பில்லாமல் தெளிந்த நீரோடை மாதிரி ஆகிற நேரமும் வரும்! நம்புவோமே!

    கவனித்துப் பார்த்தால், மேலோட்டமாகத் தனித் தனியாக சம்பந்தம் இல்லாமல் தெரிகிற விஷயங்களைத் தொடர்பு படுத்தி, யோசிக்கிற என்னுடைய சுபாவமே இப்படி வெளிப்படுகிறது போல்இருக்கிறது.

    ReplyDelete
  3. ஒரு சிறிய திருத்தம்: நவம்பர் பத்தொன்பது நம்பியார் அவர்களின் - நினைவு தினம்.
    மத்தபடி, வழக்கம் போல - கலக்கிட்டீங்க. இங்க, உங்க படைப்பாற்றல் - பரிமளிக்குது!

    ReplyDelete
  4. திருத்தி விட்டேன். பிழையைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

    உதை வாங்கியே பிரபலமான நம்பியார் வரிசையில், சம காலத்து செந்தில், வடிவேலு இருவரைப் பற்றியும் சொல்லாமல் போனால் நியாயமாக இருக்குமா? ஒரு நாலு வரி சேர்த்தும் விட்டேன்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!