என் கேள்விக்கென்ன பதில் ?


ஒரு ஒட்டகம். பக்கத்தில் அதன் குட்டி.

குட்டி தாயிடம்  கேட்டது."அம்மா, எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன, கேட்டால் சொல்வாயா?"

தாய் சொன்னது :"தாராளமாகக் கேள்! தெரிந்ததைச் சொல்கிறேன்!"

"நமக்கு என் முதுகில் இவ்வளவு பெரிய திமில் இருக்கிறது?"




"நாமெல்லாம், பாலைவனத்தில் வாழ்வதற்காகப் படைக்கப்பட்டவர்கள் அல்லவா? அதனால், நமக்குத் தேவைப் படும் தண்ணீரை, நம் உடலிலேயே சேர்த்து வைத்துக் கொள்வதற்காக திமில் இருக்கிறது."

"சரி அம்மா! அப்புறம் ஏன் நமக்கு மட்டும் உயரமான கால்கள், அகலமான குளம்புகள் என்று இப்படி கொஞ்சம் வித்தியாசமாகவே  இருக்கிறது?"




"நல்ல கேள்வி! இப்படி கால்கள் உயரமாகவும், குளம்புகளும்  இருப்பதால் தான் மணற்பாங்கான பாலைவனத்தில், நம்மால் வேறு எவரை விடவும் வேகமாக ஓட முடிகிறது!"

"சரிதான்! அப்புறம் இந்தக் கண்ணிமைகள் இவ்வளவு பெரிதாக, முடிகளோடு இருக்கிறது? சமயங்களில், சரியாகப் பார்க்கக் கூட முடிவதில்லையே?"




"என் செல்லமே! இது கேள்விகள் வாரமா?   கண் இமைகள் பெரிதாகவும், முடிகளோடும் இருப்பதனால் தான், பாலைவனத்தில் அவ்வப்போது ஏற்படும் மணல் சூறாவளியில், கண்களில் மண் விழுந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது?"

" அம்மா!நான் புரிந்து கொண்டது சரிதானா என்று சொல்! திமில்கள் இருப்பது, பாலைவனத்தில் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்வதற்காக. சரிதானா?"

"ஆமாம் செல்லம்!"

"உயரமான கால்கள், வித்தியாசமான குளம்புகள், பாலைவனத்தில் மண் பரப்பில் வேகமாக ஓடுவதற்காக! சரிதானா?"

"சரிதாண்டா செல்லம்!"

"கண் இமைகள் பெரிதாக, முடிகளோடு, கொஞ்சம் பயமுறுத்துகிற மாதிரி இருந்தால் கூட, அதுவுமே பாலைவனத்தில் அடிக்கடி ஏற்படும் மணல் சூறாவளியில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான்! அப்படித்தானே?"

"ஆமாண்டா ராசா!"




"அப்புறம்  எதற்காக நம்மை மீனாட்சி கோவில் திருவிழாக்களில் கலர்த் துணி எல்லாம் போர்த்தி, முன்னால் இழுத்துச் செல்கிறார்கள்? பாலைவன ஒட்டகங்களுக்கும், மீனாட்சி கோவில் திருவிழாவுக்கும் என்ன சம்பந்தம்?"

" இப்படியே போனால், மதுரையும் ஒருநாள் பாலைவனமாகிவிடும் என்பதை மதுரைமாநகர ஜனங்களுக்கு சிம்பாலிக்காகச் சொல்வதற்காகக் கூட இருக்கலாம்டா செல்லம்!"

"அம்மா! இன்னும் ஒரு கேள்வி!"

"கேளடா செல்லம்!"

"கோவில் திருவிழா  ஒட்டகம் முன்னால் வர மதுரையில் தான் சரி! அப்புறம் ஏன் நம் சகோதரர்களை காட்சிப் பொருளாக, மிருகக் காட்சி சாலைகளில் அடைத்து வைத்திருக்கிறார்கள்  ?"




"இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தால் நாம் ஒட்டகங்களாகப் பிறந்திருக்கவே மாட்டோமாடா செல்லம்! மனிதர்களாகப் பிறந்திருப்போம்!"

"அப்படியா சொல்கிறாய் அம்மா! இந்த மனிதர்கள் இருக்கிறார்களே, இவர்கள் தங்களை மூளைக் காரர்கள், ஆறறிவு படைத்தவர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்களே! அது உணமைதானா?"




"மூளை என்று ஒரு உறுப்பு மனிதர்களிடம் இருக்கிறது! ஆனால்,அதைப் பயன்படுத்துவதே இல்லை! கைகால்களில் உழைக்கத் தெம்பும் இருக்கிறது!

உழைக்கத் தேவையே இல்லை,  நாங்கள் உங்கள் வீடு தேடி வந்து இலவசங்களால் நிரப்புவோம் என்று சொல்பவர்களிடம் மயங்கி, இருப்பதையும் இழந்து கொண்டிருக்கிறார்கள். தொலைக் காட்சி என்று ஒன்று இருக்கிறதாம்! அதைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அறிவு சுத்தமாகவே மழுங்கிவிடும் என்று கூடச் சொல்கிறார்கள்!"


"அம்மா! ...."

"போதுமடா செல்லம்! வியாதிகளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது கூட, வியாதிகளுக்கு நாம் கொடுக்கும் வரவேற்பாக ஆகிவிடக் கூடும்! உருப்படியான நல்ல விஷயங்களை பேசலாமடா ராசா!"

6 comments:

  1. :)))

    //வியாதிகளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது கூட, வியாதிகளுக்கு நாம் கொடுக்கும் வரவேற்பாக ஆகிவிடக் கூடும்!//

    நேற்றுதான் ஸ்ரீஅரவிந்தர்/அன்னையின் "Fear" என்ற புத்தகத்தில் இதே செய்தியை படித்தேன்.

    ReplyDelete
  2. அட.. கதை டெவலப் ஆனதும் நல்லாதான் கருத்து சொல்லுது.

    நான் படித்த கதையில், 'வாட் த ஹெல் வீ ஆர் டூயிங் இன் ஜூ' என்பதோடு முடிந்துவிடும்.

    ReplyDelete
  3. ஒட்ட 'கம்' இல்லாமலேயே வாய் அடைத்துப் போயிற்று.

    ReplyDelete
  4. வாருங்கள் பீர்!
    கதை என்றாலே கொஞ்சம் சேர்த்துச் சொல்வது தானே! இந்தக் கதை அல்லது துணுக்கை இணையத்தில் படித்து மூன்று நான்கு வருடங்களுக்கு மேலேயே ஆகி விட்டது. கதையின் முத்தாய்ப்பு அல்லது க்ளைமாக்சே, குட்டி ஆச்சரியப் பட்டுக் கேட்கிற அந்தக் கேள்வி தான்! "அப்புறம் நம்மை ஏன் மிருகக் காட்சி சாலையில் அடைத்து வைத்திருக்கிறார்கள்!"

    இந்தக் கேள்வியின் உட்கிடக்கை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகப் புரியும் தருணமும் உண்டு. எனக்கு, நாம் யார், இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்ற ஆத்மாவின் தேடலாகவே பட்டது. அதாவது, உலகத்தை, நாம் ஒவ்வொருவருமே நமக்கு சௌகரியமான விதத்தில் மட்டுமே பார்க்கப் பிரியப்படுகிறோம், பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதையும் தாண்டிப் போவதற்கு முயற்சி செய்வதே இல்லை என்பது ஒரு சிந்தனை!

    பழக்கங்களின் அடிமைகளாகவே இருந்துவிடுவது இது தான், நான் இந்தப் பதிவில் சொல்ல வந்த மையக் கருத்து.

    ReplyDelete
  5. உண்மைதான் கவிநயா அம்மா!

    எதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதுவாகவே ஆகி விடுகிறோம் என்பது, பிரகதாரண்யக உபநிஷத்தில் தெளிவாகவே சொல்லப் பட்டிருப்பது தான்! ஸ்ரீ அரவிந்த அன்னை, இன்னமும் தெளிவாகப் பல சந்தர்ப்பங்களில்சொல்லியிருக்கிறார். பழக்கங்களின் அடிமைகளாக இருப்பதிலிருந்து விடுபடவே, வழிபாடுகள், உபவாசங்கள் என்றெல்லாம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். பழத்தை விட்டு விட்டுத் தோலை சாப்பிடுகிற சோம்பேறித்தனம் என்னவாக ஆகிப் போனதென்றால், நோக்கத்தை அறிந்து கொள்ளாமல் செய்யப் படுபவை வெறும் சடங்குகளாகவும், மூட நம்பிக்கைகளாகவும் குறுகிப்போனது தான்!

    அறிவு நமக்கு வழங்கப் பட்டிருக்கிறது. பெரும்பாலான சமயங்களில் நாம் அதைப் பயன்படுத்துவதே இல்லை

    ReplyDelete
  6. படித்த கதை என்றாலும், கொஞ்சம் சிறுசா பதிவு போட்டதுக்காக ஒரு தடவை படிச்சேன்!

    மக்கள் மூளையை மழுங்கடிக்க புதுசு புதுசா அரசியல்வாதிகள் யோசிச்சு எதாவது செய்யுறாங்க!
    அவுங்க உஷார், நாம தான் மங்குணி!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!