ஒரு அழகிய கனவு கலைகிற நேரம்!


 
ஒரு அழகிய கனவு கலைகிற நேரம்!

சில நாட்களுக்கு முன்னால் யாகூ! 360 தளம் மூடப்பட்டபோது, அங்கே இணையத்தில் பழகக் கிடைத்த சில நண்பர்களைப் பிரிந்துவிடப் போகிறோம் என்ற வருத்தம், ஒரு பதிவாக வெளியானது. 2006 நவம்பருக்குப் பின்னால், அங்கே இருந்த என்னுடைய நட்புவட்டத்தைக் கலைத்துவிட்டு, ஒதுங்கியே இருந்தபோதிலுமே கூட, எல்லோரையும் சேர்த்து வைத்த தளமே காணாமல் போய்விடப்போகிறது என்ற ஆதங்கம், அந்தப் பதிவில் ஆற்ற மாட்டாமையோடு வெளிப்பட்டிருந்தது. இதேமாதிரி,. சிஃபி  தன்னுடைய தமிழ்த் தளத்தைக் கலைத்தபோது அதில் பணியாற்றின அண்ணா கண்ணன் 'காற்றில் கரைந்த தளம்' என்று தன்னுடைய உழைப்பு, முயற்சி எல்லாமே சேர்ந்தே காணாமல் போனதைக் குறித்து வருத்தப் பட்டிருந்தார்.
 
மின்னெழுத்துக்கள் கரைந்து போனது இருக்கட்டும்! நம்மோடு கலந்து, பழகி, உரையாடி, வாழ்க்கையின் சில அற்புதமான தருணங்களை ஏற்படுத்தித் தரும் மனிதர்களே, கனவாகக் களைந்து போவதென்றால்....?

வாழ்க்கையில் ஜனன மரணங்கள் இயல்புதான்! தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பதுதான்! ஆனாலும், நாம் நிரந்தரமானவர்கள், அல்லது நிரந்தரமாக இருக்கவே படைக்கப் பட்டவர்கள் என்கிற உணர்வு இல்லாத உயிரே இல்லை! அப்படி ஒரு உணர்வு, உயிரின் மிக  அடிப்படையான மூலக் கூறாகவே இருக்கிறது.

நவம்பர் 23, 2009. திங்கள் கிழமை முன்னிரவு 7 மணி

கிண்டி ரயில்வே  ஸ்டேஷனில் எப்போதும் போல ஜனங்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர், சடகோபன் என்ற கண்ணன். ஸ்டேட் வங்கியில் ஸ்கேல் 3 அதிகாரியாகப் பணி புரிந்து  ஒய்வு பெற்றவர். அனுபவமுள்ள அதிகாரிகளை, கிட்டத்தட்ட கடைசியாக வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் தருகிறோம், வருகிறீர்களா என்று வந்த அழைப்பை நிராகரித்து விட்டு, வேதம் படிக்க வேண்டும் என்ற ஆசையோடு, காலையில் நடக்கும் இரண்டு வகுப்புக்களுக்கும் தவறாமல் போய்க் கலந்து கொண்டு, வேதம் அத்யயனம் செய்வதில் கொஞ்சம் தேர்ச்சியுமே பெற்றிருந்தவர்!.

அறுபத்திரண்டு வயது நிறைவாகி,அறுபத்துமூன்றில் அடியெடுத்து வைத்து சில நாட்களே ஆகியிருந்த நேரம். ஒரு கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்புகிற நேரம், என்ன நடந்தது என்பதை எவருமே ஊகிக்க முடியாத ஒரு தருணம், மின்சார ரயில் சீறிப் பாய்ந்த வேகமோ என்னவோ, கால் இடறி விழுந்தவர், தலையில் அடிபட்டு........

இரவு ஒன்பது மணியாகியும் வீடு திரும்பவில்லையே என்று அவரது மனைவி கவலைப் பட்டு உறவினர்களிடம் விசாரிக்கச் சொல்ல, அங்கே இங்கே என்று அலைக்கழிக்கப்பட்டுக் கடைசியில் அரசு மருத்துவ மனை மார்ச்சுவரியில்... எத்தனையோ அடையாளம் தெரியாத குவியலோடு ஒன்றாக. மறுநாள் செய்தித் தாட்களில் ஒரு ஓரத்தில் வெறும் செய்தியாக! அவ்வளவுதானா?

இளைய சகோதரனும், அவரது மகனும் இரவு முழுவதும், அழுகையை அடக்கிக் கொண்டு மருத்துவ மனை வாசலிலேயே காத்துக் கொண்டு இருந்த நேரத்திலும், உறவினர்கள், நண்பர்களுக்கு, தகவல் சொல்லிக் கொண்டிருந்ததும்.........

இரவு பதினொன்று-பதினொன்றரை மணிவாக்கில் இவனுக்கும் தகவல் வந்தது. தூங்கிக் கொண்டிருந்தவனுக்கு, எது கனவு எது நிஜம் என்று பிரித்துப்பார்க்கக் கூடத் தோன்றாமல்....அதற்கு முந்தின வெள்ளிக் கிழமை இரவும், சனிக்கிழமை காலையில் கூடஅலைபேசியில்  நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தது....அதற்கும் பதினைந்து  இருபது நாட்களுக்கு முன்னால் தான் மதுரையில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தது........

எல்லாமே கனவு தானா? கலைந்துபோவதற்குத்தானா இத்தனை கனவுகளும்?

குடமுடைந் தால்அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்"இறை"ப் போதும் வையாரே

இப்படி ஒரு வலைக் குழும விவாதத்தில் ஆமாச்சு என்ற ம.ராமதாஸ் தருமை ஆதீன திருமந்திர வரிகளைச் சொல்லி, இறை என்ற வார்த்தை நொடி என்கிற பொருளையும் தருவதாக எழுதியிருந்ததைப் படித்த நினைவும் வந்து முட்ட, அழக் கூடாது, அழுவது அந்த உன்னதமான மனிதனுக்குச் செய்யும் மரியாதை இல்லை என்ற பிடிவாதத்தோடு, இந்தப் பத்து நாட்களில் வேறு வேறு விஷயங்களைத் தொட்டு இவன் வெளியே உலாவிக் கொண்டிருந்த தருணங்களில், மனம் மட்டும் சடகோபன், கண்ணன், கண்ண மாமா   என்றும், ஒவ்வொருவருக்கும் இன்னம் வேறு உறவு முறைகளிலும் அறியப்பட்ட  தன்னைச் சுற்றி இருக்கிற எல்லோரிடத்திலும், ஒரு நல்லெண்ணத்தையும், கலகலப்பையும் உண்டாக்கத் தெரிந்த  அந்த உன்னதமான உயிர்! பழகிய காலம், பழகிப் பேசிய காலமும் வெகு குறைவு தான்  என்றாலுமே, பூவின் வாசம் நீடித்திருப்பதைப் போல, பழகிய அந்த இனிமையான தருணங்கள், நினைத்துப் பார்க்கும் போதே மலர்ச்சியையும், புன்னகையையும் வரவழைப்பதாக........கனவும் நினைவும் சுற்றிச் சுற்றி.......

இன்றைக்குப் பத்தாம் நாள் கரும காரியங்கள் இந்நேரம் நடந்து முடிந்திருக்கும்!

எல்லாம் கனவுதான்! கலைய மறுக்கிற கனவாக, இப்போதும் முன்னால் நிஜமாகவே வந்து நிற்கிறது!

"ஃபர்ஸ்ட் கிளாஸ்!"

காபியைக் குடித்து முடித்ததும் மனதில் கொஞ்சம் கூடப் பொய்யில்லாமல் வருகிற முதல் வார்த்தை!

"போங்கோ மாமா! செகண்ட் டிகாக்ஷன் தான் இருந்தது, அதைப்போய்..." அவருடைய தமக்கை மகள் வெட்கப்பட்டுச் சொல்லும் போது  "ஃபர்ஸ்டா செகண்டான்னெல்லாம் தெரியாது, ஆனா காபி "ஃபர்ஸ்ட்கிளாஸ்!" மனதின் அடித்தளத்தில் இருந்து, குறை எதையுமே பார்க்கத் தெரியாத வார்த்தைகள். தமக்கை வீட்டுக்கு வருகிற சந்தர்ப்பங்களில், அரிவாள்மணையை    எடுத்துக் கொண்டு, காய்கறிகளை லாவகமாக நறுக்கிக் கொடுத்துக் கொண்டே ஊர் சமாசாரம், உறவு சமாசாரம் என்று பேசிக் கொண்டே......அந்த பாந்தம்!

குழந்தைகள் இல்லையென்ற குறையே இல்லாத மனிதன்! அத்தனை குழந்தைகளையும் வேற்றுமையில்லாமல் நேசிக்கத் தெரிந்தவருக்கு, தனியாக எதற்கு என்று ஆண்டவன் நினைத்தானோ தெரியாது. ஐந்து வருடங்களுக்கு முன்னால், உறவினர் ஒருவரது ஷஷ்டி அப்த பூர்த்திக்குப் போய் இருந்த தருணம், இன்னொரு தமக்கையின்  பேரக் குழந்தைகளுடன் கலகலப்பாக....அப்புவும், வர்ஷுக் குட்டியும் என்னமாகக் கதை அளந்து கொண்டிருந்தார்கள்! கொஞ்சம் தள்ளியிருந்தே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவனை அருகே அழைத்து, "என்ன சொல்றா கேளும்"
என்று எடுத்துக் கொடுத்தவுடனேயே, அந்தக் குழந்தைளும் மறுபடி தங்கள் அளப்பை அரங்கேற்றம் செய்த அந்தத் தருணம்........!

தாய்க்குத் தலைமகன்! தாய் சொல்லைத் தட்டாத தனயனும் கூட! கொஞ்ச நேரம் பார்த்துப் பேசியவர்கள் கூட, தங்களுடைய நெருங்கிய உறவாக உணரமுடிந்த ஒரு மனிதனைப் பார்க்கிற, பக்கத்தில் இருந்து பேசிப் பழகுகிற வாய்ப்பு இவனுக்குக் கிடைத்திருக்கிறது என்பதே ஒரு பெரும் புண்ணியம்! நினைத்துப் பார்க்கும் போது, இப்படி எத்தனை எத்தனை நல்ல மனிதர்களோடு பழகும் வாய்ப்பை, இறைவன் எனக்குத் தந்திருக்கிறான் என்று அவனை வணங்கத்தோன்றுகிறது!

"ஃபர்ஸ்ட்கிளாஸ்!"

எல்லாமே முதல் தரம் தான்! எதையுமே கடைத்தரமாகவோ, கீழ்த்தரமாகவோ பார்க்கத் தெரியாத ஒரு உயர்ந்த மனிதனை, கொஞ்சம் பக்கத்தில் இருந்து பார்ப்பதற்கு, நல்ல எண்ணங்களையே  விதைத்துக் கொண்டுபோன ஒரு ஜீவனை நன்றியோடு நினைப்பதற்கு, வார்த்தைகளில் வடிக்க நான் செய்யும் இந்த முயற்சி........இது என்ன தரத்தில் இருந்தாலுமே, "ஃபர்ஸ்ட்கிளாஸ்!

இது தான் சடகோபன் என்றும் கண்ணன் என்றும், கண்ண மாமா என்றும் அறியப்பட்ட புண்ணிய ஜீவன் ஏற்றுக் கொள்ளும் விதம்!

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
  


 

குறை ஒன்றும் இல்லை! மறைமூர்த்தி கண்ணா!
குறை ஒன்றும் இல்லை! குறை ஒன்றும் இல்லை!

10 comments:

  1. நெகிழ வைத்துவிட்டது, உங்க கட்டுரை.
    சென்ற அக்டோபர் மாத இறுதி வாரம்,
    அதே சென்னையில், அதே வகையில் சேத்பட்
    ஸ்டேஷன் அருகே அடிபட்டு இன்னுயிர் துறந்த
    சம்பத்குமார் என்ற உறவினரின் ஞாபகம்
    வந்தது. இவர் உங்க நண்பர் என்று நீங்க உங்க
    பழைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருக்கும் - சுத்தானந்த பாரதி - உறவினரின் நெருங்கிய சொந்தம்.
    என் மன்னியின் தம்பி. நல்லவர்கள் எல்லோரும்
    இப்படிப் போய்விடுகிறார்களே என்று மனம் கஷ்டப்படுகிறது

    ReplyDelete
  2. உங்க பதிவெல்லாம் படிச்சிருந்தா பர்ஸ்ட்கிளாசுன்னு சொல்லியிருப்பார்!

    வருத்தத்தில் பங்கெடுத்து கொள்கிறேன்!

    ReplyDelete
  3. கலங்க வைத்த பதிவு. அன்னை அரவணைத்துக் கொள்வாள்.

    ReplyDelete
  4. ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுவோம்.

    ReplyDelete
  5. கற்பதுவே கேட்பதுவே கருதுவதே,
    நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ,
    உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ !!
    ---------
    -------
    --------
    காண்ப தெல்லாம் மறையுமென்றால் ,
    மறைந்ததெல்லாம் காண்பமன்றோ ,
    நாமும் பொய்தானோ - இந்த
    ஞாலமும் பொய் தானோ!!
    -------பாரதி

    ReplyDelete
  6. மரணம் வரும்.நிச்சயம்தான்....ஆனால் இவ்வளவு கொடுமையான வகையில் வரும் மரணங்கள் மனதில் ஆறாத ரணங்களை ஏற்படுத்துகின்றன. எவ்வளவு தத்துவங்கள் படித்தாலும், எதுவும் நிலை இல்லை என்று தெரிந்தாலும் இவார்கள் நினைவை மனதை விட்டு உதற முடிவதில்லை. kgg சொல்லி உள்ள மரணம் எங்களை இன்னும் பாதிக்கிறது. மறைந்த மனிதர்களின் பழகும் சுபாவமும் இதற்கு முக்கிய காரணம்.

    ReplyDelete
  7. மரணமே கொடுமை! மரணம் வந்தவிதம் கொடுமை!
    இப்படிக் கலங்கி எதையுமே சொல்ல முனையவில்லை. அருணகிரிநாதர் சொன்னபடி 'மரணப்ரமாதம் நமக்கில்லை' என்று மரணம் என்னை அதிர்ச்சியடையவோ, ஆச்சரியப்படுத்துவதாகவோ இல்லை. பிறப்பில் வந்தது இந்தப் பயணம் என்றால், இறப்பில் பாதைகள் பிரிந்து வேறு ஒரு பயணம் தொடங்குகிறது அல்லது அவரவர் விருப்பத்திற்கேற்ப ஒய்வு (மோக்ஷம்) கிடைக்கிறது. ஸ்ரீ அரவிந்தரின் சாவித்திரி மகா காவியம் இந்த விஷயத்தில் ஒரு புரிதலை, தெளிவைக் கொடுத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்!

    மூன்றரை வருடங்களுக்கு முன்னால் பைபாஸ் சர்ஜரி செய்து கொண்ட பிறகு தான், அறிவால், உணர்ச்சிகளால் சிந்திப்பதை விட, இதயத்தின் மொழியில் சிந்திப்பது தான் நல்லது என்பதை அனுபவம் ஒரு அடி கொடுத்துச் சொல்லிக் கொடுத்தது. இதயத்தின் மொழி எப்படி இருக்கும் என்பதை எனக்குப் புரிய வைத்தவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் பிரிந்து வேறோர் பயணத்திற்குப் போனதில், கலங்கவோஅழுது அரற்றவோ கூடாது என்பதில் உறுதியாக இரு ந்தேன் என்று நினைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தபோதுதான் , உறுதி போதாது என்பதைக் காட்டிக் கண்ணீர் தானாகவே வந்தது.

    கண்ணீருமே கூட ஒருவகையில், ஒரு உன்னதமான நினைவுக்கு, அனுபவத்திற்கு, நன்றி சொல்வது மாதிரி ஆகிப்போய் விடுகிறது இல்லையா!
    அனுவவத்தில், ஆறுதல் சொல்ல வந்ததற்கு நன்றி!

    ReplyDelete
  8. வணக்கம் நான் இன்றுதான் தங்களின் தளத்துக்கு
    முதன் முதலாக வந்துள்ளேன்.அருமையான படைப்புகளை பகிர்ந்துகொள்ளும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.நன்றி பகிர்வுக்கு....

    ReplyDelete
  9. கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் வருடத்துக்கு முன் எழுதிய பதிவைப் படித்துப் பார்த்துவிட்டு, கருத்தைப் பதிந்தமைக்கு மிக நன்றி!

    ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சில அழகிய கனவுகள் வருவதும், அதில் சில கலைவதும் இயல்பானதுதான் என்றாலும்,ஒரு அருமையான மனிதரை, உறவை இழந்தோமே என்ற ஏக்கத்தில்,அதைத் தாங்கிக் கொள்கிற பக்குவம் இல்லையேஎன்று வந்த வார்த்தைகளின் தொகுப்பு அது.

    ReplyDelete
  10. படித்து முடிக்கும் போது அன்றைய சூழ்நிலையில் நீங்கள் அடைந்த சோகத்தினை இன்று என்னால் உணர முடிகின்றது.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!