குதிரையிடமிருந்து புலி கற்றுக்கொள்ள வேண்டியது...?!





சண்டேன்னா.....மூணு! வேறென்ன, கொம்புதான்!

அதென்ன மூணு ..கொம்பு என்று அப்பாவித்தனமாகக் கேட்பவர்களுக்காக, போனால் போகிறதென்று ஒரு சிறு குறிப்பு! புராணம்!

மலையத்துவசன் என்று ஒரு பாண்டிய ராஜா. நீண்ட நாட்களாகப் பிள்ளை இல்லை. தவமிருந்து, அப்புறம் ஒரு பெண் பிள்ளை பிறந்தது..பிறக்கும் போதே மூன்று ஸ்தனங்களோடு பிறந்த பெண்பிள்ளையைப் பார்த்து, ஐயோ, இப்படி இருக்கிறதே என்று பாண்டியன் கலங்கினானாம்! இந்தப் பெண்பிள்ளை வளர்ந்து பெரியவளானால் யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கவலை வாட்ட ஆரம்பித்தது. அசரீரியாக, "வருந்தாதே! அவளுக்குத் திருமண நேரம் வரும்போது, அவளைத் தேடி மணாளன் வருவான். அவனைப் பார்த்ததுமே, மூன்றாவதாக இருக்கும் ஸ்தனம் மறைந்துவிடும்!" என்று ஆறுதல் சொல்லியுமே கூட, மன்னனுக்குத் துயரம் தாங்கவில்லை. அந்தக் கவலையுடனேயே மரணமடைந்தான்.

கண் ஊஞ்சல் ஆட்டினாள் காஞ்சனமாலை என்று தாலாட்டுப் பாட்டெல்லாம் கேட்டு வளர்ந்த பெண்பிள்ளை, மீனாக்ஷி பெரிய ராவடியாகவே இருந்தாள் என்று திருவிளையாடல் புராணம் சொல்கிறது.இப்படித் தாலாட்டுப் பாடியே ராவடியாக்கி விட்டார்களோ? ஒவ்வொருத்தராகப் போய், என்னுடன் சண்டைக்கு வருகிறாயா என்று கூப்பிட்டுக் கூப்பிட்டுச் சண்டை செய்வதற்காகவே திக்விஜயம் ஆரம்பித்தாள். அப்புறம் சோம சுந்தரனாக வந்தவனைக் கண்டவுடன் வெட்கம் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டாளாம்! மூன்றாவது ஸ்தனம் மறைந்ததைக் கண்டு, காஞ்சனமாலை மாப்பிள்ளை ஒருத்தன் வசமாக மாட்டிக் கொண்டான் என்று தெரிந்துகொண்டு, முப்பத்துமுக்கோடி தேவர்களோடு சேர்ந்து பெண்ணுக்குத் திருமண ஏற்பாட்டைச் செய்ய ஆரம்பித்தாள்.

கல்யாணமும் ஆகி, பந்தியெல்லாம் முடிந்தபிறகு, சமைத்ததெல்லாம் நிறைய மீந்து போனதாம்! அதுவரை அடக்க ஒடுக்கமாக இருந்த மாப்பிள்ளை, தன்னுடைய ராவடியை ஆரம்பித்தானாம்! சமைத்து வைத்த உணவெல்லாம் மீந்து போய்விட்டது, உம்முடைய உறவினர்கள் எண்ணிக்கை அவ்வளவுதானா என்று கேட்ட மனையாளிடம், இரு ஒரு குட்டிப் பூதத்தை அனுப்புகிறேன், அவன் சாப்பிட்ட பிறகு மிச்சம் மீதி இருந்தால், அப்புறம் மற்றவர்களைக் கூப்பிடுவதைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு குண்டோதரன் என்ற ஒரு பூதத்தை அனுப்பி வைத்தானாம். குண்டோதரனும் சமைத்து வைத்திருந்த அத்தனை உணவையும் சாப்பிட்டு, பசி, இன்னும் வேண்டும், பசி இன்னும் வேண்டும் என்று அரிசி, காய்கறி இப்படி சமைப்பதற்கு வைத்திருந்த அத்தனையையும் சாப்பிட்ட வேகத்தைப் பார்த்து மீனாட்சியே பயந்து போனாளாம்! வீட்டுக்காரனுடன் கெஞ்ச, ராவடி மன்னனான சுந்தரேசப் பெருமானும் பசி அடக்கித் தாகத்தை உண்டு பண்ணினானாம்! தண்ணீர், தண்ணீர் என்று அலைந்தவனுக்கு, இதோ வை கை என்று சொல்லி, வைகை நதி உண்டாயிற்றாம்!
வையை என்னும் பொய்யாக் குலக்கொடி என்று மகிழ்ந்துகொள்கிறது திருவிளையாடற் புராணம்!வை கை என்று சொன்னதினாலோ என்னவோ கை நனைக்கிற அளவுக்குக் கூட வைகையில், பெரும்பாலான தருணங்களில் தண்ணீர் இருப்பதில்லை!
அம்மையும் அப்பனுமே ராவடி பண்ணிக் கொண்டிருந்தால் எப்படி? 
அடுத்து ஒரு'னா வர வேண்டாமா? இப்போது அம்மையும் அப்பனுமே அடக்கி வாசித்துக்கொண்டு அமைதியாக இருப்பதாகத் தான்தெரிகிறது! வேறு வழி?

ஆக, மதுரை என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது மூணு! அப்புறம் ராவடி! ஒரு ராவடியை அடக்க, அதற்குக் கொஞ்சம் அதிகமான ராவடி என்று அராத்தாக, ராவடியாக இப்படித் தொடர்ந்து இருப்பதே புராணம், பெருமை என்று இருக்கும் ஊரில் இருந்து எழுதும் போது ஒண்ணு, ரெண்டெல்லாம் பத்தாது!
அதனால தான் மூணு மூணா! போனால் போகிறது, இதை முன்னோட்டம் என்று சொல்லி விடாமல் மூணில் முதலாவது என்ற ஆறுதலான சேதியைச் சொல்லி விடுகிறேன்!
oooOooo



இந்தப்பதிவுக்கு சாம் என்ற இளம் பதிவர் வந்து பின்னூட்டமாக நிறையக் கேள்விகளை எழுப்பியிருந்தார். முக்கியமானது, காங்கிரஸ் கட்சியை ஊழலுக்குப் பேர் போனது என்று சொல்ல முடியுமா என்பது முதலாவது!

ஊழலை ஆரம்பித்து வைத்தது காங்கிரஸ் தான் என்பதில் எவருக்கும் எப்போதுமே சந்தேகமே இருந்ததில்லை!

ஊழல் செய்வதில் பகுத்தறிவுப் பூர்வமாக, உலக மகா டாக்டர் பட்டம் வாங்குகிற அளவுக்கு மாநிலக் கட்சிகள் வளர்ந்தாயிற்று! டாக்டரேட் நிறைய வாங்கிக் குவித்துக் கொண்டு தங்களுடைய முந்தைய சாதனையைத் தாங்களே முறியடித்துக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் என்ன இருந்தாலும், கிழடுதட்டிப் போனவர்கள் கட்சி இல்லையா, அவர்களும் டாக்டரேட் வாங்குவதில் மும்முரமாக போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். "கூட்டணி தர்மம்" என்றால் பின்னே வேறு என்ன அர்த்தம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

அடுத்து, பொருளாதாரத்தைத் தொட்டு,

"பொருளாதார மந்த நிலையில் பல நாடுகள் நம்முடைய வங்கி அமைப்பை பற்றியும், நம்மலுடய வளர்ச்சி (7.9) குறித்தும் ஆச்சரியம் அடைந்திருக்கே, இதை வைத்து பல நல்ல விஷயங்களும் நடந்திருக்கு அப்படின்னு சொல்லலாமா ?" என்றும் கேட்டிருக்கிறார்!

நம்முடைய வங்கி அமைப்பைப் பற்றி, சுருக்கமாகச் சொல்வதானால் ஒரு சினிமா செட் போல, வெறும் கலர் தட்டிகள், பின்னால் முட்டுக் கொடுத்து நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிற மாதிரி, ஜனங்களுடைய நம்பிக்கை என்பதை விட அறியாமையினால் மட்டுமே முட்டுக் கொடுத்து பப்பளப் பள பப்பளப்பளப் பப்பாளிப் பழமே ரேஞ்சுக்குத் தான் இருந்தன.
நரசிம்மராவ் காலத்தில், அப்போது மன்மோகன் சிங் ரிசர்வ் வங்கியின் கவர்னர், அப்போதில் இருந்து தொடரும் உலகமயமாக்கல், சந்தைப் பொருளாதாரத்தின் நிர்பந்தங்கள் என்று வேறு வழியில்லாமல், பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பச்சைக் கொடி காட்ட, இந்திய வங்கிகளும், சர்வதேச கணக்கிடும் தரத்திற்குப் படிப்படியாக உயர்ந்து வர ஆரம்பித்தன!  

வங்கிகள், அடுத்துக் காப்பீட்டுத் துறை என்று சீர்திருத்தங்கள் படிப்படியாக நடந்து கொண்டிருக்க வேண்டிய தருணத்தில், இடதுசாரி கட்சிகள் போட்ட முட்டுக்கட்டை கொஞ்ச நஞ்சமல்ல. அவர்கள் எச்சரிக்கை செய்த விஷயங்களில், ஏற்றுக் கொள்கிற மாதிரி சில அம்சங்கள் இருந்தாலும், ஒரு பயணம் மேற்கொள்ளும் தருணத்தில் 'ரோட்டில் காலடி எடுத்து வைக்காதே ஆக்சிடென்ட் ஆகிவிடும்' என்ற ரீதியில், முடக்கிப் போட்டதை இன்னமும் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர்களோடு கூட்டணி வைத்துக் கெட்ட பின்பு ஞானம் காங்கிரசுக்கு வந்திருக்கிறது! இடதுசாரிகள் செய்த வேலையை, மற்ற கூட்டணிக் கட்சிகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.



இந்த அரசியலில், குணமாகிக் கொண்டு வந்த வங்கித் துறை என்ன ஆயிற்று? பொருளாதார சீர்திருத்தங்கள் என்ன ஆயின, என்ன நிலைமையில் இருக்கிறது?

முனிசிபாலிடி, அல்லது கார்பரேஷனில் ரோடு போட்டுக் கொண்டே போவார்கள். தார் காய்ந்து இறுகுவதற்கு முன்னாலேயே, பின்னால் ஏதோ இன்னொரு துறை டெலிபோன் அல்லது குடிநீர் அல்லது சாக்கடை என்று தோண்டிக் கொண்டே வரும்! பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அதே மாதிரி, ரோடு போட்டதன் பலனை அனுபவிக்கவிடாமல், எப்படிக் குழிதோண்டிக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்களோ, அதே மாதிரி, சீர்திருத்தங்களில் குணமாகி வந்த வங்கித்துறையை, மறுபடி அரசியல் லாபங்களுக்காகப் பயன் படுத்துகிற போக்கு முன்னெப்போதையும் விட அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

வளர்ச்சி விகிதம் 7.9 % சாதனையா? டுபாக்கூரா?


முதலில் ஒரு அடிப்படையான விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கே அரசின் புள்ளி விவரத் துறை, அரசியல்வாதிகளைவிடக் கேவலமானதுஎந்த ஒரு புள்ளி விவரமும், சரியான முறையில் திரட்டப் படுவதில்லை, அப்படியே திரட்டினாலும், அவைகளைச் சரியான முறையில் ஆராய்ந்து, துல்லியமான முடிவுகள் கூட வேண்டாம், trends தெரியவரும் போக்கு என்ன என்பதைச் சொல்லக் கூட இந்தப் புள்ளிவிவர ராசாக்களுக்கு முடிவதில்லை.  

புள்ளி ராசாக்கள், புள்ளி அதிகரித்துக் கொண்டே போவதைச் சொன்னாலும், முடிவெடுக்க வேண்டிய அரசியல்வாதிகள், ஓட்டுக்கள் கூட கிடைக்குமா அல்லது குறைந்துவிடுமா என்ற ஒரே அளவுகோலை வைத்து மட்டுமே முடிவெடுப்பதால்என்ன நடக்கும் என்பதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்!

இந்த7.9% சரியான மதிப்பா இல்லையா என்பதை, அடுத்த காலாண்டு முடிவை ஒப்பிட்டுப் பார்த்துதான் சொல்ல முடியும். இன்னும் சுவாரசியமான தகவல்களோடு இங்கே பிசினெஸ் ஓர்ல்ட் வார இதழின் ஒரு கட்டுரையை படிக்க


oooOooo




புலிக்குக் கெட்ட நேரம் மல்டிபிளாகிக் கிட்டே போகிற நேரம் போல!

கோல் ஃ ப் சாம்பியன் டைகர் உட்ஸ் ஒரு கார் விபத்தில் சிக்கினாலும் சிக்கினார்! மனிதருடைய காதல் விவகாரம் ஒன்று, இரண்டு என்று இன்றைய நிலவரப்படி  ஒன்பதாவது காதலி பேட்டி கொடுக்கும் அளவுக்கு அமெரிக்காவில் பரபரப்புச் செய்தியாகிக் கொண்டிருக்கிறது!

போதாக்குறைக்கு, "புலியிடமிருந்து ஒபாமா கற்றுக் கொள்ள வேண்டிய பத்துக் குறிப்புக்கள்" என்ற அட்டைப்படம் போட்டு, ஒபாமாவுக்கு டைகர் உட்ஸ் கோல் ஃ ப் விளையாடக் கற்றுக் கொடுத்த குறிப்புக்கள் இப்போது, அனர்த்தமாக  கோல் ஃப் டைஜஸ்ட் என்ற பத்திரிகையின் ஜனவரி 2010 இதழின் அட்டைப்படமாக வெளியாகவிருக்கும் செய்தி, இப்போது புலி அடிமேல் அடி  வாங்கிக்கொண்டிருக்கும் நிலையில், டிசம்பர் எட்டாம் தேதிதான் இதழ் வெளிவரும் நாளாக இருந்த போதிலும், இப்போதே கடைகளுக்கு வந்து விட்டது. அட்டைப்படத்தை மாற்றப்போதில்லை என்று பத்திரிக்கை நிர்வாகம் அறிவித்திருக்கிறது. ஒபாமாவுக்கு பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் என்று இருக்கிற துயரம் போதாதென்று புலியுடனானநட்பு  வடிவத்திலும் வந்திருக்கிறது!



"I have not been true to my values and the behavior my family deserves.
"I have let my family down and I regret those transgressions with all of my heart. I am dealing with my behavior and personal failings behind closed doors with my family. Those feelings should be shared by us alone." 

இப்படித்தன்னுடைய இணையதளத்தில் வருத்தம் தெரிவிக்கிற நிலைக்கு நிலைமை முற்றிப்போனது.

'ஒரு குதிரையிடம் இருந்து டைகர் கற்றுக்கொள்ள வேண்டியது' என்று அவருடைய இணைய தளத்திலேயே விவாத அரங்கில் ஒரு விமரிசனம் வந்திருக்கிறது.

விமரிசனத்தையும் தாங்கிக் கொள்ளவேண்டிய, தாங்கி எதிர்கொள்கிற பக்குவம், முதிர்ச்சி அமெரிக்கர்களிடம் இருக்கிறது! நம்முடைய அரசியல்வாதி எவருக்காவது இந்த அளவு முறைந்தபட்ச நேர்மையாவது இருக்கிறதா?




6 comments:

  1. //ஆக, மதுரை என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது மூணு! அப்புறம் ராவடி! ஒரு ராவடியை அடக்க, அதற்குக் கொஞ்சம் அதிகமான ராவடி என்று அராத்தாக, ராவடியாக இப்படித் தொடர்ந்து இருப்பதே புராணம்,//

    உங்க ஊரில் ரவுடிகள் ராஜ்யம் அன்றும் இன்றும் என்றுமே !!!

    அவ்வ்வ்வ்

    ReplyDelete
  2. மதுரைக்காரர்கள் அராத்து அல்லது தெனாவட்டாக இப்படிக் கொஞ்சம் ஓவராகப் பேசுகிறவர்கள் மட்டுமே!
    மதுரையைச் சீரழித்துக் கொண்டிருக்கும் ஆசாமிகள் எல்லாம் இறக்குமதி செய்யப்பட்டவர்கள்!

    ReplyDelete
  3. //மதுரையைச் சீரழித்துக் கொண்டிருக்கும் ஆசாமிகள் எல்லாம் இறக்குமதி செய்யப்பட்டவர்கள்!//

    இது நல்லாயிருக்கே!

    மீனாட்சிக்கு மூணா!?
    ஆச்சர்யம்

    ReplyDelete
  4. வால்ஸ்!
    மீனாட்சிக்கு மூணு இருந்ததெல்லாம், சிறுபெண்ணாக அவள் ராவடி பண்ணிக் கொண்டிருந்த காலத்தில்! அவளை விடப் பெரிய ராவடியாகச் சொக்க நாதன் வந்தான்!அடங்கிப்போனாள்!

    இப்போது யார் யாரோவெல்லாம் வந்துபோய்க் கொண்டிருக்கிறார்கள்!

    ReplyDelete
  5. சொக்கனுக்கு எத்தனைன்னு சொல்லவேயில்லை!?

    ReplyDelete
  6. எண்ண மறந்து போயிட்டாங்களாம்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!