வாலு போயிக் கத்தி வந்தது...டும்..டும்..டும்!


"சேத்த பணத்தை சிக்கனமா,செலவு செய்ய பக்குவமா
அம்மா கையிலே கொடுத்துப்போடு செல்லக்கண்ணு
அவங்க..ஆறை..நூறு..ஆக்குவாங்க ..சின்னக்கண்ணு"

மருதகாசி எழுதிய இந்தப் பாடல், ஒரு காலத்தில் மிகவும் பிரபலம்! வாத்தியத்தின் இரைச்சலை மட்டுமே நம்பிய ரஹ்மான்களும், கவிதை எழுதத் தெரிந்துமே கொச்சையான வார்த்தை சப்தங்களில் பாட்டை நிரப்பிய வாலி, அப்புறம் அதையே trend ஆகி கொண்டு பிறரும் பிரபலமாவதற்கு முந்தைய காலம் வரை, வானொலியில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடலாக மக்களைப் பெற்ற மகராசி திரைப்படத்தில்  "மணப்பாறை மாடுகட்டி, மாயவரம் ஏறு பூட்டி" என்று ஆரம்பித்து, கே வி.மகாதேவன் இசையமைப்பில் டி எம் எஸ் பாடினது!

பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு என்று சங்க இலக்கியம் பேசிக் கொண்டிருந்த தமிழன் குத்துப் பாட்டு மட்டுமே கேட்பவனாக  மாறிப் போனான். அதனால் தானோ என்னவோ, இரண்டும் அதற்கு மேலும் தமிழர்கள் எங்கே கூடினாலும் "குத்தும்" "சண்டையும்" "வம்பளப்பும்" "வசவு நாறுவதும்" சேர்ந்தே வந்துவிடுகிறது! வலைப்பதிவுகள் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன!

இப்ப என்னவாம் அதுக்கு?

மேலே உள்ள வரிகளில், ஆறை  நூறு ஆக்குவாங்கன்னு ஒரு வார்த்தை வருது பாருங்க! அதுதான்! ஒரு நெல்மணி விதையாகி, நூறு, ஆயிரம் நெல் மணிகளைத்  தருவதுபோல, குடும்பத்தைக் கட்டிக் காக்கும் தாய், வளர்ச்சியைத் தருவாள் என்கிற பழைய கூட்டுக் குடும்பம், தாய்க்கு இருந்த மரியாதை இவைகளை, நமக்குத் தற்காலத்தில் மறந்தே போன பண்பாட்டு விழுமியங்களைச் சுட்டுவதான எளிமையான வார்த்தைகள்!

உள்ளதை விருத்தி செய்வது எப்படி என்பதை, இந்த வரிகளில் தெரிந்துகொள்ள முடிகிறது என்றால், வெறும் கையால் முழம் போட்டே, சந்திர மண்டலத்தையும் தாண்டிப் போய் அளக்கிற சாமர்த்தியம், நம்முடைய அரசியல் வாதிகளுடையது! வெறும் வார்த்தைகளிலேயே, வசனங்களிலேயே, எப்படி நம்மை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிழ்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது கூட நமக்குத் தெரிந்தாலும், நாம் ஒன்றுமே செய்வதாக இல்லை, காலம் தான் அதைக் கூடச் செய்தாக வேண்டியிருக்கிறது, இல்லையா?

போய்த் தொலையட்டும்! நான் இப்போது சிறந்த வசனகர்த்தா, வாய்ச்சவடால், வெற்றுவார்த்தை ஏகாம்பரம் யார் என்பதைத் தேடுவதற்காக ஒன்றும்  எழுத ஆரம்பிக்கவில்லை!

வங்கித்துறை, நிதித்துறையைப் பற்றி முன்னால் கொஞ்சம்  பேசினோம் இல்லையா ,  அப்படியே  கொஞ்சம் வங்கிகள் இயங்கும் விதத்தையும் சொன்னால் என்ன என்று தோன்றவே, இது, அவ்வளவுதான்!வங்கிகள் இயங்கும் விதம் என்னவென்றே, நம்மில் நிறையப் பேருக்குத் தெரிவதில்லை.

வங்கிகளைப் பற்றி,ஒரு கேலியான, ஆனால் சற்றேறக்குறைய சரியான விமரிசனம்  உண்டு!

" வங்கி எனப்படுவது யாதெனில், மழைபெய்யாத நேரத்தில் குடையை உங்களுக்கு இரவல் கொடுத்துவிட்டு, மழை பெய்கிற நேரத்தில், திரும்ப வாங்கிக் (பிடுங்கி ?) கொள்கிற புத்திசாலி!"

இதைப் புரிந்துகொண்டீர்களானால், ஐசிஐசிஐ வங்கியைப் பற்றிப் புகார்க் காண்டம், விஜய் டீவீயில்,  கோபிநாத் நடத்துகிற நீயா நானா நிகழ்ச்சியில் "நான் கல்விக்கடன் கேட்டுப் போனேன், என்னை உட்காரச் சொல்லக் கூட இல்லை" என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருக்க மாட்டீர்கள்! ஆடுற மாட்டை எப்படி ஆடிக் கறப்பது என்று கற்றுக் கொள்ளக் கூட வேண்டாம், பாய்ந்து வருகிற மாடு கொம்பினால் குத்திக் கிழிக்காமல் எப்படித் தப்பித்துக் கொள்வது என்பதையாவது குறைந்த பட்சமாகக் கற்றுக் கொள்ளலாம்!

முதலில், பணம் என்றால் என்ன? வங்கிகள் உருவானது எப்படி? இதைக் கொஞ்ச எழுதலாமே என்று நினைத்தபோது, இதுவும் ஒரு வகுப்பறையாக மாறிவிடக் கூடிய அபாயம் தெரிந்ததால் அல்லது வால் பையன்கள்  வந்து இதை ஐந்து அல்லது எட்டு அல்லது என்பது பதிவுகளாகப் போட்டிருக்கலாம் என்று எதிர்க் கிளாஸ் ஆரம்பித்துவிடுவார்களே என்று...! 

போன பதிவு கொஞ்சம் சிறிசாப் போச்சே, உடம்புக்கு முடியலையான்னு வந்து கேட்டிருக்கிறார்!





துபாய் எப்படிச் சீரழிந்தது என்பதைக் கொஞ்சம் நக்கலாக, இந்த வீடியோவில் பாருங்கள்! மடோன்னா துபாய்க்கு வந்து நிகழ்ச்சி நடத்த, நிமிடத்துக்கு எத்தனை பணம் அள்ளிக் கொட்டியிருக்கிறார்கள் என்பதோடு, ஆசிய நாடுகளில் இருந்து பிழைப்புக்காக வந்தவர்களின் அவலம் எல்லாவற்றையும், இந்தக் காசு படுத்தும் பாடு! இந்த  வீடியோ சென்ற வருடம் ஜூலை மாதம் முதலே  உலா வந்துகொண்டிருக்கிறது.




இந்த  முதல்  வீடியோ ஏதோ ஒரு திகில் படத்தைப் பார்க்க  வந்தமாதிரி, டைட்டில் கார்டுடன் ஆரம்பிக்கிறது. உலகத்தின் மிகப் பெரிய மனிதர்கள், அதிகாரத்தில் இருந்தவர்கள் கூட, அமெரிக்க வங்கிகள், நிதித்துறையைப் பற்றிப் பேச  அச்சம் கொள்ளும் அளவுக்கு மர்மம் நிறைந்ததாகச் சொல்லி ஆரம்பிக்கிறது. உண்மை தான்! அதற்கு முன்னால், வங்கிகள் உருவான விதம் பற்றித் தெரிந்து கொண்டால் தானே, அவை எப்படி பேராசை கொண்டவைகளாக, பேராசையால் உலகத்தையே பேரழிவுக்குத் தள்ளக் கூடியவைகளாக மாறின என்பதைப் புரிந்து கொள்ள முடியும்?

The Money Changers! வங்கிகள் செய்வது முக்கியமாக இது தான்! இதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், பழைய ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதோடு வேறு எண்ணிக்கையிலான நோட்டுக்களை வைத்து ஒப்பிட்டுப் பாருங்கள். ஒரு ரூபாய் தான், இந்திய அரசு வெளியிடும், அதிகாரப் பூர்வமான நாணயம். நிதித்துறைச் செயலாளர் கையொப்பத்தோடு இருக்கும். வேறெந்த நோட்டுக்களை எடுத்துக் கொண்டாலும், I promise to pay the bearer....என்று ஆரம்பித்து ரிசர்வ் வங்கி கவர்னர் கையொப்பத்துடன் இருக்கும் வங்கி நோட்டுக்கள்! Bank notes!  அந்த நாட்டின் மதிப்புக்குத் தகுந்த ஏதோ ஒன்றை.. தங்கம், வெள்ளி இப்படித் தருவதாக வாக்குறுதி! பிராமிசரி நோட்டுக்கள் அவ்வளவு தான்!





இப்படி வணிகத்துக்கு உதவியாக, நாணய மாற்றும் தொழிலாகவே ஆரம்பித்த வங்கித் தொழில், வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு காலங்களிலும் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால், இப்போது நாம் அறிந்திருக்கும் வடிவத்தில், ஒரு வங்கியாக இத்தாலியில் ஜெனோவா  நகரத்தில் 1407 ஆம் ஆண்டில் தான் தொடங்கப் பட்டது. Bank of St,George! பாங்கோ  என்ற இத்தாலிய வார்த்தையில் இருந்து தான் பான்க் என்ற வார்த்தை தோன்றியது. ஆனாலும், இந்தத் தொழிலை, முறைப்படுத்தி  சட்டங்கள் இயற்றியதெல்லாம் பிரிடிஷ்காரர்கள் தான்! அதுவுமே, பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த பழக்கங்களை அதிகம் மாற்றாமல், எழுத்தில் வடித்ததுதான்.


சட்டங்கள் மீறப்படுவதற்காகவே! இது தொழிற்புரட்சிக்குப் பின்னால், பிரிட்டன், பல தருணங்களில், பல விஷயங்களில் தன்னுடைய குணமாகவே தொடர்ந்து காண்பித்து வந்திருக்கிறது. பேசறதெல்லாம் இலக்கணமாப் பேசு எழுதும் போது கோட்டை விட்டுரு  என்று அல்ல! தங்களுடைய நலன்களுக்குத் தகுந்த மாதிரி சட்டங்கள் எழுதிக் கொண்டார்கள். ஆளுக்குத் தகுந்த மாதிரி, சட்டங்களும் வளைந்து கொடுப்பது, பிரிடிஷ்காரன் நமக்கு விட்டுப் போயிருக்கும் மிகப் பெரிய வியாதி!

இந்த இரண்டு வீடியோக்களில், சுருக்கமாகப் பிரச்சினை சொல்லப் பட்டிருக்கிறது. மொத்தம் ஐந்து பகுதிகளில் இரண்டை மட்டுமே தந்திருக்கிறேன். மீதி இருப்பதையும், இன்னும் கொஞ்ச விவரங்களைச் சொல்வதாக, ஏராளமாக இருக்கிறது.,யூட்யூபிலேயே தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்! ஆர்வம் இருப்பவர்கள் பார்த்துவிட்டு, எனக்குப் பின்னூட்டங்களில்,சொல்லுங்கள்!

Good Touch and Bad Touch!  இது பல மாதங்களுக்கு முன்னால் சென்னைப் பதிவர்கள் கூடி நடத்திய, கொஞ்சம் உருப்படியான முயற்சி!

The Good, the Bad and the Ugly! கிளின்ட் ஈஸ்ட்வுட்நடித்த இந்தப் படம் என்னுடைய அந்த நாளைய favourite!

வங்கிகளோடு வரவு செலவு வைத்துக் கொள்வதைக் கூட நல்லதென்றும், கெட்டதென்றும், பேரழிவுக்கு அச்சாரம் என்றும் மூன்று விதமாகச் சொல்லலாம்! அமெரிக்க நிதித் துறையில் சென்ற வருடம் ஏற்பட்ட சரிவு, பிரச்சினையின் மிகச் சிறிய பகுதிதான்! உடனடி லாபம் அதுவும் அதிகமாக என்ற வங்கி நிதித்துறை நிறுவனங்களின் பேராசையால் எழுந்தது!

The Money Changers!
 

ஆர்தர் ஹைலி எழுதிய நாவல்! இரண்டு நேர் எதிரான குணாதிசயங்கள் கொண்ட வங்கி நிர்வாகிகளை வைத்து, வங்கித் துறை எப்படி பேராசையால் இயங்குகிறது, தான் சேதப்படுவதுமல்லாமல், சுற்றி இருப்பவர்களையுமே நாசம் செய்கிறது என்பதை அழகாகச் சொன்ன புதினம்!கிடைத்தால் படித்துப் பாருங்கள்!

தொடர்ந்து பேசுவோம்!


9 comments:

  1. // நான் இப்போது சிறந்த வசனகர்த்தா, வாய்ச்சவடால், வெற்றுவார்த்தை ஏகாம்பரம் யார் என்பதைத் தேடுவதற்காக ஒன்றும் எழுத ஆரம்பிக்கவில்லை! //


    யார் சொன்னாலும் சொல்லாட்டியும் நீங்க சிறந்த வசனகர்த்தா தான்!
    சிம்பிள் மேட்டர, ஜவ்மிட்டாய் மாதிரி உங்களால் மட்டுமே இழுக்க முடியும்!

    ReplyDelete
  2. //" வங்கி எனப்படுவது யாதெனில், மழைபெய்யாத நேரத்தில் குடையை உங்களுக்கு இரவல் கொடுத்துவிட்டு, மழை பெய்கிற நேரத்தில், திரும்ப வாங்கிக் (பிடுங்கி ?) கொள்கிற புத்திசாலி!"//

    இது சாமான்யனுக்கு, முதலாளிகளுக்கு என்றுமே வங்கிகள் வாலாட்டும் குணம் கொண்டவை தான்!

    ReplyDelete
  3. //இதை ஐந்து அல்லது எட்டு அல்லது என்பது பதிவுகளாகப் போட்டிருக்கலாம் என்று எதிர்க் கிளாஸ் ஆரம்பித்துவிடுவார்//

    சந்தேகமில்லாமல் இம்மாதிரியான இடைசொருகல்களை தவிர்த்தால் மட்டுமே இது முழுமையான பதிவாகும்! மேக்கப் போடுவது போல், தேவையில்லாத விசயங்களை சேர்த்தால் சொல்லதான் செய்வார்கள், தைரியம் உள்ளவர்கள்!

    ReplyDelete
  4. //மடோன்னா துபாய்க்கு வந்து நிகழ்ச்சி நடத்த, நிமிடத்துக்கு எத்தனை பணம் அள்ளிக் கொட்டியிருக்கிறார்கள்//


    இந்த வருடம் யுவன்சங்கர்ராசா, ச்சீபட்டு திரும்பியதை குசும்பன் பதிவில் காணலாம்!

    ReplyDelete
  5. முழுமையடையவில்லை, ஆனா இதுக்கு இம்மாம் பெருசு!

    ஹரிதாஸ் மாதிரி படம் எடுக்க சரியான ஆள் நீங்கள், பத்து மணி நேரம் எடுக்க சொன்னாலும் எடுத்து தள்ளிடுவிங்க!

    ReplyDelete
  6. வால்ஸ், எப்பவும் போலத் "தாளிச்சுக்" கொட்டியிருக்கீங்க!

    முதல் இரண்டு தாளிப்புக்கும் பதில் எதுவுமே தேவையில்லை.
    இடைச் செருகல்கள் சரக்கோடு சோடா அல்லது கோலா மாதிரி எந்த அளவுக்கு மிக்ஸ் ஆனால் தாங்கும் அல்லது தாக்கும் என்பதை நாளைமறுநாள் நடக்க இருக்கும் ஈரோடு பதிவர் சந்திப்பில் ஒரு பயிற்சிப் பட்டறையாகவே நடத்தி, முடிந்தால் வலைப்பதிவிலும் ஏற்றி விடுங்கள்! பதிவர் சந்திப்புக்கு வரும் பதிவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள்!

    எழுதினதுதான் படிக்கவில்லை அல்லது பிடிக்கவில்லை! அந்த மூன்று வீடியோக்களும்...?

    முதல் வீடியோவில், 2007 நவம்பரில் மடோன்னா பாடவந்தபோது, அவருக்கு நிமிடத்திற்கு 1,33.333 அமெரிக்க டாலர்கள் சன்மானமாகக் காலடியில் கொட்டப்பட்டது முதல் துபாய் என்றால் பிரம்மாண்டம் என்பதோடு ஊதாரித்தனம் என்பதையும் பிரம்மாண்டமாகச் சேர்த்தே சொல்ல வேண்டும் என்பதை, ஆசிய நாடுகளில் பிழைப்புக்காக வருபவர்களது அவல நிலை எல்லாவற்றையும் தொட்டுச் சொன்னது.

    மதுரையில் நீண்ட நாட்களுக்கு முன்னால், சித்திரைப் பொருட்காட்சி என்றாலே, இன்னொரு பெயரும் நினைவுக்கு வரும்! காண்ட்ராக்ட் எடுத்து நடத்திய திரு. அப்துல் காதர்! இப்போது அரசு சார்பில் நடத்தப் படுவதை விட, அரங்கங்கள் சிறியதாக அல்லது கம்மியாக இருந்தாலும் தவறாமல் லாபம் பார்த்தவர். அதே மாதிரி, சில காண்ட்ராக்டர்கள் தான், இங்கேயிருந்து கலைச் சேவை செய்வதற்காக, நடிகர்கள், நடிகைகளை அழைத்துப் போகிறார்கள் என்பதும், அங்கே என்ன நடக்கிறது என்பதும் தெரிந்தது தான்! நா.பார்த்தசாரதி எழுதிய, சமுதாய வீதி கதையைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்!

    அடுத்த இரண்டு வீடியோக்கள், வங்கிப் பொருளாதாரத்தை, மிக எளிமையாகச் சொல்ல வந்த முயற்சி! இங்கே வங்கிகளில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கே கூடத் தெரியாத அடிப்படை விஷயங்களை என்ன லாவகமாகச் சொல்லியிருக்கிறார்கள்!

    நீளமோ, கம்மியோ, இந்தப் பக்கங்கள், படித்துவிட்டு மறந்து போய்விட வேண்டும், ச்சும்மா டைம் பாஸ் என்பவர்களுக்காக நிச்சயமாக இல்லை!

    அப்புறம், ஹரிதாஸ் படம் எல்லாம் கூடப் பார்த்திருக்கிறீர்களா என்ன?!

    ReplyDelete
  7. //அந்த மூன்று வீடியோக்களும்...?//

    லோடாகவில்லை!

    மேலும் அது எப்படியும் ஆங்கிலத்தில் தான் இருக்கப்போவுது, எனது மொழிபெயர்ப்பாளர் இன்று விடுமுறை!

    ReplyDelete
  8. //சித்திரைப் பொருட்காட்சி என்றாலே, இன்னொரு பெயரும் நினைவுக்கு வரும்! காண்ட்ராக்ட் எடுத்து நடத்திய திரு. அப்துல் காதர்! //

    அவரை எஅனக்கு தெரியும்,
    பத்துவருடங்களுக்கு முன்னாள், கம்பியூட்டர் ஜோஷியம் என்ற பெயரில் ஏமாற்றி பிழைத்திருக்கிறேன்!

    ReplyDelete
  9. //ஹரிதாஸ் படம் எல்லாம் கூடப் பார்த்திருக்கிறீர்களா என்ன?! //

    ஒருகாலத்தில் தூர்தர்ஷனில்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!