என்னத்தைப் படிச்சு...!

இன்றைய செய்திகளை வாசித்து, வாசித்து, ................பரிணாமம் இப்படித் திரும்பிவிடக்கூடாது!


படம் பார்த்துப் படிக்கும் பாடம்! ஆக்குவதற்கு அதிக நேரம்! அழிப்பதற்கு அரசியல்வாதியாக இருந்தாலே போதும்!

தெலங்கானா, காங்கிரஸ் அரசியலின் முதல் கோணல்! 

தெலங்கானா-மொழிவாரி மாகாணங்களாக 1956 இல் பிரிக்கப்பட்ட போது ஏற்பட்ட முதல் கோணல்!


தெலங்கானா என்பது தான் சரியானது என்றாலும் நடைமுறையில் தெலுங்கானா என்றே அழைக்கப் படுகிற இந்தப் பகுதியை பற்றிய  சில விஷயங்களை முந்தைய பதிவில் கொஞ்சம் தொட்டுப் பேசியிருந்தோம். தெலுங்கு, இங்கே சுத்தத் தெலுங்காக இல்லாமல், கொஞ்சம் உருது மொழியும் கலந்து இருக்கும். ஹைதராபாத் உட்பட பத்து மாவட்டங்களைக் கொண்ட இந்தப் பகுதி தற்போதைய ஆந்திர மாநிலத்தின்  42 சதவீத  நிலப்பரப்பைக் கொண்டது. மூன்றரைக் கோடி மக்கள், 119 சட்ட மன்றத்  தொகுதிகள் ,   17 பாராளுமன்ற தொகுதிகள் இருந்தும் கூட இன்னமும் பின்தங்கிய பகுதியாகவே இருக்கிறது. தெலுங்கும் உருதுவும் பேசும் மொழிகளாக இருக்கின்றன. கனிம வளங்கள் முதற்கொண்டு கிருஷ்ணா, கோதாவரி நதிகள் இதன் வழியாகப் பாய்ந்தாலும், தண்ணீருக்காகவும் மின்சாரம் உள்ளிட்ட எல்லா விஷயங்களுக்குமே ஆந்திராவை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய பரிதாபம். 1947 இல் சுதந்திரம் அடைந்து, ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப் பட்டபோது கூட தெலங்கானா தனி பிரதேசமாகத் தான் இருந்தது. நிஜாம்  ஆட்சியில் நடந்த ஒரே உருப்படியான விஷயம், தெலங்கானா பகுதிக்குட்பட்ட ஹைதராபாத் நகரத்தை நன்கு அபிவிருத்தி செய்தது மட்டுமே! இன்றைக்கு ஹைடெக் நகரமாக வளர்ந்திருந்த போதிலும், தெலங்கானா மக்களுக்கு எந்தப் பிரயோஜனமும்இல்லை. .

1956 இல் மொழிவாரி மாகாணங்கள் என்று பிரிக்கப்பட்டபோது, அதுவரை தனியாகவே இருந்து தொடர்ந்தும்  தனியாகவே இருக்க விரும்பிய தெலங்கானா மக்களுக்கு ஏராளமான, சலுகைகள், வாக்குறுதிகளைக் கொடுத்து, ஆந்திரா, ராயலசீமா பகுதிகளோடு இணைத்துப் புதிய ஆந்திர மாநிலம் உருவானது.

வாக்குறுதிகள்? சலுகைகள்? தேர்தல் வாக்குறுதிகளைப் போலவே, கொடுக்கப்பட்ட உறுதி மொழிகள் அத்தனையும் காற்றில் பறக்க விடப்பட்டன.

தெலங்கானா பகுதிகளில் மட்டுமல்ல, எல்லைப்புற மாகாணங்களிலும், பழங்குடி மக்களிடம், அவர்களிடமிருந்த நிலத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களுடைய வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் எதுவுமே செய்யாத காங்கிரஸ் அரசின் மெத்தனம், வெவ்வேறு கோளாறுகளாக , இன்றைக்குத் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக வளர்ந்து நிற்கிறது.

முற்றும் கோணலாக்காமல் விட மாட்டார்கள் போல இருக்கிறது.

மாநிலங்கள் சிறிதாக இருப்பதால் என்ன நன்மை, சமீபத்தில் பிரிக்கப்பட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகளைத் தவிர  வேறு எந்த வளர்ச்சியுமே இல்லை என்கிற மாதிரி கிழக்கு பத்ரி ஒரு பதிவு எழுதியிருப்பதை  இன்று தான் படித்தேன். உண்மையான பிரச்சினை,  மாநிலங்களை, மாவட்டங்களைப் பிரிப்பதிலோ, பெரிது-சிறிது, நிர்வாக வசதி என்பதில் எல்லாம் இல்லை.  தீர்க்கப்படாத பிரச்சினைகள் முற்றி, இப்போது மென்னியை முறித்துக் கொண்டிருக்கின்றன.

தொடர்ந்து புறக்கணிக்கப் பட்டு வரும் மக்களுடைய பிரச்சினைகள்! அதைப் பற்றிப் பேசுவதற்கு யாரையும் காணோம்!

"எனவே தெலுங்கானா மக்கள் தனி மாநிலம் கேட்டுப் போராடுவது நல்லதல்ல என்று தோன்றுகிறது. மாறாக, அவர்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்கச்சொல்லி சோனியா காந்தியின் கால்களில் விழலாம்"  என்று பத்ரி எழுதியிருக்கிறார்!

அபத்தமாக இருப்பதில் அரசியல்வாதிகளுக்குப் போட்டியாகப் பதிவர்கள் உருவாகி வருவதை நினைத்துத் தலையில் அடித்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
 


அட! காந்தி கடைப்பிடித்த உண்ணாவிரதப் போராட்டத்தின் சக்தி காங்கிரஸ் எம் பிக்களுக்குக் கூடத் தெரிந்து விட்டதே! இங்கே பாருங்கள் ஒரு காங்கிரஸ் எம் பி தேசத்தை ஒன்றுபடுத்துங்கள்! பிளக்காதீர்கள் என்று உண்ணாவிரதம் இருக்கப் போனாராம்!

நல்லவேளை!உண்ணாவிரதம் இருந்து தமது  எதிர்ப்பைத் தெரிவிக்க முயல்பவர்களை நக்கலடித்து உண்ணும் விரதம் இருந்து வெறுப்பேற்றுகிற, கொச்சைப்படுத்துகிற  நம்மூர்க் கழகங்களின் பண்பாடு, மனவாடுகளிடம் இன்னமும் பரவவில்லை என்று நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்!

காங்கிரஸ்! கட்சியும் ஆட்சியும்! இன்னும் எத்தனை நாட்கள் தாங்கும்?


6 comments:

  1. தெலங்கானாக் காரர் முதல்வராக வருவதும் உபயோகமில்லை...தனி மாநிலமாகப் பிரிப்பதும் தவறு...அப்படியே விட்டாலும் கஷ்டம்....காங்கிரஸ் இல்லாமல் வேறு கட்சி வந்தாலும் பிரச்னை ஒன்றுதான்...என்னதான் செய்ய முடியும்?

    ReplyDelete
  2. Not clear - whether you support formation of Telengana as a separate state or keeping the current AP intact as such. For me, further divisions of a(ny) state looks unnecessary.

    ReplyDelete
  3. கௌதமன் சார், ஸ்ரீராம் இரண்டு பேருமே ஒரே கேள்வியைத் தான் மாற்றிக் கேட்டிருக்கிறீர்கள்!

    ஹைதராபாத் இந்தியாவோடு இணைக்கப்பட்டபோது, தெலுங்கானாப் பகுதி தனியாகத் தான் இருந்தது. விசாலாந்திரா என்ற பெயரில், ஏகப்பட்ட சலுகைகள், வாக்குறுதிகளைக் கொடுத்துத் தான், தெலுங்கானா மக்களுடைய விருப்பத்தையும் மீறி, 1956 இல் இணைக்கப்பட்டதை நீங்கள் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை. நிஜாம் ஆட்சியில் அந்த மக்கள் ஏகத்துக்கும் சுரண்டப்பட்டு, எதிர்த்துப் போராடின கதையை, முந்தைய பதிவில் கொஞ்சம் கோடிட்டுச் சொல்லியிருந்தேன், அதையுமே படிக்கவில்லை என்றுநினைக்கிறேன்.

    மாநிலங்களைப் பிரிப்பதா, அல்லது ஒற்றுமை என்ற பெயரில் உள்ளே நடக்கும் அழிச்சாட்டியங்களைக் கோணிச் சாக்குக்குள் கட்டி வைத்து, இல்லவே இல்லை என்று மறைத்துவிடுவதா என்பது, என்னுடைய விருப்பம் அல்லது உங்களுடைய ஆசை போல நடந்து விடுகிற விஷயமும் இல்லை.

    /உண்மையான பிரச்சினை, மாநிலங்களை, மாவட்டங்களைப் பிரிப்பதிலோ, பெரிது-சிறிது, நிர்வாக வசதி என்பதில் எல்லாம் இல்லை. தீர்க்கப்படாத பிரச்சினைகள் முற்றி, இப்போது மென்னியை முறித்துக் கொண்டிருக்கின்றன./
    என்று சொல்லியிருக்கிறேனே, கவனிக்கவில்லையா?

    தெலுங்கானா மட்டுமல்ல, இந்தியாவை நவீனப் படுத்துகிறேன் பேர்வழி என்று சோஷலிசக் கனவுகளோடு, ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகால் என்று கிராமப் புறங்களைப் புறக்கணிக்கிற போக்கு நேரு காலத்தில் இருந்தே தொடங்கி விட்டது. பிரச்சினைக்குத் தீர்வு உண்மையிலேயே தனி மாநிலம், அல்லது கொஞ்சம் சலுகைகள் அல்ல. கிராமங்களை உயிர்ப்பிக்க வேண்டும். கிராமங்களுக்கும் நகரங்களுக்கு இடையிலான பொருளாதார இடைவெளி அதிகரித்துக் கொண்டே போவதன் சுமையை, கிராமங்களே அனுபவித்து வருகின்ற நிலைமையை மாற்ற வேண்டும்.

    ReplyDelete
  4. படமும், காணொளியும் நல்லா இருக்கு பாஸ்.

    தனித்தெலுங்கானா 50, 60 வருடக் கோரிக்கையென்றாலும் அதன் முன்னேற்றத்திற்கு எந்த வகையில் உதவும் என்பது கேள்விக்குறிதான்.

    (நீங்க ஃபாண்ட் கொஞ்சம் மாத்திப் பாருங்களேன். படிப்பதற்கு இன்னும் கொஞ்சம் அழகாக)

    ReplyDelete
  5. ஏற்கனவே அது தனியா தான் இருந்ததா?

    காலை ஜீ தொலைகாட்சியில் பிரிச்சி மேஞ்சிகிட்டு இருந்தாங்க!

    ReplyDelete
  6. நவாஸுதீன்!

    எழுத்துரு, அப்புறம் வால்பையன் அடிக்கடிக் குற்றம் சாட்டுகிற நீளம் எல்லாவற்றையுமே ஒவ்வொன்றாக மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன்.

    வால்ஸ்!
    இப்போதிருக்கும் ஆந்திரா, சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலத்தில் அப்படியே இருக்கவில்லை. ஹைதராபாத் சமஸ்தானம் தனியாக, கடலோர ஆந்திரா என்று தனித்தனியாகத் தான் இருந்தன. மொழிவாரி மாநிநிலங்களாக முதலில் பிரிக்கப்பட்டது ஆந்திரா தான்! அப்போது ஏற்பட்ட முதல் கோணல், இன்னூம் தொடர்கிறது.

    கௌதமன் சார்,
    என்னுடைய கருத்தாகச் சொல்வதற்கு இதில் எதுவுமே இல்லை, ஆனாலும் காய்ச்சல் என்பது நோயின் அறிகுறியே தவிர அதுவே நோய் அல்ல என்பதையும், நோய்க்கு மருந்து கொடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவது மட்டுமே பதிவின் மையக் கருத்தாக இருக்கிறது. தெலுங்கானா மக்களின், நியாயமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முற்பட்டால், காய்ச்சல் சரியாகி விடும்.இப்போது நான் சொல்ல வருவது தெளிவாகஇருக்கிறதா?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!