எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?


img233.imageshack.us/img233/7310/0564993001247503819.gif

அசைபோடுவது சிலநேரங்களில், மிக நல்லது! 

கொஞ்சம் நிதானிக்கவும், இதுவரை என்ன செய்துகொண்டிருக்கிறோம், என்ன செய்ய எண்ணம் கொண்டிருக்கிறோம், எப்படிச் செய்யப் போகிறோம் என்பதை, கடந்த அனுபவங்களில் கற்றுக்கொண்டதில் இருந்து முடிவு செய்கிற தருணமாக ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு பிறக்கும் நாள் இருப்பது உண்டு!

ஒவ்வொரு புத்தாண்டுக்கும் தான் எத்தனை தீர்மானங்கள்!?

நாட்கள், வாரங்கள், மதங்கள் எனவோடி, வருடமும் முடியப்போகிற தருணமும் விரைந்து நெருங்குகிறது. கடந்துபோன புத்தாண்டுப் பிறப்பில் என்னென்ன தீர்மானங்களை எடுத்துக் கொண்டோம், அதில் எத்தனை நிறைவேறியிருக்கிறது, எந்த அளவு நிறைவேறியிருக்கிறது என்பதை நினைவு படுத்திக் கொள்கிற தருணமாக, இந்த இரவுப்பொழுது இருக்கிறது.

"வருடம் முடியப் போகும் தருணத்தில், கடந்து வந்த பாதையை, நடத்த நினைத்து ஆனால் நடக்காமல் போன குறிக்கோள்களை, எங்கு செல்ல நினைத்து எங்கு வந்து நிற்கிறோம் என்கிற மாதிரியான சுய அலசல்கள், ஆராய்ச்சிகள், விமரிசனங்கள் எல்லாம், கிளம்புகிற தருணம் இது. ஆர்வக் கோளாறில் கிளம்புகிற இத்தகைய சுயவிமரிசனங்கள் எல்லாம், கிளம்பின வேகத்திலேயே அடங்கிப் போவது, நம்முடைய தேசியக் கலாச்சாரம், பின்னே இல்லையா!

ஒவ்வொருவரும் ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்கும் போது,எதையோ எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஒரு பொதுவான நோக்கத்தில் தான் ஆரம்பிக்கிறோம்..

ஆனாலும், இந்த வலைப்பதிவுகளில் முக்கியமான விஷயம், நான் யார், இங்கு என்ன செய்கிறேன், நான் செய்ய வேண்டிய கடமை என்ன என்பது தான்! ஒரு சிறு வெளிச்சக் கீற்றாகவாவது, எவருக்கேனும் இது உதவக்கூடும் என்பது தான் என் நம்பிக்கை. தமிழில் எழுத வேண்டும் என்பது வலைப் பதிவு தொடங்கிய நாளிலிருந்தே எனக்குள்ளிருந்த தாகம். அதற்கும், இப்போது தான் நேரம் வந்திருக்கிறது..




நம்முடைய பலவீனங்களும், தோல்விகளும் கூட நமக்குப் பேருதவியாக இருக்க முடியும் என்று ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார். நாம் எதிர் கொள்ளும் மிக மோசமான சூழ்நிலைகள் கூட, நமக்குள்ளிருக்கும் பலவீனத்தை, இருண்ட பகுதியை எப்படி எதிர்கொள்ள வேண்டும், வெல்ல வேண்டும் என்பதை எடுத்துச்சொல்லும் என்கிறார்."

இது சென்ற வருடக் கடைசியில் எழுதிய பதிவில் இருந்து ஒரு பகுதி!

என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதும், எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதும் பயணத்தின் தவிர்க்க முடியாத இரு கேள்விகள்!


"இந்தப்பக்கங்கள் எவை குறித்தவையாக இருக்க வேண்டும் என்பதில் இன்னமும் ஒரு தீர்மானமான முடிவுக்கு வரவில்லை. காரணம், என்ன வகையிலான விருப்பத் தேர்வுகளுடன் இருப்பவர்கள் இந்தப்பக்கங்களைப் படிக்கிறார்கள் என்பதில் சரியான புரிதல் இன்னமும் கிடைக்கவில்லை.
இது ஒரு பெரிய காரணம் இல்லை.

என்ன மாதிரியான வாசகர்கள் எனக்கு வேண்டும் என்பதைக் குறி வைத்து நான் எழுத ஆரம்பிக்கவில்லை, என்பதே முக்கியமான காரணமாக எனக்குப் படுகிறது. அடுத்து, பதிவுகளின் நீளம்!உண்மைத் தமிழனோடு போட்டி போட்டுக் கொண்டு மிகவும் நீளமான பதிவுகளை எழுதுவதாக ஏற்கெனெவே வால் பையனும், டம்பி மேவீயும் பின்னூட்டப்பெட்டியையே புகார்ப் பெட்டியாகவும் மாற்றி விட்டார்கள்!

படிக்க வருகிறவர்கள், தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிற தருணங்களில் இது மாதிரியான குழப்பங்கள் ஏற்படுவதில்லை. ஃபாலொயெர்ஸ் என்று இங்கே ஒரு நட்பு வட்டம் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. அவர்களுடைய எண்ண ஓட்டங்களைக் கூட அறிந்து கொள்ள முடிவதில்லை. அவர்களுடைய பதிவுகளிலுமே கூட அதற்குச் சரியான க்ளூ கிடைக்கவில்லை! "




இதுவுமே கூட சில நாட்களுக்கு முன்னால் இந்த அடிப்படைக் கேள்விகளை முன்வைத்தே எழுதியது தான்! என்ன காரணத்தினாலோ, இங்கே படிக்க வரும் நண்பர்கள், தங்கள் மனதில் எழுந்த விமரிசனத்தைப் பகிர்ந்து கொள்ள முன்வரவில்லை.

இந்தப் பக்கங்களைக் குறித்த உங்களுடைய விமரிசனங்களை வரவேற்கிறேன்!



5 comments:

  1. அடுத்து, பதிவுகளின் நீளம்!உண்மைத் தமிழனோடு போட்டி போட்டுக் கொண்டு மிகவும் நீளமான பதிவுகளை எழுதுவதாக//

    இருவரின் கருத்தை மனதில் வையுங்கள், அதற்காக பதிவின் நீளம் அதன் உள்ளடக்கத்தைப் பொறுத்து அதுவே அமையும், இரண்டு பதிவுகளாக பிரிக்க முடியுமானாலும் செய்யுங்கள்


    //படிக்க வருகிறவர்கள், தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிற தருணங்களில் இது மாதிரியான குழப்பங்கள் ஏற்படுவதில்லை. ஃபாலொயெர்ஸ் என்று இங்கே ஒரு நட்பு வட்டம் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. அவர்களுடைய எண்ண ஓட்டங்களைக் கூட அறிந்து கொள்ள முடிவதில்லை. அவர்களுடைய பதிவுகளிலுமே கூட அதற்குச் சரியான க்ளூ கிடைக்கவில்லை! "//

    உங்களது மனதில் தோன்றும் எதையும் பதிவு செய்யுங்கள், க்ளூ கிடைத்தால் அதற்கேற்ப இடுகை இடலாம். இல்லாவிட்டால் நம் கடமை இது என நம் வேலையைச் செய்வோம்.

    இந்த மனநிலை எனக்கும் தோன்றியது. ஒருவேளை நாம் கொடுக்கும் விசயங்கள் மற்றவர்களுக்கு தேவை இல்லாததாக கூட இருக்கலாம். ஒரு சிலருக்கு மிகவும் பயன்படலாம்.


    அந்த ஒரு சிலருக்காகவேனும் நாம் உழைக்க வேண்டியதாக இருக்கிறது...

    ReplyDelete
  2. ////நம்முடைய பலவீனங்களும், தோல்விகளும் கூட நமக்குப் பேருதவியாக இருக்க முடியும் என்று ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார். நாம் எதிர் கொள்ளும் மிக மோசமான சூழ்நிலைகள் கூட, நமக்குள்ளிருக்கும் பலவீனத்தை, இருண்ட பகுதியை எப்படி எதிர்கொள்ள வேண்டும், வெல்ல வேண்டும் என்பதை எடுத்துச்சொல்லும் என்கிறார்." ////

    மிகச்சரியான கருத்து. எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டும் எனபதைவிட உணர்ந்துகொள்ளவேண்டும்.

    ReplyDelete
  3. செய்ய வேண்டும் என்று நினைத்தவற்றை செய்து முடித்திருக்க வேண்டும் என்பதில்லை. அதை நோக்கி முதல் அடி எடுத்து வைத்திருந்தாலே போதும். ஒரு முன்னேற்றம்..அவ்வளவுதான்..
    மற்றவர்கள் நினைப்பதை நாம் எழுத வேண்டும் என்று நினைத்தால் யார் என்னென்ன நினைக்கிறார்கள் என்று தெரியாது..நாம் என்ன எழுத நினைத்தோம் என்பதும் போய் விடும். எல்லோருக்கும் ஒரு பார்வை இருக்கிறது...அந்தப் பார்வையை மற்றவர்கள் எப்படி எடுக்கிறார்கள் என்பதை இந்த வலையுலகப் பதிவுகள் மூலம் அறிகிறோம். புதிய நட்புகள் கிடைக்கின்றன...விஞ்ஞான வளர்ச்சியின் அற்புதம்.

    ReplyDelete
  4. இப்போதெல்லாம் அசை போடுவதற்கே நேரம் இல்லாததைப் போல் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. நிறைய படிக்க வேண்டும், படித்ததில் என்ன புரிந்ததோ அதனை எழுத வேண்டும் என்ற வெறியுடன் வாழ்க்கை செல்வது போன்றும் தோன்றுகிறது. களைப்பாக இருக்கிறது. எழுதுவதைக் குறைத்தாகிவிட்டது. படிப்பதையும் குறைக்க வேண்டும். அசை போட்டு உள்ளே நிலை பெற செய்யாமல் படித்துக் கொண்டே போவதால் என்ன தான் பயன் கிட்டும்?!

    (உண்மையைச் சொல்லிவிடுகிறேன். இடுகையைப் படிக்கவில்லை. தலைப்பை மட்டுமே தான் படித்திருக்கிறேன். இடுகையைப் படிப்பேனா என்று தெரியவில்லை. தலைப்பையும் முதல் வரிகளையும் படித்த உடன் தோன்றிய எண்ணங்களைச் சொல்லத் தோன்றியது. சொன்னேன். )

    ReplyDelete
  5. What is this life, if full of care
    We have no time to stand and stare

    இப்படி ஒரு ஆங்கிலக் கவிதையைப் பாடமாகப் பள்ளி நாட்களில் படித்ததுண்டு.
    படிப்பது எழுதுவதும் மனித வாழ்க்கையின் ஒரு சிறு பகுதிதான். ஆனால் இன்றைய வயிற்றுப்பாட்டுக்காக இயங்குகிற உலகம், அத்தனை ருசியையும் மரத்துச் செய்து விடுகிற தருணங்களும் உண்மைதான். அவ்வப்[போது வருகிற விரக்தி! ஒருஅலுப்பு!

    அசைபோடுவதும், உள்ளே நிலை பெறச் செய்வதும் நம்முடைய ஸ்வாதந்தர்யத்தில் இல்லை.கண்ணதாசன் பாட்டில் சொன்ன படி ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா என்றபடி தான் உண்மைஇருக்கிறது.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!