சண்டேன்னா மூணு! கதை கேளு! கதைகேளு!

சந்தேகம் இல்லே! சந்தேகம் இல்லே! உண்மையான வளர்ச்சி எதில் என்றால்........!


2009 இன் சந்தேகமே இல்லாத வளர்ச்சி எதில் என்று பார்த்தால், சோஷல் நெட்வொர்க் என்று சொல்லப்படும் இணையம் வழி வளரும் தொடர்புகள் தான்! கணினி அறிவு இருப்பவர்கள் தான் பங்குகொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி, இன்றைக்கு  கணினிக் கைநாட்டான நான் கூடப் பதிவுகள் எழுதிக் குவிக்கிற அளவுக்கு, அதுவும் என் தாய் மொழியிலேயே என்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறது!

ட்விட்டர்,  ஃபேஸ்புக் என்று தொடர்ச்சியாகப் புதுப் புது வடிவங்களோடு, இத்தகைய சமூகத் தொடர்புகள் வளர்ந்து கொண்டிருப்பதைப் பற்றிய செய்திக் கட்டுரை இங்கே!  

இணையம் ஒரு பரந்தவெளி! இந்தப் பரந்தவெளியில், எந்த அளவுக்குப் பரந்த மனதோடு, மாற்றுக் கருத்து இருந்தாலுமே அதையும் மிக நாகரீகமாக மறுத்துச் சொல்வதிலும், அடுத்தவர் சிந்தனையோட்டத்தைப் புரிந்துகொள்ளவும், இணையம் வழி வளரும் தொடர்புகள், இணையம் வழி வரும் உறவுகளாகவுமே மாறுவதில் நமக்கும்பொறுப்பிருக்கிறது.

பதிவர் உண்மைத்தமிழனுக்கு அவரது வலைப் பதிவுகள் மீண்டும் கிடைத்து விட்டன. ஆனாலும், இந்த மாதிரி அனுபவத்தில் சுட்டுக் கொண்ட பிறகுதான் ஞானியாக வேண்டும் என்பதில்லையே! இந்த மாதிரிக் கணக்குகள் முடக்கப் படுவது, திரும்பப் பெறுவது ஒரு ரகம் என்றால், யாரோ ஒருவர் உங்களுடைய கணக்கை ஹாக் செய்வது,  அந்தரங்க விஷயங்கள், படங்கள், வங்கிக் கணக்குகள் முதலானவற்றைத் திருடுவதுமே அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருப்பது தான்.

உங்களுடைய கூகிள் பயனர் கணக்கை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பதை இங்கே பார்க்கலாம்! 


பரந்த மனதோடு, அடுத்தவரைப் புரிந்துகொள்ள முடியாவிட்டால் கூடப் பரவாயில்லை, மனம் நோகும் படி பின்னூட்டங்களோ, விமரிசனங்களோ இல்லாதபடி  பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால், உற்சாகப் படுத்துகிற வார்த்தைகளை எழுதுங்கள்!  இதை எழுதும் போது என் முகத்தை, மின்னெழுத்துக்களால் ஆன மாயக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டே தான், எனக்காகவுமேஎழுதுகிறேன்! 


பரந்த மின்வெளியில் பாதுகாப்புடன் புத்தாண்டைத் தொடங்குங்கள்!
 oooOooo


 இந்தப் பக்கங்களில் கொஞ்சம் அரசியல், பொருளாதாரம், மேலாண்மை, நிர்வாகம், தலைமைப் பண்பு என்று பல தலைப்புக்களிலும் பேசியிருக்கிறோம்! எல்லாவற்றிலுமே ஒரே ஒரு அடிப்படைக் கேள்வி தான்! ஆதார சுருதியாக இருப்பதைப் படிக்க வருகிறவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்!

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பது தெரிந்தால் தான், எதற்காகப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பது லட்சியமாக, இப்போதிருப்பதை விட அடுத்த வளர்ச்சிக்கு இருப்பதே புரிய வரும்! எங்கே போக வேண்டும் என்பதில் கவனம், எப்படிப் போக வேண்டும் என்பதில் தெளிவு, தொடர்ந்து வரும்!

இல்லையென்றால், போன பதிவில் சொன்ன மாதிரி,

"உங்களுக்கு நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை, எங்கே போகவேண்டும் என்பது கூடத் தெரியவில்லை! ஆனால், நான் உங்களுக்காக அதைத் தெரிந்து சொல்ல வேண்டுமென்று  நினைக்கிறீர்கள்! என்னை பார்ப்பதற்கு முன்னால் என்ன நிலையில், தெளிவில்லாமல் இருந்தீர்களோ அதே நிலையில் தான் இப்போதும் இருக்கிறீர்கள். ஆனால், குறை சொல்வதற்கு ஒரு ஆள் கிடைத்தவுடன், என் மேல் குற்றம் சொல்கிறீர்கள் பாருங்கள் அதிலிருந்து தான் !"  என்றாகிவிடக் கூடும்!

என்ன நினைக்கிறீர்கள் என்பதை, நீங்கள் தான் சொல்ல வேண்டும்! சொல்வீர்கள்தானே?

 oooOooo

கதை கேளு! கதை கேளு!

மைகேல் மதன காமராஜன் படத்தில், டைட்டில் பாட்டிலேயே, முன்கதைச் சுருக்கத்தை சொல்லுகிற டெக்னிக் நினைவிருக்கிறதா? குறைந்தபட்சம் அந்த டெக்னிக்? ஐம்பதிலும் ஆசை வரும் என்று கூட ஒரு பாட்டு உண்டு! எண்பதைத் தாண்டிவிட்டால் ஏத்தம் வரும் போல! எண்பதைத் தாண்டி  ஏத்தத்தோடு அலைந்த ஒருத்தர் வேறு வழியில்லாமல், பதவியில் இருந்து ராஜினாமாசெய்திருக்கிறார்!

தெலுங்கானா விஷயத்தில்,ஆந்திரா பற்றி எரிந்து கொண்டிருக்கும்  நேரத்தில், ஆந்திர மாநில ஆளுநர் என் டி திவாரி பாவம் ரொம்பவே  "காய்ந்து" போயிருப்பார் போல! காய்ந்ததைக் கொஞ்சம் குளுமைப் படுத்திக் கொள்ள, என்னமோ செய்யப் போக அது என்னமோ ஆகிவிட்டது! மூன்று முறை உத்தரப் பிரதேச முதலமைச்சராக இருந்தவர்! உத்தராகண்ட் மாநிலம் அமைக்கப்பட்ட போது அதன் முதல் முதல் அமைச்சர்! பாராளுமன்றங்களின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருந்திருக்கிறார்! மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார். ராஜீவ் காந்திக்குப் பின்னால், பிரதமர்  பதவிக்குக் கூட காங்கிரஸ் கட்சியின்  வேட்பாளராக முன்னிலையில் இருந்து, எப்படியோ நரசிம்ம ராவிடம் வாய்ப்பைஇழந்தவர்!

காங்கிரஸ் கலாச்சாரப்படி,  அடிமை விசுவாசி என்றால் வீட்டுக்கு அனுப்பவேண்டிய கிழடுகளுக்கும் உற்சாக டானிக், கவர்னர் பதவி தருவது! ரொம்ப வயதாகி விட்டது என்ற காரணத்தைக் காட்டி,  2006 இல் ஒய்வு பெற விரும்பினாராம்! அடுத்த வருடமே காங்கிரஸ் அவரை ஆந்திர மாநிலத்தின் கவர்னராக்கி அழகு பார்த்தது! 

மானோடும் மயிலோடும்  ஓவராக ஆடினார் என்று வீடியோ ஆதாரங்களுடன் ABN செய்திச் சானலில் செய்தியை போட, கவர்னர் தரப்பு வேக வேகமாக மறுத்துப் பார்த்தது, நீதிமன்றத்திலும் வீடியோவை ஒளிபரப்புவதற்குத் தடை உத்தரவும் வாங்கி நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கு முன்னாலேயே ஆர்ப்பாட்டங்கள் அது இது என்று கிளம்பவே, மேலிடம் கழற்றி விட முடிவு செய்து விட்டது.. இன்றைக்கு யூட்யூபில் சூப்பர் ஹீரோ யார் என்று பார்த்தால்  என் டி திவாரி தான்! கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்!  சுமார் எட்டு நிமிடங்கள் தான்! என்ன நக்கல்!


ஆல் இன் ஆல் அழகு ராஜா!  கதையை அருமையான பாடலோடு சொல்லியிருக்கும் இந்த வீடியோவை வலையேற்றம் செய்திருப்பவரைப் பாராட்டியே ஆகவேண்டும்! ஐயே! வேறு வில்லங்கமான பிட்டுப் படம் இருக்கும் என்று நினைத்து ஏமாந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை!

ஞாயிற்றுக் கிழமை காலை, இப்படி அமர்க்களமான காமெடியோடு, இந்த வாரம் சண்டேன்னா மூணு!

அப்புறம், காங்கிரஸ் கட்சிக்கு இது 125 ஆவது ஆண்டு! 2009-2010 ஒரு ஆண்டு முழுவதும் விழா எடுத்து, காங்கிரஸ் கட்சியின் அருமை பெருமைகளைச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் திட்டங்கள் வைத்திருந்தார்கள். பாவம்! நம்மூர் அரசியல் வித்தகர் பானா சீனா கொளுத்தி போட்ட ஒரு அறிவிப்பில் ஆந்திரா கொழுந்து விட்டு எரிகிறது! பானா சீனாவுக்கு இன்னும் கொளுத்திப் போடுகிற ஆசை போகவில்லை போல! உள்துறை அமைச்சகத்தையும் பிரிக்க வேண்டுமாம்! சொல்வார்களே, ஆக்கமாட்டாதவன் இடுப்பிலே அம்பத்தெட்டு கருக்கறுவா! அந்தமாதிரி!


ஆளுநர் களைப்புத் தீர, ராஜ் பவனில் ராஜ லீலையை நடத்திக் கொண்டிருக்கிறார்! இதற்கெல்லாம் உதவியாக இருந்தது, ஆளுநரின் சிறப்பு அதிகாரி! Officer on Special Duty! என்று ABN சானல் சொல்கிறது! ஸ்பெஷல் டூட்டி என்பது  இது தான் போல இருக்கிறது !

இயக்குனர் ராஜசேகர்! இருக்கிறீர்களா? உங்களுக்கு அடுத்த படத்திற்குத் தலைப்பு ரெடி!

இது தாண்டா ஸ்பெஷல் டூட்டி!

காங்கிரசுக்கு மக்கள் சொல்ல வேண்டிய தகவல் ஒன்றே ஒன்று தான்!

விடுதலை அடைந்ததும் மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியின் இலக்கு எட்டி விட்டது, கலைத்து விட வேண்டியது தான் என்று ஆலோசனை சொன்னார்! இப்போது கூட காந்தியின் சொல்படி நடப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. கலைத்துவிடுங்கள்!
 

5 comments:

  1. எந்த அளவுக்கு இணையத்தில் வசதிகள் கிடைக்கின்றதோ.. அந்த அளவு எல்லா குறுக்கு வழிகளுக்கும் வாய்ப்புகளும் உண்டு...நாம் எந்த அளவு எச்சரிக்கையாக இருக்கிறோம், கவனமாக இருக்கிறோம் என்பதை நாமே அவ்வப்போது ஒரு சோதனை செய்வது நல்லது.

    "பரந்த மனதோடு, அடுத்தவரைப் புரிந்துகொள்ள முடியாவிட்டால் கூடப் பரவாயில்லை, மனம் நோகும் படி பின்னூட்டங்களோ, விமரிசனங்களோ இல்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால், உற்சாகப் படுத்துகிற வார்த்தைகளை எழுதுங்கள்! இதை எழுதும் போது என் முகத்தை, மின்னெழுத்துக்களால் ஆன மாயக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டே தான், எனக்காகவுமேஎழுதுகிறேன்"

    நானும் மனதுக்குள் ஒரு முறை பாடம் படித்துக் கொள்கிறேன்...

    "எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?"

    வாழ்க்கை போகும் பாதையில்....
    விதியை மதியால் வெல்ல முடியுமா?
    முடியும்...மதியால் விதியை வெல்லலாம் என்று விதி இருந்தால்...!

    "இப்போது கூட காந்தியின் சொல்படி நடப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. கலைத்துவிடுங்கள்!"

    சரி..அடுத்த வாய்ப்பு...? யாருக்கு? யார் இருக்கிறார்கள்...திரும்ப இருமடங்கு பலத்துடன் இவர்களே வரும் வாய்ப்புதான் அதிகம்...! வேறு யாராவது இருக்கிறார்களா என்று தொலைநோக்கி வைத்து மலை மேல் நின்று பார்த்தாலும்...காணோம்.

    ReplyDelete
  2. வாழ்க்கை போகும் பாதை?

    வாழ்க்கை என்பது பயணம் ஸ்ரீராம்! பாதை அல்ல. இங்கே பாதைகள் மாறி மாறி வரும். அங்கங்கே பிரிந்து நேரெதிர் திசைகளில் போகும்.அப்படிப் பிரிகிற , மாறுகிற எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதற்குத் தகுந்தமாதிரி, அனுபவங்களும், வழித்துணையோ, வழிப்பறியோ கூட வரும்.

    1977 இற்குப் பிறகு இந்த ஒரு பலவீனத்தை வைத்துக் கொண்டே காங்கிரஸ், சிந்துபாத் கதையில் வருகிற கடல் கிழவன் என்ற நொண்டிக் கிழப் பிசாசு மாதிரி நம் தோள்களில் ஏறிக் கொண்டு சவாரி செய்து கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதா?

    அதற்கும் பத்து ஆண்டுகளுக்கு முன்னாலேயே காங்கிரஸ் பலவீனப்பட ஆரம்பித்து விட்டது.லட்சியங்களுக்காக அல்லாமல், பதவிக்காக என்னவேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பவர்களால் நிரப்பப் பட்ட கட்சி அது. நேரு குடும்பத்து வாரிசுகள் மீது எவ்வளவு குறைகள் சொன்னாலுமே கூட, இப்படி ஒன்றுக்கும் ஆகாதவர்களைக் கூட ஒன்று படுத்துகிற சக்தி வேறு எவருக்குமே இல்லை என்பது பரிதாபம் ஆனால் உண்மை!

    இங்கே தான், தலைமை என்பது இல்லாத ஒரு வெற்றிடம், அது ஏற்படுத்திவரும் குழப்பங்கள் என்று ஆரம்பிக்கிறது.

    இப்படி யோசித்துப் பாருங்களேன்! காங்கிரஸ் கட்சியை மற்றுமல்ல, காங்கிரசோடு கூட்டணி வைத்துக் கொள்கிற எந்த கட்சியாக இருந்தாலும் அதையும் சேர்த்துக் காங்கிரசோடு நிராகரிப்பேன் என்று ஒரு தெளிவான ஆரம்பம் செய்து பாருங்களேன்! கொஞ்சம் ஆட்டம் போடுகிற குட்டிப் பிசாசுகளை, அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  3. பாதை எல்லாம் மாறி வரும்...பயணம் முடிந்து விடும்... நம்ம ஊர்க் கவிஞர்.
    பாதைகள் மாறி மாற்றி அங்கங்கு வந்து பிரிந்து நேரெதிர் திசைகளில் என்று சொல்வதை விட திரும்ப சேர முடியாமல் பாதைகள் பிரிந்து போய்க் கொண்டே இருக்க எந்தப் பாதையைப் பார்த்தாலும் முடிவில்லாமல் இருக்க யாரும் நடக்காத பனி மலர்ப் பாதையை தேர்ந்தெடுத்தேன்....அயலூர்க் கவிஞர்.
    ஆக அந்தப் பாதையில் போவதுதான் வாழ்க்கைப் பயணம்...

    1947 க்கு முன்பு கட்சிகள் அத்தனைக்கும் ஒரு காமன் அஜெண்டா இருந்தது....வெள்ளைக்காரனை விரட்டுவது...பின்னர் நம்மால் எந்த விஷயத்திலும் ஒன்று சேர முடியாமல் போனது...வெள்ளைக்காரனை காபி அடித்த ராஜாங்க முறைகள்...நேரு அணைகள் கட்டினாலும் அம்பேத்கார் சட்டங்கள் இயற்றினாலும் அதற்கொரு கெடு, ஒரு மாற்றுப் புள்ளி வைத்து ஏற்படுத்தினார்கள்...ஆனால் அதை நிறைவேற்ற முடியாதது பின்னர் வந்த ஆட்சியாளர்களின் பலவீனமா, கோழைத்தனமா...நிர்வாகச் சீர்கேட்டுக்கு வழி வகுத்த ஓட்டுக் கலாச்சாரம்...1967 க்குப் பிறகு தமிழ் நாட்டில் ஆரம்பித்த வீழ்ச்சி இன்று ஓட்டுக் கலாச்சாரம் என்பதை பணத்துக்கு ஓட்டு என்பதில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது.

    ஒரு மொரார்ஜியால், ஒரு சந்திர சேகரால், ஒரு வாஜ்பாயால் ஒரு நிலையான, உறுதியான தலைமையைத் தர முடியாமல் போனது துரதிருஷ்டமே...சிதறுண்ட, தன் நம்பிக்கை இழந்த, எதிர்க் கட்சியை வைத்துக் கொண்டு காங்கிரஸ் மற்றும் கூட்டணியை நிராகரித்து காணப் போகும் பலன் என்ன... காங்கிரஸ் போக வேண்டும் என்பதில் நானும் உடன்படுகிறேன்...மாற்று யார்? யாரை எதிர்த்தார்களோ, யார் தவறு என்று நன்றாகத் தெரியுமோ அந்த சிபு சோரனை ஆதரிக்கிறது பா ஜ க. கம்யூனிஸ்ட்களை நம்பி பெரும்பான்மை தருவார்களா மக்கள்?

    Readers Club Meeting போனீர்களா?

    ReplyDelete
  4. ஸ்ரீராம்!

    வாசகர் வட்டக் கூட்டத்திற்கு இன்னமும் போகவில்லை. கண்ணதாசன் பாட்டும், அயலூர்க் கவிஞர் சொன்னதும் சரிதான் என்றாலும், புரிந்து கொண்டதில் கொஞ்சம் பேதமிருக்கிறது.கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பாருங்கள்! நீங்கள் செய்த எந்த ஒரு காரியத்திற்கு முன்னாலும் உங்களுக்குச் சாய்ஸ் இருந்தது! செய்த காரியத்தை வேறு விதமாக செய்திருக்கலாம் அல்லது செய்யாமலே தவிர்த்திருக்கலாம். ஏதோ ஒன்றின் அடிப்படையில் ஒரு முடிவு செய்கிறீர்கள். அது ஒரு விளைவை ஏற்படுத்துகிறது. அந்த விளைவில் இருந்து இன்னொரு செயல்! மறுபடியும் அதே சாய்ஸ்! இப்படிச் சின்னதானாலும் பெரியதானாலும், பாதைகள் பிரிந்து பயணங்கள் மாறுவதைப் பார்க்க முடியும்.

    பயணங்கள் மாறி அனுபவங்கள் வேறானாலுமே, அதைப் பின்னோக்கிப் பார்க்கையில், திருவருட்சித்தம் அதிலும் ஒரு பாடத்தை வைத்திருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

    ReplyDelete
  5. //உங்களுடைய கூகிள் பயனர் கணக்கை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பதை இங்கே பார்க்கலாம்! //

    இம்மாதிரி டெக்னிக்கல் விசயங்கள் அப்பப்ப பகிர்ந்துகோங்க சார்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!