இது காமெடி டைம்! காங்கிரஸ் சானலில்!


பார்ப்பதற்கு அப்பாவியாக, ஐயோ பாவமே என்று தோன்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூட சிரிக்காமலேயே, அடுத்தடுத்து இரண்டு காமெடி ஷோ நடத்தியிருக்கிறார்! முதலாவது, தெலங்கானா பற்றியது! மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு தெலங்கானா மாநிலம் அமைப்பதில் கருத்தொற்றுமை ஏற்படும் வரை பொறுத்திருப்போம், அவசரப்பட மாட்டோம்  என்று உறுதி அளித்திருக்கிறாராம்!

ஜோக்கு! இது முதல் ஜோக்கு!

காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியப்படி கருத்தொற்றுமை என்றால் என்ன என்று அவருக்கு மறந்துபோயிருக்கக் கூடும்! அல்லது பயத்தில் மன்மோகன் சிங் கண்ணை இறுக்க மூடிக் கொண்டிருந்திருக்கலாம்! இங்கே சென்னை சத்தியமூர்த்தி பவனில்,வேட்டியைக் கிழித்துக் கொண்டு, நாற்காலி வீசி அடிதடியில் கடைசியாக 'மேலிடம்' வந்து ஏற்படுத்தும் கருத்தொற்றுமை பற்றி எல்லோருக்குமே நன்றாகத் தெரியும்!

அடுத்த ஜோக்கு! இதை  எப்படி சிரிக்காமல் சொன்னார் என்பதற்காகவே மன்மோகன் சிங்குக்கும், ஏதோ சங்கங்கள் எல்லாம் சேர்ந்து சமாளிப்புத் தலைமகன், ஜோக் ஜுஜூபி விருதுகளை கொடுத்திருக்கலாம்!

வி பி சிங்குக்கு கிடைத்த மாதிரி இந்த சிங்குக்கும்...!

கூட்டணி தர்மம், குறைந்த பட்ச செயல் திட்டம் என்று காங்கிரசுக்கும் கொஞ்சம் வெளிச்சம் கிடைக்கிற மாதிரி, கழகங்கள் இந்த வித்தையைக் காங்கிரசுக்கும் சொல்லித் தரக்கூடாதோ!

"காங்கிரசால் மட்டுமே சவால்களை எதிர்கொள்ள முடியும்!"

இப்படி, அடுத்துச் சொன்னது தான், ஜோக்கா, சாபமா என்று புரியவில்லை!  காங்கிரஸ் பிரதமர் நன்றாகவே குழப்பி விட்டார்! தேசத்தின் தலைவிதி காங்கிரசோடு  பின்னிப்  பிணைந்து இருக்கிறதாம்! 

ஆண்டவனே காப்பாத்து!

காங்கிரசைத் தொட்டுப் பதிவுகள் எழுதுவதில் எனக்கு அவ்வளவு விருப்பமில்லை என்றாலுமே கூட, ஒரு தலைமை, நிர்வாகம் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது, செயல்படக் கூடாது என்பதில், காங்கிரஸ் கட்சி எப்போதுமே ஒரு சிறந்த உதாரணம். அதனால் தான் காங்கிரஸ் கலாசாரத்தை வைத்து  எதை எதையெல்லாம் கற்றுக் கொள்ளக் கூடாது, எதெல்லாம் தவிர்க்கப் படவேண்டியது என்பதை இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம்!

Consensus! கருத்தொற்றுமை!

டோனி மோர்கன் என்ற பதிவரை ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் கொஞ்சம் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறோம்! இவருடைய பதிவுகள், பெரும்பாலானவை, கிறித்தவ சர்ச்சுக்களின் நிர்வாகம், நிதி, இயக்கம் சார்ந்தவை, சர்ச்சுக்களால்  ஸ்பான்சர் செய்யப் படுபவை  என்றாலுமே கூட, சில பதிவுகள், நிர்வாகம், மேலாண்மை, குறித்த விஷயங்களில் பொருந்தியும், சிந்திக்கத் தூண்டுபவையாகவும் இருக்கிறது.

இந்தக் கருத்தொற்றுமை என்ற வார்த்தையையே ரொம்பக் கெட்ட வார்த்தையாகப் பார்க்கும் விதத்தில், இவர் எழுதிய ஒரு பதிவு ஒன்றைப் படித்து விட்டு, நாட்டு நடப்பு, உலக நடப்போடு பொருந்தி வருகிறதா என்று பார்த்தபோது தான், மன்மோகன் சிங் பேசினது செம காமெடியாக இருந்தது.

எப்படி என்பதைப் பார்ப்போமா? டோனி மோர்கன், இந்தக் கருத்தொற்றுமை என்பது வெறும் கேலிக் கூத்து என்பதைக் குறைந்தது ஐந்து காரணங்களை வைத்தாவது சொல்லிவிட முடியும் என்கிறார். ஒவ்வொன்றாக, நம்முடைய சூழ்நிலைக்குப் பொருந்துகிற விதத்தில், அரசியலை அல்ல, நிர்வாகம், மேலாண்மை, தலைமைப் பண்பு, இந்தத் தலைப்புக்களை மையப்படுத்தி மட்டுமே நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடாமல், பார்க்கலாமா?

கற்றுக் கொள்வதில் இரண்டு விதம், ஒன்று நம்முடைய சொந்த அனுபவங்களில் இருந்து. இரண்டாவது, அடுத்தவருடைய அனுபவங்களில் இருந்து தெரிந்து கொள்வது. இதுவும் இரண்டு விதமாகப் பிரிந்து, எப்படி சரியாகச் செய்வது என்பதாகவும், எப்படிச் செய்யாமல் இருக்கவேண்டும் என்பதைக் கற்றுக் கொடுப்பதாகவும் இருக்கும் இல்லையா?!


கருத்தொற்றுமை ஏற்பட சில அடிப்படைத் தேவைகள்! விதங்கள்!
கருத்தொற்றுமை என்பது அர்த்தமே இல்லாத வெற்று வார்த்தை! எப்படி என்றால்,

முதலாவதாக, கருத்தொற்றுமை என்ற வார்த்தை, குறிப்பிட்ட ஒரு தருணத்துச் சூழ்நிலையோடு நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது.. மாற்றம் என்பது  ஒரு பக்குவ நிலை, அதற்குத் தயாராக இருக்கும் தைரியம் எல்லோருக்குமே இருப்பதில்லை. கருத்தொற்றுமை என்று பேச ஆரம்பிக்கும்போதே, மாற்றத்திற்குத் தயாராக இருப்பவர்கள், இல்லாதவர்கள் இரண்டு தரப்பையும் ஒன்றாக உட்கார்த்தி வைக்கும்போதே, தேக்க நிலை வந்து விடுகிறது. Status Quo என்றபடிக்கு எப்படி இருந்ததோ அதே பழைய நிலையிலேயே நிற்றல் என்பது, கருத்தொற்றுமை என்பதன் முதல் கோணலாக, அவலட்சணமாக இருக்கிறது. 

இரண்டாவதாக, கருத்தொற்றுமை ஏற்படுத்தச் செய்கிறேன் பேர்வழி என்று ஆரம்பிக்கும்போதே, அங்கே எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டு விலகி சந்தைக் கடை மாதிரி இரைச்சலும், கூச்சலுமாகிப் போய் விடுகிறது. தரங்கெட்ட விஷயங்களும், எதிர்மறையான போக்குகளும், கெட்ட எண்ணம் உடையவர்களுமே கூட சம வாய்ப்பு என்ற சந்தடி சாக்கில் உள்ளே நுழைந்து, உண்மையான குறிக்கோளை எட்ட விடாமல் செய்துவிடுகிற வாய்ப்பும் அதிகமாகி விடுகிறது.

மூன்றாவதாக, தைரியமான முடிவுகளை, விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்கள் எடுபடாமல் போய்விடுகிறது. நல்லதோர் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களைப் பேச முடியாமலேயே போய்விடுகிறது. நடுநிலை என்பது ஆகச் சிறந்தது எது என்று சீர்தூக்கிப் பார்த்துத் தேர்ந்தெடுப்பது என்பதற்குப் பதிலாக, மதில் மேல் பூனை மாதிரி ரெண்டுங் கெட்டானான  நிலையை எடுப்பது தான் என்றாகிப் போய்விடுகிறது. இதற்குச் சிறந்த உதாரணம், இங்கே மதச் சார்பின்மை-செக்குலரிசம் என்பதை நாம் புரிந்து கொண்டிருக்கும் விதம்!

நான்காவதாக, கருத்தொற்றுமை ஏற்படுத்தச் செய்யும் முனைப்பு, பிரச்சினைகளைத் தீர்க்காமலேயே வளர்த்துக் கொண்டிருப்பதாக மாறிப்போய் விடுகிறது. ரு ஆரோக்கியமான விவாதம், அழுத்தமான கருத்தைப் பேசினால், எங்கே மற்ற தரப்பு விறைத்துக் கொள்ளுமோ என்ற பயத்தில், நடக்காமலேயே தவிர்க்கப் படுகிறது. அந்த நேரத்துக்கு, இரண்டு தரப்பையும் சமாதானமாகப் போகும்படிக்  கெஞ்சலாக,  விரிசலை பெயின்ட் அடித்து மறைத்துவிடலாம் என்கிற மாதிரியானதாக, நின்று விடுகிறது.

ஐந்தாவதாக,கருத்தொற்றுமை என்கிற பெயரில், இப்போதிருக்கும் நிலையை விட உயரத் தவிக்கும் கனவுகளின் சிறகுகளை முறிப்பதாக மட்டுமே நடக்கிறது. கொஞ்சம் வித்தியாசமாக, ஆக்கபூர்வமாகச் சிந்திக்க முற்படுபவர்களை, கூட்டத்தோடு கோவிந்தா என்று போய்விடும்படி வற்புறுத்துகிறது. மறுப்பவர்களை வலுக்கட்டாயமாகப்  பேசாமல் இருக்கும்படி மிரட்டுகிற கட்டப்பஞ்சாயத்தாகவுமே பெரும்பாலான சமயங்களில் மாறிவிடுகிறது.

அரசியலாகட்டும், அல்லது பணிபுரியும் இடமாக இருக்கட்டும்! கருத்தொற்றுமை என்பது எப்படி ஏற்படுகிறது என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்! தேக்கமடைந்து விடுவதை உங்கள் மீது திணிக்கிறதா? எதில் கருத்தொற்றுமை அவசியம் என்பதை விட்டு விலகி, சம்பந்தமே இல்லாமல், சந்தைக் கடையாகவும், சண்டைக்களமாகவும் ஆகி விடுகிறதா? மிகச் சொற்பமான அளவிலேயே சொல்லப் பட்டாலும், சொல்வதன் உண்மையை ஏற்றுக் கொள்ள முடிகிறதா, அல்லது கும்பலாகக் கூச்சல் போட்டே நல்ல விஷயம் கூட அம்பலமேறாமல் போய் விடுகிறதா? கூட்டமாகச் சொல்வது தான் சரி, அது சரி அது சரி என்று தலையாட்டிப் பொம்மைகளாக்குகிறதா அல்லது, தீர்க்கமாகச் சிந்திக்க இடம் இருக்கிறதா?

இந்த ஐந்து காரணங்கள் அத்தனையும்உங்களுடைய அனுபவத்தில், யோசித்ததில்  பொருந்துகிறதா? கூடுகிறதா? குறைகிறதா?

உங்களுடைய  எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கேட்போம்!



22 comments:

  1. //காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியப்படி கருத்தொற்றுமை என்றால் என்ன என்று அவருக்கு மறந்துபோயிருக்கக் கூடும்!//

    இன்னும் இருக்கு! சோனியாகாந்திக்கும், ராகுல்காந்திக்கும் கருத்து ஒற்றுமைன்னா அந்த மேட்டர் ஒகே தான்!

    ReplyDelete
  2. //கருத்தொற்றுமை என்று பேச ஆரம்பிக்கும்போதே, மாற்றத்திற்குத் தயாராக இருப்பவர்கள், இல்லாதவர்கள் இரண்டு தரப்பையும் ஒன்றாக உட்கார்த்தி வைக்கும்போதே, தேக்க நிலை வந்து விடுகிறது.//

    இதுக்கு என்ன பண்னனும், நமக்கு சாதகமா இருக்குறவங்களை மட்டும் உட்கார வச்சிகிட்டு, மத்தவங்களை தொரத்தி விட்றனும்!, தேக்க நிலையே ஏற்படாது!

    ReplyDelete
  3. While reading twitter post (previous ) this new post.What a speed.This is first arrival to your blog.All posts are very interesting.

    there are groups in groups within groups that is
    congress.people are laughing with ..., because of they speak about consensus.

    first PC confused with three words ,from the next day Seema,Andra got fire.crore of peoples Rs. lost.
    then he confused with six lines Telungana got riots.
    the common man wants neither Telungana nor AP.they want peace,job, income and development only.It will available by their hard work if politicians not interfere .

    ReplyDelete
  4. ஆகா மொத்தம் யாரையும் கருத்து கேட்க கூடாது, நமக்கு இஸ்ஸுனா ஒகே, உஸ்ஸுன்னா நோ சொல்லிற வேண்டியது தான் சரியா!

    ReplyDelete
  5. முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு.கைலாஷ்!

    கருத்தொற்றுமை என்பது, கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து, ஆராய்ந்து, எல்லாத் தரப்பும் ஏற்றுக்கொள்கிற மாதிரியான விஷயம். நடைமுறையில், பல வார்த்தைகள் அதனுடைய உண்மையான பொருளை, வீரியத்தை இழந்து, வெற்று வார்த்தைகளாகக் குறுகிப்போய் நிற்கின்றன. ஃ புளோ சார்ட்டைப் பார்த்தாலே, இந்த ப்ராசஸ் எப்படி வரும் என்பது ஒரு ஐடியா கிடைக்கும். Thought process என்பது சிக்கலானது தான்! ஆனால், ஒரு தீர்மானமாக எடுத்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தோமேயானால், மிகச் செழுமையாக வளரக் கூடிய, ஆரோக்கியமான ஒன்று.

    கரிகால் சோழன் என்று வலைப்பூவிற்குத் தலைப்பு வைத்திருக்கிறீர்கள்! ஒன்றும் எழுதக் காணோமே?

    ReplyDelete
  6. அப்புறம், தெலங்கானா, வெறும் உணர்வுபூர்வமான விஷயம் மட்டுமே அல்ல! சுதந்திரம் வேண்டுமென்று விரும்பினோமே தவிர, அந்த சுதந்திரம் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும், என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு இல்லாமல் ஏற்கெனெவே இருந்த அமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு ஆரம்பித்ததில் இருந்து பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    தெலுங்கானா, நாலாவது தூண் என்ற குறியீட்டுச் சொல்லை வைத்துத் தேடித் பாருங்கள். இன்னும் சில பதிவுகள் கிடைக்கும்.

    ReplyDelete
  7. நாமெல்லாம் நினைப்பது போல் காங்கிரஸ் தலைமை முட்டாள் அல்ல. தற்போது உள்ள காங்கிரஸ் கோஷ்டிகள் இந்திரா காந்தியால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. காமராஜர் மிக பெரிய அளவில் தேசிய தலைவராக வளர்ந்தபின் இந்திரா உஷாராகிவிட்டார். காமராஜ் போன்றவர்கள் நேரு குடும்ப அரசியலுக்கு பெரிய வேட்டு வைத்துவிடுவார்கள் என்று புரிந்துகொண்டார். அதன் விளைவாக அவரே மாநில அளவில் பல குட்டி தலைவர்களை உருவாக்கிவிட்டு அவர்களுக்குள்ளாகவே மோதலை வளர்த்துவிட்டார். இதனால் மாநிலங்களில் யாரும் தனிப்பெரும் தலைவர்களாக உருவாகவில்லை. இந்திராவின் "divide and rule" பாலிசி மிக சரியாக வேலை செய்தது. இதையே ராஜிவும் சோனியாவும் தொடர்ந்து செய்தார்கள். ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி மறைவுக்குப்பின் ஜெகனை முதல்வராக ஆக்க தயங்கியதிற்க்கும் இதுவே காரணம். ஜெகனுக்கு இருக்கும் செல்வாக்கை பார்த்து காங்கிரஸ் தலைமை அசந்துவிட்டது. இதை வளரவிட்டால் எதிர்காலத்தில் இது மிகப்பெரிய தலைவலியாக இருக்கும் என்று உணர்ந்து பலமான எதிர்ப்புகள் இருந்தாலும் ரோசையா முதல்வராக்கப்பட்டார். தெலுங்கானா பிரச்சினைகூட காங்கிரசால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்று. வளர்ந்துவரும் சிரஞ்சீவியை முடக்கவும், ஜகன் தனிக்கட்சி தொடங்காமல் இருக்கவும் தெலுங்கானா காங்கிரசுக்கு ஒரு ஆயுதமாக உள்ளது. காங்கிரசே சந்திரசேகர ராவை தூண்டிவிட்டு தெலுங்கானா கோரிக்கையை வலுப்பெறவைத்தது. காங்கிரஸ் அரசு நினைத்திருந்தால் சந்திரசேகர ராவை கைது செய்து அவரது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனால் ஆந்திரா பிளவுபடுவதுதான் தங்களுக்கு நல்லது என்று அந்த கட்சி தலைமை உறுதியாக நம்புகிறது. ஆந்திராவும், தமிழகமும் தான் ஒவ்வொரு முறையும் மத்தியில் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று தீர்மானிக்கிறது. இந்த நிலையில் அங்கிருந்து கிடைக்கும் எம்பி சீட்டுக்களை அது இழக்க தயாராக இல்லை. திவாரி வீடியோவின் பின்னணியில் கூட காங்கிரஸ் இருக்ககூடும். பற்றி எரிந்து கொண்டிருக்கும் மாநிலத்தை இது போன்ற மசாலா செய்திகள் திசை திருப்பலாம் என்று அந்த கட்சி நம்பியிருக்கலாம். அதற்காக திவாரி பலிகடாஆக்கப்பட்டிருக்கலாம்.

    ReplyDelete
  8. I dont know Tamil typing sir.thats why I am not starting to blog yet.
    then Telungana,cause of this the people like vegetable vendors ,auto drivers,kirana shoppers who lived together till yesterday now quarrelling and fighting , you belongs to either Telungana or Andra.this is not good.

    there is no problems for Tamils,Marvaris and
    Sings like that.they are fighting within themselves.that is the pity.

    ReplyDelete
  9. திரு கைலாஷ்! ஐந்தரை வருடங்களுக்கு முன்னால் பதிவு எழுத ஆரம்பித்த புதிதில் எனக்கும் இந்தச் சிக்கல் இருந்தது. 2002 இலிருந்தே பிளாக்கர் கணக்கு இருந்தாலும், எப்படிப் பயன்படுத்துவது என்பதில் குழப்பம்! எங்கே உதவி கிடைக்கும் என்பது கூடத் தெரியாத நிலை. இப்போதிருக்கும் கணக்கு 2005 இல் தொடங்கப்பட்டது, ஆனால் தமிழில் பதிவுகள் சென்ற ஆண்டு தீபாவளிக்குப் பின்னால் தான் ஆரம்பம்.

    இப்போது நிறைய வசதிகள் இணையத்தில் கிடைக்கின்றன. Google Indic இணையத்தில் இருக்கும்போது பயன் படுத்தக் கூடிய எளிமையான நிரலி. அவ்வப்போது கொஞ்சம் குடைச்சல் கொடுத்தாலும், நான் அதிகம் பயன்படுத்துவது இதைத் தான்!

    higopidotcom போனீர்களானால் தகடூர் என்ற எளிமையான நிரலி கிடைக்கும். இணையத்தில் இல்லாதபோதும் பயன்படுத்தக் கூடியது, அதேமாதிரி NHM writer போல இந்திய மொழிகளில் ஒலிக்குறிப்பின் அடிப்படையிலும், தமிழ்த் தட்டச்சு முறையிலும் உள்ளீடு செய்வதற்கான நிரலிகள் நிறைஒயக் கிடைக்கின்றன.

    அடுத்து தெலங்கானா!

    பிரச்சினை தனி மாநிலமா இல்லையா என்பது கூட அல்ல! தொடர்ந்து புறக்கணிக்கப் படுவதாக, ஏமாற்றப் பட்டுக் கொண்டிருப்பதான ஒரு கொந்தளிப்பே தெலங்கானா மக்களுடைய போராட்டமாக, இப்போது மட்டுமில்லை இந்த அறுபத்தைந்து ஆண்டுகளில் நான்கு, ஐந்து முறை வெடித்திருக்கிறது. அப்போதெல்லாம் தற்காலிகமான சமரசத்தைச் சொல்லி சமாதானப் படுத்திப் பழையபடியே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று அந்த மக்கள் நினைப்பதை மாற்றுவதற்கு எவருக்கும் மனம் வரவில்லை. உண்மையாகவே பிரச்சினையைப் புரிந்துகொண்ட தீர்க்க வேண்டும் என்ற எண்ணமும் எவருக்கும் இல்லை.

    இது தெலங்கானாவின் சோகம் மட்டுமில்லை. ஒட்டு மொத்தமாக இந்த தேசம் முழுமைக்குமே.

    ReplyDelete
  10. சாய்ராம் கோபாலன் சார்!

    நீங்கள் சொல்வதில் பெருமளவு உண்மை இருக்கிறது. ஆனால் வேறு சில விஷயங்களையும் சேர்த்து, சரியான வரிசையில் பார்த்தோம் என்றால், முழு உண்மையும் கண் முன்னால் தான் இருக்கிறது. அது ஒரு பக்கம்! அதை வைத்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி மிக முக்கியமானது.

    உதாரணமாக, காமராஜர் மீது அகில இந்திய ரீதியில் நல்ல மரியாதை இருந்தது உண்மை தான்! அதேநேரம், ஹிந்தி பெல்ட் என்றழைக்கப் பட்ட நான்கு மாநிலங்களில் இருந்து வருபவர் தான் பிரதமராக நீடிக்க முடியும் என்பது காமராஜருக்கும் தெரிந்திருந்தது. நேரு இறந்தவுடன், சாஸ்திரியைப் பிரதமராக்கினார்கள், இந்திரா காண்டியை மந்திரி சபையில் சேர்த்துக் கொண்டார்கள். சாஸ்திரி மறைவுக்குப் பின், இந்திரா காந்தியைப் பிரதமர் ஆக்கினார்கள்.. பின்னால் இருந்து ஆட்டுவிக்கலாம் என்று போட்ட கணக்குத் தான் தப்புக் கணக்காகிப் போனது. தன்னை ஒரு பொம்மையாகத் தான் பயன்படுத்துகிறார்கள் என்ற சந்தேகமும், பயமும் எழ அம்மையார் காங்கிரசை இரண்டாக்கினார்! இண்டிகேட் இன்றைக்கும் வாரிசுகளின் தயவால் பிழைத்திருக்கிறது. சிண்டிகேட், அம்பேல்!

    இந்திரா காண்டி, தன்னுடைய எதிரிகள் என்று மட்டுமில்லை, நண்பர்களையுமே வளரவிடவில்லை. யாரோ ஒருவர் மாநில அளவில் செல்வாக்கு அதிகமாகப் பெறுகிறார் என்றால், அவரை மாநிலத்தில் இருந்து கழற்றி விட்டு, மத்திய மந்திரிசபையில் சேர்த்துக் கொள்வது, செல்லாக் காசாக்கி ஓய்தது விட்டு, வீட்டுக்கு அனுப்புவது என்ற தந்திரத்தை, பிரிடிஷ்காரன் கூட செம்மையாகக்கையாண்டதில்லை.

    ராஜசேகர ரெட்டி மகன் ஜெகனை ஓய்ப்பதற்கு, தெலங்கானா பிரச்சினையைக் கிளப்பவேண்டிய அவசியமெல்லாம் இல்லை. திவாரி ராஜ்பவனில் நடத்திய ராஜ லீலையை அம்பலப் படுத்தி கவனத்தைத் திசை திருப்ப வேண்டிய அவசியம் கூட இல்லை.அது வேறு ட்ராக். என்னவோ கணக்குப் போட்டு, சோனியா பிறந்த நாள் அறிவிப்பாக வெளியிட்டு, ஒட்டு வங்கியை உறுதிப் படுத்திக் கொள்ளலாம் என்ற கணக்கு, தப்புத் தாளங்களாகி விட்டது. காங்கிரஸ் கட்சிக்கு சுட்டுப் போட்டாலும், சுருதி சேராது! தாளமும் தெரியாது.

    ஒரு கதை சொல்வார்கள்!

    ரோம் நகரில் கூட்டம் கூட்டமாக ஜனங்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். பின்னாலேயே ஒருவன் மூச்சிரைக்க ஓடிவந்து கொண்டிருந்தான்.
    அவனை நிறுத்தி ஏனப்பா இவ்வளவு சிரமப்பட்டு ஓடுகிறாய் என்று யாரோ கேட்டார்கள். அவன் சொன்னானாம்:

    "அதோ ஓடுகிறார்களே, அவர்கள் என் ஜனங்கள்!ஓட்டத்தில் நான் அவர்களை முந்திப்போய், அவர்களுக்குத் தலைமை தாங்க வேண்டும்!"

    காங்கிரஸ் நாட்டுக்குத் தலைமை தாங்குகிற லட்சணமும் இது தான்!

    ReplyDelete
  11. கீழிடங்களில்' கருத்தொற்றுமைக்கு 'மேலிடம்' வரவேண்டும்...மேலிடத்திலே பிரச்னை என்றால்...அவர் என்ன செய்வார் பாவம்...
    இத்தனை கோஷ்டிப் பூசல் வேறு எந்தக் கட்சியிலும் இல்லாததால்...ஆம்,'காங்கிரசால் மட்டுமே பிரச்னைகளை...'! அனுபவம் ஜாஸ்தி.

    ஒரு கருத்தை கேட்க முனையும்போதே மனித மனம் அதை ஏற்க வேண்டும் என்று நினைப்பது இல்லை. ஒரு எதிர்க்கட்சி மனப்பான்மையுடன்தான் கேட்கவே தொடங்குகிறது...இதை வளர்ச்சியின் அடையாளமாகக் கொண்டு பகுத்தறிவு என்று சொல்லலாம். கருத்தொற்றுமை என்ற வார்த்தையே மாயை.பொய்.
    வால் பையன் சொல்வதுபோல ஒத்த கருத்துடையவர்களை வைத்துக் கொண்டு..என்பது சாத்தியமில்லா விஷயம். ஒத்த கருத்து இருக்காது. ஏதோ தேவைகளுக்காக வாய் மூடி இருப்பவர்கள் என்று சொல்லலாம்.

    ReplyDelete
  12. ஸ்ரீராம்! என்ன இது, ஆதி சங்கரர் பேசுகிற மாயாவாதம் மாதிரி!!

    கருத்தொற்றுமை சாத்தியம் தான்! எந்தவொரு கருத்துமே, அதற்கு நேரெதிரான ஒன்றுடன் மோதிக் கடைசியில், ஒரு வடிவத்துக்கு வரும், தேவையின் அடிப்படையில் அதுவுமேமாறும். Thesis-->anti-theis =synthesis என்று போகும். மேலே இருக்கும் flow chart ஐப் பாருங்கள்! கருத்தொற்றுமை முதலில் எதற்காக? எதன் மீது? இந்தக் கேள்விகளுக்கு, நடைமுறை சாத்தியமான வழிகளைத் தேடுவதில் மட்டுமே விடை இருக்கிறது. இருக்கிற அத்தனை கருத்து கந்தசாமிகளையும் பேசவிட்டுக் கேட்டுக் கொண்டிருப்பதில் அல்ல.

    ReplyDelete
  13. அரசியல் ரீதியா கருத்தொற்றுமை வருவது என்பது என்றுமே இயலாத காரியம். இவர்கள் ஒரெ கட்சிக்குள் ஆரோக்கியமான விவாதம் செய்தது கிடையாது. அப்படி இருக்கையில் மற்ற கட்சிகளுடன் எப்படி முடியும். இது எல்லா சிறிய பெரிய கட்சிக்கும் பொருந்தும்.

    கம்பெனிகளின் (எல்லா கம்பெனிகளும் அல்ல)நிலை வேறு. ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறுவதுண்டு. எங்கள் கம்பெனியிலும் நடந்திருக்கிறது. ப்ராஜக்ட் மேனெஜர் சொன்னதை மறுத்து ஒரு ஃபோர்மேன் சொன்ன கருத்து அமுலுக்கு வந்தது. அங்கே பதவிக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படவில்லை. பயன் என்ன என்பதற்குத்தான்.

    இங்கு நடக்கும் களேபரம் தங்களை மக்கள் மத்தியில் அறிமுகம் (விளம்பரம்) செய்துகொள்ளத்தான் அதிகமாக நடக்கிறது ஊடகங்களின் துணையோடு.

    ReplyDelete
  14. சுவாசிக்கப் போறேங்க எப்போது முதல்?
    அங்கு போய் கமெண்ட் முயற்ச்சித்தேன்... Word Verification என்பதே படுத்தல்...அதிலும் பாதிதான் தெரிந்தது...எனவே அங்கு கமெண்ட முடியவில்லை...!!

    ReplyDelete
  15. வாருங்கள்,நவாஸுதீன்!

    கருத்தொற்றுமைக்கு சில அடிப்படை விஷயங்கள் அவசியம். உங்கள் பின்னூட்டத்திற்கு மேலே, கொஞ்சம் அதைச் சொல்ல முயற்சி செய்திருந்தேன். கருத்தொற்றுமை என்பது அவன் நிறுத்தட்டும், நானும் நிறுத்துகிறேன் என்ற நிபந்தனைகளில் வருவதுமல்ல. முதல் தேவையாக, மாற்றுக் கருத்தை, கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்வது, நடைமுறைக்குக் கொண்டுவரும்போது என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பதையும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதையும் ஆக்கபூர்வமாக, கலந்துகொள்கிற அத்தனைபேருமே ஈடுபாட்டோடு செய்வது. இந்த அத்தனை பேருமே என்ற கட்டத்தில் தான் கருத்தொற்றுமை வெறும் வார்த்தையுடனேயே நின்றும் போய் விடுகிறது.

    ஆக, அடிப்படையான கேள்வி கருத்தொற்றுமை என்பது எதற்காக என்ற கேள்வி, அதற்கு முன்னால், கருத்தொற்றுமை காணமுடியாதபட்சத்தில் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பதில் தெளிவு, இங்கே இருக்கிறது விடை! ஏற்படுமா அல்லது முடியாதா என்பது இந்த இரண்டில் ஒன்றிலேயே முடிவாகி விடும். ஆக, டோனி மோர்கன் சொல்கிற முதல் காரணத்தைத் தான் நீங்களும் வேறு வார்த்தைகளில் சொல்கிறீர்கள்!

    அடுத்து, ஜப்பானியத் தொழில் துறை, நிர்வாக இயல், மேலாண்மைத் துறை, ஒட்டுமொத்தமாக உலகுக்குக் கொடுத்திருக்கும் பெரும் கொடை, ஒரு வேளையில் பங்கு கொள்கிறவருடைய கருத்தை ஏற்றுக் கொள்வது என்பது. இங்கே மதுரையில்,TVS நிறுவனங்களில் இந்த concept ஐப் பயன்படுத்தியதைச் சிறுவயதிலேயே அறிவேன். அந்த நாட்களில் டிவிஎஸ் செய்தி என்று ஒரு உள்சுற்றுக்கான இதழ் வெளி வரும். அதில் ஒவொரு மாதமும், சிறந்த யோசனை சொல்கிற, ஏற்றுக் கொள்ளப்படும் யோசனைக்குப் பரிசாக ஐம்பது ரூபாயோ என்னவோ கொடுக்கப்படும்,போட்டோ வரும்.சிறுவயதில், பக்கத்து வீடுகளில் குடியிருந்த TVS தொழிலாளர்கள் வீட்டில் பார்த்திருக்கிறேன்,படித்திருக்கிறேன்.

    தனக்கு ஆதாயம் வரும் யோசனை எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்வது, கொஞ்சம் அறிவுள்ள ஸ்தாபனம் எதிலுமே காணக் கிடைக்கும் ஒன்றாக, இரண்டாவது உலகப் போருக்குப் பின்னால் தான்!

    ஜப்பானிய தொழில் துறை தான் முதன்முதலாக ஆரம்பித்து வைத்ததுமே கூட.

    ReplyDelete
  16. @ ஸ்ரீராம்,

    கிறிஸ்துமஸ் அன்றைக்கு! Word verification ஐ எடுத்து விட்டேன்.

    புத்தகங்களைப் படித்த அனுபவம், புத்தகங்களோடு ஏற்பட்ட அனுபவம் இவற்றோடு நிறுத்திக் கொள்ளலாமா, இல்லை புத்தகங்களோடு, வேறு சில விஷயங்களையும் சேர்த்துச் சொல்லலாமா என்பதில் mission statement ஐ வரையறை செய்து கொண்டிருக்கிறேன். இந்தப் பதிவிலேயே, இடதுபக்கம் பார்த்தீர்களானால், புத்தகங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு, இப்போது படித்துக் கொண்டிருப்பது என்ற தலைப்பில் கொஞ்ச நாளாகவே இருக்கும். அதை யாருமே கவனிக்கவில்லை என்று புரிந்த போது தான், தனித்துத் தெரிகிற மாதிரி இருக்கட்டும் என்று ஆரம்பம்!

    ReplyDelete
  17. ////ஜப்பானிய தொழில் துறை தான் முதன்முதலாக ஆரம்பித்து வைத்ததுமே கூட.////

    நாங்க கூட ஜப்பானிய (KAIZEN ® Institute) ஸ்ட்ரேட்டஜி (Strategy) தான் பயன்படுத்துறோம் கிருஷ்ணா.

    ReplyDelete
  18. மிகவும் நல்ல தகவல் நவாஸுதீன்!

    kaizen or continuous improvement என்று சொல்லப் படுகிற இந்த ஜப்பானிய வார்த்தையைக் கொஞ்சம் கொச்சைத் தமிழில் சொன்னால், "நொள்ளைக் கண்ணை நல்ல கண்ணாக மாற்றுவது!"

    இங்கே நம்முடைய அரசியல்வாதிகள் முதல் கொண்டு தொழில்துறை ஈறாக, "நல்ல கண்ணையும் நொள்ளைக் கண்ணாக ஆக்குவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறார்களே" என்ற ஆதங்கத்தைத் தான், இந்தப் பதிவுகளில் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறேன்.

    ReplyDelete
  19. Thank you very much sir for the information.
    I downloaded all (three) Tamil typing softwares.
    after practice I will share my opinion.

    ReplyDelete
  20. Thank you very much sir.I downloaded all (mentioned)Tamil typing softwares.
    After practice I will share my opinion.

    ReplyDelete
  21. Thank you very much sir, for the useful information.I downloaded all (mentioned)
    Tamil typing softwares.After practice
    I will share my opinion.

    Google Tamil is very impressive.amazing.
    Again than you sir.

    ReplyDelete
  22. /ஜப்பானிய (KAIZEN ® Institute) ஸ்ட்ரேட்டஜி/

    கைஜென் என்ற இந்த வார்த்தை முதலில் ஆங்கிலத்தில் தொடர்ந்த முன்னேற்றம் என்று சொல்லப்பட்டது. ஜப்பானிய மொழி சொல்வது இன்னும் நுட்பமான பொருளில்-நம்முடைய ஒவ்வொரு செயலையும் கவனமாகப் பரிசீலித்து, அதிலிருக்கும் குற்றம் களைதல், சரியாகவும் நிறைவாகவும் செய்யப் பழகுதல் என்று. strategy என்று பெரிதாக யுத்த தந்திரம் எல்லாம் ஒன்றுமில்லை! காமன் சென்ஸ்! அதை முறையாகப் பயன்படுத்தி, எங்கே தவறு ஆரம்பித்தது என்பதைக் கண்டு நீக்குவது, அதன் விளைவுகளைச் சரி செய்வது என்று மிக எளிமையானடிப்படைதான்.

    டோயோடா கார் கம்பனி தான் முதலில் இதை முறையான நடவடிக்கையாக ஆரம்பித்தது. கார் உற்பத்தி செய்யப்படும் அசெம்ப்ளி லைன் என்ற இடத்தில்,ஏதோ ஒரு இடத்தில் குறை தென்பட்டால், உற்பத்தியை நிறுத்திவிட்டு, உடனே கை ஜென் ஆரம்பித்துவிடும்! அதாவது பணி புரிபவர்கள் அத்தனை பெரும் கூடி தவறை எப்படித் திருத்திக் கொள்வது (கை), இன்னும் மேம்பட்டதாக அதை எப்படி மாற்றுவது (ஜென்) என்பதாக! இந்த முறையை மனப்பூர்வமாகவும், வேலை செய்யும் விதத்தின் பண்பட்ட தன்மையாகவும் கையாளும்போது மட்டுமே, முழுமையான பலன் கிடைக்கும்.

    டோயோடோ, அமெரிக்காவின் மிகப் பிரம்மாண்டமான ஜெனரல் மோட்டார்ஸ் கார் தயாரிப்பு நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளியது, வெறும் விளம்பர உத்தியினால் அல்ல! தரம்! தொடர்ந்து அபிவிருத்தியாகிக் கொண்டே வளர்ந்த தரம்!

    http://www.kaizen.com/
    இந்த தளத்தில் கைஜென் முறையைப் பற்றிக் கொஞ்சம் விவரமாகத் தெரிந்து கொள்ளலாம்!

    இப்படி ஒரு ஆரோக்கியமான போக்கு இருப்பதைச் சுட்டிக் காட்டும் நேரத்தில், இதற்கு நேர் எதிரிடையான இன்னொரு போக்கையும் தெரிந்து கொள்வது நல்லது. நினைத்துப் பார்க்க முடியாத மலிவான விலை என்ற பெயரில், தொடர்ந்து தரம் குறைந்த பொருட்களை சீனா, பேட்டை வஸ்தாது மாதிரி உலகச் சந்தையில் குப்பை குப்பையாகக் கொண்டிருப்பது. சீனாவின் பொருளாதார, தொழில் துறை ஆக்கிரமிப்பு, அதன் ராணுவ ஆக்கிரமிப்பை விடக்கொடுமையானது!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!