சுற்றி நில்லாதே பகையே! துள்ளி வருகுது வேல்!

"O India, land of Light and spiritual knowledge, wake up to your true mission in the world. Show the way to union and harmony."
-ஸ்ரீ அரவிந்த அன்னை.



புது வருடம் பிறக்கப் போவதற்கு முன்னாலேயே, வேண்டுதல்களும், அபிலாஷைகளும்  இறக்கை கட்டிக் கொண்டு பறக்க ஆரம்பித்து விடுகின்றன! கடவுளிடம், இந்தப் புத்தாண்டில் என்னென்ன வேண்டலாம், கேட்கலாம் என்ற பட்டியல் தயாராக ஆரம்பித்து விடுகிறது.


எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதியே  ! எங்கும் நிறைந்தருளும் கடவுளே!


இந்தப் புத்தாண்டில் எல்லாக் காரியங்களும் வெற்றி பெற  வேண்டும், எண்ணியபடி எல்லாம் நடந்தேற வேண்டும்! எல்லா வளங்களும் பெருக வேண்டும்! 


உடல் நலம் நன்றாக இருக்க அருள் புரிய வேண்டும்!  சுவற்றை வைத்துச் சித்திரம் என்பது போல, உடல் நலம் நன்றாக இருந்தால் தானே, மற்ற வேலைகளைச் செய்ய முடியும்!


ஆர்வத்தோடு விழையும் அனைத்தும் மெய்ப்பட வேண்டும்! எங்களது இல்லத்திலும், வாழ்க்கையிலும், உலகத்திலும் அமைதி நிலவ வேண்டும்!

இதையே உன்னிடம் வேண்டுகிறோம்!


கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால், பட்டியலில் இன்னும் எது எதையோ சேர்த்துக் கொள்ள மறந்து விட்டோமே என்று, இன்னும் கொஞ்சம் வேண்டுதல்கள் சேர்ந்து கொண்டே போகும்! பட்டியல்கள் அவ்வளவு சீக்கிரமாக முடிந்து விடுவதுமில்லை!


ஆனால், இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்று இருக்கிறது. ஆறறிவு இல்லாத தாவரங்கள் கூட ஒளியை நோக்கி உயர்கிற தன்மையோடு இருக்கின்றனவே! ஆறறிவு படைத்த நாமும் அப்படி தெய்வீக ஒளியை வேண்டி உயர வேண்டாமா? 


ஒளியை நோக்கி உயரும் தன்மையைக் கொஞ்சம் மறந்துவிடுகிறபோது, இது வரை சாதித்தவை எல்லாமே ஒன்றுமில்லாமல் போய்விடுகிறதே! இதற்கு நம்மைத் தவிர வேறு எவரைக் குற்றம் சொல்ல முடியும்?


மற்ற எல்லா வேண்டுதல்களையும்  விட, மிக முக்கியமான ஒன்று, ஒரு பிரார்த்தனையாக --

ஸ்ரீ அரவிந்த அன்னையே!
உன்னைச் சரண் அடைகிறேன்.
அறியாமை, முயலாமை, இல்லாமை, இப்படி எல்லா ஆமைகளையும் என் தோள்களில் இருந்து இறக்கி வைக்க தயவு செய்வாய்.

இந்த ஆமைகளோடே இனியும் கூடியிராமல், ஒரு புதிய அனுபவத்திற்கு என்னைத் தயார் செய்வாய். தகுதியும், தைரியமும் அருள்வாய்! ஒவ்வொரு அசைவிலும் செயலிலும், உனது திருவுள்ளப் படியே நடந்துகொள்கிற பக்குவ நிலையை அருள்வாய்.

பிறக்கும் புத்தாண்டு, உணமையிலேயே புத்துணர்வை அளிக்கும் ஆண்டாக வரம் அருள்வாய். வீணாய்க் கழிந்த பொழுதையும் ஈடு கட்டும் முயற்சியை, மன வலிமையை,எல்லா நேரங்களிலும் நீ என்னோடு  கூடவே  இருக்கிறாய், துணை செய்கிறாய், என்னுள் நிறைந்து எல்லாவற்றையும் நீயே நடத்துகிறாய் என்கிற உறுதியான நம்பிக்கையை, அனுபவித்து உணர்கிற வரமாக அருள்வாய்.

பாரத  தேசம் புண்ணிய பூமி! உலகுக்கு, அமைதியையும், ஆன்மீக வெளிச்சத்தையும் தரவேண்டிய கடமை இருக்கிறது! தன்னுடைய கடமையை சரிவரச் செய்வதற்குத் தடையாக இருக்கும், உட்பகை வெளிப்பகை அனைத்தையும் அகற்றி, நல்லதொரு தலைமையை  இந்த தேசத்திற்கு அருள வேண்டும்!

சுற்றி நில்லாதே பகையே! துள்ளி வருகுது வேல்!

ஓம் ஆனந்தமயி, சைதன்ய மயி, சத்ய மயி, பரமே!


ஜனவரி முதல் தேதி!  புத்தாண்டின் முதல் நாள் மட்டுமில்லை. ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில், ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் அடியவர்களுக்கு தரிசனம் தரும் நாளாகவும் தொடர்கிறது. தரிசன நாள் செய்தியாக, புத்தாண்டுப் பிறப்பன்று ஆசிரமம் செல்லும் அன்பர்களுக்கு, தரிசன நாள் செய்தி கிடைக்கும். கீழே அதைக் காணலாம்! நேரில் செல்பவர்களுக்கு, கடிதம் எழுதி வேண்டிக் கொள்பவர்களுக்கு  சமாதி மேல் வைக்கப் பட்ட மலர்களும் அருளாசியோடு கிடைக்கும்.  புத்தாண்டு, ஸ்ரீ அன்னையின் அருளாசியோடுதுவங்கட்டும்!


புத்தாண்டு வாழ்த்துக்கள்!

6 comments:

  1. வழங்கிய அனைத்திற்கும் நன்றி சொல்லி கிடைக்கப் பெறாதவைகளுக்கு இறைஞ்சி நிற்கிறோம்....அன்னையின் அருள் பூரணமாக உலகை ஆளட்டும்....
    புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. happy new year sir

    ReplyDelete
  3. //பாரத தேசம் புண்ணிய பூமி! உலகுக்கு, அமைதியையும், ஆன்மீக வெளிச்சத்தையும் தரவேண்டிய கடமை இருக்கிறது!

    சுற்றி நில்லாதே பகையே! துள்ளி வருகுது வேல்! //

    நல்ல எண்ணங்கள் என்றைக்குமே பொய்த்ததில்லை.

    தங்களுக்கும் அன்பான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும்!

    ReplyDelete
  4. வாருங்கள் ஜீவி சார்! இது என்னுடைய அபிலாஷையோ, வெறும் கோரிக்கையோ இல்லை. இந்தப் புண்ணிய பூமி, கர்ம பூமி. உலகத்தின் ஆன்மீக குருவாக இருந்து அமைதியையும், ஒருமையையும் சொல்லித் தருகிற கடமை உள்ள பூமியும் கூட! இந்த வார்த்தைகள், பதிவின் ஆரம்பத்திலேயே, ஸ்ரீ அரவிந்த அன்னையின் வார்த்தைகளில் உள்ளவை தான்.

    ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு என்று எந்த தனி அபிமானமும் கூட இல்லை. இன்றைக்கு ஆசிரமத்தில் தரிசன நாள். ஸ்ரீ அரவிந்தரையும், அன்னையையும் நினைத்துச் சேவிப்பதற்கு இது ஒரே பிரமேயம்மட்டுமே.

    வாழ்த்துக்களுக்கு நன்றி. மங்களம் தழைக்கட்டும்!

    ReplyDelete
  5. இந்நாளும் இனி வரும் நாட்களும் அனைவருக்கும் மிகச்சிறப்பாய் அமையட்டும்.

    ReplyDelete
  6. Thanks for a fine New Year message

    அருமையான புத்தாண்டு தினச் செய்தி.

    //ஸ்ரீ அரவிந்த அன்னையே!
    உன்னைச் சரண் அடைகிறேன்.
    அறியாமை, முயலாமை, இல்லாமை, இப்படி எல்லா ஆமைகளையும் என் தோள்களில் இருந்து இறக்கி வைக்க தயவு செய்வாய். //

    அன்னையின் அருள் வழி நடத்தட்டும். நன்றி

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!