கோழிமுட்டைப் பொருளாதாரம்! ஒரு நர்சரிப் பாடம் (ல்)



 லூயிஸ் கரால் என்றொரு எழுத்தாளர்!  அற்புத உலகில் ஆலிஸ், கண்ணாடி வழியே என்ற இரு கதைகளை எழுதினார். மேலோட்டமாக, சிறுவர்களுக்கான கதை மாதிரி இருந்தாலும், கொஞ்சம் அங்கங்கே, அன்றைய அறிவியல் ஆராய்ச்சியை, அரசியலை நக்கலடிக்கிற மாதிரி, கதை போகும்.

ஆலிஸ் என்ற ஒரு சிறுமி, ஒரு பூனை ரொம்ப கம்பீரமாக உடையணிந்து தன்னுடைய கோட்டுப் பையில் இருந்து கடிகாரத்தை எடுத்து, மணி பார்ப்பதை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு,  அந்தப் பூனையைப் பின் தொடர்கிறாள். ஒரு விசித்திரமான உலகில், விசித்திரமான அனுபவங்களைச் சந்திக்கிறாள்.

அதிலே கோழிமுட்டை மாதிரி ஒரு ஆசாமி! ஹம்ப்டி டம்ப்டி என்று பெயர்! ஒரு சுவற்றின் மீது அமர்ந்திருப்பதைப் பார்க்கிறாள்! ஐயோ, கீழே விழுந்துவிடப் போகிறீர்கள் என்று ஆலிஸ் சொல்லும் போது, அந்த ஆசாமி அப்படியெல்லாம் ஆகாது, அப்படியே ஆனாலும் ராஜா தன்னுடைய குதிரைகள், ஆட்கள் எல்லோரையும் அனுப்பி உதவுவதாக வாக்களித்திருப்பதாகச் சொல்லுகிறார். பேசிக் கொண்டிருக்கும்போதே ஹப்டிடம்ப்டி தலைகுப்புற விழுகிறார்! அரசனுடைய குதிரைகளும், படைவீரர்களும் ஓடிவந்து ஹம்ப்டி தம்பதியைக் காப்பாற்ற முனைகிறார்கள்! என்ன ஆகிறது என்பதைச் சிறு குழந்தைகளிடம் கேட்டால் கூட, ஒரு பாட்டாகப் பாடிப் பதில் சொல்லி விடுவார்கள்!

என்னவென்று தெரியவில்லையா? இந்த வீடியோவைப் பாருங்கள்!



இந்த மாதிரித் தான், வங்கி, நிதித்துறைகளும்! மிகவும் வலிமையோடு இருப்பதாகச் சொல்லிக் கொள்வார்கள்! அப்புறம் குப்புற விழுந்து எழ முடியாமல் தவிக்கும்போது தான்,. அவர்களுடைய வலிமை,வாய்ச் சவடால் எல்லாம் எந்த அளவுக்கு இருக்கின்றன என்பதே புரியும்.

சில நாட்களுக்கு முன்னால் துபாய் உலகம் சந்தித்த சரிவைத் தொட்டு  எழுதியிருந்தேன். உலகத்திலேயே அதி உயரமான கட்டடம் திறக்கப் பட்டது மாதிரி செய்திகள் துபாய் பிரச்சினையில் இருந்து மீண்டு விட்டதாகத் தோற்றம் அளித்தாலும், உண்மையில் நிலவரம் இன்னும் மோசமாக இருக்கிறது என்று தான் பொருளாதார, நிதித் துறையை ஆராய்ந்துவரும் செய்திகள் சொல்கின்றன.


818 மீட்டர் உயரமான கட்டடத்தைக் கடந்த நான்காம் தேதி திறந்து வைத்து, துபாய் எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதைக் காட்டிக் கொண்டதாக இருந்தாலும், துபாய் அரசின் நிதி நிர்வாகத் திறமையைப் பற்றி மட்டுமல்ல,  தாக்குப் பிடித்து மீண்டு வருவதைப் பற்றிக் கூட, மிக மோசமான மதிப்பீடுகள் தான் இருக்கின்றன. துபாய் உலகத்தின் கடனுக்கு, அது அரசு நிறுவனமாக இருந்த போதிலுமே கூட, அரசு பொறுப்பேற்றுக் கொள்ளாது என்று அறிவித்தவுடனேயே, துபாய் அரசின் கடன் பத்திரங்களோடு, அதன் பொருளாதாரத்தைப்  பற்றிய மதிப்புமே குப்பையாகிப் போனது தான் மிச்சம். எதிர்பார்த்தபடியே, அபுதாபி, பத்து பில்லியன் டாலர்களைக் கடனுதவியாக அறிவித்திருக்கிறது. அப்படி அறிவிக்கப் பட்ட பிறக்குமே கூட, துபாய் உலகத்தின் கடன்கள் முதலில் அறுபத்தொன்பது அப்புறம்  எண்பது பில்லியன் டாலர்கள் என்று சொல்லப் பட்டது, இப்போது நூறு பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. இன்னமும் உண்மையான விவரங்கள், வெளிப்படையான கணக்கிடும் முறையில் வெளிவரவில்லை.

துபாயில் மட்டுமல்ல, சவுதியிலுமே கூட  சாத் குழுமம் மற்றும் அஹமத் ஹமாத் அல்கோசைபி   சகோதரர்கள்  என்ற இரண்டு மிகப் பெரிய குடும்ப  நிறுவனங்கள், போன ஆகஸ்ட் மாதம் பல பில்லியன் டாலர்கள் கடனைத் திருப்புவதில் தவறிய செய்தியோடு சேர்த்துப் பார்க்கும்போது, முக்கியமாக  நிறைய நிழலான விஷயங்கள் இருப்பது, கணக்கிடும் முறையோ, வங்கி அல்லது பொருளாதாரத்தைப் பற்றிக் கொஞ்சம் கூடத் தெரியாதவர்களும் புரிந்துகொள்ளக் கூடியது தான்!

அமெரிக்க வங்கிகளைப் பற்றி பேசும்போது, பேராசையால், ஆதாயத்தை மட்டுமே குறியாக வைத்துக் கொண்டு மற்ற எல்லாவற்றையும் காற்றில் பறக்க விடும்  அடிப்படைத் தவறே மீண்டும் மீண்டும் செய்யப் படுவதும், அதன் விளைவுகளை, அமெரிக்கா மட்டுமல்லாமல், உலக நாடுகளும் சேர்ந்து  அனுபவிக்க வேண்டிய சூழ்நிலையைப் பற்றியும் முந்தைய பதிவுகளில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம்.

வரிகளில் இருந்து தப்புவிக்கும் சுவர்க்கங்கள்! கொள்ளையடிக்கப் பட்ட, சுரண்டப்பட்ட, அடிமை உழைப்பில் உருவான செல்வங்களைப் பதுக்க, பாதுகாக்க, இந்த மாதிரி வங்கி, நிதித்துறைப் பிணம் தின்னிக் கழுகுகளால் உருவாக்கப் படுபவை!

ஒரு தனி எமிரேட்டாக, எண்ணெய் ஏற்றுமதி வருமானம் மிகக் குறைவுதான், அப்படியிருந்தும் முப்பத்தெட்டே ஆண்டுகளில் துபாய் எப்படி இத்தனை பெரிய வர்த்தக மையமாக, இவ்வளவு உயரமாக வளர முடிந்தது?

ஐந்துலட்சத்திற்கும் மேலான எண்ணிக்கையில் ஆசிய நாடுகளில் இருந்து அடிமைச் சேவகம் செய்யத் தொழிலாளர்கள், உல்லாசம் தருவதற்கு உஸ்பெஸ்கிஸ்தான் அழகிகள், வரியில்லாத சந்தை, கேளிக்கை மையங்கள் என்று, மூலதனம் துபாய் என்ற சின்னஞ்சிறிய இடத்தில் குவிந்ததற்கு, வரி ஏய்ப்புச் செய்பவர்களின் சொர்க்க பூமியாக மட்டுமல்ல, தாவூத் இப்ராஹீம் மாதிரிக் குற்றங்களில் கோடிகள் ஈட்டும் புள்ளிகளுக்கும் ரத்தினக் கம்பளம் விரிக்கப் பட்டது தான்.

வரலாற்றில் ரோம சாம்ராஜ்யத்தை அடிமைகள் சாம்ராஜ்யம் என்று சொல்வதுண்டு. அதே மாதிரி, தாங்கள் சுகவாசிகளாக இருந்து கொண்டு இன்னுமொரு  அடிமை சாம்ராஜ்யத்தை உருவாக்க, சமீப கால வரலாற்றில், அவ்வப்போது முயற்சிகள் நடப்பதும், தங்களுடைய சுகவாசத்தாலேயே சரிந்து விழுவதும், துபாயை வைத்து, வளைகுடா நாடுகளில் ஆரம்பித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். பெட்ரோல் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு, அகலக்கால் விரிக்கிற பொருளாதாரம் எத்தனை நாள் நிற்கும்? டாலர் மதிப்பு ஏறி இறங்குவதில், வாரமொன்றுக்கு சராசரியாக இருநூற்றைம்பது மில்லியன் டாலர்களை அமெரிக்கப் பொருளாதாரம் ஆதாயமாக, (அதாவது கடன் குறைவதில்) பெறுவதாக, ஒரு புள்ளி விவரம்  சொல்கிறது.

துபாய்ப் பொருளாதாரம், நீர்க்குமிழி மாதிரிப் பெரிதாக இப்போது தோன்றுவது, இருப்பது உண்மையே ஆனாலும், வெடித்து ஒன்றுமே இல்லாமல் போவதற்கான நேரம் எப்போது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நிகழலாம் எண்பது தான் கசப்பானஉண்மை.

பேராசை கொண்டவனும் கெட்டான்! கெட்டவனைத் தொட்டவனும் கேட்டான் என்ற கதையாக, இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, பெட்ரோ-டாலர்கள் என்று சொல்லப் படும், கச்சா எண்ணெய்  விற்பது, விற்றதை முதலீடு செய்வது எல்லாமே அமெரிக்க டாலர்களில் தான் என்ற நிலையை உண்டாக்கிக் கொண்டது. புலிவாலைப் பிடித்த நாயர் கதையாக, வாலை விடமுடியாமல் நாயரும், நாயரைக் காலி செய்ய முடியாமல் புலியும் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கும் நிலையில், மூன்றாவதாக, இன்னொருத்தரும் ஆட்டத்தில் குதிக்கிறார்!

சீனா! அடுத்த பொருளாதாரச் சண்டியராகக் களத்தில், கோதாவில் குதித்தாயிற்று!

சீனா,பொருளாதார வளர்ச்சியில் இந்த ஆண்டு,  மூன்றாவது இடத்திற்கு ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இரண்டாமிடத்தில் ஜோராக வந்து அமரும் என்று கணக்கிட்டுச் சொல்கிறார்கள். அமெரிக்கா, இப்போதிருக்கும் முதலிடத்தை எட்டிப் பிடிப்பது, முதலில் இன்னும் முப்பத்தொரு ஆண்டுகள் ஆகலாம் என்று சொன்னவர்கள், இப்போது இன்னும் பதினேழே ஆண்டுகளில் தாண்டி வந்துவிடுமென்றும் சொல்கிறார்கள்..

தொடர்ந்து பேசுவோம்!


தொடர்ந்து பேசுவதற்கு முன்னால், இது தொடர்பான இந்தப் பழைய பதிவுகளைப் படித்து விடுவது, குறைந்தபட்சம் அங்கே இருக்கும் வீடியோக்களைப் பார்த்துவிடுவது, பொருளாதார நெருக்கடி,  அமெரிக்க வங்கி நிதித்துறைகள் சந்தித்த சரிவு, துபாய்ப் பொருளாதாரம், அதனுடைய தொடர் விளைவுகள் இவற்றைப் புரிந்து கொள்ளக் கொஞ்சம் உதவியாக இருக்கும்!

துபாய்! டுபாக்கூர்! பொருளாதாரம்!வட கொரியா!

உலகம் போகும் போக்கை முடிவு செய்யும் காரணங்கள்!

வாலு போயிக் கத்தி வந்தது...டும்..டும்..டும்!


அறிவை வளர்த்துக் கொள்ளுவதும், அறிந்ததைப் பகிர்ந்து கொள்வதும் தான் நான் ஓதுகின்ற ஒரே வேதம்! இது ஒரு கலக்கமான மனநிலையில், துபாய்க் காசுக்காக அங்கே என்ன சூழ்நிலையில் இருக்கிறாரோ தெரியாது, மிரட்டிப் பின்னூட்டமிட்ட வருக்கு நான் சொல்லும் ஆறுதலானவார்த்தை! 





12 comments:

  1. நல்ல ஆய்வு.

    துபாய் மட்டுமல்ல, மத்தியக் கிழக்கு நாடுகளின் வளர்ச்சியே சென்ற ஐம்பது வருடங்களுக்குற்பட்டது தானே? எண்ணையை நம்பி இருக்கும் நாடுகள்.

    பேராசை பெரு நஷ்டம் என்பதை ஒவ்வொரு மொழி, நாடு, கலாசாரம் அறிந்திருந்தாலும் மாறப்போவதில்லை. பேராசையின் சுவடுகள் படிந்து கொண்டு தானிருக்கும். இன்றைக்கும் சரி, இன்னும் நூறாண்டுகளுக்குப் பின்னும் தொடரும் என்று நம்புகிறேன். மனித குணம்.

    இருந்தாலும், பொருளாதார வளர்ச்சி/தேக்கம் பற்றிய கணிப்பு கொஞ்சம் சிக்கலான சமாசாரம் தான். GDP போன்ற கணக்கிடக் கூடிய அளவுகள் (அலவுகள்?) இருந்தாலும் உத்தேசித்துக் கூடச் சொல்ல முடியாத சில சாத்தியங்களும் பொருளாதார வளர்ச்சி/தேக்கத்தைப் பாதிக்கின்றன. உதாரணமாக, சைனாவிலும் இந்தியாவிலும் மக்கட்தொகைக் கணக்கில் 1-20 வயதுக்குட்பட்ட மக்கட்தொகை 40% என்று படித்தேன். உலகிலேயே இந்தியாவில் தான் இந்த வயது மக்கட்தொகை அதிகம் (40%), தொடர்ந்து சைனா (28%). இன்னும் பத்து/இருபது ஆண்டுகளில் இந்த வயதுக்கூட்டம் தான் "most productive" வயதை எட்டும். அந்த நிலையில் பொருளாதார வளர்ச்சி இன்னும் மேம்படும். இந்தியாவின் "productive force" அதிகமாக இருந்தாலும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமான மற்ற அலவுகள் (capital and land) இந்தியாவில் இல்லை. சைனாவில் உள்ளன. முரணாக, அமெரிகாவின் productive force is declining. இன்னும் இருபது வருடங்களில் அமெரிக்க ஐரோப்பிய ஜப்பானிய சராசரி வயது 45க்கு மேல். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது சைனா பொருளாதார வளர்ச்சியில் உலகிலேயே முதலிடத்திற்கு வரச் சாத்தியமிருக்கிறது. சைனாவின் மிகப் பெரிய weakness - socialism. நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் பூச்சுவேலைப் பொருளாதாரம். சைனா உண்மையிலேயே திடமான பொருளாதாரமா இல்லை பூச்சுவேலையா என்பதை எல்லோருமே கவனித்து வருகிறோம். இந்தியாவில் பூச்சுவேலை அதிகமில்லை. இந்தியாவின் பூச்சுவேலை அரசியல்வாதிகளிடையே இருக்கிறது - unfortunately, they decide fiscal policies. இருபது வருடங்களில் இந்த பூச்சுவேலை அரசியல்வாதிகளிடமிருந்து இந்தியா விடுபடும் சாத்தியமும் இருக்கிறது. It will be a good race to watch: india - china.

    ReplyDelete
  2. எண்ணெய் ஒரு வலிமையான ஆயுதம் என்று எகிப்தின் நாசர் சொல்லிக் கொடுக்கும் வரை, வளைகுடா நாடுகளில் பிரிட்டன் தனது தனி தர்பாராகத் தான் நடத்திக் கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போருக்கு, தர்பார், அமெரிக்காவுக்கு மாறி விட்டது.

    சீனப் பொருளாதாரத்தைப் பற்றிய தகவல்கள், சரியானவை தான்! Trade surplus அத்தனையையும் அமெரிக்க அரசுப் பத்திரங்களிளேயே சீனா முதலீடு செய்திருப்பதும், நினைத்தால், சீட்டுக்கட்டினால் கட்டப்பட்ட கோபுரத்தைச் சரித்துவிடுவதைப் போல சீனா அமெரிக்காவைச் சரித்து விட முடியும் என்பதும் உண்மையான தகவல்தான்.

    இங்கே வங்கிகளின் பேராசை, ரியல் எஸ்டேட் துறையில் நடக்கும் சூதாட்டம், வரி ஏய்ப்பு, கருப்புப்பணம், போதை மருந்துகளில் புரளும் பணம் எல்லாவற்றையும் மையமாகத் தொட்டு எழுதிய பதிவுதான் இது. இன்னும் அதிகமான விவரங்கள், references வேண்டுமானால் தருகிறேன்.

    மக்கள்தொகையில் இளம் வயதினர் சதவீதம், மொத்த உற்பத்தி, இவையெல்லாம் வேறு சமாசாரம். இங்கே பேசப் பட்டதற்கு சம்பந்தமே இல்லாத ஒன்றும் கூட! சீனாவின் வளர்ச்சி குறித்த விவரங்களை, சீனப் பெருமிதம், சீனா அறுபது என்ற குறியீட்டுச் சொற்களில், வேறு சில பதிவுகளைப் பார்க்கலாம்.

    ReplyDelete
  3. முதல் பாராவில் இரண்டாம் உலகப் போருக்கு என்று தனியாக நிற்கிறது..

    இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, தர்பார், அமெரிக்காவுக்கு மாறி விட்டது என்று படித்துக் கொள்ளவும்.

    ReplyDelete
  4. யோவ் குடு குடு பாப்பரக்கிழம்,
    என்னவோ மன்மோகன்சிங் கணக்கா உளறி கொட்டுற.
    டாபர்,உன்னையெல்லாம் கேஸ் சேம்பருக்கு அனுப்புவ்வொம், குழந்தையைக்கூட விட மாட்டொம்டா கிழடாபர்.வந்துட்டான் போய் வேதம் ஓதுடா சாத்தானே

    ReplyDelete
  5. படிக்கும் சுவாரஸ்யத்தில் அந்த 'பின்' தானாகவே மனசில் பதிவாகிவிட்டது, கிருஷ்ணமூர்த்தி,சார்!

    விவரங்களைத் தரும் பாங்கு வியக்க வைக்கிறது.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  6. IP Address 94.59.250.189
    Country United Arab Emirates
    Region Dubai
    City Dubai
    ISP Emirates Telecommunications Corporation
    Returning Visits 0
    Visit Length 59 mins 18 secs

    பொட் "டீ"க்கடை நடத்திப் போணியாகாமல், துபாயில் இருந்து பின்னூட்ட மிரட்டல் விடுக்கும் துபாய் வாசகருக்கு!

    எப்படி பயமுறுத்துவது என்று கூடத் தொழில் தெரியவில்லையே! இதில் ஆயிரம் எழுத்துப் பிழை வேறு! போய்ப் பிழைப்பைப் பாருங்கள்! உங்களுடைய கஷ்டம் என்னவோ!

    ReplyDelete
  7. ///சில நாட்களுக்கு முன்னால் துபாய் உலகம் சந்தித்த சரிவைத் தொட்டு எழுதியிருந்தேன். உலகத்திலேயே அதி உயரமான கட்டடம் திறக்கப் பட்டது மாதிரி செய்திகள் துபாய் பிரச்சினையில் இருந்து மீண்டு விட்டதாகத் தோற்றம் அளித்தாலும், உண்மையில் நிலவரம் இன்னும் மோசமாக இருக்கிறது என்று தான் பொருளாதார, நிதித் துறையை ஆராய்ந்துவரும் செய்திகள் சொல்கின்றன. ///

    இது முற்றிலும் உண்மைதான். விவேக் ஒரு படத்தில் அடி வாங்கிகிட்டு வலிக்கலேன்னு கண்ல தண்ணிய்யோடு சொல்வாரில்லை அதுமாதிரி. துபையைப் பொறுத்தவரை பொருளாதாரம், நிதித்துறை மீண்டு வர குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது ஆகும் என்பதுதான் உண்மை. அதுவும் பொருளாதாரக் கொள்கையில் மாற்றங்கள் கொண்டு வரும் பட்சத்தில். ஒரு மெயில் ஒன்னு அனுப்பி இருக்கேன் பாருங்க. (படம் என்பதால் இங்கு இணைக்க முடியவில்லை). அதுதான் நிதர்சனம்.

    ReplyDelete
  8. வளைகுடா நாடுகளிலேயே துபாயின் (Dubai's Gulf Based Vacancies) ஷேர் ஆஃப் கல்ஃப்-பேஸ்டு வேலை வாய்ப்புகள் 2008-ல் 43% இருந்தது. அதுவே 2009-ல் 30% ஆகிவிட்டது.

    குவைத், பஹ்ரைனிலும் கூட இதே நிலைதான்.

    ஆனால், அபுதாபி, கத்தார், மிக முக்கியமாக சௌதி அரேபியாவில் பார்த்தால், வேலை வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது.

    But overall if you see, across the region, investment, administration and marketing professionals have been worst hit.

    ReplyDelete
  9. http://www.forbes.com/2010/01/07/dubai-middle-east-entrepreneurs-wharton.html

    சும்மா புட்டு புட்டு வச்சிருக்காங்க.

    ReplyDelete
  10. ஃபோர்பிஸ் தளத்தின் இன்னொரு கட்டுரையில், கச்சா எண்ணெய் விலையை ஒட்டி நிலைமை சீரடையும் என்று ஒரு எதிர்பார்ப்பும் வெளியாகியிருக்கிறது. சீட்டுக் கட்டுக்களின் அடுக்கு ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதனால், ஒருவருக்கொருவர் முட்டுக் கொடுத்துக் கொண்டே ஆக வேண்டிய நிலையும் உருவாகியிருக்கிறது.

    அதே நேரம் ஒளிவு மறைவற்ற கணக்கிடும் முறைகள் அவசியமாவதும் , அடிமைகளின் உழைப்பில் சுகம் காணும் சுகவாசிகளின் சொர்கமாக என்றைக்கும் இருந்துவிட முடியாது என்பதும் தெளிவாகி வருகிறது.

    தென்னை மரத்தில் தேள் கொட்டிப் பனை மரத்தில் நெறி கட்டின கதையாக, இந்தச் சூதாடிகளுக்கு ஏற்பட்ட நட்டத்தை, கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி ஈடுகட்ட முயல்வார்கள் என்பதும், ஏற்கெனெவே பொருளாதாரச் சுமைகளைத் தாங்க முடியாமல் தவித்து வரும் வளர்ந்து வரும் நாடுகள் தலையில் தான் இந்தச் சுமை வந்து விழும், விழுந்துகொண்டிருக்கிறது என்பதைச் சொல்வதற்காகத் தான் இந்தப் பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  11. நாகரிகம் தெரியாத பின்னுட்டங்களை தடை செய்து விடலாமே!

    ReplyDelete
  12. பின்னூட்டங்களை மட்டுறுத்தி அப்புறம் தான் வெளியிடுகிறேன். துபாயில் இருக்கும் அவருடைய நிலை அங்கே அவ்வளவு திருப்திகரமாக இல்லாததாலோ, அல்லது மனதில் உள்ளதைப் பகிர்ந்துகொள்ளச் சரியான வடிகால், நண்பர்கள் இல்லாததாலோ தான், இப்படி வெறுப்பை உமிழும் மனங்களாக மாறிவிடும் சூழல் இணையத்தில் இருக்கிறது. இப்படி ஒரு மிரட்டலை வெளியிடுவதால் அவருக்கு ஒரு அற்ப திருப்தி கிடைக்குமானால், அதைத் தடுப்பானேன்?

    sunfull movement, sunfull என்ற வார்த்தையை கூக்ளில் இட்டுத் தேடித் பாருங்கள்! இணையத்தில் உலவும் வன்முறையை பற்றியும் அதைத் தவிர்க்க, நல்லெண்ணங்களை விதைத்தல் என்று தென் கொரியாவில் தொடங்கப் பட்டிருக்கும் இயக்கத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!