Sunday, January 10, 2010

சண்டேன்னா மூணு! கார்டூன், துபாய், சசி தரூர்!மெயில்  டுடே  என்ற பத்திரிகையில் வெளிவந்த மேலே நீங்கள் பார்க்கும் கார்டூனைப் பார்த்துவிட்டுக் கோபமாக, ஆஸ்திரேலிய அரசு ரொம்பவும் தான் கொந்தளித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கப் போவது, அவ்வளவு பாதுகாப்பானது அல்ல என்று, இந்திய அரசு சும்மா உள உளாக்காட்டிக்குத் தான் என்று வெளியிட்ட அறிக்கையைக் கூட, இது சாதாரணமானது தான் என்று எடுத்துக் கொண்டவர்கள், இந்தப் படத்தைக் கண்டு பொங்கி எழுதியிருக்கிறார்கள். இந்திய அரசின் யோக்கியதை அறிக்கை வெளியிடுவதற்கு மேல் போகாது என்பதும், அது சும்மாப் பம்மாத்து வேலை மட்டுமே என்பதைத் தெரிந்து வைத்திருப்பதால், அதைப் பற்றிக் கருத்துச் சொல்லும்போது, அது சாதாரணமானது தான் என்று எடுத்துக் கொண்டவர்கள், ஒரு செய்தி ஊடகத்தில் நச்சென்று மனதில் தைக்கிற மாதிரி, அமெரிக்காவில் க்ளூ க்ளக்ஸ் கிளான் என்று அழைக்கப் படும் இனவேறிக் கும்பலின் படத்தைப் போட்டு, அதற்கு ஆஸ்திரேலியப் போலீஸ் பாட்ஜை மாட்டி இருப்பது உசுப்பி விட்டிருக்கிறது!

அதுவும் போலீஸ் பாட்ஜுக்காக இல்லை! தொடர்ந்து இந்த செய்தி வெளி வந்து கொண்டே இருப்பது, வெளிநாடுகளில் இருந்து படிக்க வரும் மாணவர்களை யோசிக்க வைத்து எங்கே கல்வி வியாபாரம் படுத்து விடுமோ என்ற கவலை வந்துவிட்டதால்தான்!

இந்த செய்தியைப் பாருங்கள்! ஆஸ்திரேலியாவில் படிக்கும் தன்னுடைய மனைவியைப் பார்க்கப் போன ஒருவர் மீது தீயை வைத்துக் கொளுத்த முயற்சித்திருக்கிறார்கள். இந்திய அரசோ, செய்தியை வெளியிடுவதில் நிதானமாக இருங்கள்! நிலைமையைச் சிக்கலாகி விடக் கூடும் என்று இங்குள்ள பத்திரிகையாளர்களைக் கெஞ்சிக் கொண்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய தொழில் கல்வி! வெளிநாட்டில் இருந்து படிக்க வரும் மாணவர்கள், ஆஸ்திரேலியாவுக்கு, சுமார் ஆயிரத்தைநூறு கோடி அமெரிக்க டாலர்களுக்கு சம்பாதித்துத் தரும் தொழிலாக இருக்கிறது. இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் ஒருலட்சத்து இருபதாயிரம் பேர் அங்கே படிப்பதற்காக வந்து தங்கியிருக்கிறார்கள்.

நாலந்தா, அதற்கப்புறம் காஞ்சி என்று உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தேடிவந்து படிக்க வந்த கடிகை, கல்விக்கூடங்கள் இருந்த நாடு இது!

கல்வித்துறையைப் பற்றி, தீவீரமாகச் சிந்திக்க வேண்டிய தருணம் இது!


நமது கல்வி முறையில் இருக்கும் கோளாறுகளை, மெக்காலே கல்வித்திட்டத்தை இன்னமும் வைத்துக் கொண்டிருப்பதை உறுதியாக உதறி எறிந்து விட்டு, சீர்திருத்தங்களுக்குத் தயாராக வேண்டிய தருணம்இது.oooOooo துபாய் மறுபடி பரபரப்புச் செய்தியாகி இருக்கிறது! இந்த செய்தியைப் படித்துப் பாருங்கள்!

பாகிஸ்தான்  பூர்வீகம் ஆனால் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற இருபத்துமூன்று வயதான ஒரு இஸ்லாமியப் பெண்! தனது காதலனுடன் திருமணம் உறுதியானதைக் கொண்டாடுவதற்காக ஒரு ஹோட்டலுக்குப் போயிருக்கிறார். துபாய்க் கடற்கரையில் உள்ள அட்ரெஸ் ஹோட்டல்!போன  இடத்தில், சிரியாவைச் சேர்ந்த ஒரு வெயிட்டர், மானபங்கப் படுத்தியதாக துபாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். பெண்கள் கழிப்பிடத்திற்குப் போனவரை அந்த வெயிட்டர் பின் தொடர்ந்து வந்து பலாத்காரம் செய்ததாக நண்பர்களிடம் சொல்லி அழுதிருக்கிறார்.அடையாள அணிவகுப்பில் சிரியாவை சேர்ந்த அந்த நபரை அடையாளம் காட்டியதாகவும் செய்திகள் சொல்கின்றன.

அதற்குப் பிறகு நடந்தது தான் கொஞ்சம் விபரீதமாக இருக்கிறது!

மறுநாளே புகார் கொடுத்த அந்தப் பெண்ணைக் கைது செய்தது  துபாய்ப் போலீஸ்! லைசன்ஸ் இல்லாத இடத்தில் குடிபோதையுடன் இருந்ததாகவும், திருமணமாகாமலேயே செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாகவும் வழக்குப் பதிவு செய்தது.


பாலியல் பலாத்காரப் புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டு விட்டு,  குடிபோதையில் இருந்ததாக ஒப்புக் கொண்டு, காதலனை உடனடியாகத் திருமணமும் செய்து கொண்டால், துபாயை விட்டு வெளியே போகலாம். மறுத்தாலோ, இஸ்லாமியச் சட்டங்களின் படிக் கடுமையாகத் தண்டனையை  அனுபவிக்க வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை வேறு! பிரிட்டிஷ் துணை தூதரகம், உடனடியாக அவர்களுக்குத் திருமணத்தை அவசரகால ஏற்பாடாக நடத்தி வைத்து, பிரிட்டிஷ் பிரஜை ஆயிற்றே, வெளியே கொண்டு வந்து விடலாம் என்று  முயற்சி செய்து கொண்டிருக்கிறார்களாம்! சமீப காலமாகவே, உல்லாச விடுமுறையாக துபாய்க்கு  வரும் பிரிட்டிஷ்காரர்கள், இப்[படி சிக்கிக் கொள்வது நடந்து கொண்டு தான் இருக்கிறது என்றும் செய்திகள்சொல்கின்றன.


தி சன் பத்திரிகைச் செய்தி இது. கார்டியன் பத்திரிகைச் செய்தியின் கடைசி இரண்டு வரிகள்!

In July 2008 businessman Vince Acors and publishing executive Michelle Palmer received three-month jail terms after being convicted of having sex on a beach in July 2008. 


On his return to the UK, Acors said: "Dubai is a massive contradiction – everything is available yet everything is illegal."

முரண்பாடுகள்!  துபாய்ப் பொருளாதாரமுமே முரண்பாடுகளின் மொத்த உருவம் தான்! 

பேராசையும் கூட  இரண்டு பக்கமும் பற்றவைக்கப் பட்ட மெழுகுபோலத்தான்! படத்திற்கு நன்றி நவாஸுதீன்!

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அது முறையாக வளர்வதற்குக் காலம் ஒரு முக்கியமான காரணம்! குறைப் பிரசவங்கள், fast food, instant growth, அஜினோ மோட்டோ எல்லாமே ஆபத்தானவை தான்!

"அடப்போய்யா! நம்ம ஊர்ல அஞ்சு வயசுப் பையனையே கஞ்சா வித்ததாக் கைது செஞ்சு, அசிங்கமானப்புறம் தான் விட்டிருக்காங்க! இதை துபாய் வரை போய்த் தான் பாக்கணுமாக்கும்!" என்று நொடித்துக் கொண்டீர்களானால், அதிலும் நியாயம் இருக்கிறது!

 


oooOooo 

டிவிட்டினாலும் தப்பு! டிவிட்டாவிட்டாலும் தப்பா?


அட போங்கப்பா!......... இப்படி   சிரித்து சிரித்து ஏதாவது சொல்லி சிக்கலில் மாட்டிக் கொள்வதே பிழைப்பாய்ப் போய் விட்டது!

சசி தரூர் மீண்டும் காங்கிரஸ் கலாசாரக் காவலர்களின் கவனத்திற்கும், கோபத்திற்கும் ஆளாகியிருக்கிறார்! பதவிக்காக மட்டுமே காங்கிரசில் ஒட்டிக் கொண்டு, நேரு-இந்திரா-ராஜீவ் புகழை உயர்த்திப் பிடிப்பது, விமரிசனங்களுக்கு அப்பாற்பட்ட பிரகிருதிகளாக துதி பாடிக் கொண்டிருப்பது மட்டுமே காங்கிரஸ் கலாசாரம், காங்கிரசில் இருக்கும் எவராக இருந்தாலும் செய்ய வேண்டிய வேலை என்றிருக்கும்போது, இந்த அதிமேதாவி, நேருவின் வெளியுறவுக் கொள்கைகளில் ஓட்டை இருந்தது என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சொன்னதை ஆமோதித்துப் பெரிய பாவத்தை செய்து விட்டார் என்று குமுறிக் கொண்டிருக்கிறார்கள்!


நேரு வாரிசுகளைத் தவிர வேறு யாருக்கோ தலையாட்டலாமோ?

வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் நான் தான் பாஸ், இங்கே நான் சொல்வது மட்டுமே செல்லும் என்று சொன்ன, சசிதரூரின் மூத்த அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா, இப்போது இந்தப் பூனைக்கு எப்படி மணி கட்டப் போகிறார் என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்!

அது தானே! காங்கிரஸ் என்றால் திண்டுகளில் சாய்ந்து கொண்டே, பேசிக் கொண்டே இருப்பவர்கள் கட்சி என்று தானே அர்த்தம்! இவர்களுக்காக வேறு யாராவது தானே  வந்து செய்து கொடுத்தாக வேண்டும்!

அப்படி என்னதான் சொல்லி விட்டார் சசிதரூர்? எனக்கு எல்லா தர்மங்களும் தெரியும், எல்லா நியாயங்களும் தெரியும் என்று சொல்கிற மாதிரி இருந்ததாம் காந்தி நேரு இருவருடைய வெளியுறவுக் கொள்கை! காரணம்,ஆதாரம் இல்லாமல் இதில் காந்தியை ஏன் வம்புக்கிழுத்தார்கள் என்பது தான் தெரியவில்லை!


“I agree with Parekh’s opinion on Nehru and Gandhi’s foreign policies. It was more like a moralistic running commentary,”

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷகில் அஹமது, ஒரு காங்கிரஸ்காரனாக இருந்துகொண்டு பண்டிட் நேருவின் பாரம்பரியத்தைக் காப்பாற்ற வேண்டுமே தவிர, அதை  விமரிசிக்கக் கூடாது என்ற மாதிரி சொல்லியிருக்கிறார்.


நேருவின் எந்தப் பாரம்பரியத்தை எப்படிக் காப்பாற்ற வேண்டுமாம்?! 


காங்கிரஸ்காரர்களுக்குத் தான் தெரியவில்லை! படம் பார்த்துவிட்டு உங்களுக்காவது தெரிகிறதா என்று சொல்லுங்கள்!
6 comments:

 1. congress thuthipadigal suyalabathirkagave aamam sami podugirargal karuthinai uttrunokama.indiavin sarithiram neruvin thappathayum athanai aadharitha ganhiyin seyalgalum nattai eppadi palakiullathu enbathai ellorum arivar-kashmir minority vote bank
  ittthyathi

  ReplyDelete
 2. dear sir

  edwina photovum keele punch dialogue vum

  simply superb

  ReplyDelete
 3. கருத்துக்கு நன்றி திரு பாலு! திரு ஃபிரான்சிஸ்!

  நேருவுடைய பலவீனம், அவரது அந்தரங்கச் செயலாளராக இருந்த எம் ஒ மத்தாய் எழுதிய புத்தகத்திலும், பெண், பேரன்கள் வடிவத்திலும் மிகவும் வெளிப்படையாகவே இருக்கின்றன. ஆனால், காந்தியை இதற்கு முழுக் காரணமாகவோ உடந்தையாகவோ இருப்பது போல சொல்வதுமே தவறு. தரூர் சொல்வது போல சுதந்திர இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை காந்தி எந்த வகையிலும் தீர்மானிக்கவில்லை, சம்பந்தப் படவுமில்லை.
  அரசின் கொள்கை முழுக்க முழுக்க நெருவலும், வி.கே கிருஷ்ண மேனனாலும் வடிவமைக்கப் பட்டவை. பிரிட்டிஷ் இந்திய அரசு, தன்னுடைய நலன்களுக்குத் தகுந்த மாதிரிக் கையாண்டு வந்த அயலுறவுக் கொள்கையின் நீட்சியே தவிர, ஒரிஜினல் விஷயம் எதுவுமில்லை. இதை சென்ற அக்டோபர் மாதம் எழுதிய பதிவுகளில் நிறையவே பார்க்கலாம்.

  அப்புறம்......திரு ஃபிரான்சிஸ்! நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சிய வார்த்தைகளைத் தமிழ்ப்படுத்தினால் இப்படி வரும்!

  /காங்கிரஸ் துதிபாடிகள் சுயலாபத்திற்காகவே ஆமாம் சாமி போடுகிறார்கள்.கருத்தினை உற்றுநோக்காமல் இந்தியாவின் சரித்திரம் நேருவின் தப்பதையும் அதனை ஆதரித்த காந்தியின் செயல்களும் நாட்டை எப்படிப் பழகியுள்ளது என்பதை எல்லோரும் அறிவர் காஷ்மீர், மைனாரிட்டி ஒட்டு வங்கி இத்தியாதி /

  தமிழிலேயே தட்டச்சிட ஒலிக்குறிப்பு அடிப்படையில் இணையத்தில் இருக்கும் போது http://www.google.com/transliterate/ இந்தத் தளத்தையோ, அல்லது higopi.com தளத்தில் தகடூர் என்ற நிரலி, nhm.in தளத்தில் என் எச் எம் எழுதி இ கலப்பை, முரசு அஞ்சல், அழகி, இப்படி ஏராளமான மென்பொருட்கள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. பயன்படுத்துவது எளிது. இவைகளில், இணையத்தில் இல்லாத சமயங்களிலும் பயன்படுத்த முடிவது கூடுதல் சிறப்பு. தமிழிலேயே எழுதிப் பாருங்களேன்!

  இருவருக்குமே இது எனது வேண்டுகோள்!

  ReplyDelete
 4. நம்ம இந்தியாவில் படித்துதான் C .V .ராமன்,சந்திரசேகர், தற்போது வெங்கட்ராமன் ஆகியோர் நோபல் பரிசு வாங்கியுள்ளனர்.நம்ம நாட்டில் இல்லாத என்ன பிஸ்கோத்து படிப்பு ஆஸ்திரேலியாவில் உள்ளது ?
  இந்தவிஷயத்தில் இ.அரசின் அணுகுமுறை 'வேகமாக அடித்தால் வலித்து விடுமோ ' என்பதுபோல்
  உள்ளது.வெட்கம்.

  துபாயில் இப்படியும் நடக்குதா ? இன்று ஒரு விஷயம் படித்தேன் .பிரான்சில் புர்கா அணிந்தால்
  700 யுரோ அபராதம் என்று அந்த நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். அதைப்பற்றி தங்கள் கருத்து அறிய ஆவலாக உளளேன்.

  காங்கிரஸ்-ல் முதுகெலும்பு உள்ளவர் சசி தரூர் ஒருவர்தான்.
  பாகிஸ்தான் விவகாரம் இடியாப்ப சிக்கலானதற்கு நேருவின் கொள்கைகளே காரணம். பாகிஸ்தான் விவகாரத்துக்கு செலவு செய்த பணத்தை கல்விக்கு செலவு செய்திருந்தால் இந்தியா எப்போதோ வல்லரசாயிருக்கும்.

  அப்புறம் அந்த கடைசி போட்டோ .வாவ்!! என்ன ஒரு expression .எங்கே புடிச்சிங்க இந்தபோட்டோவை ? சூப்பர்.

  நீங்கள் அறிமுகப்படுத்திய தளத்தால் தற்போது தமிழிலிலேயே பின்னூட்டம் இட்டுகொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 5. வாருங்கள் கைலாஷ்!

  இந்தப் பதிவில் சொல்லப் பட்ட விஷயங்களை ஒவோன்றாகப் பார்க்கலாம்!
  ஆஸ்திரேலியாவில் சில குறிப்பிட்ட துறைகளில் தரமான கல்வி கிடைக்கிறதென்பது உண்மை. Visual Communication, Animation போன்ற துறைகளில் ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் படிப்பதை விடத் தரமாகவும், கொஞ்சம் கம்மியான செலவு பிடிப்பதாகவும் இருக்கிறது என்று நண்பர்கள் சொல்கிறார்கள்.

  பிரச்சினை அங்கே அல்ல. தரமான கல்வியை, அடிப்படைக் கட்டமைப்பை, இந்தியாவில் நாம் உருவாக்க இது வரை உருப்படியான முயற்சிகள் எதுவுமே செய்யவில்லை. அரசியல் எள்ளவற்றிலும் புகுந்து குழப்பிக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டுக்குப் போய்ப் படிக்கும் இந்தியப் பிரஜைகளை, அவர்களுடைய நலன்களைப் பாதுகாக்க, இந்திய தூதரகங்கள் கையாலாகாதவை! இந்திய அரசு, அரசியல் வாதிகளைப் போலவே!

  அதற்கு நேர்மாறாக, துபாயில் சிறையில் சிக்கிக் கொண்ட தன்னுடைய பிரஜைக்காக பிரிட்டன் என்ன செய்கிறது என்பதை, ஒரு காரணத்தோடு தான் அடுத்த செய்தியாகத் தெரிவு செய்திருந்தேன். பிரிட்டன், கொஞ்சம் கசங்கல் இல்லாமல் பிரச்சினையைத் தீர்க்க முனைகிறது. அவர்களுடைய இடத்தில், ஒரு அமெரிக்கரோ, அல்லது ஒரு இஸ்ரேலியப் பிரஜையோ சிக்கியிருந்தால் அந்த அரசுகள் என்ன செய்திருக்கும் என்பது ஏற்கெனெவே பல சந்தர்ப்பங்களில் மிகக் கொடூரமாகவே நிரூபிக்கப் பட்டிருக்கின்றன.

  செய்திகளை நிதானத்தோடு வெளியிடும்படி இந்திய அரசு தெரிவித்ததை ஆஸ்திரேலிய அரசு பாராட்டியிருக்கிறது. அதே நேரம், அடுத்தடுத்து, இந்தப் பத்து நாட்களிலேயே இந்தியர்கள் மீது நடத்தப் பட்ட மூன்றாவது வன்முறைத் தாக்குதல் இது, அதைக் குறித்து ஒரு தெளிவான அணுகுமுறையை ஆஸ்திரேலிய அரசோ, தூதரக நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்த இந்திய அரசோ என்ன செய்திருக்கின்றன?

  அடுத்து சசி தரூர்! ஒரு தொழில்முறை ராஜதந்திரி! தமிழில் இப்படிச் சொல்வது முழுப் பொருளையும் சொல்லிவிடுமா என்று எனக்குப் புரியவில்லை. நீண்ட நாட்களாக ஐ நா சபையில் பணியாற்றிய ஒரு career diplomat! அரசியல் வாதியாக ஆவதற்குப் பரிணாமம் ரிவர்ஸ் கியரில் பயணிக்கவேண்டும் என்பது அவருக்கு இன்னமும் புரியவில்லை. இன்றைக்கு எயத்திகளைப் படித்துப் பார்த்தால், பத்திரிகைகள் தான் சொன்னதைத் திரித்துப் போட்டு விட்டன என்று கொஞ்சம் மழுப்பியிருக்கிறார். பன்றியோடு சேரும் கன்றுக்குட்டியும் எதையோ திங்கப் போகும் என்று சொல்வது எப்படியோ, அதே மாதிரித் தான்! சசிதரூர் ஒன்றும் அதற்கு விதிவிலக்கல்ல! காங்கிரசில் தப்பித் தவறி ஒரு நல்லவன் சேர்ந்துவிட்டால், அவனும் கடையழிந்துபோகச் செய்து விடுகிற கட்சிஅது!

  ReplyDelete
 6. நீங்கள் சொல்வது மிகவும் சரியானதே.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails