ஒரு நாள் போதுமா?


தேர்தல் நாளன்று மட்டுமல்ல, எல்லா நாட்களுமே இந்திய வாக்காளர்கள் ஏமாற்றப் படுகிற, வலிய வந்து தாமே ஏமாறுகிற  நாட்களாகத்தான் இருக்கின்றன!

அதுவும் மதுரை, திருமங்கலம் இடைத்தேர்தலுக்குப் பிறகு தேர்தல் என்று வந்தால் எத்தனை ஆயிரம் கிடைக்கும் என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு வலுவில் தங்களுடைய தலையோடு இந்த ஆட்டைக்கே வராதவர்கள் தலையையுமே சேர்த்து மொட்டையடிக்கக் கொடுக்கிற "வாக்காளப்  பெருமக்கள்"  பெருகி வரும் தமிழ்நாட்டில், தேர்தலில் வாக்களிப்பதோடு தங்கள் கடமை முடிந்து
விட்டது என்று நிம்மதியாகத் தங்கள் தலையை மொட்டையடிக்கக் கொடுக்கக் க்யூவில் நிற்காத வாக்காளர்களைப் பற்றிப் படிப்பதில், கொஞ்சம் ஆறுதல்! 

என்றைக்காவது ஒருநாள் தமிழ்நாடும் மாறாதா, இந்தியாவும் கொஞ்சம் உருப்படியான திசையில் வளராதா என்ற ஏக்கத்தோடு படிக்கும் செய்திகளை இந்தப் பக்கங்களில் உங்களோடு அவ்வப்போது பகிர்ந்து கொண்டு வருகிறேன்!

அந்தவகையில் தான், அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அதிபர் பொறுப்பை சென்ற ஜனவரி இருபதாம் தேதியன்று பொறுப்பேற்றுக் கொண்ட பாரக் ஒபாமாவின் செல்வாக்கு ஒரே வருடத்தில் கொஞ்சம் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது. அறுபத்தேழு சதவீதத்தில் இருந்து ஐம்பதுக்கு இறங்கி, இரு செய்தியில் நாற்பத்தேழு சதம் தான் என்று கூட இருந்தது, கருத்துக் கணிப்புகளில் சொல்வதாக செய்திகளில் பார்த்தேன்.

எட்டுவருடங்கள்! ஜார்ஜ் புஷ் பதவியை விட்டு விலகும்போது, அமெரிக்காவை மறுபடி ஒரு வியட்நாம் புதைகுழியில் சிக்கிக் கொண்ட மாதிரி, ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் சிக்கவைத்தது மட்டுமல்ல, அமெரிக்க வங்கி, நிதித்துறை ஒரு பெரும் சரிவை 2008 ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் சந்திக்க ஆரம்பித்தபோது,  சிக்கலில் இருந்து விடுவிக்கிறேன் பேர்வழி என்று லட்சக்கணக்கான கோடி டாலர்களை Troubled Asset Relief Program  என்றபெயரில், பேராசையால் சரிந்த நிறுவனங்களில் அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் இருந்து கொட்டி நிரப்பினார்.

2009 ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கிற வரை, அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னாலேயே தேர்தலில் வெற்றி பெற்று விட்டாலுமே கூட, முந்தைய அதிபரின் நிர்வாக அதிகாரங்களிலோ, முடிவுகளிளோ தலையிட முடியாது. ஜார்ஜ்  புஷ் கூடச் சேர்ந்து,  நிவாரண முயற்சிகளில் தன்னுடைய சம்மதத்தை ஒபாமா தெரிவித்ததை அமெரிக்க மக்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை.

போதாக்குறைக்கு, நிவாரணங்களை அள்ளி விழுங்கிய அமெரிக்க  பகாசுர நிறுவனங்கள், தங்களுடைய சொந்த லாபத்திற்காக மட்டுமே அதைப் பயன்படுத்தின. அமெரிக்க வங்கித் துறை, நிதித்துறை இவற்றின் பேராசையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணத்தின் பலன் போய்ச் சேரவில்லை. வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதில் இந்த பகாசுர நிறுவனங்கள் அக்கறை காட்டவில்லை.

சென்ற செப்டம்பர் அக்டோபரிலேயே, அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டு வருவதுபோல ஒரு சித்திரம் கிடைத்தது. பேராசையினால், தங்களைச் சுற்றியிருந்தவர்களையும் படுகுழுக்குள் தள்ளிய பகாசுர நிறுவனங்கள் மீள ஆரம்பித்தது உண்மைதான் என்றாலும், சராசரி அமெரிக்க மக்களுடைய வாழ்க்கை நிலையில் ஏற்பட்ட சரிவு, சோர்வு நீங்கவில்லை. ஆனால், அதிருப்தியும் கோபமும் அதிகரித்திருக்கிறது.

கொஞ்சம் தெம்பு ஊறினவுடனேயே அமெரிக்க பகாசுர நிறுவனங்கள், ரத்தம் குடிக்கும் ட்ராகுலாக்களாக மாறிவருவதையும், அவர்களுடைய லாப வேட்டை என்ற சீரழிவுக் குணம் மறுபடி தலை தூக்கி வருவதையும் பார்த்து அமெரிக்க மக்கள் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதே மாதிரி பிரிட்டனிலும் வங்கிகள் 2500 கோடி பவுண்ட் ஸ்டர்லிங்குகள்  ஆதாயத்தை, எப்படி அறிவிப்பது, மக்களுடைய கோபத்தை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் தவிப்பதாகவும் செய்திகள்அடிபடுகின்றன.

பாரம்பரியமாக ஜனநாயகக் கட்சியின் கோட்டையாக இருந்த மாசாசூசட்ஸ் செனேட் தொகுதியில்,  கென்னெடி குடும்பத்தவர் உறுப்பினராக இருந்து மரணமடைந்ததை  ஒட்டி நடந்த தேர்தலில், ரிபப்ளிக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார். அதிபர் தேர்தலில் மிக அவமானகரமாகத் தோற்ற  ரிபப்ளிக் கட்சி,  ஜனங்களுடைய இந்த அதிருப்தி, கோபத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில்,  "இந்தியா ஒளிர்கிறது" என்ற கோஷத்தை, நக்கலடித்தே காங்கிரஸ் கட்சி மறுபடி ஆட்சியைப் பிடித்தது போலத் தான்!

இந்தியாவின் இருட்டுக்குத் தொண்ணூறு  சதவீதத்திற்கு மேல் காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என்பதை மறைத்து, மக்களுடைய அந்த நேரத்துக் கோபத்தைப் பயன்படுத்திக் கொண்ட மாதிரித் தான்! இப்போது மட்டும் ஒளிர்கிறதா என்று கேட்பதற்குத் தான் ஆளில்லை! மக்களுடைய மறதியின் மேல், முட்டாள்தனங்களின் மீது அரசியல்வாதிகளுக்கு அவ்வளவுநம்பிக்கை!

Change, Yes we can என்ற ஒபாமாவின் தேர்தல் ஸ்லோகன்களை வைத்தே ரிபப்ளிக் கட்சி தன்னுடைய எதிர் பிரசாரத்தை  ஆரம்பித்து விட்டது!

ஒபாமா தன் முதல் வருடத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ரிபப்ளிக் கட்சியினருடைய ஆதரவோடும் நிறைவேற்ற முயன்ற வேகத்தைப் பார்த்தோ என்னவோ, சமீபகாலங்களில் கட்டையைக் கொடுப்பதே தனது பிரதானமான தொழிலாக ரிபப்ளிக் கட்சி மாற்றிக் கொண்டுவிட்ட மாதிரித் தெரிகிறது.

ஒபாமாவை  ஆரம்பத்திலிருந்தே பிடிக்காத, ஒபாமாவும் பேச மறுக்கிற ஒரு செய்தி நிறுவனம் Fox News! ஸ்டேட் ஆப்  தி யூனியன் உரையில் என்ன இருக்க வேண்டுமாம்? புள்ளிவிவரங்களைக் கொஞ்சம் பாருங்கள்! புள்ளிவிவரங்கள் எப்போதுமே இரட்டை நாக்குடன் தான் விவரங்களைச் சொல்லும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு  Fox News! சொல்வதையும் பாருங்கள்!

Real Clear Politics Poll

Job Approval Approve Disapprove Spread
Obama 49.6% 44.9% +4.7%
Congress 26.0% 66.2% -40.2%
Direction of Country Right Direction Wrong Track Spread
RCP Average 36.8% 56.7% -19.9%



தேர்தல் தோல்வி, ஜனங்களிடம் குறைந்து வரும் ஆதரவு இதனால் தானோ என்னவோ, வங்கிகளுடைய பேராசைக்குக் கடிவாளம் போட முனைகிற சட்டமியற்றப் போவதாக  ஒபாமா சொல்ல வேண்டி வந்ததாகவும், ஒரு தரப்பு கருதுகிறது. அமெரிக்க வங்கித் துறையின் மிருகத்தனமான பலம், எதையும் விலை கொடுத்து வாங்கி விட முடிகிற இயல்பு, போதாக்குறைக்கு ரிபப்ளிக் கட்சியின் முட்டுக் கட்டைகள் இதையெல்லாம் மீறி, ஒபாமாவால் செயல்பட முடியுமா என்பதுதான் இப்போது எழும் சுவாரசியமான கேள்வி!

 January 27,வருகிற புதன் கிழமையன்று ஸ்டேட் ஆப் தி யூனியன் உரை என்று அமெரிக்க அதிபர்  பராக் ஒபாமா செனேட், காங்கிரஸ் என்ற இரு அவை உறுப்பினர்களோடும்,  அமெரிக்க மக்களுக்கும், தன்னுடைய அரசு என்ன செய்ய உத்தேசித்திருக்கிறது என்பதை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் விதத்தில் உரை நிகழ்த்த இருக்கிறார்.

அதிபர் உரை என்றவுடன், இங்கே இந்தியாவில், குடியரசு தினத்துக்கு முதல்நாள் மாலை வானொலி மற்றும்  தொலைக்காட்சிகளில் யாரோ எழுதிக் கொடுத்த, உப்புச் சப்பில்லாத,  அறிக்கையை படிப்பது போல என்று எண்ணி விட வேண்டாம்! இந்திரா காந்தி காலத்தில் இருந்தே இங்கே ஜனாதிபதி என்றால், அரசு நீட்டுகிற இடத்தில் கையொப்பமிடுகிற  வெறும் ரப்பர் ஸ்டாம்ப் என்றோ, ஜெயில் சிங் என்று ஒரு "தலையாட்டி பொம்மை" சொன்னாரே "மேடம் உத்தரவிட்டால், காலணிகளைக் கூடக் கழுவத் தயாராக இருப்பதாக"   அப்படிஎன்றோ கூட இல்லை.

அமெரிக்க ஜனநாயகத்தில், அமெரிக்க மக்களிடத்தில் பல குறைகளைச் சொல்லிவிடலாம், அது மிக எளிதும் கூட! ஆனால் அங்கே தவறுகளைக் களைகிற மெகானிசத்தில், எவரும் கைவைப்பதில்லை. பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால், ஒரு ஒழுங்கு நியதிக்குட்பட்டுத் தான் இருக்கவேண்டும் என்பதில் எந்த தயவுதாட்சணியமும் பார்ப்பதில்லை. சிறைத் தண்டனை, அபராதங்களை விட பொதுமக்கள் முன்னாள் அசிங்கப் படுவது என்பது அங்கே எவராலும் நினைத்துப் பார்க்கக் கூட விரும்பாத பெரும் தண்டனை!

அங்கே வாக்காளர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் எப்படிச் செயல் படுகிறார்கள், நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் அதிபர் பொறுப்போடு செயல் படுகிறாரா என்பதைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவசியப் படுகிற நேரத்தில் செருப்படி கொடுப்பதைவிடக் கேவலமாகத் தண்டிக்கவும்  தயங்குவதில்லை!

இன்றைக்கு என்றில்லை, ஒபாமா தேர்தல் களத்தில் குதித்த தருணத்தில் இருந்து ஹில்லாரி கிளிண்டன் போட்டியில் இருந்து விலகிக் கொண்டு, ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஒபாமா அறிவிக்கப் பட்டதில் இருந்து, அமெரிக்கத் தேர்தல் காலத்தைக் கொஞ்சம் சுவாரசியத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இர்விங் வாலஸ் எழுதிய The Man என்ற புதினம்! டக்ளஸ் டில்மன் என்ற கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்க ஜனாதிபதியாகி விடுகிறார்! புத்தகம் வெளிவந்த காலத்தில், இதைக் கற்பனையாக மட்டுமே, அதுவுமே, தேர்தல் அல்லாத வழியில் என்று தான் சொல்ல முடிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். சமயங்களில், கற்பனை செய்து எழுதுகிற விஷயங்கள், நடப்பு விஷயங்களோடு பொருந்திப் போக முடிகிற விநோதத்தைப் பார்த்துப் பார்த்து, இப்போதெல்லாம் அது எனக்கு அது மிகவும் பழகிப் போய்விட்டது!

TC, The Chief  என்று மட்டுமே அழைக்கப் படும் அமெரிக்க ஜனாதிபதி பாரிஸ் நகரத்தில் ஒரு சர்வதேசப் பேச்சுவார்த்தைக்குப் போயிருக்கும் தருணத்தில், கட்டடம் இடிந்து உயிரிழக்கிறார். அடுத்து இங்கே துணை ஜனாதிபதி ஏற்கெனெவே உடல் நலமில்லாமல் மருத்துவ மனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிற நிலையில், பதவியேற்பதைத்  தீர்மானிக்கிறார்கள். எதிர்பாராதவிதமாக அவரும் இறந்து விடும் செய்தி வருகிறது. அரசியல் சட்டப்படி, எஞ்சியுள்ள காலத்திற்கு ஜனாதிபதி பொறுப்பை ஏற்க வேண்டியது யார் என்ற கேள்வி எழ, senate pro tempore என்று பதில் வருகிறது. அமெரிக்கத் துணை அதிபர்  அமெரிக்க செனேட் சபையின் தலைவராகவும்  இருப்பவர். அவர் சபைக்குத் தலைமைதாங்க முடியாத  சமயங்களில் சபைக்குத் தலைமை தாங்குகிற பொறுப்பு இது. பெரிய அளவில் முக்கியத்துவமில்லாத இந்தப் பொறுப்பில், கறுப்பரான டக்ளஸ் டில்மானை TC யின் டீம் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதியாக, ஒரு கறுப்பர்! என்று சுவாரசியமாக, ஒரு இக்கு வைத்து ஆரம்பிக்கும் இந்த நாவல், அமெரிக்க ஜனநாயகம் இயங்கும் விதத்தை, மிக நுணுக்கமாக விவரித்துச் சொல்கிறது.

கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் அதிபராகி விட்டார்! சரி, அமெரிக்க ஆட்சி முறை அதற்குத் தயாராகிவிட்டதா? பெயரளவுக்கு டில்மன் அதிபர், முந்தைய அதிபரின் வழிமுறைப்படி ஆட்சியை பேக்சீட் டிரைவிங் முறையில் நடத்த முயற்சி நடக்கிறது. முந்தைய அதிபர் தேர்தலில் ஜெயித்து வருவதற்கு, அமெரிக்க பகாசுர நிறுவனம் ஒன்று எக்கச் சக்கமாக செலவு செய்திருக்கிறது. அவர்களுக்கு ஆதாயம் தரும் வகையில், கருப்பர்களுடைய நலன்களை மேம்படுத்துவது போல ஒரு திட்டம்  ஏராளமான செலவில் தயாராக இருந்து, சட்டவடிவம் கொண்டு வரும் நேரத்தில், பகாசுர நிறுவனம் ஆதரித்த அதிபர் காலமாகி விடுகிறார். அடுத்து வரும் டில்மன் இதை  ஒப்புக்குச் செயல்படுத்தப் படும் திட்டம், கறுப்பின மக்களுக்கு எந்த வகையிலும் உதவாது  என்று நிராகரித்து விடுகிறார்!

அதிபருக்கும், அரசு இயந்திரத்தின் ஆதிக்கம் செலுத்திவரும் இதர பகுதிகளுக்கும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கிறது. டில்மனுடைய மகன் ஒரு கறுப்பினத் தீவீரவாதிகள் குழுவில், கறுப்பினத் தம்பதிகளுக்கும், முழு வெள்ளை நிறத்தோடு குழந்தைகள் பிறப்பதுண்டு, அப்படிப் பிறந்த மகள் குடும்பத்தை உதறிவிட்டு, அடையாளத்தை மாற்றிக் கொண்டு வாழும் நிலை, கொஞ்சம் இடதுசாரித் தனமான சிந்தனையோடு கூடிய காதலி என்று ஒவ்வொரு கதாபாத்திரமும் எதிரணியில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு அழகான அரசியல் சதுரங்க ஆட்டத்தைக் கண்முன்னால் நிறுத்துவதாக, மிக அழகான கதை!

அதிபர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருகிறார்கள்! அதை வைத்தே அமெரிக்க அரசியலின் பழைய சரித்திரத்தையும், நடப்பு நிலையையும் கலந்து இர்விங்வாலஸ் கதைக்களத்தை நம்  கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்.

இன்றைய சூழலோடு வேறு சில விதங்களில் இந்தக் கதையில் வரும் சம்பவங்கள் பொருந்திப்போவதாக இருப்பதையும் இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும். முக்கியமாகஅரசியலை, பகாசுர நிறுவனங்கள் தங்களுடைய சௌகரியத்துக்கு ஏற்றபடி வளைத்துக் கொள்வது !

இங்கே....?!

மீன்களைக் காப்பாற்ற வேண்டுமென்றோ, காதல் கொண்டோ எவரும் தூண்டிலில் புழுவை வைத்துக் காத்திருப்பதில்லை!

 
எலிகளுக்கு, ஊசிப்போன வடையோ வெங்காயமோ எதுவானாலும், கருணையினால் வைக்கப் படுவது இல்லை.

இயேசு அழைக்கிறார் என்று கூவுகிறவன் கோடிகளில் மிதக்கிறான்! அழைப்பைக் கேட்டுப் போனவன், அவனிடம் தசமபாகத்தைக் கொடுத்து விட்டு, என் ஆண்டவர் மிகவும் நல்லவர், அவர் என்னை என்றும் ரட்சிப்பார் என்று பாடிக் கொண்டு  திரும்புகிறான்!

அதே மாதிரித் தான்!

சமூக நீதி காக்கிறேன், சமத்துவம் தருகிறேன் என்று இலவசங்களைத் தருகிறவன் என்ன நிலையில் இருக்கிறான், அதை நம்பிப் போகிறவன் என்ன நிலையில் இருக்கிறான் என்பதைக் கொஞ்சம் கண்திறந்து பார்த்தாலே புரிந்து விடும்!

சுதந்திரம் என்பது இவர்கள் பாடப் புத்தகங்களில் எழுதி வைத்தது போல, காந்தித் தாத்தாவும், நேரு மாமாவும் கடைக்குப் போய் வாங்கி வந்து கொடுத்ததல்ல!

எப்போது நமது பொறுப்பை உணரப் போகிறோம்?

இந்தக் குடியரசு தினத்தில் இருந்தாவது ---

இலவசங்களில் ஏமாறுவது இல்லை என்ற உறுதியோடு !

உலகத்  தொல்லைக் காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக என்று கூவும் பெட்டிகள் முன்னால் அமர்ந்து நேரத்தை வீணடிக்காமல்,

எங்கோ என்னமோ நடக்கிறது  எனக்கென்ன என்றிருக்காமல், சக மனிதர்களிடம் கொஞ்சம் அக்கறையோடு, பரிவோடு

இருக்க முயற்சியை ஆரம்பிப்போமா!  




3 comments:

  1. நல்ல பதிவு. ஆரம்பிப்போம்.

    ReplyDelete
  2. ஆரம்பித்தாயிற்றா! மிகவும் நல்லது!

    நல்ல பயிர் வளர வேண்டுமானால், முதலில் களைகளைக் கண்டறிந்து அகற்றியாக வேண்டும்!

    களை எடுப்பது, அண்டவிடாமல் தடுப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!