சுதந்திரமான அடிமைகள்! Vs ஜெயகாந்தன்


மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் திருமதி சீதாலட்சுமி அமெரிக்காவில் இருந்து கொண்டு  ஜெயகாந்தனைப் பற்றிய தனது நினைவுகளைத் தொடர்ந்து பகிர்ந்து கொண்டு வருகிறார். 

 திருமதி சீதாலட்சுமி  மின் தமிழில் தன்னைப் பற்றி ஒரு சிறு அறிமுகமாக, தான் இந்த நினைவுகளை எழுதிக் கொண்டிருப்பது ஏன் என்ற கேள்விக்குப் பதில் சொல்லும் முகமாக எழுதியதைப் படிக்க!

நேற்றைய தினம் சீதாம்மாவின் குறிப்பேடு - ஜெயகாந்தன் - 11 என்ற தலைப்பில் ஒரு தகவலைத் தெரிவித்திருக்கிறார். ஒன்றும் புதிதில்லை. ஜெயகாந்தன் சமீபத்தில் இன்னொரு சர்ச்சைக்குள் சிக்கியிருக்கிறார், அல்லது சர்ச்சைக்குள் அவரைச் சிக்க வைத்து விட்டதாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்!

ஜெயகாந்தனை வைத்து சர்ச்சைகள் கிளம்புவதில் பெரிய ஆச்சரியமில்லை. அவரும் இதற்கெல்லாம் அசருகிற மாதிரியும் தெரியவில்லை!

ஜெயகாந்தனுக்கு எதிர்வெடி போடும் பெண்கள், மகளிர் அமைப்பினர்!


சமீபத்தில் சங்கர நேத்ராலயா ஆய்வு  நிறுவனம் நடத்திய இலக்கிய ஆன்மீகச் சொற்பொழிவு ஒன்றை ஜெயகாந்தன் நிகழ்த்தியிருக்கிறார். அங்கே அவர் பேசியதில், “பெண்கள் இப்போது சுதந்திரம் பெற்றுவிட்டனர். இன்று பெண்கள் யாரும் கணவனுக்கு அடிமையில்லை. மாறாக இப்போது பெண்கள் பொருள் , போகம், புகழ் போன்ற பல விஷயங்களுக்கு அடிமையாகிவிட்டனர். அதுவும் அவர்கள் சுதந்திரமான அடிமைகளாக மாறுவது கொடுமை “என்ற பகுதி மாதர் சங்கங்கள், பெண் உரிமை இயக்கங்களின் கோபத்தைக் கிளறியிருப்பதாக இந்த இழையைப் படித்த பிறகுதான், தமிழ்நாட்டிலேயே இருக்கும் எனக்குத் தெரிய வந்தது.

ஜெயகாந்தன் பேசியது ஒன்றும் புதியதுமில்லை! அவருடைய கங்கை எங்கே போகிறாள், கோகிலா என்ன செய்து விட்டாள் கதைகளைப் படித்தவர்களுக்கு,  அவருடைய இந்த கருத்து புதிதாகவோ, அல்லது சர்ச்சைக்குரியதாகவோ தெரிவதில்லை என்பது தான் ஒரு வாசகனாக எனக்குப் படுகிறது.

” சுதந்திரமான அடிமைகளாக மாறுவது கொடுமை “ என்ற ஜெயகாந்தனின் சொல்லில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. மனம்விட்டுப் பேசுவோம்" என்று திருமதி சீதாலட்சுமி அந்த விவாத இழையை முடித்திருக்கிறார்.

எனக்குள்  சில பழைய நினைவுகள் நிழலாடின! சுதந்திரம், சுதந்திரமான அடிமை என்ற வார்த்தைகள் எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை  நினைவு படுத்தின. 

பொதுவுடைமை அரசியலில் கைகோர்த்த தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தது அந்தப் பெண் செய்த முதல் பாவம். அம்மா ராஜ்ஜியம் தான்! பெண்ணை, தங்களுடைய இயக்கத்தில் இருந்த ஒரு இளைஞனுடன் பழக அனுமதித்துக் காதல், திருமணத்தில் முடிந்தது. ஒரு பெண் குழந்தை கூட இருந்தது. கணவன் மனைவி இருவருமே மத்திய அரசு நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அரசியலிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.

திடீரென்று, மாப்பிள்ளைப் பையனின் நடத்தையில் புகார்கள்! தினமும் குடிக்கிறானாம்! பெண்ணிடம் விசாரித்தால், பெண் கணவனுடைய சார்பாகத் தான் பேசினாள். அழுத்தி அழுத்திக் கேட்டதற்கு, எனக்கு எதுவுமே தெரியாது என்று சாதித்தாள். உச்சத்தில் இருந்த அப்பனையே ஆட்டிப் படைத்தவள் அம்மாக்காரி!

விவாகரத்து ஒன்று தான் வழி! அம்மாக்காரி முடிவு செய்தாகிவிட்டது. அப்பாவும் தலையாட்டியாகிவிட்டது. பெண்ணோ வேறு வழியில்லாமல், விவாகரத்துக் கோரி வழக்குத் தொடர, விவாகரத்தும் கிடைத்தாயிற்று! அம்மாவின் அடியை ஒற்றி மகளும் அரசியலில்! இப்போது. இன்னொரு திருமணமும் ஆகிவிட்டது.

என்னதான் முற்போக்கு, பெண் விடுதலை, சம உரிமை என்று மேடைகளில் பேசினாலும், அந்தப் பெண்ணின் அடிமனதில் இருந்த சோகத்தைப் பார்த்த
போது  புரிந்து கொள்ள முடிந்தது. 

இப்போதோ காலம் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது! முழுநேரமும், ஏதோ ஒரு சங்கம், எங்கேயோ ஒரு கூட்டம், வழக்கம் போலவே பெண்ணுரிமை குறித்துப் புள்ளிவிவரங்களுடன் உரை நிகழ்த்துவது என்பதே அன்றாடம்நடக்கிறநிகழ்வுகளாகிவிட்டது. ஒரு இயந்திரத்தைப் போல!

அந்தப் பெண்ணைக் கேட்டால், நான் சுதந்திரமானவள் என்று தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளக் கூடும்! ஏராளமான புள்ளிவிவரங்களோடு கூட பேசக் கூடும்! புள்ளிவிவரங்கள் எல்லாம் ஒரு அளவுக்குத் தான், வாழ்க்கையை வழிநடத்துகிற அளவுக்கு வலிமையானதும், அவசியமானதும் அல்ல!


ஜெயகாந்தன் சொன்ன மாதிரி 'சுதந்திரமான அடிமை' என்ற வார்த்தை தான் அந்தப் பெண்ணுக்குப் பொருத்தமாக இருப்பதாகத் தோன்றுகிறது!

ஏதோ பழக்கங்களுக்கு அடிமையாகவே இருந்து விடுகிற சுதந்திரம்!




 

23 comments:

  1. ஜேகே வார்த்தைகளில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. சொல்லப் போனால் நல்ல, அழகான வார்த்தை. ஆயிரம் அர்த்தங்கள்தான்...

    ReplyDelete
  2. மின்தமிழில் திருமதி சீதாலட்சுமி எழுதியதையும் சேர்த்துப் படித்துப் பாருங்கள் ஸ்ரீராம்!

    அவர் அந்த இழையின் கடைசியில் சொல்லியிருப்பது போல,ஜெயகாந்தன் சொன்னதை முழுமையாகப் புரிந்து கொள்ளாத நிலையில் இப்படி எதிர்ப்பெல்லாம் வருகிறது என்று முடித்திருக்கிறார்.

    பெண் சுதந்திரம் பேசுகிறவர்களே ஒரு விதமான அடிமை நிலையில் இருந்து தான் பேசுகிறார்கள் என்பதற்காகத் தான் எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் கதையைத் தொட்டுச் சொன்னேன்.

    இந்த மாதிரி எதிர்ப்பு மனோபாவத்தில் இருப்பவர்களிடம் ஒரு பொதுத் தன்மையாக ஒன்றைக் காண முடியும்.
    நான் அடிமையல்ல என்றால், நீ எனக்கு அடிமை என்று அர்த்தம் என்ற பொருளிலேயே பேசிக் கொண்டிருக்கிற மாதிரி இல்லை?!

    ReplyDelete
  3. இன்றைய சிந்தனைக்கு

    "You will not have to go far to fine me,

    The word "fine" should be "find".

    Regards
    S. Krishnamoorthy

    ReplyDelete
  4. திருத்திவிட்டேன்!

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  5. அங்கு சென்று படித்துப் பார்த்து விட்டேன். பதில் சொல்லலாம் என்றால் குழுவில் சேருங்கள் என்கிறது. எனவே பதில் சொல்லவில்லை. நன்றாகச் சொல்லி உள்ளார்.
    //"இந்த மாதிரி எதிர்ப்பு மனோபாவத்தில் இருப்பவர்களிடம் ஒரு பொதுத் தன்மையாக ஒன்றைக் காண முடியும்.
    நான் அடிமையல்ல என்றால், நீ எனக்கு அடிமை என்று அர்த்தம் என்ற பொருளிலேயே பேசிக் கொண்டிருக்கிற மாதிரி இல்லை?"//

    இங்கு ஒருவர் எதையாவது நன்றாக செய்கிறார் என்றால் அதற்கு ஆமோதிப்பு, மறுப்பு என்பதற்கு பதில் வேறு யாரையாவது சம்பந்தப் படுத்தி அவரோடு ஒப்பீடு செய்வது வழக்கமாகி விட்டது. மனித இயல்பு அல்லது பலவீனம்?

    ReplyDelete
  6. மின்தமிழில் நான் முன்னர் உறுப்பினராக இருந்தே ஸ்ரீராம்! இப்போது இல்லை, அதனால் தான் அங்கே நானுமே கூட பதில் எழுத முடிவதில்லை!

    வலைக் குழுமங்களில் நிறையத் துயரத்தைப் பார்த்துவிட்ட படியால், இப்போது எதிலுமே மனம் ஒட்டுவதில்லை. வலைக் குழுமங்களிலேயே, உருப்படியான சிந்தனை, விவாதங்களைக் ஒண்டிருக்கும் ஒரே தமிழ் வலைக் குழு இது தான். அதனால் தான் உறுப்பினராக இல்லாதபோதும் நல்ல விஷயங்களைப் படிக்க முடிகிற தருணங்களில் அதையொட்டிய எனது கருத்துக்களை இங்கே இந்தப்பக்கங்களில் பகிர்ந்து கொண்டு வருகிறேன்.

    ReplyDelete
  7. ////“பெண்கள் இப்போது சுதந்திரம் பெற்றுவிட்டனர். இன்று பெண்கள் யாரும் கணவனுக்கு அடிமையில்லை. மாறாக இப்போது பெண்கள் பொருள் , போகம், புகழ் போன்ற பல விஷயங்களுக்கு அடிமையாகிவிட்டனர். அதுவும் அவர்கள் சுதந்திரமான அடிமைகளாக மாறுவது கொடுமை “////

    இதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் பொத்தாம் பொதுவாக பெண்கள் என்று சொல்லாமல் ஒரு சில பெண்கள் என்று சொல்லியிருக்கலாமோ.

    ReplyDelete
  8. /////” சுதந்திரமான அடிமைகளாக மாறுவது கொடுமை “//////

    வாவ். இதுதான் இவரோட முத்திரை.

    ReplyDelete
  9. இந்தத் தகவலை, மின்தமிழில் ஒரு விவாத இழையில் நேற்று முன் தினம் படித்தேன். ஜெயகாந்தன் பேசியதன் முழுவிவரங்களும் என்னிடம் இல்லை.

    இந்த விவாத இழையைத் தொடங்கிய திருமதி சீதாலட்சுமியும், நீங்கள் சொல்வது போலப் பொதுமைப் படுத்திப் பேசியது தான் குழப்பத்திற்குக் காரணம் என்று சொல்கிறார்.

    இங்கே நடப்பு நிலவரம் வேறு விதமாக இருக்கிறது! சரியான தகவல்கள், ஆதாரங்கள் இல்லாமலேயே, ஒருவர் சொன்னதில் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு அதைக் கண்டிப்பதும் திரிப்பதுமான வேலைகள் சகஜம்! தவிர, அவருடைய கருத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளாமலேயே, எதிர்க்க வேண்டுமே என்பதற்காகவே எதிர்க்கருத்து சொல்லப் பட்ட மாதிரி இருக்கிறது.

    அதே நேரம், இப்படி எதிர்க் குரல் எழுப்புகிறவர்கள் செயல்பாடுகளையும் அறிந்து வைத்திருப்பதால், தெரிந்த கதை ஒன்றைச் சொல்லி, அவர் சொன்னதில் தவறென்ன என்ற கேள்வியை முன்வைத்திருக்கிறேன்.

    வழக்கம்போலவே விடைகள் என்னைத் தேடிவரவேண்டும் என்று சும்மா இருக்கப் போவதில்லை! விடைகளை நாமும் தான் தேடிப் பார்ப்போமே!

    ReplyDelete
  10. ஜெயகாந்தனை எனக்கு சரஸ்வதி காலத்திலிருந்தே எனக்குத் தெரியும்.
    சிம்மமாக இருந்த அவர் இன்று கருணாநிதிமுன் சிறு முயலாக மாறியது காலத்தின் கோலம் என்றுதான் தோன்றுகிறது.
    என்னைப்போன்ற அவருடைய சஹ்ருதயர்களுக்கு சொல்லொணா வருத்தம்தான்.

    ReplyDelete
  11. கருத்துக்கு நன்றி, முகில்வண்ணன்!
    உங்களுடைய வருத்தம் புரிகிறது.

    ஒருகாலத்தில் ஆவேசத்தை உண்டுபண்ணிய விஷயங்கள், எப்போதுமே ஆவேசத்தைத் தூண்டிக் கொண்டே இருப்பதில்லை! ஒரு கட்டத்தில் போய்த் தொலைகிறது என்று கூடப் பெருந்தன்மையாகப் போய்விடுகிற மனோபாவமும் ஏற்பட்டுவிடும், கவனித்திருக்கிறீர்களா?

    சிங்கம் எப்போதுமே சிங்கமாகத் தான் இருக்க முடியும்! இன்றைக்குச் சிறு முயலாகப் போய்விட்டது என்று சொன்னால், ஒன்று முதலில் சிங்கமாகப் பார்த்தது தவறாக இருக்க வேண்டும், இல்லை இப்போது சிறுமுயலாகப் பார்ப்பது தவறாக இருக்க வேண்டும். இரண்டில் எது என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்!

    இன்றைய அரசியல் எல்லாவற்றிலும் புகுந்து குட்டையைக் குழப்பிக் கொண்டிருக்கிறது.

    சகுனிகள் எப்போதுமே, மனிதர்களின் உணர்வுகளைத் தகுந்த நேரத்தில் பகடை உருட்டித் தாங்கள் தான் ஜெயித்த மாதிரிக் காட்டிக் கொள்கிற கதையைத் தெரிந்த நாடு இது!

    சகுநிகளிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்கும் நிலை எல்லோருக்குமே கிடைத்துவிடுவதில்லையே!

    இதில் ஜெயகாந்தனை மட்டும் ஏன் தனித்துக் குற்றம் சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை!

    ReplyDelete
  12. //"ஒருகாலத்தில் ஆவேசத்தை உண்டுபண்ணிய விஷயங்கள், எப்போதுமே ஆவேசத்தைத் தூண்டிக் கொண்டே இருப்பதில்லை! ஒரு கட்டத்தில் போய்த் தொலைகிறது என்று கூடப் பெருந்தன்மையாகப் போய்விடுகிற மனோபாவமும் ஏற்பட்டுவிடும்"//

    நன்றாகச் சொல்லி உள்ளீர்கள். இதுவும் சரி சிங்க, சிறுமுயல் உவமையும் அழகாகச் சொல்லி உள்ளீர்கள்.
    ஆனால் இது இங்கு பொருந்தாது என்று நினைக்கிறேன். அடிப்படையான கொள்கை விஷயங்களில் விட்டுக் கொடுப்பது என்பது அரசியல்வாதிகளுக்கு பொருந்தலாம் எழுத்தாளர்களுக்கு அல்ல. ஆனாலும் இதை எல்லாம் பார்க்காமல் அவர் எழுத்து என்பது இன்றும் வசீகரிக்கும் அம்சமாகவே இருக்கிறது.

    ReplyDelete
  13. வாருங்கள் ஸ்ரீ ராம்!

    அவருடைய அபிமானிகள், அவர் கலைஞரிடம் சோரம் போய்விட்டார், அவமானப்படுத்தப்பட்டார், கனிமொழி கவிதையை எல்லாம் உயர்ச்சிப் பேசுகிற அளவுக்கு சமரசம் செய்துகொண்டு விட்டார் என்று கொதிக்கிறார்கள். அவருடைய எழுத்தைப் பற்றிப் பேசவில்லை. எழுத்தாளராக ஜேகே அவர்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார் ஆனால் ஜெயகாந்தன் என்ற மனிதர் தாழ்ந்துவிட்டார் என்று அவர்கள் ஒரு வேதனையோடு கொதிக்கிறார்கள். அங்கே தெருவில், எவரிடம் வேண்டுமானால் கையேந்தி இருக்கலாம், ஆனால் கருணாநிதியிடம் கையேந்தி இருக்கக் கூடாது என்ற கருணாநிதி மீதான கசப்பு மட்டுமே முன்னிறுத்தப் படுகிறது, ஜேகே உண்மையில் இரண்டாம்பட்சம்தான்.

    காஞ்சிமடம் தலைக்குனிவைச் சந்தித்தபோது அதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்த எழுத்தாளர் ஜெயகாந்தன். அப்போதும் அவரைத் தூற்றினார்கள். சம்ஸ்க்ருதம் படிக்கவேண்டும் என்று சொன்னார், அதற்காகவும் தூற்றினார்கள், இப்போது சுதந்திரமான அடிமைகள் என்று பெண்களைப் பற்றி, என்ன சந்தர்ப்பத்தில் அந்த பதப் பிரயோகத்தைச் செய்தார் என்று எனக்கு முழுவிவரமும் தெரியவில்லை, அதற்காகவும் அவரைச் சாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஜெயகாந்தனை, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், அவருடைய நண்பர்களே, இடது சாரிச் சிந்தனையாளர்களே ஒரு மாதிரி விமரிசித்துக் கொண்டிருக்கிறார்கள். பரமசிவன் கழுத்துப் பாம்பாகத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் வைரமுத்து, குறைந்தது இரண்டு சந்தர்ப்பங்களில், ஜெயகாந்தனைப் பாராட்டுகிற சாக்கில் தன்னுடைய அரிப்பைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

    ஒன்று, ஜேகே தனது இரண்டாவது மகள் தீபாவின் திருமணத்தை வைரமுத்துவுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் நடத்த ஏற்பாடு செய்து விட்டு, இளையராஜாவுக்குப் பத்திரிகை கொடுக்கப்போன சந்தர்ப்பத்தில், இளையராஜா, மண்டபத்தின் உரிமையாளர் எவர் என்பது தெரிந்து, நான் எப்படி அங்கே வருவது என்று கேட்டபோது, வெளியே வந்தவர் வேகமாக திரும்பிப்போய், கல்யாணத்திற்கு வராத உனக்கெல்லாம் எதற்குப் பத்திரிக்கை என்று, வைத்த பத்திரிகையைத் திரும்ப வாங்கிக் கொண்டு வந்தார் என்று சொல்லி, சந்தடி சாக்கில் இளையராஜா மீது தனக்கிருந்த புகைச்சலைத் தீர்த்துக் கொண்டார் அல்லது சொரிந்துகொண்டார்.

    இன்னொன்று ஜேகே பத்மபூஷன் விருது பெற்றதற்குப் பாராட்டுகிற சாக்கில், பத்தாயிரம் பேரிடம் விசாரணை, நூறு என்று வந்து, கடைசியில் ஒரு போலீஸ்காரர் வந்து விசாரித்துக் கொடுத்த அறிக்கைக்குப் பிறகுதான் மத்திய அரசு பத்மபூஷன் விருது கொடுத்தது என்று சொன்னது. தனது ஏற்புரையில் ஜேகே, அந்த ஒரு போலீஸ்காரர் உட்பட எல்லோருக்கும் நன்றி என்று சொல்லி, மிகப் பெருந்தன்மையாகவே எடுத்துக் கொண்டது.

    இப்படி, அவரைப் பாராட்டுகிறேன், கௌரவிக்கிறேன் என்று உளறி வழிந்த சிகாமணிகள் தான் கேவலப் பட்டு நிற்கிறார்களே தவிர ஜெயகாந்தன் என்ற மனிதர் எப்போதும் கம்பீரமாக உயர்ந்து தான் நிற்கிறார், அவரது எழுத்தைப் போலவே என்பது தான் நான் வலியுறுத்திச் சொல்ல வருகிறவிஷயம்.

    ReplyDelete
  14. ஜெயகாந்தன் கருத்தில் எண்ண தவறாக சொல்லிவிட்டார் ? தற்கால நாட்டு நடப்பு மற்றும் வீட்டு நடப்பைத்தான் இயல்பாக சொல்லியுள்ளார். எந்த ஒரு கருத்தோ விமர்சனமோ யாரை வெட்கப்பட வைக்கிறதோ அவமானப்பட வைக்கிறதோ அக்கருத்தோ விமர்சனமோ எதிமரையில் வைத்து விவாதிக்கப்படுவது இயல்புதான். " நான் கேவலமாகத்தான் இருக்கிறேன் " என்ற தன் உணர்வு இருப்பவர்கள் அதனை நேர் செய்து கொள்ளலாமே?

    "இப்போது பெண்கள் பொருள் , போகம், புகழ் போன்ற பல விஷயங்களுக்கு அடிமையாகிவிட்டனர் "

    ” சுதந்திரமான அடிமைகளாக மாறுவது கொடுமை"


    ஏதோ பழக்கங்களுக்கு அடிமையாகவே இருந்து விடுகிற சுதந்திரம்!
    உங்களின் இந்த வரி பூடகமாக உள்ளது. இது பற்றி பேச ஆரம்பித்தால் பிரளயம் தான்.

    மொத்தத்தில் ஆணோ பொண்ணோ யாருமே சுதந்திரமாக இல்லை இருக்க முடியாது என்பதே உண்மை.

    ReplyDelete
  15. வாருங்கள் மாணிக்கம்!

    என்னுடைய வார்த்தைகளில் பூடகம், ஒளித்து வைத்திருப்பது ஒன்றுமில்லை!

    பழக்கங்களின் அடிமை! Creature of habits என்ற குறியீட்டுச் சொல்லை வைத்து இந்தப் பதிவில் தேடிப்பாருங்கள். கொஞ்சம் அதிகமான விவரங்கள் கிடைக்கும்!

    ஜெயகாந்தன் சொன்னதில் தவறேதுமில்லை. அவர் எதைச் சொன்னாலும் அதை ஒரு சர்ச்சையாக மாற்றுவதே இங்கே வாடிக்கையாகி விட்டது!

    சம உரிமை, அல்லது சம ஈயம் என்பது, வெறும் வார்த்தையில் மட்டுமே! ஒரு தரப்புக்குச் சார்பாக இருப்பது, இன்னொரு தரப்புக்கு மறுக்கப்பட்டதாகச் சொல்லப் படுகிறது அவ்வளவுதான்.

    இரண்டுக்கும் இடையில்,இழைந்து போகிற இதமான equilibrium ஒன்று இருப்பதையே மறந்து விட்டுப் பேசும், சுய நலவாதம் மட்டுமே, ஜெயகாந்தனுக்கு எதிர்ப்பாக வெளிப்படுகிறது!

    அப்புறம் பிரளயம்..??

    தேநீர் குடிக்கும் கோப்பையிலா?

    ReplyDelete
  16. ஆணோ பெண்ணோ சுதந்திரமாக இருக்க முடியாது...?

    முதலில் சுதந்திரம் என்றால் என்ன, எதில் இருந்து என்ற வரையறையெல்லாம் செய்து முடித்து விட்டீர்களா என்ன!

    சுதந்திரம் என்பது பொறுப்புக்களோடு கூடியது, பொறுப்புக்களோ சுமையோ இல்லாமல் இருப்பது என்ற அர்த்தத்தில் அல்ல!

    ஈயம் பூசுகிறவர்கள் இந்த இடத்தில் தான் கோட்டை விடுகிறார்கள்!

    கண்ணதாசன் எழுதிய குட்டிக் கதை ஒன்று நினைவு வருகிறது.

    விஸ்கி தண்ணீரைப் பார்த்துக் கேட்டதாம்! "நான் தனியாக வீரியமாகத் தானே இருக்கிறேன்? ஏன் என்னோடு கலந்து ஏன் வீரியத்தைக் குறைக்கிறாய்?"

    தண்ணீர் சொன்னதாம்:

    "எதுவும் தனித்து வீரியமாக இருக்கக் கூடாது என்பது இறைவன் வகுத்த நியதி! தெரியாமலா, ஆணைப் படைத்து, அவனைப் பலவீனப் படுத்துவதற்காகப் பெண்ணையும் படைத்திருக்கிறான்?"

    ReplyDelete
  17. "இரண்டுக்கும் இடையில்,இழைந்து போகிற இதமான equilibrium ஒன்று....."

    பிரமாதம் !

    இந்த equilibrium வரைத்தான் எல்லாம் நன்றாக வருகிறது. இதற்க்கு பிறகு அது உடைந்து போக நேருகிறது,

    "நம்மிடம் அடங்கிபோக ஆரம்பித்து விட்டான் அல்லது அடங்கிப்போக ஆரம்பித்து விட்டாள் இனி நம்ம ராஜ்ஜியம் தான் "

    என்ற ஒரு இடம் வரும்போது கூடவே சகல அவலங்களும் வர ஆரம்பித்துவிடுகிறது. நமக்கு வாய்த்துள்ள சமூக ,
    பொருளாதார, கல்வி மற்றும் மத,இன, வகுப்பு,நிற ஒப்பீட்டு மாச்சர்யங்கள் மற்றும் உறவுகள், நண்பர்கள் " நண்பிகள் " வட்டம் மிக எளிதாக இந்த "சம நிலையை " உடைத்து எறியும் வல்லமை கொண்டவை.

    இந்த The so called equilibrium would be so feeble and unstable too. பின்னர் எங்கிருந்து வரும் சமநிலை. அதனால் தான் சொன்னேன் எவரும் இருக்க முடியாதென்று.

    ReplyDelete
  18. ஜெயகாந்தன் எழுதிய கதைகளிலேயே, கோகிலா என்ன செய்து விட்டால், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் இரண்டிலுமே, இந்த நுண்ணிய உளவியல் அழகாகக் கையாளப் பட்டிருக்கிறது. முடிந்தால் வாசித்துப் பாருங்கள்!

    ஒருவர் மீது ஒருவர் குற்றங்களைக் கண்டுபிடித்துக் கொண்டு போவதிலேயே அல்ல, குற்றங்களையும் சகஜமாக எடுத்துக் கொண்டு இயல்பாக விட்டுக் கொடுக்கிற இங்கிதம், நீயா நானா என்று மல்லுக் கட்டுவதில் இல்லை , என்று இந்த அனுபவத்தைத் தருவதற்காகத் தான் தாம்பத்தியம், கூட்டுக் குடும்பம், பொறுப்புக்கள், உறவுகள், போக்குவரத்து என்று...ஒரு ஆழமான மரபாக இந்த நாட்டில் கடைப்பிடிக்கப் படுகிறது.

    கொஞ்சம், இது சாத்தியமே இல்லை என்ற நினைப்பைத் தள்ளிவிட்டு, சுற்றியுள்ள மனிதர்களில் எல்லோருமே நீங்கள் கணிக்கிற மாதிரித்தானா, இல்லை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறார்களா என்று பாருங்களேன்!

    ReplyDelete
  19. ஜெயகாந்தன் சொன்னதில் தவறேதும் இல்லை.தற்போது பெண்ணுரிமை என்ற வார்த்தை சரியான அர்த்தத்தில் உபயோகப்படுத்தபடுவதில்லை அக்கினி பிரவேசம்,யுக சந்தி போன்ற கதைகளை பெண்களுக்கான புதிய பார்வையில் 60 -70 களிலேய எழுதியவர் ஜெயகாந்தன். அப்போது அவர் சொன்னது உவப்பு. இப்போது கசப்பு என்பது சரியானது அல்ல.எந்த இடத்தில் எந்த அர்த்தத்தில் சொன்னார் என்று யாரும் ஆராய்வதில்லை. ( முன்பு இப்படித்தான் சமஸ்கிருதம் என்று அவர் தலையை உருட்டினார்கள்).அவருடைய கருத்துகள் உண்மை என்று நிரூபிக்க பெருகிவரும் விவகரத்துக்களே சாட்சி.

    ReplyDelete
  20. //ஒருவர் மீது ஒருவர் குற்றங்களைக் கண்டுபிடித்துக் கொண்டு போவதிலேயே அல்ல, குற்றங்களையும் சகஜமாக எடுத்துக் கொண்டு இயல்பாக விட்டுக் கொடுக்கிற இங்கிதம், நீயா நானா என்று மல்லுக் கட்டுவதில் இல்லை , என்று இந்த அனுபவத்தைத் தருவதற்காகத் தான் தாம்பத்தியம், கூட்டுக் குடும்பம், பொறுப்புக்கள், உறவுகள், போக்குவரத்து என்று...ஒரு ஆழமான மரபாக இந்த நாட்டில் கடைப்பிடிக்கப் படுகிறது.//

    நிரம்ப சரியாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  21. பெண்கள் மட்டுமே இல்லை, குழந்தைகளும், வயதான காலத்தில் பெற்றோர்களுமே கூட இங்கே பலவிதமான துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள், அல்லது நம்முடைய சொந்தக் கதையையே எடுத்துக் கொண்டோமேயானால், ஒவ்வொரு சமயத்திலும், யாரோ ஒருவர் சொன்ன அல்லது செய்த ஒன்று நம்மைத் துன்புறுத்துவதாகவே நாம் நினைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும்!

    இதில் ஆணென்றும், பெண்ணென்றும் பேதமிருப்பதில்லை.

    இங்கே விவாகரத்துக்கள், குறிப்பாகக் காதல் திருமணம் செய்து கொண்டவர்களிடையே அதிகமாக இருப்பது, உரிமை மீறல் சம்பந்தப்பட்ட விஷயமில்லை.

    எதிர்பார்ப்புக்கள் அதிகமாகவும், நடைமுறையைப் புரிந்து கொண்டு அனுசரித்துப் போகவோ, அல்லது இறுக்கத்தை வளர்த்துக் கொள்வதைத் தவிர்க்கவோ தவறும்போது, அங்கே உறவுகள் விரிசல் அடைகின்றன.

    தமிழில், இந்த நுண்ணிய உணர்வுகளைத் தொட்டு எழுதியவர் ஜெயகாந்தன்! அதுவும் முப்பது,நாற்பது வருடங்களுக்கு முன்னாலேயே!

    ReplyDelete
  22. சீதாம்மாவின் குறிப்பேடு பக்கத்தில் உங்கள் பக்கம் refer செய்யப் பட்டுள்ளதே...பார்த்தீர்களா..

    ReplyDelete
  23. மின்தமிழ் முனைவர் நா.கண்ணனுக்கு நான் தான் எழுதி, திருமதி சீதாலட்சுமிக்கு என்னுடைய வந்தனங்களைத் தெரிவிக்கச் சொல்லியிருந்தேன்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!