உப்புக் கருவாடு! ஊற வச்ச சோறு அப்புறம் அம்பாசடர் ..!

டொயோடாவைப் பற்றிப் பேசும்போது, அதன் உற்பத்தி முறை, மேலாண்மை, தர நிர்ணயம், வாடிக்கையாளருடைய திருப்தியை மட்டுமே பதிவின் மையக் கருத்தாகக் கொண்டு எழுத ஆரம்பித்தேன். அதுவும் கூட, மிகத் தெளிவாகத் தெரிகிற இரண்டு நேரெதிரான போக்குகள், பாடமாக எடுத்துக் கொள்ளத் தகுந்தவை என்ற அளவிலேயே இருந்தன. ஆனால், பின்னூட்டங்களில் கண்ட சில விஷயங்கள், நான் எடுத்துச் சொல்ல விரும்பிய விஷயங்களை இன்னமும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்பதைக் காட்டுவதாகவே இருந்தது!
இதன் முந்தைய பகுதி இங்கே

பதிவில் முக்கியப்படுத்தப்பட்ட இரண்டு நேரெதிரான போக்குகள்!
 

ஒன்று, ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பு, தேவைப் படும் மூலப் பொருட்களின் வரத்து, இருப்பை நிர்வகிக்கும் மேலாண்மை, உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் தர நிர்ணயம், தவறு இருப்பதாகத் தெரிய வந்தால், உற்பத்தி நிறுத்தப்பட்டு, தவறு களையப் படுவதிலும், அது மீண்டும் நிகழாதபடி உறுதிப் படுத்தப் படுவதிலும் கொடுக்கப்படும் முக்கியத்துவம், மூலப் பொருட்கள், மனித உழைப்பு எதுவுமே விரையமாகாமல் திறம்படப் பார்த்துக் கொள்ளும், நிர்வாக முறை! 


இப்படி டொயோடா உற்பத்தி முறை, வெறும் அசெம்ப்ளி லைன், அதில் வரிசையாக ஒவ்வொரு கட்டத்திலும் தொழிலாளர்கள் நின்று காரின் ஒவ்வொரு பகுதியாக இணைத்துக் கடைசியில் முழுமை அடைந்த கார் என்று வெறும் இயந்திரத்தனமான நடை முறையாக இல்லாமல், தேர்ந்தெடுத்துக் கவனத்துடன் சிற்பம் செதுக்குவதுபோல, ஒவ்வொரு வேலையும் முழுமையான கவனத்துடன் செய்வது என்பது தான்.

 
ஜப்பானியர்கள் வேலை செய்வதை ஒரு தவமாகவே, ஒரு முழுமையான  வாழ்க்கை முறையாகவே செய்தார்கள் என்பதை, இரண்டாவது உலகப்போருக்குப் பின்னால் முழுவதுமாக நிலை குலைந்து போன ஒரு சமுதாயம், தரைமட்டமாகிப் போன பொருளாதாரம் என்றானதில்  இருந்து  எப்படி எழுந்து நின்றார்கள், உலகைத் தங்களுடைய தயாரிப்பு நேர்த்தி, தரத்தினால் வெற்றி கொண்டார்கள் என்று  பார்த்தால் தான் புரிந்துகொள்ள முடியும்.  


இதைச் சொல்லும்போது, ஜப்பானிய வரலாற்றில், கொரிய சீன மக்களைத் தங்களுடைய இச்சைக்குப் பயன்படுத்திய வரலாற்றுக் கொடுமைகள், அல்லது அவர்களுடைய ஆதிக்க மனோபாவம் இவற்றோடு ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக் கொள்ளாமல், நவீன ஜப்பான், தன்னைத் தொழில் வளர்ச்சியடைந்த நாடாக, பொருளாதார வலிமையுள்ள நாடாக உருவாக்கிக் கொண்டது எப்படி என்பதைப் பார்க்க வேண்டும்



ஜப்பானியர்களுக்கு, இந்தியா, சீனா மாதிரி, ஆங்கில அறிவு, கல்விதொழில் முறைப் பரிச்சயம்இருந்ததில்லை. மேற்கத்திய மொழிகள், தொழில் வளர்ச்சி, உற்பத்தி முறை இவைகளெல்லாம் அவர்களுக்கு அந்நியமாகவும் தடையாகவும் இருந்தது, ஆனால் அதை ஒரு அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு விடா முயற்சி, இவைகளினால் வெற்றி கொண்டார்கள் என்பதைச் சொல்வதற்காக மட்டும் தான்!
 

இரண்டாவதாக சீனர்களுடைய கதை கொஞ்சம் வித்தியாசமானது. தேயிலை, கஞ்சா அபின் போன்றவைகளுக்காக ஐரோப்பியர்கள் தொடர்பு வைத்திருந்த நாடு சீனா! ஆங்கிலேயர்களும், ஜெர்மானியர்களும் சீனாவுடன் நெருங்கிய வணிகத் தொடர்புகளை வைத்திருந்தார்கள். பல பகுதிகளைத் தங்களுடைய காலனிகளாகவும் வைத்திருந்தார்கள்..   


முதல் உலகப் போரில் சென்னை மீது குண்டு வீசிய எம்டன் கப்பலைப் பற்றி, இரண்டு பதிவுகளை, முதலில் திரு வி.திவாகர் எழுதிய புதினம், அடுத்து எம்டன் கப்பலைப் பற்றிய தகவல் என்று இரண்டு பதிவுகளை இந்தப்பக்கங்களிலேயே பார்த்திருக்கிறோம், நினைவிருக்கிறதா? அந்த எம்டன் கப்பல், சீனாவில் இருந்த  ஜெர்மானிய அரசின் கடற்படைத்தளத்தில் இருந்து புறப்பட்டது தான்!
 
 
இந்த விஷயத்தை அடிக்கோடிட்டுச் சொல்வதற்குக் காரணம், சீனாவின் ஒரு பகுதி, மேற்கத்திய நாடுகளை அறிந்திருந்தது ஆங்கில, ஜெர்மானிய மொழிகளை அறிந்திருந்தது, மேற்கத்திய நாடுகளில் வேலை செய்யவும், சட்டவிரோதமான குடியேற்றம், வணிகம், லோகல் மாஃபியா இப்படிப் பலவிதமாகவும் தன்னை வலுப்படுத்திக் கொண்டிருந்தது. மேலை நாடுகளில் சீனர்கள் பலர் குடியேறி இருந்தார்கள். சீனர்கள் இருந்த இடமெல்லாம் சீனா டவுன் ஒன்று உருவானது மட்டுமல்லாமல், தங்கள் தாயகத்தோடு தொடர்புகளைப் பசுமையாகவும் வைத்திருந்தார்கள்


ஜப்பானியர்களுக்கு நேரெதிர்  போக்காக, சீன அரசியலில்  இயல்பாகவே, பிறருடைய உழைப்பைக் கபளீகரம் செய்வது, மிரட்டல்கள் உதார் விடுவது, சீண்டிப்பார்ப்பது அதே நேரம், தரம், நாணயம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகி விடுவதை  ஒரு முக்கியமான அம்சமாகவே பார்க்க முடிவதையும், எப்படித் தரமே இல்லாத பொருட்களை உற்பத்தி செய்து அதை உலக நாடுகளில் கொட்டிக் குவித்து உள்ளூர்த் தொழில்களை நாசம் செய்து வருகிறது என்பதைச் சேர்த்துச் சொல்வதும் தான்!
 

இப்போது இதைப் பேசுவது  --

இந்தியச் சூழ்நிலைகளுக்கு எந்தவிதத்தில் பொருந்திப்போகிறது

 
இவைகளைத் தெரிந்து கொள்வதனால் இந்தியத் தொழில்களில் என்ன மாற்றம் நிகழ்ந்து விடப்போகிறதுஅல்லது , மாற்றம் வர வேண்டும்?

 
இவைகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ளக் கூடிய பாடம் என்னென்ன? கற்றுக் கொண்டிருக்கிறோமா?

 
இந்தக் கேள்விகளுக்கு விடை தேடுவதற்காகவே, மேலாண்மை, நிர்வாகம், பொருளாதாரம் என்ற தலைப்புக்களில் இந்த விஷயத்தைத் தொட்டு எழுத ஆரம்பித்தபோது, ஒரு பின்னூட்டம் ஜப்பானியர்கள் செய்ததால் தவறைத் தாங்கிப் பிடிப்பதாக, இதையே ஒரு இந்திய நிறுவனம் செய்திருந்தால்....? என்ற ஒரு முற்றுப்பெறாத கேள்வியோடு வந்திருந்தது.  


இந்தியத் தொழில்துறையைப்  பற்றிக் கேள்வி கேட்டவர் எந்த அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறார் என்பது எனக்கு ஒரு சிறு குறிப்புக் கூடத் தெரியவில்லை. ஆனாலும், இந்தியத் தொழில் துறை வளர்ந்த விதம், முதலில் கார் தயாரிப்பையே எடுத்துக் கொள்ளலாமே என்று ஒரு ஆரம்பத்தை  நண்பர் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.


மிக விரிவாகப் பேசுகிற வகுப்பறை அல்ல இது! பதிவுகள், ஒரு சிந்தனையோட்டத்தை ஆரம்பித்து வைப்பதாகவோ, அல்லது ஏற்கெனெவே ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சிந்தனையின் தொடர்ச்சியாக மட்டுமே இருக்க முடியும். இன்னும் அதிகமான விவரங்கள் தேவைப் படுமேயானால், இணையத்திலேயே கொட்டிக் கிடக்கிறது. கொஞ்சம் சொந்த முயற்சி இல்லாமல் எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக அறிந்து கொண்டு விட முடியாது. நமக்கு என்ன தேவை என்பதை நாம் தானே தீர்மானித்தாக வேண்டும்?

ஆலிவர் ட்விஸ்ட் நாவலில் பிரிட்டிஷ் தொழிற்புரட்சி எப்படிகிராமங்களை அழித்து நகர்ப்புறச் சேரிகளை  உருவாக்கி, தொழிற்சாலைகளுக்கு ஆட்களைத் திரட்டியது என்பதை சார்லஸ் டிக்கென்ஸ் அந்த கால கட்டத்தைக் கண்முன்னாலே கொண்டு வந்து நிறுத்தியிருப்பார். அதே மாதிரி, இந்தியாவுக்கு வியாபாரம் செய்வதற்காக வந்த பிரிட்டிஷ்காரர்கள், கொஞ்ச கொஞ்சமாக இந்த நாட்டை விழுங்க ஆரம்பித்து அடிமையாக்கினார்கள்.


 
அவர்கள் வருவதற்கு முன்னால், இங்கே இந்தியா கிராமப் பொருளாதாரமாக இருந்ததோடு, சுய தேவைப் பூர்த்திப் பொருளாதாரமாகவும் இருந்தது. லங்காஷைர்  நூற்பாலைகளில் நெய்யப் பட்ட ஆடைகளைக் கொண்டு வந்து கொட்டி  இங்கே பரவலாக இருந்த பாரம்பரிய நெசவுத் தொழிலை அழித்தார்கள். இங்கே பருத்தி விளையும், ஆனால் அதை நூலாக மாற்றுவதும், ஆடையாகப் பின்னுவதும் இங்கிலாந்தில்


 
இந்தியா, அவர்களது சந்தையாகவே, ஏகபோகமாகவே இருந்தது.
இந்திய தொழில்துறை, அல்லது முதலாளிகளாக உருவானவர்கள் பிரிட்டிஷ்காரர்களுக்குத் தரகர்களாகச் செயல் பட்டவர்களாலேயே, பிரிட்டிஷ்காரர்கள் சம்மதத்தோடு உருவானது தான்!  


பிரிட்டிஷ் நூற்பாலைகளுக்கு இந்தியப் பருத்தியை கொள்முதல் செய்து வந்த டாட்டா, உலக யுத்தங்கள்  குறுக்கிட்டதால், இங்கேயே நூற்பாலையை ஆரம்பித்து, இயந்திர நெசவும் தொடங்கிய ஆரம்பத்தில் காலிகோ என்றும் பின்னால் டாட்டா டெக்ஸ்டைல்ஸ் என்றும் ஆன  நூற்பாலை, நெசவாலை தொடங்கிய வரலாறுமும்பைப்பகுதிகளில் நூற்பாலைகள் வந்த வரலாறு இப்படித்தான்!


சுதந்திரம் அடையும் வரை, பிரிடிஷ்காரர்களுடைய நலன்களுக்குத் தகுந்த மாதிரியே, இந்தியாவில் தொழில் துறை வளர்ந்தது அல்லது நசுக்கப்பட்டது. விடுதலைக்குப் பின்னாவது மாறியதா என்றால், பெரிதாக ஏதுமில்லை!


 
இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் கை சலித்து, சிங்கம் என்று சொல்லிக் கொண்டதெல்லாம் வெறும் வேஷம் தான், உண்மையில் வெறும் நரி தான் என்பது வெளிப்பட ஆரம்பித்த தருணங்களில் அமெரிக்க ஃபோர்ட் கம்பனி இந்தியாவில் தனது காலை ஊன்ற விரும்பியபோது, பிரிட்டன் மறுத்தது. பதிலுக்குத் தன்னுடைய கார்தயாரிப்பு நிறுவனங்களை இந்தியாவில் கூட்டணி அமைத்துத் தயாரிக்க அனுமதித்தது
 
விடுதலை அடைந்து, நேரு சுதந்திர இந்தியாவின் பிரதமராக ஆனார் என்ற நிலையில் கூட, நேரு-எட்வினா உறவு போல, பிரிட்டிஷ் தொழில் துறை உறவு இந்தியாவை விடுவதாக இல்லை.  


பிர்லா கம்பனியாக பிரிட்டிஷ் கூட்டுறவோடு இந்தியாவில் தயாரிக்கப் பட்ட முதல் கார், பிரிட்டனின் மோரிஸ் ஆக்ஸ் ஃபோர்ட்  (1948) இங்கே முதலில் லாண்ட்மாஸ்டர்  என்றும் அப்புறமாக அம்பாசடர் என்றும் இந்திய கார் சந்தையில் வெற்றிக் கொடி கட்டியது!. அம்பாசடரின் வெற்றி, முழுக்க முழுக்க அது இந்திய அரசால், தனது அதிகாரிகளுக்கு வழங்கப்படுவதற்காக வாங்கப்பட்டதில் தான் இருந்தது, தவிர இந்திய ரோடுகளுக்குத் தாக்குப் பிடிக்கக் கூடிய டாக்சிகளாகவும் நாடு முழுவதும் அறிமுகமானது. எந்த ஒரு நிலையிலும், அம்பாசடர் தனது தரம், தகுதி இவைகளை வைத்து மட்டும் விற்பனையானதாகச் சொல்ல முடியாது




இப்படிச் சொல்லலாமே! அரசின் கொள்முதலை நம்பி மட்டுமே அம்பாசடர் கார்களின் தயாரிப்பு இருந்தது. தனி நபர்கள், டாக்சிகள் விற்பனை கொசுறு மட்டுமே என்று ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிலை இருந்தது.

மும்பையில், இத்தாலிய  ஃபியட் .கம்பனி தனது கார் தயாரிப்பை ஆரம்பித்தது. என்ன காரணமோ, நாட்டின் மற்ற பகுதிகளில் எல்லாம் டாக்சிகள் அம்பாசடர் மயமாக இருந்தபோது, மும்பையில் மட்டும் டாக்சிகள்    ஃபியட் மட்டும் தான்!
சிறிய, கைக்கடக்கமான, எளிமையான கார் என்ற காரணமோ என்னவோ, சொந்த டிரைவிங் செய்பவர்கள் விரும்பி வாங்கிய காராக நாடு முழுவதுமேஃபியட் மட்டும் தான் இருந்தது


இந்தியச் சந்தைக்கு இதுவே போதும் என்ற எண்ணமோ, என்னவோ!? 



நீண்ட காலத்திற்குஇந்த இரண்டு ப்ராண்டுமே  புதிய மாடல்களையோ, வேறு வடிவங்களையோ அறிமுகப்படுத்த வில்லை. லாரி பஸ் வகையறாக்களில் ஃபார்கோ இப்படி எல்லாமே ஆரம்பத்தில் பிரிட்டிஷ் மயம் தான்!

சென்னையில் ஸ்டாண்டர்ட் கார் கம்பனி ஸ்டாண்டர்ட் 10, ஸ்டாண்டர்ட் ஹெரால்ட் என்று சிறிய கார் ரகங்களைத் தயாரித்து வந்தது. விற்பனையிலும் கூட அதன் பங்கு சிறியது தான். பிர்லாவின் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், காண்டிசா ரக சொகுசுக் கார்களை அறிமுகப் படுத்திய தருணம், ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் பிரிட்டிஷ் ரோவர் கம்பனியின் ரோவர் 2000 ரகக் கார்களை, இங்கே ஸ்டாண்டர்ட் 2000 என்ற பெயரில் அறிமுகப் படுத்திய போது இந்திய கார் சந்தையில் முதல் முறையாகப் போட்டி, சூடு  ஆரம்பித்தது.


இந்திய முறையில் போட்டி, சூடு என்பது எப்படியிருக்கும் என்பது லைசன்ஸ் கோட்டா பெர்மிட் வாலாக்களால் டெமான்ஸ்ட்ரெட்  செய்து காட்டப்பட்ட தருணம் அது! வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று கூச்சலிட்டவர்கள், இந்தப் பிரச்சினையைக் கண்டுகொள்ளவே இல்லை! 



 
அழுகுணி ஆட்டமாக போட்டியாளர்களால் ஆக்கப்பட்டுக் கடைசியில் ஸ்டாண்டர்ட் கார் தொழிற்சாலை மூடப் படுவதும் நடந்தது. சர்வதேச அளவில் எஞ்சின் வெளியிடும் வெப்பம் ஒப்புக் கொள்ளப் பட்ட ஒரு கார் வடிவமைப்பு, இந்தியாவில் மட்டும் மிக அதிகமாக இருப்பதாக ஆய்வு அறிக்கை சொன்னதாக அந்த முடிவை அரசு ஏற்றுக் கொண்ட விசித்திரம் இந்தியாவில் மட்டுமே நிகழக் கூடியதாக இன்னமும் இருக்கிறது.  


அழுகுணி ஆட்டத்தை ஆரம்பித்தவர்கள், ஒரு கட்டத்தில் தங்களுடைய ஆட்டத்தில் தாங்களே சிக்கிக் கொண்ட பின்கதை மிகவுமே சுவாரசியமானது! அந்தக் கதையைத் தொடங்கி வைத்தது மாருதி கார்! சோப் டப்பா மாதிரி இருந்த இந்தக் கார், மாற்றம் தவிர்க்க முடியாதது என்பதைநிரூபித்தது.

 
அரசியல், அதிகாரிகள் துணையுடன் போட்டியை அகற்றுகிற திருப்பணியை இந்தியத் தொழில் துறை நன்றாகவே கற்று வைத்திருந்தது. இன்றைக்கும் கூட, தொழில் துறை இந்தத் தொற்றுநோயில் இருந்து முற்றிலும் விடுபடவில்லை, தொற்று வெவ்வேறு வடிவங்களில் பரவிக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.

அம்பாசடர் காரைப் பற்றிய விமரிசனம் அல்ல இது! அதைத் தயாரித்த நிறுவனம், பழைய சரக்கையே எத்தனை நாட்களுக்கு வைத்துக் கொண்டிருக்கிறது, இப்போது அந்த நிறுவனத்தின் நிலை என்ன என்பதைப் பற்றிய சிறு கண்ணோட்டம் மட்டுமே.  

அம்பாசடர் புகழ்பாடும் ஒரு வலைப்பக்கம்!

உலகத்திலேயே, தொழில் தொடங்க முனையும் போதே ஏகப்பட்ட தடைகள், பொருந்தாத சட்டங்கள், காசு பார்ப்பதற்காகவே வீண் சட்டங்களைப் பேசுகிற அரசு ஊழியர்கள் இப்படி எல்லாவிதத்திலும், பிரிடிஷ்காரன் தன்னுடைய சுய  நலன்களைப்  பாதுகாத்துக் கொள்வதகாக ஏற்படுத்தி விட்டுப் போன ஏற்பாடுகளை அப்படியே விட்டுவிடாமல் இன்னமும் பிடித்துக் கொண்டிருக்கிற விசித்திரமான அமைப்பு நம்முடையது!  


ஒரு டீக்கடை தொடங்க வேண்டுமானால் கூட எத்தனை கழுதை ரேஸ்களைத் தாண்டி வர வேண்டியிருக்கிறது, எத்தனை கழுதைகளைத் தூக்கிச் சுமக்க வேண்டியிருக்கிறது!


 
லாபகரமாக எந்தத் தொழில் நடந்தாலும், அதை அப்படியே கபளீகரம் செய்து தன்னுடையதாக்கிக் கொள்ளும் வாரிசு அரசியல் இங்கே வளர்ந்து கொண்டிருக்கும் போது கூட, இந்தியத் தொழில்துறை தாக்குப் பிடித்து வருகிறது! சர்வதேசச் சந்தையில் தனது தயாரிப்பு விலை போக வேண்டுமானால், உள்ளூர் அரசியல்வாதி வாரிசு இவர்களைக் குஷிபடுத்தினால் மட்டும் போதாது, நவீனத் தொழில் நுட்பம், புதுப் புது உத்திகள், மேலாண்மை, நிர்வாக முறைகளில் தொடர்ந்த மாற்றம் இவைகளும் அவசியம் என்பதையுமே புரிந்து கொண்டு தொழில்துறை மாற ஆரம்பித்திருக்கிறது.

 
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல காலவகையினானே!

 
இது,மொழி இலக்கண நூலான தொல்காப்பியத்தின்  முடிவான கூற்று! மாற்றங்கள் தவிர்க்க முடியாதது! எல்லோருக்கும் தெரிந்தது தான்!

 
இங்கே பேசிக் கொண்டிருப்பது, மாற்றங்களை எதிர்கொள்ளும் தன்மையை பற்றி! மாற்றங்களை விருப்பமில்லாமல், வலுக்கட்டாயமாகவோ, வேறு வழியில்லாமலோ ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, மாற்றங்களை விருப்பத்தோடு எதிர் கொள்வது, நம்மைத் தயார் செய்து கொள்வது இவைகளைப் பற்றித் தான்!




 

7 comments:

  1. மாற்றங்களை விருப்பத்தோடு எதிர் கொள்வது, நம்மைத் தயார் செய்து கொள்வது இவைகளைப் பற்றித் தான்!
    yes. i fully agree.
    - but practicallt 60% people afraid or not willing to accept changes.they postpone till the possible end.

    example - lattest tirupur dyeing units problem

    ReplyDelete
  2. படித்தேன்...

    //"விடுதலை அடைந்து, நேரு சுதந்திர இந்தியாவின் பிரதமராக ஆனார் என்ற நிலையில் கூட, நேரு-எட்வினா உறவு போல, பிரிட்டிஷ் தொழில் துறை உறவு இந்தியாவை விடுவதாக இல்லை"//

    !!!!!

    ReplyDelete
  3. வாருங்கள் பாலு சார்!

    மாற்றத்திற்கு அஞ்சி, நான் பழையபடியே இருந்து விட்டுப் போகிறேனே என்று பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடுகிற இயல்பை இந்தப் பக்கங்களில் நிறையப் பேசியிருக்கிறேன். பழக்கங்களின் அடிமை அல்லது creature of habits என்ற தேடுசொற்களை வைத்து பழைய பதிவுகளைப் படிக்கலாம்.

    திருப்பூர், கரூர் முதலிய இடங்களில் சாயப் பட்டறைக் கழிவுகளை சுத்திகரிப்பதில் தயக்கமெல்லாம் எவர் பணம் செலவழிப்பது என்பதில் மட்டுமே! இவர்கள் சுற்றுச் சூழலைத் தொடர்ந்து நாசம் செய்துகொண்டே போவார்கள், ஆனால் வேறு எவரோ தான் அதை சுத்தம் செய்ய வேண்டும்! அதற்கும் வேறு எவரோ தான் செலவும் செய்ய வேண்டும் என்ற மனோபாவம் தான் அங்கே பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடுகிற தன்மையாகத் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.


    வாருங்கள் ஸ்ரீராம்!

    நேரு-எட்வினா என்ற இரண்டு தனிமனிதர்களைக் குறிப்பிடுவதற்காக அல்ல! இன்னமும் வெள்ளைக்காரன் நிர்வாகம், நீதி முறைகள் போல வராது என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிற நபர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.

    மின்தமிழில் இன்னாம்புரான் ஐயா அந்த வகையில் தான் பிரிட்டிஷ் நிர்வாக முறை தான் உலகத்திலேயே சிறந்தது என்றே எழுதிக் கொண்டிருக்கிறார்!

    பிரிட்டிஷ் அரசியல், பொருளாதாரம், நிர்வாக முறைகள் எல்லாம் காலாவதியாகிப் போண்டியாகவும் நிற்பதை இவர்கள் ஏனோ பார்க்க மறுக்கிறார்கள்.

    ReplyDelete
  4. /* லாபகரமாக எந்தத் தொழில் நடந்தாலும், அதை அப்படியே கபளீகரம் செய்து தன்னுடையதாக்கிக் கொள்ளும் வாரிசு அரசியல் இங்கே வளர்ந்து கொண்டிருக்கும் போது கூட,
    இந்தியத் தொழில்துறை தாக்குப் பிடித்து வருகிறது! */

    /* உலகத்திலேயே, தொழில் தொடங்க முனையும் போதே ஏகப்பட்ட தடைகள், பொருந்தாத சட்டங்கள், காசு பார்ப்பதற்காகவே வீண் சட்டங்களைப்
    பேசுகிற அரசு ஊழியர்கள் இப்படி எல்லாவிதத்திலும், பிரிடிஷ்காரன் தன்னுடைய சுய நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதகாக ஏற்படுத்தி விட்டுப் போன
    ஏற்பாடுகளை அப்படியே விட்டுவிடாமல் இன்னமும் பிடித்துக் கொண்டிருக்கிற விசித்திரமான அமைப்பு நம்முடையது! */

    Excelllent writing.

    காமராஜர் ஆட்சியை தூக்கி எறிந்த தமிழனுக்கு என்றுமே புத்திவராது.

    ReplyDelete
  5. இன்றைக்கு நடக்கும் கூத்துக்களோடு ஒப்பிடும்போது, காமராஜர் காலமும், அரசியலும் பொற்காலமாகத் தான் தோன்றும்!

    ஆனால் இன்று பூதாகாரமாகக் கொழுத்திருக்கும் பெருச்சாளிகளை வளர்த்து விட்டதும் காமராஜர் தான் என்பது, கசப்பான ஆனால் நடந்த உண்மை.

    1967 தேர்தலில் கேவலமாகக் காமராஜரும், காங்கிரசும் தோற்றதற்கு, காமராஜர் முதற்கொண்டு அப்புறம் பிரச்சினையைக் கையாளத் தெரியாத பக்தவத்சலம் முதலாக ஒரு ஆயிரம் காரணங்களைச் சொல்ல முடியும்.

    முக்கியமான கேள்வி, ஏன் அதற்கு அப்புறமாக காங்கிரஸ் கட்சியால் தமிழ்நாட்டில் எழுந்திருக்கக் கூட முடியவில்லை?

    கோவை அய்யாமுத்து எழுதிய புத்தகம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்! சத்திய மூர்த்தி-ராஜாஜி பகைமை, எப்படி சத்திய மூர்த்தியின் சீடராக இருந்த காமராஜர் காலத்திலும் தொடர்ந்தது என்பதான விவரங்களை அல்லது இன்னொரு பக்கத்தைக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  6. /* முக்கியமான கேள்வி, ஏன் அதற்கு அப்புறமாக காங்கிரஸ் கட்சியால் தமிழ்நாட்டில் எழுந்திருக்கக் கூட முடியவில்லை? */

    "ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் தான்."
    காங்கிரஸில் காமராஜரை தவிர பெரும்பாலும் பணக்காரர்கள் தான்.
    சினிமாக்காரன் தானே காமராஜர் ஆட்சிக்கு பிறகு தமிழ்நாட்டை ஆள்கிறான்.
    பல வருடங்களாக சினிமாக்காரன் ஊர்களில் உள்ள சேரிகளில் தேர்தலின் போது
    பணத்தை அள்ளி வீசினான். இப்போது அனைவருக்குமே பணத்தை அள்ளி வீசுகிறான்.
    ஆகையால் இனி பணக்காரன் தான் ஆட்சியை பிடிக்கமுடியும். காங்கிரஸ் ஆட்சி இனி தமிழ் நாட்டில் மலர
    பிரகாச வாய்ப்பு உள்ளது.

    ReplyDelete
  7. நீங்கள் சொல்வதெல்லாம் பின்னால் பக்க விளைவுகளாக வந்தது, திரு அமர்!

    காந்தீயம் பேசி, காந்தியைப் பின்பற்றிய காங்கிரஸ் 1947 ஐ ஒட்டியே காலாவதியாகி விட்டது.

    சுயநலமிகளும், பதவிப் பித்தர்களும், நடிப்பு சுதேசிகளும் கதர் சட்டைக்குள் புகுந்து கொண்டார்கள். ஜனங்களுடைய பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் அந்நியப்பட்டுப் போனார்கள். ஜனங்களுடைய அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு நாடக வசனம் எழுதியே, அது தான் சீர்திருத்தம், அது தான் புரட்சி என்று பெசினவனைக் கண்டு ஜனங்கள் மயங்க ஆரமபித்ததென்னவோ உண்மை.

    ஆனால், காங்கிரஸ், மக்களுக்குத் தெளிவான தலைமையை நேரு காலத்தில் இருந்தே தர முடியவில்லை. காமராஜரை மட்டுமே காங்கிரசின் முழுத் தோல்விக்கும் காரணமாகச் சொல்ல முடியாது.

    பழைய அரசியல் நிகழ்வுகளை, நேரு, தலைமைப் பண்பு, அரசியல், சாஸ்திரி என்ற குறியீட்டுச் சொற்களில் தேட, இன்னும் கொஞ்சம் விவரங்கள் ஏற்கெனெவே பேசியது படிக்கக் கிடைக்கும்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!