Thursday, February 18, 2010

உஷ்..ஷ்.! சீனப் பூச்சாண்டி!

இதைத் தொட்டு எழுதி இரண்டு மாதங்களுக்கு மேலாகி விட்டது என்றாலும், இதில் தொட்டு எழுதிய சீனப் பூச்சாண்டி பற்றிய விவரணங்கள் அதன் வீரியத்தை இழக்கவில்லை. சீனப் பூச்சாண்டியின் வெவ்வேறு விதமான வடிவங்கள், உலகத்தின் போக்கைத் தீர்மானிக்கப் போகும்மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகவே இன்றைக்கும் இருக்கிறது.

குளோபல் லாங்குவேஜ் மானிட்டர் என்ற  நிறுவனம் செய்திகளைத் தரம்பிரித்து, ஒரு அல்கோரிதம் (கணக்கிடும் முறை) வழியாக ஆராய்ந்ததில், அச்சு ஊடகங்கள், மின் ஊடகங்கள், மற்றும் இணையத்தில் புழங்கப்பட்ட, தேடப்பட்ட வார்த்தைகளை வைத்து, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் மீது தெரிய வந்த ஆர்வம், அக்கறையை வைத்து, தனது ஆராய்ச்சி முடிவுகளைத் தெரிவித்திருக்கிறது.

இந்தப் பத்தாண்டில் மிக அதிகமாகப் படிக்கப் பட்ட செய்தி, ஈராக்குடனான போர், எட்டு வருடங்களுக்கு முன்னாள் செப்டம்பர் 11 அன்று, நியூ யார்க் நகரில் இரட்டைக் கோபுரங்கள் மீது நடந்த தாக்குதல் இப்படிப் பரபரப்பான செய்திகளையெல்லாம் தாண்டி முதல் இடத்தைப் பிடித்த செய்தி, சீனா, ஒரு சூப்பர் பொருளாதார வல்லரசாக வளர்ந்திருக்கிற செய்தி தான்!

"சீனா இப்படி சூப்பர் பொருளாதார வல்லரசாக வளர்ந்திருப்பது இப்போதுள்ள சர்வதேசச் சூழலைப் புரட்டிப் போட்டிருக்கிறது! இனிவருங்காலத்திலும் மிகப்பெரிய சவாலாகவும் இருக்கும்" என்கிறார் பால் ஜே ஜே பயக். குளோபல் லாங்குவேஜ் மானிட்டர் என்ற அமைப்பின் தலைவர் இவர்.
சீனாவின் வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால், நிறையப் பூச்சாண்டி, நிறைய வலுச் சண்டைகள், வெட்டி உதார்கள், இருப்பதைப் பார்க்க முடியும். கும்பலாக வந்து மேலே விழுந்து அமுக்குவது அது போராக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, சீனர்களுக்குத் தெரிந்த ஒரே கலை அது ஒன்று தான் என்றே எண்ணத் தோன்றும்.

சீன டிராகன் இப்போது நெருப்பைக் கக்க ஆரம்பித்திருக்கிறது! வழக்கம் போல வெறும்  உதார் தானா அல்லது சீண்டிவிட்டு வலுச்சண்டைக்கு அழைப்பது போலவா, நிஜமாகவே சண்டை வருமா,என்ன ஆகும் என்பதைக் கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

2008 இல் அமெரிக்க வங்கித்துறை, நிதித்துறைகளில் ஏற்பட்ட சரிவு, சரியாகிவிட்டது போல ஒரு தோற்றம் சென்ற அக்டோபரில் இருந்தே செய்திகளாக வெளியிடப் பட்டு வந்தது. ஆனால், உண்மையில் அமெரிக்கப் பொருளாதாரம் சரிவில் இருந்து மீளவில்லை என்றே நடப்புச் செய்திகள் காட்டுகின்றன.


ஜனநாயகக் காவலனாகக் காட்டிக் கொள்ளும் அமெரிக்க அரசைப் போலவே,கூகிள் சீனாவில் தனது பருப்பு வேகவில்லை, சரியாகப் போணியாகவில்லை  என்றதும், வெளியேறிவிடுவோம் என்று மிரட்டிப் பார்த்தது. மிரட்டலையே ஒரு கலையாக வளர்த்து வைத்திருக்கும் சீனர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை. அசடு வழிந்தபடி, கூகிள்,  நாங்கள் அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை என்று முனகிக் கொண்டே பின்வாங்கியது. இப்போது, நடந்து கொண்டிருக்கும் விஷயங்களைப் பார்த்தால், கூகிள் வெளியேறினாலும் சரி, வெளியேறாவிட்டாலும் சரி, சீனாவைப் பொறுத்தவரை ஒன்றுமே இல்லாமல் போய்விடுகிற பரிதாபத்திற்குத் தான் தள்ளப் பட்டிருக்கிற மாதிரித் தெரிகிறது. 

ஆயுத விற்பனையை மட்டுமே தனது முக்கியத் தொழிலாக வைத்திருக்கும் அமெரிக்கா, தைவானுக்கு நவீன ஆயுதங்களை விற்பதற்கு முடிவு செய்தது. சீன டிராகன் உடனே சிலிர்க்க ஆரம்பித்தது! உறவுகள் சீர்கேடும் என்று எச்சரித்தது.

அடுத்து, தலாய் லாமாவை அமெரிக்க அதிபர் ஒபாமா சந்தித்துப் பேசவிருக்கும் செய்தி வெளியானதும், சீன டிராகன் இன்னும் அதிக நெருப்பைக் கக்க ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் மாளிகைச் செய்தி, ஒபாமா தலாய் லாமா சந்திப்பு, அதிகாரப்பூர்வமான ஓவல் அறையில் நடக்காது, ஒபாமாவின் தனியறையில் நடக்கும் என்று அறிவித்திருக்கிறது! அதாவது, கொஞ்சம் அமுக்கியே வாசிக்கிற மாதிரி!

இந்த செய்தியை பாருங்கள்! சீன மக்கள் ராணுவத்தின் அதிகாரிகள், தைவானுக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்க முடிவுக்குப் பாடம் கற்றுக் கொடுக்கும் விதத்தில், சீன அரசு முதலீடு செய்திருக்கும் அமெரிக்க அரசுக் கடன் பத்திரங்களை விற்று மூக்கில் ஒரு குத்து விடும்படி யோசனை சொன்ன மாதிரி இருக்கிறது!

சீன அரசு, அமெரிக்க் அரசின் கடன்பத்திரங்களைச் சந்தையில் விற்று வருகிறது! இதுவரை சுமார் 3450 கோடி டாலர் மதிப்புக்குப் பத்திரங்களை விற்றிருப்பதாகவும், தைவானுக்கு அமெரிக்க ஆயுதங்கள் விற்பனை செய்யும் ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்னாலேயே இந்த விற்பனை வேலை ஆரம்பித்து விட்டதாகவும் தகவல்கள் சொல்கின்றன.

அதாவது போன செப்டெம்பர் மாத வாக்கிலேயே இந்த வேலை ஆரம்பித்து விட்டது! உதார், மிரட்டல்கள் எல்லாம்  அப்புறம் தான் வருகிறது! சீனப் பூச்சாண்டியின் தன்மையைப் புரிந்துகொள்வதற்கு, அவர்கள் என்ன சொல்கிறார்கள், ஏன் சொல்கிறார்கள் எப்படிச் சொல்கிறார்கள் என்பதைப் பார்த்தாலே புரிந்து விடும்!

நான் நினைக்கிறபடி நீ இல்லையானால், நீ எனக்கு எதிரி! அவ்வளவுதான், அதற்கு மேல் சீனாவைப் புரிந்துகொள்ள ரொம்பப் பிரமாதமான சரித்திர ஞானம் எல்லாம் வேண்டாம்! சிறுவயதில் வெ. சாமிநாத சர்மா எழுதிய  சீனாவின் வரலாறு புத்தகம் படித்ததை எல்லாம் இப்போது நினைவில் வைத்துக் கொண்டு பயனில்லை!

இரண்டுலட்சத்து நாற்பதாயிரம் கோடி டாலர்கள் வணிக உபரி மதிப்பை வைத்திருக்கும் சீனா, அதில் முக்கால் பங்கை அமெரிக்க டாலர்களில் தான் முதலீடு செய்திருக்கிறது. சீனப் பணமான யுவான் மதிப்பை செயற்கையாகக் குறைத்து வைத்திருக்கிறது, தங்களுடைய ஏற்றுமதிக்குச் சாதகமாக இப்படி செய்வதை சீனா மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற அமெரிக்க நிலையை சீனா ஏற்றுக் கொள்ளவில்லை. அதே நேரம், உள்நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப் படுத்துவதற்காக, சில தினங்களுக்கு முன்னால், வங்கிகள் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதத்தை சீன அரசு உயர்த்தியிருக்கிறது.

இங்கே இந்தியாவில் கூட ரிசர்வ் வங்கி சில நாட்களுக்கு முன்னால், வங்கிகள் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதத்தை முக்கால் சதவீதம் கூட்டியிருக்கிறது. ரிசர்வ் வங்கி என்ன உத்தேசத்தில் இந்த முடிவை மேற்கொண்டது, அல்லது இந்த முடிவு என்ன சாதித்து விடும் என்பது தெளிவாக்கப் படவில்லை.

தமிழில் தினசரிப் பத்திரிகைகளில், விற்பனை எண்ணிக்கை குறைந்து போனால் கூட, தரம் தாழ்ந்துபோகாத தினசரி தினமணி ஒன்று தான்! உருப்படியான தலையங்கங்கள், கட்டுரைகளைப் படிக்க முடிவதும் கூட இங்கே தான்!

இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய முடிவுகளைப் பற்றிய தினமணிக் கட்டுரைகள்  ஒன்றுஇரண்டு !

2 comments:

 1. good analysis.

  i waited for this .

  1. our indian politicians depending america only. but clever america not support india in china issue. like this going what will happen?

  2. if we make friendship with china - it will usefull for india? but i think china wants dominate or to command india

  - what is your view?

  ReplyDelete
 2. அமெரிக்காவை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. ஒவ்வொரு நாடும் தனது வெளியுறவுக் கொள்கைகளைத் தனது உள்நாட்டு நலன்களுக்குத் தகுந்த மாதிரித் தான் கையாளுகின்றன, தேவையான மாற்றங்களைச் செய்துகொள்கின்றன.

  இந்திய வெளியுறவுக் கொள்கை, நேருவின் அசட்டுத் தனமான கற்பனையில் உருவான ஒன்று. அந்த மனிதரிடம் நல்ல எண்ணம் இருந்தது, அதை விடத் தனக்கு எல்லாமே தெரியும் என்ற நினைப்பும் இருந்தது.

  வெள்ளையர்கள் வெளியேறும்போது, கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்துவிட்டுப் போவது போல, நிறைய விஷயங்களில் குளறுபடிகளை வேண்டுமென்றே உருவாக்கிவிட்டுப் போனார்கள்.

  சீனாவுக்கும் இந்தியாவுக்குமான எல்லைகளை சரியாக வரையறுக்காமல் போனது கூட பெரிய பிரச்சினை இல்லை, எல்லைகளை வரையறுப்பதில் கையானது குளறுபடிகள், எல்லாம் தெரிந்த நேருவுக்கு, எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பது என்பது தெரியவில்லை.

  அதே மாதிரி பாகிஸ்தானுடன் ஒரு அர்த்தமுள்ள உறவை ஸ்தாபித்துக் கொள்ள 1948 ஆம் ஆண்டு கிடைத்த வாய்ப்பை நேரு, அலட்சியப் படுத்தினார்.

  ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த தருணத்தில், இந்திய சீன உறவு கொஞ்சம் துளிர்க்கிற மாதிரி நம்பிக்கை வந்தது. எலி நாட்டு உறவுகள், கொஞ்சம் கவனமாகக் கையாளப்பட வேண்டியவை, உள்ளூர்த் தேர்தல்களில், அந்த நேரத்துக்கு தோதான வாக்குறுதிகளை அள்ளி வீசுவது போல அல்ல என்பதை இந்திய அரசியல்வாதிகள் இன்னமும் கற்றுக் கொள்ளவில்லை.

  குண்டுசட்டிக்கு உள்ளே குதிரை ஓட்டத் தெரிந்த தலைவர்களை மட்டுமே நாம் தேர்ந்தெடுக்கிறோம்!

  நேரு, சாஸ்திரி, தலைமைப் பண்பு என்ற குறியீட்டுச் சொற்களை வைத்து இந்தப் பதிவிலேயே இந்திய சீன எல்லைத் தகராறு, இந்திய பாகிஸ்தான் யுத்தம் இவைகளைப் பற்றிக் கொஞ்சம் பேசியிருப்பதைப் படிக்கலாம்.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails