சண்டேன்னா மூணு! படித்ததும் பிடித்ததும்! இடித்ததும்!

இரண்டு நாட்களாக, வேறு யோசனை, நிறைய வாசிப்பு என்று போனதில் எழுதும் நினைப்பே வரவில்லை. பழைய விஷயங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கையில் சில விஷயங்கள் சுவாரசியமாக இருக்கவே, படித்தது, அதில் பிடித்தது, கொஞ்ச நஞ்சமல்ல நிறையவே இடித்தது என்று மூன்று விஷயங்களைப் பார்த்துவிடலாமே!

ஆர்காட்டார் ஜோக்ஸ்: இருட்டில் படியுங்க

நாஸ்டரடாமஸ் என்று ஒருவர் ரொம்ப காலத்துக்கு முன்னால் ரொம்ப காலத்துக்கு பின்னால் நடக்கப்போவதையெல்லாம் எழுதிவைத்திருக்கிறார் என்று சொல்வார்கள். எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தது. 1973 துக்ளக் இதழ்களில் போட்டிருக்கிற கார்ட்டூன்களைப் பார்க்கிற வரையில். அட 2008 இல் நடக்கப் போகிற விஷயம் எப்படி 1973 இல் கார்ட்டூன் போட்டிருக்கிறவர்களுக்கு தெரிந்தது என அவர்களது ஞான திருஷ்டியை வியக்கவா அல்லது 1973 இலிருந்து 2008 வரை கார்ட்டூன்களுக்கு உண்மையாக விசுவாசமாக நடந்துவரும் திமுகவின் மின்சாரவெட்டு திராவிட பாரம்பரிய மாற்றமின்மையை வியக்கவா அல்லது இந்த கையாலாகத கும்பலை மீண்டும் ஆட்சியலமர்த்திய மக்களின் சொரணையற்ற தன்மையை வியக்கவா....எதுவானாலும் தமிழ்நாட்டின் திராவிட நாஸ்டரடாமஸ் பட்டத்தை சோவுக்கும் துக்ளக்கும் அளித்து இந்த பட்டத்தை அவர்களுக்கு அளிப்பதற்காக அயராது பாடுபடுவரும் தமிழ்நாட்டு மின்வெட்டுதுறை மற்றும் தீவட்டி முன்னேற்ற துறை அமைச்சர் என பினாமி பட்டம் பெற்றவருமான திருவாளர் அமைச்சர் பெருமகனாருக்கும் இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்.
கீழே நீங்கள் காண்பது 1-3-1973 தேதியிட்ட துக்ளக் இதழில் வெளிவந்த கார்ட்டூன்.



இதே கார்ட்டூனில் அன்றைய மின்வெட்டு இலாகா மந்திரியை நீக்கி இன்றைய மின்வெட்டு சாரி மின்சார துறை இலாகா மந்திரியை போட்டாலும் எவ்வளவு கச்சிதமாக பொருந்துகிறது பாருங்கள்.



இதோ நீங்கள் மகிழ பழைய 'துக்ளக்' இதழ்களிலிருந்து எடுக்கப்பட்ட இதர 'வீராசாமி ஜோக்ஸ்'. மின்வெட்டினால் அவதியுறும் என் இனிய தமிழ் மக்களே எல்லா புகழும் கொலைஞருக்கே....சாரி கலைஞருக்கே....











 திரு அரவிந்தன் நீலகண்டன் தனது அகப்பயணம் என்ற வலைப் பதிவில் ஆகஸ்ட் 2008 இல் எழுதிய பதிவு இது! கழகங்கள், ஆரம்ப காலத்தில் இருந்தே காக்கைப்பொன்னாகவே தான் இருந்தன என்பதை, சுருக்கமாகச் சொன்ன பதிவு இது!



படித்தது, அதில் இருக்கும் நிஜம் பிடித்தது!

oooOooo
உடுமலை புக் சென்டரில் தி.ஜானகிராமன் எழுதிய சில புத்தகங்களுக்கு ஆர்டர் கொடுத்திருந்தேன். அதில் மலர் மஞ்சம் கைவசம் இல்லையென்பதால், நான் கேட்டபடி கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் கலைமணி என்ற புனைபெயரில் ஆனந்தவிகடனில் தொடராக எழுதிய "தில்லானா மோகனாம்பாள்" புதினத்தை அனுப்பியிருந்தார்கள். மனைவிவழி உறவுக்காரர் ஒருவர், எனது மேசை மீது இந்தப் புத்தகத்தைப் பார்த்துவிட்டு, என் மனைவியிடம் 'இந்தப் புத்தகமா? ரொம்பவும் போரடிக்குமே!' என்று சொன்னாராம்!

1341 பக்கங்கள்! இரண்டு தொகுதிகளாக, பத்து வரிகளுக்கு மேல் வாசிக்க பயப்படுகிறவர்களுக்கு நிச்சயமாக, இந்தப் புதினம் கொஞ்சம் பயமுறுத்துவதாகத் தான் இருக்கும்! அதற்கு ஒன்றும் செய்ய முடியாது! 

ஆனால், காவேரிக் கரையும் அதில் வளர்ந்த சங்கீத ரசனையை, இசைவேளாளர்களைப் பற்றியும் இதைவிட விரிவாகச் சொன்ன கதை தமிழில் வேறெதுவுமில்லை! தி.ஜானகிராமன், சங்கீதத்தை ஒரு விதமாகச் சொல்லிப் போனார் என்றால், கொத்தமங்கலம் சுப்பு, தாசி குலத்தில் பிறந்த மோகனாவும், நாதஸ்வரத்திற்கே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த இசைக் கலைஞன் ஷண்முக சுந்தரத்திற்கும் ஏற்படும் காதலோடு, அன்றைய கலைஞர்களுடைய வாழ்க்கையை மிக அழகாக எழுத்தில் வடித்த காவியம் இது! கோபுலு வரைந்த ஓவியங்கள், ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்தபோது, வாசகர்கள் முன்னால் உயிரோட்டமாகக்  கொண்டுவந்து நிறுத்திய உன்னதமான தருணங்களை, இப்போது படித்துக் கொண்டிருக்கும்போதும் அனுபவிக்க முடிகிறது என்றால்........!

நல்ல எழுத்து என்றைக்கும் நிற்கும்! படித்ததில் பிடித்ததாக கொத்தமங்கலம் சுப்பு  எழுத்தோவியமாக வரைந்த தில்லானா மோகனாம்பாள் புதினம், இந்த வாரப் படித்ததும் பிடித்ததுமாக!
oooOooo

"உலக சரித்திரத்திலேயே பேரரசு என்றால் அது ஒன்றுதான். 1600-கள் தொடங்கி 1947 வரை இருந்த பிரித்தானியப் பேரரசு. அதற்குமுன் எந்தப் பேரரசும் அவ்வளவு பெரியதாக, வலிமை பொருந்தியதாக இருந்திருக்கவில்லை. அதற்குப்பின் இதுவரையிலும் இருக்கவில்லை."

என்று பிரித்தானியப் பேரரசை வியந்து கொண்டாடும் இந்தப் பதிவை சிவராமன்  (கூகிள் ரீடரில் நண்பராக இருப்பவர்) சிபாரிசில் படிக்க நேர்ந்தது. கிழக்கு பத்ரி தன்னுடைய பதிவை இப்படி முடிக்கிறார்:

"பிரிட்டனுக்கு பதில் வேறெந்த நாடாவது - பிரான்ஸ், ஜெர்மனி... - இதே அளவுக்கு காலனி நாடுகளைக் கொண்டிருந்தால் அவர்கள் பிரிட்டன் அளவுக்கு நாகரிகமாக நடந்திருக்க மாட்டார்கள்; அவர்களது ஆட்சியில் இந்த காலனி நாடுகளின் மக்களும் வளர்ந்திருக்கமாட்டார்கள் என்பது ஃபெர்குசனின் கோட்பாடு.

இதை நாம் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்."


??!! 

இந்த மாதிரி வியாக்கியானங்களைப் படிக்கும் போது,தலையில் அடித்துக் கொள்வதைத் தவிர வேறு நல்ல வழிகளும் இருக்கின்றன. பிரிடிஷ்காரர்களுடைய குள்ளநரித் தனத்திற்கு, Give a dog a bad name and then hang it! இப்படிக்   கொலை செய்வதையும் சட்டபூர்வமாக்கி நாகரீகப் பூச்சைக் கொண்டு வந்தவர்களுடைய சுயரூபத்தை இன்றைக்கும் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டுமா என்ன?

 

ஃபெர்குசனின் கோட்பாடு என்னவென்று இவர் சொல்லி, ஆச்சரியத்தில் வாய் பிளந்து ஆஹா அப்படியா, நாமும் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும் என்று நினைப்பதற்கு முன்னால்.......... கொஞ்சம் இங்கேயும் பாருங்கள்!


The British empire had not merely tolerated but promoted the opium trade with China from its Indian base as a means to balance its large incipient trade imbalance with the Chinese. The opium wars in China in the 19th century were fought to protect this … trade, through the legalisation of the importation of opium by the treaty of Tientsin in 1858.  

By the beginning of the 20th century, 23.3 per cent of the male and 3.5 per cent of the female adult Chinese population were opium users, consuming between 85-95 per cent of the global opium supply.

கஞ்சா போதைக்கு அடிமையாக்கி, சீனர்களிடமிருந்து, உலகிலேயே உயர்தரமான காண்டனீஸ் தேயிலையைக் கொள்முதல் செய்தவர்கள் பிரிட்டிஷ்காரர்கள். ஓபியம் யுத்தங்கள் என்று சீனர்களுக்கும், பிரிடிஷ்காரர்களுக்கும் நடந்த சண்டைகள், பிரிடிஷ்காரர்களுடைய நாகரீகம், கண்ணியத்தைச் சொல்லும்!

காலனி நாடுகள், அவர்களுடைய ஆட்சியில் வளர்ந்த கதை....?

இது என்ன கழகங்கள் ரேஞ்சுக்குப் பெரிய புருடாவாக இருக்கிறது? 

திரு.சிவராமன்! விஷயங்களை கொஞ்சம் க்ராஸ் செக் செய்த பிறகு தானே நட்சத்திரக் குறியிடுகிறீர்கள்?




5 comments:

  1. சண்முகசுந்திரத்திற்கும், மோகனாம்பாளுக்கும் கோபுலு போட்ட படங்களைப் பார்த்து விட்டு, இந்தப் புத்தகத்தின் அட்டையில் ம.செ. படத்தைக் கூட மனசு அதே சண்முக சுந்தரம், அதே மோகனாம்பாள் என்று ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இது
    ம.செ.-யின் தவறாகாது. அந்த அளவுக்கு கோபுலு சண்முகசுந்தரத்தையும், மோகனாம்பாளையும் வாசகர் மனசில் 'பார்த்துக்கங்க.. இவர்கள் தான் அவர்கள்' என்று உலவ விட்டிருந்தார்.
    சும்மா சொல்லக் கூடாது.. அடடா! கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் கைவண்ணம்.. 'விகடனி'ல் வாராவாரம் 'தில்லானா மோகனாம்பாளை' படித்த நினைவுகள் மறக்கக் கூடியதா என்ன? திரைப்படத்தில் அந்த மகாகலைஞன் நாகேஷ், வைத்தியின் பாத்திரத்திரத்தை உயிரோடு உலவ விட்டிருந்தார். நடிகர்திலகமும், நாட்டியபேரோளியும் போட்டிப் போட்டுக் கொண்டு தங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருந்தனர்.
    எல்லாமே அழியாத நினைவுகள்..
    பதிவு போட்டு பழைய நினைவுகளைக் கண்முன் கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி, கிருஷ்ணமூர்த்தி சார்!

    ReplyDelete
  2. கிருஷ்ணமூர்த்தி சார்,
    எழுத்தையெல்லாம் எந்த சோப் போட்டு வாஷ் பண்ணுணீங்க, சுத்தமா சாயம் போயிடுச்சு.

    ReplyDelete
  3. வாருங்கள் ஜீவி சார்!

    தில்லானா மோகனாம்பாள் கதையைப் படித்தவர்களுக்கு, A P நாகராஜன் திரைக்கதையில் செய்திருந்த குளறுபடிகள் நன்றாகவே புரியும்!

    அவர் எடுத்த திருவிளையாடல் ஆகட்டும், தில்லானா மோகனாம்பாள் ஆகட்டும், நாகேஷ் என்ற ஒரே கலைஞனால் மட்டுமே உயரத்தில் தூக்கி நிறுத்தப்பட்டது! அதற்கு அடுத்தபடியாக ஜில் ஜில் ரமாமணியாக மனோரமாவும், தவில் முத்துராக்குவாக டி எஸ் பாலையாவும் அந்தப் படத்தைத் தூக்கி நிறுத்தினார்கள்.

    மற்றப் படி, தஞ்சை மண்ணின் கலையார்வமோ, அங்கே காவிரிக் கரையில் பிறந்த சங்கீதமும், சங்கீத ரசனையும் சொல்லப் படாமலே போனது! தில்லானா மோகனாம்பாள் புதினத்தின் உயிரை விட்டு விட்டு உடலை மட்டும் காட்டிய முயற்சியாக இருந்தது என்பது எனது கருத்து.

    எழுத்தில் வடிக்கும் விதம் வேறு,அதைத் திரைக்கதையாகக் கொண்டுவரும் விதம் வேறு.வெவ்வேறான இந்த இரண்டு ஊடகங்களையும், தேர்ந்து கையாளத் தெரிந்த கலைஞர்கள் இங்கே இல்லை.

    நாட்டியப்பேரொளி!?

    இந்தப் படத்தில் நடிக்கும் போது அவர் பத்மினிப் பாட்டியாக மட்டுமே இருந்தார். சிவாஜி எப்போதும் போல அலட்டலான அதே நாடகத் தனம், மிகை நடிப்பு என்பதைத் தவிர குறிப்பிட்டுச் சொல்ல வேறேதும் இல்லை! இவர்களையும் மீறி, அந்தப் படம் வெற்றி பெற நாகேஷ், மனோரமா, பாலையா போன்ற துணைப் பாத்திரங்களே காரணம்.

    புத்தகத்தை இன்னொருதரம் வாசிக்க முடிந்தால், நான் சொல்வதில் உள்ள உண்மையை நீங்களே கண்டு கொள்வீர்கள்!

    ReplyDelete
  4. முனைவர் கந்தசாமி ஐயா!

    என் எழுத்து சாயம் போய் விட்டது என்றா சொல்கிறீர்கள்!?

    :-))

    ReplyDelete
  5. நூல் அறிமுகத்திற்கும், துக்ளக் அட்டைபங்களுக்கும் நன்றியும் வணக்கங்களும்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!