Monday, March 15, 2010

ஜகா வாங்கு!கெஞ்சினால் மிஞ்சுவன்! மிஞ்சினால் கெஞ்சுவன்!

ஜகா வாங்குவது அல்லது புறமுதுகு காட்டி ஓடுவது அல்லது நாய் வாலைப் பின்னங்கால்களுக்கிடையே  சுருட்டி வைத்துக் கொண்டு பம்மிக் கொண்டே பின்வாங்குமே அது மாதிரி என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டே போகலாம்! 
இன்றைக்கு பாராளுமன்றத்தில் முன்வைக்கப் படுவதாக அறிவிக்கப் பட்டிருந்த   The Civil Liability for Nuclear Damage Bill, 2010,   அறிமுகம் செய்வது ஒத்தி வைக்கப் படுவதாக அரசு தரப்பில் அமைச்சர் ப்ரித்விராஜ் சவான் சொன்னதாக, சபாநாயகர் மீரா குமார் அறிவித்திருக்கிறார்.

இன்றைக்கு அரங்கேற்றம் செய்யப் பட இருந்த ஒரு விபரீதம் ஒத்தி வைக்கப் பட்டிருக்கிறது என்பது மட்டும் தான் இதற்கு அர்த்தம். அபாயம் முழுக்க விலகிவிடவில்லை காங்கிரஸ் பேச்சாளர் அபிஷேக் சிங்வி  சொல்கிற படி, அரசுக்கு ஒரு மசோதாவை எப்போது அறிமுகம் செய்வது என்பதைத் தேர்ந்தெடுக்க உரிமை உண்டு என்று ஜகா வாங்கியதற்கான விளக்கமாகச் சொல்லியிருக்கிறார். 


மசோதா நிறைவேற, போதுமான உறுப்பினர்கள் ஆதரவு கிடைக்காது என்ற அச்சம் தானே காரணம் என்று நிருபர்கள் கேட்டதற்கு சிங்வி கொஞ்சம் கோபப் பட்டிருக்கிறார்.

ஆனால், ஜகா வாங்கியதற்கான  உண்மையான காரணம் மம்தா பானெர்ஜியின் திரிணமுல் காங்கிரசின் ஆதரவு கிடைக்காது என்ற அச்சம் தான் என்பது வெளிப்படையாகவே தெரிய வந்திருக்கிறது. மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா மீதான ராஜ்யசபா ஓட்டெடுப்பில் திரிணமுல் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது. அரசுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. 
ஆனால், இப்போது கதை வேறுவிதமாகத் திரும்பக் கூடும், கேவலமாகிவிடும் என்ற சுரணை வரவே தான், எதிர்க் கட்சிகளுடன் கலந்து பேசி அப்புறம் முடிவெடுக்க என்ற சாக்கோடு சவுகரியமாக, மசோதாவை அறிமுகப் படுத்துவது ஒத்தி வைக்கப் பட்டிருக்கிறது என்ற சாக்கைச் சொல்லிப்  பின் வாங்கியிருக்கிறார்கள். போதாக் குறைக்கு, அமைச்சர்கள் உட்பட முப்பத்தைந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அவையிலேயே இல்லையாம்!  கட்சியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப் போகிறார்களாம்!

காங்கிரஸ் கலாசாரப் படி, அதாவது இந்திரா கடைப் பிடித்த ஜன நாயக முறைப்படி, இந்த மசோதா  அவசரச் சட்டமாகப் பிறப்பிக்கப் படுமா என்ற கேள்விக்கும் சிங்வி பதில் சொல்ல மறுத்திருக்கிறார். ஊகங்களுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது என்றும்  சொல்லியிருக்கிறார். 


இந்திராவுக்கு இருந்த முரட்டு தெகிரியம், மூர்க்கத் தனம்  இப்போதுள்ள காங்கிரஸ்காரனுக்கு இல்லை என்பது தெரிந்த விஷயம் தான்! கூட்டணிக் கட்சிகளைத் தாஜா செய்தே ஆட்சியை ஓட்டியாக வேண்டிய மானம் கெட்ட பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறவர்கள் அந்த அளவுக்குத் துணிவார்களா என்பது இன்னொரு ஒன்பது ரூபாய் நோட்டு மாதிரியான  கேள்விதான்!

According to the provisions in the draft legislation, the operator would not be liable for any nuclear damage if the incident was caused by "grave national disaster of exceptional character", armed conflict or act of terrorism and suffered by person on account of his own negligence. 

இப்படித் தெரிந்தே கழுத்தில் சுருக்குக் கயிற்றை  மாட்டிக் கொள்வானேன் என்பது தான் கேள்வி!
 

oooOooo
இந்த செய்தியை படித்து, அதன் மையக் கருத்தை உள்வாங்கிக் கொள்ளுங்கள்! ஊடகங்கள் முழு உண்மையைத் தான் சொல்லும் என்று இல்லை, சமயங்களில் ஒரு சின்னக் குறிப்பே சொல்ல வேண்டிய மொத்தத்தையும் சொல்லி விடுவதாக ஆகி விடும் தருணங்களும் உண்டு. 

இந்தச் செய்தி இணையத்தில் படித்தது தான்! 

இதன் முழு உண்மையை உறுதிப் படுத்த,  தனிமனிதனாக என்னிடம் எந்தவொரு சாதனமும் இல்லை. பொய்யென்று ஒதுக்கிவிட்டுப் போய்விடுகிற அலட்சியம் மட்டும் வேண்டாம் என்று தான் சொல்கிறேன்!

An American investigative journalist has uncovered evidence suggesting the CIA peppered local food with the hallucinogenic drug LSD
1951 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி! பிரான்சில் உள்ள ஒரு சிறு கிராமம் போன்ட் செயின்ட் ஸ்பிரிட்! இந்த கிராம மக்களுக்கு  சபிக்கப் பட்ட ரொட்டி கிடைத்த  தினம்!  எப்போதும்போல, உணவில் சேர்த்துக் கொள்ளும் ப்ரெட் ஒரு திகிலூட்டும் அனுபவமாக மாறிப் போகும் என்று அந்த கிராம மக்கள் எவருமே நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது தான்! ஆனாலும் அந்த திகிலூட்டும் நிகழ்வு நடந்தது.


 

ரொட்டியை சாப்பிட்ட மக்களுக்கு, பயமுறுத்தும் மிருகங்களும் பற்றி எரிகிற தீயாகவும் தெரிகிற உணர்வு ஏற்பட்டது. ஒரு மனிதன்  தன்னுடைய வயிற்றைப்  பாம்புகள் கடிப்பது போல பயங்கரமாகக் கூச்சலிட்டுக் கொண்டே தண்ணீரில் குதித்து முழுகிப் போனான். பதினோருவயதுச் சிறுவன் ஒருவன் தன்னுடைய பாட்டியைக் கழுத்தை நெறித்துக் கொல்ல  முயன்றான். இன்னொருவனோ , நான் ஒரு ஆகாய விமானம் என்று கூவிக் கொண்டே இரண்டாவது மாடியில் இருந்து குதித்துக் கால்களை ஒடித்துக் கொண்டான்  


இன்னொருவனுக்கோ  தன்னுடைய இதயம்  கால் வழியாகக் கழன்று போவதுபோல உணர்வு, சரி செய்யும்படி டாக்டரிடம் கெஞ்சல் இப்படி நரகமே  அந்த கிராமத்துக்கு இறங்கி வந்து விட்டது போலத் தொடர் நிகழ்வுகள்! இந்தக் கொடூரத்தை அமெரிக்க டைம் பத்திரிகை வர்ணித்து எழுதியதும்,   உள்ளூர் பேக்கரித் தயாரிப்பாளர் தெரியாத் தனமாக ரொட்டி தயாரிக்கப் பயன் படுத்தப் பட்ட  ரை தானிய மாவில் எதையோ கலந்து விட்டதாக, இன்னொரு செய்தி ரொட்டி மாவில் பாதரச நஞ்சு கலந்து விட்டதாக இப்படி அந்த நிகழ்வுக்குப் பல காரணங்கள் அப்போது சொல்லப் பட்டன.


1951 ஆம் ஆண்டில், போன்ட் செயின்ட் ஸ்பிரிட் என்ற க்ற்றாமத்தில் ரொட்டி தயாரிக்கப் பயன்படுத்தப் படும் மாவில் எல்எஸ்டி என்ற போதை ரசாயனத்தைக் கலந்து, மனிதர்களுடைய மனத்தைக் கட்டுப் படுத்துகிற, பரிசோதனையைத் தன கூட்டாளி நாட்டு மக்கள் மீதே அமெரிக்க சி ஐ ஏ நிறுவனம் நடத்திப் பார்த்தது என்பதை சமீபத்தில், ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளர் அம்பலப் படுத்தியிருக்கிறார். 


போதை மருந்தை சப்ளை செய்தது சாண்டோஸ் பார்மசூடிகல்ஸ்  (இந்தியாவில் கால்ஷியம் சாண்டோஸ் என்று குழந்தைகளுக்குத் தேவையான கால்ஷியம் மாத்திரைகளைத் தயாரிக்கும் அதே ஸ்விட்சர்லாந்து நாட்டு  சாண்டோஸ் பார்மசூடிகல்ஸ் நிறுவனம் தான்) என்ற செய்தியை தி டெலிகிராப் பத்திரிகை வெளிப்படுத்தி யிருக்கிறது.

பிரான்ஸ் ஒரு ஐரோப்பிய நாடுதான்! வெள்ளைத் தோல் கொண்ட மனிதர்கள் வாழும் நேச நாடுதான்!  அமெரிக்க சுதந்திரத்திற்குப் பரிசாக, சுதந்திர தேவி சிலையை வடிவமைத்துப் பரிசாகக் கொடுத்த நாடுதான்! நேடோ அமைப்பில், அமெரிக்காவின் ராணுவக் கூட்டாளிதான்! இத்தனை தான்களையும் தாண்டி அமெரிக்கா,  பிரான்ஸ் நாட்டு கிராமம் ஒன்றில் ஒரு விஷப் பரீட்சையை மிக ரகசியமாக நடத்திப் பார்த்தது.  

அமெரிக்கர்கள் மீது கையை வைத்தால்.... என்று சவடால், சண்டியர்த்தனம் பண்ணுகிற அமெரிக்க அரசு, தன்னுடைய சொந்த மக்கள் மீதும் இதுமாதிரிப் பரிசோதனைகளை நடத்தவும்  தயங்கியிருக்காது என்பதே அப்பட்டமான உண்மை. கடும்புயல், வெள்ளத்தால் கறுப்பின மக்கள் வாழும் பகுதிகள் பாதிக்கப் பட்ட தருணத்தில் அன்றைய புஷ் நிர்வாகம் எவ்வளவு மெதுவாக, அலட்சியமாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பது புதிய செய்தி ஒன்றும் அல்ல.  எதை எடுத்தாலும் நம்ப வேண்டாமென்று அவநம்பிக்கையை விதைப்பதற்காக இதை இப்போது சொல்லவில்லை! அமெரிக்கர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது பல தருணங்களில் நிரூபிக்கப் பட்டது தான்! தெரிந்ததுதான்! 

அமெரிக்காவில் உள்ள நல்லவிஷயங்களை விட, அதன் ஆணவம், அதிகார வெறி, பேராசை, சூதாடி மனோபாவம் தான் எப்போதுமே, அதை ஒரு நாடாக இயக்குவிக்கிற சக்தியாக இருந்து வந்திருக்கிறது. பேராசை கொண்ட நிறுவனங்கள், தனிமனிதர்கள், அமெரிக்க மக்களோடு, உலகையும் சீரழித்து வருகிற கதை, இரண்டாவது உலகப் போருக்குப் பின்னால் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் போதும். 

மனோன்மணீயம் நாடகத்தில் வருகிற கெடுமதி படைத்த அமைச்சன் குடிலனைப் போலக் "கெஞ்சினால் மிஞ்சுவன்;மிஞ்சினால் கெஞ்சுவன்" ரகம் தான்! மிஞ்சுகிற சீனர்களுடன் கெஞ்சித் திரிகிறார்கள்! கெஞ்சித் திரிகிற இந்திய அரசியல் வாதிகளிடம் ஏமாற்றி மிஞ்சுகிறார்கள்!

 

சீனர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது என்பதை மறுபடி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது!
 
oooOooo
 
இன்றைய நகைச்சுவை!

தமிழ்நாட்டில் இளைஞர் காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல் வினோதங்கள்! கழகங்களிடமிருந்து நன்றாகவே கற்றுக் கொண்டு வருகிறார்கள் போல!

இன்று ஒரு தகவல்!

பாராளுமன்ற சபாநாயகர் திருமதி மீரா குமார் யார் எவர் என்பது தமிழ்நாட்டில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்று  தெரியவில்லை. அதனால் ஒரு சின்ன அறிமுகம்! 

அம்மையார், முன்னாள் மத்திய மந்திரி பாபு ஜகஜீவன் ராமின் மகள்!  அவருடைய அரசியல் வாரிசு! பீகாரில் இருந்து காந்தீயவாதியாக வளர்ந்து, கடைசிநாட்களில் சாதீயத் தலைவராக மட்டுமே அறியப்  பட்டவர். அம்மணிக்கும், காங்கிரசில் இடஒதுக்கீடு எந்த அடிப்படையில்  தரப்பட்டிருக்கும் என்பது சொல்லித் தான் தெரிய வேண்டியதே இல்லையே!

சிரித்த முகத்தோடு எப்போதும் இருக்கும் ஜகஜீவன் ராமைப் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று உண்டு! வரி கட்ட மறந்த கதை!

 

ஜகஜீவன் ராம் மத்திய அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும்  இருந்த நாட்களில், வருமான வரி பல ஆண்டுகளாகக் கட்டவில்லை. தகவல் தெரிய வர, பாராளுமன்றத்திலும் கேள்வி எழுந்தது. மனிதர் ரொம்பக் கூலாகப் பதில் சொன்னார்! "மறந்துபோய் விட்டேன்!" 

 

மந்திரி என்றால் பொறுப்போடு செயல்படுகிறவர்கள் என்று ஜனங்கள் நம்பிக் கொண்டிருந்த நாட்கள் அவை! இப்படிப் பொறுப்பான பதில் சொன்னால் என்ன செய்து விட முடியும்?

 

அதற்குப் பிந்தைய நாட்களில், வருமானவரித் துறை, சிபிஐ முதலானவை   காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் துறைகளாகவே  செயல் பட்ட கதையும் நிறையவே நாறிப்போனது தான்! 

ஏதோ கழகங்கள் மட்டும் தான் அரசு இயந்திரத்தையும் ஊழியர்களையும் துஷ்ப்ரயோகம் செய்து  நாற அடிக்கப் பிறந்தவர்கள் என்று நினைக்க வேண்டாம் என்பதற்காகத் தான் இந்தத் தகவல்! காங்கிரஸ்காரன் டிகிரி வாங்கினால், கழகங்கள் ஊழல் நாற்றத்தில் டாக்டரேட் வாங்கிய சாதனை தனிக் கதை!


oooOooo


 

6 comments:

 1. புதிய தகவல்கள், நல்ல பதிவு, புதிது புதுசா நோய்கள் நம் நாட்டில் வரும் போது, எனக்கு இந்த பயம் இருக்கும். எவனாவது பயாலஜிக்கல் வெப்பனை பரிசோதிக்கின்றானா என்று. நன்றி அய்யா.

  ReplyDelete
 2. மீரா குமார் யார் என்று தெரியும் யார், என்ன, எப்படி எல்லாம் இருக்கட்டும்..ஆரம்ப நாள் முதலே அவரது சிரித்த முகம் பிடிக்கும். டென்ஷனான சோம்நாத் சட்டர்ஜியைப் பார்த்துப் பழகிய கண்களுக்கு இவரது சிரித்த முகம் ஒரு மாறுதல்.அவரது அப்பா வரிகட்ட மறந்து சிரிப்பாய் சிரித்தது தனிக் கதை.

  மனிதர்கள் தெரியாதவர்களிடம் ஏமாற்றுவதை விட தெரிந்தவர்களிடம் ஏமாற்றுவதே பாதுகாப்பாக உணர்ந்து வழக்கமாகவும் கொண்டிருப்பார்கள் என்று நான் எண்ணுவது உண்டு. எதிரிகளைத் தெரியும்..நண்பர்களை அடையாளம் காட்ட உதவும் படி வேண்டுவது இதனால்தானோ என்னமோ?

  ReplyDelete
 3. நண்பர் பித்தன் வாக்கு!

  உங்களுடைய பயம் வெறும் கற்பனையோ மிகைப் படுத்தப் பட்டதோ இல்லை! சில ஆண்டுகளுக்கு முன்னாள், சூரத் நகரில் ப்ளேக் நோய் பரவியபோது வழக்கமாக எலிகளிடமிருந்து தொற்று என்பதற்குப் பதிலாக, சிந்தெடிக் ரகமாக இருந்தது!

  வித விதமான வைரல் பீவர், சமீபத்தில் வந்த பன்றிக் காய்ச்சல் அத்தனையிலும் சந்தேகங்கள் இருக்கத் தான் செய்கின்றன.

  பயாலஜிகல் வெபன் என்பது ஒரு புறம், மருந்துக் கம்பனிகள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காக, செயற்கையாகத் தயரரித்து அனுப்பும் நோய்கள் பற்றி நிறையவே உண்மைக் கதைகள் உண்டே!

  இந்தியா மாதிரி பொறுப்பற்ற அரசியல்வாதிகள், பொறுப்பே இல்லாத, வேலை செய்யாத, காசு என்றால் வாயைப் பிளக்கிற அரசு ஊழியர்கள் இருக்கும் தேசத்தில், ஜனங்களும் எங்கோ எவனுக்கோ வருகிறது நமக்கென்ன என்று இலவச டிவி முன் அமர்ந்து சினிமாக்காரிகள் குதித்துக் குலுங்கி ஆடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவலம் எல்லாமாக சேர்ந்து தான், விதியே விதியே இந்தப் புண்ணிய பூமியை என்ன செய்யக் கருதியிருக்கிறாய் என்று புலம்பவும், திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்று பிரார்த்தனை செய்யவும் தூண்டிக் கொண்டிருக்கிறது!

  ReplyDelete
 4. ஸ்ரீ ராம்!

  உங்களுக்குத் தெரியும் சரி! மற்றவர்களுக்கு..? சில தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில், எவர் பிரதமர், ஜனாதிபதி என்பதே தெரியாமல் பங்கேற்பவர்கள் உளறுவதைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறேன்!

  அதே நேரம் சினிமா சம்பந்தப் பட்ட கேள்வி என்றால் நூற்றுக்கு நூறு, அதற்கு மேலும் தான்!

  அதை மனதில் வைத்துக் கொண்டு தான் எழுதியது!

  ReplyDelete
 5. எது எப்படியோ நாட்டை நாற வைத்ததில் காங்கிரேசுக்குதான் முதலிடம். கலகங்கள் இவர்களை பின் பற்றி முனைவர் பட்டமும் பெற்றுவிட்டார்கள். காங்கிரஸ்காரர்களை கேட்டால் நாங்கள் தானே சுதந்திரத்தை கொடுத்தோம் என்பார்கள். இந்தியாவின் உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சி திளைக்கும் பணக்காரர்களின் கூட்டம் தானே காங்கிரஸ். வரலாறை தவறாக இளையர்களுக்கு கற்பிப்பதிலும் இவர்களே வல்லவர்கள்.

  ReplyDelete
 6. இப்போதுள்ள காங்கிரசுக்கும், சுதந்திரப் போராட்டத்துக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை அமர்!

  இப்போதுள்ளவர்களால் இருக்கிற சுதந்திரமும் பறிபோய்விடுமோ என்ற அச்சம் தான் வருகிறது!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails