Saturday, April 03, 2010

ஒரு கை ஓசையும் வெறுப்பில் எரியும் மனங்களும்..!

ஒரு கை ஓசை! இது கே பாக்யராஜ், 1980 இல் திரைக்கதை வசனம் எழுதி, நடித்து இயக்கிய ஒரு படத்தின் தலைப்பு! படத்தின் ஆரம்ப சீனில் தற்கொலை செய்துகொள்ளக் கேணத்தனமாக முயற்சிக்கும் கதாநாயகனாக பாக்யராஜ், வாத்து மடையன் என்று கதாநாயகனைத் திட்டிக் கொண்டு அறிமுகமாகும் கதாநாயகி என்று அமர்க்களமாக ஆரம்பித்தாலும், படத்தின் தலைப்பு சொல்வது போல, உண்மையில் ஒரு கையால் ஓசை எழுப்பவே முடியாது!
 
ஆனால் வெறுப்பில் எரியும் மனங்களால், சடசடவென ஓசை எழுப்ப முடியும்!
 

தமிழ் வலைப் பதிவர்கள் குழுமம் குறித்தான பதிவுகளைப் படித்த பிறகு, அதைத் தொடர்ந்து வந்த பதிவர் வெண் பூ, டோண்டு ராகவன், கோவி கண்ணன் ஆகியோரது பதிவுகளில், பின்னூட்டங்கள் , அதில் கொஞ்சம் சீண்டிப் பார்க்கிற மாதிரிக்கேள்விகள் என்று கடந்த மூன்று நாட்களுமே கொஞ்சம் மனச் சோர்வை அளித்ததாகவே  இருந்தது.  வெள்ளிக் கிழமைக் கேள்விகளுக்காக வேறு சில முக்கியமான விஷயங்களைக் குறித்து வைத்துக் கொண்டு ஒரு வரைவு எழுதி வைத்திருந்த போதிலும்  அதை எடிட் செய்ய மனம் இல்லாமல், நான்கு படங்களை வைத்து மட்டும் நேற்றைய பதிவு இருந்தது.

நான் சட்டம் பேச முனைகிற வழக்கறிஞர் இல்லை! மன நல மருத்துவம் செய்ய முனைகிற வைத்தியரும் இல்லை! எனக்குத் தெரிந்தது தான் உலகம் என்று கிணற்றுத் தவளை போலக் கேள்விகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருப்பேன், நீ என்ன பதில் சொன்னாலும் கவலையில்லை, இன்னமும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருப்பேன் என்ற மாதிரி கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்தபோது நேற்றைய அரசியல் சுவாரசியம் ஒன்று நினைவுக்கு வந்தது.கேள்விகள் கேட்பது, புரிந்து கொள்வதற்காக என்ற நிலையில், அதற்குரிய இடம், மரியாதையே  வேறு! 

இதைச் சொல்வது கூட, கொஞ்சம் lighter vein இல் விஷயங்களை எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்பதற்காகத் தான்.

போ ஃபார்ஸ்
பீரங்கி வாங்கியதில் ஊழல் பிரச்சினை கிளம்பிய தருணத்தில் ராம் ஜெத் மலானி ஒரு கேள்வியைக் கேட்டபோது, ராஜீவ் காந்தி கொஞ்சம் கடுப்பாகி, கொஞ்சம் நிலைதடுமாறிப் பேசப் போக, ராம் ஜெத் மலானி, இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிகையில் ராஜீவ் காந்திக்கு தினமும் பத்துக் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்த வேடிக்கையான லாவணி ஒன்று நினைவுக்கு வந்தது. கூடுதல் சுவாரசியமாக, அந்தப் பத்துக் கேள்விகளைத் தான் தான் எழுதியதாகவும், ராம்ஜெத்மலானி சரி பார்த்து ஒகே சொன்னது மட்டும் தான் என்று அருண் ஜெயிட்லி பின்னாட்களில் சொல்லிக் கொண்டதும் உண்டு.   

ராம் ஜெத் மலானி என்ற வித்தியாசமான மனிதரைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு பதிவு!

வெறுப்போடு எரியும் மனங்கள்! எப்போதும் எதையாவது தீய்த்துக் கொண்டே இருக்க வேண்டும், அதைத் தவிர வாழ்க்கையில் வேறு ஒன்றுமே வேண்டாம்! இப்படிப் பட்ட குணாதிசயங்களை புரிந்து கொள்வதற்கு நாடறிந்த மன நல மருத்துவராகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இங்கே வலைப் பதிவுகளில், விவாதங்களில் வருகிற பின்னூட்டங்களைக் கொஞ்சம் பார்த்தாலே போதும். பதிவு  அல்லது விவாதத்திற்குச் சம்பந்தமே இல்லாமல் தடம் புரண்டு கடைசியில் சொத்தைக் கடலையைக் கடித்த அனுபவமாகிப் போவதை நிறையவே பார்த்தாயிற்று.

"இல்லாத, நமக்குத் தெரியாத ஒன்றோடு சம்பந்தம் வைத்துக் கொள்ள முடியாது. ஆனால், நாம் எதை வெறுக்கிறோமோ, சண்டைக்குக் கூப்பிடுகிறோமோ, அதனுடன் நமக்கு நெருங்கிய தொடர்பு நம்முடைய விரோதத்திலேயே, வெறுப்பதிலேயே உண்டாகி விடுகிறது! இப்படிச் சொல்வதால், நான் வன்மத்தை, வெறுப்பை, நல்லதென்று சொல்வதாக நினைக்க வேண்டாம்.வன்மம், வெறுப்பால் மந்தமாகிப் போனவனுடைய பார்வையில் நேசத்தைக் காண்பது மிகவும் அரிது. கோபத்தினாலும், விரோதம் பாராட்டுவதாலும் கனல் போலத் தகிக்கும் ஒருவன் பார்வையில் கூட, பலதரம் அன்பைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.அங்கே அன்பு பின்னப்பட்டுப் போயிருக்கிறது, விகாரப்பட்டுப்போயிருக்கிறது....."

ஸ்ரீ அரவிந்த அன்னையின் இந்த உரையாடலின் ஒரு பகுதி இடது பக்கத்திலேயே பல  நாட்களாக இருக்கிறது.அதன் உண்மையைப் புரிய வைப்பதற்காகத் தானோ என்னவோ இந்த அனுபவங்கள் ஏற்பட்ட மாதிரியே படுகிறது. பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடுகிற தன்மையைப் பற்றி இந்தப் பக்கங்களில் முன்பே பார்த்திருக்கிறோம்.

அதை அற்புதமாக வெளிப்படுத்திய சிறுகதை ஒன்று, நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் படித்தது, இன்னமும் பசுமையாக நினைவில் இருப்பதும் கூட! உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இங்கே!
 

(சு)வாசிக்கப் போறேங்க வலைப்பதிவில் சிறுகதைகளைப் பற்றிப் பேச எழுதிய பதிவு இது! 

இந்தப் பகுதி இங்கே மீள்பதிவுதான்!

லண்டனில் கல்வி பயில்வதற்காக,  விடுதியில் தங்கியிருக்கும் ஒரு இந்திய மாணவன் சொல்வதாக இந்த சிறுகதை ஆரம்பிக்கிறது.

ஒரு விடுதி அறையில் இவனும், ஒரு ஆப்பிரிக்க மாணவனும் கூட்டாளிகள்! இந்த ஆப்பிரிக்க மாணவனுக்கும், ஒரு ஆங்கிலேய யுவதிக்கும், எப்படியோ காதல் மலர்கிறது. இவனைத் தேடி அந்தப் பெண் அறைக்கு வருவதும், சந்தோஷமாகப் பேசிக் கழிப்பதும், வெளியே செல்வதுமாக, இந்த நிகழ்வுகளுக்குசாட்சியாக, கதை சொல்லியாக வரும் இந்திய மாணவனுடைய பாத்திரம்இருக்கிறது.

ஆயிற்று, அந்த ஆப்பிரிக்க இளைஞன்,  சொந்த ஊருக்குக் கிளம்பும் நேரம் நெருங்குகிறது. தன்னுடைய சூட்கேசில் துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டு  இருக்கும்போது ஒரு புகைப்படம் கீழே வந்து விழுகிறது. அதில் இவனும், ஒரு இளம் பெண், குழந்தைகள், பெரியவர்கள் என்று குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்
படம்! கதை சொல்லி கேட்கிறான், "இது யார் உன் தாய் தந்தை சகோதரி இவர்களோடு எடுத்துக் கொண்டதா?"

"கதையையே மாற்றி விட்டாயே! இது என் மனைவி, மாமனார், மாமியார், என் குழந்தைகளோடு எடுத்துக் கொண்டது! இன்னும் சில நாட்கள் தான்! என் குடும்பத்தோடு ஒன்றாகக் கூடி சந்தோஷமாக இருப்பேன்!"

"அப்படியானால் நீ இந்தப் பெண்ணுடன் நெருக்கமாகப் பழகியது.....?"

"அதெல்லாம் சும்மா! பொழுது போவதற்காக! அவ்வளவுதான்! இந்த ஆங்கிலேயர்களுக்கே ரொம்பவும்தான் கர்வம்! தங்களுடைய வெள்ளைத் தோல் மீது அவ்வளவு பெருமிதம்! அந்தப் பெருமிதத்தோடு கொஞ்சம் விளையாடிப்பார்க்கலாமே என்று தான்."

இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போதே அறைக்கதவுக்கு  வெளியே யாரோ தடதடவென்று ஓடுவது போல, படியில் உருண்டு விழுவது போல  சத்தம் கேட்கவே, இந்த இந்திய மாணவன் பதறிப்போய், வெளியே பார்க்கிறான்.

அந்தப் பெண் தான், ஆப்பிரிக்க இளைஞனைக் காதலித்த அதே பெண் தான், காதலனைத் தேடிவந்தவள், இந்த சம்பாஷணையைக் கேட்டு, அதிர்ச்சியில் பதறி, படியில் உருண்டு அடிபட்டு மயங்கிக் கிடக்கிறாள்.

அந்த விடுதிக் காப்பாளர், இவனைக் கூப்பிட்டு, "இந்தப் பெண்ணுக்கு  மருத்துவ சிகிச்சை தேவைப் படுகிறது. ஒரு கை கொடுத்து உதவுவாயா?"  என்று கேட்பதோடு கதை, இந்த வாக்கியத்தோடு முடிகிறது.

"எண்ணெய் மட்டும் தண்ணீரை ஒதுக்குவதில்லை! தண்ணீரும் தான் எண்ணெயை ஒதுக்குகிறது!"

இந்த கேள்வி, அறையில் நண்பர்களுக்குள் விவாதிக்கப் பட்ட அதே கேள்விதான்! பதில் தான் முற்றுப் பெறாமல் கேள்வியாகவே நின்று விடுகிறது.

1965 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளிவந்த  கல்கி ராணுவச் சிறப்பிதழில் திரு. தி. சா. ராஜு எழுதிய சிறுகதை இது. மூன்று அல்லது நான்கு பக்கங்களுக்குள் தான் இருக்கும்!

கதாபாத்திரங்களுடைய பெயர்கள், வர்ணனைகள் எல்லாம் எழுத்துக்கு எழுத்து அப்படியே நினைவில் இல்லை! ஆனால், கதாசிரியர், மனித மனங்களின்  பேதப்பட்டு நிற்கும் குணத்தைச் சொல்வதாகவும் அதே நேரம் , வாசகருக்கு ஒரு கேள்வியாகவும் , இந்த ஒரு வரியில் முடித்துவிடுகிறார்!

"எண்ணெய் மட்டும் தண்ணீரை ஒதுக்குவதில்லை! தண்ணீரும் தான் எண்ணெயை ஒதுக்குகிறது!"

தி.சா. ராஜு! ராணுவத்தில் பணிபுரிந்தவர்! சாகித்ய அகடமிக்காக, ஒரு பஞ்சாபி நாவலை மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு காந்தீயவாதி! மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளை எழுத்தில் கொண்டு வந்தவர்.

அகிலன், தீபம் நா.பார்த்த சாரதி போன்ற எழுத்தாளர்கள், கொஞ்சம் சுயகௌரவத்தோடு, லட்சியவாதிகளாகவும் இருந்தது போல, புகழ், பொருளுக்காக எழுத்தை சமரசம் செய்து கொள்ளத் தெரியாத இன்னொரு லட்சியவாதி. தமிழ் எழுத்தாளர்களில், லட்சியவாதிகளும்  இருந்தார்கள் என்பதே இன்றைக்குக் கொஞ்சம் ஆச்சரியத்தோடு அப்படியா என்று கேட்க வைக்கும் சங்கதி!

இந்தக் கதையைக் கொஞ்சம், அந்த தண்ணீர்-எண்ணெய் சமாசாரத்தை யோசித்துப் பாருங்களேன்!

பேதம் எங்கிருந்து வருகிறது? நிறத்திலா, இனம், மொழி, தேசம், நகரம், கிராமம், தெரு, எதிர் வீடு, பக்கத்து வீடு இப்படிப் பிரித்துச் சொல்வதில் இருந்தா? பேதம் என்பதே கற்பிதம் தானா?

பேதங்கள் தேவை தானா?  தவிர்க்க முடியாதவை தானா?


வெறுப்பில் எரியும் மனங்கள் எப்போது அமைதியைத் தேடி வரும்? வெறுப்பது மட்டுமே தீர்வாகி விடுமா?

நல்ல எண்ணங்களை, சிந்தனைகளை  விதைத்தல் என்பது ஒரு பண்பாக இங்கே எப்போது வளரும்?

கொரிய மக்களுக்குப் புரிந்து, அங்கே
சொன்ஃபில் இயக்கமாக, நல்ல எண்ணங்களை வளர்த்தல் என்பதை முன்னெடுத்துச் செல்வது போல இங்கேயும் வளர வெறுப்பில் எரியும் மனங்கள் தான் முதல் தடை என்பதைப் புரிந்துகொள்ளும் நேரமும் வருமா?


சொன் ஃபில்! நல்லெண்ணங்களை விதைத்தல்! 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails