தெரிந்தே செய்யும் தவறு....! ஒன்று..இரண்டு...இன்ஃபினிடி...!

தெரிந்தே செய்யும் தவறு





தினமணி தலையங்கம் !

அரசியல்வாதிகளின் ராஜினாமா நாடகம் எப்படிப் பட்டதென்று நமக்கு நன்றாகவே தெரியும்! காகிதப் பூ மணக்காது என்று ஒரு வசனம் கூட இங்கே பிரபலமாயிற்றே!

சால்வை அழகர் பானா சீனா, மாவோயிஸ்டுகள் தாக்குதலில் எழுபத்தாறு மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பலியானதற்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய முன்வந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன! அதற்கு அடுத்த வரி தான் மிகவும் முக்கியம், இந்த ராஜினாமா ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது என்று அரசு  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

பின்னே! ஏற்றுக் கொண்டுவிடுவார்கள் என்று தெரிந்தால், எவராவது ராஜினாமா செய்வார்களா என்ன! 


சிலநாட்களுக்கு  முன்னால் தான் மேற்குவங்க முதல்வரிடம், the buck stops here at your table என்று கட்டபொம்மன் மாதிரி வீர வசனம் பேசிவிட்டு வந்ததென்ன? இப்போது வேறு வழியே இல்லாமல், the buck stops at my table என்று மென்று முழுங்கி ராஜினாமா நாடகம் ஆட வந்த பரிதாபம் தான் என்ன!

அடுத்தவன் பொறுப்பாக நடந்துகொள்ளவேண்டும் என்று வசனம் பேசிவிட்டு வந்த கையோடேயே, எங்கோ ஏதோ பெரிய தவறாகப் போய்விட்டது என்று புலம்புகிற மாதிரி ஆகிவிட்டது என்றால்,பிரச்சினை என்ன, பிரச்சினையின் ஆணிவேர் எங்கிருக்கிறது, அதைக் குறித்து என்ன செய்யவேண்டும் என்ற தெளிவு இல்லை என்பது வெளிப்படை!
சால்வை அழகர்கள் கிடந்துவிட்டுப் போகட்டும்! பிரச்சினையின் ஆணிவேர் என்ன, என்ன தீர்வு என்பதை தினமணி நாளிதழின் இந்தத் தலையங்கம் சொல்வதைப் பார்க்கலாமா?

மாநில போலீஸார் மற்றும் மத்திய சிறப்புக் காவல் படையினர் உள்ளிட்ட 76 பேர் மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது நாடு தழுவிய அதிர்ச்சி அலைகளை எழுப்பியிருக்கிறது.​ தொடர்ந்து தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் இருக்கும் காஷ்மீரில்கூட பாதுகாப்புப் படையினர் இந்த அளவுக்கு மோசமான தாக்குதலை எதிர்கொண்டதில்லை.

எந்த ஓர் அரசும் இதுபோன்ற வன்முறைச் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது.​ இதுபோன்ற தாக்குதல் இந்திய இறையாண்மைக்கும் மக்களாட்சித் தத்துவத்துக்கும் விடப்பட்ட சவால் என்று கருதுவதிலும் தவறில்லை.​ அரசின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளாத அரசின் ஆளுமைக்கு உள்படாத ஒரு பகுதி இருப்பதை எந்த ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாலும் ஏற்றுக்கொள்ளவோ அங்கீகரிக்கவோ முடியாது.​ ​

தீவிரவாதம் முறியடிக்கப்பட வேண்டும் என்பதிலும் பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லையென்றாலும் தீவிரவாதமும் பயங்கரவாதமும் வளர்வதற்கு உதவும் காரணிகளையும் சூழலையும் களையாமல் துப்பாக்கியைத் துப்பாக்கியால் மட்டுமே எதிர்கொண்டு வெற்றியடைவது சாத்தியமா என்பது சந்தேகம்தான்.​ வீரவசனம் சினிமாவில் பேசிக் கைதட்டல் பெறுவதுபோல,​​ நிர்வாகத்தில் சாத்தியப்பட்டதாகச் சரித்திரம் உணர்த்தவில்லை.​ ​

மேற்கு வங்கம்,​​ ஒரிசா,​​ இப்போது சத்தீஸ்கர் என்று மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்துக்கு உள்பட்ட பகுதிகள் பரந்து விரிந்துகொண்டே போவதை கடந்த மூன்று ஆண்டுகளாகவே நமது தலையங்கத்தில் எச்சரித்து வருகிறோம்.​ மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருபது விழுக்காடாக இருந்து இப்போது ஏறத்தாழ இந்தியாவின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி மாவோயிஸ்டுகளின் கையில் சிக்கியிருப்பதை வேதனையோடு குறிப்பிட்டே தீர வேண்டும்.

மாவோயிஸ்டுகள் இந்தியாவின் 16 மாநிலங்களில் ஊடுருவியிருக்கிறார்கள்.​ இந்தியாவில் உள்ள 460 மாவட்டங்களில் ஏறத்தாழ 175 மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளின் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன.​ காஷ்மீர்,​​ அசாம்,​​ வடகிழக்கு மாநிலங்களில் காணப்படும் பிரிவினைவாதம் சார்ந்த தீவிரவாதம் இதில் சேராது.

மாவோயிஸ்டுகளின் முழு ஆளுமையில் இருக்கும் மாவட்டங்கள் 58.​ மாவோயிஸ்டுகள் ஓரளவுக்குப் பலமாக இருக்கும்,​​ ஆனால்,​​ இந்திய அரசின் ஆளுமை தொடரும் மாவட்டங்கள் 54.​ ஏனைய 83 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு மெல்ல மெல்ல அதிகரித்த வண்ணம் இருக்கிறது.​ கடந்த ஆண்டில் மட்டும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தாக்குதலில் பலியான காவல்துறையினர் ​(312 பேர்)​ பலியான மாவோயிஸ்டுகளைவிட ​(294 பேர்)​ அதிகம்.

இந்த அளவுக்கு மாவோயிஸ்டுகள் பலம் பெற்றதற்கு என்ன காரணம்?​ இந்தியாவின் மையப்பகுதியில் இருக்கும் தண்டகாரண்யம் என்கிற அடர்ந்த வனப்பகுதி ஆந்திரம்,​​ மகாராஷ்டிரம்,​​ சத்தீஸ்கர்,​​ மத்தியப் பிரதேசம்,​​ ஜார்க்கண்ட் மற்றும் ஒரிசா ஆகிய ஆறு மாநிலங்களின் எல்லைகளை உள்ளடக்கியது.​ இதன் மொத்த நிலப்பரப்பு ஏறத்தாழ 40,000 சதுர கிலோ மீட்டர். ​

இந்த வனப்பகுதியில் வாழும் ஆதிவாசிகள் எதற்காகவும் வெளியுலகையோ அரசையோ சார்ந்து வாழ வேண்டிய அவசியமில்லாதவர்கள்.​ இவர்களுக்கு ரேஷன் தேவையில்லை.​ மின்சாரம்,​​ குடிநீர் வசதி,​​ சாலைகள்,​​ பள்ளிக்கூடங்கள்,​​ மருத்துவமனைகள் எதுவுமே வேண்டாம்.​ இயற்கையோடு ஒட்டி வாழும் பழங்குடி மக்கள். ​

1995 வரை இவர்கள் நிம்மதியாகக் காட்டை நம்பி வாழ்ந்து வந்தனர்.​ நமது வனத்துறை அதிகாரிகளுடன் நல்லுறவு கொண்டிருந்தனர்.​ இந்த வனப்பகுதியில் இந்திய அரசின் அதிகாரமும் ஆளுமையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.​ உலகமயமாக்கல் கொள்கையின் தொடர்ச்சியாக பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை இந்த வனப்பகுதியில் குவிந்து கிடக்கும் கனிம வளத்தின் மீது விழுந்தது. மண்ணுக்குள் மறைந்து கிடக்கும் தாதுப் பொருள்களை வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்தால் கிடைக்கப் போகும் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் அந்த நிறுவனங்களை இங்கே காட்டை அழித்துச் சுரங்கங்களை நிறுவ ஊக்குவித்தது.​ ​

கட்சி வேறுபாடின்றி எல்லா அரசியல் கட்சிகளும் அந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் வருகையையும் அவர்களது வளர்ச்சியையும் ஆதரித்தபோது ஆதிவாசிகள் மிரண்டனர்.​ தங்களது வாழ்வாதாரம் பறிபோகும் அபாயம் அவர்களை நடுக்கத்தில் ஆழ்த்தியது.​ பட்டணத்துத் தெருக்களில் கூலிகளாகவும்,​​ ரிக்ஷாக்காரர்களாகவும் அல்லாட அவர்கள் தயாராக இல்லை.​ அவர்களை வெளியேற்றி இந்தியாவின் கனிம வளங்களைச் சுரண்டி ஏற்றுமதி செய்வதிலிருந்து பின்வாங்க பன்னாட்டு நிறுவனங்களும் தயாராக இல்லை.​ ​

தங்களுக்காகக் குரல் கொடுக்கவும் ஆதரவுக்கரம் நீட்டவும் எந்த அரசியல் கட்சியும் சமூக அமைப்பும் இல்லாத நிலையில் பேய்க்குப் பயந்து பூதத்துக்கு வாழ்க்கைப்பட்ட கதையாக அவர்கள் மாவோயிஸ்டுகளைத் தஞ்சமடைய வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டது.​ இதுதான் மாவோயிஸ்டு அசுர வளர்ச்சியின் பின்னணி.

தண்டகாரண்யப் பகுதிகளிலிருந்து பன்னாட்டு கனிம நிறுவனங்கள் அகற்றப்பட்டால் மட்டுமே மாவோயிஸ்டுகளுக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கை வெற்றி பெறும் என்பதுதான் உண்மைநிலை.​ ஆனால் அரசோ,​​ விமானத் தாக்குதல் மூலம் மாவோயிஸ்டுகளை அழிக்கும்சாக்கில் ஆதிவாசிகளை அப்புறப்படுத்தும் முயற்சிக்கு முன்னுரிமை கொடுக்கிறது.​ இது காடுகளை அழித்து பன்னாட்டு கனிம நிறுவனங்களுக்கு உதவும் முயற்சியோ என்றுகூட நமக்குச் சந்தேகம் ஏற்படுகிறது.

இந்தியாவின் மையப்பகுதியில் ஓர் எரிமலை கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.​ அது வெடிப்பதும் வெடிக்காமல் போவதும் அரசின் அணுகுமுறையைப் பொறுத்துத்தான் இருக்கிறது.​ நிதியமைச்சராக இருக்கும்போது ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையின்போதும் திருக்குறளை மேற்கோள் காட்டும் நமது மத்திய உள்துறை அமைச்சர் தலையங்கத்துக்குக் கீழே தரப்பட்டிருக்கும் குறளைப் படித்து அதன்படிச் செயல்பட்டாலொழிய இந்தப் பிரச்னைக்கு முடிவு ஏற்படும் என்று நாம் நம்பவில்லை.​ ​

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.


நோய் இன்னதென்று ஆராய்ந்து,​​ நோயின் காரணம் ஆராய்ந்து,​​ அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து,​​ உடலுக்குப் பொருந்தும்படியாகச் செய்யவேண்டும். திருக்குறள் ​(எண்:​ 948) அதிகாரம்:​ மருந்து

oooOooo
ஏப்ரல் 14 நெருங்குகிறது! 

அம்பேத்கார் பிறந்த நாளும் கூட! இந்த மாதத்தை தலித் இயக்கங்களின் வரலாற்று மாதமாகக் கொண்டாடலாமே என்று ஒரு கருத்தை முன்வைத்து மின்தமிழ் கூகுள் வலைக் குழுமத்தில் பாரி செழியன் என்பவர் ஒரு விவாத இழையைத் தொடங்கியிருக்கிறார்! பண்பட்ட மனிதர்கள், தமிழ் மரபை நேசிப்பவர்கள் கூடும் குழுமம் என்பதால், இந்த விவாதமும் கூட எவ்வளவு செழுமையாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை இங்கே படித்துப் பார்க்கலாம்!

அதில் ராஜசங்கர் என்பவர் ஒரு கருத்தை முன்வைக்கிறார்!
"சாதி என்பது வலுவானது தான். யார் எந்த இடத்தில் இருப்பது என்பது வலுவானது இல்லை. அந்த இடம் என்பது அந்த மக்கள் கொண்டிருக்கும் அதிகாரம் மற்றும் செல்வத்தை பொருத்தது. இந்த இரண்டும் இல்லாமல் எவ்வளவு மக்கள் தொகையில் இருந்தாலும் பலனில்லை. 
 
ஒவ்வொரு கால கட்டத்திலும் போரில் தோற்றவர்கள் அரச அதிகாரத்தை இழந்தார்கள். செல்வம் பறிபோனது. பின் அடிமையாக விற்கப்பட்டு தாழ்த்தப்பட்ட சாதி ஆனார்கள். இது உலகில் எல்லா இடங்களிலும் நடந்தது தான். எல்லா இடங்களிலும் வேரூன்றியது தான். ஆனால் இந்தியாவில் மட்டும் இருப்பதாக ஏன் பரப்புரை? 
 
கிரேக்கர்கள், ரோமானியர்கள், ரஷ்யர்கள், சீனர்கள், ஐரோப்பியர்கள் என எல்லோரும் இதை செய்திருக்கிறார்கள். ஆனால் இங்கு மட்டும் நடந்தாக நடக்கும் பரப்புரை இதை பற்றி விவாதிக்க விடாமல் செய்து விட்டது.
மேலும் அன்னிய ஆட்சியில் தான் இந்த சாதிக்கொடுமை அதிகமாக இருந்தது என்பதும் மற(றை)க்கப்படுகிறது. இன்றைக்கு தாழ்த்தப்பட்ட சாதிகளாக இருப்பவர்களை அந்த நிலைக்கு தள்ளியதில் ஆங்கிலேய்ர்களுக்கு அதிக பங்குண்டு. அதை மறைக்கவே ஒரு சாதியை இன்னொரு சாதிக்கு எதிராக தூண்டி விட்டு போராட்டம்." 

இது தொடர்பாக நவம்பர் 2008 இல்   கீற்று தளத்தில் வெளிவந்த ஒரு கட்டுரையையையும், படித்து விவாதிப்பதற்காக மேற்கோள் காட்டியிருக்கிறார். கீற்று தளத்தில் திரு கோ.ரகுபதி எழுதிய அந்தக் கட்டுரையைப் படிக்க இங்கே!

ஏப்ரல் 14, நம்ம வால்பையன் திரு அருண் பிறந்த நாளும் கூட! போன வருடம் வால் பையனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லக் கால தாமதம் ஆகி விட்டது! அதற்காக, இப்போது ஐந்து நாட்களுக்கு முன்னாலேயே அட்வான்சாக!  நல்வாழ்த்துக்கள்!

இந்தப் பிறந்த நாளில் இருந்தாவது, வால்பையன் வால்தனங்களை அவருடைய  மகளும், வரப்போகும் மகனும் செய்து கொள்ளட்டும் என்று பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்துவிட்டுக் கொஞ்சம் பொறுப்பான பதிவராக, கண்மூடித்தனமான வெறுப்பு, எதிர்ப்பு என்ற நிலையிலேயே நிற்காமல்,தனிமனிதர் மீதான கடுமையான விமரிசனங்களைச் செய்யாமல், தனது கருத்தை வலுவாக எடுத்து வைக்க வேண்டும் என்பது என்னுடைய வாழ்த்துதலில் ஒரு பகுதி!
பிரார்த்தனை!

 

3 comments:

  1. மிக்க நன்றி சார்!

    உங்கள் நம்பிக்கையை காப்பாற்ற முயற்சி செய்கிறேன்!

    ReplyDelete
  2. \\வால்பையன் வால்தனங்களை அவருடைய மகளும், வரப்போகும் மகனும் செய்து கொள்ளட்டும் என்று பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்துவிட்டுக் கொஞ்சம் பொறுப்பான பதிவராக, கண்மூடித்தனமான வெறுப்பு, எதிர்ப்பு என்ற நிலையிலேயே நிற்காமல்,தனிமனிதர் மீதான கடுமையான விமரிசனங்களைச் செய்யாமல், தனது கருத்தை வலுவாக எடுத்து வைக்க வேண்டும் என்பது என்னுடைய வாழ்த்துதலில் ஒரு பகுதி! \\

    அவ்வ்வ்வ்வ்.......:)))))

    ReplyDelete
  3. சிவா!

    உங்களுடைய அவ்வ்வ்வ்வ்.......:))))) இற்கு அர்த்தம், நிமிர்த்த முடியாது என்று கேலி இல்லையே :-))

    நான், பரிணாம வளர்ச்சியில் வால் கழன்று கொள்ளவேண்டும் என்று தான் சொல்கிறேன்!

    வால்ஸ் மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!