Sunday, April 11, 2010

சண்டேன்னா மூணு! தரூர்! போப் பெனெடிக்ட்! சானியா !


ட்விட்டர் புகழ் சசி தரூர் மறுபடியும் ஒரு பரபரப்பான செய்தியின் நாயகனாக ஆகி இருக்கிறார்! இந்தத் தடவை, டிவிட்டரில் சிக்கனத்தை வெறுமே வாயளவில் போதிக்கும் புனிதப் பசுக்களோடு ஒன்று சேர்ந்து காட்டில் கிளாஸ் ஜனங்களுக்கு உதவுகிற மாதிரி டிவிட்டியோ வேறு அரசியால் பரபரப்பிலோ இல்லை! இந்த ஐம்பத்து நான்கு வயது இளைஞர், மூன்றாவது திருமணத்துக்குத் தயாராகி வருவதாக, வதந்திகள் உலாவுகின்றன.

முதல் திருமணம், அவருடன் கொல்கத்தாவில் ஒன்றாகப் படித்த திலோத்தமா முகர்ஜியுடன்! அப்புறம், தரூர் ஐ நா வில் பணிபுரிந்து வந்த போது கனடிய அரசு ஊழியராக, அமெரிக்காவில் ஆயுதக் குறைப்பு விவகாரத்  துறையில் பணியாற்றி வந்த கிறிஸ்டா கைல்சுடன் திருமண வாழ்க்கை!

இப்போது,முப்பது வருடங்கள், ஐ.நாவில் பணியாற்றி விட்டு, ஐயா இந்தியாவில் முழுநேர அரசியல்வாதியாகவும், அமைச்சராகவும் வந்துவிட்ட படியால், இரண்டாவது மனைவியை  விவாகரத்து செய்து விட்டு, மூன்றாவதாக ஒரு காஷ்மீரிப் பெண்ணை, சுனந்தா என்று பெயர், துபாயில் இருந்தவர், தற்சமயம் ஒரு ஸ்பா(
பெரிய அளவிலான அழகு நிலையம்)  நடத்தி வருகிறாராம்!அவரை அமைச்சர்  திருமணம் செய்துகொள்ளப் போவதாகத் தகவல்கள் சொல்கின்றன. 

அமைச்சருக்கு நெருக்கமானவர்கள், மிக நாகரீகமாக இந்தச் செய்தியைப் பற்றிப் பேசும்போது, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை, உரிமைகளை மதிக்கும்படி வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். சொல்லவேண்டியதை, உரிய தருணத்தில் அவரே சொல்வாராம்!

டிவிட்டரில் வாழ்த்துக்களைச் சொல்லத் தயாராகுங்கள் மக்களே!oooOooo  

 
ரோம் நகரம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம்!

 
 
அந்தத் தகவல் எந்த அளவுக்கு உண்மையானது என்று தெரியாது! ஆனால், ஊனமுற்ற சிறுவர்களிடம்பாதிரிமார்களின் பாலியல் சில்மிஷங்களைக் குறித்த கண்டனங்கள் வலுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அதை மூடி மறைத்ததாக, பதவி விலகவேண்டும் என்று தன்னைக் குறித்தே கண்டனங்கள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் தற்போதைய போப் செய்த காரியம் அப்படித்தான் இருக்கிறது! 
 

போப் பெனெடிக்ட், வெள்ளிக் கிழமை மாலை, எந்தக் கவலை
யும் இல்லாமல் தன்னுடைய இல்லத்தில் சினிமாப் பார்த்துக் கொண்டிருந்ததாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின் இந்தச் செய்தி சொல்கிறது! Under the Roman Sky என்ற படத்தைப் பார்த்து ரசித்து விட்டு, போப் மிகவும் உபயோகமான படம் என்று சிலாகித்துச் சொன்னதாக வாடிகனின் சனிக்கிழமை செய்திக் குறிப்பு சொல்கிறது
 
ஜெர்மானியர் ஒருவர் போப்பாக இருக்கும் இந்தத் தருணத்தில். ஜெர்மானிய மக்கள் சர்ச், வாடிகன் மீதான நம்பிக்கையை வேகமாக   இழந்து வருகிறார்கள்! பதினெட்டு சதவீத  ஜெர்மானியர்கள் தான் கத்தோலிக்க சர்ச் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக ஒரு கருத்துக் கணிப்பும் சொல்கிறது.
 

oooOooo


மீண்டும்! மீண்டும்! சானியா மிர்சா!

இந்த இளம் டென்னிஸ் வீராங்கனை, மீண்டும் மீண்டும் சர்ச்சையில் மாட்டிக் கொள்வது வாடிக்கையாகிப் போனதைப் போலவே, இவரது திருமணம் குறித்த தகவல்களும் மேலும் மேலும் குழப்பிக் கொண்டிருக்கின்றன!

டென்னிஸ் விளையாட்டில், இந்தியப் பெண் ஒருவர், நம்பிக்கையூட்டும் விதத்தில் வளர்ந்து வருவதாகத் தான் ஆரம்பத்தில் தோன்றியது. குட்டைப் பாவாடை அணிந்து ஆடியதைக் கண்டித்த மதகுருமார்களுக்கு, பர்தா அணிந்தா டென்னிஸ் விளையாட முடியும் என்று எதிர்க் கேள்வி கேட்டு எரிச்சலை அதிகப் படுத்தினார்.

சானியாவின் புகழுக்கு அவருடைய ஆட்டத் திறமை காரணமில்லை என்று  ஓட்டப்  பந்தய வீராங்கனை  பி டி உஷா சொன்னது நிஜம்!

கடந்த பதினெட்டு மாதங்களில் கலந்துகொண்ட போட்டிகளில் தொடர்ந்து சரிவையே சந்தித்துக் கொண்டிருக்கிறார். குடும்ப நண்பர் ஒருவர் ஒருவருடன் திருமணம் நிச்சயமானது! ஒத்து வாழ முடியாது என்பதைப் பரஸ்பரம் புரிந்து கொண்டு, அந்த திருமணம் நிறுத்தப் பட்டதாக அறிவிக்கப் பட்டது.

திரைப்பட நடிகர் ஷாஹித் கபூர், சக டென்னிஸ் விளையாட்டு வீரர் மகேஷ் பூபதி இருவருடனும் நெருக்கமாகப் பழகியதும் பத்திரிகைகளில் அரசல்புரசல்களாக அடிபட்டது தான்! திடீரென்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப்  மாலிக்குடன் திருமணம், துபாயில் குடியேற்றம் என்று அறிவித்த நிலையில் பிரச்சினைகள் எழுந்தன. மதத் தலைவர்கள் தலையிட்டு, சோயப்-ஆயிஷா விவகாரத்தைத் தீர்த்து வைத்ததாக வெளியில் சொல்லப் பட்டாலும், ஒரு பெருந்தொகையைக் கொடுக்க ஒப்புக் கொண்ட பிறகே(பதினைந்து கோடி ரூபாய் என்று சொல்கிறார்கள்!),  விவாகரத்து என்பது சுமுகமாக ஒப்புக் கொள்ளப் பட்டதாக செய்திகள்  கசிந்தன. இந்த விவகாரத்தில் சோயப் தொடர்ந்து சொன்ன பொய்களை ஒப்புக் கொண்ட மாதிரியே  அடுத்தடுத்து வந்த செய்திகள் காட்டின.

திருமணம் நடைபெறுவதற்கு முன்பே ஒன்றாகப் பழகியதற்கு எதிராக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் ஆகியோருக்கு எதிராக முஸ்லிம் மதத் தலைவர்கள் ஃபத்வா பிறப்பித்துள்ளனர்.இருவரும் தங்களின் நடவடிக்கைகளால் இஸ்லாம் மற்றும் முஸ்லீம் சமூகத்திற்கு களங்கம் விளைவித்துவிட்டதாக சன்னி உலமா அமைப்பின் தலைவர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து சானியா, ஷோயப் இருவருக்கும் எதிராக ஃபத்வா பிறப்பித்துள்ள சன்னி உலமா தலைவர்கள், முஸ்லீம்கள் யாரும் அவர்கள் திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.


சானியா என்றாலே சர்ச்சை, திருமணப் பேச்சு வரும்போதெல்லாம் பிரச்சினை என்றாகிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது கொஞ்சம் வருத்தமாகத் தான் இருக்கிறது.அந்தப் பெண்ணின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடுவதற்கு எவருக்கும் உரிமையில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது!

oooOooo
 
வலைப் பக்கங்களை வடிவமைப்பதில் ஒரு போட்டியை வீப்லி தளம் அறிவித்திருந்ததில், ஒரு தீமை எடுத்துக் கொண்டு வாசுதேவன் என்ற இருபது வயது இளைஞன் சமர்ப்பித்திருந்த ஒரு வடிவமைப்புக்கு, உங்கள் ஆதரவு வாக்குகளை அளிக்க வேண்டும் என்று சென்ற பதிவில் வேண்டுகோள் விடுத்திருந்தேன்! அதை ஏற்று வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி!

வடிவமைத்த பக்கத்தைப் பார்க்க இங்கே! ஜேபிஜி பார்மட்டில், படமாகப் பெரிதாக்கி, பக்கத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் பார்க்கலாம்!  
 
இதுவரை உங்கள் வாக்கை அளிக்கவில்லை என்றால், வாக்களிக்க இங்கே! 
 
 

5 comments:

 1. செய்திகள் எல்லாம் சரி.நன்று.இன்னும் 2, 3 நாட்களில் இப்பெண்ணுக்கு திருமணம்.உங்களுக்கு வேறு புகைப்படமே கிடைக்கலையா.என்ன ஒரு அல்ப சிந்தனை.(வேறு யாரோ எடுத்த போட்டோ...இணையத்தில் இருந்தது...அப்படி இப்படியென்ற விளக்கம் வேண்டாம்). சொல்ல தோன்றியது...சொல்லிட்டேன். தப்பென்றால் மன்னிக்கவும்....நான் சிறுவன்.

  ReplyDelete
 2. தமிழகத்தில் வசிக்கும் நமக்கு தரூர் மூன்றாவது மனைவியை அல்லது துணவியை ஏறபது அதிசயமா என்ன?

  ReplyDelete
 3. ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது என்று 144 தடை பிறப்பித்துப் பதிவு எழுதிய நீங்களே இப்படிக் கேட்டால் நான் என்ன சொல்வது..?!

  சசிதரூர் ஒரு ராஜதந்திரியாக இருந்து தேய்ந்து அரசியல் வாதியாக மாறிக் கொண்டிருக்கிறார்! இன்னும் காங்கிரசின் அயோக்கியத்தனங்கள் முழுக்க ஒட்டிக் கொண்டு விடவில்லை!

  நீங்கள் சொல்பவர்கள், வசனம் எழுதி அரசியல் கயவாளிகளாக ஆனவர்கள்!அதையே பரம்பரைப் பெருமையாகவும் ஆக்கிக் கொண்டவர்கள்!

  ReplyDelete
 4. /சானியாவின் புகழுக்கு அவருடைய ஆட்டத் திறமை காரணமில்லை என்று ஓட்டப் பந்தய வீராங்கனை பி டி உஷா சொன்னது நிஜம்!/

  மயில்ராவணன்! இதுதான் விஷயம்!

  அதற்குப் பொருத்தமான, அதேநேரம் மிகவும் மோசமாக இல்லாததாகப் பார்த்தும் போட வேண்டியிருந்ததில், இது தான் less damaging!

  ReplyDelete
 5. ..தவிர, நான் புகைப்படம் போட்டோ, அல்லது பதிவு எழுதியோ, இனிமேல் என்ன டாமேஜ் ஆகிவிடப் போகிறது?

  ஒரு தனிநபர் என்ற அளவில் சொந்தவிவகாரங்களில் விமரிசிப்பது என்பது எனக்கு உடன்பாடு இல்லாத ஒன்று!

  அதே நேரம்,சானியா திருமணப் பிரச்சினை எந்தெந்த திசைகளில் எல்லாம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, ஆயிஷா-சோயப் பிரச்சினை பெரிதாகாமல் முன்னின்று சமாதானம் பேசிய மதப் பெருந்தலைகளே Fatwa கொடுக்கும் அளவுக்குப் போயிருக்கிறது என்பதையும் சேர்த்துப் பாருங்கள்!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails