தலைமைப் பண்பு....தலைவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் !


Sunanda was in core team that brought in money for IPL bid
நீங்கள் இதைப் படிக்கிற நேரம், அனேகமாக காங்கிரஸ் சசிதரூரைக் கழற்றி விட்டு, தங்கள் கை கறை படியாத பரிசுத்தவான்கள் கை என்ற மாதிரி ஒரு நாடகம் அரங்கேற்றமாக ஆரம்பித்திருக்கும்! கத்தியை எடுத்தவனுக்கு கத்தியாலேயே முடிவு என்பதைப் போல டிவிட்டுக் குருவியின் துணையோடு பிரபலமான சசிதரூர், இன்னொருத்தரும்   (லலித்  மோடி) டிவிட்டியதாலேயே முடிவைச்  சந்திக்கிற பரிதாபமும், குடித்த பாலைக் கக்க வைப்பது போல, காங்கிரஸ் கட்சியினர்  தங்களைப் பரிசுத்தவான்களாகக் காட்டிக் கொள்ள, சுனந்தா புஷ்கர், தன்னுடைய  "சொந்த சாமர்த்தியத்தாலேயே" ரெண்டேவூ ஸ்போர்ட்ஸ் ஒர்ல்டின் பங்குகளைச் சம்பாதித்ததை, திரும்ப விட்டுக் கொடுத்ததுமான பரிதாபமான காமெடி ஏற்கெனெவே நடந்து முடிந்து விட்டது!

Sunanda was in core team that brought in money for IPL bid

சசி தரூர்  விவகாரம், உண்மையிலேயே மிகவும் சிறியது தான்! வெளியே  தெரிய வந்ததனால் மட்டும் பெரிதாக, பூதாகாரமாகக் காட்டப் பட்டது என்பது தான் உண்மை! இப்போது சசி தரூர் மீது எடுக்கப் படும் முடிவு கூட, நியாய தர்மங்களின் அடிப்படையில் அல்ல!  வெளியே தெரியாத, அமுங்கிக் கிடக்கும் பனி மலை போல, கிரிக்கெட் சூதாட்டத்தில் சரத் பவாரின் மிகப் பெரிய பங்கைத் தட்டிக் கேட்கிற தைரியமோ, நேர்மையோ காங்கிரசில் உள்ள எவருக்குமே கிடையாது! கூட்டணிக் கட்சிகளில் ஆ! ராசா என்று வாய் பிளக்க வைத்த ஊழலைக்  காங்கிரஸ் எப்படிக் கையாண்டது என்பது எல்லோருக்குமே தெரியும்.

இது தலைமைப் பண்பு என்றால் என்னவென்றே அறியாத ஒரு கட்சியின் கந்தலான கதை! எப்படியாவது பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கவேண்டும் என்று சமரசம் செய்துகொல்கிறவர்களிடம் எந்தவிதமான தலைமைப் பண்பையும் காண முடியாது!


தலைமைப் பண்பு, தலைவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் என்ற தலைப்பில், ஸ்ட்ராடெஜி அண்ட் பிசினெஸ் தளத்தில் வெளியாகியிருந்த ஒரு கட்டுரையின் அடிப்படையில், இன்னும் பத்தாண்டுகளுக்காவது நீடித்து  நிற்கக் கூடியதான மிகச் சிறந்த கருத்துக்கள் என்று ஒரு பத்துக் கருத்துக்களின் பட்டியலில், இந்த முதல் ஐந்தை முந்தைய பதிவில் பார்த்திருக்கிறோம்!

1. Execution

2. The Learning Organization
3. Corporate Values
4. Customer Relationship Management.
5. Disruptive Technology


இந்த ஐந்தாவதான டிஸ்ரப்டிவ் டெக்னாலஜி --- Disruptive Innovation! இந்த வார்த்தைப் பிரயோகத்தை உருவாக்கிய பேராசிரியர் கிளேடன் க்றிஸ்டென்சென் வலைத்தளத்துக்கு லிங்க் இருந்ததைப் பார்த்து, அவர் சொன்னதைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலாண்மை இயலின் குரு என்று  அழைக்கப்படும்  C K பிரஹலாத்  மறைவை ஒட்டி அஞ்சலிப்பதிவில், இங்கே கடலூரில் வெல்வெட் ஷாம்பூ அனுபவம், அதையே மேலாண்மை இயலில், பிரமிடின் அடித்தளத்தில் குவிந்து கிடக்கும் வளங்கள் என்று பிரஹலாத் சொன்னதைக் குறிப்பிட்டிருந்ததை, நினைவு படுத்திக் கொள்ள முடியுமானால், பேராசிரியர் கிளேடன் க்றிஸ்டென்சென் சொல்வதைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்காது.

வெல்வெட் ஷாம்பூ அனுபவம் என்ன?


சாஷேக்களில் ஒரு ரூபாய் விலைக்கு, அது வரை அப்பர் மிடில் கிளாஸ், அல்லது உயர் ரக வருமானமுள்ளவர்கள் மட்டுமே தெரிந்து உபயோகித்துக் கொண்டிருந்த தலைக்குத் தேய்த்துக் குளிக்கும் ஷாம்பூ, நூறு எம்எல் அளவு பாட்டிலில் தான் வரும் என்பதை மாற்றி, பாமர மக்கள் அல்லது அடித்தள மக்களும் பயன் படுத்துகிற மாதிரி சந்தைக்குக் கொண்டு வந்த போது, நல்ல வரவேற்பு, விற்பனை இருந்தது! ஒரு எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மருத்துவர் உருவாக்கிய இந்த முறை, முழுக்க முழுக்க, பாண்டிச்சேரியில் சிறு தொழில்களுக்கான வரிவிலக்குச் சலுகையைப் பயன்படுத்திக் கொண்ட  ஐடியா!


பிராண்ட் ஒன்று தான், ஆனால் அதை உற்பத்தி செய்யும் சிறு தொழில் நிறுவனங்கள், நூற்றுக் கணக்கில் பாண்டிச்சேரியில் முளைத்தன.


ஒரு குறிப்பிட்ட டர்ன் ஓவர் வந்த உடன் அந்த நிறுவனம் தூங்கப் போய் விடும்! அடுத்தது ஆரம்பிக்க, அதுவும் குறிப்பிட்ட டர்ன் ஓவர் வந்தவுடன், தூங்கப்போக என்று வரிச் சலுகைகளை சாமர்த்தியமாகப்  பயன் படுத்திய விதம்! அடுத்து, அதை சந்தைப் படுத்திய விதம்! பெரிய கம்பனிகளின் தயாரிப்புக்கள் குறைந்தது நூறு எம் எல் பாட்டில்களில், நூறு ரூபாய் என்ற விலையில்  பெரிய கடைகளில் மட்டுமே ஷோ கேசில் அலங்காரமாக வெளிச்சம் போட்டுக் காண்பிக்கப் பட்டு, வசதி உள்ளவர்கள் மட்டுமே வாங்கிக் கொண்டிருந்த நிலைக்கு மாறாக, ஒரு முறை, அல்லது இரு முறை உபயோகிக்கக் கூடிய சிறிய சாஷேக்களாக, சாதாரணமாகப் பெட்டி கடைகளிலும், டீக்கடைகளிலும் கிடைக்கிற மாதிரிப் பரவலான விநியோக முறை, சந்தையில் ஒரு புரட்சியையே தோற்றுவித்தது.


இதைத்தான் பேராசிரியர் க்றிஸ்டென்சென் டிஸ்ரப்டிவ் இன்னவேஷன் என்கிறார்! புரட்டிப் போட்டுவிடும் புதுமை! ஒரு சின்ன யோசனை தான்! மாற்றி யோசித்ததன் விளைவு தான்! சிறு தீப்பொறியாக வெளிப்படும் இந்தப் புது முறை, சந்தையை அப்படியே ஒரு உலுக்கு உலுக்கி விடுகிற வேகத்தில், ஏற்கெனெவே அசைக்க முடியாதவர்களாக எண்ணிக் கொண்டு சந்தையைப் பிடித்து வைத்திருந்த போட்டியாளர்களை காணாமல் போக வைத்து விடும் என்கிறார்.


வாஷிங் பௌடர் நிர்மா....! நிர்மா...!


இப்போதெல்லாம் இந்த விளம்பரத்தை டீவீக்களில் அதிகமாகப் பார்க்க முடிவதில்லை என்றாலும் கூட, நாற்பது வருடங்களுக்கு முன்னால் இந்தப் பெயர் டிடர்ஜன்ட் பௌடர் வணிகத்தில் ஏகபோகமாக, கொள்ளை விலைக்கு விற்றுக் கொண்டிருந்த ஹிந்துஸ்தான் லீவரைப் பாடாய்ப் படுத்தியதென்னவோ உண்மை! 1969 ஆம் ஆண்டு, அகமதாபாத் நகரில், கர்சன்பாய் படேல் என்ற தனிமனிதன், வெறும் நூறே சதுர அடிப் பரப்புள்ள இடத்தில் இருந்து கொண்டு மஞ்சள் நிறத்தில் எளிய மக்கள் உபயோகிக்கிற விலையில் ஒரு சோப் பௌடர், கிலோ வெறும் மூன்றரை ரூபாய் தான்! விற்றுக் கொண்டிருந்ததை, சோப், டிடர்ஜென்ட் மார்கெட்டில் வலுவாகக் காலை ஊன்றியிருந்த ஹிந்துஸ்தான் லீவர் சட்டை செய்யவே இல்லை! ஹிந்துஸ்தான் லீவரின் தயாரிப்பு ஐந்து மடங்கு விலை! சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப் என்று அந்த அந்த நேரத்துப்  பிரபலமான நடிகைகளின் படத்தைப் போட்டு  வியாபாரம் செய்கிற உளுத்துப் போன வியாபார  உத்தியை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்! தயாரிப்பின் தரம், பெறுமதியை விட விளம்பரத்தில் மூளைச் சலவை செய்தே விற்பனையை பெருக்குகிற சாதாரணமான வியாபார உத்தி! இதைத் தான், புதிதாக வரும் ஒரு எளிமையான முயற்சி, ஏற்கெனெவே காலூன்றியிருப்பவர்களை அப்படியே புரட்டிப் போட்டுவிடுவதாக ஆகி விடும் என்கிறார் க்றிஸ்டென்சென்! அவர் சொல்லும் தியரி, அவர் அதை எழுதுவதற்கு வெகு காலத்துக்கு முன்னாலேயே இந்தியாவில் நடந்து முடிந்ததை அறிந்திருப்பாரா என்பது எனக்குத் தெரியவில்லை!

சிறிய அளவில் ஆரம்பித்த முயற்சிதான்! ஆனால், அது ஏற்படுத்திய தாக்கம் பெரிது! ஜனங்களிடம் வரவேற்பு பெருகிக் கொண்டிருந்ததை, ஹிந்துஸ்தான் லீவர்  புரிந்து கொள்ளவே நீண்ட காலமாயிற்று! விரைவிலேயே, நிர்மா ஒரு வலிமையான பிராண்டாக உருவானது. 2000 ஆம் ஆண்டுக் கணக்குகளின் படி சோப் இனத்தில் பதினைந்து சதவீதம், டிடர்ஜன்ட் பௌடர் இனத்தில் முப்பது சதவீதச் சந்தையை நிர்மா பிடித்திருந்தது என்ற ஒன்றே க்றிஸ்டென்சென் என்ன சொல்ல வருகிறார் என்பதை மிக  எளிமையாக விளக்கி விடும்! சந்தை வெகு வேகமாக கைவிட்டுப் போனதைக் கூட வெகு காலம் கழித்தே அறிந்து கொண்ட ஹிந்துஸ்தான் லீவர் போட்டியைச் சமாளிக்க விலை குறைப்பைச் செய்ய வேண்டி வந்ததும், விளம்பரங்களில் அள்ளியிறைக்க வேண்டி வந்ததும், இந்தியச் சந்தைப் பொருளாதாரத்தில் அரங்கேறிய சுவாரசியமான வரலாறு படைத்த  நிகழ்வுகள்!

நிர்மா இப்போது எங்கிருக்கிறது என்று கேட்கிறீர்களா? வெறும் சோப், டிடர்ஜென்ட் என்று மட்டுமே இருந்த நிர்மா, இன்றைக்குப் பல துறைகளிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறது. தெற்கே, அவ்வளவாக, சந்தையில் காண முடிவதில்லை! ஆனாலும் அதன் வீச்சு வட இந்தியாவில் இன்னமும் அப்படியே தான் இருக்கிறது! உலகத்துக்கே நாங்கள் தான் மேலாண்மை முதல் மூக்குச் சிந்துவது வரை எல்லாவற்றையும் கற்றுக்  கொடுப்பவர்கள் என்ற மமதையோடு செயல்படும் மல்டிநேஷனல் நிறுவனங்களுக்குச்  சரியான பாடத்தைக் கற்றுக் கொடுத்த இந்திய அனுபவமுமாக ஆகிப் போனது! அடித்தட்டு மக்களிடம் கூட  சந்தையை விரிவு படுத்த முடியும் என்பதை வெல்வெட் ஷாம்பூ அனுபவம் காட்டிக் கொடுத்தது. இன்றைக்கு, அந்த மார்கெடிங் உரிமையை காட்ரெஜ் நிறுவனம் விலைக்கு வாங்கி நடத்திக் கொண்டிருக்கிறது. ஹிந்துஸ்தான் லீவர் போலப் பெரிய  நிறுவனங்களும், மண்டியிட்டுக் கீழே இறங்கி வந்தாக வேண்டிய நிலையை உருவாக்கியது என்று கூடச் சொல்ல முடியும்!

ஒரு நல்ல கருத்து! நோக்கம், அல்லது செயல் திட்டம்!தலைமைப் பண்பு அதில் இருந்து தான் உருவாகிறது! எப்படி செயல் படுத்தப் படுகிறது, செயல் படுத்துபவர்களை ஒரு குழுவாக எப்படி ஒருங்கிணைக்கிறது என்பதில் தான்  நல்ல தலைவர்கள் உருவாவதும், வெற்றி பெறுவதும் ஒரு சேர நிகழ்கிறது!

இந்த விஷயங்களை மறுபடி படித்துவிட்டுக் கொஞ்சம் யோசியுங்கள்!  உங்களுக்கு என்ன தோன்றுகிறது, என்ன சந்தேகம் என்பதைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்! அப்புறம் அடுத்த ஐந்தை பார்த்து விடலாம்!








12 comments:

  1. "இது தலைமைப் பண்பு என்றால் என்னவென்றே அறியாத ஒரு கட்சியின் கந்தலான கதை! எப்படியாவது பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கவேண்டும் என்று சமரசம் செய்துகொல்கிறவர்களிடம் எந்தவிதமான தலைமைப் பண்பையும் காண முடியாது!"

    எனக்கு ஒரு சந்தேகம், சத்தியமாக இதை நான் கிண்டலாகக் கேட்கவில்லை.
    இந்தியாவில் உள்ள எந்த கட்சித் தலைவருக்கும் தலைமைப் பொறுப்பில் இருக்கிற அருகதை இருப்பதாகத் தெரியவில்லை: உங்கள் அளவுகோல்களைப் பார்த்தால். அப்படியானால், இவர்கள் எப்படி மேலுக்கு வந்தார்கள், தங்கள் கட்சிகளை எப்படி வழிநடத்திச் செல்கிறார்கள்?
    ஒரு சமயம் அரசியலுக்கேன்றோ இந்தியாவுக்கென்றோ தனித் தன்மையுடைய தலைமைப் பண்புகள் தேவைப் படுகின்றனவோ?
    நன்றி.

    ReplyDelete
  2. this is fate of us...we have to accept these politicians
    http://infopediaonlinehere.blogspot.com/

    ReplyDelete
  3. நட்பாஸ்!

    இதில் என்னுடைய அளவுகோல்கள் எதுவுமே இல்லை! அது ஒரு பக்கம் இருக்கட்டும்! ஒரே அரசியல்கட்சி, வெவ்வேறு அளவுகோல்களை சமயத்துக்குத் தகுந்த மாதிரிப் பயன்படுத்துவதையும் சொல்லி இருந்ததைப் பார்க்கவில்லையா?

    தலைமைப் பண்பு!

    இதைப் பற்றிக் கீழே கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருந்தது, அரசியல் கட்சிகளுக்குப் பொருந்துவது ஒருபக்கம், நீங்கள் அதில் இருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள், என்ன நினைக்கிறீர்கள் என்பதைச் சொல்லவே இல்லையே!

    ReplyDelete
  4. இன்போபீடியா ஆன்லைன்!

    இது நம்முடைய தலைஎழுத்து இல்லை!

    சோம்பேறித்தனம்! பொறுப்பில்லாத் தனம் !

    கடிவாளம், சவுக்கு, தடி எல்லாமே நம் கையில் இருப்பதை மறந்து இவர்களைத் தறி கெட்டோட விட்டுவிட்டு, டீவீயில் ஐபிஎல், கிரிக்கெட், மானாட மயிலாட மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் இப்படித் தான் நடக்கும்!

    ReplyDelete
  5. மன்னிச்சிக்குங்க. அதெல்லாம் தொழில் நிர்வாகங்களில் முதன்மைப் பொறுப்பில் இருக்கறவங்க தெரிஞ்சுக்க வேண்டியதுன்னு படிக்காம விட்டுட்டேன்.

    ReplyDelete
  6. நட்பாஸ்!

    நீங்கள் சொன்ன மாதிரியான நினைப்பெல்லாம் ரொம்பப் பழசு!

    மேலாண்மைக் கோட்பாடுகளில் நிறைய மாறுதல்கள் வந்தாயிற்று!மாற்றத்தை ஏற்றுக் கொண்ட நிறுவனங்களின் வளர்ச்சி ஒரு விதமாகவும், மாற்றங்களைக் கடனே என்று நடைமுறைப்படுத்த முயற்ச்சிர்தவர்கள் கதை வேறுவிதமாகவும், மாற்றங்களா அப்படியென்றால் என்ன என்று கேட்டுக் கொண்டிருந்தவர்கள் காணாமலேயே போய்விடுவதும் நடந்து கொண்டிருக்கிற காலம் இது.

    ReplyDelete
  7. என்னையும் மதிச்சு என் பின்னூட்டங்களைப் பதிப்பிச்சு அதுக்கு பதிலும் கொடுக்கற உங்க பண்பை முதல்ல பாராட்ட விரும்பறேன்.

    நான் ஒரு மந்தநிலை (அதாவது மேலே போறதுக்கான வாய்ப்புகள் இல்லாத மத்தி நிலை) அரசு ஊழியன். அதுனாலதான் இதெல்லாம் நமக்கு எதுக்குன்னு படிக்காம விட்டுட்டேன். மன்னிச்சுக்குங்க.

    இப்போதான் உங்க வலைதளத்தை முதன் முறையா படிக்கறேன். மேலாண்மைக் கோட்பாடுகள் பற்றி ஆனா ஆவன்னா கூட தெரியாத என் மாதிரி சாமானியர்கள் படிக்கற மாதிரி எழுதிட்டீங்கன்னா நீங்க ஜெயிச்சிட்டீங்கன்னு அர்த்தம். மேலும் பல தரமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
  8. நட்பாஸ் என்கிற பாஸ்கர்!

    மேலாண்மைக் கோட்பாடுகள் பற்றி ஆனா ஆவன்னாவுக்கு அப்பால் போக இரண்டு வழிகள் இருக்கின்றன!

    தினசரி ஆறு கோப்பை காப்பி அல்லது கொட்டைவடிநீர் குழம்பி குடிப்பதை இரட்டிப்பாக்குவது!

    அல்லது சுத்தமாக நிறுத்தி விடுவது!

    மேலாண்மை குறித்துப் புரியும்படியாக எழுத வில்லை, ஜெயிக்கவில்லை என்பதை, நேரடியாகச் சொன்ன முதல் பின்னூட்டம் உங்களுடையது!

    மிகவும் நன்றி! இதுவரை, இந்தப் பக்கங்களை வந்து படித்தவர் எண்ணிக்கையைக் காட்ட கௌண்டர்கள் இருப்பதுபோல, அவர்கள் எந்த அளவுக்குப் படித்தார்கள், என்ன நினைத்தார்கள் என்று எண்ணத்தைத் தெரிந்துகொள்ள இது வரை எனக்கு உதவியான தகவல்கள் இருந்ததில்லை. அந்த வகையில் ஒரு கோடி காட்டிவிட்டுப் போன பின்னூட்டம் உங்களுடையது!

    ReplyDelete
  9. ஐயோ, மன்னிச்சுக்குங்க.

    என்னாலப் படிக்க முடியலைன்னா நீங்க என்ன பண்ணுவீங்க? "கடை விரித்தோம் கொள்வாரில்லை"ன்னு வள்ளலாரே சொல்லலியா? நீங்க சொல்ற உயர்ந்த விஷயங்களைப் புரிஞ்சிக்கற சக்தி /பொறுமை எனக்கு இல்லை, அவ்வளவுதான். நானும் புரிஞ்சிக்கற மாதிரி நீங்க எழுதணும் என்கிற என் ஆசையாத்தான் சொன்னேன், மத்தபடி உங்களை மட்டம் தட்டி எதுவும் சொல்லலை. அப்படி ஒரு தோற்றம் வந்திருந்தா முழு மனசோட மன்னிப்பு கேட்டுக்கறேன்.

    பாஸ்கர்

    ReplyDelete
  10. மேலாண்மைக் கோட்பாடுகள் இங்க எங்க வந்தது. ஒருத்தர் பிசினஸ் ரீதீயாக மேலாண்மைக் கோட்பாடுகளை கேள்வி கேக்கின்றார். இன்னோருவர் அரசியல் ரீதீயாக மேலாண்மை கோட்பாடுகளை கற்பனை பண்ணுகின்றார். அய்யா கிருஷ்ண மூர்த்தி அவர்களே கம்முனிச சித்தாந்ததில் ஊறியவர் என்பதால் அவரின் மேலாண்மை சமுதாயம்,சம தர்மன் எனபதுடன் கார்ப்பரோட் முதலாளிகளை திட்டனும் என்ற சமுக கடமையை நிறை வேற்றுகின்றார். அவ்வளவுதானே.

    முதலில் சாம்பு கம்பொனிகள் கண்டறிந்த முறைக்கு கார்ப்ரோட்கள் வருவது என்பது என்ன டிரண்டே அதை வைத்துதான் காசு பண்ண முடியும். ஆன்மீகத்தை சொன்னால் பருப்பு வேகும் என்றால் பார்வதி விளம்பரம் போட்டு விற்ப்பார்கள். பகுத்தறிவு வியாபாரம் ஆகும் என்றால் பெரியார் படம் போடுவார்கள். அவர்கள் காசு பார்க்க, நாம் மட்டும் இப்படி எழுதிக் கொண்டே கும்மி போட்டு பொழுதைக் கழிப்போம். இதுவும் உலக நியதியே என்னமோ.

    ReplyDelete
  11. திரு சுதாகர்!

    வெல்வெட் ஷாம்பூ அல்லது நிர்மா ப்ராண்டுகளாக ஆனதும் சாதனை படைத்ததும், எந்த கார்பரேட் கொம்பர்களாலுமல்ல! அது மிகச் சாதாரணமான மனிதர்களுடைய நம்பிக்கை, உழைப்பில் இருந்து உருவானது!

    ஒரு நல்ல ஐடியா! அதைச் செயல்படுத்திய விதம்! இது தான் மேலாண்மையைத் தொட்டுச் சொல்லும் இந்தப் பதிவின் முதல் கன்செப்ட்!

    பதிவை நீங்கள் சரியாகப் படிக்கவில்லை என்பது நன்றாகவே உங்கள் பின்னூட்டத்தில் இருந்து தெரிகிறது!

    நான் எந்த இசத்திலும் ஊறிய மட்டை அல்ல! அது Spiritualism ஆக இருந்தாலுமே கூட!!

    கார்பரேட்டுக்களைத் திட்டுவதோ, அல்லது துதி பாடுவதோ கூட என் வேலையும் இல்லை.

    அப்புறம் அந்த அரசியல் ரீதியாக மேலாண்மை குறித்த கற்பனை....?

    மேலாண்மை, தலைமைப் பண்பு என்பது எங்கும், எதிலும் தேவைப் படுகிற அடிப்படை விஷயம்!

    அரசியலுக்கு வேண்டாமென்றால், அது உங்கள் சாய்ஸ்! என்னுடையதும் அப்படியே இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை!

    ReplyDelete
  12. அய்யா வெல்வெட் ஷாம்பு முதலில் மார்க்கெட்டில் வந்தது புரட்சிதான், ஆனால் அவர் பிசினஸ் நடத்தி முடித்து இறந்தவுடன், அவர் பசங்கள் போய் வெல்வெட் கம்பெனியை மூடி விடுவது என்று வங்கியில் பேச ஆரம்பித்தார்கள். அப்போது வங்கி மேலாளர் அந்தக் கம்பெனி மீது இரண்டு லட்சம் ரூபாய் கடன் இருக்கின்றது என்று கூற, கட்ட வழியில்லாமல் தொடர்ந்து நடத்த முடிவு செய்தார்கள். அப்போது கடைசி பையன் மட்டும் தனியாக வெளி வந்து ஆரம்பித்ததுதான் கெவின் கேர் என்னும் சிக் ஷாம்பு நிறுவனம். வெல்வெட் ஒரு நட்டத்தில் ஓடிய நிறுவனம். அதை சாஷே பாக்கெட் உரிமைக்காக காத்தேரேஜ் வாங்கியுள்ளது.

    இதை ஆரம்பத்தில் புரட்சி என்று ஒத்துக் கொள்கின்றேன். ஆனால் இதில் கார்ப்பரோட் நிறுவனங்கள் மண்டியிட்டது அப்படி இப்படி எழுதியுள்ளது என்ன. ஷாஷே பாக்கெட் புரட்சியும் பண்ணாட்டு நிறுவனங்கள் செய்துதான் ஆக வேண்டியது.

    பிளானிங், ப்ரி டிட்டர் மினேசன், புராசஸ். போன்ற ஜந்து பிக்கள் கொண்ட மேலாண்மை கொள்கைகள் வணிக ரீதியில் கூட போட்டி என்று வந்தால் கடைப்பிடிப்பது சிரமம். பணம் என்னும் ஒரே எம் மில் ஓடும் அரசியலுக்கு மேலாண்மை மட்டும் கொண்ட ஆளுமை சரி வராது.

    ஷாம்பு கம்பெனிகள் வியபாரத்தில் ஒரு புரட்சி மற்றும் மக்களின் மாற்றங்களை அடிப்படையாக கொண்ட கருத்து. இது மேலாண்மை கொள்கை அல்ல.

    சந்தையை உற்று நோக்கி, மாற்றங்களையும் மக்கள் தேவைகளையும் கணித்து செய்யும் ஒரு ஜில்லாங்கடி வேலை.

    இராமகிருஷ்னா பேட் என்னும் திருத்தனி மற்றும் ஆந்திரா மானிலத்தில் பார்டரில் இருக்கும் ஒரு குக்கிராமம். இந்த குக்கிராமத்தில் மபத்லால் நிறுவனத்தின் உயரிய, விலை உயர்ந்த ட்ரண்ட்ஸ் என்னும் ரெடிமேட் உள்ளாடைகளை விற்க முடியுமா? நான் இந்த கிராமத்தில் வித்துக் காட்டினேன். எப்படி என்றால் இங்கு அனைவரும் விவசாயக் கூலிகள் . பட்டா அண்டவேரில் பணத்தை வைத்துக் கொண்டுதான் கூலி வேலை செய்ய முடியும். சட்டைப் பாக்கெட்டில் வைத்து விட்டு மரத்தில் மாட்டிவிட்டு போனால் திருடி விடுவார்கள். பட்டாபட்டி அல்லது அண்டவ்வேர் போட்டால் போண்ட் போட்டுக் கிட்டு அல்லது வேஷ்டி கட்டி வருவது சிரமம். ஆதலால் உள்ளாடைகளில் தரமான பாக்கெட் வைத்த உடம்பில் ஒட்டி இருப்பது தெரியாத டிரண்ட்ஸ் டிராயர்களை காட்டி, போட்டுக் காட்டி வித்தேன். அந்தக் கடையில் டீலரும், எனது நிறுவன மேலாளரும் ஒரு குக்கிராமத்தில் பெரிய நிறுவனத்தின் உள்ளாடைகளை வித்ததைப் பாராட்டினார்கள். இது ஒன்னும் சாதனையே மேலாண்மையோ இல்லை. இது மக்களின் தேவை குறித்த ஆய்வு அவ்வளவுதான். இதைத்தான் வெல்வெட் செய்தது. ஆனால் அவர்களிடம் சிறப்பான நிர்வாகம் இல்லாததால் தேல்வியைத் தழுவினார்கள் என்பது உண்மை. நான் உங்களின் பதிவையும் முழுமையாக படித்தேன். அதே சமயம் 10 வருட மார்க்கெட்டிங் அனுபவத்தில் கெவின்கேர் சுப்பிரமனியன். நிர்மா நிறுவன அதிபர் கதையும் படித்தேன். நிர்மா கூட இப்ப காணாமல் போன நிறுவனம்தான். டோர் டூ டோர் மார்க்கெட்ங் மற்றும் வாசிங்க பவுடர் தவிர நிர்மா எதுவும் சாதிக்க வில்லை. அதுவும் அந்த விளம்பரத்தில் வரும் அந்த அவரின் பெண் ஒரு விபத்தில் இறந்து போனதில் இருந்து அவரும் வியபாரத்தில் ஈடுபடவில்லை.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!