வெள்ளிக் கிழமை சந்தேகங்கள்! பீர் பால் கதை வரிசை -4


ஒருநாள், பாதுஷா அக்பருக்கு  திடீரென்று ஒரு சந்தேகம் வந்து விட்டது!

ராஜா, பாதுஷா என்றாலே இப்படித்தானே என்கிறீர்களா? அதுவும் உண்மைதான்! இந்த மாதிரியான ஆசாமிகளுக்கு  வருகிற சந்தேகங்களே  கொஞ்சம் விசித்திரமாகத் தான் இருக்கும். இங்கே மதுரையில் இப்படித் தான் ஒரு வேலைவெட்டி இல்லாத பாண்டியனுக்கு  திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது! பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே நறுமணம் உண்டா இல்லையா என்று!  அப்புறம் என்ன  ஆயிற்றென்பது, ஏ பி நாகராஜன் 'சங்கறுப்பது எங்கள்  குலம் சங்கரனார்க்கேது குலம்' என்று வசனம் எழுதுகிற காலம் வரையும், அதையும் தாண்டியும் தொடர்ந்து கொண்டே இருக்கிறதென்பது தெரிந்ததுதானே!

ஆக ஒரு விஷயம் தெளிவு! இப்படி உருப்படாத விஷயங்களில் தான் நம்மூர் ராஜாக்கள், பாதுஷாக்கள், மனுநீதிச் சோழர்களுக்கு சந்தேகமே வரும்!

ஆமாம் சாமிகளா!

அக்பருக்கு திடீரென்று ஒரு நாள் பெருத்த சந்தேகம்!
நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி என்று தண்டோரா எல்லாம் கிடையாது! அதற்குத் தான் முட்டாள் மந்திரி, பிரதானி, அப்புறம் கலைச் சேவை செய்கிறவர்கள்  என்று ஒரு பெரிய துதிபாடிக் கும்பலே இருக்கிறதே!  வேடிக்கை பார்க்க  மக்களுக்கு இலவசமாகக் கொஞ்சம் அனுமதி வழங்கி அவ்வப்போது நடத்தும் தர்பாரும் உண்டு! இது போதாதா?

தர்பாரில் அக்பர் தன்னுடைய சந்தேகத்தைக் கேட்கிறார் விக்கிரமாதித்தன் கதைகளில் வருவது மாதிரியே அக்பருக்கு திடீர் திடீரென சந்தேகம் வருவதும், புத்திசாலியான பீர்பால் விடை சொல்வதுமாகவே பீர்பால்-அக்பர் கதைகளை அறிந்திருக்கிறோம்! 

இப்படி ஒன்று, இரண்டு, மூன்று என்ற வரிசையில் இது நாலாவது!

போன பதிவில் காரணம் ஆயிரம் கார்த்திகேயன் மெனெக்கெட்டு ஒரு தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

பீர்பால் என்று அழைக்கப் படுபவருடைய இயற்பெயர் மகேஷ் தாஸ். உத்தரப் பரதேசத்தை சேர்ந்தவர். ஒரு சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர்.. தன்னுடைய புத்தி சாமர்த்தியத்தினால் டில்லி பாதுஷா அக்பருடைய அபிமானத்துக்கு உரியவராகி, அவரால் பீர் பால் என்று அழைக்கப் பட்டவர். இதை இரண்டாவது பீர்பால் கதையிலேயே சுருக்கமாக சொல்லி இருந்தாலும், இப்போது வரலாறு முக்கியங்க என்ற வசனத்துக்கு விசுவாசமாக, மறுபடியும் இங்கே சொல்லுவதில் தவறில்லையே!

அன்றும் சரி, இன்றும் சரி டில்லியில் பாதுஷாக்களின் சாமர்த்தியத்தினால் அரசு நிர்வாகம் நடந்ததில்லை. சொல்லப் போனால், பாதுஷாக்கள் ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போதும் என்ற நிலை தான் அன்றும்! அப்படித் தான், வேறு வேலை வெட்டி இல்லாத ஒரு வெள்ளிக் கிழமையன்று  டில்லி பாதுஷா அக்பருக்கு திடீர் சந்தேகம் ஒன்று வந்து விட்டது! பாதுஷாக்களுக்கு சந்தேகம் மட்டும் தான் வரும்! 


சந்தேகப் படுவதைத் தவிர வேறொன்றுமறியேன் வலைஞர்களே!

இப்போது  மந்திரிசபைக் கூட்டம், மன்றக் கூட்டம் என்று நடத்துகிறார்கள் அல்லவா, அதே மாதிரி அக்பர் தன்னுடைய தர்பாரைக் கூட்டினார். தர்பார் என்ற வார்த்தைக்கு, வெட்டிக் கூட்டம் அல்லது வெட்டி அரங்கம் என்பதுதான்  உண்மையான அர்த்தம் தெரியுமில்லையோ?!

தர்பார் கூட்டியவுடனேயே, அவையில் ஒரே பரபரப்பு. பாதுஷா என்ன கேட்கப்  போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள எல்லோருக்குமே கொஞ்சம் அலுப்புடன் கூடிய ஆவல்தான்!  அலுப்புக்குக் காரணம், இது தினசரி வாடிக்கையாகிப் போனது! ஆவலுக்குக் காரணம், பாதுஷாவைக் குளிர வைக்கிற மாதிரி ஏதாவது சொல்லி விட்டால் கிடைக்கும் ஆதாயம்! ஆயிரம் அலுப்பிருந்தாலும் ஆதாயத்தை விட முடியுமோ!

பாதுஷா தர்பாரில் இருந்த அத்தனை பேரையும்  இடப்பக்கத்தில் இருந்து வலப் பக்கம் வரை, வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கம் வரை இப்படிக் கழுத்து கொஞ்சம் வலிக்கிற வரை திரும்பிப்  பார்த்தார். அடிக்கடி தொண்டையைச் செருமிக் கொண்டார். எல்லோரும் கவனமாகக் கேட்கத் தயாராக இருப்பதைப் பார்த்தவுடனேயே குஷி  பிறந்து விட்டது.

"சபையோர்களே! டில்லி பாதுஷாவாக இருப்பவனுக்கு என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்துப் பார்க்கிறபோதே மலைப்பாக இருக்கிறது. என்ன, நான் சொல்வது சரிதானே!"

சபைக்கு வருவதே, படிகள், வேறு சில விஷயங்களை சாதித்துக் கொள்வதற்காகத் தான்! சரியில்லை என்று சொல்லி விட முடியுமா? எல்லோரும், ஆமாமென்று தலையாட்டினார்கள்.

"இந்த சாம்ராஜ்யத்தில் பாதுஷாவுக்குத் தெரியாமல் பிறப்பு இறப்பு உட்பட  எதுவுமே கிடையாது என்றுதான் இன்று காலை வரை நினைத்துக் கொண்டிருந்தேன்!" என்று சொல்லி நிறுத்தினார் அக்பர்.

தர்பார் வாலாக்களுக்கு அக்பர் எதற்காக இதைச் சொல்கிறார் என்று நிஜமாகவே புரியவில்லை! புரிந்து தான் என்ன ஆகப் போகிறது? தர்பாருக்கு வந்தோமா, நாலு காசைப் பார்க்கிற வழியைப் பார்த்தோமா என்பதுதானே முக்கியம்! இருந்தாலும், பாதுஷா சொல்லும்போது, கூடச் சேர்ந்து ஒத்துப் பாடவில்லைஎன்றால் எப்படி!

"இன்றைக்குக் காலையில் கண்விழித்து, கோட்டை மதிலைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கே சில காக்கைகள் அமர்ந்திருப்பதைக் கண்டேன்!"  இப்படி மறுபடியும் சொல்லிவிட்டு அக்பர் நிறுத்தின போது தர்பாரில் வழக்கமாகத் தூங்கி வழியும் பிரகிருதிகளுக்குக் கூட சுரணை வந்து, ' என்னது, பாதுஷா காக்கைகளைப் பார்த்தாரா' என்று ஆச்சரியப் பட்டார்கள்.பாதுஷா கண்ணில் பட்ட  காக்கைகளைத் துதிபாட வேண்டுமா, அல்லது தூற்ற வேண்டுமா, என்ன செய்தால் பாதுஷாவுக்குப் பிடிக்கும் என்று கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தார்கள். வாழைப்பழச் சோம்பேறிகளாகவே  தர்பாரில் காலம் கழித்து விட்டபடியால், அதைக் கூட யாராவது ஆரம்பிக்கட்டுமே என்று காத்திருந்தார்கள்.

வேறு எவரும் பேசாமல் இருந்ததைப் பார்த்துவிட்டு அக்பர் மீண்டும் பேசினார்.

"காக்கைகளைப் பார்த்தபோது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. இத்தனை காலமாக டில்லி பாதுஷாவாக இருக்கிறோம், டில்லியில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன என்பதை யாராவது பொறுப்பாக பாதுஷாவுக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்களா என்று யோசித்துப் பார்த்தேன். எனக்கு எவரும் எத்தனை காக்கைகள் என்று எண்ணிச் சொன்னதாக நினைவில்லை! யாருக்காவது தெரியுமா?"

அதுவரை அமைதியாக இருந்த தர்பார், திடீரென ஆயிரம், லட்சம் காக்கைகள் ஒரே இடத்தில் கூடிக் கரைவதுபோல சத்தக் கடையாக ஆனது. ஒருவர்  கை விரலை விட்டு  எண்ணி ஒரு ஐந்து இருக்குமா என்றார். அடுத்தவர்   அவ்வளவு இருக்காது என்றார். பக்கத்தில் இருந்தவருக்கோ ஒன்றும் புரியவில்லை. வெறும் ஐந்து தானா, கூட இருக்கும் போலத் தோன்றுகிறதே என்றார். முதலிருவரும், அந்த நபரை விநோதமாகப் பார்த்து விட்டு நாங்கள் காக்கையை எண்ணவில்லை, சரியாகச் சொன்னால் கிடைக்கும் பெட்டியின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்றல்லவா பேசிக் கொண்டிருந்தோம் என்றார்கள். அவரும் புரிந்தது, புரிந்தது என்று தன் பங்குக்கு இன்னும் கொஞ்சம் விரலை விட்டு எண்ணிப் பார்க்க ஆரம்பித்தார்.

பாதுஷா அக்பர் பழையபடியே, இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கம், வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கம் என்று தர்பாரில் இருந்தவர்களைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் விரல் விட்டு எண்ணி, வாய்க்குள்ளேயே வாய்ப்பாடு முனகிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும், தானும் ஒன்று இரண்டு எண்ணக் கற்றுக் கொள்ளலாமா என்று யோசித்தார். அப்புறம்,அதெல்லாம் பாதுஷாக்களின் கவுரவத்திற்கு ஒத்து வராதென்று அந்த எண்ணத்தையே ஓரங்கட்டி வைத்து விட்டார். தர்பாரில் ஒருவரும் பதில் சொல்ல முன்வருவதாகத் தெரியவில்லை!

"உங்களில் யார்  இதைக் கண்டுசொள்ளும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளப் போகிறீர்கள்?" இப்படிக் கேட்கும்போதே அக்பர் பீர்பாலை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டுதான் கேட்டார். இப்போதெல்லாம், பீர்பால் தானாக எதுவும் சொல்வதில்லை. அழுத்திக் கேட்டால் தான் பதில் சொல்கிறான். மகா அழுத்தக்காரன். இருந்துவிட்டுப் போகட்டுமே! பீர்பால் இல்லையென்றால், இன்னொரு கீர்பால்! தங்க மோகராக்களுக்கு மயங்காதவன் எவனாவது இருக்க முடியுமா என்ன? கீர்பால் எவனாவது முன்வருகிறானா என்று பார்த்துக் கொண்டிருந்த அக்பர் பொறுமை இழந்தார்.

"என்ன? யாரும் பொறுப்பெடுத்துக் கொள்ளப்போவதில்லையா?" குரலில் கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது. காக்கைகள் எத்தனை என்று கூடத் தெரியாத ஒருவன் பாதுஷாவாக இருப்பதா? அவமானம் என்று மீசை துடிக்க ஆரம்பித்தது. பாதுஷாவாக இருந்தால் இப்படியெல்லாம் மீசை துடிக்கப் பல்லைக் கடிக்க வேண்டியிருக்கிறது!  இந்த பாதுஷா கிரீடம் சுமப்பது எவ்வளவு கஷ்டம் என்பது எவருக்காவது புரிகிறதா  என்று அக்பர் மனதுக்குள்ளேயே கருவிக் கொண்டிருந்தார்.

"ஹூசூர்! நான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்! நாளைக் காலை உங்கள் அரண்மனையிலோ, தர்பாரிலோ சரியான எண்ணிக்கையைச் சொல்லி விடுகிறேன்!" பீர்பால் எழுந்து மிகவும் பணிவாகச் சொன்னார். பணிவாகச் சொன்ன விதமே, என்னவோ தன்னைக் கேலி செய்வதுபோல அக்பருக்குத் தோன்றியது. ச்சே, பீர்பால் அப்படியெல்லாம் லந்து பண்ண மாட்டான் என்று பாதுஷா தன் மனதைத் தானே தேற்றிக் கொண்டு, தர்பார் கலையட்டும் என்று உத்தரவு போட்டார்! இப்படி உத்தரவுக்கு மேல்  உத்தரவு போடுவது கூட எவ்வளவு  கஷ்டம்! எவருக்காவது புரிகிறதா என்று அக்பர் வருத்தப் பட்டுக் கொண்டே அரண்மனைக்குப் போனார். பீர்பால் சாமர்த்தியக் காரன்! மற்றவர்களெல்லாம், கைவிரலை விட்டு ஒன்று இரண்டு என்று என எண்ணிக் கொண்டிருக்கும் போதே கடினமான கணக்கையெல்லாம் போட்டு முடித்துவிடுகிற சாமர்த்தியக் காரன். அவனால் முடியவில்லை என்றால், வேறு எவராலுமே முடியாது! நாளைக் காலை, டில்லியில் இருக்கும் காக்கைகள் எத்தனை என்ற துல்லியமான புள்ளி விவரம் தெரிந்து விடும்! இதுகூடத் தெரியாமல் ஒரு பாதுஷா இருக்கலாமோ!  இப்படி யோசனைக்கு மேல் யோசனையாக  உழட்டிக் கொண்டே அன்றையப் பொழுதை பாதுஷா கழித்தார்.

மறுநாள் பொழுதுவிடிந்தது. அவசர அவசரமாக காலைக் கடன்களை முடித்துவிட்டு, அக்பர் தர்பாரைக் கூட்ட உத்தரவிட்டார். எப்போது தர்பார் கூடும் என்று காத்திருந்தது போல அத்தனைபேரும் தர்பாரில்  குழுமி விட்டார்கள். அவர்களுக்கும், டில்லியில் எத்தனை காக்கைகள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வம் வந்து விட்டது என்றில்லை! சந்து கிடைத்தால் சிந்து பாடிக் கொஞ்சம் பெட்டிகளைத் தேற்றிக் கொள்ளலாமே என்ற நப்பாசைதான்! வேறென்ன!

தர்பாரில் வழக்கமான துதிபாடுகளுக்குப் பின் அக்பர் அமர்ந்து கொண்டவுடனேயே பீர்பால் அவைக்கு வந்துவிட்டாரா என்று கேட்டார்.

"ஹூசூர்! இதோ  வந்து கொண்டே இருக்கிறேன்!" என்றபடி பீர்பால் அவைக்குள் நுழைந்தார்.

"ஏற்றுக் கொண்ட வேலையை சரியாக செய்து முடித்தீர்களா?"

"ஒரு தடவைக்கு இரு தடவையாக எண்ணிக்கையை சரி பார்த்துவிட்டேன் ஹூசூர்!"

"டில்லியில் உள்ள காக்கைகள் எத்தனை பீர்பால் ? "

"சரியாக அறுபதாயிரத்து ஐநூற்று ஐம்பத்திரண்டு காக்கைகள் டில்லியில் வசிக்கின்றன ஹூசூர்!"

சந்து கிடைத்தால் சிந்து பாடத் தயாராக இருந்த ஒருவர் எழுந்தார். "பீர்பால் ஐயா! நீங்கள் சரியாகத் தான் எண்ணியிருப்பீர்கள்! ஆனாலும், ஒரு பத்து நூறு காக்கைகள் கூட இருந்தால், அதற்கு என்ன சொல்கிறீர்கள்?"

"இது என்ன கேள்வி! நம் வீட்டுக்கு விருந்தினர்கள் வருவதே இல்லையா? அதே போல டில்லியில் உள்ள காக்கைகளின் உறவினர்கள் வந்திருப்பார்கள்!" என்று கொஞ்சம் கூடத் தயங்காமல் பீர்பால் சொன்னவுடன், சிந்துபாட வாய்ப்புத் தேடியவர் சந்திலேயே உட்கார்ந்து விட்டார்.

'ஆஹா! பீர்பால் எத்தனை புத்திசாலி! எவ்வளவு சரியாகச் சொன்னான்' என்று வியந்து கொண்டே அக்பர் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தானும் கேள்வி ஏதாவது கேட்கவேண்டுமே என்று கேட்டார். கேட்காவிட்டால், பாதுஷாவுக்கு கவுரவம் குறைந்துபோய் விடுமே!

"அதெல்லாம் சரி பீர்பால்! ஒருமுன்னூற்று அறுபது காக்கைகள் குறைகிற மாதிரித் தெரிந்தால்......?"

"ஹூசூர்! அந்த முன்னூற்று அறுபதும் தங்கள் உறவினர்களைப் பார்க்கப் போயிருக்கும்! நீங்களே வேண்டுமானால் சரி பார்த்துக் கொள்ளுங்கள்!"

யாராவது முன்வந்தால் தானே! அப்புறம் பாதுஷா மட்டும் எப்படி முந்துவதாம்! வேறு வழியில்லாமல், சரியான புள்ளி விவரத்தைத் திரட்டியதற்காக பீர்பாலுக்குப் பரிசும், பாராட்டும் அளித்து விட்டு அப்புறமாகத் தர்பார் கலைந்தது.


டிஸ்கி ஒன்று:

நடப்பு அரசியல் விவரங்களோடு குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று தெளிவாகவே அறிவிக்கப் படுகிறது! நடப்பு நிலவரம், இதைவிட மிகவும் மோசம்! இதை விட மிகவும் கேவலம்!

டிஸ்கி இரண்டு :

சிந்து பாட வாய்ப்புத் தேடியவர், சந்திலேயே உட்கார்ந்து கொண்டு விட்டார் என்று ஒரு வரி வருகிறது. எந்தஊரில் எந்த சந்து என்றெல்லாம் விலாசம் விசாரிக்க வேண்டாம். உங்கள் தொகுதிப் பக்கத்திலேயே தேடிப் பார்த்துக் கொள்ளவும்! எனக்குத் தகவல் சொல்ல வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை!


 "ஒவ்வொரு இருட்டுக்குப் பின்னாலும் பெரு வெளிச்சம் காத்திருக்கிறது !"

இந்த ஒரு நம்பிக்கைதான், இத்தனை கூத்துக்குப் பிறகும் இந்த தேசத்துக்கு விடிவு, விடுதலை வரும் என்ற ஆறுதலைத் தந்து கொண்டிருக்கிறது!



4 comments:

  1. // தானும் ஒன்று இரண்டு எண்ணக் கற்றுக் கொள்ளலாமா என்று யோசித்தார். அப்புறம்,அதெல்லாம் பாதுஷாக்களின் கவுரவத்திற்கு ஒத்து வராதென்று அந்த எண்ணத்தையே ஓரங்கட்டி வைத்து விட்டார்.//

    பொங்கி வந்த சிரிப்பை அனுபவித்துக்கொண்டே தொடர்ந்தேன்.அந்த பழைய இரண்டு பக்க கதையை மிக நேர்த்தியாக மெருகேற்றி தந்துளீர்கள்.
    மொத்த காக்கைகள் கூட்டத்தில் பீர்பால் தன்னையும் தர்பாரில் உள்ள ஏனைய துதிபாடிகளையும்
    கக்கைகளாக சேர்த்து கணக்கு சொல்வார் என்ற ஞாபகம். சரியாக நினைவில்லை.

    படைப்புக்கு நன்றி.

    ReplyDelete
  2. வாருங்கள் மாணிக்கம்!

    பீர்பால் கதைகளை எப்போதோ படித்ததை அப்படியே வெளியிடுகிற உத்தேசத்தோடு எழுதவில்லையே!

    கொஞ்சம் இன்றைய நடப்பு நிலவரங்களோடு சேர்த்து, கதை பாதி, யோசிக்கத் தூண்டுகிறவிதம் பாதி என்றல்லவா பதிவிட்டுக் கொண்டிருக்கிறேன்!

    நேற்றைக்கு நாம் படித்த கதை எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்! இந்த வடிவம் சரியாக வந்திருக்கிறதா, இல்லையா?

    நடப்பு அரசியலைக் கொஞ்சம் நையாண்டியாகச் சொன்னவிதம் புரியும்படி இருக்கிறதா, இல்லையா?

    கொஞ்சம் உங்கள் கருத்தை விரிவாகச் சொல்லுங்களேன்!

    ReplyDelete
  3. இடமும்,காலமும், கதைகளமும் மாறினால் கூட கதைகளின் "நோக்கம்" மாறுவதில்லை. அவைகள் எக்காலத்திலும் இணைந்து செல்லும் முகமாகவே அமைந்துவிடுவதுண்டு.
    அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் சில மாற்றங்கள் உண்டாகி கதையை நடத்தி செல்லும்
    தன்மை அல்லது பாத்திரங்களின் செயல் பாடுகளில், உருவகங்களில் வேண்டுமானால் மாற்றங்கள்
    வரலாம். ஆனால் கதைகளின் அடிநாதம் மட்டும் எக்காலத்திலும் இணைந்து செல்வதுண்டு.

    அக்கால கதைகள், தெனாலி ராமன், மரியாதை ராமன், விக்ரமாதித்தன் கதைகள் மற்றும் அக்பர் பீர்பால் கதைகள் ஏன் ராமாயணம், பாரதம் அனைத்தும் அரசர்களின் ராஜிய பரிபாலன பின் புலங்களில் நடப்பதால் அவைகளை மிக எளிதாக நிகழ் கால ஓட்டத்துடன் இணைத்து பார்க்கலாம் அப்படி அவைகளை நோக்குவதே சிறப்பு. நீங்கள் மேற்கொண்ட அந்த " மெருகேற்று " வேலைகள் நன்றாக தற்போதும் பொருந்தி வருவதால் பழைய கதை தானே என்ற அலட்சியம் இல்லாமல் சுவையுடன் படிக்கச் வைக்கிறது.

    அதிலும் அக்பர் பீர்பால் கதைகள் எக்காலத்திலும் பொருந்தி வரும் போலும்! நடப்பு அரசியல் நன்றாக பொருந்தி இருப்பது தானாகவே தெரிவதால் தான் மீண்டும் சிரிக்க முடிகிறது. படித்த கதைகளை மீண்டும்
    அப்படியே திரும்ப சொல்லுவதில் என்ன சிறப்பு உள்ளது? அதில் சுவையும் இருக்காது அல்லவா?
    Satire வேண்டுமெனில் நம்ம சரக்கையும் சற்று தாராளமாகவே 'விடலாம்' என்பதே எனக்கு தெரிந்தது.
    "காலம் மாறிவிட்டது " என்று சலித்துக்கொள்வார்கள்.
    காலம் எங்கே எப்போது மாறியது? அது மாறக்கூடியதா என்ன?

    ReplyDelete
  4. /"காலம் மாறிவிட்டது " என்று சலித்துக்கொள்வார்கள்.
    காலம் எங்கே எப்போது மாறியது? அது மாறக்கூடியதா என்ன?/

    காலம் என்பது ஒரு பரிணாமம் தான்!அதைக் கடக்க முடியாதபோது ஒரு விதமாகவும், கடக்க முடிகிறபோது இன்னொரு விதமாகவும் அனுபவங்கள், ஞானமாக உருவெடுக்கிறது.

    ஆகக் காலம் என்பது கடந்து போகக் கூடிய ஒரு வாசல் என்று புரிந்துகொண்டால், காலம் என்கிற பரிமாணம் மாஏறத் தேவை இல்லை, மாற வேண்டியது நாம் தான் என்பது தெரியும்.


    ஓடும் பேருந்தில் அமர்ந்து கொண்டு பார்க்கிறபோது, சாலையின் இருமருங்கிலும் உள்ளவை ஓடுவதைப் போலத் தோன்றுகிறதே அதைப் போலத்தான்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!