பீர்பால் கதைகள்-5! ஏமாந்த சோணகிரியாகவே எப்போதும்!


டில்லி பாதுஷா அக்பருக்கு திடீரென்று ஒரு நாள் குளிக்க வேண்டும் என்ற விபரீத ஆசை வந்து விட்டது.

வாரிசுகளையும் கூட்டிக் கொண்டு, பீர்பாலுடன் யமுனை ஆற்றங்கரைக்குப் போனார். எல்லாத் துணிகளையும் அவிழ்த்துப் போட்டு விட்டு, பாதுஷா வாரிசுகளோடு ஆற்றில் ஆனந்தமாகக் குளித்துக் கொண்டிருந்தார். கரையில், பீர் பால், பாதுஷா, வாரிசு நம்பர் ஒன் வாரிசு நம்பர் டூ மூன்று பேருடைய துணிகளையும் தோளில் சுமந்து கொண்டு நின்று கொண்டிருப்பதைப் பார்த்தவுடன், பாதுஷாவுக்கு பீர்பாலை நக்கல் செய்ய வேண்டும் என்று தோன்றியது.

"
பீர்பால்! உன்னைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது தெரியுமா?" என்று மெதுவாக ஆரம்பித்தார் அக்பர்.

"
ஹூசூர்! உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை நீங்கள் சொன்னால் தானே தெரியும்? சொல்லுங்கள்!" என்று அமைதியாகப் பதில் சொன்னார் பீர்பால். அக்பருக்கு நாக்கு வரை வந்து விட்ட நக்கலை அடக்கிக் கொள்ளத் தெரியவில்லை! இப்படியெல்லாம் அறிவுஜீவித் தனமாக எல்லாம் யோசிக்கத் தெரிந்து அதற்கு அப்புறம் பேசினால் எப்படிப் பாதுஷாவாக இருக்க முடியும்?

"
வண்ணான் கழுதை பொதி சுமந்து கொண்டிருக்கிற மாதிரி, நீங்கள் துணியை சுமந்து கொண்டிருப்பது தெரிகிறது! என்ன பீர்பால், நான் சொன்னது சரிதானே!" அக்பருக்கு பீர்பாலை நக்கலாகப் பேசி விட்ட சந்தோஷம், ஹோவென்று இரைந்து சிரித்தார்! வாரிசுகளுக்கும் ஏக சந்தோஷம்! பாதுஷா எப்படியெல்லாம் பேசுகிறார்! இதற்காகவே எவரை விட்டாவது ஒரு பாராட்டு விழா எடுத்து விடலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.

பீர்பால் பொறுமையாகப் பதில் சொன்னார்: "ஹூசூர்! முழு உண்மை! ஆனால் ஒரு சின்னத் திருத்தம்!நீங்கள் சொன்னது போல நான் சுமந்து கொண்டிருப்பது ஒரு கழுதைப் பொதி சுமை அல்ல! மூன்று கழுதைகளின் சுமையை சுமந்து கொண்டு நிற்கிறேன்!"

பாதுஷாவுக்கும், வாரிசுகளுக்கும் முகத்தில் ஈயாடவில்லை! பீர்பாலைக் கழுதையாகப் பரிகாசம் செய்யப் போய்த் தாங்களே கழுதையான சோகம், பீர்பாலுக்கு சரியான பதில் பாடம் சொல்ல முடியாத சோகத்தை யமுனையில், இன்னொரு முழுக்குப் போட்டாலாவது தீர்த்துக் கொள்ள முடியுமா என்று மறுபடி முழுக்குப் போட ஆரம்பித்தார்கள்.

இந்தக் கதையைக் கொஞ்சம் சுய கழிவிரக்கத்துடனேயே சொல்லித் தேற்றிக் கொண்டாக வேண்டியிருக்கிறது! எப்படி என்கிறீர்களா?

ஐந்து வருடங்களுக்கு முன்னால், வீடியோகானில் விற்பனை மேலாளராக இருந்த நண்பர் ஒருவர் அறிமுகத்துடன், மதுரை டவுன் ஹால் ரோடில் உள்ள வீனஸ் எலக்ட்ரானிக்ஸ் கடையில் சான்சுயி டிவி வாங்க முடிவு செய்தேன். வெவ்வேறு கம்பனி மாடல்களைப் பார்த்தபோதிலும் கூட அந்த நேரத்துப் புது வரவாக வந்திருந்த 29 இன்ச் திரை டீவீ  PJ29 MULTIPLEX மாடலைப் பார்த்து, அதன் சவுண்ட் எபெக்டில் மயங்கி வாங்கினேன். பிக்சர் ட்யூபிற்கு ஏழு வருட உத்தரவாதம் என்பது அந்த நேரத்தில் கொஞ்சம் வித்தியாசமாகத் தெரியவே, இந்த டீவீ மாடலை வாங்குவதற்கு அதுவும் ஒரு காரணமாகிப் போனது.  

வீட்டுக்கு டெலிவரி கொடுக்க வந்தபோது தான், இந்த டீவீயில் உள்ள மிகப் பெரிய குறை தெரிய வந்தது. பத்துக் கழுதை சுமை எடை கொண்ட இந்த டீவீ செட்டைத் தூக்கி வைக்கக் கைலாகுவான வழி வகை எதுவுமே இல்லை! நான்கு பேர் சேர்ந்து ஒரு மாதிரியாக அதன் ஸ்டாண்டில் வைத்துவிட்டார்கள். இதை நகர்த்துவதென்றாலோ, செர்வீஸ் செய்வதென்றாலோ அந்த நாலுபேருக்கு நன்றி பாட்டுப் பாடித் தான் செய்ய முடியும் என்ற சிந்தனை அப்போதே வந்தாலும், அதுவரை இருபது இன்ச் திரையில் பார்த்த கண்றாவிகளை இன்னும் பெரிய திரையில் பார்க்க முடிந்த, சவுண்ட் எபெக்ட் தூள், கிளப்பிய த்ரில்லான அனுபவத்தில் மறந்தே போனது.

பத்துப் பன்னிரண்டு நாட்களுக்கு முன்னால் டீவீயில் படம் கொஞ்சம் மக்கர் செய்து கொண்டே வந்தது. ரெயின்போ எபெக்ட் மாதிரி ஒரு கூம்பு வடிவத்தில், திரையில் படம் வெற்றிகள் ஹோல்ட் இல்லாமல் அலையலையாக வருகிற தலைவலி வந்தது. வீனஸ் எலெக்ட்ரானிக்சுக்குத் தகவல் சொல்லி செர்விஸ் செய்வதை அவர்கள் பொறுப்பில் எடுத்து செய்ய முடியுமா என்று கேட்டதில், அது எப்படி சார் நாங்கள் ரிஸ்க் எடுப்பது என்ற ஒரு கேள்வியுடன், அங்கீகரிக்கப் பட்ட செர்வீஸ் செண்டர் என்று ஒரு நம்பரைத் தந்தார்கள்

க்வாலிடி என்ஜினீயரிங் செர்விஸ் என்ற பெயரில் மதுரை ஷெனாய் நகரில் இருந்து ஒரு செர்விஸ் ஆசாமி வந்து பார்த்தார். இரண்டு சர்க்யூட் போர்டுகளை எடுத்துக் கொண்டு செண்டருக்குப் போய் சரி செய்து எடுத்து வருவதாகச் சொல்லி விட்டு எடுத்துக் கொண்டு போனார். மறுநாளே தொலைபேசியில் அழைத்து, போர்டை செர்விஸ் செய்த வகையில் ஆயிரத்து அறுநூற்றைம்பது ரூபாய் ஆகும் என்று தகவல் சொன்னார்.

சரி, கொண்டு வந்து மாட்டிக் கொடுத்து விட்டு செக் வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன். நாங்கள் செக் எல்லாம் வாங்கிக் கொள்வதே இல்லை, எல்லாம் ரொக்கம் தான் என்றார்கள். வாரண்டி காலத்துக்குள் செர்விசுக்கு அனுப்பியதற்கு எனக்கு ரெகார்ட் வேண்டும், அதனால் செர்வீஸ் செண்டர் பேரில் செக் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்ன பொது, கொஞ்சம் இறங்கி வந்து ஜே சத்தியன் என்ற பெயரில் செக் வாங்கிக் கொள்ள சம்மதம் சொன்னார்கள். நிறுவனத்தின் பெயரில் தான் செக் என்று நான் கொஞ்சம் பிடிவாதமாக இருக்கவே, மறுமுனையில் செர்விஸ் பெர்சனிடம், போய் பிரீயாகவே மாட்டிக் கொடுத்துவிட்டு வா  என்று இரையும் சத்தத்தோடு அந்த சம்பாஷணை முடிந்தது.
மாலை அந்த செர்விஸ் நபரும், சத்தியனுமே நேரில் வந்தார்கள். பிச்சர் ட்யூபைப் பார்த்து விட்டு, ட்யூப் தான் அடி வாங்கி இருக்கிறது, செர்விஸ் சென்டருக்கு செட்டை எடுத்துக் கொண்டு வந்து (செட் பத்துக் கழுதை அல்லது அதற்கும் கூடவே கனமான சுமை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! ) அங்கே வந்து பேசுங்கள் என்று சொல்லவும், இது ஆகிற கதையாக இல்லையே என்று சந்தேகப் பட ஆரம்பித்தேன்.
என்னுடைய நண்பருக்கு தொலைபேசியில் விஷயத்தை சொன்னேன். வீடியோகான் நிறுவனத்தை விட்டு எளியே வந்து விட்டாலும் அவர் தற்போது பணிபுரிபவர்களோடு நல்ல தொடர்பில் இருப்பதால், அவர்களிடம் பேசி விட்டு இப்போதெல்லாம் எந்த கம்பனியும் நேரடியாக செர்விஸ் செண்டர், அல்லது செர்விஸ் என்ஜினீயர்களை வைத்துப் பார்ப்பது இல்லை, இது போல ஒரு தனி நபர்கள் அல்லது நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு கையைக் கழுவி விடுகிறார்கள். க்வாலிடி என்ஜினீயரிங் செர்விஸ் என்று மதுரை ஷெனாய் நகர், வைத்தியநாத ஐயர் தெருவில் இருப்பது கம்பனியால் அங்கீகரிக்கப் பட்ட செண்டர் தான் என்றும் தகவல் சொன்னார். செட்டை சரி செய்வதற்கு அங்கே அனுப்புங்கள், பார்த்துக் கொள்கிறேன் என்றும் சொன்னார்.
ஆறு  நாட்களுக்கு முன்னாள் அந்த செர்விஸ் சென்டரில் இருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது. இப்போது ரேட் ரூ.2500/- ஆகிவிட்டது! ஏற்கெனெவே சொன்னதும் இப்போது சொல்வதும் வித்தியாசமாக இருக்கிறதே என்று கேட்டதற்கு, உங்கள் வீட்டில் இருந்து வண்டி வைத்து எடுத்துப் போய் செர்விஸ் செய்து திரும்பக் கொண்டு வைக்கிற வாடகை ஐநூறு ரூபாய் சேர்த்து என்று சொன்னார். முதலில் பேசிய ஆயிரத்து அறுநூற்றைம்பதும் ஐநூறும் கூட்டினால் எவ்வளவு வரும், வாய்ப்பாடு தப்பாக இருக்கிறதே என்று சொன்னதும் அந்தப் பக்கம் வாடி மாப்பிளே செர்விசுக்கு மட்டும்  செட் வரட்டும் வச்சுக்கறோம் என்று கறுவிக் கொண்டது அந்த நேரத்தில் எனக்குத் தெரியவில்லை.
மறுநாள் ராஜா என்கிற செர்விஸ் பெர்சன், ஆரம்பத்தில் இருந்தே இந்த நபர் தான் இங்கே வந்துபோய்க் கொண்டிருந்தவர், வந்து செட்டை ஒரு  ட்ரை சைக்கிள் வண்டியைப் பிடித்து  எடுத்துக் கொண்டு போனார். நான்கு  நாட்களுக்கு முன்னால் காலையில் வீட்டுக்கு வந்து செட் ரெடியாகி விட்டது, அட்வான்ஸ் எதுவும் தருகிறீர்களா என்று கேட்டார். பேசியபடி செட்டைக் கொண்டு வந்து வைத்து விட்டு சரியாக வேலை செய்கிறது என்பதைக் காண்பித்து பில் தொகை மொத்தத்தையும் வாங்கிக் கொண்டு போகும்படி சொன்னேன். சரியென்று தலையாட்டிவிட்டுப் போனவர் தான், அப்புறம் ஆளைக் காணவில்லை! நேற்று முதல் நாள் தொலைபேசியில் அழைத்துப் பேசியபோது தான் மேலூரில் இருப்பதாகவும், பணத்தை சென்டருக்குக் கொண்டுவந்து கொடுத்து விட்டு செட்டை எடுத்துக் கொண்டு போகும் படி கம்பனியில் சொல்வதாகச் சொன்னார்.
இந்த நிமிடம் வரை டிவி செட் வீடு வந்து சேரவில்லை, செர்விஸ் சென்டரில் இருந்து எந்தத் தகவலும் இல்லை. செட்டை எடுத்துப் போனதற்கு முறையான ரசீது எதுவும் இல்லை. கம்பனி விசிடிங் கார்ட் பின்புறம் மாடல் விவரம், எடுத்துப் போன செர்விஸ் பெர்சன் ராஜா செல் நம்பர் 97881 56285  என்பதைத் தவிர வேறு விவரம் எதுவும் இல்லை. விசாரித்தால், இது வாடிக்கையாக நடப்பது தான் என்று சொல்கிறார்கள்.
சர்க்யூட் போர்டில் இரண்டு ஐசிக்களை மாற்றி இருப்பதாக மட்டும் தெரிகிறது. வேறோர் இடத்தில் விசாரித்தபோது சாதாரணமாக நூறு முதல் நூற்றைம்பது ரூபாய் வரையே அதற்கு விலை இருக்கும் என்ற தகவலும் கிடைத்தது. அங்கீகரிக்கப்பட்ட செர்விஸ் சென்டரில், இப்படி ஒரு பகல் கொள்ளை! கம்பனி அங்கீகரித்த  செர்விஸ் சென்டரிலேயே செர்வீஸ் செய்து கொள்வது கூட செல்லூர் மீட்டர் ரன் வட்டிக் காரர்கள் நடத்துகிற கட்டைப் பஞ்சாயத்து மாதிரியே ஆகிப் போனது, மதுரையில் ஏற்பட்டிருக்கிற தொழில் வளர்ச்சியாகப் பார்க்கும்போது பகீரென்கிறது.
சான்சுயி நிறுவனத்தின் வலைப்பக்கங்களுக்குப் போனால், கஸ்டமர் கேர் பகுதியைக் க்ளிக் செய்தவுடனேயே இந்தப் பக்கத்துக்குப் போகிறது. அதோடு சரி! வேறு எந்தவிதமான உதவியோ, தொடர்போ, புகாரை ஏற்றுக் கொள்கிற வசதியோ இல்லாமல் பிளான்க் பேஜாக நின்றுவிடுகிறது. இந்த லட்சணத்துக்குப் பெயர் செர்வீஸ் டிலைட் டாட் காம்! இது தான் சான்சுயி, இந்தியாவில் அதன் வணிகத்தைக் கவனித்து வரும் வீடியோகான்  நிறுவனம் வாடிக்கையாளர் சேவையை மேற்கொள்கிற லட்சணம்!  
வீடியோகான் வலைத்தளத்துக்குப் போய்ப்பார்த்தாலும் கஸ்டமர் கேர், புகாரைப் பதிவு செய்யுமிடம் என்று பார்த்தால் இதே செர்வீஸ் டிலைட் டாட் காம் தான்! அதே வெற்றுப் பக்கம், வெட்டி வேலை தான்! வீடியோகான் வலைப்பக்கத்தில் போனால் போகிறதென்று ஒரு மின்னஞ்சல் விலாசம் இருப்பதை இப்போது தான் தேடிக் கண்டுபிடித்தேன்.
சில நாட்களுக்கு முன்னால் பிராண்ட் என்றால் என்ன, பிராண்ட் இமேஜ் இப்படி சிலவிஷயங்களை இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம். இடது பக்கம் இருக்கும் கூகிள் தேடும் வசதியில் தமிழில் பிராண்ட் என்று கொடுத்துப் பாருங்கள், ஒரு ஐந்து பதிவாவது இந்த விஷயம் குறித்து இருக்கும்.
ஓடுகிற வரை ஒன்றுமில்லை! குதிரை படுத்துக் கொள்ளும் போது தான், குழியையும் சேர்த்தே தோண்டுகிற கதையாக ஆகிப் போனது! இந்தியச் சூழ்நிலையில் பிராண்ட், செர்வீஸ் உத்தரவாதம், தரம் எல்லாம் வெறும் பேச்சு, நடைமுறையில் ஒரு புண்ணாக்குமில்லை என்பதைத் தெரிந்து கொள்ள என்னுடைய டீவீயே ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

பயன் படுத்துபவர் பார்வையில் இருந்து ப்ராண்ட் என்பது, தன்னை நாணயமான முறையில் அறிமுகப் படுத்திக் கொள்வது என்பதில்  ஆரம்பித்து-------

இன்றைய நிலையில், ப்ராண்ட் என்பது, ஒரு பொருளின், அதன் தயாரிப்பாளரின், ஒரு ஸ்தாபனத்தின், அப்புறம் அதைப் பயன்படுத்துகிறவரின் அடிப்படைப் பண்பு எத்தகையது என்பதன் அளவீடாக இருக்கிறது. எங்கே இருந்தோம், எங்கே போகிறோம் என்பதன் வெளிப்பாடாகவும் மாறி வருகிறது.

ப்ராண்ட் என்பது ஏமாந்தவன் தொடையில் கயிறு திரிக்கிற விஷயமல்ல!
 
ப்ராண்ட் என்பது தரத்தின் வெளிப்பாடு! தொடர்ந்து உறுதிப் படுத்தும் அடையாளம்!
 
ப்ராண்ட் என்பது, தவறான சித்திரத்தையோ, பொய்யான வாக்குறுதியையோ அளிப்பதுமல்ல.
 
ப்ராண்ட் என்பது, பயன்படுத்துபவருடைய  நம்பிக்கை! அதைக் காப்பாற்றும் தயாரிப்பாளரின் உத்தரவாதம்!
 
ப்ராண்ட் என்பது நேற்றைய காலத்தின் அடையாளமாக நின்று விடுவது அல்ல! நாளை வரும் நாட்களிலும் நிலைத்து நிற்பது!

இப்படி எழுதியிருந்ததைத்  திரும்பப் படித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது, இங்கே நடைமுறையில் பிராண்ட்,  பிராண்ட் இமேஜில் இருக்கும் உத்தரவாதம் என்பதெல்லாம் இந்தியச் சூழ்நிலையில் எவ்வளவு தரம் திரிந்து, பயன்படுத்துபவர்களை ஏமாளிகளாகவும்,மோசடி செய்வதாகவுமே இருக்கின்றன என்பதையும் சேர்த்துப் பார்க்கிற அனுபவம் ஒன்றை நுகர்வோர் விழிப்புணர்வு கருதி இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது.

பிரிடிஷ்காரர்களிடமிருந்து அரசியலைக்  காப்பியடித்து, அதை எவ்வளவு கேவலமாகச் சீரழிக்க முடியும் என்பதைக் காங்கிரஸ் தலைமையில் இங்கே ஐக்கியமாகக் கூட்டணி அமைத்து அனேகமாக எல்லா அரசியல் கட்சிகளுமே செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு இணையாக, தொழில் நடத்திப் புதுமையை அறிமுகம் செய்து வணிகம் பெருக்கி சம்பாதிப்பதை விட இங்கே அரசியல்வாதிகளோடு ஊழல் கூட்டணி அமைத்து சம்பாதிப்பதில் தான் இந்தியத் தொழில் அதிபர்களின் அசாத்தியத் திறமை வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசின் தயவு, பரிபூரணமான கடாட்சம் இருந்த தெனாவட்டில் அம்பாசடர் கார் தயாரிப்பு நிறுவனம் தொழில் போட்டியை சமாளிக்கக் கையாண்ட கதையை ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்.

திருவிளையாடல் படத்தில் சேர்ந்தே இருப்பது எது என்ற நக்கீரன் கேள்விக்குப் பதிலாக புலமையும் வறுமையும் என்று வருகிறமாதிரி சேர்ந்தே இருப்பது தொழிலதிபர்களின் புரட்டும், அரசியல்வாதிகளின் கூட்டும் என்பதாகத் தான் இந்தியத் தொழில் துறை காசநோயால் பீடிக்கப் பட்டது மாதிரி இருக்கிறது.

போதாக்குறைக்கு அமெரிக்க மாடல் மார்கெடிங், செர்விஸ் உத்திகளைக் காப்பியடித்து நம்மூர் ஆசாமிகள் என்னென்ன செய்வார்கள் என்பதற்கு இந்த ஒரு சம்பவம் மட்டுமில்லை, இன்னும் நிறைய வாடிக்கையாளர் சேவைக் குறைபாடுகளைப் பற்றி, செர்விஸ் செய்கிறேனென்று எப்படியெல்லாம் வாடிக்கையாளர்களை இளிச்சவாயர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்ல முடியும்.

ஆளைப் பார்த்து மயங்காதே, ஊதுகாமாலை! என்று ஒரு சொலவடையைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதே மாதிரித் தான் பிராண்ட், பிராண்ட் இமேஜ் என்று இந்தியச் சூழ்நிலையில் மயங்காதே! ஏமாறாதே என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

தற்போதைய நிலவரம்..அப்டேட் @ 1730 hrs   IST 15/05/2010

நேற்று நள்ளிரவு தாண்டி இந்தப் பதிவை வலையேற்றம் செய்த பிறகு  இணையத்தில் கிடைத்த வீடியோகான் கஸ்டமர் கேர்  மின்னஞ்சல் முகவரிக்கும் ஒரு சிறு தகவலை அனுப்பிவிட்டு அதன் நகலை, என்னுடைய நண்பருக்கு அனுப்பினேன். இன்று காலை அதைப் பார்த்து விட்டு அவர், வீனஸ் எலெக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் திரு கதிரேசனுக்கு தகவல் அனுப்பியதோடு, வீடியோகானில் பணிபுரியும் தனது நண்பர்களுக்கும் எனது மின்னஞ்சலை அனுப்பியிருக்கிறார்.

அதற்குப் பிறகு நடந்தவை கொஞ்சம் அதிரடி தான்! எனக்கு முழுவிவரமும் சொல்லப்படவில்லை.

பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக் கொள்ளும்படி க்வாலிடி என்ஜினீயரிங் செர்விசஸ் ஆசாமிகளுக்குக் கொஞ்சம் "அழுத்தமாகவே" ஆலோசனை சொல்லப் பட்டு, இன்றைக்கு  மாலை ஐந்தரை மணிக்கு டிவி வீட்டில் டெலிவரி செய்யப் பட்டு விட்டது. அதற்கு முன்னால், நாலைந்து தொலைபேசி அழைப்புக்கள், இதை இவ்வளவு பெரிதாக எடுத்துக் கொண்டு போயிருக்க வேண்டாம், இனிமேல் எதுவானாலும் எங்களிடமே சொல்லுங்கள் செய்து தருகிறோம் என்ற மாதிரித் தன்மையாகப் பேசி....!

ஒரு நெருக்கடியான நிலையில் உதவிய நண்பர் திரு எம் எஸ் முரளீதரன், வீடியோகான் க்ரூப் ஹெட் திரு கோவிந்தராஜன், மற்றும் அவரது குழுவினர், வீனஸ் எலெக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் திரு கதிரேசன் ஆகியோருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.



 

18 comments:

  1. கன்ஸ்யுமர் கோர்ட் போகிறேன் என்று பயமுறுத்திப் பார்ப்பதுதானே...

    ReplyDelete
  2. மதுரை சண்டியர்களுக்கு அதெல்லாம் புரியாது! மதுரையில் தொழில் வளர்ச்சி, வாடிக்கையாளர் சேவை எப்படிப் பட்டதாக இருக்கிறது என்பதன் ஒரு சாம்பிள் இது. இது தவிர யுரேகா போர்பஸ் வாக்குவம் கிளீனர்கள், விர்பூல் தயாரிப்புக்களின் செர்விஸ் தரம், செர்விஸ் சார்ஜ் என்று அடிக்கும் பகல் கொள்ளை என்று இது தொடர்ச்சியாகப் பேச நிறைய இருக்கிறது!

    வீடியோகான் நிறுவனத்துடன் தொடர்புகொண்டு சரி செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

    அதே நேரம், இங்கே தொழில் நடத்துவது என்பது எப்படிப் பட்டதாக இருக்கிறது என்பதையும் சொல்ல வேண்டுமே! அதற்காகத் தான் இந்தப் பதிவு!

    ReplyDelete
  3. பரவாயில்லையே.. உங்களுக்கு இவர்கள் சிரமம் சற்று குறைவாகத்தான் கொடுத்தார்கள். (!!!). இதெல்லாம் சர்வ சகஜம்தான். சமீபத்தில் எங்கள் டி.வி.யில் ஏதோ ஹொர் என சப்தம் கேட்டஃவுடன் சர்விஸ்காரன் வந்தான், இரண்டே நிமிஷம், ஏதோ ஸ்பேர் பார்ட் மாத்தினான்.. 1100 ரூ சார்ஜ் பண்ணினான். வாங்கிக் கொண்டு போய்க் கொண்டே இருந்தான்,

    அது சரி, இந்த டி.விக்களின் கதியே இப்படி என்றால் இந்த இலவச தொல்லைக்காட்சி பெட்டிகள் என்ன கதியோ.. கருணேஸ்வரா!

    ReplyDelete
  4. திவாகர் சார்!

    பிரச்சினை இன்னும் முடியவில்லை,இப்போதுதான் ஆரம்பமாகி இருக்கிறது!

    டிவி என்று மட்டுமில்லை, இங்கே அனேகமாக எல்லாத் தயாரிப்புக்களுக்கும் கம்பனியின் நேரடி சர்வீஸ் கிடையாது, எல்லாம் அவுட்சோர்சிங் தான்!

    வெளிநாட்டுக்கு என்றால் அடிமாட்டு ரேட்டுக்கு ஒத்துக் கொள்கிறவர்கள், உள்ளூரில் பகல்கொள்ளை அடிப்பது ஒரு பக்கம்! பிராண்ட், பிராண்ட் வால்யூ என்று இன்றைக்கு தியரி லெவலில் மட்டும் பார்த்துக் கொண்டிருப்பது இந்தியச் சூழலில் எவ்வளவு திரிந்து தனம் கேட்டுப் போயிருக்கிறது என்பது இன்னொரு பக்கம்!

    எல்லாவற்றிற்கும் மேலாக, ஊழல் செய்வதில் பிரிட்டிஷ் நிர்வாக, அரசியல் முறையில் இருந்து கற்றுக் கொண்டு நடக்கும் கூத்து ஒரு புறம்!

    அமெரிக்க மாடலில் இருந்து எதை எதையெல்லாம் கற்றுக்கொண்டு சீரழிக்கப் போகிறார்களோ என்ற ஆதங்கம் ஒரு பக்கம்!

    எதற்கும் அந்த அம்பாசடர் கார் பற்றிய பதிவில் சொல்லியிருப்பதை ஒரு முறை பார்த்து விடுங்களேன்!

    ReplyDelete
  5. அப்புறம் இந்த இலவசங்களின் கதி....!

    பழைய ஈயம் பித்தாளைக்குப் பேரீச்சம் பழம் என்கிற மாதிரி, பெரும்பாலான இலவசங்கள், எண்ணூறுக்கும் தொள்ளாயிரத்துக்கும் கைமாறிக் கொண்டிருக்கின்றன!

    மாதம் குறைந்தது நூறு முதல் நூற்றறுபதுரூபாயாவது அவர்கள் குடும்ப கேபிள் நிறுவனங்களுக்கு சம்பாதித்து தருவதற்காக, மானாட, மயிலாட, அதில் நமீதா முதல் மார்கெட் இழந்த அத்தனை நடிகைகளையும் உட்கார்த்தி வைத்து ஷோ காட்டி சம்பாத்தியம் தரும் ஊற்றுக் கண்ணாக இருக்கிறது!

    ReplyDelete
  6. நான் வாங்கிய விடியோகான் டூ இன் ஒன் டபிள் காஸ்செட் ரிகார்டரின் கதியும் சற்றேறக் குறைய இதுவேதான் ஆனது. செட்டின் மீது டோஷிபா என்று போட்டிருக்கிறது. முதலில் ஒரு சுவிட்ச் அவுட் ஆனது. நாயாய் பேயாய் அலைந்து திரிந்து சரி செய்தேன். பிறகு வால்யூம் கண்ட்ரோல்அவுட்டாகிவிட்டது. மீண்டும் நாய் + பேய் ஆகவேண்டாம் என்று அதை ஓரம்கட்டி வைத்துவிட்டேன்.

    ReplyDelete
  7. you are faced less torture from that company.

    we faced lot & FED UP

    in nokia / univercell / sowbakya grinder / eurekaforbs - we faced worst experience.

    why nokia market came down - this is one of reason.

    we should accept - we should not beleive brand images.

    ReplyDelete
  8. கௌதமன் சார்!

    இணையத்தில் தேடும்போது சான்சுயி, வீடியோகான் நிறுவனங்களின் செர்விஸ் குறைபாடுகளைக் குறித்து நிறைய குமுறல்களைப் பார்க்க முடிந்தது.

    இங்கே பிரச்சினை, செட்டில் உள்ள குறைபாட்டை சரி செய்வது மட்டுமே அல்ல. அவுட்சோர்சிங் முறையில் ஒவ்வொரு நிறுவனமும், சரிசெய்து கொடுக்கும் பொறுப்பை தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு விட்டு விடும்போது, தங்களுடைய தயாரிப்பை விற்பனை செய்வதோடு தங்கள் பொறுப்பு முடிந்து விட்டதாகக் கைகழுவி விடும் மனோபாவம் ஒருபுறம்.

    இப்படி அங்கீகரிக்கப் பட்ட செர்வீஸ் செண்டர் என்று நடத்துபவர்கள், தாங்கள் ஏதோ பாளையக்காரன், சுல்தானாகிவிட்டது போல, நடந்து கொள்ளும் மனோபாவம். கட்டணம் வசூலிப்பதில் அப்பட்டமான கொள்ளை, முறையற்ற சேவை, உதிரி பாகங்களில் திருட்டு என்று போய்க் கொண்டே இருக்கிறது.

    இந்த டிவி செட்டைப் பொறுத்தவரை, வாரண்டி காலம் இன்னும் முடியடையவில்லை. அதன் படி பிக்சர் ட்யூபை கட்டணம் இல்லாமலேயே மாற்றித் தந்தாக வேண்டும். ஸ்பேர் ஏதாவது மாற்ற வேண்டி வந்தால் அதற்கு மட்டும் தான் காசு தர வேண்டும். அதைத் தான் என்ன விவரம் என்று கேட்டதில்தான் பிரச்சினையே ஆரம்பித்தது!

    அவர்களை எவரும் எதுவும் கேட்டு விட முடியாது என்ற ஆளும் கட்சி மனோபாவம் இருக்கிறது பாருங்கள், அந்தத் திமிரைத் தான் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  9. வாருங்கள் பாலு சார்!

    சிறுமை கண்டு பொங்குவாய் என்றான் பாரதி!

    அதைச் செய்யத் தவறிக் கொண்டிருப்பதாலேயே, எல்லாவகையிலும் சிறுமைப் பட்டுப் போய்க் கிடக்கிறோம் என்பதை நினைவுபடுத்துவதற்காகவும், இந்தச் சிறுமையிலிருந்து விடுபடவேண்டும் என்பதற்காகவும் தான் இந்தப் பகிர்வு!

    இப்படி ஏய்த்துக் கொண்டிருப்பவரைச் சும்மா விட்டு விட்டால் எப்படி?

    ReplyDelete
  10. Sir, I agree with what you have said.That is, the highhandedness of the service center people.

    ReplyDelete
  11. இதனால் நாம் அறிந்து கொள்வது: கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து வாங்குவதே மெய்

    ReplyDelete
  12. இதுக்கெல்லாம் ஒரு வழி இருக்கே, பொண்டாட்டி செத்தா பது மாப்பிள்ளைன்னு பழமொழி கேட்டதில்லையா, அது இந்த எலக்ட்ரானிக் சாமான்களுக்கும் பொருந்தும், ரிப்பேரா, தூக்கி எறிந்து விட்டு புதிதாக ஒன்று வாங்கிவிடவேண்டியதுதான். அமெரிக்காவில் அப்படித்தான் பண்ணுகிறார்களாம், நம் நாடும் அதே மாதிரி முன்னேற வேண்டாமா?

    ReplyDelete
  13. மனோகரன் சார்! முதல் வருகைக்கு நன்றி!

    என்ன தான் தீர விசாரித்தாலும் பொய், பொய்யைத் தவிர வேறோன்றுமில்லாத விளம்பர, வணிக உத்திகளில் எப்படிப் பார்த்தாலும் வாடிக்கையாளர் ஏமாளிதான்!

    ஜனங்களுடைய அறியாமையை மூலதனமாகவே வைத்து இங்கே அரசியல் மட்டுமல்ல, தொழில்களும் நடந்து கொண்டிருப்பதைத் தான் கொஞ்சம் விசனத்தோடு இந்தப் பதிவில் சொன்னேன்!

    ReplyDelete
  14. முனைவர் கந்தசாமி ஐயா!

    இப்படியாவது அமெரிக்காவுக்குச் சரி சமமாக ஆகிவிடலாமென்று நினைக்கிறீர்களோ?

    அமெரிக்காவில், இங்கே இந்த செர்வீஸ் சென்டரில் நடந்து கொண்ட மாதிரி நடந்துகொண்டால், வேலை, தொழில் இரண்டையும் பறிகொடுப்பதொடு ஆயிரக்கணக்கான டாலர்கள்நஷ்ட ஈடாகவும் அழ வேண்டி வந்திருக்கும்.

    இங்கேயும் அந்தமாதிரி வெளிப்படையான தன்மை வரும்போது, அங்கே உள்ளமாதிரி வசதிவாய்ப்புக்கள் பெருகும்போது, நிச்சயமாக அங்கே இருக்கிறமாதிரி யூஸ் அண்ட் த்ரோ தன்மைக்குத் தயாராகிக் கொள்வோம்!

    அதற்கு முன்னாலேயே தயாராக வேண்டுமென்றால் எப்படி....!?

    ReplyDelete
  15. இந்தியாவில் ஆழம் தெரியாமல் கால் விட்டு விட்டு தவிக்கும் பன்னாட்டு கம்பெனிகளின் நிலைமை எல்லாமே இப்படித்தான்.

    பழைய கம்பெனியே ஆனாலும் இத்தாலியின் Fiat, டாடா மோட்டார்ஸ்ஸுடன் சர்வீஸ் உடன்பாடு இல்லாமல் பிழைக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டது.

    ’அவசரத்தில் அள்ளித் தெளித்ததே கோலம்’ என்று நம்மூர் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூடிவ்ஸ் கணக்கு காண்பிப்பதற்காக சர்வீஸ் ஏஜெண்டுகளை நியமித்துவிட்டு தங்கள் வெளிநாட்டு முதலாளிகளை திருப்தி செய்ய முற்படுவதால் வரும் தரக்குறைவே இதன் மூல காரணம்.

    பன்னாட்டு கம்பெனிகளின் நல்லெண்ணத்தைக் குற்றம் காண்பதை விட நம்மவர்களின் நம்பிக்கை குலைக்கும் நடத்தையே நமது நிராசைக்கு காரணமாகிறது.

    ReplyDelete
  16. வாருங்கள் உமேஷ் சார்!

    பன்னாட்டுக் கம்பனிகளின் நல்ல எண்ணம் ....?

    எந்த ஒரு வணிக நிறுவனமும் லாபம் ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. வாடிக்கையாளருடைய திருப்தி என்பது முக்கியம் என்பது சமீப காலத்தில்தான், அதுவும் சந்தையில் போட்டி அதிகரித்த பிறகுதான் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உறைத்தன. ஆகச் சிறந்த உதாரணமாக, மருந்துக் கம்பனிகளின் நடத்தையை வைத்தே பன்னாட்டுக் கம்பனிகளின் நல்ல என்னத்தை அளந்து விட முடியும்!

    சந்தை நிர்வாகிகள், சர்வீஸ் நிர்வாகத்தைத் தீர்மானிப்பது இல்லை! செலவினங்களைக் குறைக்கிற சாக்கில், கம்பனிகள் எடுக்கும் தவறான முடிவுகளில், சர்வீஸ் அம்சமும் ஒன்று.

    1980 களில் மோடோரோலா சிறந்த செல் போன் தயாரிப்பாக இருந்தது. வாடிக்கையாளர் என்ன சொல்கிறார் என்பதைக் காது கொடுத்துக் கேட்பதில்லை என்ற நிலையில் வாடிக்கையாளர் அதிருப்தி அதிகமாக இருந்தது. கொஞ்சம் சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொண்டதில், தயாரிப்பு நிலையிலேயே சில தரக் கட்டுப்பாடுகளை மேற்கொண்டால், வாடிக்கையாளர்களுடைய பெரும்பாலான குறைகளை ஆரம்ப நிலையிலேயே களைந்து விடமுடியும் என்பதைக் கவனித்த பிறகுதான் சிக்ஸ் சிக்மா என்ற கோட்பாடு அங்கே நடைமுறைப் படுத்தப் பட்டது. நடைமுரைப்படுத்தியபிறகு, பலநூறு கோடி டாலர்களாக நிகர லாபம் அதிகரித்தது; வாடிக்கையாளரிடம் இருந்து எழுந்த புகார்கள் கணிசமாகக் குறைந்தது. சர்வீஸ் செய்வதில் எரிச்சல், விரையம் இல்லாத நிலை! ஆனால் இந்த முன்னேற்றத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது மிகப்பெரிய காரியம்.

    காலப் போக்கில் தரத்தை உறுதி செய்வதில் காட்டிய அக்கறை படிப்படியாகக் குறைந்து கொண்டே போனதில் மோடோரோலா தனது சந்தையை தொடர்ந்து இழந்து வருகிற நிலை இன்றைக்கு!

    டொயோடா உற்பத்தி முறையில் தரத்தை உத்தரவாதப்படுத்துவதென்பது உற்பத்தியின் ஒவ்வொரு நிலையிலும் கட்டாயமான அம்சமாக இருந்தது.தொழில் விரிவடைந்துகொண்டே போன நிலையில், உற்பத்தி எண்ணிக்கையைக் கூட்டி கான்பிஒத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில், சமீப காலத்தில் அந்த நடைமுறையில் ஏற்பட்ட தொய்வு, எவ்வளவு பெரிய சேதத்தை உண்டுபண்ணியது என்பதைத் தெரிந்து வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    பியட் கம்பனியின் கதை வேறு!டாடா மொடார்சுடன் சர்வேஸ் உடன்பாடு இல்லாதது ஒரு பெரிய காரணமே இல்லை! இங்கே தெற்கில் TVS சர்வீஸ் பார்ட்னராக, விற்பனையாளராக இருந்ததே, அப்புறம் ஏன் அதை விரிவுபடுத்திக் கொள்ள முடியவில்லை?

    ReplyDelete
  17. SIR EN VEETTU PANASONIC TV LA TUNER CARD, ICU REPAIR TV MECHANIC SONNAN
    SARI MATHI KUDU SONNA BILLA PATHA 2750. KAN MUNNADI PAGAL KOLLAI ADIKURANGA

    ReplyDelete
  18. பாவா ஷெரீப்!

    கருவாச்சி காவியம் படைப்பதற்கு நாம என்ன வைர முத்தா என்ற உங்களுடைய ப்ரொபைலில் இருக்கும் கேள்வி நன்றாக இருக்கிறது! வைர முத்து மாதிரித் திரிந்து போகாமல் இருப்பதற்கு முதலில் சந்தோஷப்படுங்கள்!இரண்டுபதிவுகள்! போன வருடத்திற்குப் பிறகு எழுதுவதை மறந்துவிட்டீர்கள் போல!

    இந்தப் பதிவில், உதிரிப் பாகங்களை இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்றோ, சரி செய்துகொடுப்பவரும் தன்னுடைய சேவையை இலவசமாக வழங்க வேண்டுமென்றோ நான் எங்கும் சொல்லவில்லை. ஒரு பிராண்ட் என்பது தயாரிப்பவருடைய தரத்தின் உத்தரவாதம். ஒரு குறிப்பிட்ட காலம் வரை, தங்களுடைய தயாரிப்பில் கோளாறு ஏற்பட்டால், அதைத் தங்கள் பொறுப்பிலேயே சரி செய்து கொடுப்பதாக ஒரு வாக்குறுதி வாரண்டியாக வருகிறது. அந்தக் கெடு முடிந்த பிறகு, என்ன எப்படி என்பது தனிக் கதை.

    இந்தப்பதிவில், அங்கீகரிக்கப் பட்ட சர்வீஸ் செண்டர் எப்படி, அலட்சியமாகவும் திமிருடனும் நடந்து கொண்டது, சரியான விவரம் எதுவும் சொல்லாமல் அவர்கள் சொன்னது தான் ரேட் என்று, சிக்கிக் கொண்டால் தலையில் மிளகாய் அரைக்கிற வேலையைச் செய்தது என்பதைத் தான் கொஞ்சம் சொல்லியிருந்தேன். தயாரிப்பு நிறுவனங்களும் இவர்களைக் கண்காணிப்பதில்லை, ஒழுங்கு படுத்துவதில்லை. ஸ்பேர் பார்ட் விலை,சேவைக் கட்டணங்களைப் பற்றி வெளிப்படையாக இவர்கள் எதுவுமே சொல்வதில் என்பது தான் முக்கியமான விஷயமே! அதை வெளிப்படையாகச் சொன்னால், ஒரு பிராண்ட் தன் தர உத்தரவாதம், வாடிக்கையாளர் சேவையில் எப்படிப் பட்ட அணுகுமுறையைக் கையாள்கிறது என்ற குட்டும் உடைந்து விடும்!

    ஒரு வெளிப்படையான, நேர்மையான அணுகுமுறையைத் தயாரிப்பு நிறுவனங்களும் சரி, எப்போதும் கையாள்வதில்லை! அதனால் தான் வாடிக்கையாளர்கள், எப்போதுமே ஏமாந்த சோணகிரிகளாக ஆக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    என்னுடைய கேள்வி எல்லாம், அவர்கள் நம்மை ஏமாந்த சோணகிரிகளாக ஆக்க முயற்சிப்பது ஒரு புறம் இருக்கட்டும், நாமும் அதற்கு உடன்பட்டு நிற்கப்போகிறோமா இல்லையா என்பது தான்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!