Wednesday, May 12, 2010

மன்னிக்க வேண்டுகிறேன்! மந்திரிப் பதவி தொடரவும் வேண்டுகிறேன்!


குட்டி பண்ணற தப்பெல்லாம் வெள்ளாட்டின் தலையிலே! ஹ்ம்ம்..என்னத்தையாவது பேசிக் கடைசியில் என் தலையைத் தான் உருட்டுறாங்கப்பா!

காங்கிரஸ் கட்சிக்கு என்று மட்டும் அல்ல, பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இப்போது சோதனைக்கு மேல் சோதனையான நேரம் போல இருக்கிறது! அமைச்சரவையில் எப்படியாவது மேடம் கண்பார்வைக் கடாட்சத்தில் வந்து விட்டால் மட்டும் போதுமா? என்னத்தையாவது  பேசிவிட வேண்டியது, அது பெரிய சர்ச்சைக்கு உள்ளான உடனேயே,  நான் அப்படிச் சொல்லவே இல்லையே, பத்திரிகைகள் தான் திரித்துச்  சொல்லிவிட்டன என்கிற மாதிரி மழுப்ப வேண்டியது. மேடம் வீட்டு வாசலில் காத்துக் கிடந்து, சமாதானம், சால்ஜாப்புச் சொல்லி, மன்னிப்புக் கேட்டு, மேடமும் போனால் போகிறது என்று மந்திரிப் பதவியில் தொடர அனுமதிக்க வேண்டியது என்று காங்கிரஸ் அமைச்சர்கள் ஒருவர் மாற்றி மாற்றிப் பாடாய்ப் படுத்திக் கொண்டு இருந்தால், டம்மிப் பீஸ் மன்மோகன் சிங் தான் என்ன செய்வார், மேடமும் தான் என்ன செய்வார்?

 
இப்போது, ஜெய்ராம் ரமேஷ் முறை!  இந்தப் பக்கங்களிலேயே, பட்டமளிப்பு விழாக்களில், பாதிரிமார் அணிவது போலப் பாவாடை மாதிரியான கவுனை அணிய வேண்டுமா, பழைய பழக்கங்களில் இருந்து மீள வேண்டாமா என்று ஜெயராம் ரமேஷ் ஒரு பட்டமளிப்பு விழாவில், கவுனைக் கழற்றிய படத்தோடு ஒரு பதிவைப் பார்த்திருக்கிறோம்!

சசி தரூர் விவகாரத்தில் கிளம்பிய சுனந்தா புஷ்கர் வாடையே இன்னமும் போகவில்லை! சரத் பவார் விவகாரம் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. சீனாவில் போய் இந்த  அமைச்சர், இந்திய உள்துறை அமைச்சர்  மிகவும் சந்தேகக் கண்ணோடு சீன நிறுவனங்களை நடத்துவது சரியில்லை என்று நேரடியாகவே உள்துறை அமைச்சகத்தைக் கையைக் காட்டிப் பேசியது பிரச்சினையாகிவிட்டது! இருக்காதா பின்னே?!

அவர் சீண்டியது மேடத்தின் முழு நம்பிக்கைக்குரியவராகத்  தன்னைக் காட்டிக் கொள்ளும் சால்வை அழகர் பானா சீனாவை அல்லவா!

பானா சீனாவும் கண்ணைக் கசக்கிக் கொண்டு, கடுமையான அழுகையில் பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பி விட்டாராம்! ஏற்கெனெவே, மாவோயிஸ்டுகள் பிரச்சினையில் பானா சீனா எடுத்த நிலைபாட்டை விமரிசித்து உனவுபதப்படுத்துதல் துறை ராஜாங்க அமைச்சர் சுபோத் காந்த் சஹாய் பேசியதை, மே(லி)டம்  ரசிக்கவில்லை. உள்ளே நடப்பதை வெளியே தெரியும்படி பேச வேண்டாம்  என்று எச்சரிக்கப் பட்டார். காபினெட் செக்ரட்டரி ஜிகே பிள்ளை வாயை மூடிக் கொண்டிருக்கும்படி பொதுவாக எல்லா அமைச்சர்களுக்கும்  ஒரு எச்சரிக்கை விடுத்ததும் பயனில்லாமல் போனது போல!அமைச்சரவையிலேயே   மாவோயிஸ்டுகள் பிரச்சினையைக் கையாளும் விதத்தைக் குறித்து பானா சீனா ஒரு மாதிரியாகவும், இன்னொரு தரப்பு வேறு மாதிரியாகவும் கருத்துக்களைக் கொண்டிருப்பது  பூனைக் குட்டி வெளியே வந்த மாதிரி, வெளியே தெரிய வந்தது, வந்தது தான்!

பானா சீனாவுக்கும்  நேரம் இப்போது சரியில்லை போலத் தான் தெரிகிறது! மேற்கு வங்க முதலமைச்சரிடம் மாநில அரசு, முதலமைச்சர் தான் தீவீரவாதத்துக்கேல்லாம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும், அல்லது பொறுப்பானவர் யார் என்பதை நிர்ணயிக்க வேண்டும் என்று சவடாலாகப் பேசிய சில நாட்களிலேயே மாவோயிஸ்டுகள் எழுபத்தாறு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரைக் கொடூரமாகக் காவு வாங்கியதும்,  தனக்குப் பொறுப்பு இருப்பதாகவும், பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாகவும் ஒரு நாடகம் நடந்தது. இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா!?

ஏற்றுக் கொள்ளப் பட்டுவிடும் என்பது தெரிந்தால் அரசியல் வாதிகள் எவரும் ராஜினாமா கொடுத்திருக்கவே மாட்டார்கள் என்பது ஜனங்களுக்கும் நன்றாகவே தெரிந்திருந்ததால், இந்தக் கூத்தை ஒரு சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


அடுத்து அனுபவமுள்ள அரசியல்வாதியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான திக விஜய் சிங் பானா சீனாவின் மக்கள் விரோதக் கொள்கைகள் என்று பேசிக் கையைச் சுட்டுக் கொண்டார். 

நம்பர் பத்து, ஜன்பாத் சாலையில் இருந்து உத்தரவு, பானா சீனாவிடம் மன்னிப்புக் கேட்டு, சொன்னதை மறுத்து அறிக்கையும் விடவேண்டுமென்று வந்ததும்,  வேறு வழியில்லாமல் அப்படியே செய்து விட்டு திக்விஜய் சிங் மேடம் தரிசனத்துக்காகப் பத்து நாட்கள், ஜன்பாத் சாலை வீட்டு வாசலிலேயே காத்துக் கிடந்தார். ஊருக்கெல்லாம் அன்னையாகச் சித்தரிக்கப் படுகிறவர், காத்துக் கிடந்தவரைச் சந்திக்க மறுத்த விவரமும் செய்திகளில் கசிந்து, காங்கிரஸ் கட்சி, அரசு, அமைச்சர்களுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள், முதிர்ச்சியோ தெளிவோ இல்லாத அரசியல் நிலைபாடுகள் வெளியே ஈயென்று இளித்துக் கொண்டு அம்பலமாகித்தான் நின்றது.

இப்போது ஜெயராம் ரமேஷ்! சுற்றுச் சூழல் விவகாரத்தில், கோபென்ஹேகனில்  நடந்த மாநாட்டில் இந்திய அரசின் நிலையைத் திறம்படக் கையாண்டவர் என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆனால், இங்கே உள்ளூர் அரசியல் சூழ்நிலைகள், திறமைகளை மதிப்பதில்லை.  சீனா உள்ளிட்ட இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை பற்றி ஜெயராம் ரமேஷ் ஏற்கெனெவே சீனச் சார்பு நிலை எடுத்துப் பேசியவர்தான் என்று இப்போது செய்திகள் வருகின்றன.

ஒரு அரசின் உள்நாட்டுக் கொள்கையின் நீட்சியாகத் தான் வெளியுறவுக் கொள்கையுமே இருக்க முடியும்! அப்படித்தான், மற்றெல்லா நாடுகளிலும் இருந்து வருகின்றன. எந்த ஒரு தேசமும், தன்னுடைய அரசியல், பொருளாதாரம் , பாதுகாப்பு குறித்தான சில அடிப்படை விஷயங்களை முடிவு செய்து கொண்ட பிறகே அதற்குத் தகுந்த மாதிரிக் குறுகியகால  மற்றும் நீண்டகாலக் கொள்கைகளை வகுத்துக் கொள்கின்றன.

ஆனால், இங்கே இந்தியாவில் நிலைமையே தலைகீழாகத் தான் ஆரம்பித்தது. ஒரு முறையான, தெளிவான வெளியுறவுக் கொள்கை இருந்ததா என்றால் இல்லை! உள்நாட்டுக் கொள்கை என்று ஒன்றாவது இருந்ததா என்றால் அதுவும் இல்லை. நேரு காலத்தில் இருந்து தொடங்கிய இந்தக் குழப்பங்களின் உச்சத்தைத் தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நேரு, தலைமைப் பண்பு, சாஸ்திரி என்று குறியீட்டுச் சொற்களில் தேடினீர்களானால், இது குறித்த பழைய பதிவுகள் சிலவற்றைப் பார்க்க முடியும்.

ஏற்கெனெவே சீனா அறுபது, சீனப் பெருமிதம் என்ற தலைப்புக்களிலும், பொருளாதாரம் குறித்து எழுதிய சில பதிவுகளிலும் கூட சீனாவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது, சீனப் பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்ச வேண்டியது இல்லை, சீனர்களுடைய அணுகுமுறை எப்படி இந்த முப்பது ஆண்டுகளில் மாறியிருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். ஜெயராம் ரமேஷ் சொல்வதில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது. சீனப் பூச்சாண்டி என்று பழைய கதையையே நினைத்துப் பயந்து கொண்டு ஒதுங்கி இருக்க முடியாது. அதே நேரம், முன்னெச்சரிக்கையாகவும், திறமையாகவும் செயல்பட வேண்டிய பொறுப்பு அரசு, அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது. ஓவர் ரியாக்ஷன் என்பது, எதிர்மறையான விளைவுகளைத் தான் ஏற்படுத்தும். அரசியல்வாதிகளாகவே, ஊழல் செய்வதில் மட்டும் திறமை காட்டுகிறவர்கள், கொஞ்சம் ஒரு படி முன்னேறி ராஜதந்திரிகளாகவும், நாட்டு நலன்களைப் பாதுகாக்கிறவர்களாகவும் வர மாட்டேன் என்று நேரு காலத்தில் இருந்தே தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் இந்த நிகழ்வின் பரிதாபமான பாடம்! 

ஜெயராம் ரமேஷின் ராஜ்ய சபை உறுப்பினர் பதவி வருகிற ஜூன் மாதத்தோடு முடிகிறது. மந்திரியாகத் தொடரவும், ராஜ்ய சபா உறுப்பினராக மறுபடி தேர்ந்தெடுக்கப் படவும் காங்கிரஸ் மேலிடம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரம்.

போதாக்குறைக்கு, புதுப்பிக்கப்படும் அல்லது மாற்று எரிசக்தித் துறையில் இந்தியா சீனாவை விட இந்த இருபத்தைந்து முப்பதாண்டுகளில் மிகவும் பின் தங்கிவிட்டதாகவும், உள்நாட்டில் மிகக் கடுமையான முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் பேசியது இன்னொரு சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது. அது என்னவாகப்
போகிறதோ தெரியவில்லை!

இன்னொரு வில்லங்கம் வருதாமே, எங்கேப்பா?


ஆனால், ஜெயராம் ரமேஷ் பேசியது ஒரு சிறிய சறுக்கல் என்றால்,  மஞ்சள் துண்டு மாதிரி ஏதேதோ  கலரில் சால்வை அணிந்து கொண்டு சால்வை அழகராய்க் காட்சி தரும் சால்வை அழகர் பானாசீனாவைத்  திருப்திப் படுத்துவதற்காக,  அவரைப் பகிரங்கமாகக் கண்டித்திருப்பதும், நடந்து முடிந்த, நடக்கப் போகிற கூத்துக்களும் இந்திய சீன உறவுகளில் ஒரு முள்ளாய் உறுத்தப் போகிறது என்பது மட்டும் உறுதி. அங்கே தான், எப்படிப் பட்ட கோமாளிகளிடம் இந்த தேசம் சிக்கிக் கொண்டு பாடாய்ப் படுகிறது என்பதை நினைக்கும்போதே பகீரென்கிறது.

முகமது பின் துக்ளக் படத்தில் வருகிற மாதிரி, பிரதம  மந்திரி ஒருவரிடத்திலேயே அத்தனை இலாகாக்களும், மற்ற எல்லா அமைச்சர்களும் இலாகாப் பொறுப்பில்லாத அமைச்சர்கள் என்று இருந்தால் தான் மன்மோகன்  சிங் நிம்மதியாகத் தூங்கவே முடியும் போல இருக்கிறது!

இல்லை, மதுரைக்கார அமைச்சர் மாதிரிப் பாராளுமன்றத்துப் பக்கமே வராமல், வந்தாலும் தனக்கு வேண்டியதை மட்டும் பார்த்துக் கொண்டு வேறு எதையும் பேசாமல்  இருந்து விட்டால் கூட நிம்மதி தான்!

ஐயோ பாவம் காங்கிரஸ், ஐயோ பாவம் மன்மோகன் சிங்  என்று அனுதாபப் பட முடியவில்லை!

பரிதாபத்துக்குரியவர்கள் நாம் தான் என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்?

4 comments:

 1. ///தெளிவான வெளியுறவுக் கொள்கை இருந்ததா என்றால் இல்லை! உள்நாட்டுக் கொள்கை என்று ஒன்றாவது இருந்ததா என்றால் அதுவும் இல்லை. நேரு காலத்தில் இருந்து தொடங்கிய இந்தக் குழப்பங்களின் உச்சத்தைத் தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ///


  இன்றும் கூட நிலைமை மாறவில்லை.காரணம் ஜால்ரா தட்டியோ, அடிவருடி புகழ் பாடியோ முன்னிலையில் இருபவர்களே அமைச்சர்களாக அமர்த்தபடுகின்றனர்.

  வேடிக்கை பார்க்கலாம்.

  நம்மீது நாமே பரிதாபப்படலாம்.

  இந்த இரண்டைத்தவிர வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.

  ReplyDelete
 2. இன்னொரு தெளிவான வழி கூட இருக்கிறதே மாணிக்கம்!

  காங்கிரஸ், அதோடு கூட்டணி வைத்துக் கொழுத்துக் கொண்டிருப்பவர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் தேர்தலில் ஜெயிக்கவிடாமல் செய்வது!

  தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் எவராயிருந்தாலும், அவர்களுக்கு என்னவோ சுல்தானாகி விட்ட மாதிரி நினைப்பு வர விடாமல், பொறுப்புடன் நடந்து கொள்கிற வகையில் எல்லா விதங்களிலும் ஜனங்களே பாடம் கற்பித்தல்!

  இரண்டுக்கும் ஜனங்களுக்குக் கொஞ்சம் சுரணை வர வேண்டும் அது தான் முதலாவது தேவை!

  ReplyDelete
 3. பணம் வைத்திருப்பவன் / வோட்டுக்காக அதை வாரி இறைப்பவன் வெற்றி பெறுவான் என்னும் நிலைதான் இப்போ பிரதான்யமாகக் காணப படுகிறது.
  இந்த நிலைமை இனி மாறுவதற்கு சாத்தியமே இல்லை என்பதுதான் வருத்தத்தற்குரிய உண்மை.

  ReplyDelete
 4. பணத்தை, இலவசங்களை அள்ளியிறைத்து வெற்றி பெறுவதெல்லாம் ஒரு எல்லை வரைதான்! எவ்வளவு அள்ளியிறைத்தாலும் போதாது என்ற நிலையைத் தான் அது உருவாக்கும்.

  இந்திய வரலாற்றைக் கவனித்துப் பார்த்தால், ஜனங்கள் எப்போதுமே ஆட்சியாளர்கள் செய்கிற நல்லது அல்லது கிறுக்குத்தனங்களை சகித்துக் கொண்டே வாழப் பழகினது, எங்கேயோ எதன் மேலோ மழை பெய்கிறது என்று நனைந்து கொண்டிருக்கிற இயல்பைப் பார்க்க முடியும். ஜனங்களுடைய உணர்வைத் திலகர் விநாயகர் சதுர்த்தி என்பிற வடிவத்தின் வழியாக ஒன்று திரட்டினார். அதற்குப் பிறகு காந்தி, அஹிம்சை, சத்யாக்கிரகம் என்ற சாத்வீக மறுப்பை ஒரு வலிமையான மக்களைத் திரட்டும், ஒன்று படுத்தும் கருவியாகப் பயன்படுத்தினார். இந்த இரண்டு தருணங்களைத் தவிர, ஜனங்கள் வேறெப்போதும் ஒரு தலைவனின் பின்னால் அணி திரண்டதில்லை, ஒன்று பட்டு நின்றதில்லை.

  இப்போதுள்ள அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநலத்துக்காக ஜாதி, இனம் மொழி பிரதேச உணர்வைத் தூண்டிவிட்டுக் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள், ஜனங்கள் இப்படிப் பிளவு பட்டுக் கிடப்பது தான் இப்போதைய நிலைமையின் பெரும் பலவீனமே!

  இதுவும் ஒரு நாள் மாறும், வலிமையான பாரதம் உயிர்த்தெழும் என்ற நம்பிக்கையை இந்த மண்ணின் சரித்திரம் நன்றாகவே கற்றுக் கொடுத்திருக்கிறது.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails