Sunday, May 09, 2010

ஆலிவர் ட்விஸ்டும் ஏய்ப்பதில் கலைஞனும்...!

இந்த வலைப் பக்கங்களுக்கு வாசிக்க வருகிறவர்களிடம் பொருளாதாரம், வங்கிகள், அரசியலைத் தொட்டு எழுதிய சில பதிவுகளில், சார்லஸ் டிக்கென்ஸ் எழுதிய ஆலிவர் ட்விஸ்ட் கதையைப் படிக்கும் படி சிபாரிசு செய்வது உண்டு. 
 
முக்கியமான காரணம், அந்தக் கதையின் தொடக்கமே இங்கிலாந்தில் தொடங்கிய தொழிற்புரட்சி எப்படி கிராமங்களில் இருந்து மக்களை நகர்ப்புறத்துக்கு, சேரிகளில் கூலித் தொழிலாளர்களைக் கொண்டு வந்து தள்ளியது என்பதை விவரிக்கும், காலத்தின் கண்ணாடியாக இருப்பதை அறிந்து கொள்வதற்காகத் தான்.

ஒரு நல்ல எழுத்தாளன், தான் வாழும் காலத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கிறான். அவனைப் பாதித்த விஷயங்கள், சமூகத்தில் அவன் பார்த்த, அவனைப் பாதித்த நிகழ்வுகள், அவனுடைய ஆதங்கத்தோடு சேர்ந்தோ, அல்லது அவன் புரிந்து  கொண்ட விதத்தை ஒட்டியோ தான் அவன் படைப்புக்கள் இருக்கும். மனிதனை நேசிக்கத் தெரிந்த எழுத்தாளர்கள் அனைவரிடத்திலும் காணக் கிடைக்கிற பொதுவான பண்பு இது. 

தமிழில் மட்டுமல்ல, பொதுவாகவே வலைப் பதிவுகளைப் படிக்க வருபவர்கள், மேலோட்டமாகவே பார்த்து விட்டுப்போய் விடுகிறார்கள்.அவர்களைக் குறை சொல்லியும் பயனில்லை. இன்றைக்கு எழுத்து என்பது, அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு  ஓட வைக்கிற  ஃபாஸ்ட் ஃபுட் சமாச்சாரமாகவே ஆகிப்போன நிலையில், ஆழ்ந்த வாசிப்பு என்பது மிகவும் அரிதாகிப்போன விஷயமாகவே படுகிறது.

இப்படிக் காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டு,
அவஸ்தையோடு  பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பதை ஆரம்பித்து வைத்த தொழிற்புரட்சியின் பக்க விளைவுகளில் எழுந்த கதை ஆலிவர் ட்விஸ்ட்! சார்லஸ் டிக்கென்ஸ் எழுதிய இரண்டாவது கதை இது. ஒரு சிறுவனை மையமாக வைத்து எழுதிய கதை என்று பார்த்தால், அவருக்கு இது முதலாவது முயற்சி என்று தான் சொல்ல வேண்டும். உலகமெங்கும் பரவியதாக இருக்கும் இரண்டு சுவாரசியமான வாக்கியங்கள், உங்களுக்கும் கூடத் தெரிந்தது தான்,  இந்தக் கதையில் தான் இருக்கிறது!

ஒன்று, "சட்டம் ஒரு கழுதை!"

கிட்டத் தட்ட  நூற்றெழுபது வருடங்களுக்கு முன்னால் டிக்கென்ஸ் எழுதிய  இந்த வார்த்தை, இன்றைக்கும் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது!

இன்னொன்று, "தயவு செய்து ஐயா, எனக்கு இன்னும் கொஞ்சம் வேண்டும்!"

சாதாரண ஜனங்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளுக்காகத் தொடர்ந்து, இன்றைக்கும் கேட்டுக் கொண்டிருக்கும் கெஞ்சல்!

தொழிற்புரட்சியின் முக்கியமான அம்சம், தேவை இருக்கிறதோ இல்லையோ, உற்பத்தி செய்து அதை நுகர்வோர் தலையில் கட்டி விடுவது! கிராமப் பொருளாதாரத்தின் வலிமை இருப்பதைப் பகிர்ந்து கொண்டு, வளர்ச்ச்சி இல்லை என்றாலும் தேய்மானமாவது இல்லாமல் இருந்தது. தொழிற்புரட்சி அத்தனையையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டதையும், ஏழைகளையும் உற்பத்தி செய்ததையுமே, அதன்  ஆரம்ப காலத்தைத் தொட்டுச் செல்லும் கதை ஆலிவர் ட்விஸ்ட்.

Bentley's Miscellany என்ற பத்திரிகையில். 1837 பெப்ருவரியில் தொடங்கி, 1839 ஏப்ரல் மாதம் வரை தொடர்ச்சியாக வெளிவந்த தொடர்கதையாகத் தான், பிரிட்டிஷ்  வாசகர்களுக்கு அறிமுகமானது.

சட்டம் ஒரு கழுதை, எனக்கு இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று சில வாக்கியங்களை அறிமுகப் படுத்திப் பிரபலப் படுத்தியது மட்டுமல்ல, அந்த நாளைய சரித்திரக் குறிப்பேடுகளில் கூடப் பதிவு செய்யப் படாமல் இருந்த ஏழை மக்களின் துயரங்களை விரிவாகப் பதிவு செய்த, சமூகப் பிரக்ஞையோடு  வெளிவந்த  முதல் ஆங்கிலப் புதினம் இது தான்


மற்ற எழுத்தாளர்கள், பணம் படைத்தவர்களைப் பற்றியே எழுதி எழுதி மாய்ந்துகொண்டிருந்த நேரத்தில், வெளிவந்த வித்தியாசமான எழுத்து இது.

கதை ஆலிவர் ட்விஸ்ட் என்ற சிறுவனைச் சுற்றியே ஆரம்பிக்கிறது. இவனைப் பெற்றுப்  போட்டதும் தாய் இறந்து விடுகிறாள். தந்தை யார் என்று தெரியவில்லை. ஏழைகளுக்கான சட்டம் என்ற ஒன்றின் கீழ் நிர்வகிக்கப் படும் ஒரு விடுதியில் முதல் ஒன்பது வருடங்கள்! இல்லாதவர்கள் அனுபவிக்கும் கொடுமை, பசியுடன் அந்த ஒன்பது வருடங்கள் இருப்பதை,கானா காப்பீடு, சமூகக் காப்பீடு என்று இப்போதுகூடச் சொல்லப் படுவதில் உள்ள ஓட்டைகளை, அந்தக் காலத்திலேயே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் கதாசிரியர்! காப்பீடுகள், சமூகப் பாதுகாப்பு என்ற வார்த்தை ஜாலங்கள், வாக்குறுதிகள்  எல்லாம் இன்னும் அதிகமாகச் சுரண்டுவதற்காகவே!

ஒன்பது வயது நிறைந்ததும், திருமதி மான் நிர்வகித்து வரும் அமைப்பில் இருந்து, வேலை செய்வதற்கு வேறோர் இடத்திற்கு அனுப்பப் படுகிறான் ஆலிவர் ட்விஸ்ட்! அங்கே தான், பசி தாங்க முடியாமல், "தயவு செய்து ஐயா! இன்னும் கொஞ்சம்!" என்று உணவுக்குக் கெஞ்சுகிறான்.
 
போனால் போகிறதென்று கொஞ்சம் சோறு போட்டால் இன்னும் கொஞ்சம் என்று கேட்பாயா என்று அங்கே இவன் மீது கோபம் வருகிறது ஐந்து பவுண்ட் கொடுக்கும் எவர் வேண்டுமானாலும் இவனை அழைத்துச் செல்லலாம் என்று முடிவாகிறது. 
 
அந்த நாளைய பிரிட்டிஷ் சமூக அமைப்பு, தங்களுடைய சொந்த ஜனங்களையே எப்படி நடத்தியது, ஆதரவற்ற, கைவிடப்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் எப்படி, வீட்டு அடிமைகளாக விற்கப்பட்டார்கள் என்பதைக் கொஞ்சம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக, ஆழ்ந்து யோசிக்க வைக்கிற பகுதி இது. பணம் படுத்தும் பாடு எப்படிப் பட்டது என்பதைப் போகிற போக்கிலேயே சொல்கிற இடமாகவும் இந்தப் பகுதி இருக்கிறது.

உள்ளூர் பாரிஷில் (ஒரு சர்ச் அமைப்பு) இருக்கும்  சோவெர்பெரி என்பவர்,  வேறு ஒரு மோசமான நபரிடம் தள்ளிவிட இருந்த நிலையில் தலையிட்டுத் தன வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த மனிதர் நல்லவர் தான்! ஆனால், அவர் மனைவிக்கு, இந்தச் சிறுவனைப் பிடிக்கவில்லை. அங்கே இருந்த வேலையாட்களுமே கூட இவனைக் கொடுமைப் படுத்துகிறார்கள். அதில் ஒருவனைத் திருப்பித் தாக்கியதால், தண்டிக்கப் படுகிறான். ஆலிவர். கொடுமை தாங்காமல், அந்த இடத்தை விட்டுத் தப்பி ஓடுகிறான்! பசியும், துயரமும் தொடர்ந்து துரத்துகிறது.

லண்டனை நோக்கிப் பயணப்படும் நேரத்தில்,  ஜாக் டாகின்ஸ் என்ற சம வயதுள்ள ஒருவனைச் சந்திக்கிறான்.

ஏய்ப்பதில் கலைஞன் (the artful dodger) என்றே அவனைத் தெரிந்து வைத்திருந்த வட்டாரத்தில்  அழைக்கப்படுவதில் காரணமில்லாமல் இல்லை. பிக் பாக்கெட் அடிப்பதில் கலைஞன் மட்டுமில்லை, ஆலிவர் மாதிரி ஆதரவற்ற சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து தன்னுடைய கூட்டத்தில் சேர்க்கும் வலைஞனும் கூட! தன்னுடைய குரு ஃபாகின்சிடம் அழைத்துப் போகிறான். எளிதாகச் சம்பாதிக்கலாம், சுகமாக வாழலாம் என்ற கனவுகளைத் தந்திரமாக இப்படிப்பட்ட ஆதரவற்றவர்களிடம் விதைத்து, அவர்களை உபயோகிக்கும் ஒரு கொடூரமான கும்பல் அது.

கைக்குட்டை விற்கிற சாக்கில் தங்களைப் பிக்பாக்கெட் அடிப்பதற்குத் தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தெரிந்து, ஆலிவர் இந்தக் கும்பலை விட்டு விலக முனைகிறான். பிக்பாகெட் அடிக்கிற முயற்சியில் டாகின்ஸ் அம்பலப்பட்டு, ஆலிவரும் இன்னொருவனுமாக டாகின்சுடன் தப்பித்து ஓடுகிறார்கள். மற்ற இருவரும் தப்பித்து விட, ஆலிவர் மட்டும் போலீசிடம் சிக்கிக் கொள்கிறான். நடந்ததைப் பார்த்த சாட்சிகளில் ஒருவர், ஆலிவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை எடுத்துச் சொல்லவும், விடுவிக்கப் படுகிறான். பிரவுன்லோ என்ற முதியவர் இவன் மேல் இரக்கப் பட்டுத் தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.

ஆனால், அதுவும் நிலைக்காமல் போகிறது. கும்பல் தலைவன்  ஃபாகின்ஸ், தன்னுடைய கையாளான நான்சி என்ற பெண்ணை அனுப்பித் தந்திரமாக ஆலிவரை மறுபடி கும்பலுக்குள் கொண்டு வந்து விடுகிறான். வீடுபுகுந்து கொள்ளையடிக்கும் முயற்சி ஒன்றில் ஆலிவர் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப் படுகிறான். எதிர்பாராத விதமாக அந்த முயற்சி தோற்றுவிடுகிறது, ஆலிவர் சுடப்படுகிறான். அந்த வீட்டில் இருப்பவர்களால்,
ஆலிவர் காப்பாற்றப் பட்டு, அவர்களுடைய அரவணைப்பும் கிடைக்கிறது.

இவனை மறுபடி கும்பலுக்குள் சிக்க வைத்த நான்சி, இவன் மீது இரக்கம் கொள்கிறாள். ஆலிவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று தவிக்கிறாள். அதே கும்பலில் இருக்கும் இவளது காதலன் சைக்ஸ் எதிராக இருக்கிறான். திருட்டுக் கும்பலுக்குள்  மோன்க்ஸ் என்ற புது நபர் வந்து சேர்கிறான். ஆலிவரைத் தீர்த்துக் காட்டுவதில் அவன்  அதிக அக்கறை காட்டுகிறான். தொடர்ந்து நிகழும் மோதல்களில் சைக்ஸ் தன் காதலி நான்சியைக் கொன்று விட்டு, தப்பியோட முயலும்போது தானும் கொல்லப் படுகிறான்.

மோன்க்ஸ் ஏன் ஆலிவரைத் தீர்த்துக் கட்டுவதில் குறியாக இருக்கிறான் என்ற மர்மமும் உடைகிறது. அவன் ஆலிவருக்கு சகோதரன் முறையானவன்.  ஆலிவர் ஒரு பணக்காரனின் வாரிசு என்றெல்லாம் தெரிய வருகிறது. ஃபாகின்ஸ் கைது செய்யப் பட்டு மரண தண்டனை விதிக்கப் படுகிறது. அப்புறம், பிரிந்திருந்த உறவுகள் எல்லாம் சேர சுபம் சுபமே என்று கதை முடிகிறது.

புத்தக விமரிசனம் என்று முழுக்கதையுமே சொன்னால் எப்படி என்று கேட்கிறீர்களா?

இங்கே கதையில்  பெரிதாக ஒன்றுமே இல்லை.தமிழில் அனாதை ஆனந்தன் என்ற பெயரில் ஏவிஎம் தயாரிப்பில்,  ஏவிஎம் ராஜன், ஜெயலலிதா, மாஸ்டர் சேகர் நடித்து, இதே கதை படமாகவும் வந்தது. இப்போது சொன்ன அவுட்லைனை வைத்து படமாக வந்திருந்தாலும், முக்கியமான ஒன்று மிஸ்ஸிங்! அது தான், எழுத்தாளன், தான் வாழ்ந்த காலத்தை எழுத்தில் பிரதிபலித்துக் காட்டியிருந்த விஷயங்கள்!  அதை விட்டு விட்டு படமாக எடுத்தபோது, அங்கே எதுவுமே இல்லை!

எழுத்தில் தெரியும் ஜீவனை, வாசிப்பின் வழியாக உணர முடிவது போல, மாற்று ஊடகமாகப் பார்க்கும் போது அவ்வளவாக எடுபடுவதுமில்லை. முக்கியமான காரணமாக எனக்குப் படுவது என்னவென்றால் மாற்று ஊடகத்தில் கொண்டு வரும்போது, எழுத்தின் ஜீவனைப் புரிந்துகொண்டு சொல்ல இங்கே எவரும் முனைவதில்லை என்பது தான்!

கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தீர்களானால், ஏழாவது உலகம் கதை, (இன்னமும் படிக்கவில்லை) நான் கடவுள் படம் (பார்த்தாயிற்று) இவற்றில் பேசப்படும் பிச்சை எடுப்பவர்களின் நதி மூலம் இங்கே ஆலிவர் ட்விஸ்ட் கதையில் ஃபாகின்ஸ் கும்பலை வைத்து ஆரம்பிப்பதையுமே பார்க்க முடியும். இந்த அவலங்கள்,  பிரிட்டிஷ்காரர்கள் நாட்டை அடிமைப் படுத்தியவுடன் செய்த முதல் காரியம், கிராமங்கள் அழிக்கப் பட்டு, மக்கள் நகர்ப்புரங்களுக்குக் கூலிகளாக விரட்டப் பட்டதில் இருந்து ஆரம்பித்தது தான்! அதற்கு  முன்னால் இத்தகைய அவலங்கள்  இந்திய சமூகத்தில் இருந்ததே இல்லை! இந்திய கிராமப் பொருளாதாரம், சுயதேவைப் பூர்த்திப் பொருளாதாரமாக, பகிர்ந்து கொள்கிற தன்மையில் இருந்தது, அங்கும் இங்குமாக சில கொடூரமானவர்கள் இருந்தாலும், ஒட்டு மொத்த சமுதாயமும் ஒரு தர்மகர்த்தா இயல்பில், எளியவர்களையும் அரவணைத்துச் சென்றதைக் கொஞ்சம் வரலாறு படித்தவர்களுமே தேடித் தெரிந்து கொள்ள முடிகிற விஷயம். இன்றைக்குக் குறிவைத்துத் தாக்கப் படுகிற இந்தியக் கலாசாரம், எளியவர்களுக்கு ஆதரவாகவே இருந்தது.

ஆலிவர் ட்விஸ்ட்! நூற்றெழுபது வருடங்களுக்கு முன்னால் எழுதிய கதை தான்! இன்றைக்கும் கூட, சமூகம், பொருளாதாரம் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு ஊற்றுக் கண் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டு சொன்ன படைப்பாகவும் இருப்பது தான் இதன் சிறப்பு.

நாவலை முழுதாகப் படித்துப் பாருங்கள்! எழுத்தின் ஜீவனை அங்கே தான் கண்டு கொள்ள முடியும்!


படித்ததும், பிடித்ததுமான புத்தகங்களைப் பேசுவதற்காகவே, தனியாக ஒரு வலைப்பூவைத் துவங்கி அதில் வெளியிட்ட புத்தக விமரிசனத்தின் மீள்பதிவு இது.. என்ன காரணமோ, ஆரம்பித்து ஐந்து மாதங்களாகியும் இந்தப் பக்கங்களுக்கு வருகிறவர்களைக் கூட சென்றடையவில்லை என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்காக.

புத்தகங்களைப் படிக்கிற பழக்கம் வளர வேண்டும் என்று உரக்கச் சொல்வதற்காகவுமே கூட!.

4 comments:

 1. // நாவலை முழுதாகப் படித்துப் பாருங்கள்! எழுத்தின் ஜீவனை அங்கே தான் கண்டு கொள்ள முடியும்! //

  உண்மைதான்
  .
  "புத்தகங்கள் படிக்கும் பழக்கம் வளரவேண்டும்" என்று சொல்லும்போதே ஒரு விசனத்துடன் தான் சொலவேண்டியுள்ளது. தற்போது இந்த பழக்கம் வெகுவாக அறிகிவருவது கண்கூடு.
  பள்ளி, கல்லூரி கோடை விடுமுறை நாட்களில் நூலகங்களிலும் வீட்டிலும் ஒரு மௌனமான போட்டியே
  நடக்கும். மாய்ந்து மாய்ந்து படிபதுண்டு. வானொலி நிகழ்சிகளை கேட்டுக்கொண்டே வாசிக்கலாம்.
  இல்லைஎன்றா காற்று அடித்து வீசும் கோவில் பிரகாரங்கள், ராஜா கோபுர முதல் இரண்டாம் மாடி நிலைகளில் அடிக்கும் காற்றுக்கு ஆசைப்பட்டு அங்கே புத்தகங்களுடன் சரணடைவது உண்டு.

  கம்ப்யூட்டர் பழகியும் கூட படிக்கும் பழக்கம் மாறாமல் இருந்தது. விலைக்கு வாங்கின சனியங்களாக
  கேபிள் டி.வி.யும் இண்டர்நெட்டும் வந்த பின்னர் படிக்கும் பழக்கம் குறைந்த போனது உண்மை.
  அலமாரியில் அடிக்கி வைதுள்ளவைகளை காட்டி பிள்ளைகளிடம் படிக்கசொன்னால் ஏளனமாக நம்ம
  பார்கிறார்கள்.

  புத்தககங்கள் படிப்பதில் உள்ள சுகமும் ஆத்மா அமைதியும் மனம் கிளர்வுறும் அந்த அனுபவமும்
  இவர்களை சென்று சேராமல் போகிறது.வருத்தம்தான்.

  ReplyDelete
 2. ரசனைகள், வடிவங்கள் மாறுவது இயற்கைதான்! ஆனால். புத்தகங்களை நேசிப்பதற்குப் பிள்ளைகளுக்குப் பெற்றோர் தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். சிறுவயதில் பெற்றவர்களிடம் அல்லது பெரியவர்களிடம் கதை கேட்பது என்பது, புத்தக வாசிப்பிற்கு முந்தைய படியாக இருந்தது. இப்போது, குழந்தைகளுக்குக் கதை சொல்வதற்குக் கூடப் பெற்றவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

  புத்தகங்கள், வெறும் பொழுதுபோக்கும் துணையாக மட்டுமே இருப்பதில்லை. ருசி அறிந்தவர் வாசிப்பை விடுவதுமில்லை.

  என்னுடைய மகனுக்கு வாசிப்பில் அதிக ஈடுபாடு இல்லாமல் தான் இருந்தது. ஹாரி பாட்டர் கதைகள், அப்புறம் டோல்கின் என்று ஆரம்பித்து, அவனாகவே தேடித் பிடித்து ஜெயமோகனுடைய இன்றைய காந்தியை வாங்கிப் படிக்க ஆரம்பிக்கும் அளவுக்கு வாசிக்கும் வழக்கம் வளர்ந்திருக்கிறது.

  இதெல்லாம், நம்மிடமிருந்து தொற்றிக் கொள்ளக் கூடிய நல்ல வழக்கங்களாகத் தான் ஆரம்பிக்கவேண்டும்!

  ReplyDelete
 3. There is a view that book reading - especially fiction books reading is a sign of 'escapism' whereas non-fiction reading contributes to personality development. Krish - any counter arguments?

  ReplyDelete
 4. எதை வைத்து அப்படி ஒரு முடிவுக்கு வருகிறீர்கள் என்பதைச் சொல்லவே இல்லையே கௌதமன் சார்!

  கற்பனை, கனவு என்பது நிஜத்தைச் சார்ந்து இருப்பது தான். கனவுகள், மூளையின் நினைவு அடுக்குகளை ஒழுங்கு படுத்திக் கொள்கிற ஒரு ஏற்பாடு,ஆழ்மனதில் படிந்து விட்ட ஏக்கங்கள், ஆசைகளின் நேரடியான அல்லது திரிந்த வடிவம் என்று சொல்வதுண்டு.

  கற்பனை செய்வது அல்லது புனைவு என்பது கிரியேடிவிடி என்று வேண்டுமானால் சொல்லலாம்! தப்பித்து ஓடுகிற கையாலாகாத் தனத்துக்கும் புனைவுகளுக்கும் சம்பந்தமே இல்லை!

  புனைவு அல்லாதவை என்று சொல்லப் படுபவைகளையும் கூடக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், கற்பனை, கனவு அல்லது புனைவு இல்லாத சுயம் பிரகாசமாக எதுவுமே இல்லை என்பதைக் கண்டுபிடித்து விடலாம்!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails