வெள்ளிக் கிழமைக் கேள்விகள்..! ரவுத்திரம் பழகு..!



வெள்ளிக் கிழமைக் கேள்விகளாக, என்டிடீவீ எழுப்பியிருக்கும் இந்த ஐந்து கேள்விகளை  நீங்களும் கேளுங்கள்!

முதலாவதாக, போபால் யூனியன் கார்பைட்  தொழிற்சாலையில், ஒரு பெரும் விபத்து நடப்பதற்கான அறிகுறிகள் இருந்தது என்ற எச்சரிக்கையை மீறி, தானே நேரடியாக அந்தத் தொழிற்சாலையைப் பார்வையிட்டதாகவும், எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது என்ற சான்றிதழை மத்தியப் பிரதேச சட்ட சபையிலேயே சொல்ல வேண்டிய அவசியம், அன்றைக்கு காங்கிரஸ் முதல் அமைச்சராக இருந்த அர்ஜுன் சிங்கிற்கு எதனால் வந்தது?

இரண்டாவதாக, 304-A பிரிவின் கீழ் வேண்டுமென்றே தெரிந்தே செய்ததாக  கொலைக்  குற்றம் சாட்டப் பட்ட ஒருவரை ஒரு மாநில முதல் அமைச்சர் தன்னுடைய சொந்த விமானத்தில் பத்திரமாக டில்லிக்கு அனுப்பி வைத்தது யாருடைய நிர்பந்தத்தின் பேரில்?

மூன்றாவதாக, ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து, லட்சக்கணக்கானபேர் பாதிக்கப் பட்ட ஒரு விபத்தின் நஷ்ட ஈடாக, தலா பன்னிரண்டாயிரம் ரூபாய் கூட வராத ஒரு சிறு தொகைக்கு, நீதி மன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து கொண்டதன்  பின்னணியில் என்ன இருந்தது? பெட்டிகளா, நிர்பந்தப் படுத்தப் பட்ட  வெயிட்டா?

நான்காவதாக, லீசுக்கு விடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, தொழிற்சாலை துவங்க அளிக்கப் பட்ட நிலம், வழங்கப் பட்ட போது என்ன நிலையில் இருந்ததோ, அதே நிலையில் சுத்தமாகத் திருப்பியளிக்கப் பட வேண்டும் என்று சட்ட ஷரத்துக்கள் தெளிவாக இருந்ததையும் மீறி, நச்சுப்படுத்தப் பட்ட பூமியை சுத்தம் செய்கிற கடமை, பொறுப்பில் இருந்து டவ் கெமிகல்சை விடுவித்து, உத்தரவு போட வேண்டிய நிர்பந்தம்  முதலமைச்சராக இருந்த திக் விஜய் சிங்குக்கு யாரிடம் இருந்து வந்தது?

ஐந்தாவதாக, டவ் கெமிகல்ஸ் என்ற புது முகமூடி, பெயருடன் இந்தியாவுக்குள் நுழைந்திருக்கும் டவ் கெமிகல்ஸ் அது இழைத்த சேதத்திற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில்  இருந்து விடுவிப்பதில், ஐ முகூட்டணிக் குழப்பம் வெர்ஷன், ஒன்று, ஐ மு கூட்டணிக் குழப்பம் இரண்டு உட்பட காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் தருணங்களில் எல்லாம் அதீத அக்கறை காட்டப் படுகிறதே ஏன்?

இந்தக் கேள்விகளுக்கு விடை தேடி வெகுதூரம் போக வேண்டியதில்லை! சிரமப்படவும் வேண்டியதும் இல்லை. 


அமெரிக்கக் கழுகுகளின் கோரத்தை விட, உள்ளூர்க் காங்கிரஸ் கட்சியின் கையாலாகத் தனம், தொடை நடுங்கித்தனத்திலேயே எல்லா விடைகளும் செய்திகளில் வெட்ட வெளிச்சமாகிக் கொண்டிருக்கிறது.

வீரத் திருமகனாக வர்ணிக்கப் படும் ராஜீவ் காந்தி, அமெரிக்க நிர்பந்தத்துக்குத் தலை வணங்க வேண்டியவராகவே இருந்தார் என்பதை, காங்கிரஸ் பொதுச் செயலாளரும், அர்ஜுன்  சிங் மந்திரிசபையில் அமைச்சராகவும், பின்னால் மத்தியப் பிரதேச முதல் அமைச்சராகவும் இருந்த திக் விஜய் சிங் அமெரிக்காவில் பேட்டி அளித்திருக்கிறார்..இந்தப்பேட்டியில், மாநில முதல்வர் அர்ஜுன் சிங்கைக் குறை சொல்ல முடியாது   மாநில அரசு இதில் செய்ததொன்றுமில்லை, வழக்கை சிபிஐ விசாரித்தது, நஷ்டஈட்டை நீதிமன்றம் தீர்மானித்தது என்ற மாதிரிச் சொல்லியிருந்தார். இங்கே முழு செய்தியும் ..அதில் இருந்து கொஞ்சம்..!

AICC general secretary Digvijay Singh on Thursday stunned party circles by virtually holding the Centre responsible for the controversial decision to let off Anderson, soon after he was arrested for the death of thousands from the poisonous gas leak from Union Carbide's Bhopal plant.

"The whole case was dealt with by the government of India and the Supreme Court. State government hardly had any role to play in this case," Singh said in a text message he sent to reporters here from the US. In another text message to reporters, he desisted from fixing the blame. Singh wrote, "I was campaigning during that period therefore I don't know. But I am sure it must have been under US pressure."

 

இவருக்கு முன்னால் முதல் அமைச்சராக இருந்த அர்ஜுன் சிங், மாநில அரசுக்கு சொந்தமான விமானத்தில் யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சனைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார். தொழிற்சாலை பாதுகாப்பாக இருப்பதாக சான்றிதழ் வழங்கினார். காங்கிரஸ் கலாச்சாரப்படி, நேரு குடும்பத்துக்குத் தெரியாமல், சம்மதமில்லாமல்  ஒரு காங்கிரஸ் மாநில முதலமைச்சர் தானாக வாலை நீட்டுவது, ஆட்டுவது என்பது முடியாது! இது இந்திரா காந்தி காலத்தில் இருந்து இன்றைக்குவரை தொட்டு தொடரும் கேவலமான பாரம்பரியம்! ராஜீவ் காந்தி பெயர் இழுக்கப் பட்டு விடக் கூடாதே என்ற அக்கறையுடன் சத்யவ்ரத சிங்க், அம்பிகா சோனி, வசந்த் சாத்தே  அப்புறம் இங்கே ஜெயந்தி நடராஜன் ஆகியோர் அர்ஜுன் சிங்கை மட்டும் கையைக் காட்டி, அவர் தான் பதில் சொல்ல வேண்டும் என்று திருவாய் மலந்திருக்கிறார்கள்.



அர்ஜுன் சிங் அமைச்சரவையில்  இந்த திக் விஜய் சிங் அமைச்சராக இருந்தார், பின்னால் மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சராகவும் ஆனார். இவர் முதலமைச்சராக இருந்தபோதுதான், போபால் தொழிற்சாலை வளாகத்துக்குள் கொட்டிக் கிடந்த நாற்பதாயிரம் தன் பாதரச நஞ்சுக் கழிவை சுத்தம் செய்து கொடுக்கும் பொறுப்பில் இருந்தும் யூனியன் கார்பைட் பின்னர் அதை விலைக்கு வாங்கிய டவ் கெமிக்கல்ஸ் நிறுவனத்தை விடுவித்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. இன்றைக்கும், ஏகப்பட்ட ரசாயன நச்சுக் கழிவுகள் போபால் யூனியன் கார்பைட் தொழிற்சாலை வளாகத்துக்குள், அடுத்த ஒரு பெரும் கேட்டை விளைவிக்கக் கொட்டிக் கிடக்கிறது.

ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் ஒன்றில், இந்த தோட்டி வேலை செய்ய வேண்டிய பொறுப்பை அமெரிக்க துரைமார்கள் செய்ய வேண்டாம், விட்டு விடலாம், அதற்கு  ஒரு ட்ரஸ்ட் அமைத்து ரத்தன்  டாட்டா தலைமயில் பார்த்துக் கொள்ளலாம் என்று நம்மூர்ப் பொருளாதார மேதை கண்டனூர் பானா சீனா  பிரதமருக்கு எழுதிய கடிதமும்  கூட இப்போது வெளியே வந்திருக்கிறது.

"In December 2006, Chidambaram wrote to Prime Minister Manmohan Singh in response to Montek Singh's note saying, "I think we should accept this offer and constitute a Site Remediation Trust under the chairmanship of Shri Ratan Tata".
 

போபால் விஷ வாயு வழக்கில் வந்த தீர்ப்பு, நீதித்துறையின் அசமந்தத்தனத்தின் எடுத்துக் காட்டாக இருந்தபோதிலும் கூட,திரைமறைவில் நடந்த  நிறைய விஷயங்களை சந்திக்குக் கொண்டு வந்திருக்கிறது! ஒரு பேரழிவு, விபத்திலேயே பாடம் கற்றுக் கொள்ளாத காங்கிரஸ் கட்சி, ஆட்சி, இன்னொரு பேரழிவு சீரழிவுக்கு வித்திடும் அணு உலை விபத்து நட்ட ஈடு மசோதாவை, இன்னமும் நீர்த்துப் போகச் செய்து இந்திய மக்களின் தலையில் கட்ட ஆயத்தமாகி வருகிறது. ஊழலை விட மிகவும் மோசமானது கோழைத்தனம்! காங்கிரஸ்  கட்சியின் ஆட்சி என்றாலே ஊழல், கோழைத் தனம் இரண்டும் மலிந்தது தான் என்பது ஒவ்வொரு நிகழ்விலும், தொடர்ந்து மெய்ப்பிக்கப் பட்டுக் கொண்டே வருகிறது.

பாடம் கற்றுக் கொள்ள காங்கிரஸ் கட்சிக்குத் தான் துப்பில்லை! 
 

காங்கிரசுக்குப் பாடம் கற்பிக்க வேண்டிய நமக்குமா துப்பு இல்லாமல் போய் விட்டது?
 

கொஞ்சம் அல்ல நிறையவே ரவுத்திரம் பழக வேண்டிய தருணம் இது!




6 comments:

  1. அடுத்த தேர்தலுக்குள் மக்கள் மறந்து விடுவார்களே!
    ஒரு தமிழ் தொலைகாட்சியும் இதை பெரிது படுத்தியதாகவோ, மக்களிடயே கொண்டு சென்றதாகவோ தெரியவில்லை, ஆயிரம் ஆயிரமாக தமிழ் மக்கள் கொல்லபட்டதையே மறைத்தவர்கள், இதையெல்லாமா காட்ட போறாங்கன்னு ஆதங்கம் ஏற்படுகிறது!

    சுதந்திரபோராட்டா வீரர்கள் இப்போது இருந்தால் இதற்க்கு தானா போராடினோம் என்று தற்கொலை செய்து கொள்வார்கள்!, இந்த மானங்கெட்ட அரசியல்வாதிகள் மொத்தமாக நாடு கடத்தபட வேண்டும், ராணுவ ஆட்சியையை கூட சகித்து கொள்ளலாம் ஆனால் உடனிருந்தே ரத்தத்தை உறியும் அட்டைபூச்சி அரசியலை ஒருக்காலும் அனுமதிக்ககூடாது!

    ReplyDelete
  2. வயிறு எரிவதுபோல..... இல்லை உண்மையிலேயே எரிகிறது.
    "ரவ்த்திரம் பழகு " புரட்சி காரன் என்பார்களே?
    சரி வெட்டி பேச்சு இல்லை, உண்மையிலேயே நாம் என்ன செய்யலாம்?
    நாம் - என்றது அணைத்து பதிவர்களையும் தான் .

    ReplyDelete
  3. Please, put the Tamilish.com Vote band in your page so that we can cast our vote would encourages more readers.

    ReplyDelete
  4. அன்புடன் நண்பருக்கு வணக்கம் , நமது நாட்டில் வசதியான பணம் படைத்த செல்வாக்கான அரசியல் பலமுள்ளவனு க்கு ஒரு சட்டம் ஏழை எழியவனுக்கு ஒரு சட்டம் ..பலம் உள்ளவன் பண பலத்தால் நீதியை விலைக்கு வாங்கி சாதித்து விடுலாம் என்பதற்க்கு இது ஒரு எடுத்துகாட்டு ..என்ன செய ???

    ReplyDelete
  5. வால்ஸ்!

    இங்கே ஊடகங்களை மட்டுமே குறை சொல்லிப் பயனில்லை.சாக்கடையில் இருந்து புழுக்களும், கொசுக்களும் தான் வரும். நம்முடைய ரசனை, தேவையின் தரம் என்னவாக இருக்கிறதோ, அதைத் தான் மிகைப்படுத்தி ஓவர்டோசாக ஊடகங்கள் கொடுக்கின்றன. இதைப் புரிந்துகொண்டால், அடுத்து என்ன செய்வது என்பதிலும் கொஞ்சம் தெளிவுடன் கூடிய தேர்வு இருக்கும்.

    இன்றைக்கு மாலை செய்திகளில், கொலைகார யூனியன் கார்பைடின் புதிய முகமூடி டவ் கெமிகல்சுக்கு வக்காலத்து வாங்கிக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறவர்கள் பட்டியலில் கண்டனூர் பானா சீனாவும் ஒருவர் என்பது அம்பலமாகிக் கொண்டிருக்கிறது.

    மாணிக்கம்!

    ரவுத்திரம் பழகு என்பது பாரதியின் கவிதை வரிகள். கோபம் வர வேண்டிய நேரத்தில், கோபம் வராமல் இருப்பதே கோழைத்தனத்தின் அடையாளம். ஒரு அயோக்கியத் தனம் நடந்துகொண்டிருக்கும்போது, அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பது அயோக்கியத்தனம். எப்போதுமே ருத்திர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தாலும் அது அழிவு தான்! அதனால் தான் பாரதி, ரவுத்திரம் பழகு என்று, ஒரு கட்டுப்பாட்டுடன் கூடிய கோபத்தை, ஆவேசத்தைப் பரிந்துரை செய்தான். ரவுத்திரம் பழகிப் பாருங்களேன்! எவர் எந்தப் பெயரிட்டு அழைத்தால் என்ன?

    நாம் செய்யக் கூடியது.,..?!

    நிறைய இருக்கிறது! ஒரு கும்பலாகச் சேர்ந்து அதைப் புறக்கணி, இதை வாங்காதே, இப்போது நர்சிம் பிரச்சினையில் கூட ஆணாதிக்க வக்கிரத்தை எதிர்ப்போம் என்று லோகோ போட்டுக் கொள்ளத் தெரிந்த பதிவர்களுக்குத் தனியாக நாம் சொல்லித் தர ஏதாவது மிச்சமிருக்கிறதா என்ன? ஒருவர் சொல்லிக் கொடுத்து, அல்லது ஆட்டுமந்தை போல மே' என்று கனைத்து வருவதல்ல இது! ஒருவெளக்கை வைத்து இன்னும் ஒரு விளக்கு, இன்னும் ஒருவிளக்கு என்று ஏற்றிக் கொண்டு போக முடிவதைப் போல, விழிப்புணர்வை, செய்தியைப் பரவலாகக் கொண்டு போக முடிவது வலைப் பதிவுகளின் தனிப்பெரும் பலம்! அதைச் செய்யலாமே!

    ReplyDelete
  6. கணபதி நடராஜா ஐயா!

    ஏழை எளியவன், அறியாதவன் என்று புறம் தள்ள முடியாதபடிக்கு, போபாலில் பாதிக்கப் பட்ட அந்தப் படிப்பறிவில்லாத எளிய மக்களின் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலான போராட்டத்தை, உறுதியை கூகிளில் தேடிப் பார்த்தீர்கள் என்றாலேயே ஏராளமான செய்திகள் கிடைக்கும்,

    வசதி படைத்தவன் தர மாட்டன்--அவனை
    வயிறு பசித்தவன் விட மாட்டான்

    என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளே, உங்கள் ஆதங்கத்துக்கு சரியான பதிலைச் சொல்லும்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!