Monday, June 07, 2010

நெஞ்சு பொறுக்குதிலையே! தொடரும் ஏமாற்றங்கள்!இருபத்தைந்தரை ஆண்டுகள் கழித்துத் தீர்ப்பு வந்திருக்கிறது! 
நியாயம் தான் கிடைக்கவில்லை!

போபால் விஷ வாயு வக்கில் குற்றம் சாட்டப் பட்ட எட்டுப் பேருமே குற்றவாளிகளாம்!  வெறும் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை! ....ச்சும்மா ஒரு லட்சம் தலா அபராதம்! 

இந்த எட்டுப் பேரில் ஒருத்தர் மட்டுமே, கொஞ்சம் தம்மாத்தூண்டு பெரிய மீன்! கேஷுப்  மஹிந்த்ரா! அப்படிச் சொன்னால் தெரியாது! மஹிந்த்ரா ஜீப் ட்ராக்டர் இத்யாதிகளைத் தயாரிக்கும் நிறுவன உரிமையாளர்! மற்ற ஏழு பேருமே குட்டி மீன்கள்!   

ஜாமீன் கிடைத்து, தண்டனையை அனுபவிப்பது கொஞ்சம் தள்ளிப் போடப் பட்டிருப்பதாக முப்பது நிமிடத்திற்கு முந்தைய செய்தி சொல்கிறது.தப்பி விட்ட அல்லது சட்டத்தில் சிக்காத கொலைகாரச் சுறா மீன்களை இந்திய நீதித்துறையோ, இந்திய அரசோ கைகாட்டக் கூட இல்லை என்பது தான் இந்தத் தீர்ப்பின் மிகப் பெரிய பரிதாபம்!  

அவர்கள் தப்பிப்பதற்கு இந்திய அரசின் கையாலாகாத் தனமே காரணம் என்பது தொடரும் இன்னொரு ஏமாற்றம்! ஜனங்கள் இப்படி ஏமாற்றப் படுகிற விதங்களின் பட்டியல் இன்னும் பெரிது!


போபால் விஷ வாயு விபத்து! விபத்து என்று தற்செயலாகச் சொல்ல முடியாத படி ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பொறுப்பற்ற நிர்வாகம் விளைவித்த கோரம், பதினைந்தாயிரம் மக்கள் மாண்டனர் ஐந்து லட்சம் பேர்களுக்கு மேல் பாதிக்கப் பட்டனர்.

வாரன் ஆண்டர்சன், யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர், கைது செய்யப் படுகிறார்! வெறும் இரண்டாயிரம் டாலர் பிணைத் தொகையைக் கட்டிவிட்டு விடுவிக்கப் படுகிறார்.விசாரணைக்குத் திரும்புவதாக ஒரு வெற்று வாக்குறுதி! பத்தாவது குற்றவாளியாக யூனியன் கார்பைட் நிறுவனம்! தலைமறைவாக இருப்பதாக அறிவிக்கப் பட்ட ஆண்டர்சனை, நீதி மன்றத்தின் முன் கொண்டு வர இந்திய அரசு  எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதோடு மட்டுமில்லை, தன்னுடைய சொந்த ஜனங்களைப் பாதுகாக்க எந்த நிவாரண நடவடிக்கையையும் இந்திய அரசு முயற்சிக்கவே இல்லை.

ஆனால் மக்களுடைய கோபத்தைத் தணிக்க, தாங்கள் சட்ட பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக  ஒரு நாடகத்தை இந்திய அரசு திட்டமிட்டே அரங்கேற்றிய மாதிரித் தான் பின்னால் நடந்த சம்பவங்கள் அத்தனையும் சுட்டிக் காட்டுகின்றன. 

1986 இல் அமெரிக்க நீதி மன்றத்தில் இருந்த இந்த வழக்கு இந்தியாவுக்கு மாற்றப்பட்டதே, பாதிக்கப் பட்ட ஜனங்களுக்கு இழைக்கப் பட்ட மிகப் பெரிய துரோகம். அதைவிட, 3300 கோடி டாலர்கள் நஷ்ட ஈட்டைக் கோரி வழக்குத் தொடர்ந்தது  இந்திய அரசு., மூன்று ஆண்டுகளுக்குப் பின்னால் 1989 இல் வெறும் நானூற்று எழுபது  கோடி டாலர்களை நட்ட ஈடாகப்பெற்றுக்  கொள்வதற்கு சம்மதிப்பதாக, நீதி மன்றத்திற்கு வெளியே செய்து கொள்ளப் பட்ட சமரசத் தீர்வாக இந்திய அரசு ஏற்றுக் கொண்டதற்குப் பின்னால் என்ன நடந்திருக்கும்? இதை ஊகிக்க ஷெர்லக் ஜோம்ஸ், ஜேம்ஸ் பான்ட் எவருமே உதவிக்கு வர வேண்டாம்! சின்னக் குழந்தை கூட சொல்லி விடும்!

நாட்டு நலனைப் பற்றிக் கவலைப்படாத அரசியல்வாதிகள், முதுகெலும்பில்லாத அரசு, அமெரிக்க நிர்பந்தத்தை எதிர்த்து நிற்க முடியாத கோழைத் தனம், அப்புறம் இருக்கவே இருக்கிறது, கண்ணசைவுக்கு ஆடினால் கிடைக்கும் சன்மானங்கள்!

உச்ச நீதிமன்றமே 1996 இல் இந்தக் குற்றச்சாட்டை நீர்த்துப் போகச் செய்கிற மாதிரியான ஒரு முடிவை எடுக்கிறது. வாரன் ஆண்டர்சனை இந்தியாவுக்கு வரவழைக்க இந்திய அரசு அமெரிக்க நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்கிறது. வழக்கம் போலவே குளறுபடிகளுடன்! இருபது வருடங்களுக்குப் பின்னால் அமெரிக்க அரசு, அந்தக் கோரிக்கையில் ஏதேதோ ஓட்டை இருப்பதாக, மறுத்து விடுகிறது.

இந்தக் கண்ணராவிகள் எல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும்! சம்மதம் சொல்லி வாங்கினார்களே நட்ட ஈடு, அதையாவது பாதிக்கப் பட்டச மக்களுக்கு நிவாரணமாக வழங்கினார்களாமா? 


அதுவும் இல்லை! இன்றைக்கு வரைக்கும் இல்லை! பெயரளவுக்கு ஒரு மருத்துவ மனை, சிகிச்சை என்று ஆரம்பித்ததோடு சரி! நட்ட ஈட்டை இன்னும் காலதாமதம் செய்யாமல் பாதிக்கப் பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று இருபத்து நான்கு வருடங்களாக இழுத்துக் கொண்டிருந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்றைக்கு சொல்லி இருக்கிறது!

நச்சுவாயுவின் கோரம் இறந்த பதினைந்தாயிரம் மக்களோடு முடிந்து விட்டதா? இல்லை! இன்னமும் பூட்டிக் கிடக்கும் யூனியன் கார்பைட் ஆலையின்  உள்புறத்தில் பாதரச நஞ்சுக் கழிவுகள் இன்னமும் அகற்றப்படாமலேயே அப்படியே தான் இருக்கின்றன! கிரீன் பீஸ் இயக்கத்தினர் காட்டும் அக்கரையில் ஒரு கோடியில் ஒரு பங்கைக் கூட, இந்திய அரசு தன்னுடைய சொந்த ஜனங்களுடைய நலனில் காட்டவில்லை!

இன்னொன்றையும் சேர்த்துப் பாருங்கள்! ருசிகா மானபங்கப்பட்டுத் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், குற்றவாளியான போலீஸ் அதிகாரி ராதோருக்கு நீதி மன்றம் முதலில் விதித்தது வெறும் ஆறு மாத சிறைத் தண்டனை மட்டுமே! அதை அப்பீல் செய்து போராடிய பிறகே, பதினெட்டு மாத தண்டனையாக அதிகரிக்கப் பட்டது.

அதுவும் எவ்வளவு காலம் கழித்து? 


அரசியல் வாதிகளை நம்ப முடியவில்லை! அரசு இயந்திரம், ஊழியர்களை நம்பிப் பயனில்லை! நீதித் துறையாவது கொஞ்சம் நீதி கிடைக்கச் செய்யுமா என்று ஏங்கித் தவிப்பவர்களுக்கு, நீதித் துறையும் பலவீனப் பட்டுப் போயிருப்பதையே சமீப காலத் தீர்ப்புக்கள் காட்டிக் கொண்டிருக்கின்றன.

இதை இங்கே மீண்டும் மன்மோகன் சிங் நிறைவேற்றத் துடிக்கிற அணு உலை விபத்துக்கான நட்ட ஈட்டு
மசோதாவோடு சேர்த்துப் பாருங்கள்!

இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தில் சிக்கிக்கொண்டது காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய சறுக்கல். இவர்கள் செய்துவிட்டுப் போய் விடுகிற கிறுக்குத்தனங்களை, ஜனங்கள் அல்லவா சுமந்தாக வேண்டி இருக்கிறது?

பிரச்சினை வந்தால் சமாளிக்கும் திறமை, உறுதி, நேர்மை,
அப்புறம் கொஞ்சமாவது முதுகெலும்பு இருக்கிறதா என்பதை அவர்கள் சொல்ல மாட்டார்கள். அவர்களுக்கே அது தெரியாது!
 
யூனியன் கார்பைடின் இன்றைய உரிமையாளர்களான டவ் கெமிக்கல்ஸ் மட்டுமல்ல,  துப்புக் கெட்ட காங்கிரஸ் கட்சியும், பொறுப்பில்லாத  இந்திய அரசும் பதில் சொல்லியே ஆக வேண்டும்!

பதில் சொல்ல வைக்கிற வலிமை மக்களிடமே இருக்கிறது! 

6 comments:

 1. again, no other country citizens will be this spineless! Politicians too know this and so they give a damn and do what pleases them!

  ReplyDelete
 2. அப்படிச் சொல்வதற்கில்லை ரவி! இங்கே, ஒரு ஹீரோ, அல்லது தலைவர் வந்து எல்லாவற்றையும் சாதித்துக் கொடுத்து விடுவார் என்ற பொய்யான கற்பனையை விதித்தே, இப்படி ஆக்கிவிட்டார்கள்! ஏழ்மையும், படிப்பறிவு அதிகமுமில்லாத ஒரு நாட்டில், இது சாதாரணமானது தான்! அதை அப்படியே வைத்திருப்பதில் தான் தங்களுடைய பிழைப்பு இருக்கிறது என்று தெரிந்த அரசியல் வாதிகள், வியாதிகளாகிப் போனார்கள் பாருங்கள், அங்கே தான் கோளாறுகளின் ஊற்றுக் கண் தொடங்குகிறது!

  இலவசங்களில் தங்களை, தங்களுடைய சந்ததிகளின் எதிர்காலத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளவும், தங்களுடைய விடுதலை தங்கள் கைகளிலேயே உள்ளது என்பதைத் தெரிந்து நடந்து கொள்ளவும் இந்த ஜனங்களுக்கு இப்போது ஒரு நல்ல தலைமை தேவை! ஆனால், எல்லா நம்பிக்கைகளையும் தகர்க்கிற மாதிரியே இங்கே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

  அரசியல் சட்டத்தை வரைவு செய்து அரசியல் நிர்ணய சபையில் அறிமுகம் செய்து வைத்துப் பேசிய போது அரசியல் தலைமை(நாடாளுமன்றம்), அரசு அதிகார அமைப்பு, நீதித்துறை இந்த மூன்றில் எது எதைவிடப் பெரியது என்று ஒரு காரணமாகத் தான் வரையறை செய்யாமல் வைத்திருப்பதாகச் சொன்னார். அவருடைய நம்பிக்கையில், இந்த மூன்றில், ஒன்றோ இரண்டோ தவறு செய்யும் போது, மிச்சமிருப்பது அதைக் கட்டுப் படுத்த எழுந்து செயல் படும் என்ற நல்ல எண்ணம் வெளிப்படுத்தப்பட்டது. ஆனால், நடந்ததோ வேறு! இன்று அம்பேத்கார் பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறவர்கள் கூட, அவருடைய எண்ணங்களைச் செயல் படுத்த முனைவதில்லை.

  1952 முதல் பொதுத் தேர்தலுக்குப் பின்னாலேயே காங்கிரஸ் கட்சி நிறைய சூதுவாதுகளைச் செய்ய ஆரம்பித்தது. தொடர்ச்சியாக, நாடாளுமன்ற ஜனநாயகம், நீதித்துறை, அரசு இயந்திரம் எல்லாவற்றையும் வெறும் துதிபாடும், தங்களுக்கு வேண்டியதை மட்டும் பார்த்துக் கொள்வதாக, அரசியல் தலைமை, ஆட்சி அதிகாரம் எல்லாம் ஒரு இடத்திலேயே குவிவதைத் தட்டிக் கேட்க முடியாத ஒன்றாக, இன்றைய ஒட்டு மொத்த அரசியல் சீரழிவையும் ஆரம்பித்து வைத்தது காங்கிரஸ் கட்சி தான்!

  ஒரே பதிவிலேயே அத்தனை விஷயங்களையும் சொல்லி விட முடியாது இல்லையா?

  போபால் துயரம் நடந்து முடிந்துபோன ஒன்று! ஆனால், அதில் இருந்து சரியான படிப்பினைகளைக் கற்றுக் கொண்டிருக்கிறோமா? சொந்த ஜனங்களுடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர இந்த அரசால் முடிகிறதா? நிவாரணத்தைப் பகிர்ந்து அளிப்பதில் கூட எத்தனை ஊழல்கள்?

  இப்படிப்பட்ட கையால் ஆகாதவர்கள் என்ன தைரியத்தில் மறுபடி இன்னொரு பெரும் அபாயத்தில் இந்த தேசத்தைத் தள்ளிவிடக் கூடிய ஒரு ஒப்பந்தத்தில் பிடிவாதமாக இருக்கிறார்கள்? அணு உலை விபத்து நேரிடும் பட்சத்தில், அதன் நஷ்ட ஈட்டை வரையறை செய்து இவ்வளவு தான் என்று அமெரிக்க நிறுவனங்களுக்குச் சார்பாகவே சொல்கிறார்கள்?

  இவர்களை எப்படி நம்புவது என்பது தான் முக்கியமான கேள்வி!

  ReplyDelete
 3. இந்திய அரச குடும்ப அரசர்களோ,மகனோ, மகளோ, பேரன்களோ, பேத்திகளோ இந்த விபத்தில் இறந்திருந்தால் தீர்ப்பு விரைவாக கிடைத்திருக்கும், பாதிக்க பட்டோருக்கு தகுந்த நிவாரணமும் கிடைத்திருக்கும். இறந்தது மற்றும் பாதிப்படைந்தது சாதாரண இந்திய குடிமக்கள் தானே ? இது போதும் என்று நீதிபதி நினைத்திருப்பார்.

  இந்த போபால் விபத்து union carbide மற்றும் அதில் வேலை பார்த்தவர்களுக்கும் நிச்சயமாக விபத்து நடக்கும் என்பது 100 சதவிதம் நன்கு தெரியும். அதாவது minus 5 டிகிரியில் வைக்க வேண்டிய ஒரு வேதிப்பொருள் நாற்பது டிகிரி வரை சூடு ஏறுவது தெரிந்தும் வெடிக்க விட்டு விட்டனர்.தெரிந்து செய்த தவறுக்கு 26 வருடம் கழித்து தீர்ப்பு. தெரியாமல் நடந்திருந்தால் இது தவறே அல்ல, நஷ்ட ஈடும் கிடையாது, யாரும் தவறேதும் செய்யவில்லை என்று கூட தீர்ப்பு வழங்கி இருப்பார்கள்.

  இப்ப 100 பில்லியன் டாலர் கொடுத்து அணுசக்தி மின் உற்பத்தி பொருள்கள் அதே அமெரிக்காவிடம் இருந்து வாங்குவோம். ஏதாவது விபத்து ஏற்பட்டால் வெறும் 500 கோடி ரூபாய் கொடுத்து வியாபாரத்தை தொடருவோம்!

  ஜெய்ஹிந்த்!

  ReplyDelete
 4. அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்
  உச்சத்திற் கொண்டாரடி கிளியே! ஊமைச் சனங்களடி!

  -மஹாகவி சுப்ரமணிய பாரதி

  ReplyDelete
 5. பணம், பாதாளம் வரை பாயும் என்பது மீண்டும் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. நாமெல்லாம் எதையும் கேட்காமல், எதிர்க்காமல் தோல்வியிலேயே வாழப் பழகிவிட்டோம் என்பதுதான் துயரத்திலும் துயரமான் செய்தி. கனமான ஒரு பதிவு.!!

  ReplyDelete
 6. என் இனிய தமிழ் மக்களே என்று கொங்குத் தமிழில் உற்சாகமாகப் பதிவிடுகிற நீங்கள் இப்படி சோர்வோடு சொல்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது!

  போபால் விஷ வாயு வழக்காக இருக்கட்டும், இப்போது தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கிற அணு உலை விபத்து நஷ்ட ஈடு மசோதா வரைவாகட்டும், நம்முடைய அரசியல்வாதிகளுடைய கோழைத் தனத்தை வெளிப்படுத்துவதாக மட்டுமே பார்க்க முடிகிறது. அமெரிக்க நிர்பந்தத்திற்குப் பணியாமல் இருக்க முடியும் என்பதே அவர்களுக்குத் தோன்றுவதில்லை!

  இங்கே இந்த அளவுக்கு மூக்கை நுழைக்கிற அமெரிக்கா சீனாவிடம் மண்டியிட்டுக் கெஞ்சிக் கொண்டிருக்கிறது. அது ஏன் என்பதைக் கொஞ்சம் முந்தைய பதிவுகளில் பேசியிருக்கிறேன். உறவுகள் என்பது பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ணம் இவைகளில் வருவது. நிர்பந்தப்படுத்தி வருவதல்ல. போபால் வழக்கில், அமெரிக்கா தனது தொழில்துறையை, தொழிலதிபரைப் பாதுகாத்துக் கொள்ள முனைந்ததைப் புரிந்து கொள்ள முடியும், சரி!

  இந்திய அரசு எதற்காக அதற்குத் துணை போக வேண்டும்? நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, அவசர அவசரமாக நீதி மன்றத்திற்கு வெளியே ஒரு சமரச ஒப்பந்தத்திற்கு, மூவாயிரத்து முன்னூறு கோடி நட்ட ஈடு கேட்டிருந்த நிலையில் அதில் எட்டில் ஒரு பங்குத் தொகைக்கு ஒப்புக் கொள்ள வேண்டும்?

  அதை விட, வந்த நஷ்ட எட்டுத் தொகையைக் கூட பாதிக்கப்பட்ட மகள்களுக்கு இன்று வரை தராமல் இருப்பது, சொந்த ஜனங்களுடைய உயிர், பாதுகாப்பு, நலன்களைப் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப் படாத மாதிரி இருக்கிறதா இல்லையா?

  இப்படிப்பட்ட அரசு, அணு உலை விபத்து நேரிட்டால் நஷ்ட ஈட்டை வரையறுத்து ஒரு சட்ட முன்வரைவை தாக்கல் செய்திருக்கிறது. இவர்களை நம்ப முடியுமா என்பது தான் இப்போது முன்வைக்கப்படும் முக்கியமான கேள்வி!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails