மருத்துவனே! முதலில் உன்னை குணப்படுத்திக் கொள்!



ஆங்கில மருத்துவம் படிப்பவர்களுக்கு முதலில் சொல்லிக் கொடுக்கப் படும் பாடம்  Physician! Heal thyself!  

மருத்துவனே! முதலில் உன்னை குணப்படுத்திக் கொள் என்பது தான்!

இங்கே சென்ற திங்களன்றும், புதனன்றும் இரு பதிவுகள் மாற்று மருத்துவத்தைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்க வேண்டிய அவசியத்தைத் தொட்டு எழுதியிருந்தேன். முதல் பதிவு, மாற்று மருத்துவத்தை, முழுக்க நிராகரிக்கிற ஒரு வலைப்பதிவு, ஹோமியோபதி மருத்துவத்தை ஒரு மோசடி மருத்துவமாகச் சித்தரிக்கும் கட்டுரை,  அதே தளத்தில் ஹோமியோபதி வைத்திய முறை பயனுள்ளதுதான் என்று சான்றிதழ் கொடுக்கும் ஒரு கட்டுரை இரண்டையும் கொடுத்து, வாசகர்கள் தாங்களே சுயமாக ஒரு கருத்து அல்லது விவாதத்தில் பங்கு கொள்ளட்டும் என்று கொடுத்திருந்தேன்.

திரு செந்தில்பாலன் மாற்று மருத்துவத்தில் உள்ள சில அபாயங்களைத் தொட்டு பின்னூட்டங்கள் எழுதியிருந்தார். மாற்று மருத்துவத்தில் பயன் படுத்தப் படும் மருந்துகளில் ஆபத்தான உலோகங்கள் பயன்படுத்துவது குறித்து முதல் பதிவில் எச்சரிக்கை செய்திருந்தார். எச்சரிக்கையாக இருக்கவேண்டிய அவசியத்தை ஒப்புக் கொண்டு, அலோபதி மருத்துவத்திலும் கூட
விபரீதமான உலோகக் கலவைகள் பயன்படுத்தப் படுகிறது என்பதைத் தொட்டு, பன்றிக் காய்ச்சலுக்கு கிளாக்சோ ஸ்மித் கிளீன் நிறுவனம் தயாரிக்கும் பெண்டேம்ரிக்ஸ் என்ற தடுப்பு ஊசியில் கலந்திருக்கும் பாதரசம், அலுமினியம், தெரேமால், ஸ்க்வாலீன் போன்ற அபாயமான,  கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய உபவேதிப் பொருட்கள்  இருப்பதைக் குறித்த ஒரு கட்டுரையை எடுத்துச் சொல்லியிருந்தேன்.

பதிவரும் மருத்துவருமான திரு ப்ருனோ இந்த இரண்டு பதிவுகளையும் படித்துவிட்டுப் பார்த்துவிட்டு, நிறையக் கேள்விகளை எழுப்பியிருந்தார். ஒரு ஆரோக்கியமான விவாதம் தொடங்கி
ருக்கிறது  என்று  இன்று மாலையில் தான் பதிவர் மயில் ராவணனிடம் பேசிக் கொண்டிருந்தபோது கொஞ்சம் சந்தோஷப் பட்டுச் சொல்லிக் கொண்டிருந்தேன். மருத்துவர் ப்ருனோ மாற்று மருத்துவத்தைக் குறித்து இன்று எழுதியிருக்கும் பதிவு, அந்த சந்தோஷத்தைப் போக்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி மருத்துவர் கொஞ்சம் பிறழ்ந்து எழுதியிருக்கும் ஒரு பதிவுக்கு எதிர் வினையாற்றிய இந்தப் பக்கங்களில் இருந்துதான் திரு ப்ருனோ எழுதிய பதிவையே அறிந்துகொண்டேன்.

பன்றிக் காய்ச்சல்  என்று ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக வந்து  கொண்டிருக்கும் இந்தக் காய்ச்சல், இயற்கையாக உண்டானது மாதிரி இல்லை, மனிதர்களால் உருவாக்கப் பட்டது என்று அமெரிக்க மருத்துவத் துறையில் இருப்பவர்களே சொல்கிறார்கள். பாருங்கள்!





சென்ற வருடம் ஜனவரி மாத வாக்கில் இந்தக் காய்ச்சலைப் பற்றிய செய்திகள் கசிந்து வர ஆரம்பித்தன. மிகப் பெரிய உயிர்க்கொல்லி நோய் என்ற மாதிரித் தம்பட்டம் அடிக்கப் பட்டது. அமெரிக்க அரசு, இதற்காகப்  பெருத்த செலவில் கொள்முதல் செய்த தடுப்பு ஊசிகளை சென்ற வருடம் அக்டோபரில் இருந்து  வலுக்  கட்டாயமாகப் போட முனைவதாக எழுந்த செய்திகளைத் தொடர்ந்து எதிர்ப்புக்கள் கிளம்பின. அம்மை நோய்க்கு தடுப்பு ஊசி மருந்தைக் கண்டுபிடிப்பதில் முன்னணியில் இருந்த மருத்துவ விஞ்ஞானிகளே, இந்த பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி மிகவும் ஆபத்தானது, தங்களுடைய குழந்தைகளுக்கு இதைப் போட அனுமதிக்க மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்தார்கள். இங்கே ஒரு மருத்துவர் வீடியோவில் அதை வெளிப்படையாகவே சொல்கிறார்.





வெறும் காய்ச்சலோ, பருவ காலங்களில் வரும் ப்ளூ காய்ச்சலோ, அல்லது பீதியைக் கிளப்புவதற்காகவே அனுப்பி வைத்திருக்கும் பன்றிக் காய்ச்சலோ எதுவானாலும், மனித உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை எந்த விதமான செலவுமின்றி, இயற்கையாகவே சூரிய ஒளி உடலில் படுவதன் மூலம் கிடைக்கும் வைட்டமின் டி மூன்றில் இருந்து ஐந்து மடங்கு கிடைக்கிறது என்பதை மருத்துவ ஆராய்ச்சியில் இருப்பவர்களே  சொல்கிறார்கள்.





இயற்கையாகவே நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகி விட்டால், மருந்து நிறுவனங்கள் பிழைப்பதெப்படி!? ஒரு பீதியை கிளப்பிவிட்டால், அரசுகள் எப்படி வாரி வழங்கும் வள்ளல்களாக மாறி, மருந்துக் கொள்முதலைப் பெருத்த செலவில் செய்து, மருந்து நிறுவனங்களுடைய கல்லாவை நிரப்பும் என்பதை இந்தப் பக்கங்களிலேயே ராபர்ட் லட்லம் எழுதிய Covert One: The Hades Factor புதினத்தைத் தொட்டு எழுதிய விமரிசனத்தில் பார்த்திருக்கிறோம்!

பிரிட்டிஷ் மெடிகல் ஜார்னல், ஐக்கியநாடுகள் சபை பன்றிக் காய்ச்சல்  விவகாரத்தைக் கையாண்ட விதம் குறித்துக் கண்டனம் தெரிவித்திருப்பதைப் படிக்க இங்கே.

பன்றிக் காய்ச்சல், தடுப்பூசி என்பதே ஒரு சதி தான் என்பதை ஒரு இயக்கமாகவே நடத்திவரும் தளம் இது. இங்கே இந்த விவகாரம் குறித்து நிறையக் கட்டுரைகள் இருக்கின்றன. கொஞ்சம் படித்துத் தான் பாருங்களேன்!

போலி மருந்துகள் என்ற குறியீட்டுச் சொல்லில், இந்தியச் சூழ்நிலையைத் தொட்டு எழுதிய முந்தைய பதிவுகளையும் நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்.

இது அலோபதி அல்லது வேறு எந்த மருத்துவ முறையை தூக்கிப் பிடிப்பதற்காகவோ, அல்லது இழிவு படுத்துவதற்காகவோ அல்ல--நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக! ஒரு விழிப்புணர்வு வரவேண்டும் என்பதற்காக.


 

4 comments:

  1. //மருத்துவர் ப்ருனோ மாற்று மருத்துவத்தைக் குறித்து இன்று எழுதியிருக்கும் பதிவு, அந்த சந்தோஷத்தைப் போக்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.//

    நான் மாற்று மருத்துவத்தை பற்றி எழுதவில்லை

    வழக்கு தொடுத்தவர்களை பற்றியே எழுதியுள்ளேன்

    எனது இடுகையின் கடைசி வரியை மீண்டும் வாசிக்கவும்

    ReplyDelete
  2. வணக்கம் டாக்டர்!

    உங்கள் பதிவின் கடைசிப் பத்தியைப் படித்தேன். ஒரிஜினலாக, நாம் விவாதிக்க எடுத்துக் கொண்டது, அலோபதி, மாற்று மருத்துவம் இரண்டிலும் உள்ள சாதக பாதகங்களைப் பற்றித் தான். அதனால், நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றியோ, அந்த வழக்கைத் தொடர்ந்தவர்களைப் பற்றியோ இந்த விவாதத்திற்குத் தொடர்பு இல்லாததால், கணக்கில் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.

    இந்தப் பதிவிலேயே ஸ்வைன் ப்ளூ குறித்து மூன்று வீடியோக்கள், மூன்றிலும் அலோபதி மருத்துவத்துறையில் ஆராய்ச்சியாளராக இருப்பவர்கள் தான், இந்த தடுப்பூசியே ஒரு பணம் பறிக்கச் செய்யப் பட்ட மோசடி என்றே சொல்கிறார்கள். தன்னுடைய குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி மருந்தைப் போட அனுமதிக்க மாட்டேன் என்று ஒரு அலோபதி மருத்துவரே காரண காரியங்களோடு சொல்கிறார்.

    அது தவிர, நேற்றைக்கு அமெரிக்க FDA, GSK முதலான மருந்து நிறுவனங்களிடமிருந்து இந்த சீசனுக்கு ப்ளூ தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய அனுமதித்திருக்கிறது. இந்த அனுமதியின் மதிப்பு பல நூறு கோடி டாலர்கள்! இதுவும் இணையத்தில் பார்த்தது தான்.

    நோயைப் பரப்புவதன் மூலம் கொள்ளை அடிப்பது! இது மருந்து நிறுவனங்கள் கையாள்கிற உத்தியாக ராபர்ட் லட்லம் எழுதிய ஹேட்ஸ் பாக்டர் கதையின் மையக் கருத்து. அதைக் கூட இங்கே ஒரு விமரிசனச் சுட்டியாகக் கொடுத்திருந்தேனே!

    அதற்கெல்லாம் உங்கள் தீர்ப்பு எதையும் காணோமே!

    ReplyDelete
  3. //நோயைப் பரப்புவதன் மூலம் கொள்ளை அடிப்பது! இது மருந்து நிறுவனங்கள் கையாள்கிற உத்தியாக ராபர்ட் லட்லம் எழுதிய ஹேட்ஸ் பாக்டர் கதையின் மையக் கருத்து. அதைக் கூட இங்கே ஒரு விமரிசனச் சுட்டியாகக் கொடுத்திருந்தேனே!

    அதற்கெல்லாம் உங்கள் தீர்ப்பு எதையும் காணோமே! //

    ஒரு விஷயத்தை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளாமல் கருத்து தெரிவிப்பது என் வழக்கமல்ல

    ReplyDelete
  4. மருத்துவர் ப்ருனோ!

    அலோபதி மருத்துவம் பற்றிக் குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசும்போது, முழுவிவரமும் தெரியாமல் கருத்துத் தெரிவிக்க மாட்டேன் என்கிறீர்கள். மாற்றுமருத்துவம் என்று வந்தால் ஓடோடி வந்து உடனே உங்களுடைய கருத்தைத் தெரிவிக்கிறீர்கள்.

    இந்தப் பதிவிலேயே வீடியோ ஆதாரங்களுடன், தடுப்பூசி குறித்து சில கேள்விகள் எழுப்பப் பட்டிருக்கின்றன.மருத்துவத் துறையில் இல்லாத என்னாலேயே இவ்வளவு விவரங்களைத் தேடிப் படிக்க முடிகிறது, யோசிக்க முடிகிறது!

    பட்டிமன்றப் பேச்சாளர் போல எதிரணி சொல்வதை மறுக்க வேண்டுமே என்று பேசுவதுபோலப் பின்னூட்டக் கேள்விகளை எழுப்புவதை விடுத்து, இணையத்தில் தேடியிருந்தாலேயே சொல்லப்பட்டவை எந்த அளவுக்கு உண்மை அல்லது தவறு என்பதை உங்களால் பார்க்க முடிந்திருக்கும். உங்களுடைய மருத்துவப் படிப்பு, என் கண்ணில் படாத விஷயங்களையும் கோர்வையாகத் தெரிந்துகொள்ள, விளக்கிச் சொல்ல உதவியாக இருந்திருக்கும்.

    இங்கே பின்னூட்டங்கள் எழுதிய கையோடு, உங்களுடைய பக்கங்களில் அடுத்தடுத்து மூன்று பதிவுகளை எழுதினீர்களே, அங்கேயாவது இங்கேயோ வேறு பதிவுகளிலோ எழுப்பப் பட்ட சந்தேகங்களைத் தீர்க்கிற மாதிரி எழுதினீர்களா? புதிய தகவல்களைத் தந்தீர்களா?

    இல்லை! நீங்கள் சார்ந்த அலோபதி மருத்துவத்தைத் தாங்கிப் பிடிக்க முயன்ற வாதத்தைத் தவிர, பயனுள்ளதாகத் தகவல் எதுவும் இல்லையே!

    அப்புறம் எதற்காக இந்தப் பயனில்லாத வாக்குவாதத்தைத் தொடர்ந்து கொண்டு போகவேண்டும்?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!