அவர் அல்லவோ ஆசிரியர்! வணங்கத் தக்கவரும் கூட!





 வித்யா தர்மே ஷோபதே 
கல்வி அறத்தினால் பிரகாசிக்கிறது!


"நீங்கள் குறிப்பிட்ட சில ஆசிரியர்களை, பெயர் குறிப்பிட்டு எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். நானோ, வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும், ஒரு முக்கியமான செய்தியைப் பாடமாகச் சொல்லிக் கொடுத்தவர்களை, எண்ணக் கூட மறந்து விட்டது, நினைத்து வணங்கிக் கொண்டிருக்கிறேன்.

தத்தாத்ரேயனிடம் உன்னுடைய குரு யார் என்று கேட்ட போது, எனக்கு இருபத்துநான்கு குருமார்கள், ஒவ்வொருவரும் வாழ்க்கையில் எப்படி எப்படி இருக்கவேண்டும் என்ற உண்மையைப் போதித்தார்கள் எனப் பதில் வந்ததாம். வாழ்க்கையை நல்ல வண்ணம் வாழக் கற்றுக் கொடுப்பவனே குரு! ஆசிரியன்! வெறுமே நான் வாத்தியார் வேலையில் இருக்கிறேன், சம்பளம் வாங்குகிறேன், எனக்குப் புனிதர் கும்பிடு போடு என்றால் வேலைக்கு ஆகாது!

அவ்வளவுதான்!"

ஆசிரியர் தினத்தை ஒட்டி இப்படி அதீதக் கனவுகள் என்ற பதிவில்

 
பின்னூட்டமிட்டு ஒரு வருடமாகி விட்டது. இப்போது கூட முந்தைய பதிவில் அதைத் தான் சொல்லி இருந்தேன். எங்கள் ப்ளாக்
 
கௌதமன் சார் அதை "வழக்கமான கிருஷ்ண மூர்த்தி (ரகப்) பதிவு! உங்க ஆசிரியர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார், ஏன் என்று எழுதியிருக்கலாம். அதை விட்டு ......" என்று ஒற்றை வரிப் பின்னூட்டத்தில் தள்ளி விட்டார்!

வணங்கத் தகுந்த ஆசிரியர் என்றால், அது அவர் தான்....!

இது நடந்து ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டது.

தேவகோட்டையில் இருந்து தகப்பனும் மகனுமாக, மதுரையில் ஒரு கல்லூரியில் பி யு சி சேர்வதற்காக வந்திருந்தார்கள். அவர்கள் வந்த நேரம், சேர்க்கை முடிந்துவிட்டது. கிராம சூழ்நிலையில் இருந்து வந்தவர்கள் என்பதால், விண்ணப்பங்கள் பெறுவது, அதை உரிய காலத்துக்குள் சமர்ப்பிப்பது போன்ற விவரங்களை அறிந்திருக்கவில்லை.  சரியான தகவல், வழிகாட்டக் கூடியவர்களும் இல்லை.

பதினைந்து வயதே நிரம்பிய அந்த இளைஞனுக்கு மேலே படிக்க வேண்டும் என்ற ஆர்வம்! வறுமையின் பிடியில் இருந்தபோதிலும். அவனைப் படிக்க வைக்கவேண்டும் என்ற கனவும், தவமுமாகக் கொண்ட குடும்பம். ஒருவர் யோசனை சொன்னார். கல்லூரி முதல்வர் தினசரி காலை, மதுரை கூடல் அழகர் கோவிலுக்கு வந்து சேவிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். அவரைச் சந்தியுங்கள், அவரால் முடிந்ததை செய்வார் என்று நம்பிக்கையும் அளித்தார்.

தகப்பனும், மகனுமாக, அவரைச் சந்திப்பதற்காகக் கூடல் அழகர் கோவிலில் காத்திருந்தார்கள். சந்தித்தார்கள். அந்த இளைஞன், எப்படியாவது கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற தன் கனவைச் சொன்னான். மாநில அளவில் முதல் ஐந்து இடங்களுக்குள் இருந்த அவனுடைய எஸ் எஸ் எல் சி மதிப்பெண்களைப் பார்த்து விட்ட, அந்தக் கல்லூரி முதல்வர் சொன்னார். "இப்படிப் படிப்பில் ஆர்வம் உள்ள பையன்களுக்கு இடம் கொடுக்காமல் எதற்காகக் கல்லூரி நடத்த வேண்டும்? தான் ஏன் கல்லூரி முதல்வராக இருக்க வேண்டும்? நாளைக் காலை கல்லூரிக்கு வா! வரும்போது கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்தத் தயாராகவும் வா!"

ஆசிரியனாக இருப்பது, படிக்க விரும்பும் மாணவனுக்கு உதவியாக இருப்பதே என்று சொல்லாமல் சொன்னது மட்டுமல்ல, அதை செயலிலும் காட்டிய  அந்தக் கல்லூரி முதல்வரின் பெயர் திரு.டி  தோத்தாத்ரி ஐயங்கார்! அவர் முதல்வராக இருந்த கல்லூரி, மதுரைக் கல்லூரி! 
 
அப்படி அவர் கருணையோடு படிக்க இடம் கொடுத்த அந்த மாணவன், அந்த ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தின் கணிதத்திற்கான ஃபிஷர் தங்க மெடலை வென்று, தனக்கு இடம் கொடுத்த கல்லூரிக்கும், நேரமறிந்து உதவிய கருணையுள்ளத்திற்கும் பெருமை சேர்த்தான் என்பது தனிக் கதை!
 


அவர் ஆசிரியர்! இன்றைக்கும் வணங்கத் தக்கவர்!

மதுரைக் கல்லூரியின் குறிக்கோள் வாசகமாக "வித்யா தர்மே
ஷோபதே" கல்வி அறத்தினால் பிரகாசிக்கிறது என்று இன்றைக்கும் முகப்புச் சுவற்றிலும், கோட் ஆப் ஆர்ம்ஸ் என்று சொல்வார்களே அந்தக் கல்லூரிச் சின்னத்திலும் இருக்கிறது. அந்தக் கல்வியை அறத்தினால் பிரகாசிக்கச் செய்த சிறந்த ஆசிரியர் திரு தோத்தாத்ரி ஐயங்கார்!
மதுரைக் கல்லூரியின் முதல்வராக 1953 இல் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்னால், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் கணிதத்துறைப் பேராசிரியராக முப்பத்திரண்டு ஆண்டுகள் பணியாற்றிருக்கிறார். உடன் பணியாற்றிய ஆசிரியர்களை எல்லாம் கிறித்தவம் தனக்குள் மதமாற்றம் செய்துகொண்ட நிலையிலும் கூட, தன்னுடைய தனித் தன்மையையோ, மத நம்பிக்கைகளையோ விட்டுக் கொடுக்காமல், அதே நேரம், எல்லோராலும் மதிக்கப் பட்ட கணிதப் பேராசிரியராக இருந்திருக்கிறார்.

தன்னுடைய அக்கினிச் சிறகுகள் புத்தகத்தில் டாக்டர்  அப்துல் கலாம், தோத்தாத்ரி ஐயங்காரின் விரிவுரை ஒன்றை 1952 இல் கேட்டதை நினைவுகூர்ந்து எழுதியிருக்கிறார். மதுரைக் கல்லூரியில் இருந்து பணியில் ஒய்வு பெற்ற பிறகு, சென்னையில் டிடிஜிடி  வைஷ்ணவ் கல்லூரியின் முதல் பிரின்சிபாலாக, 1964 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி
ருக்கிறார்.

அவரைப் பற்றி இங்கே
 
மற்றும் இங்கே இன்னும் கொஞ்சம் விவரம் தெரிந்து கொள்ளலாம்! என்னென்ன நல்ல பண்புகளை இன்றைய ஆசிரியர்களிடம் காண முடியவில்லை என்ற என் ஆதங்கத்தையும் புரிந்து கொள்ளலாம்.

இன்னும் கொஞ்சம் கதை கேட்க வேண்டுமா? இங்கே




 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!