ஒத்த ரூபாயுந்தாரேன்- ஒரு ஒன்னப்பத் தட்டும் தாரேன்!



ஒத்த ரூபாயுந்தாரேன்- ஒரு ஒன்னப்பத் தட்டும் தாரேன் 
ஒத்துக்கிட்டு வாடி நாம ஓடைப் பக்கம் போவோம்!

என்று ஆரம்பித்து,

பத்து ரூபாய் தாரேன் பதக்கம் சங்கிலி தாரேன் 
பச்சக் கிளி  வாடி படப்புப் பக்கம் போவோம் 

மச்சு வீடு தாரேன் பஞ்சு மெத்தை போட்டுத் தாரேன் 
..................


இப்படி கணக்குப் பண்ணுகிற பசப்பு வாசகங்களைக் கொண்ட நாட்டுப் புறப் பாட்டு ஒன்றை, "நாட்டுபுறப் பாட்டு" திரைப்படத்தில் குஷ்பூ பாடி  ஆடிய பாட்டு அன்றைய நாட்களில் மிகவும் பிரபலம்!   

அதுவே இன்றைக்கு நடப்பு அரசியலுக்குப் பொருத்தமாக இருப்பது காலம் செய்த கோலம்!

ஆ! ராசா! என்று கேள்விப்பட்ட எவருமே மூக்கில் விரல் வைத்துத் திறந்த வாய் மூடாத அளவுக்குப் பெரும் தொகை ஊழலாக வெடித்திருக்கிறது. சுப்ரீம் கோர்ட், எப்படி இந்த மனிதரை இன்னமும் மந்திரியாக நீடிக்க விட்டிருக்கிறார்கள் என்று தன்னுடைய ஆச்சரியத்தைக் கேள்வியாக வைத்ததில் அரசு தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது, சி பி ஐ என்ன செய்திருக்கிறது என்ற கேள்விக்கு இன்று நவம்பர் 15 அன்று பதில் சொல்லியாக வேண்டிய நிலை.

தணிக்கைத் துறை, ஸ்பெக்ட்ரம் 2G ஏலம் விடப் பட்டதில் நடந்த முறைகேடுகளில் அரசுக்கு ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கோடியில் இருந்து ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மதிப்பிட்டு நூற்றெட்டுப் பக்கம் கொண்ட தனது இறுதி அறிக்கையை அரசிடம் அளித்திருக்கிறது.  

இன்று திங்கட்கிழமை, இந்த அறிக்கையைப் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தே ஆக வேண்டிய நிலைமை.

இதை விட மிகக் குறைவான, அல்லது அலட்சியப் படுத்தி விடக்கூடிய தம்மாத்தூண்டு தொகைக்காகவே சசி தரூர் பதவி விலகும்படி அறிவுறுத்தப் பட்டார். கொஞ்சம் கூடுதலான தொகைகளுக்காக வேறு காங்கிரஸ் அமைச்சர்கள் பொறுப்பாக்கப் பட்டு பதவியில் இருந்து விலக்கப் பட்டிருக்கிறார்கள். இப்படிச் செய்யப் பட்ட ஒவ்வொரு தருணத்திலும், காங்கிரஸ் தலைமை குறிப்பாக சோனியா காண்டி மற்றும் குடும்பத்தினர் இவைகளில் சம்பந்தப்படாத பரிசுத்தவான்களாகக் காட்டுவதற்கு முயற்சி நடந்திருக்கிறது. 

ஆ! ராசா! விவகாரம் மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல் போல இருக்கிறது! 

சசி தரூருக்குக் கிடைக்காத சோனியா கடாட்சம் ராசாவுக்குக் கிடைத்தது. கூட்டணி தர்மம் என்று ஏதோ காங்கிரஸ் கட்சி தர்ம நியாயங்களுக்குக் கட்டுப் பட்ட கட்சி போலவும், ஆ! ராசா! தவறே செய்யாத நியாயவான் போலவும் நேற்று இரவு வரை காங்கிரஸ் கட்சியால் தாங்கப் பட்டார். வெறும் பதினெட்டு எம் பிக்களை வைத்துக் கொண்டிருக்கிற திமுக "மிக முக்கியமான கூட்டாளி" அந்தஸ்தை எதை வைத்து அடைந்தது என்பதை ஜெயலலிதா நகர்த்திய ஒரு துருப்புச் சீட்டுஅம்பலத்துக்குக் கொண்டு வந்தது. 

"ஆட்சி கவிழ்ந்து விடும் என்று நினைத்தால், நான் அந்தப் பதினெட்டு எம்பிக்கள் ஆதரவை, வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே பெற்றுத் தருகிறேன்" என்று ஜெயலலிதா பகிரங்கமாக அறிவித்த பிறகு, முக்கியத்துவம், கூட்டணி தர்மம் என்பதெல்லாம் எம்பிக்களின் எண்ணிக்கையில் இல்லை, வேறெங்கோ இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிப் போனது. ஜெயலலிதாவை மேடத்துக்குப் பிடிக்காது என்பது கூட முழு உண்மை இல்லை, பிடித்தது என்ன என்பதைக் கொஞ்சம் கோடிட்டுக் காட்டுவதாகக் கூட இருக்கலாம்!

அந்த வேறு எங்கோ என்பதென்ன என்பது புரியாதவர்கள், குஷ்பூ ஆடிப்பாடுவதை பார்த்து விட்டு, அதற்கப்புறமும் புரியவில்லை என்றால், பேசாமல் ஏதாவது இலவசத் தொல்லைக் காட்சியில் மானாட மயிலாட பார்க்கப் போய் விடுங்கள்!
கூட்டணி தர்மம் வெளியே தெரியவந்தால் இப்படித்தான் நாறுமோ?!

காங்கிரஸ் எந்த அளவுக்கு முதுகெலும்பு உள்ள கட்சியாகத் தன்னைக் காட்டிக் கொள்ளப் போகிறது என்பது இந்த வாரமே சூசகமாகத் தெரிந்து விடும். பீகார் தேர்தல் முடிவுகள் வெளி வருகிற இருபத்தைந்தாம் தேதி வரைக்கும் கூடக் காத்திருக்க வேண்டாம்!

ஒரு தொல்லைக் காட்சி நிகழ்த்தியில் சொல்லப்படும் பஞ்ச லைன் இது! 

ஒரே வார்த்தை, ஓகோன்னு வாழ்க்கை! 

இந்தப் பதிவில் சொல்ல வருவதும் ஒரே வரி தான்! 

காங்கிரஸ் கட்சியைத் தூக்கி எறியுங்கள்!

தூக்கி எறிந்தால், ஓகோன்னு வாழ்க்கை உயர்ந்து விடும் என்று பொய் சொல்வதற்காக அல்ல! இப்போதிருப்பதை விட இன்னும் கேவலமாகப் போய்விடாது என்பது மட்டுமல்ல, நல்ல மாற்றங்கள் வருவதற்கும் அதுவே தொடக்கப் புள்ளி என்பதற்காக!

காங்கிரஸ் கட்சி வெறும் கசங்கிப் போன காகிதப்பூ தான்! தூக்கி எறிவது, குப்பை கூளங்களற்ற அரசியலுக்கு முதல் படி. 

7 comments:

  1. நீங்கள் வழக்கத்திற்கு மாறாக இட்ட இந்த தலைப்பு முதலில் சிரிப்பையே வரவழைத்தது.
    பொதுவாக இங்கு வலையில் காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வு அதிகம் உள்ளதை உணர்கிறேன்.
    பெரும்பாலான பதிவர்கள் காங்கிரசை ஓரம் கட்டவேண்டும் என்ற உணர்வில்தால் எழுதுகின்றனர்.
    இவர்களை ஒருங்கிணைத்து சென்று ,ஆக்கங்களை இந்த ஊடகத்திலிருந்து வெளியிலும் கொண்டுவர தங்களிபோன்ற வர்களின் ஒத்துழைப்பும் உதவியும் தேவை.
    நீங்கள் என் தளம் வருகிறீர்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  2. வாருங்கள் மாணிக்கம்!

    உங்களுடைய பக்கங்களையும் அவ்வப்போது வந்து படித்துக் கொண்டு தான் இருக்கிறேன். இதில் சந்தேகம் என்ன?

    இங்கே வலைப்பதிவுகளில் காணப்படும் காங்கிரஸ் எதிர்ப்பு என்பதுபெரும்பாலும் ஈழப் பிரச்சினையோடு குழப்பிக் கொள்கிற உணர்ச்சியின் அதீதம்! காரியத்துக்காகாது. அந்த நிலையில் நின்று காங்கிரசை எதிர்க்க வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. காங்கிரசை, அதன் தவறான அரசியல் கொள்கைகள், ஆட்சி, ஊழல் இவற்றுக்காகவே எதிர்க்கிறேன். தனிநபர்களைப் பற்றிப் பேச நேரும்போது, அவர்கள் தவறான முன் உதாரணமாக ஆகி விடும் தருணங்களில் மட்டும் விமரிசனமாக எழுதுகிறேன்.

    ReplyDelete
  3. இதே வேலையைச் செய்வது எந்த கட்சியாக இருந்தாலும் நமது எண்ணங்களை இப்படித்தான் வெளிப்படுத்தியாகவேண்டும். இதில் காங்கிரஸ்க்கு எதிர்ப்பு என பார்க்கவில்லை நான்.

    ஆளுங்கட்சியைத்தான் குறை சொல்ல முடியும். நாட்டின் தலையெழுத்தே அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது.

    தாத்தா மிகவும் நம்பகமானவர். ஜெ. நம்பகத்தன்மை குறைந்தவர் எந்த விசயத்தில்? ஆட்சியில் அல்ல, பங்கு போடுவதில்...;)))

    அரசியல் என்றால் மக்க்ளுக்கு நல்லது செய்ய எனச் சொல்வது எல்லாம் பணமதிப்பீட்டில் பார்த்தால் சுமார் இருபது சதவீதம்தான். மீதி தான் வளர்ந்தால் போதும் என்கிற கதைதான்.

    அதனால்தான் அரசியலுக்கு எப்போது தொழில் அந்தஸ்தை கொடுத்து நான் பார்க்கிறேன்.:)))))

    ReplyDelete
  4. வாருங்கள் சிவா!

    இங்கே பதிவின் முழு மையமே முழுக்க முழுக்க காங்கிரஸ் கலாச்சாரக் கருமாந்தரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது தான்!

    அரசியல் தொழில்,வியாபாரம் மாதிரித் தான் என்று வைத்துக்கொண்டாலும், அதிலும் ஒரு குறைந்தபட்ச உத்தரவாதம், தரம் இருக்க வேண்டாமா?

    ReplyDelete
  5. what about our lossed money.?

    nobody able to know final happenings.

    we ourself satisfied the resignation drama scene.

    ReplyDelete
  6. like siva said-

    this is business.

    now sharing business.

    dayanithi maran - how he come back to dmk ?

    the same spectrum issue.

    i think now he will happiest man in dmk.

    ReplyDelete
  7. வாருங்கள் திரு.பாலு!

    இவர்களிடம் என்னென்ன இழந்திருக்கிறோம் என்ற சுரணையே வராதபடி, இலவசங்கள், சலுகைகள், சாதி அரசியல் முதலான மயக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். சுரணை திரும்பினால் அல்லவா, அதைப் பற்றி எல்லாம் கவலைப் பட முடியும்!

    ராஜினாமா செய்துவிட்டதால், பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்துவிட முடியும் என்று ஒரு முயற்சி! இந்தத் தரம் பலிக்குமா என்பது தெரியவில்லை! நேற்று வரைக்கும் வீராவேசமாகப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தவர், இப்போது தலைமறைவாக இருப்பதாக செய்திகள் சொல்கின்றன. பிரதம மந்திரி இது விஷயமாக நாடாளுமன்றத்தில் அறிக்கை கொடுப்பதாக இருந்தது நடக்கவில்லை. கண்டனூர் பானாசீனா மட்டும் ஜேபிசி விசாரணை வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையில் எந்த அர்த்தமும்(பொருளும்) இல்லை என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்! எதில் பொருள் இருக்கும் என்று அவருக்குத் தெரியும் போல் இருக்கிறது!

    மற்றப்படி, இதில் அதிக சந்தோஷப்படுவவது தயாநிதி மாறனாக இருக்கும் என்பதெல்லாம் இப்போதே சொல்லி விட முடிகிற சமாச்சாரமில்லை!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!