ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனின் "அறிவும் நம்பிக்கையும்"!



இணையத்திலேயே ஆர்டர் செய்கிற வசதியைப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்த பிறகு,சமீபகாலமாக புத்தக் கடைகளுக்குச் சென்ற புத்தகம் வாங்குகிற வழக்கம், அநேகமாகக் காணாமலேயே போய்விட்டது. 

என்னதான் இணையத்தில் சுளுவாக வாங்க முடிந்தாலும், நேரடியாகப் புத்தகக் கடைக்குச் சென்று, நூலை கொஞ்சம் புரட்டிப் பார்த்து புத்தம்புதிய காகித மணம், அச்சு நேர்த்தி, உள்ளடக்கம் இவற்றை அவதானித்து வாங்குகிற சுகத்துக்கு இணையாகுமா?

இணையத்தில் தமிழ்ப் புத்தகங்களை வாங்குவதில் உள்ள பெரிய சிக்கல். நாம் ஒரு நல்ல புத்தகத்தை வாங்குகிறோமா, அல்லது குப்பையையா என்று தெரிந்து கொள்ள முடியாது.புத்தகத்தைப் பற்றி, புத்தக ஆசிரியரைப் பற்றிப் பதிப்பகத்தாரும் சரியான தகவல்களைத்தருவதில்லை. புத்தக விமரிசனங்கள் என்பது தமிழைப் பொறுத்தவரை இன்னமும் சரியாக வளராத ஒரு துறைதான்.ஆக, இங்கே அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் விமரிசனங்களை வைத்து மட்டும் ஒரு புத்தகத்தைப் பற்றி எடைபோட முடியாது என்பது தான்!

அந்தவகையில் புத்தகக் கடையில் நேரே சென்று, புத்தகங்களைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்து, அதை எழுதியவரின் நடை, சொல்லப்படுகிற விஷயம், சொல்லப்படும் விதம் எல்லாவற்றையும் அவதானிப்பது மிகவும் அவசியமாகிறது.

சமீபத்தில் மதுரை, சர்வோதய இலக்கியப் பண்ணைக்குச் சென்று, ஒரு சிறிய போராட்டத்தை  நடத்திய பிறகு வாங்கிய நூல்களில் ஸ்ரீரங்கம் வி மோகன ரங்கன் எழுதிய இந்தப் புத்தகமும் ஒன்று! இந்தப்பக்கங்களில் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனின் மோகனத்தமிழை பலமுறை மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்துக்கு நன்றி சொல்லியும், பலமுறை சொல்லாமலும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். 

இப்போது தமிழ்வாசல் கூகிள் வலைக் குழுமத்துக்கு நன்றியுடன்! 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் எழுதிய இந்தப் புத்தகத்துக்கு விமரிசனமாகத் திருமதி பவளசங்கரி அவர்கள் ஓர் இழையில் எழுதியதை, விருந்தினர் இடுகையாக அளிப்பதில் சந்தோஷம் கொள்கிறேன். இப்போதும் கூட, தமிழ் வாசல் குழுமத்திடமோ, திருமதி பவளசங்கரியிடமோ அனுமதி கேட்கவில்லை. அவர்கள் இதைப் பகிர்ந்துகொள்வதில் எந்த ஆட்சேபமும் தெரிவிக்க மாட்டார்கள் என்கிற தைரியம் தான்!!

தவிர ஏற்கெனெவே நீண்ட நாட்களுக்கு  முன்னால், விருந்தினர் இடுகையாக எவரேனும் எழுத முன்வந்தால் சந்தோஷத்தோடு பகிர்ந்து கொள்ளத்தயாராக இருப்பதை ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். 

இப்படி சுட்டுப் போட்டாலாவது, எவரேனும் விருந்தினர் இடுகை எழுத முன் வருகிறார்களா என்ற நப்பாசைதான்!




அறிவும் நம்பிக்கையும்:

பிரியும் இடத்தில் நிற்கும் மனிதன்

- ஆசிரியர் திரு ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் அவர்கள்.


திரு இராஜகோபாலாச்சாரி அவர்கள் கூறிய, இந்து மதத்தையும், இந்தியாவையும் காப்பாற்றியவரே சுவாமி விவேகானந்தர்தான் என்பதையும், சுவாமிஜியின், சிகாகோ பயணச் சொற்பொழிவுகளின் மாபெரும் வெற்றியையும், உலகெங்கும் சுற்றியலைந்து, தாய்த்திரு நாட்டிற்குத் திரும்பியபோது, இந்தியாவின் ஆன்மாவே திரும்பி வந்துவிட்டதாக புளங்காகிதமடைந்த இந்திய மக்களின் மன நிலையையும், நடு நிசி நேரம் தன்னுயிர் பிரியும் வேளையில், [ஆகஸ்ட் 16, 1886]  தன் ஆன்ம சக்திகள் அனைத்தையும் தன்னுடைய மிக நெருக்கமான சீடரான நரேந்திரருக்குத் தாரை வார்த்துக் கொடுத்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வள்ளல் வரை பல விசயங்கள் நமக்குப் பரிச்சயமானதாக இருப்பினும், ஆசிரியரின் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அனைத்தையும் பார்க்கும் போது, பல்வேறு சிந்தனைகள் நம் மனதிலும் விரிவதையும் தடுக்க இயலவில்லை. ஒரு நல்ல நூலின் இலக்கணம் ஒரு வாசகனை கண்மூடித் தனமாக நம்பச் செய்வதை விட, சுயமாக சிந்திக்கத் தூண்டச் செய்வதாக இருக்க வேண்டும். அந்த வகையில் இந்நூல் வெற்றி பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது.

சுந்தரத் தமிழ் துள்ளி விளையாடும் படைப்பு! 
“இரவும், பகலும் முடைந்து நெய்யப்பட்ட ஆடையாய்ச் செல்கின்றன நாட்கள் .............. அறிவும், அறியாமையுமாய்ச் செல்கிறது மனிதனின் முன்னேற்றப் பாதை” ................. இப்படி முன்னுரையின் முதல் வரியிலேயே வார்த்தை ஜாலங்கள் கொண்டு, வாசகர்களை சுண்டியிழுக்கும் நுண்கலை கற்றவர் என்று நிரூபிக்கிறார் ஆசிரியர்.

பறக்க எத்தனிக்கும் தன் குஞ்சுகளைக் காக்கும் பொருட்டு, பெற்ற காக்கைகளின் பரிதவிப்பை, ஒரு கவிதையாக மாற்றியமைத்த பாங்கு, கையில் எடுத்த நூலை கீழே வைக்க முடியாமல் ஒரே மூச்சில் படிக்கத் தூண்டுகிறது.

பதஞ்சலி யோக ஸூத்திரம் தொடங்கி, ஆதாம் ஏவாள் வரை மனம் படுத்திய பாட்டினால், சபிக்கப்பட்ட மனிதனின் நிலையை அழகு கவிதையாக வடித்திருக்கிறார் ஆசிரியர். ‘தான்’ என்ற அகங்காரம் தொலைந்தால்தான் மெய்ஞ்ஞானம் சித்திக்கும் என்பதனை விவரித்திருக்கும் விதம் தெளிந்த நீரோடை..

“அந்த அனுபவங்களின் விஷத்தையெல்லாம் குடித்துக் கழுத்தில் தேக்கியபடி இந்து சமுதாயத்தின் உன்னதத்தையும், இந்து மதத்தின் ஆக்கப்பூர்வமான உயிர்வடிவத்தையும் தம் உணர்வுக் கண்னால் கண்டு, உள்ளம் கசிந்து காதலாகி வந்துற்ற தீங்கிற்கு நெஞ்சம் விதிர்த்துக் கண்ணீர் மல்கி, உயர்வையே எடுத்துரைத்த நரேந்திரனின் பக்குவம் வியத்தற்குரியது”, என்று ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!

ஆசிரியர் உள்ளம் உருக, அத்துணை உணர்வுகளையும் சொல்லால் வடித்து, வாசகரை மெய்சிலிர்க்கச் செய்திருப்பதும் நிதர்சனம்.

ஆலகாலத்தை கண்டத்தில் தாங்கிய சிவபெருமானை முன்னிறுத்தியிருக்கும் பாங்கு அவர்தம் ஆன்மீக உணர்வையும் பிரதிபலிக்கிறது.

ஒரு சில இடங்களில் ‘ பரிவ்ராஜக வாழ்க்கை’ போன்று வடமொழிப் பயன்பாடு இருந்தாலும், அதற்கான தமிழாக்கமும் வாசகருக்குப் புரியும் வண்ணம் எளிய நடையில் வழங்கியிருப்பதும் சிறப்பு.

படிப்பறிவற்ற வாழ்க்கையை ‘ஊருண்கேணி’ என்று உவமைப்படுத்திய விதம் அற்புதம்.

” அறிவு என்பது முதலில் நம்பிக்கைகளின் தளைகளை அவிழ்க்கும், சிறைப்படுத்தும் வழக்க நெறிகளினின்றும் மனிதனை புறத்தனாக்கும் “ - என்ற ஆசிரியரின் கூற்று, Bertrand Russellன் "Useless Knowledge ", என்ற கட்டுரையை நினைவு கூறும் விதமாக அமைந்துள்ளது.

நரேந்திரர், விவேகாநந்தராக மாறிய சந்தர்ப்பத்தை நயம்பட எடுத்து உரைத்திருக்கின்றார்.

நரேந்திரர் மதக்கல்வியை கையாண்ட விதம் பற்றிய ஆசிரியரின் பார்வை வாசகரையும் சிந்திக்க வைக்கக் கூடியதாகவே உள்ளது.

வேதாந்தம் அமைப்பியல் குறித்த ஆசிரியரின் ஆழ்ந்த ஞானம் வியப்பில் ஆழ்த்துகிறது. " வேதத்திலேயே வந்திருந்தாலும் அறிவுக்குப் பொருத்தமாக இருந்தால் மட்டுமே ஏற்கத் தகுந்தது’, என்ற ஆசிரியரின் தீர்ப்பு பாரபட்சமற்றது.

19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலக் கல்வியின் விடியலில் மகிழ்ந்து அறிவியக்கக் கதிர்களில் குளித்த நெஞ்சங்களின் சூழலை, மனோத்தத்துவ முறையில் ஆய்ந்தறிந்து விளக்கமளித்துள்ளது வரவேற்கத்தகுந்தது.
ஆண்டவன் மீது பக்தர்கள் கொள்ளும் பக்தியை காதலன், காதலி மீது கொள்ளும் தீராக் காதலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நவீன வேதாந்தப் போக்கும் காணப்  பெறுகிறது.கடவுளின் அருகில் எளிதாகச் சென்றடையும் மார்கத்தை மேலும் எளிதாக்க முயற்சித்திருக்கிறார் ஆசிரியர்.
பிரம்மம் சத்யம், உலகம் மாயை, ஜீவன் பிரம்மமே என்ற அத்வைதத்திற்கு ஆசிரியரின் வியாக்கியானம் தேர்ந்த ஞானமுள்ளதாகவும் பல இடங்களில் ஓஷோவின் தத்துவங்களோடு ஒத்துப் போவதாகவுமே உள்ளது.

விசிஷ்டாத்வைதத்தையும் விட்டுவைக்கவில்லை இந்த வித்தகர். ஸ்ரீநாத முனிகள் அருளிய மறைந்து போன ‘யோக ரகஸ்யம்’, நூல் குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சங்கப் புலவர்களின் பார்வையில் காதல் மற்றும் காமத்தின் விளைவுகள், அன்பின் ஐந்திணை என்ற குறியீட்டால் அடி முதல் நுனி வரை அலசி ஆய்ந்திருக்கிறார்.

விவேகாநந்தரின் உபதேசங்களை ஊடுறுவி அதனைத் தெளிவுற தம் பாணியில் விளக்கியுள்ளார். ஒரு வேறுபட்ட கோணத்தில், ஹெர்மன் ஹெஸ்லேயின் ‘சித்தார்த்தாவில்’, சித்தார்த்தனின் தனிமையை வெகு நேர்த்தியாக விவேகாநந்தரின் தனிமையுடன் ஒப்பிட்டு , அதன் ரணம் குறித்தும் விவரித்திருக்கிறார்.

உணர்ச்சிச் சூழல்களும், அறிவுச் சுடர்களும் மாறி மாறி வரும் ஒரு பின்னிப் பிணைந்த ஆளுமையாக நம்மில் பதிவு பெறுகிறவர் விவேகாநந்தர் என்ற ஆசிரியரின் கூற்று ஏற்புடையதாகவே உள்ளது.

விவேகாநந்தரையும், நரேந்திரரையும் இரு வேறு உயிர்களாக உருவகப்படுத்தி, இருவரையும் ஒப்புமைப்படுத்தி, இரண்டிற்குமான பிணக்கத்தையும் துல்லியமாக எடுத்துக் காட்டியிருப்பதிலும் வெற்றி கண்டுள்ளார் என்றே கூறலாம்.

மேலை நாட்டு மத நம்பிக்கைகள், அராபிய தத்துவ அறிஞர் அவர்ரோஸ், கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில், அக்லினாஸ் இப்படி அனைவரின் தத்துவங்களையும் அலசி ஆயத் தவறவில்லை இந்த தத்துவ ஞானி.

சுருங்கச் சொன்னால், விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீராமானுஜர், ஆழ்வார்கள் மட்டுமன்றி உலகின் பெரும்பாலான மதங்களையும்,  தத்துவ ஞானிகளையும் கலந்தாய்ந்து தம் கருத்துக்களையும் உள்ளிருத்தி ஒரு அரிய படைப்பாக்கியிருக்கிறார் ஆசிரியர்.

‘பிற்றை நிலையில் சிந்திக்கும் பொழுது’, என்ற அழகிய தலைப்புடைய இறுதி அத்தியாயம், இம்முழு நூலின் முத்தாய்ப்பாக அமைந்திருக்கிறதென்றால் அது
மிகையாகாது.மஜீம்தாரின் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிய கட்டுரையை , அதன் உணர்வலைகளில் ஏதும் மாற்றம் வந்துவிடக்கூடாது என்ற உந்துதலினாலோ என்னவோ அதனை அப்படியே ஆங்கிலத்திலேயே அளித்துள்ளார்.

குறிப்புதவி நூல்கள் என்று 67 பெயர்கள் கொண்ட ஒரு பெரும் பட்டியலையே குறிப்பிட்டும், மனம் நிறைவடையாத ஆசிரியர், “இப்படியா அப்படியா என்று தீர்ந்துவிடாத இத்தகைய தொல்லை இன்பமான அவஸ்தையில் இருந்து கொண்டு தான் இந்த நூலாக்கம் வெளிவருகிறது”, என்று முடித்திருப்பது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதோடு, திரும்பவும் முதல் பக்கம் நோக்கி பார்வையைத் திருப்பவும் வைக்கிறது....................

இந்த நூல் உண்மையிலேயே மனித குலத்தின் மிகப் பெரிய சமன்பாடுகளில் ஒன்றின் தீர்வு என்பதிலும் மிகையில்லை !!

88 பக்கங்கள் கொண்ட, தமிழினி வெளியிட்டுள்ள இந்நூலின் விலை ரூ.55.

இதை எழுதிய திருமதி.பவள சங்கரிக்கு நன்றியுடன்!

இந்த இழையில் திருமதி பவளசங்கரியின் விமரிசனத்துக்குத் திரு ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஒரு பதில் எழுதியிருந்தார். விமரிசகரின் பார்வைக்குத் தப்பிய சில விஷயங்களைத் தெளிவு படுத்தியதாக இருந்த அந்தப் பதிலையும் காணலாம்!

1)  பதஞ்சலி யோக ஸூத்திரம் தொடங்கி, ஆதாம் ஏவாள் வரை மனம் படுத்திய பாட்டினால், சபிக்கப்பட்ட மனிதனின் நிலையை அழகு கவிதையாக வடித்திருக்கிறார் ஆசிரியர். ‘தான்’ என்ற அகங்காரம் தொலைந்தால்தான் மெய்ஞ்ஞானம் சித்திக்கும் என்பதனை விவரித்திருக்கும் விதம் தெளிந்த நீரோடை..


2)படிப்பறிவற்ற வாழ்க்கையை ‘ஊருண்கேணி’ என்று உவமைப்படுத்திய விதம் அற்புதம்.


--- இங்கு வெறும் படிப்பறிவற்ற வாழ்க்கையௌக் குறிக்கவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையைக் குறித்தது.


3)‘ வேதத்திலேயே வந்திருந்தாலும் அறிவுக்குப் பொருத்தமாக இருந்தால் மட்டுமே ஏற்கத் தகுந்தது’, என்ற ஆசிரியரின் தீர்ப்பு பாரபட்சமற்றது.


இது ஆசிரியரின் தீர்ப்பு அன்று. வேதாந்தத்தின் தீர்ப்பு. அதைத்தான் வியந்து ஆசிரியரும் விளக்கியிருக்கிறார். மிகப் பழஙகாலத்திலேயே இவ்வாறு அறிவின்  கறார்தனங்களை மிகக் கச்சிதமாக வேதாந்தம் அறுதியிட்டு உரைத்துவிட்டது என்பதும் அதை மழுங்க அடித்துப் பல இயக்கங்கள் மீதூர்ந்ததும் ஆசிரியரால் கவனப் படுத்தப் படுகிறது. பரவாயில்லை அடுத்த அடுத்த ரீடிங்குகளில் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.


4)ஆண்டவன் மீது பக்தர்கள் கொள்ளும் பக்தியை காதலன், காதலி மீது கொள்ளும் தீராக் காதலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நவீன வேதாந்தப் போக்கும்
காணப்பெறுகிறது


இது நவீன வேதாந்தப் போக்கு அன்று. தமிழ் கூறும் நல்லுலகத்துச் சான்றோரும், தமிழ் நாட்டு வேதாந்திகளும் ஆயிரத்தி ஐந்நூறு வருஷங்களுக்கு முன்னமேயே கூட்டிணைந்து இயற்றிய பக்தி இயக்கங்களான ஆழ்வார்களின் சங்க அகத்திணைக் காதல் கெழுமிய பக்தி சாதித்த உன்னதம். அதைத்தான் நூல் விளக்க அரும்பாடு படுகிறது.


5)விவேகாநந்தரையும், நரேந்திரரையும் இரு வேறு உயிர்களாக உருவகப்படுத்தி, இருவரையும்..


இருவேறு உயிர்கள் அன்று அம்மா, இரு வேறு ஆளுமைகள் என்பது பொருத்தம்.  எனினும் இது மைனர் பாயிண்ட்.


ஒரு நல்ல சஹ்ருதயரை (ஒத்த உள்ளத்தர்) உங்களுக்குள் காணக் கொடுத்தமைக்கு நன்றி.

என்ன இது! கட் அண்ட்பேஸ்ட் வேலைகளைக் குறித்துப் பல இடங்களில் கிண்டல் செய்த இவனும் இந்த வேலையை ஆரம்பித்துவிட்டானா என்று ஆச்சரியப்பட வேண்டாம்! 

கொஞ்சம் ஆழ்ந்து படித்து, சொல்லப்பட்டதைக் கவனமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டிய புத்தகம் இது. வெறும் கதையைப் போல மேலோட்டமாக வாசித்து முடித்துவிடுகிற ரகமல்ல.அதனால் இதைப் பற்றி எழுதுவதற்கே, நான் நிறைய உழைத்தாக வேண்டும்!இப்போது புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய பார்வையில், இதன்மீதான கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்கு முன்னால்..........!


அதற்கு முன்னால் இந்த நம்பிக்கை, அறிவு என்று இரண்டு விதமாகச் சொல்லப் படுகிறது இல்லையா, அதில் நம்பிக்கை என்பது என்ன என்பதைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்!

அறிவு என்பது தேடலில் கிடைப்பது! அதே சமயம் நம்பிக்கையோ தேடலுக்குத் தூண்டுதலாக இருப்பது! தேடியது இதைத்தானா என்பதைத் தெளிவு படுத்தக் கூடியதாகவும் இருப்பதும் நம்பிக்கைதான்!  

"In the ignorance and darkness of the beginning, faith is the most direct expression of the Divine Power which comes to fight and conquer. "


அறியாமையும்
, இருளும் கூடிய தொடக்கத்தில், நம்பிக்கை ஒன்றே மனிதனுக்குத் துணையாக வழங்கப்பட்ட சாதனமாக இருக்கிறது, என்று ஒரு உரையாடலில்  ஸ்ரீ அரவிந்த அன்னை தெளிவுபடச் சொல்கிறார். 

இன்னொரு இடத்தில், இன்னும் கொஞ்சம் விரிவாக,
 
“Faith is the movement of the soul whose knowledge is spontaneous and direct.

Even if the whole world denies and brings forward a thousand proofs to the contrary, still it knows by an inner knowledge, a direct perception that can stand against everything, a perception by identity.

The knowledge of the psychic is something which is concrete and tangible, a solid mass. You can also bring it into your mental, your vital and your physical; and then you have an integral faith - a faith which can really move mountains.”


 -ஸ்ரீ அன்னை 

டிஸ்கி 1: இந்தப்பதிவு இரண்டுமூன்று நாட்களுக்கு முன்னாலேயே வந்திருக்க வேண்டியது! ப்ளாக்கரில் என்ன தகராறு என்று தெரியவில்லை, பப்ளிஷ் ஆனபிறகும் உரலியை அணுக முடியவில்லை. திரட்டிகளில் இணைக்கவும் முடியவில்லை. இரண்டு மூன்று தரம் டெலிட் செய்துபார்த்தும் பயனில்லாமல் போனது . ரீடரில் வாசிப்பவர்களுக்கு மட்டும் மூன்று முறை வந்திருக்கும்! பொறுத்துக் கொள்ளவும்!

டிஸ்கி 2இந்தப் புத்தகம், பதிவர் வால்பையன் அவசியம் படிக்க வேண்டிய புத்தகமாக சிபாரிசு செய்கிறேன்! போனபதிவிற்கு முந்தைய பதிவில், அவர் சரவெடியாக வெடித்த கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் இன்னொரு பரிமாணத்தில் இருந்து விடை சொல்வதாக இருப்பதால், நண்பர் வால்பையனுக்காக இந்தப் புத்தகம் என்னுடைய பரிசாக ரெடியாக இருக்கிறது!



3 comments:

  1. விவேகானந்தர் இந்தியர்கள் வாழ்வு முன்னேற தன் வாழ்நாள் முழுதும் தவம் செய்தார். காந்தி விவேகானந்தர் இயற்றிய ராஜயோகம் படித்து வைராக்கியத்துடன் ப்ரிடிஷருடன் போரிட்டு சுதந்திரம் வாங்க பாடுபட்டார்.
    இந்த பெரியவர்கள் பாடுபட்ட உழைப்பு ஒரு குடும்பம் தழைக்க தான் உதவி இருக்கிறது. மேலும் கடந்த 70 வருடங்களில் '1984 riots', 'Emergency in Tamilnadu and Gujrat' மற்றும் நூற்று கணக்கான உழல்கள் என்று ஒரு குடும்பம் வாழையடி வாழையாக வாழத்தான் இவர்கள் உழைதார்களா ? என்றும் தோன்றுகிறது. இந்த ஒரு குடும்பத்தை தூக்கி எறிய இந்தியர்களுக்கு எத்தனை அடி வாங்கினாலும் மனம் வருமா ? சரி, இந்தியர்களுக்கு மானம், வெட்கம், சூடு, சொரணை போன்றவைகள் வருவதருக்கு அறிகுறியாவது தெரியுதா ? கடவுளிடம் இருந்து முதலில் இந்தியர்களுக்கு மானம், வெட்கம், சூடு, சொரணை போன்றவை கிடைத்தால் நலம்.

    ReplyDelete
  2. வாருங்கள் அமர்!

    ஒரு குடும்பம் தழைப்பதற்காக நிச்சயமாக விவேகானந்தர் உட்பட எவருமே இத்தனை பாடுபட்டிருக்க மாட்டார்கள்!

    இப்படி ஆனதில் ஜனங்களாகிய நம்முடைய தவறும் மிக அதிகமாகவே இருக்கிறது. சுதந்திரம் என்பது நேரு மாமாவும் வேறு சிலரும், ஏதோ பெட்டிக் கடைக்குப் போய் மிட்டாய் வாங்குகிற மாதிரி வாங்கியதா? சுதந்திரத்துக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய ஒரே விலை, எப்போதும் விழிப்புடன் இருப்பதே! அதன்படி விழிப்புடன் இருக்கிறோமா?

    நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம், உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கித் தருகிறோம், தேக்கு மரம் வளர்த்துத் தங்கமாக அள்ளுங்கள்,என்று மோசடி என்று நன்றாகத் தெரிந்துமே போய் விழுகிற ஜனங்கள், தாங்கள் ஒன்றுமே செய்யவேண்டாம், இலவசமாகவே எல்லாமே வீடுதேடிவரும் என்று அரசியல்வாதிகள் சொல்வதையும் தான், மோசடி என்று தெரிந்துமே தொடர்ந்து ஏமாறிக் கொண்டிருக்கிறார்கள். இப்படித் தொடர்ந்து ஏமாளிகளாகவே இருப்பதென்று முடிவு செய்துவிட்டவர்களை அந்த ஆண்டவன் தான் வந்து காப்பாற்ற முடியுமா?

    இதில் கடவுளைச் சொல்லிக் குற்றமில்லை! இப்போதும் கூட அவன்தான் வந்து காப்பாற்ற வேண்டும் என்று நாம் செய்ய வேண்டியதைக் கூட செய்யாமல் இருக்கிறோம் பாருங்கள்................


    அங்கே தான் கொஞ்சம் கவனம் வேண்டி இருக்கிறது!. கவலைதருவதாகவும் இருக்கிறது!

    ReplyDelete
  3. There are human beings also who indulge in vice - one vice or another, like drinking or drug-injections - and who know very well that this is leading them to destruction and death. But they choose to do it, knowingly.

    Q.: They have no control over themselves.

    There is always a moment when everyone has self-control. And if one had not said "Yes" once, if one had not taken the decision, one would not have done it. There is not one human being who has not the energy and capacity to resist something imposed upon him - if he is left free to do so. People tell you, "I can't do otherwise" - it is because in the depths of their heart they do not want to do otherwise; they have accepted to be the slaves of their vice. There is a moment when one accepts.

    - The Mother
    [CWMCE, 8:5]

    ஸ்ரீ அரவிந்த அன்னையின் இந்த வார்த்தைகளை வைத்து யோசித்துக் கொண்டிருந்தேன். திரு அமர்ஹிதூர் எழுப்பிய கேள்விக்கு, சரியான பதில், ஜனங்கள் பழக்கத்தின் அடிமைகளாகவே இருந்துவிட்டுப் போய் விடுவதே சுகம் என்று தேங்கி விட்டார்களோ என்பதுதான். அதிலேயே உட்கிடையாக பழக்கங்களின் அடிமைகளாக இருப்பதில் இருந்து விடுபடுவது என்ற தீர்மானமான முடிவுக்கு ஜனங்கள் வந்துவிட்டால், நிலைமை மாறும் என்பதுதான்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!