தீபம் ஒன்று ஏந்துவோம் .....!



2G தெரியும், சோனி யா G தெரியும்! ஆனால் இந்த G க்களுக்குப் பின்னால் இருக்கும் ஊழலின் பரிமாணம் என்ன என்று தெரியுமா?


சுண்டெலிகள் கர்ஜனையில் அரளும் அராபிய அரசுகள்!டூனீஷியாவில் சமீபத்தில் வெடித்துக் கிளம்பிய கலவரம் அரேபிய அரசுகளைக்
கொஞ்சம் ஆட்டம் காண வைத்திருக்கிறது. ஜனங்களை எத்தனை நாள்தான் ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியும்? சுண்டெலிகள் கர்ஜனையில் ஆட்டம் கண்ட அரேபிய அரசுகள் என்று இந்த சம்பவத்தை வர்ணிக்கிறது ஆஸ்திரேலிய வலைத்தளம் ஒன்று.


ஜனங்களை எப்போதுமே ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதை, ஒன்றன் பின்ஒன்றாக வெடித்துக் கிளம்பிக் கொண்டிருக்கும் இந்தச் செய்திகளே அடிக்கோடிட்டுச் சொல்கின்றன.

அவை நேரடியாகச் சொல்லாத செய்தியும் ஒன்றுண்டு!
 
ஜனங்கள் விழித்துக் கொள்ளாவிட்டால், தங்களுடைய சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ளத் துப்பில்லாமல், எலிகளுக்குப் போடுகிற பொறி மாதிரி,வெறும் இலவசங்கள், சலுகைகள், தேர்தல் நேரத்தில் மட்டுமே கிடைக்கிற கருணையே போதுமே, மிச்ச நேரங்களில் இலவசத் தொல்லைக் காட்சிகளில் மானாட மயிலாட மங்கையர்கள் மார்பாடப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என்றிருப்பவர்களை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்பதுதான் இந்த இழையின் அடிநாதம்.

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்!



ஊழல் இருக்கத்தான் செய்கிறது!ஆனால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று தங்களுடைய பொறுப்பைத்தட்டிக் கழிக்கவோ, அல்லது அரசியல்வாதிகளால் சின்னாபின்னப்படுத்தப்பட்ட தேசத்தை எப்படி மீட்பது என்பது தெரியாமலோ இத்தனை ஆண்டுகளைக் கழித்துவிட்டோம்!


அன்னா ஹசாரே என்ற 73 வயது சமூக ஆர்வலர், காந்தீய வழியில் ஊழலுக்கெதிரான போராட்டம் ஒன்றை ஆரம்பித்து இன்றோடு மூன்று நாட்களாகிறது. ஊழலுக்கெதிரான போராட்டம், சாகும் வரை உண்ணாவிரதம் என்று புதுதில்லி ஜந்தர்மந்தர் பகுதியில் ஆரம்பித்த நிலையில் ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.


ஊழலை ஒழிக்க ஜனலோக்பால் சட்ட மசோதாவைப் பரிசீலித்து முடிவு செய்யும் அமைச்சர்கள் குழுவில் சரத் பவார்,கண்டனூர் பானாசீனா,கபில் சிபல்,முக அழகிரி, இந்தவரிசையில் கொஞ்சமும் பொருந்தாத ஏகே அந்தோணி ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களை வைத்து எடுக்கப்படும் முடிவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது தெரிந்ததுதான்!

சி என் என் ஐ பி என் தளத்தில் சாகரிகா கோஸ்  காந்தீய வழி முறைகளில் ஊழலை எதிர்த்துப் போராட முடியுமா என்ற கேள்வியுடன் ஒரு பேட்டி எடுத்திருப்பதை
இந்தச்  சுட்டியில் பார்க்கலாம்! வீடியோ முடிந்தவுடன்,சிலவினாடிகள் இடை வெளிக்குப் பிறகு தொடர்ந்து இந்தப்பேட்டி ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்கிறது. அபிஷேக் மனு சிங்வி என்ற காங்கிரஸ் பேச்சாளர் சமாளிக்க முடியாமல் திணறுவதைப் பார்க்கலாம்.


ஊழலுக்கெதிரான இந்தியா என்ற முழக்கத்தோடு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் அன்னா ஹசாரே பின்னால் பெரிய சக்தியாக உருவாகி வருகிறார்கள்.பேஸ்புக், ட்விட்டர் என்று எல்லாத் தளங்களிலும் இன்றைக்குஉச்சரிக்கப்படும் ஒரே பெயர் அன்னா ஹசாரே!

ஊழலுக்கெதிராக இந்தியாவே அணிதிரள ஆரம்பித்திருப்பது ஒரு நல்ல திருப்பம்!

இந்தத் தளத்தில் உடனடியாகச் செய்திகள்!

இன்று மாலை சென்னையிலும் அன்னா ஹசாரே தொடங்கியிருக்கும் இந்தப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு கூட்டம்
நடக்கவிருப்பதாக சகபதிவர் விழியனுடைய ஸ்டேடஸ் மெசேஜில் பார்க்க முடிந்தது.

ஊழலுக்கெதிரான உணர்வுகள் பெருந்தீயாகப்பரவட்டும்!ஊழல் அரசியல்வாதிகள் பிடியில் இருந்து இந்த தேசம் மறுபடி விடுதலை பெறட்டும்!


நம் ஒவ்வொருவர் கைகளிலும் ஒரு தீபம்.....!


ஊழல், தகுதியில்லாத அரசியல்வியாதிகள், திறமையில்லாத அரசு இயந்திரத்தின் பிடிகளில் இருந்து விடுபட,ஆரம்பமாகி இருக்கும்  இந்த இரண்டாவது விடுதலைப் போரில் உறுதியோடு முன்னேறுவோம்!


ஒருபொழுதாவது உண்ணாவிரதம் இருக்க நாமும் முயற்சிப்போம்! அரசியல் பிழைத்தார்க்கு மக்களுடைய எதிர்ப்பே கூற்றாகும் என்பதை ஒருமித்த குரலில் எடுத்துச் சொல்லுவோம்.


இது அன்னா ஹசாரே என்ற தனிமனிதருடைய போராட்டம் இல்லை! 


இது நம்முடைய போராட்டம்!நமக்காக அவர் நடத்தும் இந்தப் போராட்டத்தில் நம்முடைய பங்களிப்பும் இருக்க வேண்டாமா? நம்முடைய சந்ததிகளுக்கு, ஊழலற்ற ஒரு அரசியல் அமைப்பை ஏற்படுத்தித்  தர முனைய வேண்டாமா? 

கிரிக்கெட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் தேவைதானா? அதில் ஒரு பகுதியையாவது ஊழலுக்கெதிராகத் திருப்ப முடிந்தால் அது நாம் இந்த தேசத்துக்குச் செய்கிற மிகப்பெரிய கடமை!

வாருங்கள்! தோள்கொடுப்போம்! 





 

3 comments:

  1. I have already posted a small story about Shri. ANNA HASARE. in my Thamizh blog.
    We have to spread the message as much as possible. Not to depend up on the filthy /stinky Thamizh T.V.channels. They are all trying to block out the happenings at Janta Mantar in New Delhi.

    ReplyDelete
  2. இப்போதுதான் ரீடரில் படித்து முடித்தேன் மாணிக்கம்!

    இங்கே தமிழ்நாட்டில் நிலைமையே இருக்குமாராகத் தான் இருந்துவருகிறது. கைப்புள்ளகளும், மப்பில் திரிகிற மைனர்களும் தமிழ்நாட்டு மக்களுக்கு முக்கியமாகத் தெரிகிற அளவுக்கு,தங்களுடைய சொந்த சோகங்கள் கூடப்பெரிதாகத் தெரிவதில்லை.

    ReplyDelete
  3. ஏன் அண்ணா ஹசாரேவின் போராட்டத்துக்கு தமிழ்நாட்டில் / தென்னிந்தியாவில் பெரும் ஆதரவு இல்லாமல் இருக்கு . ஒரு வேளை தேர்தல் நேரம் என்பதாலா?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!