நமக்கும் கொஞ்சம் பொறுப்பு இருக்கிறது.........!



சிலகாலத்துக்கு முன்னால், இணையப்பயன்பாட்டின் மேல் இந்திய அரசு விதிக்க உத்தேசித்திருக்கும் கட்டுப்பாடுகளைக் குறித்து, ஒரு எச்சரிக்கைக் குரல் சில வலைக்குழுமங்களில் ஒலித்தது. வழக்கம் போலவே, எவராலும் சீரியஸாக எடுத்துக்கொள்ளப்படாமலேயே, பத்தோடு பதினொன்றாகக் காணாமலும் போய்விட்டது.

குழும விவாதங்கள், இணையம் ஆரம்பித்தகாலத்தில் இருந்த வெற்று அரட்டை, நான் இங்கிட்டு யார் அங்கிட்டு என்று கேட்டு வாங்கும் சுய சொறிதல்கள்,மண்ணெண்ணைய் விட்டு ஓட்டும் ஆட்டோ எழுப்புகிற டர்ர்..க்ர்ர்ரர்ர்ர்ரர்ர்ர்ர் சத்தம் மாதிரிக் கொஞ்சம் ஓவராகவே எழுப்புவது,அடைப்பான்களுக்குள் ஏகப்பட்ட கேள்விக் குறி அல்லது ஆச்சரியக் குறிகளைப் போட்டு வெற்றுப் பின்னூட்டங்களாகவே நிரப்புவது,ஏகப்பட்ட ஸ்மைலி அல்லது அன் ஸ்மைலி ஐகான்களை மட்டும் வைத்து நிரப்புகிற ஆதிகாலத்து  இணையப் பயன்பாட்டுக் கலாச்சாரங்களில் இருந்து விடுபட்டு, ஒரு ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றம், அல்லது விவாதம் நிகழ்கிற களமாக, எழுதுகிறவருக்கும் வாசிக்கிறவருக்கும் பயனுள்ள தகவல் பரிமாற்றம் நிகழ்கிற களமாக உயரவேண்டாமா?

தை எழுதுவதே "நான் அப்படித்தான் இருப்பேன்' என்று இருப்பவர்களுக்காக இல்லை மாற்றத்தின் விதையாக இருக்க சம்மதிக்கும் சில தனிநபர்களே, மாற்றத்தை சாதிக்கிறார்கள்.அப்படிக் கொஞ்சம் பேர் கிடைத்தாலும் போதும்! குழுமங்கள், வலைப்பதிவுகள்  ஒரு ஆரோக்கியமான சிந்தனை, மாற்றுச் சிந்தனைகளுக்கான  களமாக உருவாகும் நேரமும் வரும்!

ந்தவகையில், இன்றைய தினமணி இதழில் வெளியாகியிருக்கும் இந்தத் தலையங்கம் இரண்டு முக்கியமான விஷயங்களைக் கோடிட்டுக் காட்டி இருக்கிறது. முதலாவது, ஆரம்ப வரிகளில் சொன்ன இணையப் பயன்பாட்டின் மீது அரசு உத்தேசித்திருக்கும் கட்டுப்பாடுகள் குறித்தானது. அடுத்தது, நம்மிடம் வளர்த்துக் கொள்ளவேண்டிய பண்பு-  தேசீய உணர்வு (நேஷனாலிடி, நேஷன்ஹூட் ) குடிமைப்பண்பு (சிடிசன்ஷிப்). ஜனநாயகம் என்பது இந்த இரண்டு அடிப்படைகளின் மீது கட்டப்படுவதாக இருந்தால், நீடித்து நிலைக்கும்.

தினமணி தலையங்கம்: நமக்கும் தேவை அக்கறை!

First Published : 25 May 2011 02:09:59 AM IST

ணையதளப் பயன்பாடு தொடர்பாக அரசு விதித்துள்ள புதிய விதிகளையும் கட்டுப்பாடுகளையும் சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது எதிர் பார்த்ததே. ஆனால், இந்த விஷயத்தில் தவறு முழுக்க முழுக்க அரசின் தரப்பில் மட்டும் அல்ல என்பது தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலர் ஆர்.சந்திரசேகரின் விளக்கத்திலிருந்து தெரிகிறது. மக்களாகிய நாம் உரிய  காலத்தில் அரசின் உத்தேச யோசனைகளைப் படித்துப் பார்த்து கருத்துத் தெரிவிக்கத் தவறிவிட்டோம் என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

ணையதளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பத்திரிகை வாசகர்கள் எண்ணிக்கைக்கு நிகராக உயர்ந்து வருவதாக சமீபத்திய கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இணையதளத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளைக் கண்காணிப்பதும், பொது நலனுக்கும் சில வேளைகளில் தனிநபர்களுக்கும் எதிராக ஒருதலைப்பட்சமாகத் தெரிவிக்கப்படும் கருத்துகளைப்படித்துப் பார்த்து உடனுக்குடன் அகற்ற வேண்டியதும் சமுதாயக் கடமையாகும்.

பாசமான, அருவருக்கத்தக்க வர்ணனைகள், உரையாடல்கள், கருத்துகள் போன்றவற்றையும் அழிக்க வேண்டியது அவசியம்.

எனவே இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மட்டும் இந்த விதிகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுவந்துவிட்டதாக அரசைக் குற்றம் சாட்டுவது ஒருதலைப்பட்சமானது என்பதில் சந்தேகமே இல்லை. அதே வேளையில் அரசின் சில கட்டுப்பாடுகள் தேவைக்கு அதிகமாகவோ, அதன் உள் நோக்கத்தைச் சந்தேகிப்பதாகவோ இருப்பதை மறுக்க முடியாது. ஏப்ரல் 11 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகளையும் கட்டுப்பாடுகளையும் அரசு எப்படிக் கையாள்கிறது என்று பார்த்து எதிர்காலத்தில் அவற்றைத் திருத்துவதும் மேம்படுத்துவதும் சாத்தியமே.

னவே, ஒரேயடியாக இதை எதிர்ப்பதும் கண்டிப்பதும் இப்போதைக்கு அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது.

தற்கும் முன்னதாக தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலர் ஆர். சந்திரசேகர் தெரிவித்துள்ள சில கருத்துகள் அனைவரும் கவனிக்கத் தக்கவை.

ணையதளப் பயன்பாட்டாளர்களைக் கண்காணிக்கவும், சட்ட விரோதமான செயல்களுக்கு அதைப் பயன்படுத்துகிறவர்களை அடையாளம் காணவும், அவர்கள் மீது நீதிமன்றங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கவும் இந்த விதிகளும் கட்டுப்பாடுகளும் அவசியமானவை என்பதால் இதைச் சட்டத்தின் மூலமாகவே அமல் படுத்தி வருவதாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ரசின் ஒப்புதலுடனோ அல்லது நீதிமன்றங்களிடம் தெரிவித்து அவற்றின் ஆணைப்படியோதான் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

ணையதளத்தைத் தவறான செயல்களுக்கு அல்லது தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்துவோர் யார், அவர்களுடைய பாஸ்வேர்டு, பாலினம், கல்வி, வயது,தொழில், முகவரி போன்ற தகவல்களைத் திரட்டவும் அவர்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நீதி மன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கவும், அவர்களுடைய செய்கை தேச விரோதமாகவோ சமூகத்தில் பதற்றத்தையும் பகைமையையும் ஏற்படுத்தும் விதத்திலோ இருந்தால் உரிய போலீஸ் அமைப்புகள் மூலம் விசாரிக்கவும் இந்த விதிகளும் வழிகாட்டு நெறிகளும் உருவாக்கப் பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.

புதிய விதிகளை அமல் செய்வதற்கு முன்னால் நாடு முழுவதும் உள்ள மக்கள் அறியவும், அதைப்பற்றி விவாதிக்கவும், உரிய திருத்தங்களைக் கூறவும், ஆட்சேபங்கள் இருந்தால் உரிய வகையில் தெரிவிக்கவும் வரைவு வாசகங்களை வெளியிட்டிருந்ததாகவும், 2 மாதங்கள் கால அவகாசம் அளித்திருந்ததாகவும் தெரிவிக்கிறார் சந்திரசேகர்.

ங்கே கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் நம் நாட்டில் படித்தவர்களும் அமைப்பு ரீதியாகத் திரண்டவர்களும் பொது விஷயத்தில் அக்கறையோடு செயல்படுவது இல்லை என்பதில் உண்மை இருக்கிறது என்பதுதான். எல்லோருமே சுயநலவாதிகளாக இல்லை என்றாலும் பொதுநலன் பேசுகிறவர்களும் செயல்பாடு என்று வரும்போது சோம்பல் மிகுந்தவர்களாகவோ, அதிகாரிகளிடம் பேச அச்சமோ, கூச்சமோ உள்ளவர்களாகவோ இருந்து விடுகிறார்கள். இப்படி "திண்ணைப் பேச்சு வீரர்களாகவே'' பெரும்பாலானவர்கள் இருப்பதால் மக்களைப் பாதிக்கும் பல சட்டங்கள் போதுமான விவாதம் இல்லாமல் மாற்றுக்கருத்துகள் கூறப்படாமல் அரசின் நோக்கத்துக்கேற்பவே தயாராகின்றன.

ட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் உள்ள ஆய்வுக்குழுக்கள் அல்லது ஆலோசனைக் குழுக்கள் இந்தச் சட்டங்களை உரிய வகையில் ஆய்வு செய்கின்றனவா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். சட்ட மன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் நடைபெறும் விவாதங்களைக் கவனிக்கும்போது முக்கியமான அம்சங்கள் குறித்து ஆளும் தரப்பிலும் எதிர் தரப்பிலும் ஆழ்ந்த கவனத்துடன் விவாதிப்பது இல்லை என்பதை நேரிலேயே பார்க்கிறோம். இன்னும் பல சந்தர்ப்பங்களில் விவாதமே இல்லாமல் "கில்லட்டின்'' என்ற முறையில் குரல் வாக்கெடுப்பு மூலம் 40 அல்லது 50 மசோதாக்களை மின்னல் வேகத்தில் நிறைவேற்றுவதையும் பார்க்கிறோம்.

வ்வளவு ஏன், சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜயந்தி போன்ற நாள்களில் எல்லா ஊர்களிலும் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் அரசியல் கட்சி அதிலும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மட்டுமே பங்கேற்பதையும், அதிகாரிகள் ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் தீர்மானங்களை வாசித்து, உரிய விவாதம் இன்றி ஏற்பதையும் பெரும்பாலான ஊர்களில் பார்க்கிறோம்.


தெல்லாம் அரசியல்வாதிகளின் வேலை என்று விட்டுவிடாமல் நமக்குள் ஓர்  அமைப்பை உருவாக்கி விவாதித்து, அரசுக்கு ஆலோசனை கூறி, கண் காணிப்பதையும் ஒரு கடமையாகக் கொள்ள வேண்டும். தவறான சட்டங்கள் அமலுக்கு வராமல் தடுப்பதில் நமக்கல்லவோ அக்கறை தேவை?

அதற்குப் பெயர்தானே மக்களாட்சி?

--------------------------------------------

தினமணி நாளிதழுக்கு நன்றியுடன்




 

1 comment:

  1. பதிவர்கள் அனைவரும் கவனத்தில் கொண்டு சிந்திக்க வேண்டிய ஒன்று.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!