Sunday, May 22, 2011

சண்டேன்னா மூணு! கூட்டணிக் குழப்பம்!விருந்தும் கவலையும்!

சண்டேன்னா மூணு-பகுதி இரண்டு!

ஒரு வழியாக ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டின், இரண்டாண்டு முடிவை ஒரு சாதனையாக, சாதனைப்பட்டியலைப் பிரதமர் தூங்கி வழிந்துகொண்டே பேசி முடித்தபின் சோனியா காண்டி அதன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டதுடன், பிரதமர் இல்லத்தில் நடந்த சாதனை விருந்து நடந்து  முடிந்திருக்கிறது. சோனியாவின் பக்கத்தில் டி ஆர் பாலு! இந்தப்பக்கத்தில் திருமாவளவன்! இருவரையும் வைத்துக் கொண்டு ஊழல் குறித்த மக்களுடைய உணர்வு நியாயமானதே என்று பிரதமர் பேசி ருப்பது கொடுமையான அதே நேரம் மிகப்பெரிய ஜோக்! ஆனால், இந்த மனிதர் என்னதான் ஜோக் அடித்தாலும் யாரும் கண்டு கொள்வதே இல்லை என்ற அளவுக்கு டம்மிப் பீசாக இருப்பது அதைவிடப் பெரிய காமெடி!

யார் வந்தார்கள் என்பதை விட,அழைப்பு விடுத்திருந்தும் பி எஸ் பி, சமாஜ்வாதிக் கட்சிகளும் புறக்கணித்திருப்பது காமெடிப் பீசை சோகப் பீசாக ஆக்கிவிடுமோ என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. சரத் பவார், மாட்டுத் தீவன நேசன் லொள்ளு யாதவ் கலந்து கொண்டார்களா இல்லையா என்பது தெரியவில்லை. சுருக்கமாக சொல்வதென்றால், இந்த விருந்தை ஐ மு கூட்டணிக் குழப்பத்தின் பங்காளிகள் எவருமே சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை!

சோனியா காண்டி பக்கத்தில் டி ஆர் பாலுவுக்கு இருக்கை என்பதனாலேயே, திமுக குரலுக்கு, கவலைகளுக்கு காங்கிரஸ்
செவி கொடுத்து ஆறுதலாக இருக்கும் என்றெல்லாம் முடிவு கட்டி விட முடியாது. நாளை பிரதமர் ஆப்பிரிக்கா போகிறார். கருணாநிதி நாளைக்கு டில்லி வந்தாலும் சோனியாவை நேரடியாக சந்திக்க வாய்ப்புக் குறைவு என்று சொல்லியிருக்கிறார். இரண்டுபேருக்கும் நடுவே ஆசாத்,பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் தூது, சமாதானம், பேரங்கள்  இருக்குமா என்பது நாளை மாலைக்குள் தெரிந்துவிடும் என்றெல்லாம் கதைக்க வேண்டியதே இல்லை! இப்போதே, காங்கிரஸ், திமுகவுடனான கூட்டணி தர்மத்தைக் கண்டு கொள்கிற மூடில் இல்லை!

நாடாளுமன்றத்துக்கு இப்போதைக்குத் தேர்தல் எதுவுமில்லை என்பதனால்,.பூனை-எலி விளையாட்டை நிதானமாகக் காங்கிரஸ் ஆடும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. முழுப்பழியையும் திமுக மீது போட்டு விட்டு, சட்டம் தன்னுடைய கடமையை செய்யும் என்று ஒதுங்கிக் கொள்வது, தங்களை உத்தமர்களாகக் காட்டிக் கொள்ள காங்கிரசுக்கு இப்போதிருக்கும் வழி!. ஆதர்ஷ் ஊழல் காமன்வெல்த் விளையாட்டு  ஊழல் என்று வரிசையாக வெடித்துக் கிளம்பிக் கொண்டிருப்பதில் இருந்து மக்களுடைய கவனத்தைத்திருப்புவதற்கு இப்படி  ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கும்போது விடுவார்களா என்ன?

திமுக என்ன செய்யப் போகிறது என்பதைவிட, திமுகவால் என்ன செய்து விடமுடியும் என்ற பரிதாபமான கேள்வியை சந்திக்கும் அளவுக்கு, கருணாநிதி தள்ளப்பட்டிருக்கிறார் என்பதை விட, தானே தன்னுடைய தற்போதைய நிலைமையை உருவாக்கிக் கொண்டார் என்பதே பொருத்தமாக இருக்கும்!

அஜாத சத்ரு என்ற பெயரில், இன்றைய தினமணி நாளிதழில் ஒரு செய்திக் கட்டுரை திமுகவின் இந்த பரிதாபமான நிலையை விலாவரியாகச் சொல்கிறது. ஒரு பகுதி இங்கே.
"இத்தனை பிரச்னைக்கும் காரணமே தயாநிதி மாறன்தான்'' என்று கட்சியினர் மத்தியில் பரவலாக அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. மாறன் சகோதரர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பும், தயாநிதி மாறன் எப்படியாவது ஆ. ராசாவை அகற்றிவிட்டுத் தான் மீண்டும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராவதற்குச் செய்த பின்னணி வேலைகளும் தான் இத்தனைக்கும் காரணம் என்று கூறி வருத்தப்படாத கட்சிக் காரர்களே கிடையாது.

"ஆ. ராசா பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார்'' என்று தனது வருத்தத்தை வெளிப் படுத்தினார், முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சருக்கு நெருக்கமான வழக்கறிஞர் ஒருவர். "2009க்களவைத் தேர்தலுக்கு ஆ. ராசா கொடுத்த பெரும் பணம்தான் திமுக கூட்டணி தமிழகம் (27), புதுவை (1) இடங்களில் வெற்றி பெறக் கை கொடுத்தது. கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவதற்கும் ஆ. ராசாவிடமிருந்துதான் பணம் பெற்றுக் கொண்டார்கள். அது ஏன்? இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இவர்கள் செலவழித்த பணம் எங்கிருந்து வந்தது?' 


"ராசா கைதானபோது கவலைப்படாதவர்கள், அவருக்கு ஜேட்மலானி போன்ற மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாட வேண்டும் என்று நினைக்காதவர்கள் இப்போது கனிமொழிக்கு ஒன்று என்றால் மட்டும் துடிதுடித்துப் போகிறார்களே, அது என்ன நியாயம்?'' என்று கேள்வி எழுப்பினார் அந்த ராசாவின் நண்பர்.

"ராசா ஒரு "தலித்' என்பதால் பழிவாங்கப்படுகிறார் என்று தலைவர் சொன்னபோது அதை நாங்கள் நம்பினோம். இப்போதுதான் தெரிகிறது, ராசா ஒரு தலித் என்பதால்தான் தலைவர் அவரைப் பலிகடா ஆக்கப் பார்த்திருக்கிறார். தனது மனைவியும் மகளும் நிரபராதிகள், ஒன்றும் தெரியாதவர்கள் என்றும், ஆ. ராசாதான் அத்தனை தவறுகளுக்கும் காரணம் என்றும் நீதிமன்றத்தில் வாதாட எப்படி மனம் வந்தது?'' தன்னை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத, கடந்த திமுக ஆட்சியில் பொறுப்பான பதவி வகித்த "தலித்' ஒருவரின் குமுறல் இது.

"தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் மீது கருணாநிதிக்கு எப்போதுமே உதட்டளவுப் பாசம்தான் இருந்திருக்கிறது. இதற்கு நேர் எதிராக முதல்வர் ஜெய லலிதாவைப் பாருங்கள்.  சீனியர்கள் பலர் இருந்தும்கூட, தாற்காலிக பேரவைத் தலைவராக குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு. தமிழரசனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். முதல்வர் ஜெயலலிதாவிலிருந்து அத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்களையும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த செ.கு. தமிழரசன் மூலம் பதவிப் பிரமாணம் செய்ய வைத்து நிஜமாகவே ஒரு புரட்சியைச் செய்து காட்டி இருக்கிறார் முதல்வர். இதை கருணாநிதி நிச்சயமாகச் செய்திருக்க மாட்டார்'' என்று கருத்துத் தெரிவித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் கணிப்பின்படி, ஆ. ராசா அப்ரூவராகக் கூடும்.

இன்றைய நிலையில் திமுக மத்திய அமைச்சரவையில் தொடருமா என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. காங்கிரஸ் திமுகவைக் கழற்றி விடுமா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இரண்டுமே நடக்காது என்கிறார்கள் தில்லியிலுள்ள அரசியல் நோக்கர்கள்.

"ஆட்சியையும் இழந்துவிட்ட நிலையில் திமுகவுக்கு இருக்கும் கொஞ்சநஞ்சப் பாதுகாப்பு மத்திய அரசில் அங்கம் வகிப்பதுதான். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதால் திமுகவுக்கு என்ன லாபம் ஏற்பட்டுவிடப் போகிறது? நிலைமை மேலும் மோசமாகக் கூடும். அந்தத் தவறைக் கருணாநிதி ஒருநாளும் செய்யமாட்டார்'' என்பதுதான் பரவலான கருத்து.காங்கிரசும் சரி, திமுகவைத் தனது கூட்டணியிலிருந்து விலக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை.

ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு, காமன்வெல்த் போன்ற ஊழல்களில் சிக்கி இருக்கும் நிலையில் திமுகவை ஊழல் என்று காங்கிரஸ் கூறுவது "ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை' என்ற கதையாகத்தான் இருக்கும்."தமிழகத்தில் அதிமுக ஆட்சியுடன் சுமுகமான உறவை வைத்துக் கொள்ள நிச்சயமாகக் காங்கிரஸ் தலைமை விரும்பும். அதற்காக, திமுகவை வெளியே அனுப்பிவிட்டு அதிமுகவுடன் உடனடியாகக் கைகோர்க்குமா என்பது சந்தேகம்தான். பலவீனமான திமுகவின் தோழமையும், வலிய நேசக்கரம் நீட்டும் அதிமுகவின் ஆதரவும் கிடைத்தால் காங்கிரசுக்குக் கசக்கவா செய்யும்? அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு மூன்று ஆண்டுகள் இருப்பதால், இப்போதைக்கு உறவில் மாற்றம் இருக்காது. ஆனால், திமுகவுக்கு அதனால் எந்தவித லாபமும் இருக்காது. இதுதான் நிலைமை'' என்று கணிக்கிறார்கள் தில்லி அரசியல் பார்வையாளர்கள்.

திமுகவின் நிலைதான் என்ன? என்ன செய்வது என்று சிந்திக்கக்கூட முடியாத நிலையில் இருக்கிறது திமுக. எந்தக் கருணாநிதியால் பல சோதனைகளைக் கடந்து திராவிட முன்னேற்றக் கழகம் காப்பாற்றப் பட்டதோ, அதே கருணாநிதியின் குடும்பப் பாசத்தால் திமுக இப்போது நிலை குலைந்து போயிருக்கிறது. கருணாநிதியை விலக்கி நிறுத்திவிட்டுக் கட்சித் தலைமை ஏற்று திமுகவை வழிநடத்தக் கூடிய திறமை யாருக்குமே இல்லை என்பதுதான் எதார்த்த உண்மை.

திமுக சார்பாக ஆங்கிலத் தொலைக்காட்சிச் சேனல் விவாதங்களில் பங்கேற்க நடிகை குஷ்பு அனுப்பப்படுகிறார் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்! சுயமரியாதை, பகுத்தறிவு என்றெல்லாம் பேசி ஆட்சியைப் பிடித்த கட்சி இப்போது சுயமரியாதையை முற்றிலுமாக இழந்து, "விதி விட்ட வழி' என்கிற பகுத்தறிவுடன் செயல்பட வேண்டிய நிலைமை."  


கட்டுரையை முழுதும் படிக்க இங்கே

தன் வினை தன்னைச் சுடும் என்பது பழமொழி மட்டுமில்லை, இன்றைய அரசியல் நிலவரத்துக்கும் பொருந்துகிற புதுமொழிதான்!
 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails