Sunday, May 15, 2011

சண்டேன்னா மூணு! கனிமொழி, டீபார்டி, பரத்வாஜ்!


 
தேர்தல் தோல்வி சூட்டோடு சூடாகக் கனிமொழி கைது செய்யப் படுவதும் உறுதிதான் என்ற மாதிரித்தான் ஊடகங்கள் நேற்றைக்கு கூட்டமாக டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குவிந்திருப்பதைப் பார்த்த நீதிபதியே முதலில் கொஞ்சம் ஆச்சரியப்பட்டிருக்கிறார். தீர்ப்பு தயாராகவில்லை என்று வருகிற இருபதாம் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டுக் கிளம்பியதில் காலை பதினோரு மணிக்கு முன்னாலேயே பரபரப்புக்காக அலைந்து கொண்டிருந்த ஊடகங்கள் பரிதாபமாகத் தவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த போது தமாஷாக இருந்தது!

கைதை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தவர்களுக்கு, இந்த செய்தி அவ்வளவு முக்கியமானதாகத் தெரியாததில் ஆச்சரியமில்லைதான்!

ராம்ஜெத் மலானி, பதினெட்டு எம்பிக்களை மட்டுமே நம்பி இருக்காமல் புருஷோத்தமன் என்ற திமுக ஆதரவாளர் ஒருவர் வேலை மெனெக் கெட்டு டில்லிக்குப் போய்  பன்னிரண்டாம் தேதியன்று சிபிஐ சிறப்பு மன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவும் நேற்று சனிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டதுதான் அந்த செய்தி!

அப்படி மனுவில் என்ன கேட்டிருந்தாராம் புருஷோத்தமன்?

திமுக எம்பி கனிமொழி ஜாமீன் மனு மீதான விசாரணை டில்லி உயர்நீதி மன்றத்துக்கோ, உச்ச நீதி மன்றத்துக்கோ மாற்றப் பட வேண்டுமாம்! ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி கைது செய்யப்பட்டால், அது  தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி மூலமாக குடிமக்களுக்கு செய்ய வேண்டிய பணியெல்லாம் பாதிக்கப்பட்டு  மக்களுடைய உரிமைகளை  பாதிக்குமாம்!

"Purushothaman, a DMK supporter who came all the way from Chennai to file the application on May 12, submitted that if an elected representative (Rajya Sabha MP Kanimozhi) is arrested, it would “affect the rights of the citizens” to participate in the affairs of their constituency through an elected representative.

Terming Ms. Kanimozhi as their “collective voice”, he had said “the special court should consider whether the right of a voter held to be a fundamental by the apex court would be affected if elected representative is detained or prevented in any manner from discharging her constitutional duty“.

“A member of Rajya Sabha not only expresses his or her opinion but also expresses the collective opinion of the voters who have voted for him or her,” he said. 

எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா!!
 
ஆ.ராசாவுக்கு மட்டும் இந்த விஷயங்கள் பொருந்தாதாமோ?

கனிமொழிக்கு இனி கஷ்ட காலம்தான்!

ooOoo 
அரசியலில் விவஸ்தை சூடு சொரணை மானம் என்பதற்கெல்லாம் அர்த்தமே கிடையாது என்பது எல்லோருக்கும் தெரியும்! இதையே கொஞ்சம் கௌரவமாக, அரசியலில் நிரந்தரப்பகைவனும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்று சொல்வார்கள். சோனியா ஜெயலலிதாவுக்கு தேனீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறாராம்! சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதா,காங்கிரசோடு நடத்திய தேனீர் விருந்தில் தான் வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்க்கப் பிள்ளையார் சுழி போடப்பட்டது என்பது நினைவுக்கு வருகிறது! அமெரிக்காவில் பாஸ்டன் டீபார்டியில் இருந்து ஆரம்பித்து இந்திய அரசியலில் கொடுக்கப்படுபவை உட்பட  டீபார்டி என்றாலே நாசம்தான் என்பது சரிதானோ?  !!!!!

 ooOoo

தேர்தல் முடிவுகளைக் கொஞ்சம் அனலைஸ் செய்து முடிக்கும் வரை, அரசியல் பதிவுகள் எதுவும் வேண்டாமே என்று நினைத்திருந்தவனைக் கர்நாடக மாநில நிகழ்வுகள் இழுத்து வந்து இந்தப் பதிவை எழுத வைத்திருக்கிறது!
ஹெச் ஆர் பரத்வாஜ்!காங்கிரஸ் அரசில் எப்போதோ ஒரு காலத்தில்ராஜாங்க அமைச்சராக ஒன்பது வருடங்களும், ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் ஒன்றில் ஐந்தாண்டுகள் சட்ட அமைச்சராகவும் இருந்தவர்!இந்திரா காண்டி குடும்ப விசுவாசி! சட்ட அமைச்சராக இருந்தபோது போபோர்ஸ் ஊழலில் சம்பந்தப்பட்ட சோனியாவின் உறவினர் குவத்ரோச்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்திருந்ததை 2006 வாக்கிலேயே நீக்கி சோனியாவுக்குத் தன்னுடைய விசுவாசத்தைக் காட்டியவர்!சட்ட அமைச்சராக இருந்ததாலேயே, தான் வைத்தது தான் சட்டம் என்று தான் பிடித்த பிடியிலேயே நிற்கிற ஒரு பிரகிருதி!
பெயருக்குத்தான் பிரதமரே தவிர, தன்னுடைய அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே தெரியாமல் அன்றைக்கும் தலையாட்டி பொம்மையாக மட்டும் இருந்த மன்மோகன் சிங் "சிபிஐ சுயேச்சையாக எடுத்த முடிவு அது அரசுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை" என்று தெரியாமல் அல்லது தவறான பதிலை நாடாளுமன்றத்தில் சொன்னார். என்ன காரணத்தினாலேயோ, ஐமு கூட்டணி குழப்பம் வெர்ஷன் இரண்டில், கட்டாய ஒய்வு கொடுக்கப் படுபவர்களுக்கும், தலைமையின் கோபத்துக்கு ஆளான போக்கத்தவர்களுக்கும் கடைசி புகலிடமாக அளிக்கப்படும் கவர்னர் பதவிதான் பரத்வாஜுக்குக் கிடைத்தது!பரத்வாஜ் என்ற காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கானைப் பற்றி 2007  மார்ச் மாதத்தில் திரு சுதீந்த்ர குல்கர்னி எழுதிய செய்திக் கட்டுரை இங்கே.

பரத்வாஜ் இப்போது கர்நாடக மாநில கவர்னர்! பிஜேபி கட்சியின் முதல்வர் எடியூரப்பாவுக்கு இடையூரப்பாவாக இருப்பதைத் தவிர வேறொரு வேலையும் இல்லாதது போலவே  இருப்பவர்! சோனியாவின் கடைக்கண் அருளைப் பெறுவதற்காக,மறுபடி மத்திய அரசு அமைச்சராக ஆவதற்காக, கவர்னர் பதவியில் இருந்துகொண்டு ஆட்டம் காண்பித்துக் கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது!


கழகங்கள் தங்களுக்கு வேண்டும் என்கிறபோது, இப்போது பர்னாலா மாதிரிக் கைக்கடக்கமான ஆசாமிகளை வேண்டிப் பெற்றுக் கொண்டு, குடைச்சல் கொடுக்கும் காலங்களில் ஆட்டுக்கு தாடி போல மாநிலத்துக்கு ஆளுநர் பதவி அவசியமா என்று வசனம் பேசுவது மாதிரியே, எடியூரப்பாவுக்குக் குடைச்சல் பரத்வாஜ் வடிவத்தில் மறுபடி வந்திருக்கிறது. எடியூரப்பா விஷயத்தில் பிஜேபி ஒன்றும் செய்ய முடியாமல் கையைப் பிசைந்து கொண்டிருப்பதில், எடியூரப்பா இவ்வளவு கேவலப்பட்டுப் போன பிறகும், நான் எதற்காகப் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கேட்கிற அளவுக்கு, பொது வாழ்க்கையில் நல்ல நெறிமுறைகள், நடை முறைகள் காற்றில் பறக்க விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. காங்கிரசுக்கு மாற்று நாங்கள் தான் என்று சொல்கிற ஒரு கட்சி, காங்கிரசைப் போல இதுவும் தேறாதது தான் என்று ஜனங்கள் அருவருக்கிற அளவுக்குப் போய்க் கொண்டிருப்பதை பிஜேபி இன்னமும் உணரவில்லை.

காங்கிரஸ் கட்சி பதவியில் இருக்கிற வரைக்கும் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்காமல் விடமாட்டார்கள் என்பதற்கு, பரத்வாஜ் மாதிரி, சோனியா குடும்ப விசுவாசிகள் ஒரு நல்ல உதாரணம்!இந்த நாட்டின் ஜனநாயகத்தை வளர்க்க வேண்டிய காங்கிரஸ், புல்லுருவிகள், வியாபாரிகள் தரகர்களால் நிரப்பப்பட்டு, ஒரு நாசகார சக்தியாகவே இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறதா?

கர்நாடக சட்டசபையை செயலற்ற நிலையில் வைத்திருக்கவும்  எடியூரப்பா அரசை டிஸ்மிஸ் செய்யவும், பரத்வாஜ் இரண்டாவது முறையாக சிபாரிசு செய்து ஜனாதிபதிக்கு விசேஷ அறிக்கை அனுப்பி ருப்பதில் கர்நாடக அரசியல் நிலை மட்டுமல்ல, ஜனநாயக நடை முறைகளுமே காங்கிரசால் குரல்வளை நெறிக்கபட்டுக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் இது மாதிரி ஜனநாயகப் படுகொலைகளைத்தொடர்ந்து செய்து கொண்டிருக்க இன்னும் எத்தனை நாள் பொறுத்திருக்கப் போகிறோம்?
திமுக--அதிமுகவை விட, அகற்றப்படவேண்டிய தீய சக்தி காங்கிரஸ் கட்சிதான் என்பதை மறுபடி நினைவு படுத்த வேண்டி இருக்கிறது!
 

4 comments:

 1. Good one!பரத்வாஜ் கூடுதல் தகவலுக்கு நன்றி.

  நல்லா மதிப்பீடு செய்திருந்தாலும் தமிழகத்தைப் பொறுத்த வரை இறுதி வரிகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை.

  காங்கிரஸின் பலமே பி.ஜே.பி தான் என்கிற மாதிரியே கர்நாடக அரசியல் களம் இருக்கிறது.

  ReplyDelete
 2. //திமுக--அதிமுகவை விட, அகற்றப்படவேண்டிய தீய சக்தி காங்கிரஸ் கட்சிதான் என்பதை மறுபடி நினைவு படுத்த வேண்டி இருக்கிறது!
  //

  10 விழுக்காடு சரி,

  பாண்டியில் மக்கள் சரியாகச் செயல்பட்டு கல்தா கொடுத்துவிட்டார்கள்

  ReplyDelete
 3. திரு ராஜ நடராஜன்!

  கருத்துக்கு நன்றி. உங்கள் ப்ரொபைலில் குறைந்த பட்ச விவரமாவது இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்! மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதிலோ, பிரசுரிப்பதிலோ எனக்குத் தனிப்பட்ட முறையில் ஆட்சேபனை இல்லை. ஆனால், தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளள மறுப்பவர்களுக்கும் அனாமதேயங்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இதற்கே தயங்குபவர்கள் எப்படி ஒரு மாற்றத்தின் விதையாக இருக்க முடியும்?

  வாருங்கள் திரு கோவி கண்ணன்!

  அதென்ன 10% வரை சரி?!

  "நோய் நாடி நோய் முதல் நாடி" என்ற குரலின் படி நோய்க்கான அறிகுறிகளை பொருட்படுத்திக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதில் தான் குணப்படுத்துகிற கலை பலிக்கிறது. என்வரையில், காங்கிரஸ் தான் இத்தனை கோளாறுகளுக்கும் மூல காரணமாக இருக்கிறது.

  மூலகாரணத்தை அகற்றாமல் நோயை எப்படிக் குணப்படுத்துவது?

  "பாண்டிச்சேரியில் சரியாக செயல்பட்டு....." இதுவும் ஒரு மாயையே! அங்கேயும் இன்னொரு ரக காங்கிரசுக்குத்தான் சரிபாதி இடங்களில் ஜெயிக்க வைத்திருக்கிறார்கள்!

  மாநிலபிரச்சினைகளை ஒதுக்கி வைத்த காங்கிரஸ்தான், மாநிலக் கட்சிகள் உதயமாவதற்குக் காரணமாக இருந்தது,ஒரு கட்டத்தில் மாநிலக் கட்சிகளிடம் மாநில அரசாட்சியைப் பறி கொடுத்தது. எந்தக் கட்சிகள் எதிரியாக ஆரம்பித்தனவோ அவைகளுடனேயே வெட்கமில்லாமல் கூட்டணி வைத்துக் கொண்டு பரஸ்பர ஊழலில் கூட்டாளிகளான விந்தையும் நடந்தது! வெறும் 18 MP க்களை மட்டும் வைத்துக் கொண்டு, ஒரு மாநிலக் கட்சி காங்கிரசின் தலைமீது ஏறி உட்கார்ந்து கொண்டு ஊழலை லட்சக்கணக்கான கோடிகளில் செய்ய முடிந்ததாக ஆகிப்போனது.

  திமுக அதிமுக எல்லாம் பக்கவேர்கள் தான்! காங்கிரஸ் தான் ஊழலின் ஆணிவேராக இருப்பது! ஆணிவேரை வெட்டி எறியாவிட்டால்,விடிவுகாலம் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

  ReplyDelete
 4. திமுக--அதிமுகவை விட, அகற்றப்படவேண்டிய தீய சக்தி காங்கிரஸ் கட்சிதான் என்பதை மறுபடி நினைவு படுத்த வேண்டி இருக்கிறது!

  Well said. BJP too acts very lethargic on the serious issues. When Congress is blundering on every issues (2-G, Adharsh, Lasava, CWG, Internal & External policies, S-Band etc) the Opposition party is not taking up this to the Public in the right attitude. In some cases it looks as if they too involved in the scam as indicated by the Wiki Leak.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails